பாத்திரம் ஏற்றுப் பிச்சையிடு (மணிமேகலை – 1)

மணிமேகலை காப்பியத்திற்கு

சத்தியப்பிரியன் எழுதும்

இருபத்தியோராம் நூற்றாண்டின் உரை.

அத்தியாயம் -1

உட்கார்ந்து ஆராய்ச்சி  செய்து  எழுதுவதற்கு பதிலாக போகிற போக்கில் ஒரு  நூலுக்கு  உரை  எழுதமுடியுமா? இதற்கு முன்னால் அப்படி  எழுதியிருக்கிறார்களா  என்று தெரியவில்லை. வாசகனுக்கும் எழுதுபவனுக்கும் இடையிலான  மொழியில் கொச்சையற்ற ஓர் எளிய புரிதல் இருந்தால் இது சாத்தியம். மணிப்பிரவாளம்  என்பது பல்லவர்காலத்தில் நம் தமிழகத்திற்குள் புகுந்தது. பிராகிருதம் கலந்த தமிழ்ச் சொற்களை நாம் எப்படி  அங்கீகரித்தோம்  என்று தெரியவில்லை. களப்பிரர்களை ஓடஓட விரட்டிய பல்லவர்களுக்கு  நாம்  காட்டிய  நன்றிதானா? தெரியவில்லை. அதற்காக மொழியைக் காவு  கொடுப்பார்களா என்றெல்லாம் ஆராயப் புக வேண்டாம். இதற்கு நடுவில் ஒரு செய்தி இருக்கிறது. இந்த மணிப்பிரவாளம் ஒருவிதத்தில் சற்று இறங்கிவந்து பேசும் மொழி. வைணவர்கள் இதில் வல்லவர்கள். ஆனால்  வைணவர்கள் தங்களுக்கு எளிதில் புரியும் மொழியில் எழுதிவிட்டு அந்த வட்டத்தைத் தாண்டி எவருக்கும் புரியாமல் செய்து விட்டனர். ஆனால் இவ்வாறெல்லாம் இல்லாமல் பண்டித மொழியிலும் இல்லாமல், கொச்சையாகவும்  இல்லாமல் –ஆங்கிலத்தில் readability என்பார்கள்-அப்படியொரு வாசிப்புத் தன்மையான நடையில் மணிமேகலைக்கு உரை எழுதலாம் என்று இருக்கிறேன்.

ஏன் மணிமேகலை என்ற கேள்வி எழலாம். எனக்கு ஆழ்வார்களைப் பற்றிச் சொல்ல வேண்டி வந்தபோது ,அவர்கள காலத்தைத் தேடிப்போனேன். மணிமேகலை குறுக்கிட்டது. மணிமேகலை ஒன்றுதான் அது வாழ்ந்த காலத்தில் அன்றாட வாழ்க்கைமுறை எப்படி இருந்தது என்பதைப் பதிவு செய்த காவியம். குறிப்பாகப் பெண்களின் நிலையையும், பெண்களை வெறும் உடலாகவே பார்க்கும்  ஆடவர்களின் தன்மையையும் அறச்சீற்றத்தோடு எடுத்துச் சொல்கிறது. இது புத்த மதத்தின் சிறப்பைச் சொல்லவந்த காவியம். சீத்தலை சாத்தனார் என்ற புலவரால் எழுதப்பட்டது. இந்தச் சீத்தலை சாத்தனார் சிலப்பதிகாரம் இயற்றிய சேரன் செங்குட்டுவனின் இளைய சகோதரனான இளங்கோவடிகளின் நண்பர். களப்பிரர்களின் காலத்திற்கு முந்தைய காலத்தில் எழுதப்பட்ட நூல். பௌத்த சமயத்தின் ஹீனயானம் பற்றிக் கூறும் நூல்.  புத்த சமயம் கீழைநாடுகளில் பரப்புவதற்குப் பெண் பிக்குணிகள் அதிகம் முன்வரவேண்டும். இதன் காரணமாகப் பெண்களுக்குச் சிறந்த பாதுகாப்பை அளிக்கும் சமயம் புத்த சமயம் என்பதை வலியுறுத்த மணிமேகலை படும்துயரங்களைக் காவியமாக வடித்து முடிவில் அவள் எப்படி புத்த பிக்குணியாகச் சிறப்பாகச் செயலாற்றுகிறாள்  என்பதைக் கூறவந்த நூல் என்றே சொல்வேன்.

பொதுவாகவே பெண்களைப் பற்றி நமக்குக் கிடைக்கும் இலக்கியத் தகவல்களை வழங்கும் பாடல்களைப் பெரும்பாலும் ஆண் கவிஞர்களே எழுதியுள்ளனர். ஓரிரண்டு பெண் கவிஞர்கள் இருப்பினும் அவர்களும் ஆண் சார்ந்த சிந்தனைகளையே முன்வைக்கின்றனர். மணிமேகலைக்கும் இதே கதி என்றாலும் அதன் ஆசிரியர் சொல்ல வந்ததிலிருந்து நாம் சில விஷயங்களை அர்த்தப்படுத்திக் கொள்ளும்போது தனது எல்லைகளில் நின்றபடி சாத்தனார் மணிமேகலையைப் படைத்திருந்தாலும் வாசகனுக்கென்று ஒரு பகுதியை சொல்லாமல் விட்டு விடுகிறார். அதன் மூலம் ஓரளவு பெண்களைப் பற்றித் தெளிவாகக் கூறியுள்ளார் என்று புரிகிறது.

manimekalai_book_by_uvesaபல ஆச்சரியங்களைத் தன்னுள் பொதிந்து வைத்திருக்கும் மணிமேகலையை வரிக்கு வரி , சொல்லுக்குச் சொல் பதவுரை எழுதாமல் ஒவ்வொரு அத்தியாயத்திலும் ஒரு கதை மாதிரியைக் கொடுத்து இறுதியில் அந்தக் காதையின் இலக்கிய நயம், அது தரும் வரலாற்றுத் தகவல்கள், பெண்ணியச் சிந்தனை, மக்களின் வாழ்க்கை முறை போன்றவற்றை எழுதலாம் என்றிருக்கிறேன். மணிமேகலை தொடர்நிலைச் செய்யுள்களால் ஆனது என்பதால் ஒவ்வொரு காதையிலும் வரும் செய்யுள்களைப் பகுத்து பொருள் கூறுவது ஒரு கடினமான செயல் இல்லைதான். இளம்பூரணார், நச்சினார்க்கினியார், பரிமேலழகர், சோனாவரையர் என்று கணக்கில்லாத உரையாசிரியர்கள் தமிழில் உண்டென்றாலும் மணிமேகலை எந்த ஒரு உரையாசிரியரின் கவனத்தையும்  பெறவில்லை என்பது நிதர்சனம். மணிமேகலை இன்று நம்மிடம் கிடைத்திருப்பதற்கு முக்கியக் காரணம் தமிழ்த் தாத்தா என்ற சிறப்புப் பெயருடன் விளங்கும் பண்டித உபாத்தியாய  உ.வே.சாமிநாத ஐயர் அவர்களின் அறிய பணியின் விளைவாகும். அவரே தனது மணிமேகலையின் அரும்பத உரையில் தான் எங்கு தேடியும் மணிமேகலையின் செய்யுள் சுவடிகள் மட்டும் கிடைத்தனவென்றும், உரையின் சுவடிகள் கிடைக்கவில்லை என்று குறிப்பிடுகிறார். எனவே இதன் முதல் அரும்பத உரையாசிரியர் இதுகாறும் உ.வே. சாமிநாத ஐயர் என்றுதான் எடுத்துக் கொள்ளவேண்டும்.

மொத்தம் முப்பது காதைகளைக் கொண்ட காப்பியம் இது. தொடர்நிலைச் செய்யுள்கள் என்பதால் கதைப் போக்கில் தடங்கல் இருக்காது எனினும் சில மௌன இடைவெளிகளில் என்னுடைய கருத்துக்களைச் சேர்த்து கதை சொல்லப்போகிறேன்.இதன் ஆரம்பத்திலேயே சாத்தனார் கதைச் சுருக்கம் போன்று “பதிகம்” என்ற பகுதியை அளித்துள்ளார். கதைச் சுருக்கம் என்றாலும்  இதனை எழுதியது யார் என்ற விவரங்கள் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. என்றும் இளமையுடன் வீற்றிருக்கும் தமிழ்த்தாயின் பாதம் பற்றி மணிமேகலையின் சிறப்பைக் கூற உள்ளேன். குறை இருப்பின் பொறுத்தருள வேண்டுகிறேன்.

பதிகம்:

( சொல்ல வந்த கதையினைச் சுருக்கமாகக் கூறும் பாடல் தொகுப்பு.)

பௌத்த மதத்தில் புத்தரைத் தவிர அந்தச் சமயத்தினர்  வணங்கிய சிறுதெய்வங்களில் முக்கியமான பெண்தெய்வம் மணிமேகலை என்ற தெய்வமாகும்.  எனவேதான் மணிமேகலை என்று கதைத் தலைவிக்குச் சீத்தலைசாத்தனார்  பெயர் சூட்டியுள்ளார். மணிமேகலா தெய்வம் கடல்வழி செல்லும் மக்களைக் காக்கும் தெய்வமாகும். அதேபோல தரையில் உள்ள மக்களைக் காக்கும் தெய்வம் சம்பாபதி என்னும் தெய்வம். சம்பாபதியின் இருப்பிடம் காவேரிபூம்பட்டிணத்தில் ஒரு இடுகாட்டின் அருகில் இருந்தது. சம்பாபதியின் கதையை மணிமேகலையில் பின்னால் விரிவாகப் பார்க்கயிருக்கிறோம். இனி பதிகதிற்குள் நுழைவோம்.

உதயசூரியனின் தோற்றத்தைக் கண்டு எள்ளி நகையாடுவது போல ஒரு தோற்றம் அவளுக்கு., மின்னும் ஒளி பொருந்திய மேனியின் மீது விரிந்த சடையின் கற்றைகள் அங்கும் இங்கும் அலையும் கூந்தல் அவளுக்கு. பொன்னைப் பழிக்கும் நிறத்தையுடையவள். மேரு மலையின் உச்சியில் தோன்றி விளங்கியிருந்த  சம்பாபதி என்ற தெய்வம் தனது இருப்பிடத்தைத் தென்திசையில் அமைந்துள்ள நாவலந்தீவில் ஒரு பெரிய நாவல் மரத்தின் அடியில் மாற்றிக் கொண்டாள். . நிலமைகளின் குறை கேட்டு, பூமகளை வருத்தும் பகைமன்னரை வெருட்டும் அந்தச் சம்பு எனப்படும் சம்பாபதியின் அருகில் இரவிகுலத்தின் வழித்தோன்றலாகிய சோழர்குல மன்னனான காந்தன் என்ற பெயரைக் கொண்ட மன்னன் வணங்கி நின்றான்.

“ நீர் வளம் குன்றும் பூமியில் நிலவளம் குன்றத்தானே செய்யும் ? “ என்றான் காந்தன்.

“ நினக்கு நான் என்ன செய்ய வேண்டும்? “

“ குடகில் தோன்றி கருநாடகத்தில் ஓடும் காவிரியை இங்கே தமிழகத்தில் ஓடச் செய்ய வேண்டும் “ இது மன்னனின் கோரிக்கை.

Sage Agastyaநிலம் காக்கும் தெய்வமல்லவா சம்பாபதி? உடனே அகத்தியனை அழைத்தாள். அகத்தியன் தென்திசை எங்கும் ஓர் ஒழுங்கமைவை மேற்கொண்டு வந்தவர். அனைத்து விதமான ஆளுமைகளும் பொருந்தியவர். ஒரு மாபெரும் இயக்கத்தின் தலைமை பொறுப்பேற்று சிறப்பாகச் செயல்பட்டு வருபவர். சம்பாபதியின் ஆணையைத் தனது தலைமேல் வாங்கிக் கொண்டு தனது குண்டிகையை எடுத்துக் கொண்டு காவிரி பெருக்கெடுக்கும் குடகு மலையை அடைந்தார். தனது தவ வலிமை, பேச்சாற்றல், தலைமைப் பண்பு முதலியவற்றைக் கொண்டு கருநாடகத்தில் ஓடிக் கொண்டிருந்த காவிரியாற்றை நெடிய வாய்க்கால்களை ஏற்படுத்தி, நீர் செல்லும் பாதைகளையமைத்துத் தமிழகம் நோக்கித் திருப்பி விட்டார்.

பொங்கிவரும் காவிரியை சம்பாபதி பெரிய உவகையோடு எதிர்கொண்டு, “ ஆகாயத்திலிருந்து தோன்றிய ஆகாய கங்கையைப் போல அன்புடன் தோன்றிய காவிரியே வருக. வெயிலின் தாகத்தைத் தீர்க்கும் அணிவிளக்கே வருக “ என்று மனம் மகிழ்ந்து வரவேற்றாள். இதன் பின்னணியில் இருந்த அகத்திய மாமுனிவன் தனது செயலின் தன்மை பின்னுக்குத் தள்ளப்பட்டதற்கு வருந்தாமல் காவிரியைப் பார்த்து “ காவிரிப் பெண்ணே இந்தச் சம்பாபதி உன்னையும் விட வயதில் முதிர்ந்தவள். எனவே நீ அவளை வணங்குதல் முறையாகும் “ என்கிறார்.

பாடல் பெறும் பேற்றைப் பெற்ற இந்த பாரத தேசத்தில் சோழர்களின் குலக்கொடியாகவும் விளங்கி , ஒன்பது கிரகங்கள் தங்கள் அச்சிலிருந்து வேறுபட்டாலும் தனது நிலையிலிருந்து மாறாத தண்டமிழ்ச் செல்வி என்று தமிழர்களால் போற்றப்படும்’ காவிரி சம்பாபதியை வணங்கி அவள் கோட்டத்தைச் சுற்றி ஓடிக் கடலில் கலந்தாள்.

“எண்ணிக்கையில் ஆறு தேவ உலகங்களிலும் , இருபது பிரும்ம உலகங்களிலும் உயிர்களைப் படைக்க எண்ணிய பிரும்மன் ஆதிகாலத்தில் என்னுடைய பெயரைத் நீ தாங்கியிருந்தாய். இனி உன்னுடைய பெயர் இந்த நதியின் பெயரையும் தாங்கி இருக்கட்டும் “ என்று அந்தச் சம்பு தெய்வம் ஆணையிட அன்றிலிருந்து சம்பாபதி என்று பெயர் தாங்கிய நகரம் காவிரி பூம்பட்டினம் என்ற பெயருடன் வழங்கலாயிற்று.

இப்படிச் சிறப்புப் பெற்ற காவிரிப்பூம்பட்டிணத்தில் தேவர்களின் தலைவனும், நூறு வேள்விகளைப் புரிந்தவனுமான  இந்திரனுக்கு விழா எடுக்க ஏற்பாடானது.

“ ஊரெல்லாம் திருவிழாக் கோலம் பூண்டிருக்கிற காலம் இது. இந்த நேரம் பார்த்து நாட்டியத்தில் தலைசிறந்த மாதவி என்னும் கணிகை பௌத்த மதத்தில் சேர்ந்து விட்டது குறித்து ஊரெல்லாம் கொல்லுன்னு பேச்சாயிருக்கிறது. தெரியுமா வசந்தமாலை ? “ என்றாள் சித்திராபதி வசந்தமாலை என்னும் மணிமேகலையின் தோழியிடம். சித்திராபதி அந்தக் கணிகையர் தெருவில் முடிசூடா இராணி போன்றவள். மாதவியைப் பெற்றவள்.

“ இதில் நான் சொல்ல என்ன இருக்கிறது? அது அவளது சொந்த விருப்பம் “ என்றாள் வசந்தமாலை. “ போய் உன் தோழியிடம் சொல். ஒரு கணிகையர் வீதியைச் சேர்ந்த பெண் புத்த துறவியானதற்கு ஊர் முழுக்கக் கேலி பேச்சு என்பதைப் போய்ச் சொல். “

வசந்தமாலை இந்தச் சேதியை மாதவிக்குச் சொல்லச் சென்றதும், ஆங்கு மாதவியின் மகள் மணிமேகலை உவவனம் என்ற நந்தவனத்தில் புத்தபெருமானுக்குச் சாற்றுவதற்கு மலர் பறிக்கச் சென்றதும், அந்த நாட்டு மன்னனின் மகனான உதயகுமாரன் மணிமேகலையின் வடிவழகில் மயங்கி அவளைத் துரத்திச் சென்றதையும் என்னவென்று சொல்வது?

உதயகுமாரன் பளிங்கு மண்டபத்தில் மணிமேகலையைக் கண்டு மோகவயபட்டு, அடையமுடியாமல் மனத் தாபமுற்று திரும்பிச் செல்கிறான். மணிமேகலா என்ற பெண் தெய்வம் அங்கு தோன்றி மாதவியின் மகள் மணிமேகலையை அவள் உறங்கிக் கொண்டிருக்கும்போது மணிபல்லவம் என்ற தீவினில் கொண்டு பாதுகாப்பாக வைக்கிறது. உவவனத்தில் மணிமேகலையைக் காணாது அவளுடைய தோழி சுதமதி அங்கேயே உறங்கிவிடுகிறாள். மணிமேகலை தெய்வம் சுதமதியை எழுப்பும் அதே வேளையில் மணிபல்லவத் தீவில் மணிமேகலை துயில் எழுகிறாள். ஆளரவமற்ற மணிபல்லவத் தீவில் மணிமேகலை தனிமையில் வாடுகிறாள்.

மணிமேகலைக்கு ஒன்றும் புரியவில்லை. மெல்ல மெல்ல முதல்நாள் இரவு நடைபெற்றதை நினைவுகூர்ந்தாள். உதயகுமாரனின் காமத்தீ பற்றி எரிந்த அந்த மோகப்பார்வை அவளை மீண்டும் அச்சமூட்டியது. பெண் எனப்பட்டவள் ஆடவர்களால் வெறும் உடல் சார்ந்தே பார்க்கப்படுவது அவளுக்கு அருவெறுப்பை ஏற்படுத்தியது. தான் அவனிடமிருந்து தப்பித்து இப்படி ஒரு தீவில் எப்படி வந்து மாட்டிக் கொண்டோம் என்பது ஆச்சரியமானது. தீவை சுற்றிப் பார்க்கக் கிளம்பினாள்.

ஒரு பீடிகை அவள் கண்ணில் பட்டது. இப்போது நாம் கோவில்களில் பலிபீடம் என்ற ஒன்றை அறிவோம் அல்லவா? அது போன்று ஒரு பெரிய பத்ம பீடம். சுதையினாலும் செங்கற்களினாலும் எழுப்பபட்ட மிகப் பெரிய பீடம். ஒரு பெரிய தாமரை மலர் மலர்ந்து விரிந்திருப்பதைப் போன்ற அழகிய தோற்றமுடைய பீடம் அது. அட என்று வியந்து போன மணிமேகலை அதன் அருகில் செல்லத் தொடங்கினாள்.

அதன் அருகில் செல்லச் செல்ல மனிமேகலைக்குள் ஏதோ ஒரு மாற்றம் நிகழத் தொடங்கியது. பிறப்பின் சூட்சுமம் புரியத் தொடங்கியது. ஆசை என்பது தனது வரம்பை எட்டாதவரையில் உயிரானது பல பல பிறவிகளை எடுக்கும் என்பது விளங்கத் தொடங்கியது. ஆசை என்பது அறவே அற்றுப் போகும் வரை இந்த உயிர் பல பிறவிகளில் உழன்று மாயும் என்பதால் உலக ஆசைகளை அறவே ஒழித்தல் ஒன்றுதான் பிறவியற்ற நிலைக்கு வழிவகுக்கும் என்ற தூய சிந்தனை அவளுக்குத் தோன்றியது. வியந்துபோன மணிமேகலை அந்த தாமரை பீடத்தின் மீது மேலும் ஈர்க்கப்பட்டு அதன் அருகில் சென்றாள். மேலும் ஒரு மாற்றம். ஓவியக் கூடத்தில் வரையப்பட்டிருக்கும் சித்திரங்களை போல மனதில் சில காட்சிகள் தோன்றி மறைந்தன. தனது முந்தைய பிறவிகளைப் பற்றி அவளால் தெளிவாகத் தெரிந்துகொள்ள முடிந்தது. வியப்பில் ஆழ்ந்திருந்த மணிமேகலையை மேலும் வியப்பிற்குள் ஆழ்த்த அவள் முன்னால் மணிமேகலை தெய்வம் தோன்றியது. தன்னை இந்தத் தீவிற்குக் கொண்டு வந்தது இந்தத் தெய்வம் என்பதை அறியாத மணிமேகலை மருட்சியுடன் அந்தத் தெய்வத்தைப் பார்த்தாள்.

“ கவலையைவிடு பெண்ணே ! உன்னை உதயகுமாரன் பார்வையிலிருந்து மீட்டு இங்கே கொண்டு வைத்தது நான்தான். இது மணிபல்லவத் தீவு. நீ உன் முன்னால் காண்பது போதிபுத்தர் அமர்ந்திருந்த பீடம். இந்தப் பீடதிற்கு உன் முந்தைய பிறவிகளைப்பற்றிச் சொல்லும் ஆற்றல் உண்டு. “ என்று கூறி மறைந்தது.

அந்தத் தெய்வம் போனபின்பு அந்த மணிபல்லவத் தீவிற்குரிய தீபதிலகை என்ற மேலும் ஒரு பெண்தெய்வம் தோன்றி மணிமேகலையிடம் இதுவரையில் ஆபுத்திரன் என்பவன் வைத்துக் கொண்டிருந்த  ஓர் அமுதசுரபி என்ற அருங்கலத்தை அளித்தாள். இந்த அமுதசுரபியானது பசிப்பிணியில் வாடுபவர்களின் பிணியைப் போக்க தேவைப்படும் வேளையில் உணவு உற்பத்தி செய்துகொடுக்கும் வல்லமை பெற்றது. ஏழுநாட்கள் கழிந்தபின்பு மீண்டும் மணிமேகலா தெய்வம் அவளை உவவனத்தில் கொண்டு விட்டுவிடுகிறது.

மணிமேகலை தனது தாயார் மாதவியுடனும்,தனது தோழி சுதமதியுடனும் புத்த தர்மத்தில் நிலைத்து விளங்கிய அறவண அடிகள் என்ற புத்த துறவியைச் சென்று வணங்குகின்றனர். அறவணஅடிகள் மணிமேகலைக்கு ஆபுத்திரனின் கதையைக் கூறுகிறார்.

manimekalai

ஆபுத்திரனுக்குச் சிந்த்தாதேவி என்று அறியப்பட்ட கலைமகள் அமுதசுரபியை அளித்த கதை அது.. மணிமேகலை அந்தப் பிச்சை பாத்திரத்தைக் கையில் ஏந்தி தான் புத்த பிக்குணி வேடமணிந்து புகார் நகர வீதிகளில் பிச்சைஎடுக்கச் சென்றாள்.

அதுகாறும் அமுதசுரபி தனது செயல்திறத்தை வெளிப்படுத்தாமல் இருந்தது. ஆதிரை என்ற கற்பில் சிறந்த பெண் முதல் பிச்சையிட்டதும் அந்த ஓடு வறியோருக்கு ஈயும் தன்மையுடைய அமுதசுரபியாகச் செயல்படத் தொடங்கியது. மணிமேகலை வான்வழி செல்லும் திறமையுடைய காயசண்டிகை என்ற பெண்ணின் தீராத பசியினால் ஏற்பட்ட வயிற்றுப் பிணியை அமுதசுரபியில் உள்ள உணவை அளிப்பதன் மூலம் மணிமேகலை போக்குகின்றாள். பின்பு அங்கிருந்து அகன்று உலகவறவி என்று அழைக்கப்படும் ஊரம்பலத்தை அடைந்தாள். உலகவறவிக்கு மணிமேகலை சென்றிருப்பதையறிந்த அரசகுமாரனான உதயகுமாரன் துரத்திச் செல்கிறான்.

ஊரம்பலத்தையடைந்த மணிமேகலை உதயகுமாரன் விடாமல் துரத்திவருவதால் மேலும் ஒரு பெண்தெய்வத்தின் உதவியுடன் விண்வெளியில் பறக்கும் திறமைபெற்ற காயசண்டிகையின் உருவத்தை அடைகிறாள். உதயகுமாரனின் இந்தத் துரத்தல் அவளை அலைக்கழிக்கிறது. வானில்செல்லும் விஞ்சையன் தனது மனைவி காயசண்டிகை காசிநகரம் மீண்டதை அறியாமல் அவளைத் தேடி காவிரி பூம்பட்டிணம் வருகிறான். அங்கு தன் மனைவியின் சாயலில் இருந்த மணிமேகலையைத் தனது மனைவி என்றே நம்புகிறான். உதயகுமாரனுக்கு மணிமேகலை மாறுவேடத்தில் இருப்பது தெரிந்து அவளை அடைய அவள் பின்னால் அலைகிறான். இது பொறுக்காத விஞ்சையன் வாளால் உதயகுமாரனைக் கொன்று விடுகிறான்.

தன் மகன் இறந்துபோவதற்குக் காரணமானவள் என்பதற்காக அந்தநாட்டு மன்னவன் மணிமேகலையைச் சிறையில் அடைக்கிறான். மணிமேகலை புத்த நெறிகளின் மூலம் சிறைக்கோட்டத்தை அறக்கோட்டமாக்குகிறாள். அரசியாரின் பரிந்துரையின் பெயரில் மன்னன்  அவளைச் சிறையிலிருந்து விடுவிக்கிறான். மணிமேகலை அரசிக்கு புத்த தர்மங்களை போதிக்கிறாள்.. அந்தப் புகார் நகரத்தில் அறவழியில் ஒழுகும் புத்த பிக்குகுகளிடம் மேலும் பல அறவுரைகளைக் கேட்டு ஒரு முழு துறவியாகிறாள். பின்பு தன் தாயார் மாதவியுடன் காஞ்சிமாநகரம் செல்கிறாள்.

காஞ்சிநகரம் சென்றதும் தன்னுடைய பொய்யான வேடத்தைக் களைந்து அப்போது காஞ்சிநகரில் இருந்த அறவண அடிகளைக்  கண்டு வணங்குகிறாள். அங்கு அறவண அடிகள் அவளுக்கு அறநெறிகளைப் போதித்து முழுமையான புத்த பிக்குணியாக மாற்றுகிறார். காஞ்சி நகரில் இருந்தபடி மணிமேகலை ஒரு முழுமையான புத்த பிக்குணியாக மாறி மக்களுக்கு அறநெறிகளைப் போதிக்கிறாள்.

இளங்கோவடிகள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க பெண் துறவியான இந்த மணிமேகலையின் கதையைச் சீத்தலை சாத்தன் என்ற தமிழ்ப் புலவனாகிய நான் மொத்தம் முப்பது காதைகளில் தமிழ் இலக்கணம் மீறாமல் தொடர்நிலைச் செய்யுள்களாக வகுத்துள்ளேன்.

பின்குறிப்புகள் :

வடமொழியில் எந்த ஒரு கர்மவினை புரியும்போதும் அந்தணர்கள் சங்கல்பம் எனப்படும் உறுதிமொழியை முன்மொழிந்துவிட்டுதான் கர்மவினையை ஆற்றத் தொடங்குவார்கள். அந்தச் சங்கல்பத்தில் அவர்கள் இருக்கும் யுகம், சகாப்தம், வருடம், இடம், திசை, ருது, நட்சத்திரம்,திதி போன்ற அனைத்தும் உரைக்கப்படும்.  அவற்றில் ஒன்றுதான் ஜம்புத்வீபம் எனப்படும் இந்த பாரத தேசத்தைப் பற்றிய குறிப்பு வரும். இதனை உறுதி செய்யும் முகமாக மணிமேகலையின் பதிகத்தில் ‘தென்திசைப் பெயர்ந்தஇத் தீவத் தெய்வதம் சாகைச் சம்பு ‘ என்று அழைக்கப்படுவது உற்று நோக்கத்தக்கது. அதேபோல சோழர்களை இரவிகுலத் தோன்றல்கள் என்று குறிப்பிடுவது வழக்கம். அதனையும் உறுதிசெய்யும் விதமாக “ செங்கதிர்ச் செல்வன் திருக்குளம் விளங்கும் கஞ்ச வேட்கையில் காந்தமன் வேண்ட” என்ற வரிகளின் மூலம் உறுதிபடுத்துகிறார்.

அகத்தியர் என்ற முனிவரின் மேற்பார்வையில் காவிரி தமிழ் நிலத்தில் பாயும் செய்தி சொல்லப்படுகிறது. மற்ற இலக்கியங்களில் கூறப்பட்டதைப் போன்று புராணக் கதையின் தாக்கம் இதில் இல்லை என்பதோடு சம்பாபதி என்ற பெண்தெய்வம் காவிரியைவிட வயதில் மூத்தவள் என்ற தகவல் கூறப்பட்டுள்ளது. மேலும் சம்பாபதி என்ற தெய்வம் மேருமலையை விடுத்து தென்திசைப் புலம் பெயர்ந்த குறிப்பும் உள்ளது. இதன் காரணமோ, பின்னணியோ கூறப்படவில்லை. மணிமேகலைக்கு உதவி செய்யும் தெய்வங்கள் அனைத்தும் பெண் தெய்வங்கள் என்பது இங்கே சிறப்பு கவனத்துடன் நோக்க வேண்டும்.

மற்றவை நூலில்.

(தொடரும்)

9 Replies to “பாத்திரம் ஏற்றுப் பிச்சையிடு (மணிமேகலை – 1)”

  1. யாரெல்லாம் சுப அசுப கார்யங்களை செய்கின்றாரோ அவர்கள் அனைவரும் சங்கல்பம் சொல்லித்தான் துவக்குகின்றனர். அந்தணர்கள் மட்டுமல்ல அனைவரும் சங்கல்பம் செய்கின்றனர்.

    வித்யா நிதி

  2. எளிய புரிதலின் சாத்தியக் கூறு என்ற முகாந்திரம் வெகு அழகாகப் பொருந்துகிறது. பொழிப்புரை பதவுரை தாண்டி ஒரு காவியத்தை சுவை குன்றாமல் வெகு அழகாக சத்தியப்ரியன் அவர்கள் கொண்டு செல்கிறார்கள். ரசித்து சுவைக்க ஒரு இதமான படைப்பு. மேலும் ருசிக்க எதிர்பார்க்கிறோம்

    ஜவஹர் கண்ணன்

  3. என்னதான் தமிழ் இலக்கியங்களில் சுவை மிகுந்திருப்பதாக, அதிலும் குறிப்பாக கம்பனின் காப்பியமான இராமயாணத்தில் சுவை மேலோங்கி இருப்பதாக பல அறிஞர் பெருமக்கள் கூறிவந்தாலும், திருவையாறினை சேர்ந்த திரு. கோபாலய்யர் என்னும் மாபெரும் தமிழ் அறிஞர் அவர்கள் மட்டும் தொடர்ந்து சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலையில்தான் கூடுதல் சுவை இருக்கின்றது என பலமுறை கூறி வந்திருக்கிறார். அது முற்றிலும் கலப்படமற்ற உண்மையே. அக்காவியத்தினை தொடர வந்துள்ள திரு. சத்தியப்பிரியன் அவர்களுக்கு நல் வாழ்த்துக்கள்

  4. சுருக்கமான விளக்கிவிட்டீர்கள்.இதில் இலக்கிய சிறப்பு கொண்ட பாடல்கள் சிலவற்றையும் மேற்கோள் காட்டியிருக்கலாம் எனக் கருதுகின்றேன். நன்றி

  5. அருமையான முயற்சி. மனதாரப் பாராட்டி நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    ஓகை.

  6. Earlier, I was getting option to give my comments in Tamil. Now, that option tab is not available. The Editorial Board may think of restoring the earlier facility with adequate technical support. Then only the meaning of ‘ Tamil’Hindu will be complete.

  7. //**S Dhanasekaran on September 5, 2016 at 3:53 pm

    Earlier, I was getting option to give my comments in Tamil. Now, that option tab is not available.**//

    நீங்கள் கூகிள் இன்புட் டூல்ஸை உபயோகிக்கலாம். https://www.google.com/inputtools/try/

  8. கீழே உள்ள பகுதி எனக்குப்புரியவில்லை ஐயா!

    “எண்ணிக்கையில் ஆறு தேவ உலகங்களிலும் , இருபது பிரும்ம உலகங்களிலும் உயிர்களைப் படைக்க எண்ணிய பிரும்மன் ஆதிகாலத்தில் என்னுடைய பெயரைத் நீ தாங்கியிருந்தாய். இனி உன்னுடைய பெயர் இந்த நதியின் பெயரையும் தாங்கி இருக்கட்டும் “ என்று அந்தச் சம்பு தெய்வம் ஆணையிட அன்றிலிருந்து சம்பாபதி என்று பெயர் தாங்கிய நகரம் காவிரி பூம்பட்டினம் என்ற பெயருடன் வழங்கலாயிற்று”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *