தமிழ் படும் பாடு!

Tamil Alphabetசென்னை ஏர்போர்ட்டில் ஒருவர் பரபரப்பாக ஓடிக்கொண்டிருந்தார். அவர் லக்கேஜ் வந்து சேரவில்லையாம். அருகிலிருந்த ஒரு அறைக்கதவில் பெரிதாய் “மெய்புலன் அறைகூவலர்” என்று எழுதியிருந்தது. சரி, யாரோ ஒரு ஆபீசர் என்று நினைத்து உள்ளே வேகமாக நுழைந்து பார்த்தார். அது ஒரு கக்கூஸ். ‘சே’ என்று திரும்பினார்!

அவர் அந்த அறையில் சேவித்தது நவீனயுகத்தின் நாகரீகத்தமிழ். தமிழுக்கு இருக்கும் ஏகப்பட்ட கெடுபிடிகள் போதாதென்று இது இன்னொன்று புதிதாய் முளைத்திருக்கிறது. ‘Political correctness’ – (இதற்கு எனக்குத் தமிழ் தெரியவில்லை. ‘அரசியல் நேர்னஸ்’ என்று வைத்துக்கொள்ளுங்கள்!) என்பது இந்த இயக்கத்தின் பெயர். “மெய்ப்புலன் அறைகூவலர்” என்பது “ஊனமுற்றோர்” என்று நாம் இதுவரை குறிப்பிட்டு வந்தவர்களின் புதுப்பெயர். The PC (politically correct) word for PC (physically challenged)!

சமீப காலங்களில், தமிழ் மொழி தள்ளாடி பிழைத்துக்கொண்டிருக்கிறது – – தண்ணீர் இல்லாத சென்னையில் தப்பித்து பிழைக்கும் சிட்டுக்குருவி போல. இன்று தமிழ்சமுதாயம் பெற்றுள்ள பொருளாதார, சமுதாய வளர்ச்சி ஒரு விகிதத்தில் தமிழை பண்டமாற்றி அழித்தே கிடைத்திருக்கிறது என்பதே அதற்குக் காரணம்.

மிண்ணனு ஊடகங்களும், ஊர் கொள்ளாமல் அச்சடிக்கப்படும் தமிழ்ப்புத்தகங்களும், யூனிகோட் முதலான தொழில்நுட்பங்களும் தமிழில் வார்த்தை மலைகளை எங்கும் எளிதாக பரப்பியிருக்கின்றன. தமிழ் தெரிந்தால் அதை படிக்கவும், எழுதவும், அதை பத்து பேருக்கு உடனே அடையச்செய்வதும் எளிதாய் இருக்கிறது.ஆனால், இந்த வசதிகளால் தமிழ் பெரும்பாலும் வளர்வது ஏற்கனவே தமிழில் பழகிப்போன, தமிழை அனுபவித்த உயிர்களிடம்தாம். இப்படி தமிழை உள்வாங்கிவிட்டவர்களின் குழுமம் தினசரி சுருங்கிக்கொண்டே போகிறது. புதிதாய் பெருகிவரும் வேட்டி, தாவணி பழகாத தலைமுறைக்கு தமிழை ஊறுகாயாய் தொட்டுக்கொள்ளத்தான் முடிகிறது. இந்த இளம் தமிழினத்திற்கு தமிழை முக்கிய உபயோக மொழியாக ஆக்குதல் முடியுமா என்று தெரியாமல் பெரிய சவாலாய் இருக்கிறது.

ஒரு மொழியின் வெற்றி அது அந்த சமுதாயத்தினரின் உணர்வோடு ஒன்றியிருப்பது என்றால் அதில் தமிழுக்கு முழு வெற்றியே. ஆனால், இன்று தமிழ் அந்த ஒரு உணர்வுபூர்வ இடத்தை நிரப்பும் ஒரே வேலையைச் செய்வதோடு ஒதுக்கப்படும் அபாயம் இருக்கிறது. கிட்டத்தட்ட சமஸ்கிருதம் ஒரேயொரு விசேஷ உபயோகத்திற்காக மட்டுமே இயங்கும் மொழியாகிப்போனதுபோல! அன்னியமானவர்களோடு பொது மொழியும் (பெரும்பாலும் ஆங்கிலம்), நெருக்கமானவர்களோடு தமிழும் என்றிருக்கும் ஒரு சூழலில் தமிழ், முதியோர் இல்லத்தில் வைக்கப்படும் தாயார் போல ஆகிவிட்டிருக்கிறது.

இந்த சவாலுக்கு விடையாக நாம் தமிழைத் தயார்ப் படுத்த வேண்டும். இந்த சவாலில் வென்று, தமிழ் முழுமையான பண்டமாற்று மொழியாய் ஒருநாள் ஆகும் என்று நான் நினைக்கவில்லை. ஆனாலும்,தமிழில் விழும் சரிவை நிறுத்துவது தமிழ் சமுதாயத்தை ஒன்றாய் பிணைத்திருக்கும் ஒரு உபாயம் என்பதால் இதில் தமிழ் தெரிந்த எல்லோரும் முனைய வேண்டியிருக்கிறது. இந்த குறிக்கோளை எல்லோரும் ஏற்றுக்கொண்டாலும், அதை செயல்படுத்தும் சில வழிகள் அபத்தமாய் இருக்கின்றன. “மெய்ப்புலன் ஆர்வலர்” மாதிரி.

தமிழின் முதல் ஆபத்து அரசியல்தமிழர்கள். ஐம்பது, அறுபதுகளில் தமிழுக்குக் கிடைத்த பெரிய செம்மட்டி அடி திராவிட இயக்கம். அது செந்தமிழை அதன் எழில் குறையாமல் மேடைக்கு எடுத்துச்சென்றாலும், தமிழில் ஆயிரம் ஆண்டுகளாய் விளைந்துள்ள பல்லாயிரம் கற்பகக்கனிகளை பிற்போக்கு என்று இகழ்ந்து தமிழிலிருந்து துண்டிக்க முயன்று அதில் ஓரளவு வெற்றியும் பெற்றிருக்கிறது. தமிழின் சரித்திரம்,மாண்பு, கலாசாரம் முதலியவற்றை இழித்து மீதமிருக்கும் தமிழ் எழுத்தை வளர்ப்பதும்,புதுப்புது பொருந்தாத வார்த்தைகளை திணிப்பதும் தமிழை மூச்சுத் திணறச் செய்துகொண்டிருக்கிறது. இதனால் தமிழ் அகராதி வளர்ந்தாலும், தமிழிடம் சமுதாயத்திற்கு இருக்கும் ஒட்டுணர்வு ஒழிந்துபோயிருக்கிறது. இன்றைய தலைமுறைக்கு தமிழை தன்வயப்படுத்துதலின் லாபங்களாக இருந்த இந்த சரித்திர, கலாசார இலக்கியங்கள் அகற்றப்பட்டு,கன்னித்தமிழ் மொட்டைத்தமிழாய் நிற்கிறது.

தமிழில் விளைந்த ஆயிரக்கணக்கான “பிற்போக்கு” கருவூலங்களை தீயிட்டுக் கொளுத்தி அதை எப்படி “தூய்மை”ப்படுத்துவது? இவர்கள் தமிழை வளர்க்க முனையாமல், தமிழ் மூலம் காழ்ப்பை வளர்த்து அதன் மூலம் தங்கள் அரசியல் வியாபாரத்தை அல்லவா வளர்க்கிறார்கள்!

தமிழின் இரண்டாவது ஆபத்து, தூய்மைப்படுத்துகிறேன் என்று சோப்பும், துடைப்பமுமாய் அலையும் மொழிவல்லுனர்கள். இன்றைய சூழலில் தூய தமிழில் எழுதவேண்டும், பேசவேண்டும் என்று முனைபவர்களின் நடவடிக்கைகள் வினோதமாய் இருக்கிறது.வடமொழிச் சொற்கள் என்று பெயரிடப்பட்டு நாம் இதுகாறும் இயல்பாய் பழகிய பெரும் மொழிக்கோர்வை இன்று அரசியலுக்காக விலக்கப்பட்டிருக்கிறது. வடமொழிச்சொற்கள் தமிழோடு கடந்த ஐநூறு ஆண்டுகளாக கலந்திருந்தாலும் அவை ஏன் தமிழருக்கு இன்று மறுக்கப்படுகின்றன என்பது புதிராய் இருக்கிறது.இந்த தேர்வு எல்லா கலப்படத்திற்கும் இல்லாமல், வடமொழிச்சொற்கள் என்று சிலரால் தீர்மானிக்கப்பட்ட சொற்களுக்கு மட்டுமே செயல்ப்படுத்தப்படுவது வினோதம்.

நான் துருக்கி மொழியைக் கற்றபோது அதில் பல “தூய தமிழ்ச்”சொற்களை கண்டு வியந்தேன். உதாரணமாக, காகிதம் என்பதற்கு துருக்கியில் kagit என்றே சொல்கிறார்கள்.இதற்குக் காரணம் காகிதம் என்பது உண்மையான தமிழ் வார்த்தை அல்ல.இது எனக்கு பின்னால் தெரியவந்து ஆச்சரியப்பட்டுப்போனேன். தமிழில் இதுபோல பல வார்த்தைகள் உலகலாவிய பங்களிப்பாய் இருக்கின்றன. ஆனால், இன்று மொழி ஆராய்ச்சி என்பது அரசியல் காழ்ப்பு கண்ணாடிகளால் ஆராயப்பட்டு இந்த பங்கீடு தன் மனம்போன போக்கில் ஒதுக்கப்படுகிறது. “ஜ,ஸ,ஷ” – முதலான எழுத்துக்கள் தேவைப்பட்டாலும் உபயோகப்படுத்தக்கூடாது போன்ற மனப்பாங்குகள் தமிழின் ஏற்றத்திற்கே பெரிய தடைக்கற்கள். காஷ்மீரும், ஸ்டாலினும் இல்லாமல் (இவற்றை இப்படியே எழுதாமல்!) இன்றைய ஊடகங்கள் தமிழில் என்ன செய்தியைத் தர முடியும்?

போன மாதம் நடந்த மக்கள் டி-வியின் மூன்றாம் ஆண்டுவிழாவில் இந்த கேள்வி திருப்பூர் கிருஷ்ணன் அவர்களால் கேட்கப்பட்டது. தன் பெயரை சுடாலின் என்று எழுத மறுக்கும் உரிமை திரு.ஸ்டாலின் அவர்களுக்கு இருக்குமானால் எனக்கு ஏன் கிருட்டினன் என்று எழுதிக்கொள்ள நிர்ப்பந்திக்கப்படுகிறது என்று கேட்டார் அவர். முத்துராமலிங்கத்தேவருக்கும், ராமசாமி படையாச்சியாருக்கும் மட்டும் சாதிப்பெயரை வைத்துக்கொள்ளும் உரிமை தமிழ்நாட்டில் கொடுக்கப்படவில்லையா, அதுபோல. ‘ஸ’வும், ‘ஜ’வும் வந்தால் தமிழுக்கு தீட்டு பிடிக்குமா என்று தெரியவில்லை?

இன்று தமிழ்சினிமாவின் முண்ணனி நடிகையின் பெயரே (அசின்) ஆங்கிலமும்,வடமொழியும் கலந்து புனையப்பட்ட ஒரு புதுப்பெயர்தானே! இரண்டு மொழி கலந்தால் அந்த சேர்க்கையும் அவரைப்போல கவர்ச்சியாய் இருக்கும் என்றே தோன்றுகிறது!

இந்த தமிழ்வெறியர்களின் இன்னொரு பிடிவாதம் தமிழின் முதுகை ஒடித்துக்கொண்டிருக்கறது. நமக்கு வேண்டிய எல்லா வார்த்தைகளும் தமிழில் இருக்கவேண்டும் என்ற இந்த பிடிவாதம் தமிழை செயற்கையாக்கி அதன் சுமையை வளர்த்து அதை முடக்கிப்போடுகிறது.மொழி என்பது அதன் சமுதாயத்தின் ஒரு அங்கமாய் இருப்பதால் அது அந்த சமுதாயத்தின் தேவைகளை மட்டுமே கருத்தாய் கொண்டு வளர்கிறது. “மெய்ப்புலன் ஆர்வலர்” போன்ற செயற்கை ஊக்கிகள் தமிழ் அறியும் பாதையை இன்னும் செங்குத்தாக்கி பலரால் அதை கடக்க முடியாமல் செய்கின்றன.

எஸ்கிமோ மொழியில் பனிக்கு நூற்றுக்கும் மேற்பட்ட சொற்கள் இருக்கிறதாம்.நமக்கு ஸ்னோ என்பதற்கு கூட தமிழ் கிடையாது. எனக்குத்தெரிந்த ஸ்னோ நடிகைகள் பூசிக்கொள்வதுதான். ஆனால், மாறாக தமிழில் அரிசிக்கு பல பெயர்கள் – நெல், அரிசி, நொய், சாதம், சோறு முதலான தினசரி உபயோகத்தில் இருப்பவை – இருக்கின்றன. அரிசிக்கு சீனமொழியில் நம்மைவிட அதிகமாக வார்த்தைகள் உள்ளன. டாக்ஸி முதலான வார்த்தைகள் இன்று எல்லா மொழிகளிலும் ஒன்றாகவே அடையாளம் காணப்படுகின்றன. இம்மாதிரி புழக்கத்தில் இருக்கும் வார்த்தைகளைத் தமிழ்ப்படுத்தி நாம் தமிழை முடக்காமல் மேலே ஆகவேண்டிய வேலையைப்பார்க்கலாம்.

மூன்றாவதாக, தமிழ் மாட்டிக்கொண்டிருப்பது மொழிபெயர்ப்பாளர்களிடம். உலத்திலுள்ள எல்லா சாத்திரங்களையும் தமிழில் கொணருவோம் என்று இவர்கள் லாப்டாப்பும் பையுமாய் சுற்றுகிறார்கள். இவர்களின் குறிக்கோள் தமிழ் மட்டுமே தெரிந்த பல அப்பாவி நுகர்வோர்கள். தமிழை டெக்னிகலாக கற்றது மட்டுமே இவர்களின் அடையாளம். இவர்கள் “பெயர்க்கும்” தமிழ், போலீஸ்காரர்கள் கையால் வரைந்த தீவிரவாதியின் முகம்போல ஒட்டப்பட்டு உருவாக்கப்பட்டிருக்கிறது. உதாரணத்திற்கு, இன்று தமிழ்நாட்டின் மூலைமுடுக்குகளில் எல்லாம் தெரியும் விளம்பரம் “டிவியாக இருந்தால் அது பிக் டிவியாக விளங்கட்டும்” என்று இருக்கிறது. இங்கு “விளங்கட்டும்” என்ற வார்த்தை “ஹோ” (हो) என்ற ஹிந்தி வார்த்தையின் தமிழ். ஆனால், இது சரியல்ல. “ஹோ” என்பது விளங்குதல் என்பது சரியானாலும், இங்கே அது உபயோகப்படுத்தும் பொருள் வேறுபடுகிறது. இங்கு ‘விளங்கட்டும்’ என்ற தமிழ் மொழிபெயர்ப்பு செயற்கையாக அரிதாரம் பூசப்பட்ட முகம்போல வெளிறிக்கிடக்கிறது. இருக்கட்டும் என்றே இருந்தால் சரளமாய் இருக்கிறது. “டிவி என்றால் அது பிக் டிவியாக இருக்கட்டும்” என்று தமிழில் சொன்னால் இயல்பாக இருக்கும். “என்றால்”, “இருக்கட்டும்”போன்ற இயல்பான வார்த்தை உபயோகங்கள் தமிழை பழகிய பாதையில் வேகமாக ஓட்டுகின்றன. இந்த வெற்றிகரமான மொழிபெயர்ப்புக்குத்தேவையான உபயோக அறிவும்,சமுதாய அனுபவமும் இந்த மொழிபெயர்ப்பாளர்களிடம் இல்லை.

ஏனென்றால், இதற்கு நிறைய உழைக்கவேண்டியிருக்கிறது. ஒருமுறை ‘breathtaking’ என்ற வார்த்தையை எப்படி தமிழ்ப்படுத்துவது என்று யோசித்தேன். மூச்சைக்கட்டும்,மூச்சு முட்டும், மூச்சை நிறுத்தும் என்றெல்லாம் ஒன்றும் இயல்பாய் தோன்றவில்லை. மொழிபெயர்ப்பாளர் டோண்டு ராகவன் ஐயா அவர்கள் “கண்ணைக்கட்டும்” என்று போடலாம் என்றார். இது நேரிடையான மொழிபெயர்ப்பாக இல்லை என்றாலும் இதுதான் உண்மையான தமிழை செழிக்கவைக்கும் மொழிபெய்ர்ப்பு என்று தோன்றுகிறது.

சொல்வழக்குகள் ஒரு மொழியை அதன் சமுதாயத்தோடு கட்டிப்போடுபவை. “மூக்கை நுழைக்காதே” போன்ற உபயோகங்கள் (poke your nose) பல மொழிகளில் ஒருபோல இருந்தாலும், வேறுபல உபயோகங்கள் தம்தம் மண்மனத்தைப் பொறுத்து மாறிவிடுகின்றன. சோளக்கொல்லை பொம்மை என்ற உருவகம் எகிப்தில் பயன்படுகிறது, ஆனால், அதே அரபி பேசும் வளைகுடாவில் காணோம். ஏனென்றால், வளைகுடாவில் சோளக்கொல்லை பொம்மை இல்லை. இன்று இம்மாதிரி “மொழிபெயர்ப்பு” இலக்கியங்கள் தமிழ் மட்டுமே தெரிந்தவர்களுக்காகவே அமைவதால், இயல்பான மொழிபெயர்ப்பாய் அமைவது முக்கியமாகிறது.இல்லையென்றால், விவேக் போடும் பெண் வேடம் போல சிரிப்பாய் மாறிவிடுகிறது. செயற்கையான ஜூனூன் தமிழை நாம் மறக்க முடியுமா?

இன்று தமிழ் நம் நினைவலைகளிலும், வாழ்க்கை ஓட்டத்திலும் பிற மொழிகளுக்கு இடம் கொடுத்தே நிற்கிறது. தன் வாழ்க்கைச்சூழலின் ஏகபோக ஆளுமை என்னும் உரிமையை, இன்று எந்த சமுதாயமும் எந்த மொழிக்கும் வழங்கும் சூழலில் இல்லை – ஆங்கில தாய்மொழிக்காரர்கள் உட்பட. அதனால்,தமிழ் இன்று நம் வாழ்க்கையில் உரிமைகோர ஏதுவாக, அதனிடம் கலைப்பொக்கிழங்களும், அறிவியல் கருத்துக்களும், பொருளாதார பண்டமாற்று ஆதாயங்களும் கிடைக்கவேண்டும். முன்னேற முனையும் எல்லா சமுதாயமும் இந்த லாபங்கள் இருக்கும் மொழியை போட்டிபோட்டு பேணிவளர்க்கும். தமிழைக் காப்பாற்ற அதற்கு நாம் செலுத்தவேண்டிய ஊக்கி மருந்துகள் இவைதாம். இம்மாதிரி அரசியல் மற்றும் வியாபார ஸ்டண்டுகள் அல்ல!

47 Replies to “தமிழ் படும் பாடு!”

  1. மொழியின் அடிப்படை இலக்கணம். இலக்கண வழுக்களின்றி எழுதுவது நம் கடமை; முதற்கடமை.

    முதற்கடமையை முழுமையாய்ச் செய்தலும், முழுமையாய்ச் செய்ய முயலுதலும், முழுமையாய்ச் செய்ய விழைதலும் கடமை எனக் கொள்ளுதல் நன்று.

  2. மக்கள் தொலைக்காட்சியின் விழாவில் பேசிய இலஙகை எழுத்தாளர், எஸ். பொன்னுத்துரை ஒரு விஷயத்தைச் சொன்னார். ‘அலுவலகம்’ என்று இங்கு தமிழ் நாட்டில் Office -ஐ தமிழ்ப்படுத்தியிருக்கிறீர்கள். இலங்கையில் ‘office-க்கு கந்தோர் என்று சொல்லுவோம். எங்கள் ஊரில் அலுவலகம் என்றால், அதை நாங்கள் நீங்கள் சொல்லும் கழிப்பிடம் என்ற பொருளில் வழங்குகிறோம் என்றார். அனர்த்தம் தான். -வெ.சா.

  3. அருமையான கட்டுரை ஜெயராமன். இயல்பாக தமிழ் என்ற மொழியைப் புழங்கினாலே நன்றாக இருக்கும் – ஆனால் வெறுப்பு அரசியல், நுனிப்புல் ஊடகங்கள், ஆங்கில ஆக்கிரமிப்பு என்று பல்முனைத் தாக்குதல்களால் தமிழ் சீரழிந்துகொண்டிருக்கிறது. அதைத் தங்களுக்கே உரிய நடையில் நன்றாகச் சொல்லியிருக்கிறீர்கள்.

    திராவிட அரசியலில் தமிழ் கோஷப் படுத்தப் பட்ட அளவுக்கு, பயன்படுத்தவும், பரவவும், அணிசெய்யப் படவும் இல்லை. அதனால் தான் அந்தக் காலகட்டத்தில் தமிழில் உருப்படியான எந்த பொக்கிஷமும் படைக்கப் படவில்லை – வெறுப்பு வழிந்தோடும் சாக்கடைக் கருத்துக்கள் தாம் கொட்டப் பட்டன. இப்போது அந்த இருள் விலகி, தமிழின் உண்மையான கலாசாரச் செல்வங்களின் ஒளி கீற்றாக மீண்டும் பரவத்தொடங்கியிருக்கிறது. அந்த வகையில் தமிழுக்கு இது நல்லகாலம் தான்!

  4. அருமை.
    எழுதி பகிர்ந்ததற்கு நன்றி.
    அன்புடன்,
    ஸ்ரீனிவாசன்.

  5. மிக நல்ல கட்டுரை. நானும் “மெய்ப்புலன் அறை கூவலரை” பார்த்து ஒன்றும் புரியாமல் விழித்திருக்கிறேன்!

    ஜுனூன் தமிழ் இன்னும் தமிழ் ‘படுத்தப்பட்ட’ வட இந்திய விளம்பரங்களில் வாழ்ந்துகொண்டு தான் இருக்கிறது! ஒரு TV க்கான விளம்பரத்தில் “Manoranjan kaa baap” என்பதை “பொழுதுபோக்கின் அப்பா” என்று தமிழ் படுத்தியதை நாம் பார்த்தோம். வட இந்திய உணர்வு வர வேண்டும் என்பதற்காக விளம்பரங்களில் சிறுவர்கள் “சேட்டு தமிழ்” பேசுகிறார்கள்.

    நம்பி, இலக்கணம் மொழியின் அணிகலன். ஆடையையே இழந்து கொண்டிருக்கிறோம், அணிகலனா முக்கியம்?

  6. நண்பருக்கு,

    >>இலக்கணம் மொழியின் அணிகலன். ஆடையையே இழந்து கொண்டிருக்கிறோம், அணிகலனா முக்கியம்?<<

    இலக்கணம் மொழியின் அணிகலன் அன்று; அடித்தளம்.

    அடித்தளம் வலுவாக இருந்தால்தான் கட்டடம் நிலைத்து நிற்கும்.

    தமிழிலக்கணம் வலுவானது; அதனால்தான் இன்னும் தமிழ் நிற்கிறது.

    பிழைகளைப்பற்றி எண்ணாமல் எழுதிக்கொண்டிருந்தால் மொழி என்னாகும்?

  7. மிக அருமையான கருத்துக்கள். வெகு நாட்களாக என் மனத்தைக் குடைந்து கொண்டிருந்த கருத்துக்களை அழகாக வெளியிட்டிருக்கிறீர்கள்.

    திருத்தம்: ஸ, ஷ முதலியன எழுத்துக்கள். வார்த்தைகள் எனக் குறிப்பிட்டிருக்கிறீர்கள்.

    ‘க‌ர்ம‌ப‌ல‌ன்’ குறித்துப் பூர்வ‌ மீமாம்ச‌மும், ச‌ம‌ண‌மும்,
    ‘ஊழ்வினை வந்து உறுத்துதும்’ என்று சிலப்பதிகாரமும்,
    ‘வினைப் ப‌ய‌ன்’ குறித்து (‘பிறர்க்கின்னா முற்ப‌க‌லிற் செய்யின்…’ முத‌லிய‌ன‌) வ‌ள்ளுவ‌மும் ……..
    – கூறிய‌ க‌ருத்துக்க‌ள் எல்லாம் மூட் ந‌ம்பிக்கை என்றும், ‘ஸ’ வடமொழி எழுத்து என்றும் கூறிவரும் திரு கருணாநிதி தனது பிரிய மகனும், அரசியல் வாரிசுமானவருக்கு ‘ஸ்டாலின்’ என்று பெயரிட்டதையும், கையெழுத்தை அனைத்து அமைச்சர்களும், அதிகாரிகளும் தமிழில்தான் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டதையும் எண்ணி வியக்கிறேன்! வினைப் ப‌ய‌ன் விடுவதில்லை !!!

    ‘breathtaking’ …. ‘பெருமூச்சு’ என்றொரு நல்ல சொல் இதே பொருளில் வழக்கில் இருக்கிறதே!

  8. தற்போது இனையத்தில்கூட கிரந்த எழுத்துக்களின் பாவனையை அடியோடு நீக்கவேண்டும் என்று வரிந்து கட்டிக் கொண்டு ஒரு குழு செயல்படுகிறது. அவர்களின் கூற்றுப்படி இந்த அரை டஜன் கிரந்த எழுத்துக்கள் தமிழை அறவே அழித்துவிடுமாம்! இவர்கள் தமிழுக்குத் தெவையான பிராணவாயுவை அளிக்கிறார்களாம். அதற்காக Tam-99 விசைப் பலகையிலுள்ள “ஜ,ஸ,ஷ” போன்ற எழுத்துக்களை மிகப்பாடுபட்டு நீக்கிவிட்டு, ஒரு சோப்புப் போட்டுத் துவைத்த “தூயதமிழ்” விசைப்பலகையை உருவாக்கி, தமிழுக்கு ஒரு மாபெரும் சேவை புரிந்துவிட்டதாக மார்தட்டிக் கொள்கின்றனர்!

    தமிழ் விக்கிபீடியாவில் கணித மேதை இராமானுஜன் பெயரை “இராமானுசன்” என்றுதான் எழுதவேண்டும் என்று பிடிவாதம் பிடிக்கும் இந்த நபர்கள், ஜோசப் ஸ்டாலினை “சோசப் சுடாலின்” என்றோ, எம்.ஜி.ஆரை “எம்.சி.ஆர்” என்றோ, ஜெயலலிதாவை “செயலலிதா” என்றோ மாற்றத் துணிவில்லாதவர்கள்.

    இன்னும் இந்த கோஷ்டியினர் இணையத்தில் உலவ விட்டுள்ள சில சொற்களைப் பாருங்கள்:-
    —————————

    ஆதாரக்கிடப்புகளை முகாமைப்படுத்து

    மீயுரை சீர்திருத்து

    எடுநிலை அடைப்பலகையை விரி

    புகுபதிகை

    விடுபதிகை
    —————–

    ஏதாவது புரிகிறதா?

    தமிழுக்கு எதிரிகள் வெளியிலிருந்து வரவேண்டியதில்லை!

    எஸ்.கே

  9. திரு.உமாசங்கர்,

    `செய்வினையும் செய்வானும் அதன்பயனும் கொடுப்பானும்
    மெய்வகையால் நான்காகும் விதித்தபொருள்’

    என்பது சேக்கிழார் பெருமான் அருள்மொழி.

    வினைப்பயன் கொடுக்கப்படுகிறது.

  10. உமாசங்கர் ஐயா,

    கருத்துக்கு மிக்க நன்றி. பெருமூச்சு விடுவது என்பது ஒரு இயலாமையைக் குறிக்கும் செயலாக பிரதிபலிக்கும். ஆனால், breathtaking என்பதோ ஒரு ஆச்சரியமும், வியப்பும் கலந்த ஒரு உணர்வு அல்லவா!! இது பொருந்துமா?

    அ. நம்பி ஐயா,

    தங்கள் கருத்து வழக்கம்போல எனக்குப் புரியவில்லை. ஒருவேளை, இம்மாதிரி அபத்தமான மொழி வல்லுனர்களின் “வடமொழி காழ்ப்பு” நாளை கர்மவினையாகி அவர்கள் வளர்க்க நினைக்கும் தமிழையே அழித்துவிடும் என்கிறீர்களோ? அதுமாதிரி நடக்கக்கூடாது என்பதுதான் நம் ஆசை.

    நன்றி

    ஜயராமன்

  11. எஸ்.கே ஐயா,

    என்ன இது அநியாயம்? தங்கள் கமெண்ட்களுக்கு மட்டும் படம் வருகிறதே! புகைப்படம் அழகாய் இருந்தால்தான் இப்படி வருமா?

  12. திரு ஜயராமன்,

    விளக்கமாக எழுதாமல் சுருக்கமாக எழுதியது என் தவறு.

    வினை – நல்வினை, தீவினை

    வினைப்பயன் – நன்மை, தீமை

    வினைக்கான பயனைக் கொடுப்பவன் – இறைவன்

    தீவினை செய்பவனுக்கு அவ்வினையின் பயன் வந்தே தீரும்.

    `வினைப்ப‌ய‌ன் விடுவதில்லை’ எனக் கூறும் திரு. உமாசங்கர், `தீவினை செய்தவர் யார், என்ன வினை செய்தார், எத்தகைய வினைப்பயனை அனுபவிக்கிறார்’ என்றும் குறிப்பிட்டுள்ளார்.

    தீவினை செய்தவருக்குத் தீவினையின் பயன் வந்து சேர்கிறது.

    தானாக வந்து சேர்கிறதா? அன்று.

    இறைவன் சேர்ப்பிக்கின்றான்.

    இறையுண்மையை மறுக்கும் `அந்தத்’ தீவினையாளர் வினைப்பயனை மறுப்பாரோ? மறுத்தல் இயலுமோ?

  13. அ.நம்பி ஐயா,

    தன்யனானேன். தங்கள் விளக்கத்திற்கு. நீங்கள் கோனார் நோட்ஸ் நிறைய பழகி இருக்கிறீர்கள் போல இருக்கிறது.

    கருணாநிதி ஸ்டாலின் என்று பெயர் வைத்தது வினைப்பயனா!! நல்ல கேலிதான் செய்கிறார், உமாசங்கர் அவர்கள்.

    நன்றி

    ஜயராமன்

  14. அன்பு ஜயராமன் அவர்களுக்கு,

    இதனையும் கவனியுங்கள்.

    >>கையெழுத்தை அனைத்து அமைச்சர்களும், அதிகாரிகளும் தமிழில்தான் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டதையும் – உமாசங்கர்<<

    ஸ்டாலின் எப்படிக் கையெழுத்திடுகிறார்/கையெழுத்திடுவார்?

    ஸ்டாலின்…?
    சுடாலின்…?
    இசுடாலின்…?
    இச்டாலின்…?

    தலைவலி போதும் என்று எண்ணுகிறேன்.

  15. தமிழ் விக்கிப்பீடியா குறித்த சில விமர்சனங்கள் தொடர்பாக சில கருத்துக்கள்.

    நல்ல தமிழில் எழுத வேண்டும் அதுவே எமது குறிக்கோள். மொழிபெயர்க்கும் பொழுது நடைமுறைச் சிக்கல்களை கருத்தில் கொள்ள வேண்டும். எல்லா சொற்களுக்கும் ஒரு அறிஞர் குழு அமைத்து ஆர அமர்ந்து ஆராய்ந்து பெறுவது சிரமம். எனினும் எப்படி சிறப்பாக மொழி பெயர்க்கலாம் தொடர்பான எமது புரிதலை நாம் தொடர்ந்து மேம்படுத்திக் கொண்டே இருக்கிறோம். அங்கு உங்கள் கருத்துக்களையும் தரலாம்.

    ஒரு சொல் முதலில் பயன்படுத்தப்படும் பொழுது முதல்கட்ட மொழிபெயர்ப்பாகத்தான் பார்க்க வேண்டும். இவற்றை விட சிறப்பாக சொல்ல முடியும் என்றால் அவற்றை நீங்கள் பரிந்துரைக்கலாம். விக்கிபீடியா என்று பல நூறு பக்கங்களில் இருந்த சொல்லையே நாம் விக்கிப்பீடியா என்று தமிழ் ஒலிப்பு முறைக்கு ஏற்றவாறு மாற்றினோம். விக்கியின் சிறப்பு தன்மையே அது எளிதாக மாற்றப்படக் கூடியது. வெளியில் இருந்து விமர்சனம் மட்டும் சொல்லுவோர் வந்து நல்ல சொற்களைப் பரிந்துரைத்தால் நன்று. அப்படிச் சொய்யாதோர் குறித்து பாரதியின் “வாய் சொல்லில் வீரடி” என்ற கூற்றுத்தான் நினைவில் வருகிறது.

    கிரந்தம் தொடர்பாக தமிழ் விக்கிப்பீடியாவில் இறுதியான கொள்கை கிடையாது. கிரந்தம் தவிர்த்து பலர் எழுத விரும்புகிறார்கள் என்பது உண்மை. கிரந்தம் தமிழ் எழுத்துக்களில் உள்ளடங்காதது என்பது எனது தனிப்பட்ட புரிதல். சமஸ்கிருத சொற்களை கிரந்தம் பயன்படுத்தி எழுதலாம் என்றே நினைக்கிறேன். அதற்காத்தான் கிரந்தம் முதலில் பயன் பட்டது. சில கிரந்த எழுத்துக்கள் பல காலமாக பயன்பாட்டில் இருக்கின்றன. அவற்றை தொடர்ந்து பயன்படுத்துவது தொடர்பாக தமிழ்நாடு அரசு பரிந்துரைகள் தந்தால் நன்று.

    சிலர் வீம்பாக பிறமொழிச் சொற்களை திணிக்கின்றார்கள். அது தேவை அற்றது. தமிழ் மொழிச் சூழலுக்கு பொருந்தி, தமிழின் தொடர்ச்சியைப் பேணும் வண்ணம் சொற்கள் அமைவதே தகும்.

  16. இன்னுமொரு விடயத்தையும் கூறிவிட விரும்புகிறேன். நாங்கள் யாரையும் பகைத்து செல்ல விரும்பவில்லை. எவ்வளவு தூரம் அணைத்து செல்ல முடியுமோ அப்படி பயணிக்கவே விரும்புகிறோம். அமெரிக்காவில் பிறந்து தமிழை கல்லூரியில் கற்காமல் தன்னார்வத்தால் ஒரு ஆண்டுக்கு முன்னர் த.வி வில் இணைந்து ஒரு பயனர் 500 கட்டுரைகளுக்கு மேலே பங்களித்துள்ளார். அவரின் தமிழார்வத்தை என்ன வென்று சொல்வது. இலங்கையில் தகுந்த இணைய வசதி இல்லாமல், வாய்ப்பு கிடைக்கும் பொழுது எல்லாம் வந்து பங்களிக்கும் பயனர்களின் தமிழார்வத்தை என்ன வென்று சொல்வது. உலகில் சிதறி வாழ்ந்தாலும், அங்கிருந்தெல்லாம் பங்களிப்பவர்களின் தமிழார்வத்தை என்னவென்று சொல்வது. உடல் நலம் இடம் தராமல், நேர சிரமத்தோடு பங்களிக்கும் பயனர்களும் உள்ளார்கள். எனவே எங்கள் நிலைமையும் புரிந்த, குறிகிய பார்யை தவிர்த்த ஆக்க பூர்வமான விமர்சங்களை, கருத்துக்களை, செயற்படுகளை நாம் வரவேற்கிறோம்.

    தனிப்பட்ட முறையில் எமக்கு சார்புகள் இருக்கலாம். ஆனால் தமிழ் விக்கிப்பீடியாவை அவற்றுக்கு அப்பால உருவாக்கவே விரும்புகிறோம். அந்த கொள்கையை நாம் முழுமையாக கடைப்பிடிக்கிறோம் என்று சொல்ல முடியாது. ஆனால் அதுதான் எமது இலக்கு.

  17. திரு ஜயராமன் அவ‌ர்க‌ளே,

    தாங்கள் கூறுவது போல், பெருமூச்சு ஆத‌ங்க‌த்தை உள்ள‌ட‌க்கிய‌ ஆச்ச‌ரிய‌த்தை ம‌ட்டுமே குறிக்குமோ என்ற ஐய‌ப்பாடு என‌க்கு சென்ற முறை எழுதும் போதே வ‌ந்த‌து. எனினும், பெருமூச்சு ஆச்ச‌ரிய‌த்தையும், விய‌ப்பையும் குறிக்கும் என்ற‌ க‌ருத்தை என்னால் ஒதுக்க முடியாத‌தாலேயே அக்க‌ருத்தை வெளியிட்டேன். த‌க்க‌ மேற்கோள்க‌ளுட‌ன் பிறிதொரு ச‌ம‌ய‌ம் என் க‌ருத்தை வ‌லியுறுத்த‌ முடியும் என்றே நினைக்கிறேன்.

    ஒருவேளை பெருமூச்சு ஆத‌ங்க‌த்தை உள்ள‌ட‌க்கிய‌ ஆச்ச‌ரிய‌த்தையும், உள்மூச்சு (breathtaking) நிறைவை உள்ள‌ட‌க்கிய‌ ஆச்ச‌ரிய‌த்தையும் சுட்டுவ‌தாக‌க் கொள்ள‌லாமோ?

    ந. உமாசங்கர்

  18. திரு நம்பி அவர்களே,
    திரு ஜயராமன் அவ‌ர்க‌ளே,

    (பொதுக்கூட்ட மேடை போல விளிக்கிறானே என எண்ண வேண்டாம், அவர்களே என விளிப்பது நெருக்கம் கலந்த மரியாதையை வெளிப்படுத்துவதாகவே கருதுகிறேன்)

    வினைப்பயன் குறித்த என‌து கருத்தை நான் முழுமையாக “நம்பியே” கூறினேன், கேலியாக அல்ல.

    ஒருமுறை திரு கருணாநிதி “இறைவனை நான் நம்புகிறேனா, எனக்கு இறைவனைப் பிடித்திருக்கிறதா என்பதல்ல கேள்வி, இறைவனுக்கு என்னைப் பிடித்திருக்கிறதா, இறைவனுக்குப் பிடிக்கும்படி நான் நடக்கிறேனா என்பதே கேள்வி” என்றார்.

    விருப்பும் வெறுப்பும் இல்லாது இருத்த‌லே இறைத்த‌ன்மைய‌தாகும். இத்த‌கு உயரிய நிலையை எய்திய ஆதிச‌ங்கர பகவத் பாதர் த‌ம் எதிரே வ‌ந்த ச‌ண்டாள‌னில் ப‌ர‌ம‌னைக் க‌ண்டார். ஏழையின் சிரிப்பில் இறைவ‌னைக் க‌ண்டால் அதுவும் இந்து ம‌த‌த்துக்கு ஏற்புடைய‌தே.

    இறைவன் நிர்க்குணப் பிரம்மன் என்பதே பூர்வ மீமாம்சமும் சமணமும் கூறும் கருத்து. இதுவே எனக்கும் ஏற்புடையதாகத் தெரிகிறது.

    “வேண்டுதல் வேண்டாமை இலான்” என்று இறைவனைக் குறிப்பிடுகிறார், வள்ளுவர். இறைவன் தன்னைத் துதிப்பவருக்கு நன்மையும் துதியாதவருக்குத் தீமையும் செய்யான். அவனுக்கு ஆத்திகனும், நாத்திகனும் ஒன்றே. இந்துவும், சமணனும், பௌத்தனும், பார்சியும், யூதனும், கிறித்தவனும், இஸ்லாமியனும், இன்னபிற மதத்தினனும் ஒன்றே. இது இந்துத்துவம். இந்து மதத் தத்துவம். கிறித்துவத்தைப் போல, இஸ்லாத்தைப் போலத் தத்தம் கோட்பாட்டை நம்புபவரை மட்டுமே சொர்க்கத்துக்கும், நம்பாதவரை நரகத்திற்கும் அனுப்பும் வேலையை இறைவன் செய்வதில்லை. அவன் வேண்டுதல் வேண்டாமை இலான். விருப்பும் வெறுப்பும் இலான். நிர்க்குணப் ப்ரம்மன்.

    விதியின் பலனையோ, கர்ம வினைப் பலனையோ கொடுக்கும் வேலையை அவன் செய்வதில்லை. வினையே பலனை விளைக்கிறது.

    “பிறக்கின்னா முற்பகலிற் செய்யின் தமக்கின்னா
    பிற்பகலில் தாமே வரும்” ….. என்கிற‌து வ‌ள்ளுவ‌ம்.

    என் செல்ல ம‌க‌ள் சுமார் மூன்ற‌ரை வ‌யதிருக்கும் போது அவ‌ளுக்கு இர‌ணிய‌ன், பிரஹ‌லாத‌ன் க‌தையைக் கூறும் போது, “தூணிலும் இருப்பான், துரும்பிலும் இருப்பான் தூய‌ன் நாராய‌ணன்” என்றேன். அவ‌ள் ” அப்பா, அவ‌ர் தூணில் இருப்பார் என ஒப்புக் கொள்கிறேன். துரும்பில் இருக்க‌மாட்டார்” என்றாள். குழந்தை இறைவ‌ன் மிக‌ப்பெரிய‌வ‌ன் என்ற எண்ண‌த்தில் அவ‌ன‌து உருவ‌ம் துரும்பில் இருக்காது என்று க‌ருதுகிற‌து என எண்ணிய நான், அவ‌ன் எங்கும் நிறைந்த‌வ‌ன், உருவில் அட‌ங்காதவன் என விள‌க்கினேன். அவ‌ளோ, “இறைவ‌ன் க‌ருணை வ‌டிவான‌வ‌ன். துரும்பு காலிலோ கையிலோ குத்தித் துன்ப‌ம் த‌ரும். என‌வே அதிலே இறைவ‌ன் இருக்க மாட்டான்” என்றாள். இங்கே குழ‌ந்தை இறைவ‌னைக் கருணை வ‌டிவான‌வ‌னாக, ந‌ன்மை ம‌ட்டுமே செய்யும் ச‌ற்குண‌ப் ப்ர‌ம்ம‌னாக‌க் காண்ப‌து க‌ண்டேன். இதுவும் இந்து ம‌த‌த்தின் சிற‌ப்பே.

    இறைவ‌னை அவ‌ர‌வ‌ர் பார்வையில் இங்கே காணலாம். அவ்வாறே சேக்கிழார்ப் பெருமானும், இறைவ‌ன் வினைப் ப‌ய‌னைக் கொடுக்கும் நீதிமானாக‌க் காண்கிறார் என‌லாம். இத்த‌கு நீதிமானின் வ‌டிவாக‌த்தான் இறைவ‌னின் த‌சாவ‌தார‌க் காட்சிக‌ளைக் காண்கிறோம்.

    திரு க‌ருணாநிதி த‌ன‌து ம‌க‌னுக்குப் பெய‌ரிடும்போது தாம் முத‌ல்வ‌ர் ஆவோமென்றோ, இந்த ம‌க‌ன்தான் த‌ன‌து அர‌சிய‌ல் வாரிசென்றோ, பின்ன‌ர் த‌மிழில் ம‌ட்டுமே கையெழுத்திட வெண்டுமென்ற ஆணையைச் செய்த போது, இது த‌ம‌து ம‌க‌னுக்கும் பிறிதொரு நாளில் பொருந்தும் என்றோ எண்ணியிருக்க வாய்ப்பில்லை. ஆனால் அவரது செல்ல மகன் தம் வாழ்நாள் முழுவதும் “ஸ்” என்ற எழுத்தைப் பிள்ளையார் சுழி போல முதலில் எழுதித்தான் கையெழுத்திட வேண்டும் என்பது வினையின் பயனே. அவ‌ர‌து ப‌குத்த‌றிவுக்கு இது அப்பாற்ப‌ட்ட விஷ‌யம் என்பது என்றோ ஒரு நாள் புரியும், ஏற்க‌ன‌வே புரிந்தும் இருக்க‌லாம். ஆனால் பகிரங்கமாக ஒப்புக்கொள்ள மாட்டார். அவரது பகுத்தறிவு சரியான நேரத்தில் (பெயரிடும்போது) “ஸ்” என்பது “வடமொழி எழுத்து” என்பதை அவரது அறிவுக்கு மறைத்ததே! இதுவே வினையின் விளையாட்டு.

    ந. உமாசங்கர்

  19. திரு. உமாசங்கர் அவர்களுக்கு,

    ///இறைவன் நிர்க்குணப் பிரம்மன் என்பதே பூர்வ மீமாம்சமும் சமணமும் கூறும் கருத்து. இதுவே எனக்கும் ஏற்புடையதாகத் தெரிகிறது.///

    பூர்வ மீமாஞ்சையிலும் சமணத்திலும் முழுமுதற்பரம்பொருள் (பரப்பிரமம்) கொள்கை இல்லை. எனவே இறைவனை நிர்க்குண பிரமம் என்று அவை கூறியிருக்க இயலாது.

    இறைவனை நிர்க்குண பிரமமென்றும் சகுண பிரமமென்றும் கூறுவது அத்துவிதக் கொள்கை.

    தன் நிலையில் நிற்கும் நிலையில் இறைவனை நிர்க்குண பிரமம் என்றும் உயிர்களின் பொருட்டு ஐந்தொழில் செய்யும் நிலையில் சகுண பிரமம் என்றும் கூறுவர்.

    ///“வேண்டுதல் வேண்டாமை இலான்” என்று இறைவனைக் குறிப்பிடுகிறார், வள்ளுவர்.///

    `வேண்டுதல் வேண்டாமை இலான்’ என்று இறைவனைக் குறிப்பிடும் திருவள்ளுவர் `எண்குணத்தான்’ என்றும் சொல்கிறார்.

    `வேண்டுதல் வேண்டாமை இலான்’ எனில் குணங்கள் இல்லாதவன் என்று பொருள் கொள்ளக்கூடாது; அஃது இறைவனின் நடுவுநிலைமை ஆகும்.

    `சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபால்
    கோடாமை சான்றோர்க்கு அணி’
    என்னும் குறளையும் இங்கு நோக்கவேண்டும்.

    ///இறைவன் தன்னைத் துதிப்பவருக்கு நன்மையும் துதியாதவருக்குத் தீமையும் செய்யான். அவனுக்கு ஆத்திகனும், நாத்திகனும் ஒன்றே.///

    உண்மை. இதற்குக் காரணம் அவன் நடுவுநிலையினன்.

    விடைத்தாள்களைத் திருத்தும் ஆசிரியர் தம் மாணாக்கர்களை இன்னார், இனியார் எனப் பிரித்து மதிப்பெண்கள் அளிக்கமாட்டார்; இதனால் அவர் குணங்களே இல்லாதவர் எனப் பொருளாகாது.

    ///விதியின் பலனையோ, கர்ம வினைப் பலனையோ கொடுக்கும் வேலையை அவன் செய்வதில்லை. வினையே பலனை விளைக்கிறது.///

    வினையின் பயனை வினையே கொடுப்பதில்லை. வினை என்பது சடம்; பயனைக் கொடுக்க அதனால் இயலாது. பயனுக்குக் காரணம் வினையே ஆயினும் பயனைக் கொடுப்பது வினையன்று.

    ஒரு நிறுவனத்தில் இருபத்தைந்து நாள்கள் வேலை செய்தால் முழுச் சம்பளம் கிடைக்கும் என்று வைத்துக்கொள்வோம்.

    ஒருவன் இருபத்தைந்து நாள்கள் வேலை செய்கிறான்.

    இன்னொருவன் இருபத்திரண்டு நாள்கள் மட்டுமே வேலை செய்கிறான்; நிறுவனத்துக்குத் தெரிவிக்காமல் மூன்று நாள்கள் வீட்டில் இருந்து விடுகிறான்.

    வேறொருவன் இருபத்தைந்து நாள்களோடு எட்டு மணி நேரம் கூடுதல் வேலையும் செய்கிறான்.

    முதலாமவனுக்கு முழுச் சம்பளம் கிடைக்கும்; இரண்டாமவனுக்கு மூன்று நாள் சம்பளம் பிடித்தம் செய்யப்படும்; மூன்றாமவனுக்கு முழுச் சம்பளத்தோடு எட்டு மணி நேரத்துக்குரிய மிகையூதியமும் கிடைக்கும்.

    அவர்களுக்குக் கிடைக்கும் சம்பளத்துக்குக் காரணம் அவர்கள் செய்த வேலை (வினை).

    ஆனால் அவர்களுக்குச் சம்பளம் கொடுத்தவர் முதலாளி; வேலையே சம்பளம் கொடுக்காது; வேலைக்குரிய சம்பளம் கொடுப்பதற்கு முதலாளி என்று ஒருவர் இருக்கவேண்டும்.

    முழுச் சம்பளம், குறைந்த சம்பளம், கூடுதல் சம்பளம் என்று கொடுப்பதனால் முதலாளி பாரபட்சம் காட்டுகிறார் என்று சொல்ல முடியுமா? உரிய சம்பளம் கொடுக்கிறார்; அவ்வளவே.

    சம்பளத்துக்குக் காரணம் அவரவர் செய்யும் வேலை; சம்பளம் கொடுப்பவர் முதலாளி.

    ///“பிறக்கின்னா முற்பகலிற் செய்யின் தமக்கின்னா
    பிற்பகலில் தாமே வரும்” ….. என்கிற‌து வ‌ள்ளுவ‌ம்.///

    வினை செய்பவருக்கு அவ்வினையின் பயன் தானே வரும்; அப்பயனைப் பெறுவதற்கு வேறொரு வினை செய்ய வேண்டுவதில்லை.

    பொருளகத்தில் பணம் சேமித்து வைத்திருப்பவரின் கணக்கில் ஆண்டின் இறுதியில் உரிய வட்டித்தொகையும் சேர்ந்துவிடும்; வட்டியைக் கேட்டுக் கடிதம் ஏதும் எழுத வேண்டுவதில்லை; தானே சேர்ந்துவிடும்.

    `தானே சேர்ந்துவிடும்’ என்றால் வேறொருவர் சேர்ப்பிக்காமல் தானே சேர்கிறது என்பது பொருளாகாது. பொருளகத்தார் சேர்ப்பிக்கின்றனர்.

    `பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா
    பிற்பகல் தாமே வரும்’
    என்னும் குறளுக்கு, வினையின் பயனைப் பெற வேறு வினை செய்யத் தேவையில்லை என்பது பொருள்; சேர்ப்பிப்பவன் இலன் என்று பொருளாகாது.

    ///இங்கே குழ‌ந்தை இறைவ‌னைக் கருணை வ‌டிவான‌வ‌னாக, ந‌ன்மை ம‌ட்டுமே செய்யும் ச‌ற்குண‌ப் ப்ர‌ம்ம‌னாக‌க் காண்ப‌து க‌ண்டேன்.///

    நல்வினையின் பயன் இன்பம்; தீவினையின் பயன் துன்பம்.

    நம் இன்பத்துக்கும் இன்பத்துக்கும் நாமே காரணமாகிறோம்; இறைவனல்லன்.

    தமிழின் நிலைபற்றிப் பேசும் கட்டுரையிலிருந்து நாம் விலகிப் போகிறோமோ என்று எண்ணுகிறேன்; ஆசிரியர் அனுமதித்தால் வினைக்கொள்கை குறித்துத் தனிக்கட்டுரை எழுத முயல்வேன்.

    வினைக்கொள்கையை மீண்டும் எண்ணிப் பார்க்க வாய்ப்பளித்த உங்களுக்கு நன்றியறிதல் உடையேன்.

    அன்புடன்
    அ. நம்பி

  20. திரு நம்பி அவர்களே

    தாங்கள் கூறுவது போல தமிழ் குறித்த கட்டுரையில் வினை குறித்த சித்தாந்தம் விவாதிப்பது முறையன்று. அதன் வினைப்பயன் நம்மைச் சும்மா விடாது!

    தனியே இத்தலைப்பு வரும்போது இது குறித்துத் தீர ஆயலாம்.

    நன்றி

    ந்.உமாசங்கர்

  21. நம்பி ஐயா,

    தங்களின் கருத்துக்களுக்கு மிகவும் நன்றி. பல சிந்தனையைத்தூண்டும் ஆழமான கருத்துக் கருவூலங்களை பதிலாக வழங்கியிருக்கிறீர்கள்.

    /// தமிழின் நிலைபற்றிப் பேசும் கட்டுரையிலிருந்து நாம் விலகிப் போகிறோமோ என்று எண்ணுகிறேன்; ஆசிரியர் அனுமதித்தால் வினைக்கொள்கை குறித்துத் தனிக்கட்டுரை எழுத முயல்வேன். ///

    இதிலென்ன தயக்கம். தங்கள் கருத்தை தாராளமாக ஒரு அழகான கட்டுரையாக்கி அதை நம் எடிட்டர் ஐயா அவர்களுக்கு அனுப்பித்தாருங்களேன். என் சாதாரண கட்டுரையையே பதிப்பித்த அவருக்கு உங்கள் கட்டுரையை பதிப்பிக்க கசக்குமா, என்ன!

    நன்றி

    ஜயராமன்

  22. திரு. ஜயராமன் அவர்களுக்கு,

    உங்கள் கருத்துக்கு நன்றியறிதல் உடையேன்.

    விரைவில் எழுத முயல்வேன்.

    அன்புடன்

    அ. நம்பி

  23. தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ளவர்களுக்கு கத்தி, கடப்பாரை முதலிய உபகரணங்களை யாரேனும் தந்து உதவினால் அவர்களின் தனித்தமிழ் அகழ்வாராயச்சிக்கு உபயோககரமாக இருக்கும்.

    இப்போதைய சமீபத்திய அகழ்வாராய்ச்சி ”வாதம்” தமிழா ? மேற்படி உதவி யாரேனும் செய்தால் நன்று.

    இது தமிழா, அது தமிழா என்று பாதி நேரம் மொழி அகழ்வாராய்ச்சி செய்தே அவர்களின் காலம் கழிந்துவிடும். எவரேனும் தப்பித்தவறி எதையாவது வடமூலம் என்று கூறிவிட்டால், ஐயோ அம்மா என்று வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு தமிழ் இப்படி கெட்டு விட்டதே என்று ஒப்பாரி வைத்து விட்டு ஐந்து நொடிகள் முன்பு வரை தமிழாக இருந்ததை தமிழில் இருந்து நூறு யோஜனை தூரம் தள்ளிவைத்து விடுவார்கள்.

    இனி யாரேனும் ஆபத்தை தெரிவிக்க வேண்டுமெனில், ஆபத்து ஆபத்து என கத்தக்கூடாது. ஐயகோ, ஆபத்து வடமொழிச்சொல். தனித்தமிழி்ல் தீவாய்ப்பு, தீவாய்ப்பு, தீவாய்ப்பு என்றே கத்த வேண்டும். யாருக்கும் புரிந்தால் என்ன புரியாவிட்டால் என்ன ? நமக்கு ஆபத்தை தெரிவிப்பதா முக்கியம் ம்ஹும் தனித்தமிழ் தான் முக்கியம் 🙂

  24. பல வருடங்களுக்கு முன்பு தீபம் நா, பார்த்தசாரதி தனித்தமிழ் வெறியர்கள் பற்றி ஒரு கட்டுரை எழுதினார் என்று ஞாபகம் . minor irrigation project என்பதை சிறுநீர் பாசனத் திட்டம் என்றும் காப்பியை கொட்டைவடிநீர் என்றும் male member/female memberஎன்பதை ஆணுறுப்பினர் என்றும் பெண் உறுப்பினர் என்றும் எழுதும் தமிழ் வேண்டவே வேண்டாம் என்றார். பொழுது போகாத கூட்டம் ஒன்று தமிழ் நாட்டில் தமிழை காப்பாற்றுகிறேன் என்று கதை விட்டு வயிறு வளர்க்கிறது. இவர்களிடமிருந்து தமிழைக் காப்பாற்றினால் போதும்

  25. விநோத்,

    தமிழ்தான் தொடர்பு!

    “திராவிட” என்னும் சொல்லைப் பயன்படுத்தி தமிழனை இந்து மதத்திலிருந்து அன்னியப்படுத்தும் நோக்கத்தில் நிகழ்ந்து வருகின்ற விஷமத்தனமான முயற்சிகளை முறியடிப்பதே நம் லட்சியம்.

    நன்றி.

  26. ராஜன் ஐயா,

    /// இந்து மதத்துக்கும் இந்த கட்டுரைக்கும் என்ன நேரடி தொடர்பு : ///

    நேரிடையாக தொடர்பு இருப்பதாகத் தெரியவில்லை. அப்படி இருக்க வேண்டும் என்றும் அவசியம் இருப்பதாகத் தெரியவில்லை. இந்த தளம் தமிழ்இந்துக்களின் தளம். அவர்களின் எல்லா கருத்துக்களும், அவர்களின் எல்லா விருப்பங்களும் இங்கே கலந்துரையாடப்படும் – என்றே நான் நினைக்கிறேன்.

    நன்றி

    ஜயராமன்

  27. /// ஏங்க, எனக்கு வயசு இரு்வது தான். என்னை ஐயான்னு எல்லாம் கூப்ட்டு வயச ஏத்திடாதீங்க.///

    ராஜன் ஐயா,

    நீங்கள் இத்தனை சின்ன வயசு என்று தெரிந்து ஆச்சரியம். வயசை வைத்து தங்களை ஐயன் என்று சொல்லவில்லை. அது மரியாதை நிமித்தமே. நீங்கள் கருத்தாலும், தமிழ்இந்து முதலான தளங்களிலுள்ள ஈடுபாட்டாலும் உயர்ந்தவரே. நான் அழைத்தது உங்களை வயதானவராக தோற்றம் எழுப்பியிருந்தால் அதற்கு வருந்துகிறேன்.

    நன்றி

    ஜயராமன்

  28. /// இந்து மதத்துக்கும் இந்த கட்டுரைக்கும் என்ன நேரடி தொடர்பு : ///

    /// நேரிடையாக தொடர்பு இருப்பதாகத் தெரியவில்லை. அப்படி இருக்க வேண்டும் என்றும் அவசியம் இருப்பதாகத் தெரியவில்லை. இந்த தளம் தமிழ்இந்துக்களின் தளம். அவர்களின் எல்லா கருத்துக்களும், அவர்களின் எல்லா விருப்பங்களும் இங்கே கலந்துரையாடப்படும் – என்றே நான் நினைக்கிறேன். ///

    ஜ‌, ஸ‌,ஷ,ஹ முதலிய எழுத்துக்களைத் தமிழ் எழுத்துக்கள் இல்லை என்பதனால் அவற்றைப் பயன்பாட்டிலிருந்து நீக்க வேண்டும் என்ற கருத்துக்களைச் சிலர் வலியுறுத்தக் காரணம், ஸமஸ்கிருதத்தில் உள்ள இந்து மதம் சார்ந்த இலக்கியங்களைத் தமிழில் வழ‌க்கில் கொள்ள இவ்வெழுத்துக்கள் பெருமளவில் உதவுவதால்தான்.

    மேலும், அந்தணருக்கெதிரான பாசிசப் பிரசாரத்திற்கும், அவர்களை வடவர்களாகச் சித்தரிக்கவும் இத்தகு நிலைப்பாடு அவசியம் ஆயிற்று. இந்தப் ஃபாசிஸ்டுகளின் பார்வையில் (அல்லது பிரசாரப் போர்வையில்) அந்தணர் தமிழைத் தாய் மொழியாகக் கொண்டு, நாளெல்லாம் தமிழிலேயே வாழ்ந்தாலும், அவர் தமிழர் அல்லார். உருது பேசும் இஸ்லாமியர் தமிழர் ஆவார்.

    இந்தப் பின்னணியில் காணும் போது, இக்கட்டுரையின் இந்து மதத் தொடர்பு புலனாகும்.

  29. மிக அருமையான கருத்துக்கள். வெகு நாட்களாக என் மனத்தைக் குடைந்து கொண்டிருந்த கருத்துக்களை அழகாக வெளியிட்டிருக்கிறீர்கள். இயல்பாக தமிழ் என்ற மொழியைப் புழங்கினாலே நன்றாக இருக்கும் – ஆனால் வெறுப்பு அரசியல், நுனிப்புல் ஊடகங்கள், ஆங்கில ஆக்கிரமிப்பு என்று பல்முனைத் தாக்குதல்களால் தமிழ் சீரழிந்துகொண்டிருக்கிறது. அதைத் தங்களுக்கே உரிய நடையில் நன்றாகச் சொல்லியிருக்கிறீர்கள்.தமிழுக்கு எதிரிகள் வெளியிலிருந்து வரவேண்டியதில்லை!!
    பொழுது போகாத கூட்டம் ஒன்று தமிழ் நாட்டில் தமிழை காப்பாற்றுகிறேன் என்று கதை விட்டு வயிறு வளர்க்கிறது. இவர்களிடமிருந்து தமிழைக் காப்பாற்றினால் போதும்

  30. //நான் அழைத்தது உங்களை வயதானவராக தோற்றம் எழுப்பியிருந்தால் அதற்கு வருந்துகிறேன்.//

    ஹய்யோ, சும்மா காமெடி பண்னதுக்கெல்லாம் வருந்த வேணாம். என்னோட பதிலுக்கு பின்னாடி 🙂 சிரிப்புக்குறியை பார்க்கலையோ 😛

  31. ஸமஸ்கிருதம் மட்டும் அல்ல. உலகில் உள்ள அனைத்து மொழிகளில் இருந்தும் அவற்றில் அதிகமாகப் பயன்படுத்தப்படும் அனைத்து ஒலிகளையும் தமிழுக்குக் கொண்டு வரவேண்டும்.

    அங்கனம் செய்தால் தமிழ் உலகை ஆள் நாள் வெகு விரைவில் வரும். தமிழர்கள் உலகை ஆளுவதும் நடக்கும்.

  32. திரு வினோத் ராஜன் மற்றும் ரங்கனாதன் அவர்களுக்கு,

    எந்த ஒரு செய்தியையோ,தகவலையோ, வரலாற்று நிகழ்வையோ, ஒரு மொழி்யின் பெருமையையோ காலத்திற்க்கும் நிலைக்க வைக்க வேண்டும் என்றால் அதை உரு மாற்றாமல் அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்ல வேண்டியது அவசியம். சௌராட்டிரம் என்ற ஒரு மொழி இன்றும் வழக்கில் இருந்து கொண்டு இருக்கின்றதென்றால் அதற்கு அம்மொழியினர் அதை விடாது பேசி வருவதே காரணம். தமிழ் உயர்தனி செம்மொழியாக இருப்பினும் பலர் அதை இன்று கலப்படம் செய்து சிறிது தமிழும், பெரும்பான்மை அன்னிய மொழியும் பேசி வருகின்றனர். நம் தமிழின் பெருமையை அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்லும் ஒரு உயரிய பணியை செய்து கொண்டிருக்கும் விக்கிபீடியா போன்றவர்களுக்கு உங்களால் இயன்ற உதவியை செய்ய முடியாவிட்டாலும், ஏளனம் செய்யாதீர்கள்.

  33. திராவிட அரசியலாளர்கள் கடவுள் மறுப்பு, தமிழ்ப்பற்று, பாரப்பணர் எதிர்ப்பு, பகுத்தறிவு போன்றவற்றை ஒன்றாகப் பார்ப்பது எப்படி எப்போதும் சரியாக இராதோ, அதேபோலத்தான் இறைப்பற்றாளர்கள் நற்றமிழை விரும்புபவர்களை எதிர்ப்பாக நினைப்பதுவும் தவறாகும். சமசுகிருதத்தை ஈபுரு மொழி போன்று உயிர்ப்பிக்கும் திட்டம் எதுவும் வந்தால் நான் அதைக் கட்டாயம் வரவேற்பேன்.

    சொல் பயன்பாடு குறித்து ஒன்றைச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். ஒரு பொருளைக்குறிக்க புதிதாக ஒரு சொல்லை ஆக்கும்போது, அதன் பொருள் சட்டென அனைவருக்கும் புரிந்துவிடாதுதான். ஆனால் சூழலைக்கொண்டு பொருளை உணர்ந்து கொள்வது மாந்தரின் இயல்பு. ‘மெய்புலன் அறைகூவலர்’ என்பது சரியான மொழிபெயர்ப்பா எனத்தெரியவில்லை. ஆனால் அது சரியாக இருக்குமிடத்தில் இதைப் பயன்படுத்துவதில் தவறு இல்லை என்றே நினைக்கிறேன். பக்கத்திலுள்ள குறியீட்டைக் கொண்டு அது எதைக்குறிக்கிறது என்று எளிதி்ல் புரிந்து கொள்ளலாம். முதனமுறை ‘specially enabled people’ என்ற தொடரைக்கேட்கும் ஆங்கிலேயருக்கு அதன் பொருள் சட்டென விளங்கியிருக்குமா என்ன? அவர்களும் நாமும் இணையத்திலோ வேறு நூல்களிலோ பார்த்து அறிந்து கொள்வதில்லையா? ஒரு எடுத்துக்காட்டைப் பார்ப்போம். ‘தொகுதி’ என்ற சொல் அரசியலில் ‘constituency’ என்ற ஆங்கிலச்சொல்லுக்கு இணையாகப் பயன்படுகிறது. முதலில் அதை அறிமுகப்படுத்தியபோது புரிந்திருக்குமோ இராதோ, ஆனால் இப்போது தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட அனைவருக்கும் புரியும். இந்நிலையில் புதுச்சொல்லாக்கும்போது நல்ல தமிழ் வேர்ச்சொற்களில் இருந்து ஆக்குவதன்மூலம் அந்த வேர்கள் இன்னும் ஆழமாக ஊன்றும், தொகு, தொகுப்பு போன்ற கிளைச்சொற்களும் வலுப்பெறும். வேற்றுமொழி வேர்களில் இருந்து பெறும்போது இந்த பயன் கிடைக்காது. இன்று புழக்கத்திலுள்ள வடமொழிச்சொற்களும் பிறமொழிச்சொற்களும் ஒரு நாளில் ஊடகங்களில் எழுதியவர்களால் அறிமுகப்பட்டுத்தப்பட்டவை தானே? (மேலே பயன்படுத்தப்பட்டுள்ள பாவனை, யோஜனை பொன்ற சொற்களுக்கு எனக்குப் பொருள் தெரியவில்லை. எங்கள் ஊரில் பாத்திரத்தை ஏனம் என்ற தமிழ்ச்சொல்லால் வழங்குவார்கள். அது பாவனை வழக்குச்சொல்லாக (?) உள்ள வட்டாரத்தில் புரியாது. ஊடகத்தில் இவற்றில் இதைப்பயன்படுத்தினாலும் சூழல் கொண்டே அறிந்து கொள்ள முடியும்.) அதுபோல் விக்கிப்பீடியாவில் நாங்கள் பயன்படுத்தும் சொற்கள் வழக்கூன்றினால் நிலைக்கட்டுமே. இந்தக் கழிப்பறைச் சூழல் போன்று இங்கு குழப்பம் ஏற்படாமல் இருக்க இணைப்புகள் வழி விளக்கம் தரப்பட்டுள்ளதே? ஒவ்வொறு நாளும் தமிழ் விக்கிப்பீடியா பக்கங்கள் 57,000 முறைகளுக்கும் மேலாகப் பார்க்கப்படுகின்றன. இது வரை மூன்று பேர் எதிராகக் கருத்துச் சொல்லியிருக்கிறார்கள். அவர்களும் நற்றமிழ் புரியவில்லை என்று சொல்லவில்லை, ஏன் வேறு ஒரு சொல்லைப் பயன்படுத்தவில்லை என்று கேட்கிறார்கள். இந்தக் கருத்துக்களை நேர்மையுடன் அணுகிப்பாருங்கள்.

  34. எனது முந்தைய இடுகையிலிருந்த தட்டச்சுப்பிழைகளுக்கு வருந்துகிறேன்.

  35. சுந்தர் ஐயா,

    நன்றாக சொல்லியிருக்கிறீர்கள். தங்களுக்கு ஒரு தெளிவுபடுத்த ஆசை. நற்றமிழை விரும்புவர்களை யாரும் இங்கே கண்டிக்கவில்லை, எதிரியாகவும் நினைக்கவில்லை.

    இங்கே குறிப்பிட்டவைகள் தெளிவான வாதங்கள். நீங்கள் சொல்வது போல் புது வார்த்தைகள் முதலில் கொஞ்சம் புதிதாக, பரிச்சயம் இல்லாமல் வேற்று மொழி போல் இருப்பது இயல்புதான். ஆனால், நாங்கள் குறிப்பிடுவது அதில்லை.

    இன்று தமிழ் மொழி வழக்கில் பண்ணெடும் காலமாக வேரூன்றிய வார்த்தைகளை களைந்து புதுத்தமிழ் என்ற பெயரிலே அவற்றிற்கு மாறான வார்த்தைகளை திணிப்பது தேவையில்லாத வேலை. இது தமிழை நற்றமிழாக்கும் முயற்சியாக தெரியவில்லை. அதுவும் இந்த முயற்சி ஒரு அரசியலுக்கு உட்பட்டு நடைபெறும்போது அது தமிழை மேன்படுத்தாமல் மாசுபடுத்துகிறது.

    தமிழில் புழங்கும் வடமொழி வார்த்தைகள் எல்லாம் ஒரு காலத்தில் ஊடகங்களின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டவை என்று நீங்கள் சொல்கிறீர்கள். அது சரியில்ல. வடமொழி வார்த்தைகள் பலவற்றுக்கு தமிழில் வார்த்தைகளே இல்லை – முகம், மௌனம் முதலியவை போல. அவை எப்போதும் நம்கூடவே தமிழில் வாழ்கின்றன. அப்படியே பன்னெடும்காலமாக நம்மிடையே வாழும் இவை திணிக்கப்பட்டிருந்தாலும் ஒரு ஐநூறு ஆண்டுகளாக நம்மிடையே இருக்கும் இவை இன்று மாற்றி புரியாத சொற்களை அறிமுகப்படுத்துவதால் மொழி தேக்கமடைகிறதே ஒழிய வளர்வதில்லை.

    அறிமுகப்படுத்தப்படும் எல்லா புது தமிழ் வார்த்தைகளும் தமிழரகளால் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. நீங்கள் சொன்ன தொகுதி, மற்றும் வாக்காளர் முதலிய வார்த்தைகள் தமிழர்களால் பொதுவில் ஏற்றுக்கொள்ளப்பட்டவை. ஆனால், வேறுசில பொது வார்த்தைகள் – பேருந்து, வானொலி முதலியவை – ஏட்டில் மட்டுமே வலுக்கட்டாயமாக காண்கின்றன. இதற்கு காரணம் என்ன? ஒரு தமிழ்ச்சொல் அறிமுகமாகும்போது அது தமிழில் ஒரு வெற்றிடத்தை நிரப்புவதாக இருக்கவேண்டும். மாறாக வேரூன்றி செழித்த ஒரு வார்த்தையை மாற்றுவதாக இருந்தால் அது பெரும்பாலும் தோல்வியிலேயே முடியும். காபி முதலான வார்ர்தைகளை இன்று தமிழாக்க முயல்வது இயலாது, அது அறிவீனம் என்பதே என் கருத்து.

    நன்றி

    ஜயராமன்

  36. சுந்தர் அவர்களே,

    //இறைப்பற்றாளர்கள் நற்றமிழை விரும்புபவர்களை எதிர்ப்பாக நினைப்பதுவும் தவறாகும்.//

    //அவர்களும் நற்றமிழ் புரியவில்லை என்று சொல்லவில்லை,//

    `நற்றமிழ்’ என்றால் என்ன?

    புரியவில்லை; அன்புகூர்ந்து விளக்குங்கள்.

  37. திரு.ஜயராமன், என்னுடைய கருத்துகள் பெரும்பாலும் தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய எஸ்.கே. அவர்களின் இடுகைக்கு மறுப்பாக அமைந்தவை. அதனால் அது உங்களுடைய இடுகைக்கு முழுவதுமாகப் பொருந்தாது.

    திரு.நம்பி, நற்றமிழ் என்று நான் குறிப்பிட்டது இலக்கண நெறிகளுக்குட்பட்டு தமிழ் ஒலிப்புமுறைகளைச் சிதைக்காத வண்ணம் அமைந்த தமிழை. செந்தமிழ் என்றுகூடச் சொல்லலாம். பல நூறு ஆண்டுகளாக தமிழுக்கு இருதரத் தன்மை (diglossia) இருந்து வந்ததால் ஒருபுறம் பேச்சுத்தமிழ் செழிக்கவும், வட்டார வழக்குகள் குன்றிப் பொதுமொழியாக எழுத்திலும், மேடைப்பேச்சிலும் செந்தமிழ் வழங்கி வரவும், அதன்வழி இன்றும் பழைய இலக்கியங்களிலுள்ள தகவல்கள் காக்கப் படுவதும் பலரும் அறிந்ததுதானே. அதனால் நல்ல தமிழ் வேர்ச்சொற்களைக் கொண்டு புதிதாக சொல்லாக்குவதில் தவறில்லை என்றே கருதுகிறேன். மீயுரை என்று hypertext-ஐச் சொல்வதை எஸ்.கே. குறை கூறுகிறார். அதற்குப்பதிலாக ஆங்கிலத்திலேயே இருக்கட்டுமென்றால் தமிழற்கு எதற்கு தமிழ் விக்கிப்பீடியா? ஆங்கிலத்திலோ இந்தியிலோ படித்துக்கொள்ளலாமே? மற்றபடி, நான் இறைப்பற்றாளர்கள் என்று பொதுவாகச் சொன்னது தவறு. இறைப்பற்றாளர்களில் ஒரு தரப்பினர் வடமொழியை விடுத்தால் அது இறைவனை மதியாமை என்பதுபோல் சொல்வதைத் தான் சொல்ல வந்தேன். உண்மையில் தனித்தமிழ் இயக்கத்தைத் தோற்றுவித்தவர்கள் ஆழ்வார்களும் நாயன்மார்களும் தானே? அவர்கள் இறைப்பற்றாளர்கள்தானே?

    மற்றபடி, நான் வலைப்பதிவுகளில் மிகுதியாக உலவுவதில்லை. அதனால் உங்கள் கேள்விகளுக்கு மறுமொழி அளிப்பதில் நேரம் தாழலாம். மறுமொழி அளிக்க முடியாமலேயே போகலாம். அவ்வாறு நேர்ந்தால் மன்னிக்கவும்.

  38. திரு. சுந்தர் அவர்களுக்கு,

    //நற்றமிழ் என்று நான் குறிப்பிட்டது இலக்கண நெறிகளுக்குட்பட்டு தமிழ் ஒலிப்புமுறைகளைச் சிதைக்காத வண்ணம் அமைந்த தமிழை.//

    முன்னர் நீங்கள் குறிப்பிட்டது:

    //ஒவ்வொறு நாளும் தமிழ் விக்கிப்பீடியா பக்கங்கள் 57,000 முறைகளுக்கும் மேலாகப் பார்க்கப்படுகின்றன. இது வரை மூன்று பேர் எதிராகக் கருத்துச் சொல்லியிருக்கிறார்கள். அவர்களும் நற்றமிழ் புரியவில்லை என்று சொல்லவில்லை, ஏன் வேறு ஒரு சொல்லைப் பயன்படுத்தவில்லை என்று கேட்கிறார்கள்.//

    இவ்விரு கருத்துகளையும் ஒப்புநோக்கின் நீங்களும் பிறரும் அங்கு எழுதுவது `நற்றமிழ்’ என்று ஆகிறது.

    //பின்னர் ஒவ்வொரு பக்கங்களின் நோக்கங்களும், தேவைகளும் ஆயப்பட்டு தேவையற்ற பக்கங்கள் நீக்கப்படும்.//

    மேலே உள்ள முற்றுச்சொற்றொடர் அங்கிருந்து எடுக்கப்பட்டது.

    இஃது `இலக்கண நெறிகளுக்குட்பட்டு’ அமைந்துள்ளதா?

    ஒரு முற்றுச்சொற்றொடரில் மூன்று பிழைகள்.

    இதுதான் நற்றமிழா?

    கலைச்சொல்லாக்கம் என்பது தமிழறிஞர்களும் துறைசார் அறிஞர்களும் கூடிச் செய்யவேண்டிய பணி.

    நீங்களும் உங்களைச் சேர்ந்தவர்களும் பிழையின்றித் தமிழ் எழுத முதலில் கற்றுக்கொள்ளுங்கள்; நற்றமிழ் குறித்துப் பிறகு பேசலாம்.

    எவரையும் புண்படுத்துவது என் நோக்கமன்று. ஆனால் சிந்திக்காமல் நாம் எய்யும் அம்புகள் நம்மை நோக்கித் திரும்பக்கூடும் என்பதனை உணர்த்துவதற்காகவே இதனை எழுதுகிறேன்.

  39. ஸாய்ராம். தங்கள் அலசல் கட்டுரை எக்ஸலன்ட் நண்பர் ஜ‌யராமன் அவர்களே. நல்ல வேளை தமிழக அரசின் தலைமைச் செயலக கட்டிடத்தின் பெயரை செயின்ட் சார்ச் கோட்டை என்று மாற்றம் செய்யாமல் விட்டார்களே. செம்மொழி என்ற சிறப்பு பெற்ற தமிழ், உச்சரிப்புகளிலும் (அர்த்தம் வேறுபடும் என்பதைப் பற்றி எள்ளளவும் கவலை கொள்ளாமல்) எப்படி சிதைக்கப்படுகிறது என்பதை கலைஞர் டிவி மற்றும் இதர தமிழ் சேனல்களின் செய்தி மற்றும் இதர நிகழ்ச்சிகளிலிருந்து மிக நன்றாகத் தெரிந்துகொள்ளலாம். ஏன் சம்பந்தப்பட்டவர்கள் திருத்தக்கூடாது?

  40. //சோப்பும், துடைப்பமுமாய்//

    https://tinyurl.com/yuliasu-sesar

    துடைப்பக்கட்டை, ஃபினாயில் சஹிதம் தமிழ் விக்கிப்பீடியாவில் நடைபெறும் தமிழ் சுத்திகரிப்பு 🙁

    தனித்தமிழ் வெறியர்களின் கையில் ஒரு திட்டம் சிக்கினால் என்ன ஆகும் என்பதற்கு இதுவே சான்று.

    //காஷ்மீரும், ஸ்டாலினும் இல்லாமல் (இவற்றை இப்படியே எழுதாமல்!) இன்றைய ஊடகங்கள் தமிழில் என்ன செய்தியைத் தர முடியும்?//

    https://tinyurl.com/isutalin

    https://tinyurl.com/sammu-kasumir

    இவ்வாறு வெறியர்களின் கையில் தமிழ் திட்டங்கள் இருக்கும் வரை, தமிழ் படாத பாடு தான் பட்டுக்கொண்டிருக்கும் !!!

  41. விக்கிப்பீடியாவின் தனித்தமிழ் வெறித்தனத்தின் இன்னொரு உதாரணம்:

    https://tinyurl.com/tamil-wikipedia-fanatics

    இவர்கள் கையில் சிக்கித்தவிக்கும் நிலை தமிழுக்கு 🙁

  42. வணக்கம்,
    உலகம் பரந்து வாழும் தமிழர்கள் எந்நாட்டிலிருந்தும்
    தமிழில் எழுதுவதற்காக ஆக்கப்பட்ட எலி-எழுத்தாணி,
    கிளிக்எழுதி ! ! !
    தொலையிறக்க https://kilikeluthi.online.fr
    உங்கள் நண்பர்களுக்கும் தெரியப் படுத்துங்கள்
    நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *