வாழ்வின் ஒவ்வொரு நாளும் ஒரு பாடல்: அன்னமையா

ள்ளபாக்கா என்ற குடும்பப் பெயரைக் கொண்ட தள்ளபாக்கா அன்னமாச்சார்யர் தெலுங்கு இலக்கிய உலகில், இசையுலகில்  தனக்கெனத் தனியிடம் பெற்றவர். தமிழகத்தில்  ஆழ்வார்கள், கர்நாடகத்தில் தாசர்கள் போலவே தெலுங்கு இலக்கிய உலகில் போற்றப்படுபவர்.

நீண்டகாலம் குழந்தையின்றி வருந்திய பெற்றோர் நாராயணசூரி—அக்கலாம்பா தம்பதியருக்கு  இறைவனருளால் குழந்தை பிறக்கிறது. அன்னமையா எனப் பெயரிடுகின்றனர். இளவயது முதலே அவர் திருப்பதி வெங்கடாசலபதியிடம் அன்பு கொண்டவராக இருக்கிறார். எட்டு வயதில் அவருக்கு வெங்கடேசனின் தரிசனம் கனவில் கிடைக்க திருப்பதி போகிறார். நீண்ட தூரம் நடந்ததால் சோர்வு ஏற்பட வழியிலேயே தூங்கி விடுகிறார். கனவில் அலமேலுமங்கைத் தாயாரின் திவ்யதரிசனம் கிடைக்கிறது. மிகவும் மகிழ்ச்சியடைந்த அவர் தாயாரின் புகழை நூறு பாடல்களில் அங்கேயே வெளிப்படுத்துகிறார். பின்பு திருப்பதி சென்று ஆண்டவனை வழிபடுகிறார். அந்த இடத்தின் பேரழகைக் கண்டு அங்கேயே தங்குகிறார். பதினாறு வயதுவரை அவர் வாழ்வு அங்கு கழிகிறது.

இறையருளால் மீண்டும் தள்ளபாக்கா வருகிறார். தாய் அக்கலாம்பா   அன்னமையாவை இல்லற வாழ்வில் ஈடுபடுத்த விரும்பி அவருக்குத் திருமணம் செய்து வைக்கிறார். அக்கலம்மா, திம்மக்கா என்று இரு மனைவியர். திம்மக்கா மகாபாரதக் கதையை முன்வைத்து  “சுபத்ரா கல்யாணம்” என்ற நூலை எழுதியவர். இவர் தெலுங்கு மொழியின் முதல் பெண்புலவராகக் கருதப்படுகிறார். வெங்கடேசப் பெருமான் ஒரு பாடலாவது ஒரு நாளில் எழுத வேண்டும் என்று அன்னமையாவுக்கு அன்புக் கட்டளையிட வாழ்நாளின் இறுதிவரை அதைத் தொடர்கிறார். தொண்ணூற்றி ஐந்து வயதுவரை வாழ்ந்ததால் நாளுக்கொன்றாக அவர் முப்பத்திரண்டாயிரம் பாடல்கள் பாடியிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. அவற்றில் பன்னிரண்டாயிரம் பாடல்கள் மட்டுமே கிடைத்திருக்கின்றன.

Annamayya-1தென்னிந்தியாவிலுள்ள வைஷ்ணவ ஆலயங்கள் அனைத்திற்கும் சென்று இறைவனைத் தரிசித்து பல கீர்த்தனைகள் பாடுகிறார்.அகோலபில மடத்தின் முதல் ஆச்சாரியரான சடகோப யதிந்திர மகாதேசிகனிடம் சீடராகச் சேர்கிறார். சில காலம் அங்கிருந்து விசிஷ்டாத்வைதக் கருத்துக்கள் கொண்ட பாடல்களைப் பாடுகிறார். பாடல்களின்    கவித்துவத்தால் கவரப்பட்ட பெனுகொண்டாவை ஆண்ட சலுவ நரசிங்கராயர் அன்னமையாவைத் தன் அவைக்கு அழைத்து தன்னைப் பற்றி ஒரு பாடல் பாடும்படி வேண்டு கிறார். மனிதர்கள் புகழ்பாட [நரஸ்துதி]  தான் ஒரு நாளும் தயாரில்லை என்று அன்னமையா மறுத்துத் திருப்பதி வந்துவிடுகிறார். இளவயது முதலே திருப்பதி வெங்கடாசலபதியிடம் ஈடுபாடு கொண்ட அன்னமையாவுக்கு  இறையனுபவங்கள் அடிக்கடி கிடைக்கின்றன. அந்த அனுபவங்கள் அவர் இறைவசப்பட பெருங்காரணமாகிறது.

பக்தி வெளிப்பாடும், அதன் பிரிவும்  பலவகைகள்  உடையதாக இருந்தாலும் கடவுளிடம் தஞ்சமடைதல் மூலம்தான் அமைதி அடைய முடியும் என்பதும் அதுதான்  பிறவியிலிருந்து விடுதலை அடைய மனிதனுக்குத் துணை செய்யுமென்பதும்  அன்னமையாவின்  ஆழமான எண்ணமாகும். அதனால் சரணாகதி என்ற பின்னணியில்தான் அவருடைய பக்திக் கீர்த்தனைகள் அமைகின்றன. பொதுவாக மொழி இலக்கியங்களில் பாடல்கள் பதம் [பாடமென்றும் சொல்லப்படும்] என்றழைக்கப்படும். அது பத்யகவிதையும், பதகவிதையுமாகும் என்று இரண்டு வகைப்படுகிறது. பத்யகவிதை இலக்கண முறைப்படி அமைவதாகும். பதகவிதை என்பது  இலக்கணக் கட்டுப்பாடில்லாமல் ஆனால்  ஒரு வடிவ அமைப்பிற்குள் அ்மைகிறது. அவர் பின்பற்றியது பதகவிதை வடிவமாகும். பொதுவாகக் கீர்த்தனம், கிருதி, சங்கீர்த்தனம் போன்ற பெயர்களில் பக்திப் பாடல்கள் குறிப்பிடப் படுகின்றன. அன்னமாச்சார்யாரின்  கீர்த்தனைகள் சமூக நன்மையும் தத்துவமும் கொண்ட பக்தி [அத்யாத்ம சங்கீர்த்தனை],  காதலின் வழியிலான பக்தி [சிருங்கார கீர்த்தனை] என்ற   இரண்டு பிரிவுகளின்கீழ்     அடங்குவதாகும்.

அவர் தெலுங்கு, வடமொழி இரண்டிலும் எழுதியுள்ளார். வெங்கடாச்சல மகாத்மியம், சங்கீர்த்தன லட்சணம் ஆகிய இரண்டும் வடமொழியில் எழுதப்பட்டவை. திவிபத ராமாயணம், சிருங்கார மஞ்சரி, வெங்கடேசுவர சதகம் ஆகியவை தெலுங்கு மொழியில் எழுதப் பட்டவையாகும். தன் மீது அருள் காட்டிய தாயாரின் மீது பாடிய நூறு பாடல்கள் வெங்கடேசுவர சதகம் என்றழைக்கப் படுகிறது. இதற்கு அலமேலுமங்கா சதகம் என்றும் பெயருமுண்டு. பக்தியில் இரண்டாயிரத்து இருநூற்று ஒன்பது கீர்த்தனைகளும் சிருங்காரத்தில் ஆயிரத்து ஐநூற்று இருபத்தியாறு கீர்த்தனைகளும் கிடைத்துள்ளன. சண்டை போடுதல், விவாதித்தல், தொண்டுசெய்தல், அடைக்கலம் வேண்டுதல் என்ற நான்கு நிலைகளில் பக்தி வெளிப்பட்டாலும் சரணாகதி என்பது அவருடைய கீர்த்தனைகளின்    ஆழமான  பின்புலமாகிறது. கடவுளர்   நாமவரிசை, சரணாகதி, நாயகி பாவம் என்று  நாலாயிர திவ்யபிரபந்தத்தின்  பிரதிபலிப்பைப் பல இடங்களில் பார்க்கமுடிகிறது. இவருடைய கீர்த்தனைகள் ஒரு பல்லவியும், மூன்று சரணங்களும் கொண்டுள்ளன. பல்லவி, சரணமென்ற முறை இவரால் தான் அறிமுகமானதென்ற ஒரு கருத்துமுண்டு. பொதுவாக எல்லாக் கீர்த்தனைகளும் ஒரு முத்திரையைக் கொண்டுள்ளன வெங்கடேசா  என்பது  இவருடைய முத்திரையாகும்.

இந்தியாவின் எல்லாப் பகுதிகளிலும் காணப்பட்ட சாதி, மத பேதங்களை, மனிதர்களிடமான வேறுபாடுகளை, சிந்தனைப் போக்குகளைச் சுட்டிக் காட்டி சமூகநலம் விரும்பும் பக்தி இலக்கியங்களைக் கொண்டதாக பொதுவில் அந்தக் காலகட்டம் [பதினைந்தாம் நூற்றாண்டு] அமைகிறது. அதைத் தன் படைப்புகளில் அன்னமையா தீவிரமாக வெளிப்படுத்தி இருக்கிறார். கடவுளோடு நேரடியாகப் பேசுவது போன்ற பாவனையைத்தான் அவர்  கீர்த்தனைகள் முன்வைக்கின்றன. இறையனுபவத்தையும், தன் பக்தியையும், இசையையும் மட்டும் வெளிப்படுத்திக்கொண்டு ஒரு பக்தன் என்ற நிலையில் நின்றுவிடாமல் சமூகவாதியாக, சீர்திருத்த வாதியாக அவர் வெளிப்படும் இடங்கள் பலவாகும். சமுதாய  விழிப்புணர்வு வற்புறுத்தலுக்கும், சமூக போதனைக்கும் அடையாளமாக அவருடைய சில பிரபலமான கீர்த்தனைகள் சான்றாக அமைகின்றன.

tirupathi-8bஇறைவன் இந்தத் தன்மை கொண்டவன் என்பது யாராலும் மதிப்பிட்டுச் சொல்ல முடியாததாகும். எது மனதிற்கு விருப்பமாகத் தோன்றுகிறதோ அதைச் செய்யும் உரிமை மக்களுக்குத் தரப்பட்டிருக்கிறது என்பதை வெளிப்படுத்துவதில் ஞானிகளும், சீர்திருத்தவாதிகளும் உறுதியாக இருந்திருக்கின்றனர். அன்னமையா அந்த மாதிரியான ஒரு பிரக்ஞையை மக்கள் முன் வைக்கிறார்.” எந்த முறையில் கடவுளைப் பார்க்க விரும்புகிறோமோ அதே வடிவில் நாம் பார்க்க முடியும். வைணவர்கள் உன்னை விஷ்ணு என்றழைக்கின்றனர். சைவர்கள் சிவனென்று அழைக்கின்றனர்.காபாலிகர்கள் ஆதிபைரவன் என்கின்றனர். சக்தி பூஜாரிகள் சக்தி என்றழைக்கின்றனர். எந்தெந்த பெயர்களில் அழைக்கிறோமோ அந்தந்த பெயர்களில்தான் இறைவன்”  என்று ஒரு கீர்த்தனையமைகிறது.[’அவனு  எந்தமாத்ரமுனா எவ்வரு தலசின அந்த மாத்ரமே நீவு ’] அது அன்றைய சமூகநிலையைக் காட்டி மக்களைத் தெளிவுபடுத்தி வழிபாடு அவரவர் மனதிற்கு உகந்தது என்பதை வெளிப்படுத்துகிறது. இன்றும் இந்தச் சிக்கலில் மனிதர்கள் உழல்வதும், முடிவு காண இயலாமல் தவிப்பதும் நடைமுறையில் காணும் அவலநிலையாகும்.

சாதி வேற்றுமைகளில் சமூகம் அழுந்திக் கிடந்ததை அவரால் பொறுக்க முடியவில்லை .எந்தச் சாதியாக ,எந்த நிலையில் இருப்பவராக இருந்தாலும் எல்லோருக்கும் “கடவுள் ஒருவர்தான் என்பதைத் தன் கீர்த்தனையில் உறுதியாகச் சொல்கிறார். ஏழை,பணக்காரர் என்ற வேறுபாடு கடவுளுக்கில்லை.தூக்கம் என்னும் உணர்வு எல்லோருக்கும் ஒன்றே. இரவும்,பகலும் எல்லோருக்கும் ஒருமாதிரியானதுதான். உண்ணும் உணவு வித்தியாசப் பட்டாலும் அனைவருக்கும் நாக்கு ஒன்றுதான் நாயோ யானையோ சூரியன் பொதுதான். இப்படிக் கடவுளும் ஒன்றுதான் ”[பிரம்மம் ஒக்கட்டே,  பரபிரும்மம் ஒக்கட்டே “] என்று அக்கீர்த்தனை பொதுத்தன்மை பற்றிப் பேசுகிறது. இது அவருடைய பிரபலமான கீர்த்தனையுமாகும்.

சமூக விழிப்புணர்வை தான் வாழ்ந்த சமூகத்து மக்களுக்கு வெளிப்படுத்தும் மற்றொரு சிறந்த கீர்த்தனையும் உண்டு. “எந்தக் குலமாக இருந்தால் என்ன? எந்த இடத்தவராக இருந்தாலென்ன? எல்லோரும் ஒன்றுதான். இறைவன் சாதி,இனத்திற்கு அப்பாற்பட்டவன். உண்மை, அன்பு, கருணை, பகையற்றவுணர்வு, மனவொழுக்கம், தர்மசிந்தனை ஆகியவை தான் இறைவனோடு நம்மை இணைக்குமேதவிர வேறு எதுவுமில்லை. வெங்கடேசனுக்கு யாராக இருந்தாலென்ன” [“ஏ குலஜூடை யினமேமி ] என்று அந்தக் கீர்த்தனை அமைகிறது.’சாதி வீணானது. அஜாமிளனும் மற்றவர்களும் எந்தச் சாதியைச் சேர்ந்தவர்கள்? சாதிவேறுபாடு உடலோடு   தோன்றி   உடலோடு மறைகிறது.ஆத்மா     பரிசுத்தமானது; அழிவற்றது. இறைவனோடு இணைவது [விகாதுலன்னிய விருதா] என்றொரு கீர்த்தனை அமைகிறது.

“சிறப்பான விஷ்ணுவின் கதைகளைக் கேளுங்கள்.அது நம் அதிர்ஷ்டம்.அவை நமக்கு முதுகெலும்பு போன்றவை. நாரதர் மற்றும் முனிவர்கள் விஷ்ணுவின் கதையைப் பரப்பினர். வியாசர் கதைகளைச் சொன்னார் என்பது உரையாடல் பாங்கில் அமைந்த கீர்த்தனை வகைக்குச் சான்றாகும்.“[ வினவோ பாக்யமு விஷ்ணு கதா]. கனவில் வந்ததை, இந்த நிமிடத்தில் வந்ததைக் கனவாகவே காட்டும் வகையில் “கனவு கண்டேன்; இப்பொழுது கனவு கண்டேன். என்று நடைமுறை வாழ்க்கையில் மனிதனுக்கு எவையெல்லாம் சாத்தியமோ அதை இறைவனோடு இணைத்து நட்பான நிலையை முன்னிறுத்துகிறார் [“தலங்கந்தி இப்புடிது கலங்கந்தி “]. ராமனுக்கு அவனிடம் சேவை செய்பவர்களைப் பற்றிச் சொல்லுவதுபோல ஒரு கீர்த்தனை அமைகிறது.இதில் ராமனுக்குச் செய்யப்படும் சேவை விளக்கப்படுகிறது. நாரதர் தன் பாடலால் மகிழ்விக்கிறார். ரம்பையும், மற்றவர்களும் நடனமாடி மகிழ்விக்கின்றனர்.ரிஷிகள் மனம் நிறைந்து   ஆசீர்வாதிக்கின்றனர்.லட்சுமணன் விசிறுகிறான் [“அவதாரு ரகுபதி அந்தரி நீ சித்தகிஞ்சு”]. “என் தலைவனே ! உன் பாதங்களில் காணிக்கை ஆக்குகிறேன் “என்று தொடங்கும் பாடலில் பாட்டு ஒன்றே போதும் எங்களை உய்விக்க என்று தானுணர்ந்ததை   தனக்குப் பிரியமான    பக்தியை முன்வைக்கிறார். இறைவன் சந்நிதானத்தில் தினமும் ஒரு பாடலைப் பாடுவது அவர் பழக்கம் என்று கூறப்படுகிறது. அவர் பாடலைக் கேட்கக்  கடவுள் காத்திருந்தார் என்பதும் மக்களின் நம்பிக்கையாகிறது.

கடவுளுக்கும்,பக்தனுக்கும் இருக்கும் உறவு ஒருவரை ஒருவர் சார்ந்ததாகும். ஒருவர் இல்லையெனில் இன்னொருவர் இல்லை என்ற கருத்து அவரால் வெளிப்படுத்தப்படும்  தன்மையும், பார்வையும் சிறப்பாக உள்ளது. ”அடியேன் இல்லையெனில் யார் மீது அன்பைப் பொழிவாய்” என்று பாடல் தொடங்குகிறது.

“அடியவன் இல்லாவிட்டால்  யார் மீது அன்பு காட்டுவாய்
என்னால்தான் நீ  உன் அன்பிற்குச் சிறப்புப் பெற்றாய்
உதவாக்கரையான என்னை  நீ காப்பாற்றினால்தான்
உன் கருணை பெருமையோடு பேசப்படும்
என்னால்தான்  உனக்குப் பெருமை
உன்னிடமிருந்து நான் சக்தி பெறுகிறேன்
ஏ வெங்கடேசா   நாமிருவரும்
ஒருவரிடமிருந்து ஒருவர் பயனடைகிறோம்”.

நயமான, பாவம் நிறைந்த கீர்த்தனையாக இது போற்றப்படுவதும் குறிப்பிடத் தக்கது [“நீ நோக்கட்ட இகுதி” ] பாகவத புராணம் காட்டும்  ஒன்பது வகையான பக்தியில் நட்பு ஒன்றாகும். இந்தக் கீர்த்தனை அதைப் பிரதிபலிப்பதாகிறது..

இறைவனுக்கு சுப்ரபாதம் பாடி அவனை எழுப்பும் தன்மையை அறிமுகம் செய்தவர் அன்னமையாதான். “வெங்கடேசா! இது நீ எழுவதற்குரிய நேரம்..இரவு முடிந்துவிட்டது. சூரியன் வந்துவிட்டான். உன் திரையை விலக்கிக் கொண்டு எழுந்திருப்பாய். உன்னைப் பார்க்க எல்லோரும் வந்துநிற்கின்றனர். உன் தாமரைஇதழ் போன்ற கண்களைத் திறப்பாய்.பக்தர்களின் குறைகள் கேட்பாய்” என்று பாடி வெங்கடேசுவரனை விழிக்கும்படி வேண்டுவதான கீர்த்தனையும் மிகச் சிறந்ததாக கருதப்படுகிறது.[’வின்னபாலு வினவல”]

பொதுவில் மனிதர்கள் தவறு செய்பவர்களாகவும், பாவங்கள் செய்பவர்களாகவும் உள்ளனர். கடவுளின் கருணைக்குத் தகுதியில்லாதவர்களாக இருந்தாலும் அவர்களைக் காப்பாற்ற  எப்போதும்  கடவுள் தயாராக இருக்கிறார் என்ற நம்பிக்கையைச் எல்லோருக்கும் தருவதான நிலையை ஒரு பாடல் வெளிப்படுத்துகிறது. நடைமுறை உலகிலும் கூட தவறு செய்பவனுக்குக் கடவுளினருள் இருக்காது  என்ற கருத்து நிலவும் போதும்கூட அன்னமையா போன்ற ஞானிகள் அதைத் தவறென்று காட்டி மாறுவதற்கும்,உணர்வதற்கும்    வழிகாட்டுகின்றனர். ”நான் துன்பத்தால் வருந்தும் அற்பமனிதன்: என்னுடைய வெறுக்கத்தக்க நிலையையும், அசுத்தத் தன்மையையும் நான் கவனிக்கவில்லை. அப்படியான நிலையில் உன்னுடைய கருணைப் பார்வையை எப்படி கவனிக்க முடியும்? ஆனாலும் எனக்குத் தெரியும் நீ என்னைக் கைவிடமாட்டாயென்று” என்று என்றாவது தன்னையறியும் தன்மையை ஒரு கீர்த்தனை வெளிப்படுத்துகிறது.

இறைவனின் திருப்பாதங்களின் பெருமையும்,செயல்களையும் விளக்குவதாக  “பிரம்மன் கழுவிய பாதமிதுவே; முழுமுதற்கடவுளின் உட்கருத்தை விளக்கும் பாதமிதுவே” என்ற கீர்த்தனை  அமைகிறது. வாமனாவதாரம் எடுத்து பலியின் செருக்கை அடக்கினாய்: இந்திரனுக்கு அவனுடைய எதிரி பலியிடமிருந்து சுவர்க்கத்தை மீட்டுத்தந்தாய். அகலிகையின் பாவத்தை பாதம் பட்டு நீக்கினாய்; கண்ணன் அவதாரத்தில் காளிங்கன் மீது நடனமாடினாய். கல்கி அவதாரத்தில் தீயசக்திகளை அழிக்கக் குதிரை மேல்வருவாய் ”என்று இறப்பும், நிகழ்வும்,எதிகாலமும் குறித்த நிலைவெளிப்படுகிறது. [“பிரம்ம கடிகின பாதமு “ ].

பாசாங்குகளும், பயனற்ற தொழில்கள் நிறைந்ததுமான ஒரு நாடகமாக வாழ்க்கை அவருக்குத் தெரிகிறது.

“நாடக நடிப்பைத் தவிர  வேறொன்றுமில்லை இவ்வுலக வாழ்வு
இடைவிடாத முயற்சியால் அடைவது முக்தி
பிறப்பும் நிச்சயம் இறப்பும் நிச்சயம்
வாழ்க்கை ஆரம்பிப்பதற்கும்  முடிவதற்கும்
இடையேயுள்ள காட்சி  நாடக நடிப்பைத் தவிர
வேறொன்றுமில்லை வெங்கடேசா !”

[ “நானதி பதுக்கு நாடகமு]

என்றுசொல்லி  நாடகத்திலிருந்து வெளியே வர வேண்டியதன் அவசியத்தை வெளிப்படுத்துகிறார்.

“பாட்டொன்றே போதும் எங்களை உய்விக்க என்னுடைய மற்ற பாடல்கள்  உன்னுடைய கருவூலத்தில் தூங்கட்டும் வலிமையுள்ளது உன் நாமம்.  உங்கள் கைகளில் நானொரு கருவியே. என் பாடல்களுக்குரிய பெருமை  என்னைச் சேர்ந்ததல்ல  உன்னடிமை நான் “ என்று ஒரு கீர்த்தனை அன்போடு வெளிப்படும் அடிமைநிலைக்குச் சான்றாகும். “மனிதர்களே, உங்கள் பாவங்களைப் பணம் போல பையில் வைத்துக் கொண்டு சந்தைக்கு வாருங்கள். பிறப்பு,இறப்பு, உலக மகிழ்ச்சி  எல்லாவற்ரையும் இங்கு மலிவாகப் பெற்றுக் கொள்ளுங்கள். வெங்கடேசன் மேலேயிருந்து உங்களை கவனித்தபடி இருப்பான் “என்ற பொருளில் அமைந்த ஒரு கீர்த்தனை மனிதர்களுக்கு அன்றாடம் பரிச்சயமான பணம்,சந்தை,மகிழ்ச்சி ஆகியவற்றைச் சொல்லி அவைகளால் மட்டும் நிம்மதியடைய முடியாது,தவறுகளுக்கான சாட்சியாக இறைவன் இருப்பான்.அதனால் மனசாட்சியோடு வாழ்வது உயர்வு  என்ற தத்துவமான கருத்தைக் காட்டுகிறார்.[ கோலாடி  புண்யா பாவாயி] இது மேலோட்டமாகப் பார்ப்பதற்கு நகைச்சுவை போலத்  தெரிந்தாலும் வாழ்க்கை, மனம், கர்மம் சார்ந்த பொருளாகும். மனித வாழ்வின் அடிப்படைத் தத்துவத்தை நாமறிந்த வகையில் சொல்கிறார்.

padmavathi_alamelu_mangaகாதல் பாவமும் அவரால் அழகாக வெளிப்படுத்தப்படுகிறது. அலமேலு மங்கையை அவர் வியப்பதும்,போற்றுவதும் பல கீர்த்தனைகளின் சிறப்பாகிறது. ”அலமேலுமங்கையே நீ முத்தைப் போல ஜொலிக்கிறாய். வெங்கடேசன் உன்னைப் புதுமையாகப் பார்க்கிறார். காதலாகப் பார்க்கிறார். எவ்வளவு நளினமுனக்கு [’அலமேலுமங்கா நீ அபிநவ ரூபமு’].

இன்னொரு கீர்த்தனையில் அவள் அழகாக நடனமாட பூக்கள் அவள் மீது பொழிகின்றன. மெல்ல திரைச்சீலைக்குப் பின்னால் மெட்டியொலிக்க அவள் நடனமாடும்போது வெங்கடேசன் அதை ரசிக்கிறார் என்ற நயமான  காதல் வெளிப்பாடு கேட்பவருக்கும், படிப்பவருக்கும் அவ்வுணர்வழகு ஏற்படும் வகையிலமைகிறது  [அலரலு குரியகா]. இந்தக் கீர்த்தனை குச்சிப்புடி நடனத்தில் இன்று அதிகமாகப் பயன்படுத்தப்படுவதும் குறிப்பிடத்தக்கது. அலமேலு மங்கையின் முகம் அழகானது. அவள் அசைவுகள்     நளினமானவை.   கருமையான மேகமூட்டம் நிறைந்த வானத்தில் இடையிடையே ஒளிவிடும் மின்னல்  போல வெங்கடேசனின் அருகில் அவள் இருக்கிறாள் என்ற கருத்திலமைந்த கீர்த்தனை எல்லோராலும் போற்றப்படுவதும், விரும்பிக் கேட்கப்படுவதுமாகும் [ஒக்கபரி  கொக்கபரி].

இறைவனின் அருகிலிருக்கும் அலமேலுமங்கையின் காதல் மட்டுமல்ல என் காதலும் தாபமும்,வேகமும் நிறைந்ததுதான் என்று நாயகி பாவத்தை கொண்டு வருகிறார் இன்னொரு கீர்த்தனையில் ஏக்க உணர்வில் தாபத்தோடு,

“கூரை மேலிருந்து உன்னைக் பார்த்துக் கொண்டு
உன் காதலுக்கு ஏங்குகிறேன் முனகிக் கொண்டே
நாட்களைக் கழிக்கிறேன் வெங்கடேசா
எங்கே போனாய் இவ்வளவு நேரம்?”

என்று செல்லமாகக் கோபிக்கிறார்.

“ஏ மனமே கடவுளை அடைவதற்கு இசை,பக்தியைத் தவிர வேறு சிறந்த வழி இருக்கிறதா? என்றறிந்த   ஓர் உண்மையை சந்தேகம் போல பல கீர்த்தனைகளில் கேட்டு இரண்டின் ஆழத்தையும் உணரவைக்கிறார்.

பல கீர்த்தனைகள் மக்களுக்கு மிகவும் பரிச்சயமான நாட்டுப்புறப் பின்னணியில் அமைந்துள்ளன.  இவை “ஜானபதளு” என்றழைக்கப் படுகின்றன. ”சுவ்வி சுவ்வி சுவ்வாலம்பா” என்ற கீர்த்தனை கிருஷ்ணன் பிறப்பை  பெண்கள்  கூட்டமாகக்     கூடிப்பாடுவதாகிறது. விழாக்கள், பண்டிககளின் போது பெண்கள் மகிழ்ச்சியோடு பாடிக் கொண்டே செய்யும் நெல்குத்துதல்   நிகழ்வை  கீர்த்தனை வெளிப்படுத்துகிறது. இக்கீர்த்தனையில் அன்னமையா வெங்கடேசுவரனை ”சோனேடப்பா “என அழைக்கிறார்.கோயில் அருகேயுள்ள குளத்திற்கு சோனே என்பது பெயர். அதைக் காட்டும் வகையில் அச்சொல்லைப் பயன்படுத்துகிறார். இது வடமொழிச் சொற்கள் கலக்காத முழுவதுமான தெலுங்கில் உள்ள கீர்த்தனை  என்பது குறிப்பிடத்தக்கது. தாய்ப்பாலோடு விளக்கெண்ணைய் மற்றும் பிற மருந்துப் பொருட்கள் சேர்த்து குழந்தைக்கு செரிமானம் வளரக் கொடுக்கும் மருந்து சடங்கிற்கு  ’உக்கு’ என்ற பெயருண்டு.  குழந்தை அதைக் குடிக்க  மறுக்கும். தாய்  யசோதா  அதைக் கொடுக்கும்படி கோபிகையரிடம் வேண்டுகிறாள். என்றாலும் அதைக் குடிக்கக் கண்ணன் மறுக்கும்போது அவனை அதட்டக்  கூடாது எனக் கண்டிப்பும் வேண்டுதலுமான நிலையில் அமையும் கீர்த்தனையான இதில் நாட்டுப்புறச் சொற்கள் இயல்பாக இடம் பெறுகின்றன. “சின்னத் தங்கையே” என்று தன் தோழியைக் கூப்பிட்டு அலமேலுமங்கையே தசாவதாரம் பற்றிச் சொல்வதை   ஒரு கீர்த்தனை காட்டுகிறது. நாட்டு புறப் பின்னணியில் அமைந்த இதுவும் வடமொழிச் சொற்கள் கலக்காத தன்மையுடையது.[“சிறுத நவ்வுலா’] ,”ராவே ராவே கோடலா ரட்டடி கோடலா   “சந்தமாவே ராவோ, ஜாதிபிலி ராவோ”,”ராரா சின்னண்ணா, ராரோரி சின்னவடா “ என்பன போன்ற கீர்த்தனைகளும் நாட்டுப்பாடல் வடிவம் பெற்று அமைகின்றன. இவற்றில் இறைவனின் லீலைகள் விரிவாக விளக்கம் பெறுகின்றன. தாலாட்டு வடிவிலான கீர்த்தனைகளும் அவரால் பாடப்பட்டுள்ளன. ஆந்திர மாநிலத்தில் இன்றும் அப்பாடல்கள் மிகப் பிரபலமாகவும், வழக்கிலுமுள்ளன. ”ஜோ ஜோ அச்சுதானந்த ஜோ ஜோ “ என்பது அதிலொன்றாகும்.

சில கீர்த்தனைகள் எளிமையான உவமையோடும், நடைமுறை வாழ்க்கையிலான அணுகுமுறையும் பெற்றுள்ளன. ”ஏன் இறைவனைக் குறை சொல்ல வேண்டும். மக்கள் தங்கள் பிரச்னைகளுக்கு? குயிலும் ,காகமும் பார்க்க ஒன்றாக இருந்தாலும் வசந்தகாலத்தில் அவற்றின் திறமை வேறுபாடு  வெளிப்படுகிறது. அவரவர்     பாவ, புண்ணிய தன்மைக்கேற்றபடி தான்    வாழ்க்கை“ என்கிறார் [தய்வமு     துரங்கனேன]’. ’வேப்பமன்னு பலுவோசி ’ என்ற கீர்த்தனையில் வேப்பமரத்தைப் பாலூற்றி வளர்த்தாலும் கசப்பு அதைவிட்டு நீங்காது, என்றும் அரிவாளை நீண்டகாலம் தண்ணீரில் வைத்திருந்தாலும் அது மென்மையாக முடியாது என்றும் அன்போடு பாதுகாத்தாலும் தேள் கொட்டாமலிருக்காது என்றும் சாதாரண மக்களறிந்த இயல்பான உவமைகளை முன்வைத்து வாழ்க்கை நிலையை வெளிப்படுத்துகிறார். நாட்டுப்புற நடையில்  தத்துவக் கருத்துக்களை கீர்த்தனைகளாக்கிய சூழலில் மக்களறிந்த அன்றைய வழக்குச் சொற்களான  ஏலா, ஜஜரா, லாலி ,உய்யாலா, ஜோலா உள்ளிட்டவற்றைப் பயன்படுத்தியுள்ளார்.

வந்தே வாசுதேவம், பாலபுண்யமுலோ, டோலாயாம், ஒக்கபுரி கொக்கபுரி, பாவயாமி கோபாலபாலம், வந்தேஜகத் வல்லபம் நாராயணட்டே, ஸ்ரீமன் நாரயணா ,நீலமேகமோ என்பவை அவரது பிரபலமான கீர்த்தனைகளில் சிலவாகும். அன்பும், தத்துவமும் கைகோர்த்த தன்மை இவர் பாடல்களின் சிறப்பாக இருப்பதால் எல்லாக் காலத்திற்கும் பொருந்துவதாகின்றன என்றும் மொழியை எளிமையாகவும், ‘ஒருமித்த‘ தன்மையிலும் அவர்   கையாண்டிருப்பதாகவும் இசையாராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்

அன்னமய்யா திருவுருவச்சிலை, திருமலை
அன்னமய்யா திருவுருவச்சிலை, திருமலை

அன்னமையாவின் சிறப்பறிந்து புரந்தரதாசர் அவரைச் சந்திக்க வருகிறார். அன்னமையாவைப் பார்க்கும் போது   புரந்தரதாசருக்கு வெங்கடேசப் பெருமானையே பார்ப்பது போல் இருக்கிறது, அன்னமையாவுக்கு புரந்தரதாசர் பாண்டுரங்கன் போலத் தெரிகிறார் என்று இருவரும் சந்தித்துக் கொண்ட நிகழ்வு சொல்லப்படுகிறது.

வேதம், உபநிடதம், புராணம் ஆகியவற்றின் உயர்ந்த கருத்துக்களைச் சாதாரண மக்களுக்கும் எடுத்துச் சென்றது அன்னமையாவின் சிறப்பெனலாம். அவருடைய கீர்த்தனைகைகள் தொண்ணுறு  ராகங்களைக் கொண்டிருப்பதாக இசைவல்லுனர்கள் பெருமையோடு குறிப்பிடுகின்றனர். அன்னமையாவின் பேரன் சின்னண்ணா எழுதிய ’அன்னமாச்சார்யா சரிதமு’ என்ற நூலின் அடிப்படையில்தான் அவரைப் பற்றிய ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. தன் தாத்தாவை ’பதகவி பிதாமகர்’ என்று அவர் போற்றியுள்ளார். அன்னமையாவின் சிறப்பைக் காட்டும் வகையில் “அன்னமாச்சார்யா”என்ற திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. அவருடைய பாடல்களை எம்.எஸ்.சுப்புலட்சுமி, பாலமுரளிகிருஷ்ணா, எஸ்.பி.பாலசுப்பிரமணியம்  உள்ளிட்ட   பலர் பாடியுள்ளனர். திருப்பதி தேவஸ்தானம் ’அன்னமையா ஆராய்ச்சித் திட்டம்” என்ற பெயரில் பெரிய அளவில் ஆராய்ச்சி நடத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.

3 Replies to “வாழ்வின் ஒவ்வொரு நாளும் ஒரு பாடல்: அன்னமையா”

 1. பெருமதிப்பிற்குரிய ஸ்ரீமதி தி.இரா. மீனா அவர்களுக்கு ,

  ஒரு இறையடியார் மீது கட்டுரை எழுதியதற்கு மிக்க நன்றி . பல அறிய தகவல்களை அளித்துள்ளீர்கள் .
  தங்களின் இந்த இறையடியார் சேவை மேன்மேலும் செவ்வையாகத் தொடர வாழ்த்துக்கள் .(அல்லது ,வாழ்த்த வயதில்லை ,வணங்குகின்றேன் .)

  /**அகோலபில மடத்தின் முதல் ஆச்சாரியரான சடகோப யதிந்திர மகாதேசிகனிடம் சீடராகச் சேர்கிறார். சில காலம் அங்கிருந்து விசிஷ்டாத்வைதக் கருத்துக்கள் கொண்ட பாடல்களைப் பாடுகிறார்.**/

  ஆழ்வார் திருநகரியாம் ,திருக்குருகூரில் ,நம்மாழ்வாரின் உற்சவ விக்ரஹம் ஒரு துருக்கர் கலாபத்தில் மறைந்து போயிற்று . அகோபில மடத்தின் முதல் ஆச்சாரியரான ஆதிவண் சடகோப யதிந்திர மகாதேசிகர்,
  நம்மாழ்வாரின் உற்சவ விக்ரஹம் பெறுவதற்கு 12,000 உரு (முறை) கண்ணிநுண்சிறுத்தாம்பு என்னும் பிரபந்தம் சேவித்தார்.
  பின்னர் அவ்விக்ரஹம் கிடைக்கப்பெற்றது . இவர் நம்மாழ்வார் மீது பெரும்பற்றுக் கொண்டவர் . அன்னமய்யரின் கீர்த்தனை பாடும் திறமையை அறிந்த இவர்தாம் , திருவாய்மொழி பாசுர கருத்துக்களை தெலுங்கு கீர்த்தனைகளாக பாட வைத்தார்.

  வடமொழியில் மஹரிஷி .வ்யாஸர் ப்ரம்ம சூத்திரங்கள் எழுத ,திருவாய்மொழியின் முதல் பத்து 1,2 பதிகங்களும் ,
  பத்தாம் பத்து 4,5,6,7,8,9,10 பதிகங்களுமே துணை நின்றவை என ச்வாமி தூப்புல் வேதாந்தாசார்யர் கூறுகின்றார்.

  எனவே வடமொழிக்கும் ,தெலுங்குக்கும் வேதாந்த தரிசன மூலகர்த்தா ச்வாமி.நம்மாழ்வாரே யாகின்றார்.

  தாசன் அடியேன் ,
  வணக்கம்

 2. சிறப்பான கட்டுரை. இத்தளத்துக்கு ஓர் அணிகலனாக என்றும் நின்று நிலவும்.

  மொழி நடை நன்று. தெளிவான தமிழ். அதே வேளையில், ஆரவாரததமிழும் அன்று. அடக்கமான அழகான தமிழ்.

  தன்முனைப்பு (ஈகோ) இல்லாமல் அன்னமையா ஆழ்வாரைப்பற்றியும் அவரின் தெலுங்குமொழிப்பாசுரங்களைப்பற்றிய‌ விவரங்களையும் அடுக்கடுக்காக வைத்து நம்மை வியப்பிலாத்துகிறார். இவ்வாழ்வாரைப்பற்றித் தமிழர்கள் கேள்விப்பட்டிருப்பார்கள். வைணவர்கள் தெரிந்தே ஆக வேண்டும். ஆனால் இவ்வளவு நுணுக்கமாக எவரும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

  ஆசிரியர் தெலுங்கு மொழிப் புலமையுள்ளவர் என்பது புலனாகிறது.. இவ்வாழ்வாரின் தெலுங்குப் பாசுரங்களை ஆழ்ந்து இரசித்து வாசித்திருக்கிறார். அவரின் இரசிப்பு நமக்கும் தொற்ற நாம் மகிழ்கிறோம்.

  சில பாசுரங்களின் ஒரு சில (ஆனால் நமக்குச் சொல்லப்படவேண்டிய) வரிகளை மட்டுமே போட்டிருக்கிறார். முழவதுமாக அப்பாடல் போட்டிருந்திருக்கலாம். ஏனென்றால் அவ்வரிகளை நாம் வாசிக்கும் போது தெலுங்கு மொழி அழகையும் இர்சிக்கலாம். தெலுங்கு தமிழைவிட இசை கொண்ட மொழி என்பது கேட்போருக்கு புலனாகும்.

  இவ்வாழ்வார் கண்டிப்பாக தமிழ் ஆழ்வார்களைப்பற்றித் தெரிந்திருப்பார். அகோபில மடத்தலைவரின் சீடராக இருந்தவரல்லவா? அத்தலைவர்கள் தமிழ்ப்புலமையும் நாலாயிரத்திவ்யபிரபந்தத்தைக் கற்றுத்துறைபோகியவர்களாகவும் இருப்பார்கள். இருக்க வேண்டும். இங்கு போடப்பட்ட சில பாடல்களில் நம்மாழ்வாரின் தாக்கம் புலனாகிறது.

  இவ்வாழ்வார் தமிழக திருமால் கோயில்களுக்கு புனிதப்பயணம் சென்றவர். திருவரங்கத்தைப் பற்றியும் திருவல்லிக்கேணி பற்றியும் பாடிப்பரவியிருக்கிறார். கூரேசாழ்வாரைப்போல முக்குறும்புகளைக்கடந்தவர் இவ்வாழ்வார் எனபதை ஆசிரியர் அவரின் பாசுர்ங்களின் மூலம் நன்கு விளக்குகிறார்.

  நான் அன்னமாச்சாரியா என்ற தெலுங்கு சினிமாப்படத்தைப் பார்த்திருக்கிறேன். தேசிய பரிசு பெற்ற படம். கண்டிபபக எல்லாரும் பார்க்க வேண்டிய படம். நாகார்ஜீனா அன்னாமாச்சாரியாக வாழ்ந்தே காட்டிவிட்டார். பல பாசுர்ங்கள் இசையோடு பாடப்படுகின்றன இப்படத்தில். திருவரங்கத்தைப்பற்றிய அன்னமாச்சாரியாவின் பாசுரத்தையும் கேட்கலாம். நாகார்ஜீனா திருவர்ங்கத்திலேயே பாடுகிறார். ரங்கா…ரங்கா என்று பல்லவி.

  If is a rare article. Needs to be preserved. A good job well done. Many thanks.

 3. அய்யா எனது மின்னஞ்சலுக்கு அரிசங்கீர்த்தனை மற்றும் திருமாலின் அனைத்து தமிழ் பாடல்களையும் அனுப்பவும் நான் இந்து பக்தன் தீவிரமானவன் அதோடு எம்பி3 பாடல்களையும் அனுப்பவும் பணிவுடன் திருமாவளவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *