இசையை ரசிக்கலாம் வாருங்கள் – புத்தக அறிமுகம்

DSCF4517கரும்பு என்றாலே இனிப்புத்தான். கரும்பைப் பிழிந்து சாறு எடுத்துக்கொடுப்பது நம் வானதி பதிப்பகம் என்பதில் என்ன ஐயம்! மக்களைப் பண்படுத்தும் நூல்களை மட்டுமே வெளியிடும் வானதி பதிப்பகத்திற்கு மதிப்பீடு வழங்க நாம் யார்? ‘தெய்வத்தின் குரல்’ ஒன்று போதுமே! வானதியின் புகழுக்கு மகுடம் அன்றோ தெய்வத்தின் குரல்! அந்தக் கரும்புத் தோட்டத்திலிருந்து நமக்குக் கிடைத்துள்ள மற்றொரு கரும்புதான் டாக்டர் எஸ்.சுந்தர் படைப்பில் இசைக்கவி ரமணனின் மொழிபெயர்ப்பில் வெளிவந்துள்ள “இசையை ரசிக்கலாம் வாருங்கள்” என்ற நூல்.

கர்நாடக சங்கீதம் சார்ந்த கேள்வி-பதில்கள் மூலம் அவர்கள் நம்மை செவ்விசையில் தெளிவுறுத்தும் பாங்கு மிக அருமை.

“தாம்இன் புறுவது உலகுஇன் புறக்கண்டு

காமுறுவர் கற்று அறிந்தார்”

என்ற குறளுக்கு டாக்டர் திரு.சுந்தர் அவர்களே இலக்கணம். கல்வியிற் சிறந்த பெரியோர்கள் கற்க வேண்டியதைக் கற்று, அறிய வேண்டியதை அறிந்தவர்கள். தாம் பெற்ற அறிவின்பங்களை உலகிலுள்ள எல்லோரும் அடையும்படி பிறருக்கும் கொடுத்து மகிழ்வார்கள். அதன்படியே திரு.சுந்தர் அவர்களும் கர்நாடக சங்கீதத்தின் இசை நுணுக்கங்களைப் பாமரனும் புரிந்து இன்புறும் வண்ணம் நமக்குத் தந்திருக்கிறார்.

திரு.ரமணன் அவர்கள் தந்துள்ள வாழ்த்துரையின்படி, இந்நூல் ஒரு பயிலரங்கு என்பதை இதனைப் படிப்பவர் யாவரும் உய்த்துணர்வர். யானும் இந்நூலைக் கற்றேன். கடுகளவு இசைஞானம் கொண்டிருந்த நான் நிறையத் தெரிந்துகொண்டபின் உள்ளம் பூரித்தேன். யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்று இறையடி பணிந்தேன்.

DSCF4519மதங்க மஹரிஷியின் ‘ப்ருஹத்தேசி’ என்ற இசை அளவை நூல் தொடங்கி, பேரறிஞர் வேங்கடமஹி வகுத்த 72 மேளகர்த்தா ராகங்கள் மற்றும் தற்கால சினிமா மெட்டுக்கள், ஜுகல்பந்தி போன்றவை பற்றியும் நன்கு விளக்குகிறார்.

‘ச்ருதி மாதா லயம் பிதா’ என்பதுடன், மற்ற இசைவடிவங்களுடன் நமது நாட்டு பாரதீய இசையை ஒப்பீடு செய்கிறார். கச்சேரிப் பாடல்களின் தன்மையை ஆராய்கிறார். பக்கவாத்தியங்களைப் பற்றியும், பக்கவாத்தியக்காரர்கள் பற்றியும் பக்காவாக விளக்குகிறார். வர்ணங்கள், கீர்த்தனைகள், க்ருதிகள், ஜாவளி அனைத்தையும் அலசி ஆராய்கிறார். வாக்கேயக்காரர்கள், இசை மும்மணிகள், சங்கீத மேதைகள் பற்றி அரிய செய்திகளைத் துல்லியமாகத் தருகிறார்.

இசை கற்கும் மாணவர் கூடியவரை ஒரே குருவிடமே பயிலுதல் நன்று என்றும், பலரிடம் பயின்றால், பலரையும் தன் குருமார்களாகக் கொண்டதை வெளிப்பட உரைக்கும்படியும் கூறுகிறார்.

கச்சேரி கேட்கச் செல்லும் ரசிகன் அவையில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று ஆணித்தரமாகச் சொல்லிக்கொடுக்கிறார். மேற்கத்திய இசை, ஹிந்துஸ்தானி இசை, கர்நாடக இசை யாவற்றையும் அமைப்பு ரீதியாகத் தெளிவாக்குகிறார்.

நிரவல், தாளம், தில்லானா, ஸ்வரஜதி, இவற்றில் நாட்டியத்திற்கான ஜதிகள், இவற்றையும்பற்றிக் கூறுகிறார். டாக்டர் .சுந்தர் அவர்களுக்குத் தெரியாத செய்தியே செவ்விசையில் இருக்க முடியாது என்ற முடிவிற்கு நான் வரத்தூண்டிய இப்புத்தகம் என்றும் என் மேசை மீது இருக்கும். என் வீட்டிற்கு வருபவர்களையும் இப்புத்தகத்தின் பயன் சென்றடையும் என்பதை நான் தெரிவித்துக் கொள்வதோடு, இத்தகைய நல்ல புத்தகங்களை நேயர்கள் வாங்கிப் பயனடைய வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன். திரு.சுந்தர் அவர்களுக்கும், அருமையான தமிழில் மொழிபெயர்த்துள்ள திரு.ரமணன் அவர்களுக்கும் என் உளமார்ந்த பாராட்டும் நன்றியும் உரித்தாகுக!

இசையை ரசிக்கலாம் வாருங்கள்

ஆசிரியர்: கலைமாமணி டாக்டர் எஸ்.சுந்தர்

தமிழாக்கம்: இசைக்கவி ரமணன்

வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை – 600017. தொலைபேசி: 24342810 / 24310769, E-Mail: – vanathipathippakam@gmail.com

விலை: ரூ.80/

2 Replies to “இசையை ரசிக்கலாம் வாருங்கள் – புத்தக அறிமுகம்”

 1. நமது தேசீய, பாரம்பரிய இசையை விளக்கி வரும் புத்தகங்கள் வரவேற்கத்தக்கவையே. ஆனால் இவற்றால் மட்டுமே ரசனை வளருமா? ரசனையை வளர்த்துக்கொள்ள அதிகம் நுணுக்கங்களைத் ( technical aspects) தெரிந்துகொள்வது அவசியமா?

  இசையை மதிப்பீடு செய்ய நுணுக்கங்கள் தெரியவேண்டும்; ஆனால் இசையை ரசிக்க இது அவ்வளவு அவசியமில்லை.விருந்தைச் சுவைப்பவனுக்கு சமையல் கலை தெரிந்திருக்க வேண்டுமா, என்ன?

  இசைக்கு ராகம், பாவம்,[ bhava= emotional content] தாளம் அடிப்படையானவை. ஆனால், ரசிகனுக்கு பாவமே முக்கியமானது. இதில் ராக பாவம், சாஹித்ய பாவம் என இரு கூறுகள்.ஹிந்துஸ்தானி இசையில் ராகபாவம் முக்கியத்துவம் பெறுகிறது. நமது கர்னாடக சங்கீதத்தில் சாஹித்யம் பிரதானமாகிறது. ஒவ்வொரு ராகமும் ஓரிரு பாவங்களை வெளிப்படுத்துகின்றன. கல்யாணி போன்ற சம்பூர்ண ராகங்கள் பலபாவங்களை உள்ளடக்கியவை. ஸ்ரீ த்யாகராஜ ஸ்வாமிகள் இந்த ராகத்தில் 18 கீர்த்தனைகள் அருளியுள்ளார். ஒவ்வொன்றும் ஒரு பாவத்தில் அமைந்தது; அதற்கேற்ப சாஹித்யம் வருகிறது.

  இதையெல்லாம் தெரிந்துகொண்டால்தான் கர்னாடக இசையை ரசிக்கமுடியும். இதற்கு உதவுபவை :
  1. விஷயம் தெரிந்தவர்களின் உதவி mentoring
  2. சாஹித்யத்தில் சிறிதேனும் பரிச்சயம். [ இவை தமிழில் இல்லை என்று சிலர் சொல்லலாம். தமிழில் இருப்பது எல்லாம் புரிந்துவிடுகிறதா? தேவாரமும், திருவாசகமும், திருப்புகழும் இன்று எல்லோருக்கும் புரிகிறதா? “வடவரையை மத்தாக்கி, வாசுகியை நாணாக்கி ” என்பது தமிழ் மட்டும் அல்ல; இது புராணச் செய்தியை உள்ளடக்கியது, இதை ரசிக்க மொழியுடன் புராணமும் தெரியவேண்டும். எந்த மொழியிலிருந்தாலும் சாஹித்யத்தை தெரிந்துகொள்ள முயற்சிசெய்யவேண்டும்.
  3. நிறைய கேட்கவேண்டும். ஒரே ராகத்தை ஐந்து முன்னணி [ அதுவும் மூத்த ] வித்வான்கள் பாடுவதைக் கேட்கும்போது அந்த ராகத்தின் பல பரிமாணங்களையும் தெரிந்துகொள்கிறோம். நாளடைவில் நுண்ணிய விஷயங்கள் புலப்படும்!
  4.நல்ல விமர்சகர்களின் எழுத்து. ‘கர்னாடகம்’ என்றபெயரில் “கல்கி” எழுதிய விமர்சனக் கட்டுரைகள் 60 ஆண்டுகளுக்குப் பிறகு இன்றும் ஒளிர்கின்றன. ஒரு சமயம் செம்மங்குடியின் சாரீரத்தை கதர் துணிக்கு ஒப்பிட்டார். பார்க்க முரடாக இருக்கும்; அணிந்தால் அதன் மென்மையை உணருவோம் ! அந்த பழைய (அசல்) கதர்த்துணி போட்டவர்களுக்குத்தான் இந்த உவமையின் அருமையும், செம்மங்குடியின் சிறப்பும் புரியும்! இன்று இத்தகைய விமர்சனங்கள் வருவதில்லை.
  5 விஷயம் தெரிந்தவர்களின் பேச்சும், விளக்கமும். இன்று ‘லெக்சர், டெமாஸ்ட்ரேஷன்’ என்றெல்லாம் நிறைய நடக்கின்றன.பெரும்பாலும் டெக்னிகல் விஷயங்களே அடிபடுகின்றன. 80 களில் சென்னை தக்கர் பாபா வித்யாலயத்தில் டாக்டர் எஸ்.ராமனாதன் ஒவ்வொரு வாரமும் இசை பற்றி விளக்கம் அளித்துவந்தார். வண்டிக்காரன் பாட்டு,ஓடக்காரன் பாட்டு, ஏற்றம் இறைப்பவன் பாட்டு, தெம்மாங்கு, தாலாட்டு என்று தொடங்கி ஒவ்வொன்றிலும் எந்த ராகங்கள் எப்படிப் பயின்று வந்திருக்கின்றன என்பதை பாடிக்காட்டுவார். ஒரு 20, 25 பேர்தான் இருப்போம். தான் பாடியது மட்டுமில்லாமல், அங்கிருந்த சிறுவர், சிறுமியரையும் பாடவைப்பார்!

  பொதுவாக, ரசிக்கும் திறன் கேள்விஞானத்தினால்தான் வளருகிறது.சங்கீதத்தைப் பற்றிய இலக்கண அறிவு தேவையில்லை. ஒரு சமயம் நாதஸ்வர சக்ரவர்த்தி ராஜரத்னம் பிள்ளையிடம் அவருடைய சிறந்த ரசிகர் யார் என்று கேட்டார்கள். அவர் அங்கிருந்த ஒரு ( படிக்காத ) பையனைக் காட்டி ” இதோ, இந்த விளக்கு மண்டைதான்” என்றார்! [ அந்தக் காலத்தில் இரவில் ஊர்வலங்களில் பெரிய பெட்ரோமாக்ஸ் விளக்கை பலகையில் கட்டி சிலர் தலையில் சுமந்து வருவார்கள். இவர்கள் தான் விளக்கு மண்டை] கோவில் திருவிழாக்களில் நடந்த பல வித்வான்களின் பல கச்சேரிகளைக் கேட்டுக்கேட்டு இந்தப் பையன் அபார ஞானம் பெற்றிருந்தான்! ஒரு சமயம் பிள்ளைவாள் தோடி வாசித்து வரும்போது ஒரு இடத்தில் தன்னை அறியாது, மெய்மறந்து, ” ஆஹா சபாஷ்” என்றானாம்! இவன் ரசனை எந்தப் புத்தகம் படித்து வந்தது? இதையே அவர் பெரிதாக மதித்தார்!

  சங்கீதம் பற்றிய இலக்கிய அறிவும் வேண்டியதே. ஆனால், ரசனை அதையும் மீறியது!

 2. Please tell me the Name of the book written by Mr Panchapakesan to learn Carnatic Music. Thank You. My name is also Panchapakesan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *