இயல், இசை, நாடகப் பகுதிகளாக பிரிக்கப்பட்ட காலத்திலிருந்து தமிழ்மொழி வளர்ச்சிக்கு இன்றியமையாமல் இருந்தது இசைப்பாடல்கள்தாம். பாணர்கள், ஞானிகள், கதைசொல்லிகள் அனைவரும் இசையின் ஊடகத்திலேயே செய்தி சொல்லி வந்திருக்கின்றனர். இங்கே இசை என்பது ஒலிகளாலான சத்தம், சந்தம் ஆகும். பலதரப்பட்ட இசை இலக்கண குறிப்புகள் பண்டைய காலத்திலிருந்து நம் வாழ்வு முறையில் கலந்து வந்திருக்கிறது. இருநூறுக்கும் மேற்பட்ட ராகங்களை அமைத்த பெருமை சாரங்க தேவைச் சாரும். இது நடந்தது பதினான்காம் நூற்றாண்டில். இசைத் தமிழ் எனச் சொல்லப்படும் சங்கத்தமிழில் பரிபாடல், தொல்காப்பியம், குறுந்தொகை முதலே தமிழ் இசை பகுக்கப்பட்டு வந்திருக்கிறது.
மாதவி பயன்படுத்திய யாழ் இசைக்கருவியில் 12 சுரங்களை இசைத்திருக்கிறார். சகோட யாழ் என்ற இதில் இரண்டு ஸ்தாயிகள் (Octaves) இசைக்க முடியும். இப்படிப்பட்ட செய்திகளை அடித்தளமாகக் கொண்டு சிலப்பதிகாரம் பின்னப்பட்டிருக்கிறது. கதை கோவலன், மாதவி, கண்ணகி என்ற மூவரைச் சுற்றி வந்தாலும், சிலப்பதிகாரம் தமிழர் வாழ்ந்த அந்தக் காலகட்டத்தைத் துல்லியமாகக் காட்டுகிறது.
இணைகிளை பகைநட் பென்றிந் நான்கி
னிசைபுணர் குறிநிலை யெய்த நோக்கி (சிலம்பு 202)
இதில் சுர வகைகள் குறிப்பிடப்பட்டிருக்கின்றன.
இணை – Harmony
கிளை – Branch
பகை – Enmity
நட்பு – Friendship
சுரங்களை பகுக்கும்போது காலம், பருவம், சமயம், பொருள் என பகுத்துள்ளனர். இதையே சுரங்களுக்குள்ள உறவுமுறையாகும்.
மேலே குறிப்பிட்டுள்ள சுர அமைப்புகளைப் புரிந்துகொள்ள நாம் தமிழிசையை முறையான நோக்குடன் அணுக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். நம்நாட்டின் பாரம்பரிய இசைக் கூறுகளை இழந்து, பலதரப்பட்ட இசைவகைகளுக்கு வழிவகுத்திருக்கிறோம். பல நூற்றாண்டுகளாகவே இந்தி வரலாற்றின் வேராக இருக்கும் இசையை, அதன் அடித்தளத்திலிருந்து பிரித்து விட்டோம். இன்று அதன் பாதிப்புகளைப் பார்க்கையில் குழப்பமே மிஞ்சுகிறது. அவற்றில் பெரும்பான்மையானவற்றை நம் பழங்கால இலக்கியம், பெருங்காப்பியங்கள் வழியாக சுலபமாக நிறுவமுடியும். சிலப்பதிகாரத்தில் குறிப்பிட்டுள்ளவையே பல கேள்விகளுக்கு பதிலாய் அமையும். பண்டைய காப்பியங்கள் கூறுவது என்னென்ன? தமிழர் வரலாறும், அவர்தம் வாழ்வு முறை மட்டுமே. சமய மாற்றங்கள், பக்தி இலக்கியங்களினால் இந்த இசை பாரம்பரியம் இன்னும் தழைத்தது என்றே குறிப்பிடவேண்டும்.
இசை பற்றிய மீள்பார்வை
இன்றைய காலகட்டத்தில் முறையான பழங்கோப்புகள் இல்லாத காரணங்களினால், பல காப்பியங்களை மீள்பார்வை பார்க்க வேண்டிய கட்டாயத்திலுள்ளோம். அவரவர் வசதிக்கேற்ப இதைச் செய்யலாம். இசை கூறுகள், மொழி மாற்றங்கள், பக்தி ஒழுங்கியல், மனிதர்கள் வாழ்வுமுறை, அரசு அதிகாரம் என்ற பல தலைப்புகளில் நாம் பழைய இலக்கியங்களை ஆராய முடியும்.
இன்று ஜாஸ், ஹிந்துஸ்தானி பாணி, ஒத்திசைவு போன்ற புதிய இசைக்கூறுகளின் தாக்கத்தில் கர்நாடக இசையும், கிராமிய இசையும் தங்கள் தனித்தன்மையை ஊர்ஜிதம் செய்தால் மட்டுமே நிலைத்து நிற்கும் என்ற நிலை இப்போதுள்ளது. இது எந்த இசைப் பாங்கி ற்கும் கெடுதல் அன்று. எந்த ஒரு நாகரிகத்திலும் இசைக்கான அணுகுமுறை ஒரே மாதிரிதான் இருந்திருக்கிறது, ஆரம்ப கட்டத்தில் அதன் தனித்தன்மையை கன்னித்தன்மை போல் போற்றுவதும், காலம் மாறும்போது மற்ற கலாசார தாக்குதலால் சில ஒழுங்கீனங்களை ஒத்துக்கொள்வதும் நடப்பவைதான். இப்படிப்பட்ட இந்த நேரத்தில் இசை கூறுகளை அதன் வேரிலிருந்து மீள்பார்வை பார்ப்பது அவசியமாகிறது. அதில் முனைப்பாக இருப்போருக்கு பல கேள்விகளே முதலில் மிஞ்சும்.
அ. இன்று கர்நாடக இசையை தமிழிசை எனச் சொல்லலாமா. இவற்றிற்கான தொடர்பென்ன? இதை அனுபவிக்கும் அதே பாணியில் மற்ற இசையை ரசிக்க முடியுமா?
ஆ. கருணாமிர்த சாகரம் என்ற புத்தகத்தின் வழியே அபிரகாம் பண்டிதர் நிறுவியது என்ன? அதிலுள்ள இசைக் கூறுகளை இன்று எவ்விதம் பார்க்க முடியும்?
இ. ஐரோப்பா இசை, ஆப்ரிக்க இசை போன்றவற்றுடன் தமிழிசையை ஒப்பிட முடியுமா? இதில் எந்த ஒன்றாவது மற்றதின் வளர்ச்சியை தொடர்ந்ததா?
ஈ. தமிழிசையின் அடிப்படை கூறுகள் என்னென்ன? அவற்றை ஹிந்துஸ்தானியிலிருந்து பிரித்துப் பார்க்கலாமா?
மிக மிக உயரமான விமானப் பார்வையிலிருந்து இவற்றை வரும் பகுதிகளில் ஆராயலாம். அடிப்படை நோக்கம் சங்கத்தமிழ் காப்பியங்களிலிருந்து சில முக்கியமான இசைச் செய்திகளை சேகரிப்பது. அதிலிருந்து சில அனுமானங்களையும், இசைத்தமிழின் வேர்களை இன்றைய இசையிலும் தேடிப் பார்ப்பதுமே ஆகும். எந்த விதமான வரலாற்றுப் பார்வையைப் போல இதிலும் பல திரிபுகளும், முழுதும் உண்மை தெரியாத சமயங்களும் வரக்கூடும். அபிப்பிராய பேதம் இன்றி அவற்றை பகுக்க முயலலாம்.
இசையைக் கேட்பது எப்படி?
இது ஓர் ஆதிகாலத்து கேள்வி. இசையை ரசிக்க அதன் இலக்கணம் புரியத் தேவையில்லை. ஆனால் இசையில் ரசித்த பகுதிகளை ஏன் பிடித்தது எனக் கேட்டால் – ‘இனிமையாக இருந்தது’, ‘தாளம் போட வைத்தது’, ‘டான்ஸ் ஆட வைத்தது’ போன்ற வார்த்தைகள்தான் வருமே தவிர, அதன் நிஜக் காரணங்களை அறியவது கடினம். திரைப்பட பாடல்கள் வேறுவகை. மெல்லிசையைச் சார்ந்த இது பாடல் வரிகளுக்கு முக்கியத்துவம் அதிகமாக கொடுத்துவரும் துறை. இதனாலேயே பாடல் வரிகள் பிடித்துவிட்டால், பாடத்தோன்றும் இசை வடிவம்.
பொதுவாகவே இசைக்கேட்பதை மூன்று வகைப்படுத்தலாம் – ஒலிக்காகக் கேட்பது, அதன் உணர்வுகளுக்காக கேட்பது, அழகியல் புரிந்ததினால் கேட்பது.
நாம் எல்லோரும் பொதுவாக ஒலிக்காக கேட்கும் ஜாதி. அடிப்படையில் நாம் இசையைக் கேட்கும்போது சுலபமாக பாடக்கூடிய பகுதிகளையே விரும்புவோம். இது மனிதனின் ஆதார குணம். குழந்தை நாம் பேசுவதைக் கேட்டாலே, தானும் பேச முற்படுவதுபோல் நமக்கு பாடகர்கள் பாடும் வரிகளையோ, இசையையோ முணுமுணுக்கத் தெரிந்தால் அந்த இசை நமக்கு பிடித்துவிடும். சுலபமாக விளக்க – எம்.எஸ். சுப்புலட்சுமி அம்மையார் பாடிய பாடலையும், எந்தத் தமிழ் திரைப்பட பாடலையும் கேட்டுப் பார்க்கலாம். நம்மில் பலர் முதலாவதை கேட்டு முடிக்கக் கூட மாட்டோம். இது முதல் ரக ஆசாமிகள்.
உணர்வுகளுக்காக கேட்பது பக்தி பாவத்தை அடிப்படையாகக் கொண்டாலும், சமூகப் பாடல்/இசை வடிவத்திலேயே அதிக கவனம் பெற்றது. பாரதியார், பாரதிதாசன் பாடல்களை கர்நாடக ராகத்திலோ, திரைப்படங்களிலோ (காக்கைச் சிறகினிலே நந்தலாலா) கேட்பது இந்த சமூக/ விடுதலை உணர்வு போன்றதினால்தான். இந்த வகை இசை நம்மில் இருக்கும் உணர்வுகளுக்கு வடிகாலாகவோ அல்லது அதை மீட்டெடுத்து வருவதால் உண்டாகும் அனுபவத்தையோ பொருத்து நம்மில் நிலைக்கும். சோகம்/காதல்/சின்ன வயது ஞாபகங்கள் இசை வடிவம் கொள்வது இப்படிப்பட்ட இசையாளேயே. இது இரண்டாம் ரகம்.
மூன்றாவது ரகம் இசையை அதன் இலக்கணத்திற்காகவும், அழகியல் (aesthetics) அனுபவத்திற்காகவும் கேட்பவர்கள். இவர்களை எளிதில் அடையாளம் காணலாம். நமக்கு புரியாத இசையை விடாப்பிடியாகக் கேட்பவர்கள் ! இந்த வகையில் இசையைக் கேட்க இசை கூறுகள் பற்றிய விவரங்கள் தெரியவேண்டியதுள்ளது. ராகம், தாளம், கர்நாடக சங்கீத இசையை மெல்லிசையில் எங்கே நுழைத்துள்ளனர் போன்ற கேள்விகளை சதா கேட்டுக்கொண்டேயிருப்பவர்கள். இவர்களுக்கு இசை அனுபவம் – ஒரு புதிர் போல. அக்கு, ஆணியென இசையை பிரிப்பதில் இன்பம் காண்பவர்கள். ஆனால் இந்த ஞானம் மட்டும் இசையை ரசிக்க வைக்காது, அதன் லயத்திலும் சஞ்சாரப்பட்டு அனுபவிப்பதே இசைக்கு செய்யும் உண்மையான சேவையாகும். இது மூன்றாவது ரகம்.
இத்தொடரில் தமிழிசைக்கான கேள்விகளை பற்றி விவாதிக்கும் அதே வேளையில், எந்த ஒரு நிலையிலிருந்தும் மூன்றாம் ரக இசை அனுபவத்தை அடைவதே நம் நோக்கமாகும்.
— தொடரும்
படம் – நன்றி: தமிழ்ஸ்டூடியோ.காம்
மிக நல்ல ஆரம்பம்.
பூமியில் முதல் குழந்தையின் ‘குவா குவா’ சப்தமே இசையின் தொடக்கம் என்று சொல்லலாம். நாட்டுப்புறப் பாடல்களின் இசைமெட்டுக்களே இராகங்களாகப் பரிணமித்தது என்பதும் புரிகிறது. மனிதனின் அழகுணர்ச்சி (முருகு என்று திரு.வி.க. சொல்லுவார்) பண்பட பண்பட சங்கீதம் மேலோங்கி வளர்ந்தது என்றும் படித்திருக்கிறேன்.
தங்கள் தொடர் எல்லோருக்கும் பயன்பட என் வாழ்த்துக்கள்.
நன்றி கிருஷ்ணமூர்த்தி அவர்களே.
//பூமியில் முதல் குழந்தையின் ‘குவா குவா’ சப்தமே இசையின் தொடக்கம் என்று சொல்லலாம்//
உண்மைதான். இந்த சத்தத்தில் இருக்கும் சுர வேறுபாடே உலகின் பல முக்கிய இசைத்தொகுப்புகளில் இருப்பதாக Leonard Bernstein தன் புத்தகங்களில் விளக்குகிறார். தொப்பிள் கொடி போல நம்முடன் ஒட்டி பிறந்த ஒன்றாகவே கருதலாம்.
இம்மாதிரி கட்டுரைகளை படிக்காமல இருந்தமைக்காக வருந்துகிறேன் அருமையான பதிவு