பொருனைக்கரை நாயகிகள்

தென்பேரை சென்ற நாயகி

ஆழ்வார்கள் என்ற சொல்லுக்கு எம்பெருமானுடைய மங்கல குணங்களில் ஆழங்கால் படுபவர்கள் என்று பொருள். வேதங்களாலும் அளவிடமுடியாத எம்பெருமானுடைய எல்லாக் குணங்களையும் அவன் அருளாலே அவன்தாள் வணங்கி, அறிந்து அனுபவிக்கும் குணமே ஆழங்கால் படுவதாகும்.

எம்பெருமானுக்கும் நமக்கும் உள்ள உறவு ஒன்பது வகைப்படும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. இதில் நாயக-நாயகி (தலைவன், தலைவி) பாவமும் ஒன்று. இந்த உறவே எல்லாவற்றையும்விடச் சிறந்தது என்பர். இந்த முறையில் பரம்பொருளைத் தலைவனாகவும் (நாயகனாகவும்) ஜீவாத்மாக்களைத் தலைவியாகவும் (நாயகியாகவும்) வைத்து விளக்கும் பாடல்களை நாலாயிர திவ்யப் பிரபந்தத்திலும், தேவார திருவாசகத் திருமுறைகளிலும் காணலாம்.

Image result for nammazhwarநம்மாழ்வாரும், திருமங்கையாழ்வாரும் பெண்தன்மையேற்று, பல திருக்கோயில்களில் வீற்றிருக்கும் எம்பெருமான்களைத் தங்களுடைய பல பாசுரங்களில் பாடியிருக்கிறார்கள். நம்மாழ்வாருக்கு பராங்குசன் என்றொரு பெயரும் உண்டு. அவர் பெண் தன்மையடந்து பாடும்பொழுது பராங்குச நாயகியாகவே காட்சியளிக்கிறார். திருமங்கையாழ்வாருக்குப் பரகாலன் என்றொரு பெயர் உண்டு. இவரும் நாயகி பாவத்தில் பாடும்பொழுது பரகால நாயகியாகவே மாறிவிடுகிறார்.

இவர்கள் இப்படி பராங்குச, பரகால நாயகியாகி எம்பெருமானை அனுபவிக்கும்பொழுது, அவர்கள் பாசுரங்கள் தாய்ப் பாசுரங்கள். மகள் பாசுரங்கள். தோழி பாசுரங்கள். என்று வழங்கப்படுகின்றன. தாய் சொல்வதுபோல் வரும் பாசுரங்கள் தாய்ப் பாசுரம்; மகள் கூற்றாக வருபவை மகள் பாசுரங்கள்; தோழி சொல்வது தோழி பாசுரங்கள். இவர்கள் மூவர் கூற்றாக வந்தாலும் இவற்றைச் சொல்பவர்கள் ஆழ்வார்களே! அவர்களுடைய அனுபவமே தாய், மகள், தோழி வாயிலாக வெளிப்படுகிறது.

தாய்ப் பாசுரங்கள்

பெண்ணைப் பெற்றுவளர்ப்பவள் தாய். தக்க வயது வந்ததும் மகள் எம்பெருமானிடம் காதல் கொள்கிறாள். அவன் இருக்குமிடம் சென்று சேரவேண்டும் என்று தவிக்கிறாள். தலைவனே, தலைவியைத் தேடி, தலைவி இருக்குமிடத்திற்கு வரவேண்டும் என்பதுதான் நடைமுறை என்றும் தலைவி தானாகவே அவனைத் தேடிச்செல்வது குலமரியாதைக்கு உகந்தது அல்ல என்றும் தாய் நினைக்கிறாள். ஆனால் தன் அருமை மகள் பிரிவாற்றாமையால் வருந்துவதையும் இந்தத் தாயால் பொறுக்கமுடியவில்லை. எம்பெருமானிடமே “என் மகளை என்ன செய்யப் போகிறாய்?” என்று வாதாடுகிறாள்

மகள் பாசுரங்கள்.

தலைவனுடைய (எம்பெருமானுடைய) பேராற்றலிலும், அழகிலும் ஈடுபட்டு அவனுடைய வீர, தீர கல்யாண குணங்களைக் கேள்விப்பட்டு அல்லும் பகலும் அவனையே நினைத்து ஏங்குகிறாள் தலைவி. இவளுக்குப் பாலும் கசந்து, படுக்கை நொந்து, கோலக் கிளிமொழிகள் குத்தலெடுக்கின்றன. தென்றலும் அன்றிலும் இவள் தவிப்பை அதிகரிக்கின்றன. தன் நிலையை அவனிடம் சென்று சொல்லி வரும்படி பல பறவைகளையும், வண்டுகளையும், ஏன் மேகங்களையும். தன் நெஞ்சையும்கூட தூதாக விடுக்கிறாள். இந்த நாயகிகள் அவனை அடைந்தால் அல்லது உயிர் வாழ்ந்திருக்க மாட்டேன் என்று பதறுகிறார்கள், துடிக்கிறார்கள். கடலையும், நிலவையும் பழிக்கிறார்கள். கோபிக்கிறார்கள்.. தோழியும் தாய்மார்களும் எவ்வளவோ சொல்லியும். கேளாமல் தங்கள் நாயகனைத் தேடிப் புறப்பட்டுவிடுகிறார்கள்.

தோழி பாசுரங்கள்

தலைவனைப் பிரிந்து தவிக்கும் நாயகிக்கு உற்றதுணையாக இருப்பவள் தோழி. தலைவியின் நோயையும், அதற்கான காரணத்தையும் அறியாத தாயும், உறவினர்களும் கட்டுவிச்சியைக் கூப்பிட்டும் வேலனைக் கூப்பிட்டும் வெறியாட்டெடுக்கிறார்கள்.. தோழி, தலைவியின் நோய்க்கான காரணத்தையும் அதற்கான பரிகாரத்தையும் சொல்கிறாள்

இனி பொருனையாற்றங்கரையிலுள்ள (தாமிரபரணி) திருக்குகுருகூரில் — இன்றைய தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஆழ்வார்திருநகரியில் அவதரித்த நம்மாழ்வார்(பராங்குசர்) பராங்குச நாயகியாகி எம்பெருமானைப் பல்வேறு நிலையில் அனுபவித்ததை நாமும் அனுபவிப்போம் நம்மாழ்வார் பல்வேறு நாயகிகளின் காதலையும் தவிப்பையும் நமக்குக் காட்டுகிறார். ஒவ்வொரு நாயகியும் ஒவ்வொரு ஊர்ப்பெருமானிடம் காதல்கொண்டிருக்கிறாள். காதல்நோயில் தவிக்கிறாள். தன்னை அவனிடம் ஒப்புவிக்க வீட்டையும் உறவினர்களையும் துறந்து அவனிருக்குமிடம் நோக்கிச் செல்கிறாள். ஜீவாத்மா, பரமாத்மாவை அடைய இத்தகைய தவிப்பு! இனி இந்த நாயகிகளைச் சந்திப்போமா?

வேத ஒலியும் விழா ஒலியும் அறாத தென்திருப்பேரை:

நம்மாழ்வார் அவதாரத் தலமான குருகூருக்கு (தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார் திருநகரி) அருகில் உள்ளது தென்திருப்பேரை. இங்கு வீற்றிருக்கும் பெருமானுக்கு ”மகர நெடுங்குழக்காதன்” என்பது திருநாமம். இது நவதிருப்பதிகளுள்  ஒன்று

நிலமகள் பொருனையாற்றின் கரையிலிருந்து தவம்செய்தபோது திருமஞ்சனத் துறையில் அவள் கையில் இரண்டு மகர குண்டலங்கள் அகப்பட்டImage result for maha vishnu paintingன. அவற்றை அணியத் தகுந்த நீண்ட காது உள்ளவனாக வந்த திருமாலை மணந்துகொண்டாள். அதனால் அப்பெருமானுக்கு ‘மகர நெடுங்குழைக்காதன்” என்று பெயர் வந்தது. இப்பெருமானுக்கு ’’நிகரில் முகில் வண்ணன்” என்ற பெயரும் உண்டு. வருணன் தினம் ஆராதனை செய்யும் பெருமையுடையது பொருனைத்துறை.

இந்த ஊரில் எப்பொழுதும் வேதஒலி முழங்கிக் கொண்டேயிருக்குமாம். அடிக்கடி விழாக்களும் கொண்டாடப்படுவதால் விழா ஒலிக்கும் குறைவில்லை. இவ்வூர்ப் பிள்ளைகள் ஆடிப்பாடி விளையாடுவதைப் பார்த்து மகிழவேண்டும் என்பதற்காகப் பெருமான் தனது சந்நிதி கருடனைச் சற்றே விலகி யிரும் பிள்ளாய் என்று சொன்னதால் சந்நிதி கருடன் சற்றே விலகி  யிருப்பதைக் காணலாம்.

பறவைகள் தூது

இந்தப் பெருமானின் நாமத்தைக் குருகூர் நாயகி கேட்டாள். பின் மூர்த்தி அவனிருக்கும் வண்ணம் கேட்டாள். பின் அவனுடைய ஆரூர் கேட்டாள். அவனுடைய அனந்த கல்யாண குணங்களையும் கேட்டவள் அவனுக்கே பிச்சியானாள். அவனை அடைந்தால் அல்லது ஆற்றாமை தீராது என்று நினைக்கிறாள்.

அதற்குமுன் தன்னுடைய நிலையை எடுத்துச் சொல்ல தூதனுப்பலாமே என்று எண்ணி குயில்களைத் தூதாக அனுப்புகிறாள்.

“குயில்களே! என் நிலைமையை எம்பெருமானிடம் சொல்லுங்கள். என் பெரும்பாவத்தால் அவன் திருவடியின் கீழிருந்து கைங்கர்யம் செய்வதற்கு முன்னமே நான் முயற்சிசெய்யாமல் இருந்துவிட்டேன். அதற்காக நான் இன்னமும் விலகி யிருக்கத்தான் வேண்டுமா?

    என் செய்ய தாமரைக் கண் பெருமானார்க்குத் தூதாய்

       என் செய்யும் உரைத்தக்கால் இனக்குயில்காள் நீரலிரோ

       முன் செய்த முழுவினையால் திருவடிக்கீழ் குற்றேவல்

       முன் செய்ய முயலாதேன் அகல்வதோ விதியினமே

என்று கேள்வி யெழுப்புகிறாள்.

மகன்றில் தூது

அடுத்ததாக மகன்றில் என்னும் பறவைகளைப் பார்க்கிறாள். ஆண்-பெண் மகன்றில் பறவைகள் பிரிவின்றி வாழும் தன்மை கொண்டவை.

மகன்றில்களே! என்னுடைய தன்மையை அறிந்திருந்தும், இவள் பிரிவைத் தாஙக மாட்டாள் என்பதை அறிந்திருந்தும், பிரிந்திருப்பது தகாது என்று நினைக்காத நீலமுகில் வண்ணனுக்கு நான் என்ன செய்யப் போகிறேன்? இந்த உயிர் இனி அவளிடத்தில் தங்கியிருக்காது என்ற வார்த்தையை அவனிடம் சொல்வீர்களா மாட்டீர்களா?

       என்நீர்மை கண்டிரங்கி இது தகாது என்னாத

             என்நீல முகில் வண்ணர்க்கு  ———————

       நன்னீர்மை இனியவர் கண் தங்காது என்றொரு வாய்ச்சொல்

        நல்குதிரோ? நல்கீரோ? நன்னீல மகன்றில்காள்?”

என்று மகன்றில் பறவைகளை விரட்டுகிறாள். அடுத்ததாக குருகிடம் சென்று யாசிக்கிறாள். ”குருகே! நாராயணனைக் கண்டால் உன்னையே நினைந்துருகும் பென்ணுக்குத் திருவருள் செய்யக்கூடாதா? என்று கேள். அவர் கூறும் ஒரு வார்த்தையைக் கேட்டுவந்து கண்ணீர்வழிய நிற்கும் எனக்குச் சொல்லவேண்டும் என்று இறைஞ்சுகிறாள்.

நாயகியின் எரிச்சல்:

இதற்குள் தான் வளர்க்கும் நாகணவாய்ப் பறவையின் ஞாபகம் வருகிறது. நாகணவாய்ப் பறவையிடம் ஏற்கெனவே நெடுமாலார்க்கு என் தூதாய்ச் சென்று என் பிரிவுத் துன்பத் தையும், என் நோய் பற்றியும் சொல்லிவிட்டு வா என்று உத்தரவு போட்டிருந்தாள். ஆனால் அப்பறவையோ போகாமலே இருந்து விட்டது. இதனால் கோபமும் வருத்தமும் அடைந்த நாயகி “நான் இவ்வளவு தவிக்கிறேன். நீயோ என் பேச்சைக் கேட்பதாக இல்லை. இனிமேல் இனிய அடிசிலை யார் உனக்கு ஊட்டுவார்களோ அவர் களிடமே போய்ச்சேர்” என்று எரிச்சலுடன் சொல்கிறாள்.

இவள் இப்படி நராயணனையே நினைத்து ஏங்கி ஏங்கி இளைத்து விடுகிறாள் வளையல்கள் நழுவு கின்றன. இதைக் கண்ட தாயார் தன் பெண்ணின் நிலைமையை எண்ணிக் கவலைப் படுகிறாள்.

               மாலுக்கு வையம் அளந்த மணாளற்கு

                 நீலக் கருநிற மேக நியாயற்கு

                 கோலச் செந்தாமரைக் கண்ணற்கு என் கொங்கலர்

                 ஏலக்குழலி இழந்தது சங்கே

[சங்குவளையல்

என்மகள் வளையலை மட்டுமா இழந்தாள்? அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்னும் பெண்ணுக்கு அணிகலன்களான அனைத்தையும் அவன்பொருட்டு இழந்தாள் என்று வருந்துகிறாள்.

தோழியும் தாயும்

பிரிவுத் துன்பம் காரணமாகத் தன்தலைவி படும் பாட்டைக் கண்ட தோழி, தன் கவலையைப் பகிர்ந்துகொள்ளுகிறாள்.

தாயே! இவளுடைய இந்த நோயைத் தீர்ப்பதற்குரியவர்களை எங்கே போய்த் தேடுவோம்? இப்பொழுது இவளுடைய நோய் இன்ன தென்று தெளிவாகத் தெரிகிறது. அன்று மாயப்போர் செய்து பஞ்ச பாண்டவர்களை வெற்றி பெறச் செய்த பார்த்தசாரதி விஷயமாகவே இவள் மனம் மயங்குகிறது.

     தீர்ப்பாரை யாம் இனி எங்ஙனம் நாடுதும் அன்னைமீர்?

     ஓர்ப்பால் இவ்வொண்ணுதல் உற்ற நல் நோய் இது தேறினோம்

     தேர்ப்பாகு தான் செய்து அன்று ஐவரை வெல்வித்த மாயப்போர்த்

     தேர்ப்பாகனார்க்கு இவள் சிந்தை துழாய்த் திசைக்கின்றதே

என்று நாயகியின் நிலைமைக்கான காரணத்தைச் சொல்கிறாள்

நாயகியின் முடிவு

தாயாரும் தோழியும் கூடிப்பேசி என்ன செய்யலாம் என்று யோசித்துக்கொண்டிருக்கும்போது நாயகி ஒரு முடிவுக்கு வந்துவிடுகிறாள். அருகிலுள்ள தென்திருப்பேரைப் பெருமானை (நிகரில் முகில் வண்ணன்) அடைவேன் என்று கிளம்புகிறாள். ஒன்று நீங்களே என்னைக் கூட்டிக்கொண்டுபோய்ச் சேர்க்கிறீர்களா? அல்லது நானே செல்லட்டுமா என்று கேள்வி எழுப்புகிறாள்.

             நான் இத்தனி நெஞ்சம் காக்க மாட்டேன்

             என்வசம் அன்று இது இராப்பகல் போய்

             தேன் மொய்த்த பூம்பொழில் தண் பனை சூழ்

             தென்திருப்பேரையில் வீற்றிருந்த

             வானப்பிரான் மணிவண்ணன் கண்ணன் செங்கனி

                                                வாயின் திறத்ததுவே

என்று தீர்மானமாகச் சொல்லுகிறாள்

”தோழி! என் நெஞ்சம் செங்கனி போன்ற வாயழகில் தன்னை மறந்தது. என் இதயமோ திருமுடிக்கு ஆட்பட்டு விட்டது. சங்கு சக்ரதாரியான அவன் கண்களால் வலைவீசி என்னைப் பிணித்து விட்டான். நானும் அவ்வலையில் அகப்பட்டுக் கொண்டேன். நாளும் விழாக்கள் நடைபெறும் தென்பேரை நாயகனான நிகரில் முகில்வண்ணனிடம் என் நெஞ்சத்தை பறிகொடுத்து என் நாணத்தையும் இழந்துவிட்டேனே!

தலைவியின் ஒப்புதல்

”அன்னைமீர்காள்! என்னைக் கோபித்து என்ன பயன்? சகடத்தை உதைத்து மயமாய் வந்த பூதனையின் உயிர்குடித்து, மருதமரங்களை இறுத்து, கன்றுகொண்டு விளவெறிந்த கண்ணனுக்கு என் பெண்மையைத் தோற்றேன். அதனால் தென்பேரை மாநகர்க்கு என்னைக் கூட்டிச்செல்லுங்கள். கண்முன்னே வந்து காட்சி தரும் நீலமுகில்வண்ணன் கையில் அகப்படமாட்டான். காதலோ கடலினும் பெரிது எனவே  கூடுபுனல்  (ஆற்று நீர்,  மழை நீர், ஊற்று நீர் இவை மூன்றும் கூடியிருக்கும்) தென்திருப்பேரைக்குக் கூட்டிச்செல்லுங்கள்.

”தோழி! தென்திருப்பேரைக்குச் சென்ற என் நெஞ்சமோ திரும்பி வரும் என்று தோன்றவில்லை. எனக்கு யார் உதவுவார்கள்? யாரைக் கொண்டு என்ன பயன் பெறமுடியும்? என்னுடைய காதலின் தன்மை எவ்வளவு பெரியது தெரியுமா? அது உலகத்தைவிடப் பெரியது! கடலைவிட ஆழமானது! மலையினும் மாணப் பெரியது! ஆகாயத்தை விடப் பரந்தது!

ஆனால் கண்ணனிடம் நான் கொண்ட காதலைப் பற்றி பலரும் பலவிதமாகப் பேசினார்கள். ஊராரெல்லாம் பழிதூற்றினார்கள். இதனாலெல்லாம் என் காதல் குறைந்ததா? இல்லையே. மென்மேலும் வளர்ந்தது. எனவே என் காதலுக்கு உரியவனான தென்பேரை மாநகரில் வீற்றிருக்கும் பெருமானைக் காலம் கடத்தாமல் அடைவேன்.

சென்றடைந்த தலைவி

”தோழிகளே! எம்பெருமானை, என் நெஞ்சம் கவர்ந்தவனை, நாடு நகரங்களிலும் தேடுவேன். நானோ நாணத்தை இழந்து விட்டேன். ஏன் தெரியுமா? சிகரமணி நெடுமாட நீடு தென்திருப்பேரையில் வீற்றிருக்கும் மகர நெடுங்குழக்காதன் என் நெஞ்சம் கவர்ந்து எத்தனையோ ஊழிக்காலம் ஆகிவிட்டதே! அதனால் என்னருமைத் தோழிகளே! அன்னைமார்களே! நீங்கள் என்னைச் சமாதானம் சொல்லித் தேற்ற வேண்டாம். என் நெஞ்சும் நிறைவும் என்னிடம் இல்லை. மேகவண்ணனான ஞாலம் உண்ட கண்ணன் வீற்றிருக்கும் திருப்பேரை மாநகரை நான் சென்றடைவேன் இது திண்ணம்”

 

          சேர்வன் சென்று என்னுடைத் தோழிமீர்காள்!

                         அன்னையர்காள்! என்னைத் தேற்ற வேண்டா

           நீங்கள் உரைக்கின்றது என்னிதற்கு?

                           நெஞ்சும் நிறைவும் எனக்கு இங்கு இல்லை

           கார்வண்ணன் கார்க்கடல் ஞாலம் உண்ட

                                  கண்ணபிரான் வந்து வீற்றிருந்த

           ஏர்வள ஒண் கழனிப் பழனத்

                           தென்பேரையில் மாநகரே (சென்று சேர்வன்)

 

இந்த நாயகி தன் விருப்பம்போல் நிச்சயம் துணிச்சலுடன் தென்திருப்பேரை நிகரில் முகில் வண்ணனைச் சென்று சேர்ந்திருப்பாள்.

***   ***   ***

5 Replies to “பொருனைக்கரை நாயகிகள்”

  1. பெருமதிப்பிற்குரிய கட்டுரை ஆசிரியைக்கு
    முதற்கண் தேவரீருக்கு அடியேனது “அடி வீழ்ச்சி விண்ணப்ப நமஸ்காரம்”.

    மிகவும் அருமையான கட்டுரை . ஆயினும் தங்களிடம் திருமால் -அன்பினை மட்டும் காண்கின்றேனே ஒழிய ஆசார்ய பக்தியினை காண்கின்றிலன் .ஆழ்வார் ,எம்பெருமானார் ,ஜீயர் திருவடிகளை வணங்கி , தனியன் சேவித்த பின்னரே ப்ரபந்த சேவை என்பது ஆசார்ய ஶாஸநம்.
    ஆழ்வார்கள் 12 ரிஷி போல்வர் .அவர்கள் அருளிச்செயல் (அ ) ப்ரபந்தம் என்பது ஆர்ஷம் (ரிஷி எழுதுவது ஆர்ஷம் அல்லது வேதம் ). மொத்தம் 24 பிரபந்தங்கள் -காயத்ரியின் 24 அக்ஷரங்களைப் போலவுமாம் (அ ) ஸ்ரீமத் ராமாயணத்தின் 24 ஆயிரங்களுமாம். அவற்றுள் நம்மாழ்வார் அருளிச்செயல் நான்கும் நான்கு வேதங்கள் .திருமங்கையாழ்வார் அருளிய ஆறும் அதன் ஆறங்கங்கள் .மற்றையவை 8 உபாங்கங்களுமாம் . ஆக மொத்தம் 18 வித்யா ஸ்தானங்கள் .அவற்றின் பொருளினை அறிய முதலிலே வேண்டுவது ஆசார்ய பக்தி.
    தேவரீர் எழுதியதுபோல “நாயகியின் எரிச்சல்” -என்பது தவறான கருத்து. நமது ஆறாயிரப்படி ,ஒன்பதினாயிரப்படி ,இருபத்துநாலாயிரப்படி ,ஈடு மற்றும் பனிரெண்டாயிரப்படி போன்ற உரை நூல்களில் இங்ஙனம் காணவியலாது. பராசர பட்டர் என்னும் மஹாசார்யர் தானும் இதற்கு உரை எழுத அஞ்சினார் . எனவே இதன்பின்னரேனும் சரியாக உரைநூலினைப் பயின்று எழுத இறைஞ்சுகின்றேன் .
    முதல் பத்து 4ம் திருவாய்மொழி 8ம் பாசுரம்
    http://www.dravidaveda.org/index.php?option=com_content&view=article&id=3522
    நீயலையே சிறுபூவாய் நெடுமாலார்க்கு என்தூதாய்
    நோயெனது நுவலென்ன, நுவலாதே இருந்தொழிந்தாய்
    சாயலொடு மணிமாமை தளர்ந்தேன் நான் இனியுனது
    வாயலகில் இன்னடிசில் வைப்பாரை நாடாயே.

    இவ்விடத்திலே ஒரு ஐதிஹ்யம்; – பெரிய திருமலைநம்பி என்னும் ஆசார்யர் (ஸ்ரீமத் பகவத் ராமானுஜரின் தாய்மாமன்) ‘வெண்ணெய்க்கு ஆடும்பிள்ளை’ என்கிற ஸ்ரீகிருஷ்ண விக்ரஹத்தை (திருவாராதநம்) பூஜை செய்து வந்தார். அவர் தமது கடைசி காலத்தில் (அந்திமதசை) திருவாராதநம் ஸமர்ப்பிக்க சக்தியில்லாதவரானார் . அப்பொழுது பெருமாள் ஸந்நதிமுன்பே தண்டன் ஸமர்ப்பித்துத் திருத்திரையை நீக்கச் செய்து “சாயலொடு மணிமாமை தளர்ந்தேன் நான் இனியுனது வாயலகில் இன்னடிசில் வைப்பாரை நாடாயே” என்று கைகூப்பி விண்ணப்பஞ் செய்தாராம் -” . பொருள் : -அடியேனோ ஆசாரியன் திருவடியை அடையப் போகின்றேன் ” ; ஆகவே இனி உமக்குத் திருவாராதனம் கண்டருளப் பண்ணுவாரைத் தேடிக்கொள்ளாய்” – என்றபடி.

    இந்த பாவனையிலேயேதான் ஆழ்வாரும் சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன்பே பாடுகின்றார் -” ஏ நாகணவாய்ப்புள்ளே ! திருமாலும் எனக்கு அருளவில்லை . நீயும் அவனிடம் தூது செல்லவில்லை .இனிமேல் அடியேன் உயிர்துறந்துவிடுவேன் .அதன் பின்னர் உனக்கு யார் உணவு அளிப்பார்களோ ,அவர்களை நாடிக் செல்லுவாய் “; -என்பதுதான் ஆச்சார்யர்கள் காட்டிய சரியான பாவனை.

    தாங்கள் அடியேனது இந்த சிறு திருத்தம் செய்ய விண்ணப்பிக்கின்றேன் . தாங்கள் இவ்வாறு மேலும் பல அறிய கட்டுரைகளை எழுத விழைகின்றேன் . அருமையான முயற்சி .

    தேவரீர் வாழ்க பல்லாண்டு !!! ஆசார்ய பக்தியும் வாழ்க பல்லாண்டு !!!
    அன்புடன் ,
    கெணெசு

  2. i am interested in vaishnava subjects and also siva. pl send me your bulletings, e journals. thanks

  3. ஆச்சாரியர்களின் அனுபவ்ம் நான் அனுபவிக்க அருளுதியே. நன்றி திரு கெணேசு.ஆஃழ்வார் பெருமக்களின் அருளிச்செயல்களை முதலில் பொடுவாகப் பொருளுணர்ந்து, பின் ஈஈட்டுரைகளின் வாயிலாக அணுபவிக்கும்போது சொல்லொணாதிந்த ஆநந்தம். திருமுறைகளை அனுபவிக்கும் வழி காட்டுகின்றன இவ்வீட்டுரைகள்.

  4. //நம்மாழ்வாரும், திருமங்கையாழ்வாரும் பெண்தன்மையேற்று, பல திருக்கோயில்களில் வீற்றிருக்கும் எம்பெருமான்களைத் தங்களுடைய பல பாசுரங்களில் பாடியிருக்கிறார்கள். //

    இப்படி நான் கேள்விப்படவில்லை. பெண் பாவனையில் இவ்விரு ஆழ்வார்களும் ஒரு குறிப்பிட்டத் திருக்கோயிலில் உறையும் பெருமாளைத்தான் காதலனாக, மணவாளனாகத் தரித்துப் பேசுகிறார்கள். அதே நேரத்தில் அவ்வப்போது அப்பாசுரங்கள் பிற திவ்யதேசப்பெருமாள்களையும் குறிப்ப்பிட்டுச்செல்லுமெனினும், பெண் மையல் கொண்டது ஒரு பெருமாளைத்தான்.

    இக்கட்டுரையில் நம்மாழ்வாரின் ப்ராங்குசநாயகி ஆழ்வார்திருநகரி, மகர நெடுங்குழை காதரின் மேல மையலுற்றதாக எழுதப்பட்டிருக்கிறது. ஆனால், பராங்குச நாயகி, திருக்குறுங்குடி நம்பி மேல மையலுற்றவையே பெண்பாவனைப்பாசுரங்கள். திருக்குறுங்குடி தூத்துக்குடி மாவட்டத்திலும் இல்லை; தாமிரப்பருணி ஆற்றங்கரையிலும் இல்லை. திருக்குறுங்குடி முல்லை நிலம். அடர்ந்த வனவிலங்குகள் வாழும் மகேந்திரமலைப் பகுதி. களக்காடு பகுதி. அடிக்கடி கரடிகளும் (இருவாரங்களுக்கு முன்) சிறுத்தைகளும் ஊருக்குள் நுழைந்து மக்களைக் கலவரப்படுத்தும்பகுதி. ஆழ்வார்திருநகரி வயலும் வயல் சார்ந்த இடமும்.

    //ஆழ்வார்கள் என்ற சொல்லுக்கு எம்பெருமானுடைய மங்கல குணங்களில் ஆழங்கால் படுபவர்கள் என்று பொருள். வேதங்களாலும் அளவிடமுடியாத எம்பெருமானுடைய எல்லாக் குணங்களையும் அவன் அருளாலே அவன்தாள் வணங்கி, அறிந்து அனுபவிக்கும் குணமே ஆழங்கால் படுவதாகும்.//

    இது சரிதான். ஆனால், ஆழ்வார்களின் தனிச்சிறப்பு பெருமாளின் கலியாணகுணங்களில் ஆழங்கால் படுவது மட்டுமன்று; பெருமாளின் அர்ச்சாதாவராத்திருமேனிகளில் ஆழங்கால் படுவதும் ஆகும். இத்தனிச்சிறப்பைத் தவிர்த்து ஆழ்வார்களை அணுகவே முடியாது.

    எடுத்துக்காட்டு:

    பச்சைமாமலை போல் மேனி; பவளவாய் கமலச்செங்கண்
    அச்சுதா அமரரேறே ஆயர்தம் கொழுந்தே என்னும்
    இச்சுவை தவிர யான்போய் இந்திரலோகமாளும்
    அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்காமநகருளானே!

    It is a representative song to highlight the point that they involved themselves on the idols themselves. Through the idols, they saw their God. It is an important aspect of their bhakti. That has led to special attributes to individual idols. For e.g. the Kallazhagar who was sung by Nammaazhvaar, Periyaazhvaar and his foster daughter, is celebrated for his shoulders. சுந்தரத்தோளுடையான். மேற்காட்டிய பாசுரத்தில் இவர் சொல்வது என்னவென்றால், என்னிடம் என்னதான் வைகுண்டத்தைப்பற்றிச் சொல்லி ஆசைகாட்டினாலும் எனக்கு திருவரங்கரத்தில் உறையும் பெரிய பெருமாளே போதும். இவ்வச்சாதவார திருமேனியைப் பாடிப்பரவுவதே எனக்குப் போதும் என்கிறார்.

    ஆழ்வார்கள் என்பது ஒரு ஆழந்த பாடம். ஆழ்வார்களை வாசிக்கவாசிக்க இந்நினைப்புதான் வருகிறது:

    I do not know what I may appear to the world, but to myself I seem to have been only like a boy playing on the sea-shore, and diverting myself in now and then finding a smoother pebble or a prettier shell than ordinary, whilst the great ocean of truth lay all undiscovered before me. – Sir Issac Newton.

  5. //ஆழ்வார் பெருமக்களின் அருளிச்செயல்களை முதலில் பொடுவாகப் பொருளுணர்ந்து, பின் ஈஈட்டுரைகளின் வாயிலாக அணுபவிக்கும்போது சொல்லொணாதிந்த ஆநந்தம். திருமுறைகளை அனுபவிக்கும் வழி காட்டுகின்றன இவ்வீட்டுரைகள்.//

    பக்தி இன்பத்துக்காகவோ, சொல்லவொண்ணா ஆனந்தத்துக்காகவோ ஆழ்வார்களின் பாசுரங்கள் இல்லை. பக்தியை இன்பமாக்குதல் தவறு.

    நம்மை இறைவனோடு இணைக்கும் தொண்டைச்செய்யவே உருவாக்கப்பட்டவை. மேலும் நம்மாழ்வாரே, தான் எழதவில்லையென்றும், த்ன்னள் புகுந்து பெருமாளே எழுதினார் என்கிறார்.

    இவை இலக்கியமில்லை. அப்படி இலக்கியமாகப் பார்ப்பவர்கள், மதத்துக்கு வெளியே உள்ளவரே. கம்பராமாயாணம் தமிழரனைவருக்குமே ஒரு சிறந்த இலக்கிய இன்பம். இந்துக்களுக்கு? அப்படி இருக்க முடியாது. கூடவும் கூடாது.

    “தொண்டே செய்து, என்று

    தொழுது வழியொழுக,

    பண்டே பரமன் பணித்த பணி — நம்மாழ்வார்.

    Therefore, please be quick to draw the line. Else, it endangers the religion.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *