அறிவனும் தாபதரும் தமிழ் யோக மரபும்

tholkappiyam-manuscriptதொல்காப்பியம் ஓரிடத்தில் பார்ப்பார், அரசர், ஏனோர் (வணிகர், வேளாளர்), அறிவர், தாபதர் (தவம் செய்வோர்), பொருநர் (போர் செய்வோர்) என்பவர்களை ஒரே சூத்திரத்தில் பட்டியலிட்டுப் பேசுகிறது. வெற்றிக்கு உரியதான வாகைத்திணையை விளக்கும் சூத்திரம் இது. முதற்பார்வையில் இந்தப்பட்டியல் தொடர்பற்றவற்றை ஒன்று சேர்த்து ஏதோ கலந்து கட்டியது போலத் தோற்றமளிக்கிறது. ஆனால் உரைகளின் துணைகொண்டு கற்கும் போது தமிழ் இலக்கண மரபின் ஆழமும் மேதமையும் புலனாகிறது.

பாலை என்ற அகத்திணைக்குப் புறமாக உள்ளது இந்த வாகைத் திணை. அகத்துறையில், பாலை என்பது பிரிவு. தலைவனும் தலைவியும் கூடி மகிழ்ந்திருந்ததற்குப் பின் பிரிந்து செல்வதைப் பாலைத்திணை குறிக்கிறது. புறத்துறையில், இதற்கு ஈடாகப் ‘பிரிவு’ என்று எதைச் சொல்வது? கல்வியையோ, ஆட்சியையோ, பொருளையோ, தொழில் மேன்மைமையோ, போரையோ, ஞானத்தையோ, யோகத்தையோ நாடி தனது சுற்றத்தையும் சூழலையும் விட்டுப் பிரிந்து செல்வதைக் கூறலாம் என்கிறது மரபு. அவ்வாறு பிரிந்து சென்று அந்தத் துறையில் வெற்றி வாகை சூடுவதால் வாகைத் திணையாயிற்று. நச்சினார்க்கினியரின் உரை இந்தக் கருத்தை விளக்குகிறது –

“பாலைக்குப் புணர்ச்சியின் நீங்கி இல்லறநிகழ்த்திப் புகழெய்துதற்குப் பிரியுமாறுபோலச், சுற்றத்தொடர்ச்சியின் நீங்கி அறப்போர்செய்து துறக்கம்பெறுங் கருத்தினாற் சேறலானும், வாளினுந் தாளினும் நிறையினும் பொறையினும் வென்றியெய்துவோரும் மனையோரைநீங்கிச் சேறலானும் பிரிவுள தாயிற்று”

நான்கு வருணங்களையும், அதன்பின் ஞானம், யோகம், போர் ஆகியவற்றையும் இப்பட்டியலில் கூறியது கவனிக்கத் தக்கது. ஒவ்வொரு வருணத்திற்கும் சாஸ்திரங்களில் கூறப்பட்ட அறங்களையும் செயல்களையும் சிறப்புற நிறைவேற்றி அதில் வெற்றியும் நிறைவும் காண்பதற்கான ஒரு நிலைக்களனாகவே நால்வருண அமைப்பைத் தொல்காப்பியம் கருதுகிறது என்று தோன்றுகிறது. இத்தகைய கருத்தைக் கொண்டுள்ள தொல்காப்பியரின் பெயரைத் தான் தனது தந்தையாரின் மாற்றுப் பெயராக தமிழ்நாட்டு தலித் அரசியல்வாதியான தொல்.திருமாவளவன் தேர்ந்தெடுத்திருக்கிறார்.

இனி, சூத்திரம்:

‘அறு வகைப்பட்ட பார்ப்பனப் பக்கமும்,
ஐவகை மரபின் அரசர் பக்கமும்,
இரு-மூன்று மரபின் ஏனோர் பக்கமும்,
மறு இல் செய்தி மூவகைக் காலமும்,
நெறியின் ஆற்றிய அறிவன் தேயமும்,
நால்-இரு வழக்கின் தாபதப் பக்கமும்,
பால் அறி மரபின் பொருநர்கண்ணும்,
அனை நிலை வகையொடு ஆங்கு எழு வகையான்
தொகை நிலைபெற்றது’ என்மனார் புலவர்.

– தொ.கா, பொருளதிகாரம், புறத்திணையியல், 74

இதன் ஒவ்வொரு வரிக்கும் நீண்ட விளக்கங்களை உரையாசிரியர்கள் எழுதியுள்ளார்கள். இதில் விரிவானதும், மிகச்சிறப்பானதும் நச்சினார்க்கினியரின் உரை. முழு உரையையும் இங்கு காணலாம்.

இங்கு நான் குறிப்பிடுச் சொல்ல விழைந்தது ‘அறிவன் தேயமும்’ ‘தாபதப் பக்கமும்’ என்பது பற்றி.

அறிவன் என்பதற்கு கணியன் (சோதிடன்) என்று இளம்பூரணர் பொருள் கொள்கிறார். இது ஞானியைக் குறிக்கவில்லை, மூவகைக் காலம் என்பது மழையும் பனியும் வெயிலும் என்கிறார். நடைமுறை சார்ந்த அவரது யதார்த்தவாதம் இதில் வெளிப்படுகிறது.

“மறுவில் செய்தி மூவகைக் காலமும் நெறியின் ஆற்றிய அறிவன் தேயமும்” – குற்றமற்ற செயலையுடைய மழையும் பனியும் வெயிலுமாகிய மூவகைக் காலத்தினையும் நெறியினாற் பொறுத்த அறிவன் பக்கமும்.

இறந்தகாலம் முதலாகிய மூன்று காலத்தினையும் நெறியினால் தோற்றிய அறிவன் பக்கம் என்றாலோ வெனின், அது முழுதுணர்ந்தோர்க் கல்லது புலப்படாமையின் அது பொருளன்றென்க. பன்னிரு படலத்துள், “பனியும் வெயிலுங் கூதிரும் யாவும், துனியில் கொள்கையொடு நோன்மை எய்திய தணிவுற்று அறிந்த கணிவன் முல்லை” எனவும் ஓதுதலின் மேலதே பொருளாகக் கொள்க. அறிவன் என்றது கணியனை. மூவகைக் காலமும் நெறியினால் ஆற்றுதலாவது, பகலும் இரவும் இடைவிடாமல் ஆகாயத்தைப் பார்த்து ஆண்டு நிகழும் வில்லும் மின்னும் ஊர்கோளுந் தூமமும் மீன்வீழ்வும் கோள்நிலையும் மழைநிலையும் பிறவும் பார்த்துப் பயன் கூறல். ஆதலான் ‘மூவகைக் காலமும் நெறியின் ஆற்றின் அறிவன்’ என்றார்.

‘தவம் செய்பவர்கள்’ என்பதையும் இதோ போன்று வெளித்தோற்றத்தையும் நடைமுறைச் செயல்பாடுகளையுமே கொண்டு அவர் விளக்குகிறார்.

“நால் இரு வழக்கின் தாபத பக்கமும்” – எட்டுவகைப்பட்ட வழக்கினையுடைய தாபதர் பக்கமும். அவையாவன;- நீராடல், நிலத்திடைக் கிடத்தல், தோலுடுத்தல், சடைபுனைதல், எரியோம்பல், ஊரடையாமை, காட்டிலுள்ள உணவுகோடல், தெய்வப்பூசையும் அதிதி பூசையும் செய்தல்.

ஆனால், நச்சினார்க்கினியர் ஆழ்ந்த தத்துவ நோக்குடனும் புலமையுடனும் இதற்கு உரை எழுதியிருக்கிறார்.

“மறுவில் செய்தி மூவகைக் காலமும் நெறியின் ஆற்றிய அறிவன் தேயமும்” – காமம் வெகுளி மயக்கமில்லாத ஒழுகலாற்றினை இறப்பும் நிகழ்வும் எதிர்வுமென்னும் மூவகைக் காலத்தினும் வழங்கும் நெறியான் அமைத்த முழுதுணர்வுடையோன் பக்கமும்;

அறிவன் என்பவனது இயல்புகளை விளக்க இரண்டு அழகிய செய்யுட்களைத் தருகிறார். பழங்கால உரைகளின் இயல்புக்கேற்ப, இவை எந்த நூலில் உள்ளவை என்ற குறிப்பு இல்லை.

செய்யுள் 1:

“வாய்மை வாழ்நர் மூதறி வாள
நீயே ஒருதனித் தோன்றல் உறைபதி
யாருமில் ஒருசிறையானே தேரின்
அவ்வழி வந்த நின் உனணர்வு முதல் தங்கும்
தொல்நெறி மரபினும் மூவகை நின்றன
காலமும் நின்னொடு வேறென
யாரோஒ பெரும நின் தேர்குவோரே.”

செய்யுள் 2:

“வாடாப் போதி மரகதப் பாசடை
மரநிழல் அமர்ந்தோன் நெஞ்சம் யார்க்கும்
மருளில் தீந்தேன் நிறைந்து நனி ஞெகிழ்ந்து
மலரினும் மெல்லிதென்ப; அதனைக்
காமர் செவ்வி மாரன் மகளிர்
நெடுமா மழைக்கண் விலங்கி நிமிர்ந்தெடுத்த
வாளும் போழ்ந்திலவாயின்
யாதோ மற்றது மெல்லிய வாறே”

இவற்றில் முதற்செய்யுள் பொதுவான ஒரு வேதாந்த ஞானியையும், அடுத்த செய்யுள் வெளிப்படையாக போதிமர நீழலில் வீற்றிருக்கும் புத்த பகவானையும் குறிப்பதாக இருக்கிறது. இறுதியில் “கலசயோனியாகிய அகத்தியன் முதலியோரும் அறிவரென்றுணர்க” என்று அகத்தியரைப் பெயர் குறிப்பிட்டு உதாரணமாகத் தருகிறார். சைவ சமயத்தவராயினும் இவ்வாறு ஆய்வு நோக்குடன் அவர் உரைகாணும் திறன் பாராட்டுக்குரியது.

‘தாபதர் பக்கமும்’ என்பதைத் தவம், யோகம் என்று இரண்டாகப் பகுத்து அவர் உரை காண்கிறார். தவத்திற்கான அடையாளங்களை அவர் விளக்கும் பகுதியில் உள்ள தமிழ்ச்சொற்களின் அழகு படித்து இன்புறுதற்குரியது.

“நாலிருவழக்கிற் றாபதப் பக்கமும்” – அவ்வறிவர் கூறிய ஆகமத்தின்வழிநின்று வீடுபெற முயல்வார்க்கு உரியவாகிய எண்வகை மார்க்கத்துத் தவம்புரியுங்கூறும். வழக்கென்றதனான் அந்நாலிரண்டுந் தவம்புரிவார்க்கு உரியனவுந் தவஞ்செய்து யோகஞ்செய்வார்க்கு உரியனவுமென இருவகையவென்று கொள்க.

அவற்றுள் தவஞ்செய்வார்க்கு உரியன ஊணசையின்மை, நீர்நசையின்மை, வெப்பம்பொறுத்தல், தட்பம்பொறுத்தல், இடம்வரையறுத்தல், ஆசனம் வரையறுத்தல், இடையிட்டு மொழிதல், வாய்வாளாமை என எட்டும், இவற்றிற்கு உணவினும் நீரினுஞ்சென்ற மனத்தைத்தடுத்தலும், ஐந்தீநாப்பணும், நீர்நிலையினும் நிற்றலும், கடலுங் காடும் மலையும் முதலியவற்றில் நிற்றலும், தாமரையும் ஆம்பலும் யாமையும் முதலிய ஆசனத்திருத்தலும், உண்டற்காலை உரையாடாமையும், துறந்த காற்றொட்டும் வாய்வாளாமையும் பொருளென் றுணர்க.

யோகம் என்பதை விளக்குமிடத்து, பதஞ்சலியின் அஷ்டாங்க யோகத்தின் எட்டு உறுப்புக்களையும் கூறுகிறார்.

இனி யோகஞ்செய்வார்க்குரியன: இயமம் நியமம் ஆசனம் வளிநிலை தொகைநிலை பொறைநிலை நினைதல் சமாதி என எட்டும்.

இயமம், நியமம், ஆசனம், சமாதி ஆகிய எளிய சம்ஸ்கிருதச் சொற்களை அவ்வாறே கூறி, மற்றவற்றிற்கு வளிநிலை (பிராணாயாமம்), பொறைநிலை (பிரத்யாஹாரம்), நினைதல் (தியானம்) ஆகிய தூய தமிழ்ச் சொற்களை உருவாக்கிப் பயன்படுத்துவது நோக்குதற்குரியது. இது, எளிய தமிழ்ச் சொற்களுக்குக் கூட கடினமான சம்ஸ்கிருத பதங்களை வலிந்து புகுத்திப் பயன்படுத்தும் வைணவ உரைகளின் மணிப்பிரவாள நடைக்கு நேர் எதிர்த்திசையில் உள்ளது.

பிறகு, இவற்றை விளக்குமுகமாக, “உரைச்சூத்திரங்களா னுணர்க” என்று, கீழ்க்கண்ட அருமையான செய்யுள் மேற்கோள்களைத் தருகிறார். பதஞ்சலி யோக சூத்திரத்தின் மொழிபெயர்ப்புப் போலவே அமைந்துள்ள இவற்றைக் கொண்ட நூல் எதுவென்று தெரியவில்லை. தமிழ்நாட்டுப் பதஞ்சலி யோக மரபில் சூத்திரங்களாகவே அந்த நூல் பயிலப் பட்டிருக்க வேண்டும். அந்த நூல் எவ்வாறு வழக்கொழிந்தது? ஏதேனும் வேறு சுவடிகளில் அது அகப்பட்டுள்ளதா அல்லது அதற்கான சாத்தியங்கள் உண்டா என்பதும் தெரியவில்லை.

இவற்றை,

“பொய்கொலை களவே காமம் பொருள்நசை
இவ்வகை ஐந்தும் அடக்கியது யமம்”

“பெற்றதற்கு உவத்தல் பிழம்புநனி வெறுத்தல்
கற்பன கற்றல் கழிகடுந் தூய்மை
பூசனைப் பெரும்பயம் ஆசாற்கு ஆளித்தலொடு
நயனுடை மரபின் இயமம் ஐந்தே”

“நிற்றல் இருத்தல் கிடத்தல் நடத்தல் என்று
ஒத்த நான்கின் ஒல்கா நிலைமையோடு
இன்பம் பயக்கும் சமயம் முதலிய
அந்தமில் சிறப்பின் ஆசனமாகும்.”

“உந்தியொடு புணர்ந்த இருவகை வளியும்
தம்தம் இயக்கம் தடுப்பது வளிநிலை.”

“பொறியுணர்வு எல்லாம் புலத்தின் வழாமல்
ஒருவழிப் படுப்பது தொகைநிலையாமே.”

“மனத்தினை ஒருவழி நிறுப்பது பொறைநிலை.”

“நிறுத்திய அம்மன நிலை திரியாமல்
குறித்த பொருளொடு கொளுத்தல் நினைவே.”

“ஆங்கனம் குறித்த வாய்முதற் பொருளொடு
தான் பிறனாகாத் தகையது சமாதி.”

என்னும் உரைச்சூத்திரங்களா னுணர்க.

*****

(ஜடாயு தனது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியது)

12 Replies to “அறிவனும் தாபதரும் தமிழ் யோக மரபும்”

  1. ஸ்வாமின் !!!
    /***இது, எளிய தமிழ்ச் சொற்களுக்குக் கூட கடினமான சம்ஸ்கிருத பதங்களை வலிந்து புகுத்திப் பயன்படுத்தும் வைணவ உரைகளின் மணிப்பிரவாள நடைக்கு நேர் எதிர்த்திசையில் உள்ளது.***/

    முதலில் தேவரீர் 18 வித்யா ஸ்தானங்கள் பற்றியும் அவற்றை எப்படி தமிழ்படுத்துவது பற்றியும் யோசியும் .
    4 வேதங்கள் (ரிக் ,யஜுஸ் ,ஸாம ,அதர்வணம் )
    6 அங்கங்கள் (ஸீக்ஷா ,வ்யாகரணம் ,சந்தஸ் ,நிருக்தம் ,கல்பம் ,ஜ்யோதிஷம் )
    4 உபாங்கங்கள் (நியாயம்(தர்க்கம்),மீமாம்சை,தர்மம்(ஸ்ம்ருதி) ,புராணம் (சதகோடி ராமாயணம்) மற்றும்
    4 உபவேதங்கள் (ஆயுர்வேதம் ,தனுர்வேதம் ,கந்தர்வ வேதம்,அர்த்தசாஸ்திரம் ).

    இவற்றுள் தர்க்க ஸாஸ்திரம் கொண்டு ஸ்ரீமத் உதயணாச்சார்யாரும் , மீமாம்சை ஸாஸ்திர உதவியினால் குமாரிலபட்டரும் -4 பெளத்த மதங்களை (ஸ்ரௌத்ராந்திகம், வைபாஷிகம் ,யோகசாரம் ,மாத்யமிகம்) நம் பாரத நாட்டிலிருந்து துடைத்து ஒழித்திட்டார்கள்.

    மீமாம்ஸா மற்றும் நிருக்தம் நம் தமிழிலே உண்டோ?

    ஜீவாத்மா ,பரமாத்மா ,தர்மம் முதலிய அதிருஷ்டமான ப்ரமேயங்களை பற்றி விவாதிக்க வடமொழிதான் எளியது .

    மேற்கண்ட சாஸ்திரங்களை தமிழிலே ஆக்கியது ஆழ்வார்களே !
    (நம்மாழ்வார் 4 வேதங்களும் ,திருமங்கையாழ்வார் 6 அங்கங்களும் ,மற்ற உபாங்க /உபவேதங்களை முதலாயிரத்திலும் யாத்துள்ளனர் )

    உதாரணம் : தமிழ் அறியாத ஒரு ஜெர்மானியனால் எவ்வாறு சிலப்பதிகாரத்தை மொழிபெயர்க்க இயலும் ? மேலும் வடமொழி அறியாமல்தான் கம்பர் வால்மீகிராமாயணத்தை மொழிபெயர்த்தாரா?

    ஆங்கிலத்தில் பயின்ற மருத்துவரோ ,பொறியாளரோ தனது துறை சார்ந்த விஷயங்களில் ஆங்கிலத்தில் விவாதிப்பதுதான் எளிது .

    அதேபோலவே வைணவ ஆச்சார்யர்கள் தமது வ்யாக்யானங்களை தமிழ் மற்றும் வடமொழியிலே அருளிச்செய்தனர் .அவற்றுள் வடமொழி பிரமாணங்கள் வரிக்கு வரி காணக் கிடைக்கும் .
    வைணவ மரபிற்கே “உபய வேதாந்தம்” அதாவது இரண்டு மொழிகளில் வேதாந்தம் என்றே சிறப்புப்பெயர் விளங்குகின்றது . வால்மீகி ராமாயணமும் திருவாய்மொழியும் அதன் இருகரைகளாம். நீவிர் என்னதான் தமிழ்ப்படுத்தினாலும் வால்மீகி ராமாயணத்திலே காணும்
    “பால்யாத் ப்ரப்ருதி ஸுஸ்நிக்தோ லக்ஷ்மனோ லக்ஷ்மிவர்தன: |
    ராமஸ்ய லோகராமஸ்ய பிராது: ஜ்யேஷ்டஸ்ய நித்யாச:||

    என்னும் ரஸம்/பாவனை காட்ட இயலாது .

    ஆனால் அதே சமயத்தில் நீவிர் என்னதான் முயன்றாலும்
    “சென்றால் குடையாம் இருந்தால் சிங்காதனமாம்
    நின்றால் மரவடியாம் நீள்கடலுள் என்றும் புணையாம்
    அணிவிளக்காம் பூம்பட்டாம் புல்கும்
    அணையாம் திருமாற் கரவு” என்னும் ரஸம்/பாவனை வடமொழியில் காட்ட இயலாது .

    (குறிப்பு : #1.தொல்காப்பியரே ஐந்திர வ்யாகரணம் பயின்று பின்னர் இலக்கணம் வகுத்தார் .
    -தெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்)
    https://www.kamakoti.org/tamil/Kural73.htm
    “நவ வியாகரணங்களில் ஒன்று “ஐந்திரம்” – இந்திரனால் செய்யப்பட்டதால் இப்படிப் பெயர். தமிழ் இலக்கணத்துக்கு மூலமான “தொல்காப்பியம்” இந்த ஐந்திரத்தை மூலமாகக் கொண்டு அந்த வழியிலேயே செய்தது என்று சொல்லப்பட்டிருக்கிறது.”
    #2. மேலும் பகுதி ,விகுதி பற்றிய காஞ்சி முனிவரின் விளக்கம் பாரீர் —
    https://www.kamakoti.org/tamil/Kural74.htm

    #3. வைணவ உரைகாரர்கள் –
    தமிழ்த்தாத்தா உ.வே.சா எழுதிய நல்லுரைக் கோவையிலிருந்து ,
    மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையின் மாணாக்கரும் ,
    உ.வே.சா வின் நலம்விரும்பி , (அதாவது கும்பகோணம் கலாசாலை பேராசிரியர் பதவியிலிருந்து ஓய்வு பெற்று அப்பதவியினை உ.வே.சா வுக்கு நல்கிய) தியாகராய செட்டியார் சொன்னதை சற்றே வாசியும் .
    https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0442.html
    )
    ஜடாயு என்று வ்யபதேசிக்கப்படும் உமக்கு வால்மீகி ராமாயணத்தின் ரஸம் தெரியாமல் போனது ஏனோ !!
    இவண்
    கணேசு

  2. கெனீசு ஐயா, கட்டுரையாசிரியர் கூறியது என்ன என்பதை முழுதாகப் படிக்கவும்

    // இயமம், நியமம், ஆசனம், சமாதி ஆகிய எளிய சம்ஸ்கிருதச் சொற்களை அவ்வாறே கூறி, மற்றவற்றிற்கு வளிநிலை (பிராணாயாமம்), பொறைநிலை (பிரத்யாஹாரம்), நினைதல் (தியானம்) ஆகிய தூய தமிழ்ச் சொற்களை உருவாக்கிப் பயன்படுத்துவது நோக்குதற்குரியது. இது, எளிய தமிழ்ச் சொற்களுக்குக் கூட கடினமான சம்ஸ்கிருத பதங்களை வலிந்து புகுத்திப் பயன்படுத்தும் வைணவ உரைகளின் மணிப்பிரவாள நடைக்கு நேர் எதிர்த்திசையில் உள்ளது //

    அவர் கொடுத்துள்ள உதாரணத்திலேயே வடமொழிச் சொற்கள் உள்ளதைக் கவனிக்கவும். வடமொழிச் சொற்களைப் பயன்படுத்துவதும் மணிப்பிரவாள நடையும் *தவறு* என்று அவர் கூறவில்லை. “எளிய தமிழ்ச்சொற்களுக்குக் கூட” என்று தான் கூறுகிறார்.

    பரிமேலழகர், அடியார்க்கு நல்லார், நச்சினார்க்கினியர் போன்ற உரையாசிரியர்களும் வடமொழி, தென்மொழி இரண்டிலும் பெரும்புலமை வாய்ந்தவர்கள் தான். வேதங்களையும் வடமொழியில் உள்ள சாத்திரங்களையும் கற்றவர்கள் தான். ஆனால் அவர்களது உரைகளுக்கும் பெரியவாச்சான் பிள்ளையுடையது போன்ற வைணவ உரைகளுக்கும் உள்ள வேறுபாடு என்ன என்றால் இது தான். இது ஒரு முக்கியமான observation. இதைக் கட்டுரையாசிரியர் சுட்டிக் காட்டியிருக்கிறார் – அவ்வளவு தான். தத்துவச் சொற்களுக்கு வடமொழிப் பதங்களைப் பயன்படுத்துவதில் பிரசினையில்லை – சைவசித்தாந்த விளக்கங்களில் கூட அது மிகுதியும் உண்டு. ஆனால் தேவையே இல்லாத இடங்களில் கூட வைணவ உரையாசிரியர்கள் வடமொழியை வலிந்து பயன்படுத்துகிறார்கள் என்பது சரிதான். “ஜடாயு என்று வ்யபதேசிக்கப்படும் உமக்கு” என்று நீங்கள் இங்கு எழுதுவதே அதைக் காட்டுகிறதே – இங்கு எதற்கு அந்த வடசொல்? இதைத் தமிழில் கூறமுடியாதா என்ன?

    இந்த எளிய விஷயத்தைக் கவனிக்காமல் வளவளவென்று மேதாவித்தனமாக உங்களுக்குத் தான் பெரிய பாண்டித்தியம் இருக்கிறது என்பது போல எழுதிக் கொண்டே போகிறீர்கள் 🙁

  3. முடிக்கும் போது கணேசு என்று எழுதியுள்ளார் – ஆரம்பிக்கும்போது
    கெனேசு என்கிறார். பெயரிலேயே எது சரி எது பிழை என்று தெரியவில்லை.

  4. முடிக்கும்போது எழுத்துவடிவம், தொடங்கும்போது பேச்சு வடிவம். எனவே அப்படி எழுதுகிறார் என்பது என் துணிபு.

  5. அன்பார்ந்த சகோதரர் சக்திவேல் அவர்களுக்கு,

    /***
    சக்திவேல் on October 28, 2016 at 8:21 am
    இந்த எளிய விஷயத்தைக் கவனிக்காமல் வளவளவென்று மேதாவித்தனமாக உங்களுக்குத் தான் பெரிய பாண்டித்தியம் இருக்கிறது என்பது போல எழுதிக் கொண்டே போகிறீர்கள்.
    ***/
    இன்றைக்கு சற்றொப்ப 8 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ் திரைப்படங்களில், நகைச்சுவைத்துறையில் கொடிகட்டிப் பறந்தவர் அண்ணன் வைகைப்புயல் வடிவேலு அவர்கள் . அவரது வசனங்களில் -இன்று திரைப்படங்களும் வெளியாகும் அற்புத நிகழ்வு வேறு யாருக்கும் கிட்டவில்லை . எடுத்துக்காட்டாக “1)நானும் ரவுடி தான் “,2)”வருத்தப்படாத வாலிபர் சங்கம் ” ,போன்றன .

    அவரது வசனங்களை பேசாத தமிழர்களே இல்லை எனலாம் . எடுத்துக்காட்டாக -1) “அவனா நீஈஈ “, 2) “வந்துட்டாய்ங்கய்யா..வந்துட்டாய்ங்கய்யா” 3) “ஆட்டைய போட்டாய்ங்க” ,4)”பார்ரா!! “,5)ஸ்ஸ்ஸ் நேக் பாபு “,6) வை பிளட்? ஓ சேம் பிளட் !!” ,7) “எடு வண்டிய ” – போன்றன. இன்றும் ,பெங்களூரில் ,எங்கள் மென்பொருள் அலுவலகத்திலும் – மதுரை வாசத்துடன் -அவரது வசனம் பேசியே காலந்தள்ளும் பலருண்டு.
    முன்பு மக்கள் திலகம், புரட்சித்தலைவர், எங்கள் தங்கம் ,இதயக்கனி ,முதல்வர் எம்ஜியார் பாடிய திரைப்படப் பாடல்களுக்கும் இவ்வாறுதான் மவுசு இருந்தது .

    அது போலத்தான் வைணவரும்.
    “அடியேன் சிறிய ஞானத்தன் ” .[நான் ஒண்ணுமே படிக்கவில்லைங்ன்னா . ஏதோ நுனிப்புல் மேய்ஞ்சவனுங்கோவ்… ]
    அடியேன் சார்ந்த ” -தீதில் நன்னெறியாம் திருமால் நெறியையும்”, [எனது ராமபிரானை , வைணவ மதத்தினை மற்றும் ]
    “தாளும் தடக்கையும் கூப்பிப் பணியும் அவனது அடியாரையும் ” [அவனது தாஸர்களை ]
    “கேட்பார் செவிசுடு கீழ்மை வசவுகளே வைகையில் ” [மத்தவங்க மட்டம் தட்டி பேசுகையில்]
    “ஆங்கு ஆரவாரம் அது கேட்டு, அழலுமிழும் பூங்கார் அரவாகின்றேன் . ” [ஆதிசேஷ பாம்புபோல கோவம் வருதுங்கோவ் ]

    “நான் ஒண்ணுமே படிக்கவில்லைங்ன்னா . ஏதோ நுனிப்புல் மேய்ஞ்சவனுங்கோவ். இருந்தாலும், எனது ராமபிரானை , வைணவ மதத்தினை மற்றும் அவனது தாஸர்களை மத்தவங்க மட்டம் தட்டி பேசுகையில் ஆதிசேஷ பாம்புபோல கோவம் வருதுங்கோவ்”–என்னும் இது ஒரு மிக மலிவான(சாதாரண ) சொற்றோடர் .
    இதையே 1)அடியேன் சிறிய ஞானத்தன்– திருவாய்மொழி ;2)தீதில் நன்னெறியாம் -பெருமாள் திருமொழி ,3)தாளும் தடக்கையும் கூப்பிப் பணியும் -திருவாய்மொழி;4)கேட்பார் செவிசுடு கீழ்மை வசவுகளே-திருவாய்மொழி; 5)ஆங்கு ஆரவாரம் அது கேட்டு, அழலுமிழும்-நான்முகன் திருவந்தாதி என்று நாலாயிர திவ்ய பிரபந்த வரிகளாலேயே சொல் தொடராக்கி பேசுவது என்பது வைணவ காலக்ஷேபம்/லீலாரஸம் ஆகும் .(பொழுதுபோக்கு) .[கால:=>பொழுது – க்ஷேப:=> போக்குவது/ லீலா-விளையாட்டு ;ரஸம் -போகம் ;வேடிக்கை]

    வைணவ மாத இதழ்களான “துவளில் மணிமாடம் “, “வெள்ளைச் சுரிசங்கு “,”சுதர்சனம் “,”பாஞ்சசன்னியம் “,”கீதாச்சார்யன் ” ,இன்னும் பிற ,…போன்றவவற்றில் கட்டுரைகள் இப்படித்தான் காணப்படும் .
    நாலாயிரம் அருளிச்செயலினை மனப்பாடமாக சேவிக்காத வைணவரே ஒரு 50 ஆண்டுகளுக்கு முன்னர் காண்பது அரிதாய் இருந்தது . தமிழ்த்தாத்தா உ.வே.சா “என் சரிதம்” என்னும் நூலிலே அதைக் குறிப்பிடுகின்றார். [ஆனால் ,இன்றைய நிலை வேறு.]

    இதுவே ஒரு நூறு ஆண்டுகளுக்கு முன்னர் வால்மீகி ராமாயணம் பேசி காலங்கழித்தனர் .அதன் பெருமையைக் கண்டவாறே அன்றோ சோழனும் கம்பர் மூலமாக அதனை மொழிபெயர்த்தது .வேறு எந்த இலக்கியத்திற்கும் இந்த சிறப்பு கிடையாது .

    1.) “உங்க ரெண்டு பேருக்கும் எப்படி பழக்கம் உண்டாச்சு ?” – வாநராணாம் நராநாஞ்ச கதமாஸீத் ஸமாகம:(ஸீதை அனுமனிடம் கேட்டது )
    2.) “அவன் சின்ன வயசுலேருந்தே கமலஹாசன் ரசிகன் ” – “பால்யாத் ப்ரப்ருதி ஸுஸ்நிக்தோ லக்ஷ்மணோ லக்ஷ்மீ ஸம்பந்ந:”(பாலகாண்டத்தில் இலக்குவன் அறிமுகம்)
    3) “ரஜினிகாந்த்திடம் காணும் குணங்களால், கவரப்பட்டு இவன் ரஜினி ரசிகன் [அஹம் அஸ்ய அவரோ ப்ராதா குணைர் தாஸ்யம் உபாகத:-அனுமனிடம் இலக்குவன் -ராமகுணங்களை சொன்னது ]
    4) உனக்கு என்மீது ஏன் இவ்வளவு கோபம் ?[கிம் கோபமூலம் மநுஜேந்த்ர புத்ர: – தாரை இலக்குவனிடம் கேட்டது ]
    5) அவன் மாமா வீட்டிற்கு செல்கின்றான் [கச்சதா மாதுலகுலம் பரதேந ததாநக:- சத்ருக்னன் கேகய தேசம் ஏகுதல் ] … என்றித்யாதி… இத்யாதி.
    ஆக மொத்தம் வைணவருக்கு பொழுபோக்கும் கூட வால்மீகி ராமாயணம் , விஷ்ணுபுராணம் மற்றும் நாலாயிரம்தான் .
    ஒரு 500 ஆண்டுகளுக்கு முன்னர் தர்க்கம் ,மீமாம்சை ,நிருக்தம் ,ஸ்ம்ருதி என்று வடமொழியிலே மிகச் சாதாரணமாக உரையாடிய காலமும் உண்டு .

    நாலாயிர திவ்ய பிரபந்த உரைகள் எதுவுமே தமிழில் கிடையா .தமிழில் வெண்பா (இயற்சீர் வெண்டளை ,வெண்சீர் வெண்டளை ) போன்று
    16 சொற்கள் கொண்டு கோர்ப்பது அனுஷ்டுப் சந்தஸ் .இதனை ஒரு சுலோகம் (எ) கிரந்தம் என்பர் .
    இதுபோல 6000 கிரந்த அளவு கொண்டது பராசர ரிஷி அருளிய விஷ்ணுபுராணம் . அதற்கு நிகராக திருவாய்மொழி உரையினை திருக்குருகூர் பிரான் பிள்ளான் என்னும் ஆசாரியர் செய்த வ்யாக்யானமே “ஆறாயிரப்படி” ஆகும் .

    9000 கிரந்த அளவு கொண்டது ஸ்ரீமத் ராமானுஜர் அருளிய ஸ்ரீபாஷ்யம்(ப்ரம்ம சூத்திரம் ). அதற்கு நிகராக திருவாய்மொழி உரையினை நஞ்சீயர் என்னும் ஆசாரியர் செய்த வ்யாக்யானமே “ஒன்பதினாயிரப்படி” ஆகும் .

    24000 கிரந்த அளவு கொண்டது வால்மீகி ரிஷி அருளிய ராமாயணம் .அதற்கு நிகராக திருவாய்மொழி உரையினை பெரியவாச்சான் பிள்ளை என்னும் ஆசாரியர் செய்த வ்யாக்யானமே “இருபத்துநாலாயிரப்படி” ஆகும் .

    36000 கிரந்த அளவு கொண்டது ஸுதர்சன சூரி அருளிய ச்ருதப்ரகாசிகை(ப்ரம்ம சூத்திரம் ).அதற்கு நிகராக திருவாய்மொழி உரையினை வடக்குத் திருவீதிப் பிள்ளை என்னும் ஆசாரியர் செய்த வ்யாக்யானமே ” ஈடு முப்பத்தாறாயிரப்படி ” ஆகும் .

    9000 கிரந்த அளவு கொண்டது சுக ரிஷி அருளிய ஸ்ரீமத் பாகவதம். அதற்கு நிகராக திருவாய்மொழி உரையினை அழகிய மணவாள சீயர் என்னும் ஆசாரியர் செய்த வ்யாக்யானமே ” பன்னீராயிரப்படி ” ஆகும் .

    4 வேதம் அதன் 6 அங்கங்கள் மற்றும் உபாங்கங்களான தர்க்கம் ,மீமாம்சை ,புராணம் ,தர்மம் என்னும் வித்யைகளில் நசையின்றி ,வடமொழி மற்றும் தமிழறிவில்லாமல் எவரும் இதன் நிழலைக் கூட அண்டுவது அருமையாம் . இதைத்தான் “அவன் அருளாலே அவன் தாள் வணங்கி ” என்று மாணிக்கவாசகரும் பகருகின்றார் . “இசைவித்து உன்தாளிணைக்கீழ் இருத்தும் அம்மானே” – என்று நம்மாழ்வாரும் பாடினார்.

    வால்மீகி ராமாயணம் ,நாலாயிரம் இவற்றை கண்ட பாடமாகப் பயில வைப்பது இதன் தாத்பரியம் .

    இதைப்போலத்தான் …வைணவ உரைகளும் . யாரும் எளிய தமிச்சொற்களுக்கு வலிய வடசொல் புகுத்தி எழுதவில்லை .அவை முழுமையும் வால்மீகி ராமாயணம் மற்றும் நாலாயிரம் செப்பும் பித்தர்களுக்காம் ,ராம பக்தர்களுக்காம் . நாலாயிரதத்திலே அடிக்கு அடி தவறாமல் ராமாயண இடஞ்சுட்டி பொருள் விளக்கம் வரும் .

    மக்கள் திலகத்தின் திரைப்படத்தினை பலநூறு முறை காண்பது போல வைணவரும் வால்மீகி இராமாயண சுலோகங்களில் பல நூறுகளை மனப்பாடமாக அறிவர்/சொல்லிக் களிப்பர் .

    தமிழிலே உரையாடுவதுபோலவே வடமொழியிலும் உரையாடுவர்.

    அயோத்யா (அதாவது வைகுந்தநாடு ) என்றால் யுத்தத்திலே வெல்ல முடியாதது என்று பொருள் .இது அவனது கலைகளுக்குமாம் .
    அந்த பித்தர்களுக்கு மட்டுமே ராமனும் பக்தனாகின்றான் .
    அன்புடன்
    கெனேசு

  6. மதிப்பிற்குரிய கெனீசு / கணேசு அவர்களுக்கு,

    தாங்கள் உண்மையிலேயே பெரும் பண்டிதர் என்பதனைத் தங்களது மறுமொழியில் உள்ள மேற்கோள்களே காட்டி நிற்கின்றன. எனது முந்தைய மறுமொழி தமிழ்ப் பற்றினால் எழுதப் பட்டதேயன்றி, தங்களைப் புண்படுத்தும் நோக்கில் அல்ல. ஏதேனும் பிழையிருந்தால் மன்னிக்கவும்.

    தங்களது கீழ்க்கண்ட விளக்கம் தெளிவாகவும் ஏற்றுக் கொள்ளும் வகையிலும் இருக்கிறது. மிக்க நன்றி.

    // இதைப்போலத்தான் …வைணவ உரைகளும் . யாரும் எளிய தமிச்சொற்களுக்கு வலிய வடசொல் புகுத்தி எழுதவில்லை .அவை முழுமையும் வால்மீகி ராமாயணம் மற்றும் நாலாயிரம் செப்பும் பித்தர்களுக்காம் ,ராம பக்தர்களுக்காம் . நாலாயிரதத்திலே அடிக்கு அடி தவறாமல் ராமாயண இடஞ்சுட்டி பொருள் விளக்கம் வரும் .மக்கள் திலகத்தின் திரைப்படத்தினை பலநூறு முறை காண்பது போல வைணவரும் வால்மீகி இராமாயண சுலோகங்களில் பல நூறுகளை மனப்பாடமாக அறிவர்/சொல்லிக் களிப்பர் . தமிழிலே உரையாடுவதுபோலவே வடமொழியிலும் உரையாடுவர் //

  7. மதிப்பிற்குரிய சக்திவேல் அவர்களுக்கு,

    அடியேன் சிறிய ஞானத்தன் ! ராமானுஜ தாசன் !

    தேவரீர் எழுதிய மறுப்புரைக்கு மிக்க நன்றி(க்ருதக்ஞதை) .
    அதில் அடியேன் எவ்வித பிழையும் காண்கின்றிலேன் . பிழை இருந்தாலே அன்றோ நீவிர் வருந்துவது தகும் .
    நீவிர் க்ஷமாபாநம்(மன்னிப்பு) வாங்க வேண்டுமாபோலே ஒன்றும் நிகழ்ந்துவிடவில்லை .வருந்த வேண்டா!!! அதற்கு அதிகாரி அடியேனும் அல்ல.ஏதோ நுனிப்புல் மேய்பவன். பெங்களூர் மென்பொருள் அலுவலகமென்னும் ஸம்ஸார சேற்றில் உழலும் ஒரு புழுவுமாவேன்.
    ஏதோ நன்னூல் ,புறப்பொருள் வெண்பாமாலை ,திவாகர நிகண்டு போன்ற நூற்களை சென்னை புத்தக கண்காட்சியிலே வாங்கினேனே ஒழிய அவற்றை மனனம் செய்தேனல்லேன். அடியேனும் வாழ்நாளில் ,தமிழில் ஒரே ஒரு வெண்பாவையாவது பாடவேண்டும் என்னும் பேரவாக் கொண்டவன் .
    கி.வா.ஜ எழுதிய “பாக்களை இயற்றுவது எப்படி ” என்னும் நூலும் அடியேனைப் பார்த்து தினமும் நகைக்கவே செய்கின்றது .பொழுதில்லை …பொழுதில்லை .
    இப்பொழுதும் உமது விடைகண்டு அடியேனுக்கு ராமாயண சுலோகமே மனதில் எழுகின்றது .
    “மா நிஷாத ப்ரதிஷ்டாம் த்வமகம ஶாஶ்வதீ ஸமா| யத் கிரௌஞ்ச மிதுனாத் ஏகம் அவதீ காம மோஹிதம் ||”

    ஒருநாள் ரிஷி வால்மீகி தனது சீடர் பரத்வாஜருடன் தமஸா நதி தீரத்திலே உலவி வரும் ஸமயம் ஒரு வேடன் இரு கிரௌஞ்ச பறவைகளில் ஒன்றனை அம்பெய்தி வீழ்த்தினான் .அதுகண்டு ரிஷி ஆந்ருஸம்ஸ்யம் (கொல்லாமை) மற்றும் காருண்யம் (கருணை ) என்னும் பாவனைகள் உந்தித்தள்ள ,அவ்வேடனை -“நீ பல்லாண்டு பிரதிஷ்டை (வீடு,மனைவி ,மக்கள் ) இழந்து தவிக்கக் கடவாய் ” என்று சபித்தே விட்டார் . அச்சாபமும் 16 வார்த்தைகள் கொண்ட அனுஷ்டுப் என்னும் சந்தஸ் (தளை) தனில் அமைந்தமை கண்டு வியந்தார் .
    நிஷாத => ஏ வேடனே
    காம மோஹிதம் =>காமங்கொண்டு விளையாடிய
    யத் கிரௌஞ்ச மிதுனாத் => இரு பறவைகளில்
    ஏகம் அவதீ => ஒன்றைக் கொன்றாய் .
    ஶாஶ்வதீ ஸமா => நீண்ட நெடு ஆண்டுகளுக்கு
    மா ப்ரதிஷ்டாம் த்வமகம => நீ நிலையான வாழ்க்கையை (-வீடு,மனைவி ,மக்கள் செல்வங்களை) அடைய மாட்டாயாக ! [மொத்தத்தில் நாசமா போ ]

    பிறகு ஆசிரமம் திரும்பிய அவர், தான் வெகுளாமை என்னும் அறத்திலிருந்து வழுவியமைக்கு வருந்தினார் . அவ்வமயம் பகவான் பிரம்மதேவர் அவ்விடம் பிரசன்னமாகி -” முனியே ! வருந்த வேண்டா ! கலைமகளை உன் நாவில் இருந்து பாடச் செய்தது நாமே யன்றோ ! “.
    பிறகு அச்சுலோகத்தின் பொருளை
    மாநிஷாத => ஏ திருமாலே (மா -திருமகள் ,நிஷாத -கேள்வன் )
    காம மோஹிதம் =>காமங்கொண்டு விளையாடிய
    யத் கிரௌஞ்ச மிதுனாத் => இரு பறவைகளில் (ராவணன் ,மண்டோதரி )
    ஏகம் அவதீ => ஒன்றைக் கொன்றாய் .
    ஶாஶ்வதீ ஸமா => நீண்ட நெடு ஆண்டுகளுக்கு
    ப்ரதிஷ்டாம் த்வமகம => நீ நிலையான வாழ்க்கையை (-வீடு,மனைவி ,மக்கள் போன்ற செல்வம்) அடைவாயாக! [மங்களோம் ….. மங்களோம் ….. ]

    என்று மாற்றினார் . இவ்வாறு நீவிர் 24000 கிரந்த அளவு கொண்டு சக்கரவர்த்தி திருமகனது காவியத்தை பாடும் என்று திவ்ய திருஷ்டி அளித்து வாழ்த்தினார் . அதுவே ராமாயணம் ஆகும். தேவரீரும் அடியேனை வெகுளச் செய்து வைணவ உரையாசிரியர்களைப் பற்றி சிறிது (கிஞ்சித் ) எழுத வைத்தீர் .
    அதற்காக உமக்கு அடியேன் தலையல்லால் கைம்மாறிலேனே !

    அன்புடன் ,
    கணேசு

  8. வைணவ உரைகள் இரு வகையினரால் இருவேறு காரணங்களால் எழுதப்பட்டவை.

    1. ஆச்சாரியர்கள் எனறழைக்கப்படும் வைணவப் பெரியோர்.
    2. இவர்களல்லாதோர்.

    இரண்டாமவர் எழுதிய உரைகளுக்குத் தமிழர் உரை எனப்பெயரிட்டு முன்னவரும் அவர் விரும்பிகளும் அழைத்தார்கள். அவற்றை வைணவர்கள் அடையாளங்காணவேண்டுமென்பதற்காக அப்பெயரிட்டனர்.

    முதலுரைகள் பொதுமக்களுக்காக எழுதப்படவில்லை. பொதுமக்களுள்ளும் பொது வைணவருக்காக எழுதப்படவில்லை. அவை வைணவத்தைக் கற்றுத்துறை போகி, பொதுமக்களிடையே பொதுத்தமிழில் விளக்குவோருக்காகவே எழுதப்பட்டன. அதாவது நஞீசீயரின் உரையையோ, அவர் சீடர் நம்பிள்ளையின் உரையையோ பொது வைணவர் படிக்கவியலாதபடி கடும் மணிப்பிரவாளத்தில் எழுதப்பட்டு. அதைக் கேட்டு, வாசித்து அதன் உட்பொருடகளை உயத்துண்ர்ந்து பின் மக்களிடம் எடுத்துச்செல்ல இரண்டாம் தட்டு வைணவப்பெரியோரிந்தனர். காலச்சேபங்கள் மூலமாக எடுத்துச்செல்லப்பட்டன. ஆச்சாரியர்கள் காலங்களில் காலச்சேபங்கள் பெருங்கோயிலுக்குள் நடந்தன. திரளான மக்கள் கூடினர். அவர்களுக்கு இவ்வுரைகளில் கண்ட உட்பொருட்களை மக்களுக்கு எடுத்துச்சொன்னார்கள்.மேலும் படிகள் எனவழைக்கப்படும் இவ்வுரைகளுக்கே வைணவர்கள் தெய்வத்தன்மையை எடுத்தியம்பும் வலிமை உண்டு எனத் தெளிவாக உறுதியான நம்பியதால்அவைகள் வைணவர்களிடையே சிற்ப்பிடம் பெற்றன. நாலாயிரத்திவ்ய பிரபந்தத்துக்கு உரைகள்தான் படிகள். மேலும் திரு கணேசு எடுத்துக்காட்டியது போல, இவ்வுரைகளே ஆழ்வார் பாசுரங்களை நால்வேத சாரமாக, ஆறங்கசாரமாகவும் காட்டுவதற்கு உதவின. வேதங்கள், இதிகாசஙக்ளிலிருந்து இவ்வுரைகள் எடுத்துக்காட்டி ஆழ்வார் சொன்னவையோடு இணைத்தன்.

    ‘தழிழர்’ உரைகள் தமிழ்ப்புலவர்களாலும் அறிஞர்களாலும் எழுதப்பட்டன. அவர்கள் எவராகவும் இருக்கலாம். அவ்வுரைகள் வைணவர்களால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. அவ்வுரைகள் ஏற்கனவே தூய தமிழில் இருந்த்வையாதலால், எடுத்தியம்ப வேண்டிய அவசியமுமில்லை. அவை ஆழ்வார்களின் பாடல்களை கவிதைகளாகவும் இலக்கிய நுணக்க்ங்களைக் கொண்டதாகவும் வேறுபலவற்றோடு சிறந்தவையாகவும் இருக்கின்றன எனக்காட்ட எழுதப்பட்டவையாதலால். வைண்வ நெறிக்கு எதிரானவை. இன்னெறியில் ஆழ்வார் பாசுர்ங்கள் இலக்கியமாகப் பார்த்தலும் அதன் மொழியழகை வியத்தலும் அபச்சாரமாகும். முழுக்க முழுக்க தெய்வப்பனுவல். பெருமாளை நோக்கி கொண்டு செல்லத்தான் ஆழ்வார்கள் சிரமப்பட்டார்கள்; தமிழ் இலக்கிய அழகுலகத்துக்கன்று. தேவாரம் படிக்காமலும் சிவபக்தராக இருக்கலாம். ஆனால் ஆழ்வார் பாசுரங்கள் தெரியாமலும் அவற்றை பூசனையின் போது ஓதாமலும் இருந்தால் அவர் வைணவர் ஆக மாட்டார்.

    பிரச்சினை என்னவென்றால் வைண்வரல்லாதோருக்கும் பெருமாள் பக்தி இருககும். ஆழ்வார்களின் பக்தியை அறியவும் பெருமாள் பக்தியைப் பெருக்கவும் படிக்கலாம். ஆனால், அவர்கள் திவ்ய பிரபந்தத்தை இலக்கியமாக அணுகிக்கொண்டே இருப்பர். முஷியாராவில் கேட்போர் ஆகா…ஓகோ என்று இலக்கிய இன்பத்தை வெளிப்படுத்தவேண்டியது ஒரு முறை. அதைப்போல. இப்படிச் செய்வது வைணவ்ரல்லாதோரைப் பொறுத்தமட்டில் அபச்சாரமாகாது.

    இன்று இவர்தான் வைண்வப்பேருரைகாரர்களான ஆச்சாரியர்களின் படிகளை குறை சொல்கிறார். அல்லது மணிப்பிரவாளத்தில் மூடிவிட்டனர்; அல்லது தூய தமிழ்ச்சொற்களிருக்க, வலிந்து வடமொழிச்சொற்களை திணித்துவிடுகிறார்கள் இவ்வாச்சாரியர்கள் என்கிறார்கள். இப்படிகள் எல்லாரும் படிப்பதற்காக எழுதப்படவில்லையென்றறிந்தால், இவ்வாதங்கம் எழாது.

    ”தமிழர்” உரைகள் இன்று அழிந்துபட்டன சீந்துவாரில்லாததால்.

  9. ஆண்டாளின் பாசுரங்களின் தன்னைமறந்து, திருப்பாவை ஜீயர் என்று பட்டம் பெற்ற இராமனுஜர் ஆழ்வார்கள் பாடல்களுக்குத் தெய்வத்தை ஈர்க்கும் தன்மை (அதாவது அப்பாடல்களின் மையலில் பெருமாள் விழுந்துகிடப்பார்) என்று சொன்ன இராமானுஜர் அப்பாடல்களை வைணவ ஆராதனையில் கட்டாயமாக்கினார். பெருமாள் ஊர்வலம் செல்லும்போது அவரின் முன்னால் பிரபந்தக்கோஷடி என அழைக்கப்படும் பாசுரங்கள் ஓதுவார்கள் செல்வர். வைணவத் திவ்ய தேசங்கள் (மலை நாட்டுததேசங்கள் தவிர்த்து) அனைத்திலும் காணலாம். இக்காலத்தில் கோயிற்சுவரில் எழுதி – வரும் பக்தர்கள் வாசித்து அனுபவிக்கும்படி போடுகின்றார்கள். இப்படிப்பட்ட இராமானுஜரிடம் சீடர்: ”ஏன் சுவாமி, நீங்கள் ஆழ்வாருக்கு உரை எழுதுங்களேன்?” என்று கேட்டார். குரு சொன்னார்: அப்படி நான் செய்தால் என்ன நடக்கும்? என்னை விட பெரியோர்கள் எழுதிய பேருரைகளை விட்டு எல்லாரும் என் உரையைப் படித்து நின்று விடுவார்கள். அப்பேருரைகள் சொல்லப்பட்டவைகளின் சிறப்புகளை உலகத்தோரிடமிருந்து நான் பிரிக்க வேண்டுமா? வேண்டவே வேண்டாம்’ என்று உரை எழுதாமல் விட்டார். இதை இங்கே சொல்லக்காரணம் இராமனுஜர் சொன்னதை தெரியவேண்டுமென்பதற்காக அன்று. வைணவப்பேருரைகாரர்கள் உன்னதமும் உயர்வும் உலகுக்கறிவிக்கவே.

    வைணவப்பேருரைகாரர்கள் (ஆச்சாரியார்கள். திரு கணேசின் பதிலிலிருந்து அவர்களைப்பற்றி ஓரளவு தெரியலாம் நீங்கள்) வடமொழியை விரவினார்கள் என்று அங்கலாய்ப்பவர்கள் ஒன்று தெரியவேண்டும். ஆழ்வார்களின் பாசுரங்களை வாசித்து நன்கறிந்து உட்பொருட்களை வெளிக்கொணர மிகவும் இன்றியமையாத தகுதி என்னவென்றில் ஆழ்ந்த தமிழ்ப்புலமை. எளிதாக எவராலும் செய்ய முடியாது. ஆழ்வார்கள் தமிழ் மொழி, அதன் பண்டைச்சிறப்பு, பழந்தமிழ் இலக்கணம் இலக்கியங்களைக் கற்றவர்கள். எனவே அவர்கள் பாடல்கள் மேலோட்டமாகப் படித்துவிட முடியாதபடி குணங்கள் கொண்டவை. வைணவப்பேருரைகாரகள் வடமொழியை விரவினார்கள் என்று மட்டும் சொல்லமுடியாது. ஒரு சிறு சொல்லுக்குக் கூட அவர்கள் ”இன்டர்பிரட்டேஷன்” மலைக்கவைக்கும். அச்சொல்லின் தொடக்கம், வழி, சிறப்பு தெரியாமல் ஆழ்வார்கள் பயன்படுத்தியிருக்க முடியாது. அதைத்தேடிக்கண்டு நமக்கு அச்சிறப்பைச்சொல்லும் பேருரைகாரர்களுக்கு ஆழ்ந்த தமிழ்ப்புலமையில்லாமல் முடியாது.

    இப்பேருரைகாரர்கள் தெய்வத்தன்மை அவர்கள் வாழ்க்கை வரலாறுகளிலிருந்து அறியலாம். அன் இம்பீச்சபல் இன்டக்ரிட்டி என்பார்களே ஆங்கிலத்தில் அப்படிப்பட்ட குணங்களைக்கொண்டோரிவர்கள். எடுத்துக்காட்டாக, நம்பிள்ளையின் சரிதத்தை தேடிப்படியுங்கள். சாதி, இன, ஏழை, பணக்காரன், உயர்ந்தோர், தாழ்ந்தோர் என்ற் வேறுபாடுகளை வெறுத்துக்கடந்தோரிவர்கள். புகழுக்காகவும் பெருமைக்காகவும், அல்லது ஆயிரமாண்டுகளுக்கு பின் நம்மைப்பற்றி இங்கொருவன் எழுதுவான் என்றும் நினைத்தெல்லாம் இவர்கள் எழுதவில்லை. வைணவத்தில் கைங்கரியம் என்றொரு சொல் பரவலானது. அதற்குப் பொருளைத்தேட அகராதிகளில் அலையாதீர்கள். இவர்கள் செய்ததன் பெயரே அது. அளவிடமுடியாத கைங்கரியம்.

  10. அன்புடையீர் ,
    வணக்கம் !

    த்ராவிட சாஸ்திரி திரு.பரிதிமாற் கலைஞர் மற்றும் அவர் சீடர் திரு.மறைமலையடிகளாரை சீண்டிய – “வைணவ உரையாசிரியர்கள் பெருமை” என்னும் கட்டுரை கீழே கொடுக்கப்பட்டுள்ளது .

    எழுதியது :
    மகா மஹிமோபாத்தியாய தாக்ஷிணாத்ய கலாநிதி
    டாக்டர் உ.வே. சாமிநாதையரவர்கள்
    ஸ்ரீ தியாகராச விலாஸ் வெளியீடு
    1952, Kabeer printing Works, Chennai.
    நல்லுரைக் கோவை : நாலாம் பாகம்
    https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0442.html

    கட்டுரை எண் 12. வித்துவான் தியாகராச செட்டியார்
    திருச்சிராப்பள்ளியிலும் வேறு இடங்களிலும் சிரஸ்தேதாராகவும் டிப்டி கலெக்டராகவும் இருந்து விளங்கிய திரு. பட்டாபிராம பிள்ளையென்பவர் தமிழபிமானம் மிக்கவர்; தமிழ்ப்புலவர்களை ஆதரித்துப் பாதுகாக்கும் இயல்பினர்; மகா வித்துவான் ஸ்ரீ மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களை நன்கு அறிந்தவர்; ஸ்ரீதியாகராச செட்டியாரிடத்தில் மிக்க அன்பு பூண்டவர்; அறிவாளிகள் நிலையான காரியங்கள் செய்யவேண்டுமென்பது அவருடைய விருப்பம். திவ்யப் பிரபந்தங்களுக்குப் பெரியோர்களால் வடமொழி தென்மொழியிற் செய்யப்பெற்ற வியாக்கியானங்கள் இருப்பது போலத் தேவார திருவாசகங்களுக்கு இல்லையே யென்ற வருத்தம் அவருக்கு உண்டு. அதனால் சைவமடாதிபதிகளையும் சைவ வித்துவான்களையும் சந்திக்கும் பொழுதெல்லாம் திருமுறைகளுக்கு ஓர் உரை எழுதும்படி வற்புறுத்திக் கூறுவார். கேட்பவரிற் பெரும்பாலோர் இயன்றவரையில் உழைத்துப் பார்ப் போமென்றே விடை பகர்ந்து வந்தார்கள்.

    தியாகராச செட்டியார் உபகாரச்சம்பளம் பெற்றுத் திருவானைக்காவில் சில ஆண்டுகள் இருந்தபோது பட்டாபிராம்பிள்ளை அவர் வீட்டுக்கு அடிக்கடி சென்று பார்த்து வருவார். அப்பொழுது அவரைத் திருவாசகத்திற்கு உரை எழுதவேண்டுமென்று வற்புறுத்திக் கூறுவார். அன்றியும் அங்கங்கே நிகழும் கல்லியாணங்களை விசாரிக்கப்போன காலங்களிலும் மற்ற இடங்களுக்குச் சென்றிருந்த காலங்களிலும் அவரைச் சந்தித்தபோதெல்லாம் மேலும் மேலும் கூறுவார்; “எழுத ஆரம்பித்தீர்களா? எவ்வளவு ஆயிற்று?” என்று கேட்பார்; அருகிலுள்ள கனவான்களிடம், “இவரிடம் எவ்வளவு நாளாகச் சொல்லி வருகிறேன்; கேட்கமாட்டேனென்கிறாரே!” என்று சொல்லுவார்.

    ஒருநாள் செட்டியார் திருச்சிராப்பள்ளியிலுள்ள உறவினரொருவர் வீட்டில் நிகழ்ந்த ஒரு துக்கத்துக்காக அங்கே சென்று விசாரித்து நீராடி விட்டு ஈரத்துணியோடு மீண்டு காவிரி யாற்றுப் பாலத்தின்மேல் நடந்து வந்தார். அப்பொழுது நடுப்பகல் பன்னிரண்டு மணிநேரம். செட்டியார் வெயிலாலும் பசியாலும் மிகவும் களைப்படைந் திருந்தார்.

    அச்சமயம் பட்டாபிராம்பிள்ளை ஸ்ரீரங்கம் சென்று பெருமாளைத் தரிசனம் செய்து விட்டு மார்பிற் சந்தனம் விளங்க உத்ஸாகமாக எதிரே ஒரு வண்டியில் வந்தார். செட்டியாரைக் கண்டவுடன் அவர் வண்டியை நிறுத்திக் கீழே இறங்கினார், செட்டியாரை யணுகி க்ஷேம சமாசாரம் விசாரித்தபின்பு வழக்கம் போலவே திருவாசகவுரை எவ்வளவாயிற்றென்று கேட்டார்.

    நீண்டநாளாக இந்த விஷயத்தைப்பற்றி எவ்விடத்திலும் கேட்டு வந்ததனாலும், அப்பொழுது தமக்கு இருந்த தளர்ச்சியினாலும் செட்டியாருக்குக் கோபம் உண்டாயிற்று; “நீங்கள் கொஞ்சமாவது திருவாசகத்தின் பெருமையை அறிந்துகொள்ளவே யில்லை நென்று நிச்சயமாய்ச் சொல்லுகிறேன். அதற்கு என்னால் உரை எழுத முடியுமா? திருவாசகம் எவ்வளவு! என்னுடைய படிப்பு எவ்வளவு! அதற்கு உரையெழுத வேண்டுமென்றால் வேதம், உபநிஷதம், ஆகமங்கள், புராணங்கள், யோக சாஸ்திரங்கள் முதலியவை தெரிய வேண்டாமா? தமிழில் உள்ள இலக்கண இலக்கியங்களையும் சில சைவ சித்தாந்த சாஸ்திரங்களையுமே படித்த நான் எப்படி எழுத முடியும்?” என்றார்.

    பட்டாபிராம்பிள்ளை :- திவ்யப் பிரபந்தத்திற்கு அவர்கள் வியாக்கியானம் செய்ய வில்லையா?

    செட்டியார் :- என்ன ஐயா! உங்களுக்கு அவர்களுடைய படிப்பின் அளவு சிறிதேனும் தெரியாது போல் இருக்கிறது. அவர்கள் வடமொழி தென்மொழி இரண்டிலும் சிறந்த புலமையுடையவர்கள்; அவர்கள் உரையினாலல்லவா நூலின் பெருமை அதிகமாகின்றது? நான் உரை எழுதினால் திருவாசகத்திற்கு எவ்வளவு குறைவு உண்டாகுந் தெரியுமா? என்னுடைய உரையினால் அதற்குக் குறைவு ஏற்படவேண்டுமென்பது தங்கள் எண்ணமோ? எங்கே கண்டாலும் நச்சுநச்சென்று என் படிப்பின் அளவு தெரியாமல் திருவாசகத்துக்கு உரையெழுதும்படி சொல்லிச்சொல்லி என்னை வருத்துகின்றீர்கள். இனிமேலும் இப்படித் தொந்தரவு செய்வதாயிருந்தால், இதோ இந்தக் காவிரியில் இப்படியே பொத்தென்று விழுந்து என் உயிரை விட்டுவிடுவேன். பட்டாபிராம பிள்ளையவர்கள் திருவாசக்த்திற்கு உரையெழுதும்படி அடிக்கடி தொந்தரவு செய்ததனால் அந்தத் துன்பத்தைத் தாங்கமாட்டாமல், தியாகராச செட்டியார் ஆற்றில் விழுந்துவிட்டாரென்ற அபக்கியாதி உங்களுக்கு ஏற்படட்டும்.

    பட்டாபிராம பிள்ளை உடனே செட்டியாருடைய கைகளைப் பிடித்துக்கொண்டு, “ஐயா! ஐயா! வேண்டாமையா! இனிமேல் நான் இதைப்பற்றிக் கேட்பதே இல்லை ஐயா!” என்று சொல்லிச் சமாதானப் படுத்திவிட்டு அவருடைய அயர்ச்சியான நிலையை அறிந்து தம் வண்டியில் ஏற்றித் திருவானைக்காவிலுள்ள அவர் இருப்பிடத்தில் அவரை விட்டுவிட்டு மீண்டு திரிசிரபுரத்திலிருந்த தம்மிடம் சென்றார்.

    மணிப்பிரவாள நடையும் புளித்த த்ராக்ஷையும்

    அற்றைத் திங்கள் அந்நிலவில் கொற்றைப்பொய்கையாடிய நரியொன்று .
    அது கானகமெங்கும் திரிந்து சாற்றிக் கொண்டது பசியென்னும் பிணியொன்று .
    இரை தேடியலைகையில் அடைந்தது முடியரசனது பூங்காவொன்று.
    அக்காவினில் பூத்துக் குலுங்கின பழுத்த திராக்ஷ பழங்கள் அன்று.
    எனினும் கண்ணுக்கெட்டிய பழங்களொன்றும் வாய்க்கு எட்டாது என்று,
    மீண்டும் மீண்டும் கவ்விப் பிடிக்க உயரே தாவியது மந்தி போன்று.
    சீய்ச்சீ…சீய்ச்சீ …இந்தப் பழம் புளிக்குமென்று
    மதிகெட்டு கூவி ஓடியே மறைந்தது -என்பது பஞ்ச சீலக் கதைகளில் ஒன்று.

    இதில் கானகம் எது ? திராக்ஷை எது ? அதன் குணங்கள் யாவை ? நரி என்பவர் யார் ? அரசன் யார் ? பூங்கா எது? என்னும் புதிர்களை உங்கள் பார்வைக்கே விட்டு விடுகின்றேன் .

    (ரூம் போட்டு யோசிப்பாய்ங்களோ !!! )
    அன்புடன் ,
    கணேசு

  11. உடன்பிறப்பே ,
    வணக்கம் !

    வணிகர் ஒருவர் இருந்தாராம் ;பண்டங்களை சந்தையில் விற்பாராம்;
    பாரம் ஏற்றிச் சென்றாராம் ;வழியில் சாவடி கண்டாராம் ;
    சுங்கம் செலுத்த சுணங்கியே; மாற்று வழியில் கடக்கவே ;
    சாவடியினின்று கரந்து மறைந்து; அபிநவ வழிதனில் சென்றாராம் ;
    இரவினில் வழிதனை மறந்தாராம் ;நிசியினில் அலைந்து களைத்தாராம்;
    விடியலில் வழிதனை கண்டாராம் ;திரும்பவும் சாவடி அடைந்தாராம் ;
    சுங்கம்தனை நொந்து செலுத்தியே ;சந்தையை அடைந்தார் கடுகியே;
    அவர்தான் பரிதி மாற் கலைஞர் ; பரிதி என்பதும் வடசொல்லே;

    வடமொழியில் “பரி” என்பது உபசர்க்கங்களில் ஒன்று .
    உப => அருகில்; சர்க்கம் =>ஸ்ருஷ்டி செய்தல் .
    (வார்த்தைகளை ஸ்ருஷ்டி செய்யப் பயன்படுவது என்பதாம் )
    வ்யாகரண உபசர்க்கங்களில் “ப்ர, அவ ,பரி,வி ,ஆ ,அதி ,ஸு ,ஸம் ,அனு ,து ,நி ” என்று பலவுண்டு .

    ஆங்கிலத்தில் PREFIX என்பர் இதனை .
    For example : RE=>again; VIV=>to live
    Re என்பது உபசர்க்கம். VIV என்பது வினை.
    RE+VIV = REVIVE [restore to life or consciousness] என்பது கூட்டுச் சொல்.
    பரிதி என்னும் கூட்டுச் சொல்லில், “பரி” என்றால் வட்டமான ,சூழ்ந்த என்று பொருள் .
    பரிவாரம்=>சுற்றம் ,பரிஜனம் =>வேலையாட்கள் ;பரிசரம் => சுற்றுப்புறம் ;பரிபவம் =>அவமானம் [ஊருக்கே போஸ்டர் ஒட்றதுங்கோவ்] ,இத்யாதி ..இத்யாதி ….
    “தி” என்பது நெருப்பு ,ஞானம்,ஒளி என்று பொருள் பெறும் .
    எடுத்துக்காட்டு : திய: ய: ந ப்ரசோதயாத் -> காயத்ரி மந்திரத்தில் காணீரே !
    எனவே
    பரிதி என்றால் -> சூரியன் (வட்டமான ஒளி /நெருப்பு ) என்று பொருள் .

    பரிதி மால் கலைஞர் – இதில் மால் மற்றும் கலைஞர் மட்டுமே தமிழ்ச்சொற்கள். பரிதி என்பது வடசொல்லாம் .

    [பின்குறிப்பு : பரி என்றால் குதிரை என்று தமிழில் பொருளுண்டாம்]

    அடியேன் எழுதிய தமிழ்ப்பா பொருள் புரிந்ததோ?

    அன்புடன் ,
    கணேசு

  12. அன்பார்ந்த மக்களே ,

    திருக்குறளைத் திருத்தியவனும் நச்சினார்க்கினியரும்

    /***
    இயமம், நியமம், ஆசனம், சமாதி ஆகிய எளிய சம்ஸ்கிருதச் சொற்களை அவ்வாறே கூறி, மற்றவற்றிற்கு வளிநிலை (பிராணாயாமம்), பொறைநிலை (பிரத்யாஹாரம்), நினைதல் (தியானம்) ஆகிய தூய தமிழ்ச் சொற்களை உருவாக்கிப் பயன்படுத்துவது நோக்குதற்குரியது.
    ***/

    திரிசிபுரம் மகா வித்துவான் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் முதன்மை மாணாக்கரும், கும்பகோணம் காலேஜில் தமிழ்ப்பண்டிதராக இருந்து பெரும்புகழ்பெற்ற ஸ்ரீ சி. தியாகராச செட்டியார் பற்றி உ.வே.சா எழுதிய இரண்டாம் நிகழ்ச்சி .

    மகாமகோபாத்தியா தாக்ஷிணாத்ய கலாநிதி
    டாக்டர் உ.வே. சாமிநாதையரவர்கள் எழுதியது
    ஸ்ரீ தியாகராச விலாஸ் வெளியீடு
    1952, Kabeer printing Works, Chennai.
    நல்லுரைக் கோவை : நாலாம் பாகம்
    https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0442.html

    கட்டுரை எண் 12. இரண்டாம் நிகழ்ச்சி

    மதுரையிலிருந்து ஓர் ஐரோப்பியர் தமிழின்பால் விருப்பமுற்று ஒரு பண்டிதருடைய உதவிபெற்றுப் படித்து வந்தார். தமிழ்ச் செய்யுட்களுக்கு ஒருவாறு பொருள் தெரிந்து கொள்ளும் அறிவைப் பெற்றபின்பு தமிழில் மிகச் சிறப்பான நூல் யாதென்று விசாரித்தார்; திருக்குறள் ஒப்பற்ற நூலென்பதை அறிந்து அதனைப் படித்தார்; இலக்கண நூலையும் இடையிடையே பயின்று வந்தார்; போப்பையர் இலக்கணத்தைப் படித்தார்; பிறகு யாப்பிலக்கண வசனத்தைப் படித்து அசை, சீர், தளை, தொடை என்பவற்றை ஒருவகையாகத் தெரிந்துகொண்டார். அதனால் தாம் படித்த நூல்களிலுள்ள செய்யுட்களில் எதுகை மோனை சரியாக அமைந்திருக்கின்றனவாவென்று ஆராயத் தொடங்கினார்.

    ஒருசமயம், அவர், தாம் படித்துவந்த திருக்குறட் புத்தகத்தை எடுத்துத் திறந்தார்; திறந்த பக்கத்தில்,

    “தக்கார் தகவில ரென்ப தவரவ
    ரெச்சத்தாற் காணப் படும்”

    என்ற குறள் அவர் கண்ணிற்பட்டது. ‘இதில் எதுகை நன்றாக அமையவில்லையே’ என்று எண்ணினார். எச்சமென்பதற்கு மக்களென்பது பொருளென்று அறிந்துகொண்ட பிறகு, ‘ஏன் மக்களென்றே இதை மாற்றி விடக் கூடாது? அப்படிச் செய்தால் எதுகை அழகாக அமையுமே’ என்று எண்ணித் தம் புத்தகத்தில் அவ்வாறே திருத்திக்கொண்டார். திருக்குறளைத் திருத்திவிட்டோம் என்ற எண்ணத்தால் அவருக்கு மிக்க மகிழ்ச்சி உண்டாயிற்று.

    இப்படியே மேலும் மேலும் சில குறள்களைத் திருத்தினார்; தமக்குப் பாடஞ் சொல்லும் பண்டிதரிடம் இவற்றைக் காட்டி, “ஏன்? நான் செய்தது எப்படி? இப்போது இந்தச் செய்யுட்கள் முன்பிருந்ததைவிட அழகாக இல்லையா?” என்று கேட்டார். பண்டிதர் என்ன செய்வார்! அவர் கூறுவதை மறுத்தற்கு அஞ்சினார்; “நன்றாக இருக்கின்றன; ஆனால் தக்க பண்டிதர்களிடம் காட்டி, இப்படிச் செய்வது சரியாவென்று ஆராயவேண்டும்” என்றார்.

    ஐரோப்பியர்:- தாங்கள் பண்டிதரல்லவா?

    பண்டிதர்:_ நான் பண்டிதனானாலும் உங்களைச் சேர்ந்தவனாதலின் என் கருத்தை மற்றவர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். வேறு சிலர் உடன்பட்டால் உங்கள் திருத்தத்துக்குக் கௌரவம் உண்டாகும்.

    ஐரோப்பியர் தம் திருத்தங்களை யாரிடம் காட்டலாமென்று ஆராய்ந்தபொழுது, கும்ப கோணம் காலேஜிற் பண்டிதராக இருந்த தியாகராச செட்டியார் அவற்றை ஏற்றுக் கொண்டால் மற்றப் பண்டிதர்கள் உடம்படுவார்களென்றும் அவர் உபகாரச் சம்பளம் பெற்றுக்கொண்டு திரிசிரபுரத்துக்கு அடுத்த உறையூரில் இருக்கிறாரென்றும் அறிந்தார். உடனே அவர் திருச்சிராப்பள்ளியி லிருந்த செவல்பாதிரியாருக்குத் (Father Sewell) தாம் புறப்பட்டு வருவதாகத் தெரிவித்து ஸ்ரீதியாகராச செட்டியாரைப் பார்ப்பதற்கு உதவி புரிய வேண்டுமென்று கடிதம் எழுதினார். பிறகு குறித்த காலத்தில் திரிசிரபுரம் சென்றார். செவல்பாதிரியார் அவரைத் தக்க வண்ணம் உபசரித்து ஓர் அழகிய பெரிய வண்டியில் அவரை உறையூருக்கு அனுப்பினார்; அவருடன் தக்கவர் சிலரையும் போகச் செய்தார்.

    ஸ்ரீதியாகராச செட்டியார் உறையூரிலுள்ள பெரிய தெருவில் அண்ணாமலை செட்டி யாரென்பவருடைய வீட்டில் இருந்து வந்தார். அக்காலத்தில் அவருடைய கண்ணொளி சிறிது மழுங்கி யிருந்தது. அவரைத் தேடிவந்த ஐரோப்பியர் உறையூருக்கு வந்து செட்டியாருடைய வீட்டை விசாரிக்கலானார். அங்குள்ளவர்கள் அத்தகைய சிறந்த வண்டியையும் வெள்ளைக்காரரையும் கண்டு வியப்பு மேலிட்டவர்களாய்ப் பெருங்கூட்டமாகக் கூடி அவ்வண்டியைப் பின் தொடர்ந்து வந்தார்கள். வண்டி செட்டியாருடைய இருப்பிடத்தின் முன்னே வந்து நின்றது.

    செட்டியார் சிவ பூசையை முடித்து உணவருந்திவிட்டு வழக்கப்படியே கையில் ஒரு விசிறியுடன் வந்து இளைப்பாறுதற்கு அப்பொழுதுதான் வெளித்திண்ணையில் அமர்ந்திருந்தார்; முழங்காலளவுள்ளதாகிய பழுப்புநிற ஆடையொன்றையே அவர் உடுத்தியிருந்தார்.

    துரையுடன் வந்தவர்களுள் ஒருவர் வண்டியிலிருந்து இறங்கிவந்து செட்டியாரிடம், “ஒரு பெரிய துரை வந்திருக்கிறார். உங்களைப் பார்க்க வேண்டுமாம்; அவரை வரவேற்று நாற்காலி போட்டு இருக்கச் செய்யுங்கள்” என்றார்.

    செட்டியார், “துரையா? வரட்டுமே. இங்கே நாற்காலி இல்லை; இந்தத் திண்ணையிலேதான் உட்காரவேண்டும்” என்றார்.

    கும்பகோணம் காலேஜில் எவ்வளவோ ‘துரைகளைப்’ப் பார்த்தவர் அவர்; அன்றியும் அவரைப் பார்க்கப் பல துரைகள் வந்து செல்வதுண்டு; ஆதலின் அவருக்கு இந்தத்துரை வந்தது ஒரு பெரிய சிறப்பாகத் தோன்றவில்லை.

    துரை வண்டியை விட்டு இறங்கிவந்து எதிர்த்த திண்ணையில் அமர்ந்தார்.

    “தாங்கள் வந்தது எதன் பொருட்டு?” என்று கேட்டார் செட்டியார். துரை, “நான் குறளைத் திருத்தியிருக்கிறேன். உங்களுடைய அபிப்பிராயத்தைப் பெற்றுப்போக வந்தேன்” என்று கூறத் தொடங்கினார்.

    அந்த வார்த்தைகளைக் கேட்டது செட்டியாருக்கு இடி விழுந்தது போல இருந்தது; “என்ன? குறளையா திருத்தினீர்கள்?” என்று வியப்பும் கோபமும் நிறைந்த தொனியிற் கேட்டார்.

    “ஆமாம்; எதுகை மோனை சில இடங்களில் சரியாக இல்லை. அவை அமையும்படி திருத்தினேன்; ‘தக்கார் தகவில ரென்ப தவரவர், எச்சத்தாற் காணப் படும்’ என்பதைவிட, ‘தக்கார் தகவில ரென்ப தவரவர், மக்களாற் காணப்படும்’ என்பது எதுகை நயத்தோடுகூடி எவ்வளவு அழகாக இருக்கிறது பார்த்தீர்களா?” என்றார் துரை.

    செட்டியார் எழுந்து நின்றார்; தலையிலே இரண்டடி அடித்துக்கொண்டு காதைப் பொத்திக் கொண்டார்; “ஐயையோ! குறளையா திருத்தினீர்? அது மதிப்புள்ள பழைய நூலாயிற்றே! இவ்வளவு நாளாக அறிவாளிகள் செய்யாத ஒன்றைச் செய்துவிட்டதாக எண்ணமோ! எச்சமென்னும் சொல்லின் பொருள் மக்களென்பதற்கு உண்டா? ஒருவருக்குப் பிறகு அவருடைய குணமுதலியவை எஞ்சி நிற்கும் சந்ததியென்று காரணத்தைப் புலப்படுத்தும் சொல்லல்லவா எச்சமென்பது? அவ்விடத்தில் அச்சொல் அமைந்ததனால் உண்டாகும் பொருட்செறிவு மக்களென்னும் சொல்லால் உண்டாகுமா? ஒரு பொருளையே தரும் பல சொற்கள் தமிழில் இருந்தாலும் அவை ஒன்றற் கொன்று சிறிது சிறிது வேறுபட்ட பொருளுடையனவாக இருக்கும். அவற்றை இடமறிந்து பெருங் கவிஞர்கள் உபயோகிப்பார்கள். அது தெரியாமல் திருத்தி விடலாமா? எதுகை நயத்தைவிடப் பொருள் நயம் அல்லவா சிறந்தது?” என்று சொல்லிவிட்டு, “குறளைத் திருத்தினவர் முகத்தில் விழிப்பது கூடப் பாவம்!” என்று கூறிக்கொண்டே உள்ளே சென்று கதவைத் தாழிட்டுக்கொண்டு இடைகழித் திண்ணையில் அமர்ந்துவிட்டார்.

    துரைக்கு இன்னது செய்வதென்றுதோன்றவில்லை. உடன் வந்தவர்கள் ஜன்னல் வழியாகச் செட்டியாரிடம், “இவர் பெரிய மனிதர்; இப்படி இவரைத் தாங்கள் அவமதிக்கக் கூடாது. இவரால் உங்களுக்குப் பெரிய லாபம் உண்டாகும்” என்றார்கள்.

    செட்டியார், ‘இவரை யாரையா இங்கே வரச் சொன்னார்? உலக மெல்லாம் புகழும் திருக்குறளைத் திருத்திய இச் செயல் திருவள்ளுவரை அவமதித்ததாகுமல்லவோ? தெய்வம்போல யாவரும் கொண்டாடும் அவருடைய குறள் வேதமல்லவா? அதைத் திருத்தத் துணிந்தவர் வேறு என்ன தான் செய்யமாட்டார்? இவருக்கு மதிப்பு எங்கிருந்து வரும்? இவரால் எனக்கு ஒரு லாபமும் வேண்டாம். இனிமேல் நான் சம்பாதித்து யாருக்குக் கொடுக்கப் போகிறேன்? எனக்குப் பிள்ளைகுட்டிகள் இல்லை. போதும், போதும்; உங்கள் துரையை அழைத்துக்கொண்டு போய்விடுங்கள்’ என்றார்.

    தாம் என்ன கூறினாலும் செட்டியார் வழிக்கு வாராரென்பதை உணர்ந்த அவர்கள் துரையை அழைத்துக்கொண்டு மீண்டு சென்றார்கள்.

    **********************

    அது நடந்து முடிந்த கதை ! தொடர்ந்ததற்கு வருவோம் !

    வளிநிலை=> பிராணாயாமம் , பொறைநிலை => பிரத்யாஹாரம் ….ஹய்யோ….ஹய்யொ !!!
    ஷட் தரிசனங்ககளில் ஒன்றாம் அஷ்டாங்க யோகத்தின் சூத்திரகாரர் பதஞ்சலி ரிஷி உபயோகித்த ப்ராணாயாமம் , ப்ரத்யாஹாரம் போன்ற வார்த்தைகளுக்கு தமிழ் மற்றும் வடமொழி ஆகிய மொழிகளில் கலைவல்லுனராம் நச்சினார்க்கினியர் என்னும் அபிநவ துரையின் மொழிபெயர்ப்பு காணீர் …காணீர் …..

    ப்ராணாயாமம் => நம் உடலில் இயங்கும் முக்கிய பிராணனை ,பூரகம் ,ரேசகம் மற்றும் கும்பகம் கொண்டு கட்டுப்படுத்தல் என்று கொள்ளலாம் .

    ப்ர => வடமொழி உபசர்க்கம் – சிறப்பான / முக்கிய /தலையாய என்று பொருள் .
    அந: => தாங்குபவன் ,காப்பவன் ,தரிப்பவன் என்று பொருள் .
    அதாவது ப்ர+அந: => ப்ர(ஆ) [ஸந்தி # i] + அந(ண) [ஸந்தி # ii ] : => ப்ராண:
    இதில் இரண்டு மாறுதல்கள் உண்டு .
    i ) ஸவர்ண தீர்க்க ஸந்தி ,ii )ணத்வ பந்தகம்
    ப்ர+அந: => ப்ராண: (தமிழில் ப்ராணன் )
    அந: என்னும் சொல்லின் மகிமை :
    அதர்வ வேதம் ப்ரஶ்ந உபநஷத் – இரண்டாம் ப்ரஶ்நம்-

    விதர்ப்ப நாட்டைச் சேர்ந்த பார்க்கவன் பிப்பலாத ரிஷியிடம் கேட்டது .

    அத ஹைநம் பார்கவோ வைதர்ப்பி: பப்ரச்ச | பகவந் கத்யேவ தேவா: ப்ரஜாம் விதாரயந்தே? கதர ஏதத் ப்ரகாஶயந்தே? க: புநரேஷாம் வரிஷ்ட: இதி||
    பொருள்: தெய்வ முனிவரே ! ஒருவனை எத்தனை தேவர்கள் தாங்குகின்றனர் ? அவர்களில் யார்யார் இவற்றை இயக்குகின்றனர் ? இவர்களில் யார் முக்கியமானவர் ?

    தஸ்மை ஸ ஹோவாச ஆகாஶோ ஹ வா ஏஷ தேவோ வாயுரக்நிராப: ப்ருத்வீ வாங்மநஶ்சக்ஷு: ஶ்ரோத்ரம் ச | தே ப்ரகாஶ்யாபிபவந்தி வயமேதத் பாணமவஷ்டப்ய விதாரயாம: ||
    பொருள்: ஆகாசம் , காற்று,நெருப்பு, தண்ணீர்,பூமி ,பேச்சு மனம் ,பார்வை, கேட்கும்தன்மை ஆகியவையே அந்தத் தேவர்கள் . அவர்களே மனிதனை இயக்குகின்றார்கள். ஒருமுறை இந்த தேவ சக்திகள் ,” நாங்கள்தான் இந்த உடம்பை ஒருங்கிணைத்துத் தாங்குகின்றோம்”- என்று கூறின .

    தாந் வரிஷ்ட: ப்ராண உவாச| மா மோஹமாபாத்ய அஹமேவைதத் பஞ்சதாத்மாநம் ப்ரவிபஜ்யைதத் பாணமவஷ்டப்ய விதாரயாமிதி; தே அஶ்ரத்ததாநா பபூவு: ||
    பொருள்: தேவ சக்திகள் கூறியதைக் கேட்ட முக்கிய பிராணன் அவரிடம் -” குழம்பாதீர்கள் . என்னை ஐந்தாகப் பிரித்துக் கொண்டு , இந்த உடம்பை ஒருங்கிணைத்து இயக்குவது நானே ” என்று கூறியது . ஆனால் பிராணனின் பேச்சை அந்த தேவ சக்திகள் நம்பவில்லை .
    ஸோபிமாநாதூர்த்வமுத்க்ரமத இவ தஸ்மிந் உத்க்ராமத்யதேதரே ஸர்வ ஏவோத்க்ராமந்தே தஸ்மிம்ஶ்ச ப்ரத்ஷ்டமாநே ஸர்வ ஏவ ப்ராதிஷ்டந்தே| தத்யதா மக்ஷிகா மதுகரராஜாநம் உத்க்ராமந்தம் ஸர்வா ஏவோத்க்ராமந்தே தஸ்மிம்ஶ்ச ஏவ ப்ராதிஷ்டந்த ஏவம் வாங்மநஶ்சக்ஷு: ஶ்ரோத்ரம் ச தே ப்ரீதா: ப்ராணம் ஸ்துந்வந்தி ||
    பொருள்: பிராணன் தனது பெருமையை விளக்குவதற்காக வெளியேறுவது போல் காட்டியது. அது வெளியேறியதும் மற்ற புலன்கள் அனைத்தும் செயலிழந்து விட்டன.அது நிலைபெற்றதும் அனைத்தும் செயல்படத் தொடங்கின.அரச தேனீ வெளியேறினால் மற்ற தேனீக்கள் அனைத்தும் எப்படி அதைத் தொடர்ந்து வெளியேறுகின்றனவோ ,அது அமர்ந்தால் எப்படி அனைத்தும் அமர்கின்றனவோ அப்படி இது நிகழ்ந்தது . உடனே பேச்சு ,மனம், கண், காற்று போன்ற மற்ற புலன்கள் மகிழ்ச்சியுடன் ப்ராணனைத் துதித்தன .
    ஸாம வேதம் -சாந்தோக்ய உபநிஷத் – 5ம் அத்யாயம்-ப்ராண வித்யா-13

    அத ஹ ப்ராண உச்சிக்ரமிஷந் ஸ யதா ஸுஹய: பட்வீச ஸங்கூந் ஸங்கிதேத் ஏவம் இதராந் ப்ராணாந் ஸமகிதத் தக்ம் ஹ அபிஸமேத்ய ஊசு: பகவந் ஏதி த்வம்
    ந: ஶ்ரேஷ்டோஸி மா உத்க்ரமீ: இதி -5.1.13
    பொருள்: இறுதியாக, பிராணன் உடம்பிலிருந்து வெளியேற எத்தனித்தது. அப்போது ஆற்றல் மிக்க குதிரை , கட்டப்பட்ட தறிகளையும் எப்படி பெயர்த்துக் கொண்டு ஓடுமோ அப்படி ப்ராணனுடன் இணைந்துள்ள புலன்களும் பெயர்க்கப் பட்டன.[ பிராணன் வெளியேறினால் தங்களால் வாழ இயலாது என்பதை புரிந்துகொண்ட புலன்கள்] அதனிடம் சென்று அய்யா ! நீங்களே எங்களில் முதன்மையானவர் !. தயவுசெய்து வெளியேறாதீர்கள் ” என்று வேண்டிக்கொண்டன.
    ப்ர + அந:=>ப்ராண :
    வி+அந: => வ்யாந ;
    ஸம் +அந: =>ஸமாந ;
    அப +அந:=> அபாந: ;
    உத் +அந: => உதாந:

    இப்படிப்பட்ட பெருமை பெற்ற அநன் என்னும் சொல்லைத்தான் வளி என்கின்றார் இந்த அபிநவ உபய சாஸ்திரி -நச்சினார்க்கினியர் .
    இது “எச்சம்” நீக்கி “மக்கள்” என்று மாற்றுவது போன்றதாம் .

    “தக்கார் தகவில ரென்ப தவரவர்
    எச்சத்தாற் காணப் படும்” [ மக்களால் காணப் படும்]

    எப்பூடீ …..ஈ …..ஈ….
    ஏய் !!!….எம்பேர் ரு காளி
    எங்கிட்ட இருக்குது வாளி .
    எனக்கு மூக்குல புடிச்சது சளி.
    அது இல்லாம போனா நீ காலி .

    போயா உன் வளியும் …வாளியும் ……ஆஹா வந்துட்டான் யா ….. வந்துட்டான் யா …..

    ************************************************

    பொறைநிலை => பிரத்யாஹாரம்
    அடுத்தது பொறைநிலை => பிரத்யாஹாரம் ………ஸ்..ஸ்..ஸ் இப்பவே கண்ண கட்டுதே ……

    ப்ரதி -> இதனை தர்க்க சாஸ்திரத்தில் ப்ரதியோகி பதம் என்பர் .வ்யாகரண சாஸ்திரத்தில் உப சர்க்கம் என்பர் .
    எடுத்துக்காட்டாக
    தகப்பன் என்னும் சொல்லுக்கு ப்ரதியோகி பதம் => மகன்
    கணவன் என்னும் சொல்லுக்கு ப்ரதியோகி பதம் => மனைவி

    ஆஹாரம் -> உணவு / விஷயம் [ பொறிகள் – ஐந்து ]
    ஆஹாரம் என்னும் சொல்லுக்கு ப்ரதியோகி பதம் =>புலன் -(இதுவும் ஐந்து, (அல்லது ) 5+மனஸ் = ஆறு )
    எனவே ப்ரதி + ஆஹாரம் => பிர(தி)+த்+ய் +ஆ+ ஹாரம்
    இதை வடமொழியில் யண்சந்தி என்பர்.

    ப்ரத்யாஹாரம் என்பது 5 புலன்களையும் தத்தம் விஷயங்களிலிருந்து திரும்ப அழைத்துக் கட்டுவது என்பர்.[ இதுக்கு மேல அடியேனுக்கும் தெரியலிங் ங் ணா !! ]

    ப்ரத்யாஹாரம் எங்கே ? பொறைநிலை எங்கே ? அமாவாசைக்கும் அப்துல்காதருக்கும் !! என்னய்யா சம்மந்தம் !!

    ஒரு சாதாரண சமூக சாஸ்திரமாம் திருக்குறளை திருத்தியதற்கே ….துரையை முகம் கொடுத்தும் பாரேன் என்று திருப்பி யனுப்பியவர் தியாகராச செட்டியார் .

    இந்த நச்சினார்கினிரியரோ ….வேதமோ ,வடமொழியோ ,தர்க்கமோ ………இல்லண்ணே !….சாய்ஸ்ல கீய்ஸ்ல விட்டுட்டிங்களோ ??

    அன்புடன் ,
    விக்கிரமாதித்தனின் முதுகில் ஏறிய வேதாளம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *