கருப்புப்பண ஒழிப்பு: யாருக்கு நெருக்கடி?

உயர் மதிப்புள்ள ரூ. 500, ரூ. 1000 நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் அறிவித்த நவ. 8-ஆம் தேதி இரவிலிருந்தே நாட்டில் பல அரசியல் தலைவர்களுக்கு தூக்கம் பறிபோய்விட்டது. அவர்களில் பலர் தற்போது என்ன பேசுகிறோம் என்பதே தெரியாமல் பிதற்றத் துவங்கிவிட்டனர். கருப்புப் பணத்தைப் பதுக்கியவர்கள் மீதான அரசின் நடவடிக்கைக்கு எதிராகக் கூப்பாடு போடும் இந்த எதிர்க்கட்சித் தலைவர்களின் நடவடிக்கையிலிருந்தே, மோடி கொடுத்த அடி இவர்களை எந்த அளவுக்கு பாதித்திருக்கிறது என்பதை உணர முடிகிறது.

இவர்களில் தலையாயவர், தில்லி மாநில முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால். இந்திய வருவாய்த் துறை பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்று அரசியலுக்கு வந்த இந்த மகா புத்திசாலியின் கருத்துகள், கிறுக்குத்தனமாக மட்டும் இல்லை; மோடி மீதான காழ்ப்புணர்வின் உச்சகட்டமாகவும் உள்ளன.

cartoon-1
சொல்வதையே செய்வார்… செய்வதையே சொல்வார்….

இவரை வலிந்து ஆதரித்துக் கொண்டிருந்த எழுத்தாளர் ஜெயமோகனே, “இப்போது ஆயிரம் ரூபாய் நோட்டு ஒழிப்பைப்பற்றி கேஜ்ரிவால் பேசியிருக்கும் அபத்தத்தைப் பார்க்கையில் பெரும் வருத்தம் எஞ்சுகிறது. எந்த ஆதாரமோ தர்க்கமோ இல்லாத வெற்றுக் கூச்சல்; முட்டாள்களை, மோடி எதிர்ப்பு ஊடகங்களை மட்டுமே நம்பி செய்யும் கழைக்கூத்து. இந்த கோமாளி இப்படியே அரசியலில் இருந்து அழிந்தால் நாட்டுக்கு நல்லது. ராஜநாராயணன் போல இவருக்கும் ஒரு பெரிய வாய்ப்பு கிடைக்குமென்றால் அது தேசத்தின் தீயூழ். மீண்டும் மீண்டும் இத்தகையவர்களால் ஜனநாயகத்தின் அடிப்படை நம்பிக்கைகள் அழிகின்றன” என்று கூறியிருக்கிறார். பிழை அரவிந்திடம் அல்ல; இந்தக் கிறுக்கரை ஆதரித்த ஜெயமோகனிடம் தான் இருந்திருக்கிறது.

கடைசியாக கேஜ்ரிவால் உதிர்த்த முத்து,  “500, 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாக் காசாக்கியதன் மூலம் ஏழை மக்களை சிரமத்துக்குள்ளாக்கி, அதன்மூலம் பெரு நிறுவனங்களுக்கு 10 லட்சம் கோடி வழங்கத் திட்டமிடுகிறார் மோடி” என்பது. இது எப்படி சாத்தியம் என்பது எனக்கு இன்னமும் புரியவில்லை. ஒருவேளை ஐஆர்எஸ் பணியில் இருந்திருந்தால் புரிந்திருக்குமோ?

அது மட்டுமல்ல, “இந்த ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிப்பதற்கு முன்னர் மோடி தனது நண்பர்களுக்கு இந்த ரகசியத்தைச் சொல்லி அவர்களைக் காப்பாற்றிவிட்டார்” என்றும் புரளி கிளப்பினார் கேஜ்ரிவால். இதை நமது செய்திப்பசி ஊடகங்களும் தங்கள் பங்கிற்கு பெரிதுபடுத்தின. அது எப்படி தில்லி முதல்வருக்குத் தெரியும்? யாரும் எதிர்க்கேள்வி கேட்கவில்லை. நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரின் இரண்டாம் நாளில் மக்களவையில் இந்த வதந்தி தான் பேசுபொருளானது; அவையும் முடங்கியது.

இந்நிலையில், நவ. 18-ஆம் தேதி நாளிதழ்களில் ஒரு செய்தி வெளியாகி இருக்கிறது. மஹாராஷ்டிர மாநிலத்தில் பாஜக அமைச்சர் சுபாஸ் தேஷ்முக்கின் காரிலிருந்து ரூ. 91 லட்சம் மதிபுள்ள உயர் மதிப்பு கரன்ஸி நோட்டுகள் மாநகராட்சி அதிகாரிகளின் சோதனையில் பிடிபட்டுள்ளன என்பதுதான் அந்தச் செய்தி. ஏற்கனவே, மற்றொரு பாஜக அமைச்சரின் தம்பியின் வாகனத்திலிருந்து ரூ. 6 கோடி பணம்  பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகவும் அதே செய்தி கூறியது. இதை ‘தீக்கதிர்’ உள்ளிட்ட எதிரிப் பத்திரிகைகள் புளகாங்கிதத்துடன் வெளியிட்டு மகிழ்ந்தன. இப்போது நமது கேள்வி என்னவென்றால், மோடி இந்த பாஜக நண்பர்களுக்கு ஏன் தகவல் தெரிவிக்கவில்லை? கேஜ்ரிவால் கூறியது போல மோடி ரகசியத்தைக் கசிய விட்டிருந்தால், பாஜகவைச் சேர்ந்தவர்களே பாதிக்கப்படுவார்களா?

kejrival-and-mamtha
யாரைக் காப்பாற இந்தக் கூட்டு?

எந்தக் கட்சியிலும் பலதரப்பட்ட மக்கள் இருப்பார்கள். பாஜகவிலும் கருப்புப்பணம் வைத்திருப்பவர்கள் இருக்கவே செய்வார்கள். ஏனெனில், இதுவரை மோடி எடுத்தது போன்ற நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மோடி இப்படி அதிரடி நடவடிக்கை எடுப்பார் என்று அவர்கள் எதிர்பார்க்கவும் இல்லை. கருப்புப்பணம் வைத்திருந்ததால் இப்போது பிடிபட்டவர்கள் மீது பாஜக நிச்சயமாக நடவடிக்கை எடுக்கும். அது தனிக்கதை.  நமது கேள்வி, அதி புத்திசாலி கேஜ்ரிவாலின் வதந்தியை அதிவேகமாகப் பரப்பிய ஊடகங்கள், இனியேனும் பொறுப்புணர்வுடன் செய்தியை வெளியிடுவார்களா என்பதுதான்.

இவரைவிட அரசியல் மேதாவி ஒருவர் இருக்கிறார். அவர் மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி. சாரதா நிதிநிறுவன முறைகேடு விசாரணை வளையத்துக்குள் சிக்கியுள்ள மம்தா திடீரென மோடிக்கு எதிரான தேசியத் தலைவியாக அவதாரம் எடுக்க முனைகிறார். அதற்காக மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் யெச்சூரிக்கு சமாதானத் தூது விடவும் தயாராகிவிட்டார். நல்லவேளை, மம்தாவின் அரசியல் சதியைப் புரிந்துகொண்ட யெச்சூரி, ஊழல் கறை படிந்த மம்தாவின் உதவி தங்களுக்குத் தேவையில்லை என்று நிராகரித்துவிட்டார். ஆயினும், தில்லி முதல்வருடன் இணைந்து மோடிக்கு எதிராக போராட்டங்களை நடத்த காய்களை நகர்த்தி வருகிறார் மம்தா. “ரூ. 500, ரூ. 1000 நோட்டுகள் செல்லாது என்ற மத்திய அரசின் அறிவிப்பைத் திரும்பப் பெற வேண்டும்” என்பதுதான் இவர்களின் கோரிக்கை. அப்போதுதானே, பதுக்கி வைத்துள்ள கருப்புப்பணத்தை வெள்ளையாக்க முடியும்?

இவர்கள் இருவருக்கும் சளைத்தவரல்ல கேரள முதல்வர் பினாரயி விஜயன். செல்லாத நோட்டுகளை மாற்றிக் கொடுக்கும் பணியில் கூட்டுறவு வங்கிகளை ஈடுபடுத்தாததைக் கண்டித்து அவர் தலைமையில் ஆர்ப்பாட்டம் திருவனந்தபுரத்தில் நடத்தப்பட்டிருக்கிறது. அதில் பேசிய விஜயன், “ரூபாய் நோட்டுகள் விவகாரத்தைப் பயன்படுத்தி கேரள கூட்டுறவுத் துறையை முடக்க மத்திய அரசு சதி செய்கிறது” என்று புகார் கூறி இருக்கிறார். அது எப்படி என்பதையும் அவரே விளக்கி இருக்கலாம். உடனிருந்த சீதாராம் யெச்சூரியோ, “உயர் மதிப்பு ரூபாய் நோட்டுகள் முடக்கப்பட்டது மக்கள் விரோத நடவடிக்கை” என்று திருவாய் மலர்ந்திருக்கிறார். எந்த மக்கள்? மார்க்சிஸ்ட் கட்சியின் அடிப்படை உறுப்பினர்களான ஏழை மக்களா? திரை மறைவில் பல கோடிகளைக் கொட்டிக் கொடுக்கும் பணமுதலைகளா? அதையும் அவரே தெளிவாகச் சொல்லி இருக்கலாம்.

வழிக்கு வராதவர்கள்...வழுக்கி விழாதவர்கள்....
மம்தா வழிக்கு வராதவர்கள்…வழுக்கி விழாதவர்கள்….

இப்போதைக்கு மூன்று மாநில முதல்வர்கள் மோடிக்கு எதிராக முழங்கிக் கொண்டிருக்கிறார்கள். நாடு முழுவதும் உள்ள பாஜக அல்லாத கட்சிகளின் முதல்வர்களை ஓரணியில் திரட்டுவது மம்தாவின் திட்டமாம். பகல் கனவு காண அனைவருக்கும் உரிமை இருக்கிறது. முதலாவதாக, மம்தாவின் அணியில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட்கள் சேர வாய்ப்பில்லை. அடுத்து, பிகார் முதல்வர் நிதிஷ்குமாரும், ஒடிஸா முதல்வர் நவீன் பட்நாயக்கும், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவும் கருப்புப் பணத்துக்கு எதிரான மோடியின் யுத்தத்தை ஆதரித்து விட்டார்கள். தெலுங்கானா முதல்வர் ராவும் மோடியை எதிர்க்கத் தயாரில்லை. ஆனாலும் மம்தாவுக்கு கொம்பு சீவுகிறார்கள்,  பின்னணியிலிருந்து இந்த நாடகத்தை இயக்கும் பெரு நிறுவன முதலாளிகள், கருப்புப்பண முதலைகள்.

மோடி எதிர்ப்பாளர்களில் மற்றொரு வகையினருக்கு நம்முடைய காங்கிரஸ் இளவரசர் ராகுல் தலைமை வகிக்கிறார். ரூ. 4,000 செல்லாத நோட்டுகளை மாற்ற தில்லியில் வங்கிக் கிளைக்கு சென்று வரிசையில் நின்ற அவருக்கு நல்ல ஊடக விளம்பரம் கிடைத்தது.  ‘ஏழைகள் மட்டுமே வரிசையில் நிற்கிறார்கள். பணக்காரர்கள் எவரும் வங்கி வரிசையில் நிற்கவில்லை’ என்று காங்கிரஸ்காரர்கள் புலம்பிக் கொண்டிருந்த அதே நாளில் (நவ. 11), போஃபர்ஸ் ஊழல், 2ஜி ஊழல் போன்ற பல ஊழல்களில் திளைத்த காங்கிரஸ் கட்சியின்  ‘யுவராஜா’, பல கோடிகள் பணமிருந்தும் பயன்படுத்த வழி தெரியாமல் (அவரிடம் எந்த வங்கி அட்டையும் இல்லை போல) தினசரிச் செலவுக்கே வழியில்லாமல் வங்கிக்கு வந்தார். அன்று எடுத்த ரூ. 4,000 அன்றே செலவாகி இருக்கும். அதன் பிறகு அவர் மறுபடி ஏன் வங்கிக்கு வரவில்லை என்பது புரியாத புதிர். அவருக்கு ஏவல் செய்யும் எந்த காங்கிரஸ் தலைவரும்கூட வங்கிக்கு வரவில்லை.

hera-ben
மோடியின் தாய்… சாமானிய மக்களில் ஒருவர்…

அதேசமயம், மோடியின் தாய் ஹீரா பென் (97) அகமதாபாத்தில் வங்கிக்குச் சென்று வரிசையில் காத்திருந்து தன்னிடமிருந்த ரூ. 500 நோட்டுகளை மாற்றியது மோடி நடத்திய நாடகமாம். தமிழின் ஒரே அறிவுஜீவியான சமஸ்  ‘தி இந்து’ பத்திரிகையில் எழுதுகிறார்.  “தள்ளாத நிலையிலிருக்கும் தன்னுடைய 95 வயது தாயை ரூபாய் நோட்டுகளை மாற்ற வங்கிக்கு அனுப்பிவைக்கும் ஒரு பிரதமரை எப்படி எதிர்கொள்வது என்பது உள்ளபடியே சிக்கலானது” என்கிறார் அவர் (நவ. 18). தி இந்துவில் நேர்மையான, நடுநிலையான செய்தியையோ, கட்டுரையையோ எதிர்பார்ப்பது நமது தவறுதான். எனினும் இந்த இடத்தில் ஒப்பீடு தேவையாக இருக்கிறது.

ராகுல் இப்படி என்றால், அவரது காஷ்மீரப் பணியாளர் குலாம் நபி ஆசாத், “உரி தாக்குதலில் இறந்த ராணுவ வீரர்களின் எண்ணிக்கையை விட, வங்கியில் பணத்தை மாற்ற நின்று இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகம்” என்று கூறி படைவீரர்களின் தியாகத்தைக் கொச்சைப்படுத்துகிறார். ஒருசில இடங்களில் ஆரோக்கியக் குறைபாட்டால் இறந்தவர்களை மிகைப்படுத்தி அரசை வசை பாடுகிறது ஒரு கூட்டம். இதில் எந்த அளவுக்கு உண்மை உள்ளது என்பதை ஆராய நடுநிலைமை தேவை. அது மோடி எதிர்ப்பாளர்களிடம் கிஞ்சித்தும் இல்லை;  ஊடக வியாபாரிகளிடமும் இல்லை.

garphics-modi-1

செல்லாத ரூபாய் நோட்டுகளை மாற்ற மக்கள் அவதிப்படுவதும், வங்கிகளில் நீண்ட வரிசையில் காத்திருப்பதும் உண்மைதான். இது நமது வங்கி நிர்வாகங்களின் நடைமுறைச் சிக்கலின் ஒரு விளைவே. தவிர கருப்புப் பண முதலைகளின் பணத்தை வெள்ளையாக்க உதவும் வகையில் மறுபடி மறுபடி மக்கள் வரிசையில் நிற்பார்கள் என்று அரசு எதிர்பார்க்கவில்லை. மேலும், ஊடகங்கள் கிளப்பிய பீதியும் பெருமளவிலான மக்களை சஞ்சலப்படுத்தி, அவர்களை வங்கிகள் நோக்கி படையெடுக்கச் செய்தது. எனவே அரசு பல மாற்று நடவடிக்கைகளை எடுக்க வேண்டி வந்தது. ஏனெனில், மோடியின் இந்த யுத்தத்தில் மக்களின் பங்களிப்பு அவசியம். அதைச் சீர்குலைப்பதில் ஓரளவுக்கு ஊடகங்களும், எதிர்க்கட்சிகளும் வெற்றி பெற்றதன் விளைவே வங்கிகளில் காணப்படும் நீண்ட வரிசை.

ஒரே நாளில் ரூ. 16 லட்சம் கோடி மதிப்புள்ள உயர் மதிப்பு ரூபாய் நோட்டுகளை குறைந்த மதிப்புள்ள நோட்டுகளாக மாற்றித் தர முடியாது. எனவேதான் வங்கிகளில் அவற்றை முதலீடு செய்யுமாறு அரசு வலியுறுத்துகிறது. தவிர, கருப்புப் பணத்தை ஒழிக்கும் வழிமுறையும் அதுவே. ரொக்கப் பணமற்ற பொருளாதாரமே கருப்புப் பணத்தை முற்றிலும் ஒழிக்கும் வழி. அதற்கான பாதையில் முதல் படிதான் மோடியின் தற்போதைய நடவடிக்கை.  இந்த நல்முயற்சிக்கு, ஊடகங்களும் எதிர்க்கட்சிகளும் செய்த அதீத பொய்ப் பிரசாரத்தால் சிக்கல் நேரிட்டிருக்கிறது.

ரூ. 500, 1000 நோட்டுகள் செல்லாதவை அல்ல. மார்ச் 31, 2017 வரை அவற்றை வங்கியில் செலுத்தலாம். வருமான வரி வரம்புக்கு மேல் பணம் செலுத்தினால் மட்டுமே அதன்மீது வரி விதிக்கப்படும். மற்றவர்களுக்கு இதனால் எந்தச் சிக்கலும் இல்லை. ஆனால், உயர் மதிப்பு நோட்டுகள் செல்லாதவை என்பது போல செய்யப்பட்ட பிரசாரம் மக்களை அச்சத்தில் ஆழ்த்தியது. அதனால்தான் தேவை இல்லாவிட்டாலும் வங்கிகளில் மக்கள் குவிந்தனர்.

புதிய இந்தியா உருவாக வரிசையில் மக்கள்...
புதிய இந்தியா உருவாக வரிசையில் மக்கள்…

ஏடிஎம்களிலும் கூட, ஒரு நபர் பல வங்கி அட்டைகளில் பணத்தை எடுக்கக் காரணம், பணப் பற்றாக்குறை குறித்த பீதியே. இதையெல்லாம் அரசு எதிர்பார்த்திருக்க வேண்டும் என்பது சரிதான். ஆனால், ரகசியமாகவும் திடீரெனவும் எடுக்க வேண்டிய நடவடிக்கையில் இத்தகைய சிக்கல்கள் எதிர்ப்படுவதைத் தவிர்க்க இயலாது. இந்த இடத்தில், நாட்டு மக்களுக்கு உண்மை நிலவரத்தை உணர்த்த வேண்டியவர்கள் ஊடகங்கள் தான். அவர்களே அரசைச் சாடுவதற்காக மக்களை குழப்பத்தில் தள்ளியது மிகவும் கொடுமை. ஆயினும் அவர்கள் எதிர்பார்த்ததுபோல மோசமான விளைவுகள் ஏற்படவில்லை என்பது ஒருவகையில் ஆறுதல்.

ஆனால், உச்ச நீதிமன்ற நீதிபதி இதைத் தான் விரும்புகிறார் போலிருக்கிறது.  “ரூபாய் நோட்டு விவகாரத்தால் நாட்டில் கலவரங்கள் வெடிக்கும் வாய்ப்புள்ளது” என்று எச்சரித்திருக்கிறார் உச்ச நீதிமன்ற நீதிபதி டி.எஸ்.தாக்குர். இது அவரது எச்சரிக்கையா, விருப்பமா? இதுதான் நீதிபரிபாலன லட்சணமா?

நீதிமன்றங்களில் காலியாக உள்ள நீதிபதி பணியிடங்களை நிரப்ப கொலீஜியம் அனுப்பிய 77 பேர் கொண்ட பட்டியலில் 33 பேரை மட்டுமே ஏற்று, மீதமுள்ள 44 பேரை மாற்றுமாறு மத்திய அரசு திருப்பி அனுப்பியதால் உச்சகட்டக் கோபத்தில் இருக்கிறார் உச்ச நீதிமன்ற நீதிபதி டி.எஸ்.தாக்குர். மத்திய அரசு 44 பேரை நிராகரித்ததன் பின்னணியில், அவர்களின் பின்புலமும் உளவுத்துறை அறிக்கைகளும் காரணமாக உள்ளன. ஆனாலும், அவர்களையே நீதிபதியாக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றமும் கொலீஜியமும் துடிப்பதும், பிடிவாதம் பிடிப்பதும் ஏன்? வெளிப்படைத் தன்மையும் நேர்மையும் நீதிபதிகள் நியமனத்தில் இருக்க வேண்டாமா?

நீதிபதி ஆயினும் எல்லை மீறலாமா?
நீதிபதி ஆயினும் எல்லை மீறலாமா?

மத்திய அரசின் தேசிய நீதிபதிகள் நியமன ஆணையம் அமைக்கும் சட்ட வரைவை (2014) அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்று கூறி ரத்து செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதிலிருந்தே (16.10.2015)  மத்திய அரசுக்கும் உச்ச நீதிமன்றத்துக்கும் இடையிலான மோதல்  தொடர்கிறது. இந்நிலையில், அரசை தர்ம சங்கடத்துக்கு உள்ளாக்கும் எந்த வாய்ப்பையும் நீதிபதிகள் தவற விடுவதில்லை. தற்போது, டி.எஸ்.தாக்குரின் எச்சரிக்கை (மிரட்டல்?) வெளிவந்திருப்பதன் பின்புலம் இதுவே.

கருப்புப் பணத்தைப் பதுக்கி இருப்பவர்களின் கைப்பாவையாக எதிர்க்கட்சிகள் சோரம்போய் வரும் நிலையில், உச்ச நீதிமன்றமும் அவர்களுக்கு தோள் கொடுக்கச் செல்கிறதோ என்ற சந்தேகம் எழுவதை தவிர்க்க முடியவில்லை. ஆயினும், கருப்புப் பணப் பதுக்கலுக்கு எதிரான மத்திய அரசின் அதிரடி முடிவுக்கு தடை விதிக்க நீதிமன்றம் முற்படவில்லை. மக்களின் ஏகோபித்த ஆதரவுக்கு எதிராகச் செயல்பட நீதிமன்றம் துணியாது என்றே நம்புவோம்.

நான்காயிரம் போதுமா?
நான்காயிரம் போதுமா? நாடகம் தொடருமா?

கடைசியாக களத்தில் வந்து குதித்திருக்கிறார், வாசன் ஐ கேர் ஊழல், 2 ஜி ஊழல், ஏர்செல் மேக்சிஸ் ஊழல், சாரதா நிதி நிறுவன மோசடிகளில் தொடர்புடைய ப.சி. “ஆயிரக்கணக்கான  ‘பணக்கார’ மற்றும்  ‘ஊழல்வாதிகள்’ வங்கிகளில் வரிசையில் நிற்கின்றனர். ‘ஏழைகள்’ தங்கள் வீடுகளில் இருந்து கொண்டாடுகின்றனர்” என்று கேலி பேசி இருக்கிறார் ப.சி. காங்கிரஸ் ஆட்சிக் காலத்திலேயே இது போன்ற நடவடிக்கைக்குத் திட்டமிட்டதாகவும், அதனால் பலன் இருக்காது என்பதால் முடிவைக் கைவிட்டதாகவும் கூறிய ப.சி,   “பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற மோடியின் அறிவிப்பு கருப்புப் பணத்தை ஒழித்து விடாது. ஏழை மக்களே இதனால் பாதிக்கப்படுவார்கள்” என்றும் மதிப்பிட்டிருக்கிறார்.

சிதம்பரத்தின் உள்ளக்கிடக்கை அனைவரும் அறிந்ததுதான். மோடி அரசின் எந்த்த் திட்டம் நல்ல முறையில் நிறைவேற வேண்டும் என்று ப.சி. விரும்பி இருக்கிறார்?  அவரது சாபத்தைக் கண்டுகொள்ளத் தேவையில்லை. ஆனால், “அரசின் நடவடிக்கையால் ரூ. 400 கோடி கள்ளப் பணம் மட்டுமே ஒழிக்கப்பட்டுள்ளது. இதனால் எந்தப் பயனும் இல்லை” என்றும்,  “தற்போதைய ரூபாய்ப் பற்றாக்குறையைத் தீர்க்க புதிய நோட்டுகள் அச்சிட 7 மாதமாகும்” என்றும் அவர் கூறி இருப்பது தான் மோசமான பொய்கள். அரைகுறை உண்மைகள் பொய்களுக்கு நிகரானவை. மக்களிடையே பீதியை உருவாக்க முன்னாள் நிதியமைச்சர் ஒருவரே இத்தகைய பொய்களைக் கூறுவது, அவரது கபட வேடத்தை மேலும் உறுதிப்படுத்துகிறது.

ப.சி.க்கு முன்னர் நிதியமைச்சராக இருந்த பிரணாப் முகர்ஜி இப்போது ஜனாதிபதி. அவர் மோடியின் நடவடிக்கைகளை வரவேற்றிருக்கிறார். அதுபோதும், ப.சி. போன்ற சுயநல வேடதாரிகளின் சான்றிதழ்கள் மோடி அரசுக்குத் தேவையில்லை.

என்ன ஆயிற்று தமிழக திராவிட ராசதந்திரிகளுக்கு?

மோடியின் கருப்புப் பண ஒழிப்பு போராட்டத்தை எதிர்த்து மம்தா, கேஜ்ரிவால், விஜயன் போன்றோர் ஒப்பாரி வைத்துக் கொண்டிருக்கும் நிலையில், தமிழகத்தில் மோடி எதிர்ப்பு ஒப்பாரி ஈனசுரத்திலேயே கேட்கிறது.

2 ஜி ஊழல் புகழ் திமுகவுக்கு மோடியை எதிர்க்க பயம். ஆதரித்தாலும் பிரயோசனமில்லை என்ற பகுத்தறிவும் இருக்கிறது. வினை விதைத்தவர் வினை அறுக்க வேண்டும் அல்லவா? எனவே, மோடியின் நடவடிக்கையை ஆதரித்து கலாகார் ஓர் அறிக்கை வெளியிட,  அதிலேயே சாமானிய மக்கள் பாதிக்கப்படுவதற்காக விசனமும் வழிகிறது. மதிமுக, பாமக, அதிமுக, இத்யாதி  கட்சிகளின் நிலையும் இதுவே.

இடதுசாரிக் கட்சிகள் தான்  ‘ஓவர் ரியாக்ட்’ செய்கிறார்கள். அதிலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் செயலாளர் தா.பாண்டியன் தினமணியில் கருப்புப்பண ஒழிப்பை ஆதரித்து கட்டுரை எழுதிவிட்டார். ஆனால், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் மார்க்சிஸ்ட் கட்சியும் இன்னபிற இடதுகளும், ஏடிஎம் வரிசையைப் பார்த்து நம்பியார் சிரிப்பு சிரித்தபடி போர்க்கோலம் காட்டுகிறார்கள். சாமானியனுக்கு ஆதரவாக நிற்க வேண்டிய டோழர்ஸ் இப்படி கேஷ் பக்தா ஆவார்கள் என்று யாரும் நினைத்துப் பார்க்கவில்லை.

தேர்தலுக்கு முன் தில்லி ஓடி மோடிக்கு ஆதரவு தெரிவித்தும்கூட,  நன்றி விசுவாசம் இல்லாமல் வருமான வரி ரெய்டு நடத்தியதில் கொடூர கோபத்திலிருந்த நடிகர் விஜயும் தன் பங்கிற்கு மோடியின் நடவடிக்கையை குறை கூறி இருக்கிறார். காங்கிரஸ் வாலாக்கள் போல பாஜக ஜிக்களை நினைப்பது தவறு என்பதை அவரை இயக்கும் தந்தை சந்திரசேகராவது சொல்லித் தந்திருக்கலாம்.

மொத்தத்தில் பாஜகவை வசை பாடுவதற்கென்றே பிறப்பெடுத்த, ஊட்டி வளர்க்கப்பட்ட ஆசாமிகளின் பொங்குதல்கள், பொசுங்குதல்களை இணையத்தில் அதிகமாகவே காண முடிகிறது. ஆனால், அவர்களுக்கு பதிலடி கொடுக்கவும், கருப்புப் பண ஒழிப்புக்கு ஆதரவாக குரல் எழுப்பவும் ஒரு படை வீறுடன் உலா வருவது நாட்டிற்கு நல்லது நடப்பதன்  அறிகுறி.

மதுரையில் பிட்டுக்கு மண் சுமந்த ஈசனுக்கு விழுந்த அடி அனைவருக்கும் விழுந்தது போல, கருப்புப்பணத்துக்கு எதிரான மோடி அரசின் நடவடிக்கைகளால் அனைத்துத் தரப்பினருக்கும் உடனடி பாதிப்பு தற்போது ஏற்பட்டுள்ளது. கருப்புப் பணத்தால் ஏற்பட்ட வீக்கத்தை வளர்ச்சி என்று நம்பி வந்த நமக்கு இத்தகைய அதிர்ச்சி தேவையே. இந்தச் சோதனையிலிருந்து நாடு வெற்றிகரமாக மீளும்போது, கருப்புப் பொருளாதாரம் ஓரளவேனும் ஒழிந்து, உண்மையான பொருளாதாரம் சாத்தியமாகும்.

மந்திரத்தால் மாங்காய் விழவைக்க முடியாது. உயர்ந்த நோக்கத்துடன் செய்யப்படும் செயல்களில் சிரத்தையும், வலிகளைத் தாங்கும் பக்குவமும் அவசியம். நாட்டை ஏப்பமிடும் கொழுத்த பணமுதலைகளைக் கட்டுப்படுத்த சிறிது பொறுமையும் அவசியம். விரைவில் பினாமி சொத்துக்கு எதிரான சட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. அப்போது, தற்போதைய நடவடிக்கைகளுக்கு முழுமையான பலன் கிடைக்கும்.

modi-graphics2

மடியில் கனமில்லாதவர்கள் இந்த அரசால் பாதிக்கப்படப் போவதில்லை. அவர்கள் அஞ்ச வேண்டியதும் இல்லை. ஆனால், பல கோடி கருப்புப் பணத்தை வைத்துக்கொண்டு திகைக்கும் ஆசாமிகள், அரசியல்வாதிகள் என்ற போர்வையில் மக்களைக் குழப்ப முயல்கிறார்கள். அவர்களின் பிதற்றலை மக்கள் புறக்கணிக்க வேண்டும்.  நாடு உயர வேண்டும் என்று நினைக்கும் நல்லுள்ளங்கள அனைவரும் இந்தச் செய்தியைப் பரப்ப வேண்டுவதே தற்போதைய கடமை.

மோடி எதிர்ப்பாளர்களுக்கு இப்போதைக்கு அவரை எதிர்த்துப் போராடவும், தங்களை ஒருங்கிணைத்துக் கொள்ளவும்  இது ஒரு வாய்ப்பு. ஜனநாயக அரசியலில் எதிர்க்கட்சிகள் வலுவடைவது நல்லதே. ஆனால், அரசின் நல்ல முயற்சிகளுக்கு ஒத்துழைப்பதும், அதில் உள்ள குறைகளைக் களையப் போராடுவதும்தான் முறையானது. இங்கோ, வங்கிகளில் காத்திருக்கும் மக்களைப் பகடையாக்கி, கருப்புப்பண முதலைகளுக்காக முதலைக் கண்ணீர் விடுகின்றனர்,  மோடி எதிர்ப்பாளர்கள். உள்ளபடியே மோடியின் திட்டங்கள் வெற்றி அடையும்போது,  இன்றைய அவதூறுப் பிரசாரங்களுக்கான விலையை எதிர்க்கட்சிகள் கொடுக்க வேண்டியிருக்கும்.

உலக நாடுகள் அனைத்தும் பாராட்டும் அற்புதமான நடவடிக்கையை,  ‘வரிசையில் காக்க நேர்ந்தாலும் நாட்டுக்காக சிரமத்தைத் தாங்கத் தயார்’ என்று கூறும் சாமானிய மக்கள் ஆதரிக்கும் ஒரு திட்டத்தை, நாட்டுக்கு நெருக்கடி ஏற்பட்டு விட்டதாக ஓலமிட்டு எதிர்க்கும் அனைவரும் கயவர்களே. இவர்களின் ஓலங்கள் பெருகப் பெருக, நரேந்திர மோடி என்ற மகத்தான தலைவரின் மாண்பை மக்கள் மேலும் உணர்வார்கள்.

 

 .

 

10 Replies to “கருப்புப்பண ஒழிப்பு: யாருக்கு நெருக்கடி?”

 1. ஏழைகள் சிரமப்படுகிறார்கள் என்பது உண்மை என்றாலும், கருப்பு பண முதலைகளை ஒழிக்கவேண்டும் என்கிற மோடியின் திட்டத்திற்கு சந்தோஷத்துடன் தோள் கொடுக்கிறார்கள். சாமானியர்களின் துயரத்திற்கு மோடியின் திட்டம் காரணமல்ல; திட்டத்தை தவறாக கையாளும் அதிகாரிகளின் (வங்கி அதிகாரிகள் உள்பட) செயல்பாடே காரணம். சில money exchange ஏஜண்டுகளின் மூலமாக பல வங்கி அதிகாரிகள் லட்ச கணக்கில் நூறு ரூபாய் ஐம்பது ரூபாய் நோட்டுடன் இரண்டாயிரம் ரூபாய் நோட்டும் சேர்த்து பழைய நோட்டுக்கு பதிலாக ஒரே தடவையில், ஒரே ஏஜண்டுக்கு பல முறை கொடுத்துள்ளார்கள். இதற்க்கு கருப்பு பண முதலைகள் கொடுப்பது 20% கமிஷனாகும். சாமானியர்கள் படும் கஷ்டத்திற்கு காரணம் இதுவே. மோடியின் திட்டத்தினால் மரண அடிப்பட்ட கருப்பு பண முதலைகள், தங்களிடம் உள்ள கருப்பு பணத்தை மாற்ற செய்யும் தில்லு முல்லே ஏழைகளின் பாதிப்புக்கு காரணம்.

 2. சரியான, தேசீய நன்மையைக் கருத்தில் கொண்டு எழுதப்பட்ட கட்டுரை.
  நேருவின் சோஷலிஸ ராஜ்யத்தில் வளர்ந்த நாம், ரேஷனுக்கும், குழந்தை பால் பவுடருக்கும், சைக்கிள், ஸ்கூட்டர் டயருக்கும்,சர்க்கரைக்கும் எண்ணெய்க்கும். சோப்புக்கும், சாதாரண ஹெச்.எம்.டி கடிகாரத்துக்கும் க்யூவில் நின்ற அவலத்தை மறக்கவில்லை! இன்னமும் மின் கட்டணம் செலுத்தவும் மற்றும் பிற அரசு அலுவலகங்களிலும் வரிசை காக்கிறோம்! இதெல்லாம் நமது சொந்த நன்மைக்காக. இன்று வங்கிகளில் க்யூவில் நிற்பது, நாட்டைக் காக்க; கள்ளப்பணத் திமிங்கிலங்களைத் தீர்த்துக்கட்ட! இது கூட நாம் செய்யமுடியாதவர்களாக ஆகிவிட்டோமா என்ன?

  சென்ற 50 ஆண்டுகளில் ரூபாய் அதன் மதிப்பை இழந்துவிட்டது. இது சோஷலிச திட்டம் செய்த ஜாலம்! பொருளாதர முன்னேற்றம் என்றால் பணவீக்கம் இருக்கவே செய்யும் என்ற அறைவேக்காட்டு அறிஞர்கள் இதற்கு தூபம் போட்டனர். 1978ல் இருந்த 100 ரூபாயின் மதிப்பு இன்று சுமார் 1400 ரூபாய்! அதாவது, இன்றைய 100 ரூபாய் அன்றைய 7 ரூபாய்க்குச் சமம்![ கையிலே வாங்கினேன், பையிலே போடலே, காசு போன இடம் தெரியலே என்பதுதான் இன்றைய 100 ரூபாயின் கதி.] இதனால் ஓரளவிற்கு அனைவருமே 500. 1000 ரூபாய் நோட்டுக்களை தினசரியாகவே பயன்படுத்த நேர்ந்தது. இந்த வகையில் இவற்றை உயர்மதிப்பு நோட்டுக்கள் என்று சொல்லமுடியாது! இவை நாட்டின் மொத்த பணப்புழக்கத்தில் 86% ஆக இருக்கின்றன! இருந்தாலும் இவை கள்ளப்பணக் கயவர்களுக்கு கைகொடுக்கின்றன. இவர்கள் பொதுமக்களைப் பணயம் வைத்து செயல்படுகிறார்கள்! 500, 1000 ரூபாய் நோட்டு ஒழிப்பு பொதுமக்களையும் ஓரளவு பாதித்திருக்கிறது. இது தவிற்க முடியாதது. தீவிரவாதிகளை கட்டுப்படுத்தும் எந்த நடவடிக்கையும் மற்றவர்களையும் தானே பாதிக்கிறது! இன்று அடையாள அட்டை இல்லாமல் ரயிலில் கூட போகமுடியவில்லையே!

  கோர்ட்டு, கச்சேரிகளில் வழக்குகள் வருஷக் கணக்கில் க்யூவில் நிற்கின்றன! அரசியல் வாதியின்மேலான ஊழல்வழக்கு 18 ஆண்டுகள் ஊசலாடியது! இந்த நிலையில் உச்ச நீதி மன்றம் பேசியிருப்பது பொறுப்பற்ற செயலாகவே தோன்றுகிறது.

  சுதந்திர இந்தியாவில் இதுவரை எந்த பிரதமரும் செய்ய நினைக்காத, செய்ய முன்வராத, செய்ய இயலாத நடவடிக்கையை மோடி எடுத்திருக்கிறார். இத்தகைய அதிரடி நடவடிக்கைக்கு ஒத்திகை பார்க்க முடியுமா என்ன! எதிர்பாராத சில சிரமங்கள் இருக்கவே செய்யும். நாட்டின் நன்மையைக் கருதி அதை நாம் ஏற்றுக்கொள்ளவேண்டும். வியாதி தீர ஊசி போட்டாலும் அப்போதைக்கு வலிக்கத்தானே செய்கிறது!பின்னர் வியாதி மறைவதில்லையா!

 3. நல்ல சிறப்பான உண்மையான கட்டுரை! வாழ்த்துக்கள்!!

 4. மோடி ஆயிரம் ஐநூறு ரூபாய்களை செல்லாதவை என்று அறிவித்து இரண்டுவாரம் கூட முடிய வில்லை. அதற்குள் அதன் விளைவாக என்ன நடந்துள்ளது.

  1. ஜம்மு காஷ்மீரில் இந்திய ராணுவத்தின் மீது கல்லெறியும் கூட்டம் தலை மறைவு ஆகிவிட்டது.

  2.பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்குள் கடத்தி வரப்பட்ட கள்ள நோட்டுக்கள் அனைத்தும் காலாவதி ஆகிவிட்டன.

  3.கல்வித்தந்தைகளும், கல்வித் தாத்தாக்களும் ஆயிரம் ஐநூறாக உள்ள பல ஆயிரம் கோடிகளை மாற்றமுடியாமல் , கணக்கிலும் கொண்டுவரமுடியாமல் அவதிப்படுகிறார்கள்.

  4. ஹவாலா தந்தையர் கருப்பு பணத்தை கையில் ஏராளம் ஆயிரம் ஐநூறாக வைத்துக்கொண்டு திணறுகிறார்கள்.

  5.கோடிக்கணக்கில் லஞ்சப்பணத்தை குவித்து வைத்துள்ள சில ஊழல் அதிகாரிகள் அதிர்ச்சியில் உறைந்து போய்விட்டனர். ஏனெனில் இருப்பது எல்லாமே அவர்களிடம் ஆயிரமும், ஐநூறும் தான்.

  6.இந்திரா காங்கிரஸ், திமுக, கம்யூனிஸ்டுகள், ஆம் ஆத்மி, திரினாமூல் ஆகிய கட்சிகளும், இவற்றின் தலைவர்களும் வேதனையில் மூழ்கி உள்ளனர். தேர்தல் நிதி, கட்சி நிதி, குடும்ப நிதி, கமிஷன் நிதி எல்லாமே ஆயிரமும், ஐநூறு மாக இருந்தால் என்ன தான் செய்வது ? புலம்புகிறார்கள்.

  7.துபாய் போன்ற வெளிநாடுகளில் இருந்து , நான் மோடியை பிரதமர் ஆகாமல் தடுத்துவிடுவேன் என்று பொய்சொல்லி பல ஆயிரம் கோடி பணத்தை ஆட்டையை போட்டவர்கள் எல்லோருமே , அந்த ஹவாலா பணத்தை ஒயிட் ஆக்குவதற்குள் மோடி இப்படி பண்ணிவிட்டாரே என்று அழுகிறார்கள்.

  8.கட்டைப் பஞ்சாயத்து, நிலப்பறி இயக்க தலைவர்கள் தங்களுடன் உள்ள ஆயிரம் ஐநூறு கட்டுக்களை வைத்துக்கொண்டு திக்பிரமை பிடித்தவர்கள் போல உள்ளனர்.

  9 . ஒரு வயதான பாட்டி சொல்கிறார். துணிச்சலான காரியம். எல்லாத்திருடனுங்களும் சேர்ந்து மோடிக்கு ஏதாவது இடைஞ்சல் கொடுத்து, அவருக்கு தலைவலியை உருவாக்க முயற்சிப்பார்கள். எனவே நாம் அனைவரும் மோடிக்கு வரும் எல்லா தேர்தல்களிலும் ஓட்டுப்போட்டு, அவர் கையில் நம் நாட்டை தொடர்ந்து ஒப்படைக்கவேண்டும் என்கிறார்.

  10. இரண்டாயிரம் ரூபாய்க்கு பதிலாக ஐநூறு ரூபாய்களை அச்சிட்டிருந்தால் எல்லோருக்குமே அதிக உபயோகமாக இருக்கும் என்று பெரும்பாலோர் அபிப்பிராயப்படுகிறார்கள்.

  11. கருப்பு பணத்துக்கு விழுந்துள்ளது சாட்டை அடி. சவுக்கடி மரண அடி.

  இந்தியா வாழ்க மோடி வெல்க கருப்பு பணம் ஒழிக

 5. “பிழை அரவிந்திடம் அல்ல; இந்தக் கிறுக்கரை ஆதரித்த ஜெயமோகனிடம் தான் இருந்திருக்கிறது.”என்று வாய் புளித்ததோ அல்லது மாங்காய் புளித்ததோ என்பது மாதிரி எழுதி இருக்குறீர்கள். உங்களை மாதிரி எதையும் ஆராயாமல் உடனுக்குடன் எதிர்வினை ஆற்றுவது அவரின் பண்பல்ல.அதே நேரத்தில் மோதி அவர்களின் கருப்பு மற்றும் கள்ளப்பண ஒழிப்பு நடவடிக்கையைப் பற்றி மிக விரிவாக ஆராய்ந்து ஒவ்வொருவரின் உண்மையான சுயரூபங்களை தோலுரித்து காட்டி தனது கட்டுரையின் மூலம் நாட்டிற்கு மிகப் பெரிய சேவை ஆற்றியிருக்கிறார்.இதை போன்ற கட்டுரையோ,விளக்கங்களோ இதுவரை யாரும் வெளியிட்டதாக எனக்கு தெரியவில்லை.முடிந்தால் தங்கள் செல்வாக்கை பயன் படுத்தி அவரின் அனுமதியுடன் தமிழ் ஹிந்து தளத்திலும் மற்ற ஊடகங்களிலும் வெளியிட்டால் மக்கள் மனத்தில் ஒரு தெளிவு வரும்.அந்தக் கட்டுரையின் சுட்டியை கீழே கொடுத்துள்ளேன்.
  https://www.jeyamohan.in/92500#.WDKM2GewvMk

 6. C-Voter நடத்திய கருத்துக்கணிப்பில் முடிவின் படி 87% மக்கள் மோதி அவர்களின் இந்த நடவடிக்கையை பாராட்டியிருக்கிறார்கள்.மேலும் விவரங்களுக்கு இந்த சுட்டியை சொடுக்கவும்:
  https://www.huffingtonpost.in/2016/11/22/huffpost-bw-cvoter-survey-87-indians-think-demonetisation-is-h/?utm_hp_ref=in-homepage

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *