ப.சிதம்பரம்: தரித்திரனிடம் தார்மிகம் பேசலாமா?

1922 ம் வருடம், நாடு முழுவதும் மகாத்மா காந்தியின் அழைப்பை ஏற்று ஒத்துழையாமை இயக்கம் தீவிரமாக நடந்து வந்தது. அப்போது உத்தரப்பிரதேசத்தில் ஸௌரி ஸௌரா என்ற இடத்தில் போராட்டக்காரர்கள் மீதான அடக்குமுறையைக் கண்டித்து ஒரு காவல் நிலையம் தீ வைத்து எரிக்கப்பட்டது. அதையடுத்து நாடே அதிர்ச்சியில் உறையும் விதமாக, ஒத்துழையாமை இயக்கத்தை நிறுத்திக் கொள்வதாக அறிவித்தார் மகாத்மா காந்தி. அஹிம்சை முறையில் போராட்டம் இருக்க வேண்டும் என்பதை மீறி சிலர் வன்முறையில் இறங்கியதால், தார்மிக ரீதியாக, தனது தலைமையிலான போராட்டத்தை நிறுத்துவதாக அறிவித்தார் மகாத்மா. அதுவே அவரது அஹிம்சை கொள்கை ஆங்கிலேயரிடமும் மரியாதை பெறக் காரணமானது.

இந்நிகழ்வு நடந்து இப்போது 90 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. மகாத்மா காந்தி தலைமை வகித்த அந்த காங்கிரஸ் கட்சியில் இப்போது என்ன நடக்கிறது? வெற்றிகரமாக நடந்துவந்த ஒத்துழையாமை இயக்கத்தையே, சிலரது தவறான நடத்தைக்காக நிறுத்திய மகாத்மா காந்தியின் தார்மிக நெறியுணர்வு கொண்ட அந்த காங்கிரஸ் கட்சியுடன் – சோனியா தலைமையிலான ஊழல் காங்கிரஸ் கட்சியை ஒப்பிடுவதே பாவம். ஆனாலும், பழைய நினைவுகளை எண்ணிப் பார்க்காமல் இருக்க முடியவில்லை.

தற்போதைய மத்திய அரசு, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு. இந்த அரசில் உள்ள 15 அமைச்சர்கள் மீது குற்றப்பத்திரிகை வாசித்திருக்கிறார்கள், ஊழல் எதிர்ப்பு இயக்க போராளிகளான ஹசாரே குழுவினர். பிரதமர் மீதே இக்குழு குற்றம் சாட்டி இருக்கிறது. ஆனால், நமது பிரதமர் எந்த கவலையும் இல்லாமல் ஆள்கிறார். கூட்டணிக் கட்சியான திமுகவை (முன்னாள் அமைச்சர் ஆ.ராசாவை) ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் சிக்க வைத்துவிட்டு தப்பிய புண்ணியவானான மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் மீது தான் ஹசாரே குழுவினர் அதிகமான குற்றச்சாட்டுகளைக் கூறி இருக்கின்றனர். அவரோ, ஹசாரே தான் ஊழல் பேர்வழி என்று கூறி டபாய்க்கிறார்.

இந்நிலையில் தான் அண்மையில், மதுரை உயர்நீதிமன்றக் கிளை முக்கியமான ஒரு வழக்கில் மிக முக்கியமான நிலைப்பாட்டை எடுத்திருக்கிறது. நாட்டின் மிக முக்கியமான அரசியல்வாதியான ப.சிதம்பரம் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்திருக்கிறது மதுரை நீதிமன்றம். இதன்மூலமாக, ப.சிதம்பரத்தின் தார்மிக அடிப்படை குலைந்துள்ளது. ஆனாலும், அவர் தனது வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை ஒரு எறும்புக்கடி போல புறம் தள்ளி இருக்கிறார். வார்டு கவுன்சிலராகக் கூட வெல்லாத தனது மகனைக் கொண்டு தனது ‘பின்களப்’ பணிகளை நிறைவேற்றிவரும் ப.சிதம்பரத்திடம் தார்மிக நெறிமுறைகளை எதிர்பார்த்தால் அது தான் நமது அறிவீனம்.

2009 மே மாதம் நடந்த 15 வது நாடாளுமன்றத் தேர்தலில், தமிழகத்தின் சிவகங்கை மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டார் ப.சிதம்பரம். இவரை எதிர்த்து அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் போட்டியிட்டார். வாக்கு எண்ணிக்கையின்போது ஆரம்பம் முதலே ராஜ கண்ணப்பன் முன்னிலை வகித்து வந்தார். இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை இடையே நிறுத்தப்பட்டது. பிறகு எண்ணப் பட்டபோதும் ராஜ கண்ணப்பனே முன்னிலை வகித்தார். ஆனால், வாக்கு எண்ணிக்கையின் இறுதியில் முடிவு அறிவிக்கப்படாமல் தாமதிக்கப்பட்டது. அப்போதே, ப.சிதம்பரத்தை வெல்லச் செய்ய சதி நடப்பதாக பேச்சு எழுந்தது. அதற்கேற்ப, அதிமுக வேட்பாளர் இல்லாத நேரம் பார்த்து, கடைசி சுற்றில் அதிக வாக்குகள் பெற்றதால், 3,354 வாக்குகள் வித்தியாசத்தில் ப.சிதம்பரம் வென்றதாக அறிவிக்கப்பட்டது.

இதை எதிர்த்து அதிமுகவினர் அப்போதே போராடினர். ஆனால், மாநிலத்தில் இருந்த திமுக ஆட்சியின் ஆசீர்வாதத்துடன், ப.சிதம்பரம் வென்றதாகவே அறிவிக்கப்பட்டு விட்டது. இதை எதிர்த்து, தேர்தலில் இரண்டாமிடம் பெற்ற ராஜ கண்ணப்பன் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் தேர்தல் வழக்கு தொடர்ந்தார். ‘வாக்கு எண்ணிக்கையில் முறைகேடுகள் நடந்திருப்பதால், ப.சிதம்பரத்தின் வெற்றியை செல்லாது’ என்று அறிவிக்கக் கோரி அவர் மனு தாக்கல் செய்தார். அந்த மனு விசாரணைக்கு வரவே மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டன.

இந்நிலையில், கடந்த ஜூன் 7 ம் தேதி, ராஜ கண்ணப்பனின் மனுவை எதிர்த்து ப.சிதம்பரம் தாக்கல் செய்த மனுவை விசாரித்த மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி வெங்கட்ராமன், ப.சிதம்பரத்தின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். தனது மனுவில், ‘ராஜ கண்ணப்பன் அளித்துள்ள புகார்கள் விசாரணைக்கு உகந்தது அல்ல. என்னை நீதிமன்ற கூண்டில் ஏற்றி விசாரிக்கக் கூடாது. இந்த தேர்தல் தொடர்பான வழக்கில் நான் கோர்ட்டில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். மனுவில் இடம்பெற்றுள்ள குற்றச்சாட்டுகளை ரத்து செய்ய வேண்டும்’ என்று ப.சிதமபரம் கோரி இருந்தார்.

ஆனால், மொத்தமுள்ள 29 குற்றச்சாட்டுகளில் இரண்டை மட்டுமே நீக்கிய நீதிபதி, ”ராஜ கண்ணப்பன் மனுவில் 4 மற்றும் 5-வது பாராவில் குறிப்பிட்டுள்ள குற்றச்சாட்டுகள் மட்டும் நீக்கப்படுகின்றன. (ப.சிதம்பரம் நிதி அமைச்சராக இருந்ததால், வங்கி அதிகாரிகள் தேர்தல் அதிகாரிகளாக இருந்ததால், விசுவாசமாக இருந்ததாக குற்றச்சாட்டு, மகன் கார்த்தி சிதம்பரம் மீதான நிதி உதவி குற்றச்சாட்டு) மற்ற புகார்களை பொருத்தவரை இந்த முறைகேடுகள்,சட்ட மீறல்கள் போன்ற குற்றச்சாட்டுகள் இப்போதுள்ள சூழ்நிலையில் நீக்க வேண்டிய அவசியமில்லை. அது சம்பந்தமான மனுதாரரின் கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது. மற்ற குற்றச்சாட்டுக்கள் விசாரிக்கப்படும்” என்று தீர்ப்பளித்தார்.

ராஜகண்ணப்பனின் புகார் மனுவில் இருந்து…

“…சிவகங்கை மக்களவைத் தொகுதியில் தேர்தல் நியாயமாக நடைபெறவில்லை. அதிகாரிகள் பாரபட்சமாக செயல்பட்டனர். அன்னை கஸ்தூரிபா தொண்டு நிறுவனத்தை சேர்ந்த நிர்வாகிக்கு கடந்த 3.5.2009-ம் தேதி அன்று ரூ.20 லட்சம் ப.சிதம்பரம் மகன் கார்த்திக் சிதம்பரம் மூலம் கொடுக்கப்பட்டது. இந்த பணம் 500 பெண்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது. வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டபோது கையும் களவுமாக பிடிபட்டனர். அதை போலீசார் எப்.ஐ.ஆர் கூட பதிவு செய்யவில்லை.

வாக்காளர்கள் மிரட்டப்பட்டனர். தேர்தல் நடைபெறுவதற்கு முன்பு ப.சிதம்பரம் உள்துறை அமைச்சராகத்தான் இருந்தார். அந்த செல்வாக்கை பயன்படுத்தியதால் தேர்தல் நியாயமாக நடக்கவில்லை. தேர்தல் அதிகாரிகளும் அதிக நேரம் பணிபுரிந்துள்ளனர். ப.சிதம்பரம் மகன் கார்த்திக் சிதம்பரம் இந்த தேர்தலில் தீவிர ஏஜெண்டாக செயல்பட்டார்.

மேலும் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் பணிபுரிந்தவர்கள். அவர்கள் சிதம்பரத்தின் வெற்றியை உறுதி செய்யும் வகையிலேயே செயல்பட்டனர். இதை தேர்தல் நடக்கும் முன்பே நான் ஆட்சேபித்தேன். ப.சிதம்பரம் உள்துறை அமைச்சராக நியமிக்கப்படுவதற்கு முன்பு நிதி அமைச்சராக இருந்தார். அந்த காலக்கட்டத்தில் பல்வேறு வங்கிகிளைகளை சிவகங்கையில் தொடங்கிவைத்தார். இதனால் வங்கி ஊழியர்கள், அதிகாரிகள், சிதம்பரத்திற்கு ஆதரவாக செயல்பட்டனர்.

இவற்றையெல்லாம் நான் ஆட்சேபித்தபோது தேர்தல் கமிஷன் கண்டுகொள்ளவில்லை. எனவே சிதம்பரம் வெற்றியை செல்லாது என்று அறிவிக்க வேண்டும்…”

இதையடுத்து ப.சிதம்பரத்தின் தேர்தல் வெற்றி மீண்டும் விவாதப் பொருளாகி இருக்கிறது. நீதிமன்றத் தீர்ப்பை மதித்து தார்மிக அடிப்படையில் ப.சி. பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை நாடு முழுவதும் எழுந்தது. குறிப்பாக பாஜக தலைவர் காட்கரி, தமிழக முதல்வர் ஜெயலலிதா, ஜனதா தலைவர் சுப்பிரமணியன் சுவாமி உள்ளிட்ட பலர் இக்கோரிக்கையை முன்வைத்தனர். தமிழக முதல்வர் ஜெயலலிதா, ப.சியை அமைச்சரவையில் இருந்து பிரதமர் நீக்கி உத்தரவிட வேண்டும் என்றே வேண்டுகோள் விடுத்தார்.

ஆனால், காங்கிரஸ் கட்சியோ, மன்மோகன் சிங் அரசோ இவ்விஷயத்தில் அசைந்து கொடுப்பதாக இல்லை. ‘தேர்தல் வழக்கு விசாரணைக்கு மட்டுமே எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது; அதன் முடிவு வெளியாகும் வரை ப.சி. பதவி விலகத் தேவையில்லை’ என்பதே காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடாக உள்ளது.

மத்திய சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் கூறுகையில், ”சிதம்பரம் ராஜினாமா செய்ய வேண்டும் என, பா.ஜ. கட்சியினர் தினமும் கேட்கின்றனர். அதனால், சிதம்பரம் ராஜினாமா கடிதத்தை அச்சிட்டு தயார் நிலையில் வைத்திருக்க வேண்டுமா? பா.ஜ.க. சொல்லும் போதெல்லாம், சிதம்பரம் ராஜினாமா செய்திருந்தால், அவர் எத்தனை முறை ராஜினாமா செய்திருக்க வேண்டும் என்பதை கடவுள் மட்டுமே அறிவார்” என்று கூறி இருக்கிறார்.

மத்திய நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் நாராயணசாமியோ, ” கடந்த 2009-ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றவர்களை எதிர்த்து 111 வழக்குகள் போடப்பட்டு உள்ளன. ஒருவர் வெற்றி பெற்றதை செல்லாது என அறிவிக்க வேண்டும் என்று கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தவுடன் ராஜினாமா செய்ய வேண்டிய அவசியம் இல்லை. உச்ச நீதிமன்றத்தில் வெற்றி பெற்றது செல்லாது என்று தீர்ப்பு வந்தால் தான் ப.சிதம்பரம் ராஜினாமா செய்ய வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.

இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் ப.சி.யோ, ”தேர்தல் வழக்கில் மதுரை நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு, எனக்கு எவ்விதத்திலும் பின்னடைவை ஏற்படுத்தவில்லை. எனக்கு எதிராக வழக்கு தொடுத்தவருக்குத் தான் பின்னடைவை (?) ஏற்படுத்தியுள்ளது. இது ஒரு தேர்தல் வழக்கு; கிரிமினல் வழக்கு அல்ல. வழக்கு இன்னமும் விசாரணைக்கு வரவில்லை. வெறும் குற்றச்சாட்டுகள் அடங்கிய மனு தான்” என்று முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கப் பார்க்கிறார்.

ப.சி. சொல்வது உண்மையா? அவருக்கு எதிராக தேர்தல் வழக்கு தொடுத்த ராஜ கண்ணப்பன் 29 குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார். அவற்றில் இரு குற்றச்சாட்டுகளை மட்டுமே நீதிமன்றம் நிராகரித்திருக்கிறது. அதாவது ப.சி. மீதான இதர 27 குற்றச்சாட்டுகளில் உண்மை உள்ளதை நீதிமன்றம் ஒப்புக்கொண்டிருக்கிறது. இது ப.சி.க்குத் தானே பின்னடைவு? 2 பெரியதா? 27 பெரியதா? முன்னாள் நிதி அமைச்சருக்கு கணக்கு ஓரளவுக்கேனும் தெரியும் என்று நாம் நம்பலாமா?

ப.சி.யின் கோரிக்கைகளை நிராகரித்த நீதிபதி, தேர்தல் வழக்கை விசாரிக்க சம்மதம் தெரிவித்துவிட்டார். அப்போது ப.சி. நீதிமன்றக் கூண்டில் ஏற வேண்டி வரும். இதே போன்ற நிலைக்காகத் தானே திமுக அமைச்சர்கள் தயாநிதி, ஆராசா ஆகியோர் பதவி விலகினர். இப்போது ப.சி. பதவி விலகத் தேவையில்லை என்கிறதே காங்கிரஸ்! திமுகவுக்கு ஒரு நியாயம், காங்கிரசுக்கு ஒரு நியாயமா?

இனிமேல் இவ்வழக்கு வேகமாக விசாரிக்கப்பட்டாலும் கூட, வழக்கின் முடிவு வெளியாக இரண்டு ஆண்டுகள் ஆகிவிடும். அப்போது ‘ப.சி.யின் வெற்றி செல்லாது’ என்று அறிவிக்கப்பட்டாலும் கூட, அதனால் என்ன பயன் கிடைக்கும்? சிவகங்கை தொகுதியின் மக்களவை உறுப்பினர் என்ற முறையில் தான் அவர் மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றார். ஐ.மு.கூட்டணி அரசு தனது பதவிக்காலம் முழுவதையும் முடிக்கும் போது வரப்போகும் மதுரை நீதிமன்றத் தீர்ப்பால் ஒரு பயனும் இல்லையே? இதே போன்ற அனுபவம் நமக்கு முன்னரே நேரிட்டதை மறக்க முடியுமா?

சேரன் மாதேவி சட்டசபை தொகுதி உறுப்பினராக இருந்த பி.வேல்துரை 2006 தேர்தலில் வென்றது செல்லாது என்று உச்சநீதிமன்றம் 2011 ஏப்ரலில் அறிவித்தது (காண்க: பெட்டிச் செய்தி: 2). அப்போது அவர் தனது எம்ல்ஏ பதவிக்காலத்தைப் பூர்த்தி செய்துவிட்டு ராதாபுரம் சட்டசபை தொகுதியில் வாக்கு சேகரித்துக் கொண்டிருந்தார். தாமதமாகக் கிடைக்கும் தீர்ப்பு அநீதியானது என்ற நீதித்துறை வாக்கியத்தின் அர்த்தம் அப்போது தான் புரிந்தது. அதே நிலையைத் தான் ப.சி.க்கு எதிரான தேர்தல் வழக்கிலும் பெறப் போகிறாமா?

இந்நிலையில் கர்நாடகா மாநிலத்தில் வந்துள்ள ஒரு உயர்நீதிமன்றத் தீர்ப்பும் (11.06.2012) முக்கியத்துவம் பெறுகிறது. தனது ஜாதியை மாற்றி பதிவு செய்து பெல்லாரி தனி தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் சாந்தா பெற்ற வெற்றி செல்லாது என்று பெங்களூரு உயர்நீதிமன்றம் அறிவித்திருக்கிறது. அடுத்த 4 வாரங்களுக்குள் வாக்கு எண்ணிக்கை நடத்தி புதிய முடிவை அறிவிக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீதிமன்றம் கூட கட்சிகளைப் பார்த்துத் தான் தீர்ப்புகளைக் கூறுகின்றனவோ என்ற சந்தேகம் எழ அனுமதிக்கக் கூடாது. ப.சி. தேர்தல் வழக்கில் மூன்று ஆண்டுகள் கழிந்த நிலையில் கிடைத்துள்ள தீர்ப்பு உடனடி பயன் அளிக்கவில்லை என்பதைக் காணும் போது, நீதிமன்ற நடைமுறைகள் மீது நம்பிக்கை குலைகிறது.

தேர்தல் வழக்குகள் மீது ஆறு மாத காலத்துக்குள் முடிவுகளை அறிவிக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு தேர்தல் ஆணையத்துக்கு உண்டு. அதுபோலவே நீதிமன்றங்களும் ஆறு மாத காலத்துக்குள் தேர்தல் வழக்குகளில் இறுதி முடிவை அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை இப்போது எழுந்துள்ளது.

கசப்பான பழைய அனுபவம்

சேர‌ன்மாதே‌வி தொகு‌தி கா‌ங்‌கிர‌‌ஸ் ச‌ட்டசபை உறு‌ப்‌பின‌ர் வே‌ல்துரை வெ‌ற்‌றி செ‌ல்லாது எ‌ன்று 2011, ஏப்ரல் 13 ல் உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌ம் ‌தீ‌ர்‌ப்ப‌ளி‌த்தது. அதுகுறித்த விபரம்:

2006ம் ஆ‌‌ண்டு நடைபெ‌ற்ற ச‌ட்ட‌சபைத் பொது‌‌த்தே‌ர்த‌லி‌ல் கா‌ங்‌‌கிர‌ஸ் சா‌ர்‌பி‌ல் வே‌ல்துரையு‌ம், அஇஅ‌திமுக சா‌ர்‌பி‌ல் மனோ‌‌ஜ் பா‌ண்டியனு‌ம் போ‌ட்டி‌யி‌ட்டன‌ர்.

இ‌தி‌ல் கா‌ங்‌கிர‌‌ஸ் வே‌ட்பாள‌ர் வே‌ல்துரை வெ‌ற்‌றி பெ‌ற்றா‌ர். இ‌ந்த வெ‌ற்‌றியை எ‌தி‌ர்‌த்து அ.இ.அ.‌தி.மு.க சா‌ர்‌பி‌ல் மனோ‌‌ஜ் பா‌ண்டிய‌ன் செ‌ன்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்தில் மனு தா‌க்க‌ல் செ‌ய்தா‌ர். அ‌தி‌ல், தே‌ர்த‌லி‌ன் போது வே‌ல்துரை அரசு ஒ‌ப்ப‌ந்ததாரராக இரு‌ந்தா‌‌ர் எ‌ன்று கு‌ற்ற‌ம் சாட்டி‌யிரு‌ந்தா‌ர்.

இ‌ந்த மனுவை செ‌ன்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ம் ‌நிராக‌ரி‌த்தது. இ‌தை‌த் தொட‌ர்‌ந்து மனோ‌ஜ் பா‌ண்டிய‌ன் உ‌‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌‌த்‌தி‌ல் மே‌ல்முறை‌யீடு செ‌ய்தா‌ர். இ‌ந்த மனுவை ‌விசா‌ரி‌த்த உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌ம், சேர‌ன்மாதே‌வி தொகு‌தி கா‌ங்‌கிர‌‌ஸ் ச‌ட்டம‌ன்ற உறு‌ப்‌பின‌ர் வே‌ல்துரை வெ‌ற்‌றி செ‌ல்லாது எ‌ன்று ‌தீ‌ர்‌ப்‌ப‌ளி‌த்தது. அப்போது வேல்துரையின் எம்எல்ஏ பதவிக்காலம் முடிவடைந்திருந்தது.

ஏற்கனவே ஸ்பெக்ட்ரம் ஊழலில் ப.சி. பெயரைச் சேர்க்கக் கோரி சுப்பிரமணியன் சுவாமி நடத்திவரும் நீதிமன்ற யுத்தம் இறுதிக்கட்டத்தில் உள்ளது. ஏர்செல்- மேக்சிஸ் ஒப்பந்த விவகாரத்தில் நடந்துள்ள ஊழல்களிலும் ப.சி, அவரது மகன் கார்த்தி ஆகியோர் மீது குற்றம் சுமத்தப்படுகிறது. அவற்றையே கண்டுகொள்ளாத காங்கிரஸ் கட்சி, மதுரை நீதிமன்றத் தீர்ப்பை மதிக்கவா போகிறது? தார்மிக நெறிகளை தர்மவான்களிடம் தான் எதிர்பார்க்க முடியும்; தரித்திரர்களிடம் அல்ல. இதுவே ப.சி. தேர்தல் வழக்கு சுட்டிக்காட்டும் உண்மை.

‘அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்’ என்று முரசறைந்த அதே மதுரையில் இருந்து வெளிவந்துள்ள இத்தீர்ப்பு என்ன விளைவை ஏற்படுத்தும்? காலம் கண்டிப்பாக தண்டிக்கும். காத்திருப்போம்.

5 Replies to “ப.சிதம்பரம்: தரித்திரனிடம் தார்மிகம் பேசலாமா?”

 1. கட்டுரை சுமார். புதிய தெரியாத சுவாரசிய தகவல்கள் எதுவும் இல்லை. எதிர்பார்க்கிறபடி இந்துத்துவ கட்சிகளின் எண்ணம், கொள்கை, செயல்திட்டம், போராட்டம், விளக்கங்கள், அறிவிப்புகள் பற்றியும் எதுவும் இல்லை…

 2. “நீதிமன்றத் தீர்ப்பை மதித்து தார்மிக அடிப்படையில் ப.சி. பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை நாடு முழுவதும் எழுந்தது. குறிப்பாக பாஜக தலைவர் காட்கரி, தமிழக முதல்வர் ஜெயலலிதா, ஜனதா தலைவர் சுப்பிரமணியன் சுவாமி உள்ளிட்ட பலர் இக்கோரிக்கையை முன்வைத்தனர். தமிழக முதல்வர் ஜெயலலிதா, ப.சியை அமைச்சரவையில் இருந்து பிரதமர் நீக்கி உத்தரவிட வேண்டும் என்றே வேண்டுகோள் விடுத்தார். ”

  எல்லாம் சரிதான், ஆனால் தார்மீக அடிப்படையில் ப.சி பதவி விலகவேண்டுமென்று வேண்டுகோள் விடுக்கவெல்லாம் என்ன தகுதி உள்ளது தமிழக முதல்வருக்கு ?

 3. Just like the electronic voting systems, even the counting process must be broadcasted across in television and internet. This will ensure absolute transparency of the whole process. Had this been done in Chidambaram-Rajakannappan’s case, this entire drama must have been avoided. The output of the voting device can be redirected to a visual media set, for further broadcasting.

 4. I am somebody disillusioned with Mr.PChidambaram. it is quite possible that there was a miscarriage of justice but the matter is in court. i dont think it is proper for us to ask him to step down. allegations and accusations are not enough. we not is the era of the Mahatma or even the era of Lal Bahadhur Shastri who resigned on moral grounds from the railway ministry due to the accident in aryalur. i am not inclined to expect his resignation on the basis of accsations of some who are tarred by the same brush

 5. திரு சிதம்பரம் நல்ல நிர்வாகி சிறந்த சிந்தனை உள்ளவர். நல்லவர். வல்லவர். அடுத்த பிரதமர் ஆகும் வாய்ப்பு உள்ளவர் என்பதை எல்லாம் தெரிந்து இருந்தும் அவருடைய வெற்றிக்கு பாடு படாத காங்கிரஸ் தொண்டர்கள் முதல் குற்றவாளிகள்.அவர் உண்மையிலே குற்றம் புரிந்தவர் என்றால் தார்மிக அடிப்படியில் விலகுவது நல்லது.
  இந்த கூத்து நடைபெற்ற பொது அதிமுக தலைமை கையை கட்டிக்கொண்டு வேடிக்கை பார்த்தது மட்டுமல்ல பின்னர் சரியான நடவடிக்கை எடுக்க வில்லை என வேட்பாளர் மீது குற்றம் சாட்டியது.
  இதில் பல மர்ம முடிச்சுகள் உள்ளன. கோர்ட் இல் இவை இருப்பதால் இவை வெளியே வராது. ஆனால் சிதம்பரத்தை விரட்ட இப்போதைக்கு அதிமுக தலைமைக்கு கிடைத்த சாட்டை இது என்பதை தவிர இதில் நடந்த மர்மங்கள் என்ன யார் குற்ற வாளி குற்றத்துக்கு துணை போனவர்கள் யார் யார் என்பதை காலம் தான் பதில் சொல்லும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *