மொழிவாரி மாநிலங்கள்: உரிமை கோரலும், நிறைவேறாத கனவும்

மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட்டு ஐம்பது ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி, தமிழகத்தில் ஒரு புதிய குரல் ஒலித்தது. இதனை அரசு விழாவாகக் கொண்டாடி இருக்க வேண்டும் என்றும், மொழிவாரி மாநிலப் பிரிவினை நாளுக்கு (நவ. 1) அரசு விடுமுறை அளிக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்தன. ஆயினும் அந்தக் கோரிக்கைகள் வலுவானவையாக இருக்கவில்லை. அதற்குக் காரணம் இருக்கிறது. உண்மையில் மொழிவாரி மாநிலப் பிரிவினையில் தமிழகத்தின் பங்கு எதுவுமில்லை என்பதே அது.

மொழிவாரி மாநிலப் பிரிவினைக்கு முந்தைய சென்னை மாகாணம்
மொழிவாரி மாநிலப் பிரிவினைக்கு முந்தைய சென்னை மாகாணம்

முதலில் மொழிவாரி மாநிலங்கள் உருவானதன் பின்புலத்தை அறிந்தால்தான் இந்த உண்மை புலப்படும். அதற்கு நாம் சரித்திரத்தில் சில பக்கங்கள் பின்னோக்கிப் பயணிக்க வேண்டும்.

நாடு சுதந்திரம் பெற்றபோது, பிரிட்டீஷார் ஆளுகையின் கீழ் கொண்டிருந்த அதே நிர்வாக வசதிகளுடன் மாகாண அரசுகளும் (மாநிலங்கள்), அதன் ஒருங்கிணைப்பான மத்திய அரசும் அமைக்கப்பட்டன. அது சுதந்திரத்துக்கு முந்தைய நிர்வாக அமைப்பே. ஆயினும், நாட்டில் பெரும்பாலான பகுதிகள் மொழி அடிப்படையில் தனித்து இருந்ததால் மொழி அடிப்படையில் தனி மாநிலங்கள் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை 1950-களில் எழுந்த்து.

பொட்டி ஸ்ரீராமுலு
பொட்டி ஸ்ரீராமுலு

ஆரம்பத்தில் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவும், உள்துறை அமைச்சர் வல்லபபாய் படேலும் அதனை ஏற்கவில்லை. ஆனால், பெரும்பாலான மாநில காங்கிரஸ் கமிட்டிகள் மொழி அடிப்படையிலேயே இயங்கிவந்தன. இந்நிலையில்தான், சென்னை மாகாணத்தின் அங்கமாக இருந்த தெலுங்கு பேசும் மக்கள் அதிகம் வாழும் பகுதிகளைப் பிரித்து அதனை விசால ஆந்திராவாக உருவாக்க வேண்டுமென்ற கோரிக்கை எழுந்தது. இதற்கு வித்திட்டவர், ஆந்திர காங்கிரஸ் தலைவர்களுள் ஒருவரான பொட்டி ஸ்ரீராமுலு.

அவர் தனது கோரிக்கையை முன்னிறுத்தி, சென்னையில் 1952, அக். 19-இல் காலவரையற்ற உண்ணாவிரதம் துவக்கினார். இறுதியில், 1952, டிச. 15-இல் உண்ணாவிரத நிலையிலேயே காலமானார். 68 நாட்கள் உண்ணாவிரதம் இருந்த அவரது தியாகத்தால், தெலுங்கு பேசும் பகுதிகள் தனி மாநிலமாக்கப்படும் என்று பிரதமர் நேரு அறிவிக்க வேண்டி வந்தது. அதன்படி, 1953, அக். 1-இல் தனி ஆந்திரப் பிரதேச மாநிலம் உதயமானது.

சங்கரலிங்கனார்
சங்கரலிங்கனார்

ஆந்திர மாநில உருவாக்கம், மொழிவாரி மாநிலங்களின் உருவாக்கத்துக்கு வழிகோலியது. அதே ஆண்டில் (1953) ஃபஸல் அலி, கே.எம்.பணிக்கர், எச்.என்.குன்ஸ்ரு ஆகியோர் அடங்கிய மாநில மறு சீரமைப்பு ஆணையம் அமைக்கப்பட்டது. அவர்கள் அளித்த பரிந்துரைப்படி 1956-இல் மாநில மறுசீரமைப்பு சட்டம் நிறைவேற்றப்பட்டது. அதன் அடிப்படையில் 1956, நவ. 1-இல் மொழி அடைப்படையில் 14 மாநிலங்கள் அமைக்கப்பட்டன. உடன் 6 யூனியன் பிரதேசங்களும் உருவாக்கப்பட்டன.

பிற்பாடு மேலும் பல மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. மும்பை மாகாணம் 1960-இல் தான் இரண்டாகப் பிரிக்கப்பட்டு குஜராத், மஹாராஷ்டிரா என்ற இரு மாநிலங்களானது. காலப்போக்கில் நாட்டின் மாநிலங்களின் எண்ணிக்கை 29 ஆகவும், யூனியன் பிரதேசங்களின் எண்ணிக்கை 7 ஆகவும் உயர்ந்திருக்கிறது.

1956-இல் நடைபெற்ற மாநிலப் பிரிவினையில் சென்னை மாகாணத்தின் கீழிருந்த மளையாளப் பகுதிகள் கேரளமாகின. கொள்ளேகால், கொல்லங்கோடு, கோலார் தங்கவயல் உள்ளிட்ட பகுதிகள் மைசூரு மாகாணத்துடன் இணைந்து கர்நாடகா ஆகின. ஆந்திரத்துக்கும் கேரளத்துக்கும் கர்நாடகத்துக்கும் பிரிந்துபோன பகுதிகள் போக எஞ்சிய பகுதிகள் அனைத்தும்  ‘சென்னை மாகாணம்’ என்றே அழைக்கப்பட்டன.

நேசமணி
நேசமணி

இதனிடையே, கேரளத்துக்கு கன்னியாகுமரி மாவட்டம் செல்லாமல் தடுக்க,  நேசமணி, கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை, தாணுலிங்க நாடார், டி.வி.ராமசுப்பய்யர் ஆகியோர் போராடி வென்றனர். அதேபோல, திருத்தணி பகுதி ஆந்திரத்துடன் செல்லாமல் தடுக்க ம.பொ.சிவஞானம் போராடி வென்றார்.  ‘மதராஸ் மனதே’ என்று தெலுங்கு அரசியல்வாதிகள் கோஷமிட்டபோது அதை எதிர்த்து ம.பொ.சி.யின் தமிழரசுக் கழகம் போராடியது. இன்று சென்னை தமிழகத்தின் தலைநகராக இருப்பதே அதனால்தான். இவர்கள் எவருமே, திராவிட அரசியல்வாதிகள் இல்லை என்பது குறிப்பிடத் தக்கது.

பெரும்பாலும் தமிழ் பேசும் மக்களே அதிகமாகக் கொண்ட சென்னை மாகாணத்துக்கு  ‘தமிழ்நாடு’ என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் ஒரு காங்கிரஸ் தலைவரால்தான் முன்னிறுத்தப்பட்டது. அவர் தியாகி சங்கரலிங்கம். அதற்காக, அவர் விருதுநகரில் 1956 ஜூலை 27 முதல் 1956 அக். 13 வரை 78 நாட்கள் தொடர் உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்தார். அதன் விளைவாக, காமராஜர் முதல்வராக இருந்தபோது (1962) தமிழ்நாடு மாநிலப் பெயர் மாற்றத்துக்கான தீர்மானம் சட்டசபையில் கொண்டுவரப்பட்டது. பக்தவத்சலம் முதல்வராக இருந்தபோதும் (1964) இதே தீர்மானம் கொண்டுவரப்பட்டது. ஆனால், அவை நிறைவேறவில்லை.

தாணுலிங்க நாடார்
தாணுலிங்க நாடார்

திமுக ஆட்சி அமைத்த பின்னரே, அண்ணாதுரை முதல்வரான பின், தமிழ்நாடு என்று சென்னை மாகாணம் பெயர் மாற்றம் பெற்றது (1968, ஜூலை 18). அதன் காரணமாக, தமிழ்நாடு உருவாக திராவிட இயக்கங்களே போராடியது போன்ற தோற்றம் உருவாகிவிட்டது.

உண்மையில், திராவிட இயக்கங்களின் லட்சியம் இந்தியாவைப் பிரித்து திராவிட நாடு உருவாக்க வேண்டும் என்பதாகும். இப்போதைய தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா மாநிலங்களின் பரப்பளவு, அவர்களது திராவிட நாடு கனவில் இடம் பெற்றது. அதனால்தான் திராவிட அரசியல்வாதிகள் மொழிவாரி மாநிலப் போராட்டங்களில் ஈடுபடவில்லை.

‘அடைந்தால் திராவிட நாடு; இல்லையேல் சுடுகாடு’ என்று முழக்கமிட்டவர் அண்ணாதுரை. மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட்ட பிறகும்கூட, “இப்போதும் திராவிட நாடு கோரிக்கைக்கான காரணங்கள் இருக்கின்றன” என்றார் அவர். அவரது வழி வந்தவர்கள், இன்று மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட்ட நாளைக் கொண்டாட வேண்டும் என்று குதூகலிப்பதன் ரகசியம், அதற்கு தாங்கள் போராடியதான தோற்றத்தை இப்போதைய தலைமுறையிடம் உருவாக்கவே.

இதில் குறிப்பிட வேண்டிய முக்கியமான விஷயம், திராவிடநாடு கோரிக்கையும் சரி, மொழிவாரி மாநிலப் பிரிவினையும் சரி, இரண்டுமே தேசபக்தர்களால் கடுமையாக எதிர்க்கப்பட்டவை. முதலாவது கோரிக்கை பிரிவினையை அப்பட்டமாகக் கொண்டிருந்ததால் முளையிலேயே கிள்ளப்பட்டது. தவிர, அதற்கு திராவிட நாடு கருத்தியலில் அங்கம் வகித்த  தமிழ் தவிர்த்த மலையாளம், கன்னடம், துளு, தெலுங்கு பேசும் மக்கள் வாழ்ந்த பிற பகுதிகளில் ஆதரவு கிடைக்கவில்லை. அந்தத் தலைவர்கள் யதார்த்த நிலவரம் உணர்ந்து மொழிவாரி மாநிலமே போதும் என்ற முடிவை எடுத்தபோது, திமுகவால் அதை வேடிக்கை பார்க்க மட்டுமே முடிந்தது.

கவிமணி தேசிகவிநாயகம்
கவிமணி தேசிகவிநாயகம்

இதுவே சரித்திரம். ஆனால், இப்போது மொழி அடிப்படையில் தமிழ்நாடு அமையப் போராடியது போன்ற தோற்றத்தை உருவாக்க திமுகவும், அதன் தோழமை அமைப்புகளும் முயல்கின்றன. தமிழத்திலேயே கூட, தனிநாடு கோரிக்கைக்கு மக்கள் தயாராக இல்லாததால்தான், தனித் தமிழ்நாடு கோரிக்கையை கைகழுவினார் அண்ணாதுரை. அவர்களது சுருதி  ‘மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுய ஆட்சி’ என்பதாகச் சுருங்கியது.

மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்படுவது நமது தேசிய ஒருமைப்பாட்டுக்கு குந்தகமாகிவிடும் என்று தேசபக்தர்கள் அன்று அஞ்சியது உண்மையாகிவிட்டது. இன்று மாநில எல்லைப் பூசல்கள் பல இடங்களில் பூதகரமாகி வருகின்றன. மஹாராஷ்டிரா- கர்நாடகா இடையே பெலகாவிக்காக நடக்கும் போராட்டம் அதில் குறிப்பிடத் தக்கது. தவிர, பல மாநிலங்களிடையே பாயும் நதிநீரை சுமுகமாகப் பங்கிடுவதில் சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது மொழி அடைப்படையிலான தனிமை உணர்வு. உதாரணம்: காவிரி, மகாநதி, பெரியாறுப் பிரச்னைகள்.

இதிலும் ஒரு விசேஷ அம்சம் உண்டு. ஒரே மொழி பேசும் மாநிலத்துக்குள் கூட நதிநீரைப் பங்கிடுவதில் மோதல் நிகழ்கிறது. தமிழகத்திலேயே ஈரோடு மாவட்டத்தில் பவானி அணை நீரைப் பயன்படுத்துவதில் முன்னுரிமை யாருக்கு என்பதில் உள்ளூர் விவசாயிகளிடம் மோதல் நிலவுகிறது. ஆக, மோதலுக்குக் காரணம் சுயநலம் தானே ஒழிய, மொழியால் விவசாயிகளை ஒருங்கிணைக்க முடியவில்லை என்பது புரிகிறது.

ம.பொ.சிவஞானம்
ம.பொ.சிவஞானம்

மொழிவாரி மாநிலங்களுக்கு வித்திட்டது ஆந்திரப் பிரதேச உதயம். இன்று அதே மாநிலம் இரண்டாகிவிட்டது- ஆந்திரம்- தெலுங்கானா என்று! ஒரே தெலுங்கு மொழி பேசும் மக்கள் வாழும் பகுதிகள் இரு மாநிலங்களாகப் பிரிந்ததன் காரணம் அரசியல் மட்டுமே. இங்கு மக்களை மொழியால் பிணைக்க முடியவில்லை.

பஞ்சாபி மொழியும் வங்க மொழியும் பேசிய மக்கள் மத அடிப்படையில் இரு கூறாகப் பிரிந்ததை நாம் ஏற்கனவே அறிவோம். மத அடிப்படையில் ஒரு நாடாக உருவான பாகிஸ்தான் மொழி அடிப்படையில் இரு நாடாகி, பங்களாதேஷ் உருவானதையும் நாம் அறிவோம். ஆக, மக்களைப் பிணைப்பது மதமோ, மொழியோ அல்ல என்பது தெளிவாகிறது.

மராத்தி பேசும் மக்களை அடிப்படையாகக் கொண்டே மகாராஷ்டிரா மாநிலம் அமைந்தது. இன்று அதே மாநிலத்தில் விதர்ப்பா தனி மாநிலக் கோரிக்கையை அதே மொழி பேசும் மக்கள் தானே எழுப்புகின்றனர்? அதற்கு பொருளாதார ரீதியாக் தாங்கள் பின்தங்கி இருப்பதை விதர்ப்பா பகுதி மக்கள் காரணமாகக் கூறுகின்றனர். தெலுங்கானாவும் அதே காரணத்தால் தான் பிரிந்தது. எனில், மக்களை மொழிவாரியாகப் பிரித்தது, நிர்வாக ரீதியாகப் பலனளிக்கவில்லை என்பது உறுதியாகிறது. மொழிவாரி மாநிலங்கள் அமைந்தால் மாநில முன்னேற்றம் விரைவுபெறும் என்ற கனவு- பகல் கனவே என்பது தெரியவந்திருக்கிறது.

காமராஜர்
காமராஜர்

அதே சமயம், மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோதும், ஒரு நாடாக நாம் தொடர்வதற்கு நமது கலாச்சாரப் பிணைப்புகளே காரணம். ‘செப்பு மொழி பதினெட்டுடையாள்- எனில் சிந்தனை ஒன்றுடையாள்’ என்று நூறு ஆண்டுகளுக்கு முன்னர் மகாகவி பாரதி பாடிய வரிகளின் ஊக்க சக்தி எது? அதுவே நம்மை இணைக்கிறது. அதைத் துண்டாடவே பல முயற்சிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.

அண்ணாதுரை
அண்ணாதுரை

மொழிவாரி மாநிலம் அமைந்ததைக் கொண்டாடத் துடித்தவர்கள் பலரும் தேசிய ஒருமைப்பாட்டுக்கு எதிரானவர்களாக இருப்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. நல்ல வேளையாக தமிழக அரசு அவர்களது முட்டாள்தனமான உளறல்களைப் பொருட்படுத்தவில்லை. குறிப்பாக, நதிநீர்ப் பிரச்னையில் அண்டை மாநிலங்களான கர்நாடகம், கேரளத்தால் தமிழகம் தொடர்ந்து வஞ்சிக்கப்படும் நிலையில், மொழிவாரி மாநில உருவாக்கத்தைக் கொண்டாட தமிழகத்துக்கு யதார்த்த உலகில் இடமே இல்லை.

ஆயினும், கடந்து வந்த பாதையில் நாம் திரும்பிச் செல்ல முடியாது. மொழிவாரி மாநிலங்கள் ஒரு சரித்திர நிகழ்வு. அதன் தோல்வி, நமது உள்ளார்ந்த கலாச்சார ஒருமைப்பாட்டை வலுப்படுத்த வேண்டியதன் தேவையை உணர்த்துகிறது. வீக்கமல்ல, அனைவருக்கும் சமச்சீரான வளர்ச்சியே அடிப்படைத் தேவை என்பதும் உணரப்படுகிறது. இவ்விரண்டையும் வலுப்படுத்துவதே, ஒரு நாடு என்ற முறையில் பண்பட்டு வரும் இந்தியாவை மேலும் உறுதியானதாக்கும்.

 

நல்லதொரு முன்னுதாரணம்!

தெலுங்கு கங்கை கொண்டுவந்த இரு ராமர்கள்
தெலுங்கு கங்கை கொண்டுவந்த இரு ராமர்கள்

தற்போது, ஆந்திரப் பிரதேசம்- தெலுங்கானா மாநிலங்களிடையே கிருஷ்ணா நதி நீரைப் பங்கிடுவதில் மோதல் உச்சத்தை எட்டி இருக்கிறது. இரு மாநிலங்களிலும் தெலுங்கு பேசும் சகோதர மக்களே இருந்தபோதும், இப்பிரச்னை நேரிட்டதன் காரணம் சுயநல அரசியல் தான். சந்திரபாபு நாயுடு, சந்திரசேகர ராவ் ஆகியோரிடையிலான தனிப்பட்ட விரோதம், இரு மாநில மக்களை மேலும் பிரித்தாள்கிறது. ஒரே மொழியால் மக்களை இணைக்க முடியவில்லை!

அதேசமயம், அதே கிருஷ்ணா நதியிலிருந்து தமிழகத்துக்கு தெலுங்கு கங்கை திட்டம் வாயிலாக குடிநீர் வருகிறது. அதனால்தான் சென்னை வாழ்கிறது. மொழி கடந்த தொலைநோக்குப் பார்வையுடன் அதனை சாத்தியமாக்கிய முன்னாள் முதல்வர்கள் என்.டி.ராமராவும், எம்.ஜி.ராமசந்திரனும் இன்றும் போற்றப்படுவதன் காரணம் இதுவே. நாம் பின்பற்ற வேண்டிய முன்னுதாரணமும் இதுவே!

 

 

One Reply to “மொழிவாரி மாநிலங்கள்: உரிமை கோரலும், நிறைவேறாத கனவும்”

  1. இன்றைய இளைய தலைமுறையினர் அறியாத, எளிதில் அறிந்துகொள்ள முடியாத பல விஷயங்களை இக்கட்டுரை விளக்குகிறது.
    ஆனால் இதற்கெல்லாம் மூலகாரணம் எது/யார் என்பதையும் சொல்லவேண்டும். அரசியல்வழி மொழிவாரி மாநிலங்கள் வருவதற்கு முன்பே காங்கிரஸ் கட்சி மொழிவாரி ராஜ்ய முறையில் பிரிக்கப்பட்டுவிட்டது. இத்தகைய பிரிவினைக்கு வித்திட்டவர் காந்தியே.
    மாநிலங்கள் மொழிவாரியாக பிரிக்கப்பட்டதால், இவற்றுக்கிடையே ஒற்றுமை வளரவேண்டும் என்ற மாயையில் மத்தியில் ஹிந்தியே ஆட்சிமொழியாகவும் தேசீயமொழியாகவும் வரவும் இது வழிவகுத்தது! இதற்கும் ஆதி காரணம் காந்தியே. இந்திய மக்கள் அனைவரும் சமய-பண்பாட்டு அடிப்படையில் ஒருவரே என்ற சரித்திர உண்மையை மாற்றி,ஒருபுதிய நிலையை இது உருவாக்கிவிட்டது. ஏதோ ஹிந்தி மொழியினால்தான் தேசீயம் நிலைக்கும் என்ற பிரமையை காங்கிரஸ்வாதிகள் உண்டாக்கினர். இன்றைய மத்திய பா. ஜ.க அரசு இதையே மூர்கத்தனமாக பின்பற்றுகிறது!

    ஆங்கிலேயர்கள் ஏற்கெனவே சமய-பண்பாட்டு அடிப்படையில் நிலவிய இந்திய ஒருமைப்பாட்டு உணர்ச்சியைக்கெடுத்தாலும் [ divide and rule], அதை முழுதும் அழிக்கவோ நசுக்கவோ முடியவில்லை. முதலில் எழுந்த சுதந்திரப்போராட்டம் நாட்டைத் தாயாகக் கருதி எழுந்ததே. வந்தே மாதரம்- இதன் அடிப்படை இந்தியா ஒரு நிலப்பகுதியல்ல- இது இறைசக்தி என்பதுதான்.. இதை ஸ்ரீ அரவிந்தர் மிகத்தெளிவாக விளக்கியிருக்கிறார். ஆனால் காந்திஜி வந்தபிறகு பழைய தலைவர்கள் மறைக்கப்பட்டனர். வந்தே மாதரமும் மறைந்தது.
    ஆங்கிலேயர்களாவது, நிர்வாக அடிப்படையில் மாநிலங்களைப் பிரித்தனர். பிரதேசமொழி இரண்டாம் இடத்திற்குவந்தது. ஆனால் எல்லா மொழிகளும் ஒரு மாநிலத்திற்குள் வழங்கிவந்தன. 1937ல் அமைந்த மெட்ராஸ் மாகாண சட்டசபையில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு, உர்து முதலிய எல்லாமொழிகளிலும் பேசினர்!இவை சட்டசபை அங்கத்தினர்களாலேயே மொழிபெயர்க்கப்பட்டன! இத்தகைய ஒருமைப்பாட்டை அரசியல்வாதிகள் தங்கள் சுயநலத்திற்காகக் கெடுத்தனர். இன்று இதை நாம் நினைத்தும் பார்க்க முடியாது!

    நான் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக 6 மொழிகள் பேசும் 6 மாநிலங்களில் 7 இடங்களில் இருந்திருக்கிறேன்.இதனால் அனுபவத்தில் உணர்ந்தது:
    1. பிறமொழி பேசுபவர்கள் எந்த மாநிலத்திலும் இரண்டாம்தரக் குடிமக்களே. மொழியின் அடிப்படையில் வேறுபாடு கூடாது என்ற அரசியல் சட்டம் வெறும் காகிதம்தான்.பிறமொழி வெறுப்பு என்பது இன்று மக்களிடையே ஊறிவிட்டது.
    2. ஹிந்திமொழி பேசாத அனைவரும் இந்திய அளவில் இரண்டாம்தரக் குடிமக்களே. ஹிந்தியைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள், அத்துடன் ஆங்கிலம் பயின்றால் போதும்- அதைத்தான் செய்கிறார்கள். ஆனால் பிறமொழி பேசுபவர்கள் தாய்மொழி, தேசிய மொழி, ஆங்கிலம் என்ற மூன்று மொழிகளைக் கட்டாயம் பயின்றே தீரவேண்டிய நிலை உருவாகிவிட்டது!

    இது மொழிவாரி மாநில அமைப்பினால் ஹிந்திமொழிதவிர பிறமொழி பேசும் இந்தியர்கள் தங்கள் தலையில் தாங்களே போட்டுக்கொண்ட மண்! ஹிந்திக்காரர்களே முதல்தர இந்தியர்கள்- பிறரெல்லாம் இரண்டாம்தரக் குடிமக்களே! இதன் பின்விளைவுகளை முழுதும் உணரக்கூடிய சக்தியும் அவர்களுக்கு இல்லை! வாருங்கள்- எல்லோரும் சேர்ந்து காந்திஜிக்கு ஜே போடுவோம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *