தந்தையை இழந்த அந்தச் சிறுமி பள்ளியில் ஆங்கிலக் கட்டுரைப் போட்டியில் வென்ற சான்றிதழையும் கோப்பையையும் அம்மாவிடம் காட்டுவதற்காகக் காத்திருந்தாள். அம்மா மட்டுமே அவளது உலகம். அம்மாவோ, குடும்பச் சுமையைத் தாங்க நடிகையானவர். பணி முடித்து பின்னிரவில் அந்தத் தாய் வீடு திரும்பியபோது, கையில் நழுவிய கோப்பையுடனும், நெஞ்சில் அணைத்திருந்த சான்றிதழுடனும் அந்தச் சிறுமி சோபாவிலேயே உறங்கியிருந்தாள்.
அன்புக்காக ஏங்கிய அந்த சிறுமி ஜெயலலிதா தான் என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இதை சிமி கார்வாலுக்கு அளித்த 1999-இல் நேர்காணலில் அவர் குறிப்பிட்டபோது, பார்த்தவர்களின் கண்கள் குளமாகின.
கர்நாடகத்தின் பெங்களூரில் பாரம்பரியமான ஐயங்கார் குடும்பத்தில் பிறந்தவர் ஜெயலலிதா. அவரது தந்தை வழி தாத்தா, மைசூர் மஹாராஜாவின் மருத்துவராக இருந்தவர். ஆனால், அதன் லாபங்கள் எதையும் பெற முடியாத வகையில் அவரது தந்தை ஜெயராம், ஜெயலலிதாவுக்கு இரண்டு வயதாக இருக்கும்போதே இறந்துவிட்டார். நிர்கதியான குடும்பத்தைக் காக்கும் பொறுப்பு அவரது தாய் வேதவல்லிக்கு வந்தது. அவர் நடிகை சந்தியாவானார். இப்படித்தான் பட்டாம்பூச்சியாக சிறகடிக்கும் வயதில் சிறுமி கோமளவல்லியின் வாழ்க்கை திசை திரும்பியது. பின்னாளில் தாயின் அன்பான கட்டளையை ஏற்று திரைத்துறையில் நுழைந்து ஜெயலலிதா ஆனார். அது அவர் விரும்பி ஏற்ற பாத்திரமல்ல.
சிமி கார்வாலுடனான நேர்காணலில், தான் ஒரு சாதாரணப் பெண்ணாக திருமண வாழ்வில் ஈடுபட இயலாது போனதை வருத்தத்துடன் ஜெ. பதிவு செய்திருக்கிறார். “18 வயதில் எனது தாய் திருமணம் செய்து வைத்திருந்தால் நானும் மற்றவர்கள் போல மகிழ்ச்சியாக வாழ்ந்திருக்கக் கூடும்’’ என்ற அவரது கருத்து வெளிப்படையானது; இயல்பானது. அதைச் சொல்ல இரும்பு மனுஷியான அவர் தயங்கவில்லை.
அதுதான் ஜெயலலிதா. அவர் விரும்பிய வாழ்க்கை அவருக்கு அமையவில்லை. அவர் காலத்தால் உந்தப்பட்டு மலைமுகடுகளுக்கும் பள்ளத்தாக்குகளுக்கும் பயணித்தார். முன்னாள முதல்வர் எம்.ஜி.ராமசந்திரனின் கடைக்கண் பார்வை ஜெயலலிதா மீது விழ அவரது வாழ்க்கை திசை மாறிப்போனது. பூ ஒன்று புயலானது.
திரையுலகம் பொதுவாகவே ஆணாதிக்க உலகம். அதிலும் தனது திறமையால் நாயகியை மையமாக்கிய திரைப்படங்களுடன் ஜெ. வலம் வந்தார். 140-க்கு மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார். தமிழ் மட்டுமல்லாது, தெலுங்கு, கன்னடம், மளையாளம், ஹிந்தி, ஆங்கிலப் படங்களிலும் நடித்தவர். நல்ல பாடகரும் கூட. அதை வெளிப்படுத்தியவர், அவரது ஆசான் எம்.ஜி.ஆர். ஆசானின் பின்புலப் பாதுகாப்பு ஒருவகையில் அவரை வேறுபல சிக்கல்களிலிருந்து காத்தது. அவருடன் மட்டுமே 27 திரைப்படங்களில் ஜெ. நடித்திருக்கிறார். அவையே அவரது வாழ்க்கையை புரட்டிப்போட்ட மைல்கற்கள்.
எம்.ஜி.ஆரின் ஆளுமை முன்பு தன்னை அடக்கிக்கொண்ட ஜெயலலிதா, அதற்காக திரையுலகில் மிகவும் பிரபலமாக இருந்தபோதே அதிலிருந்து தன்னை 1980-இல் அவர் விடுவித்துக் கொண்டார். அப்போது அவருக்கு வயது 32 மட்டுமே. பின்னாளில் எம்.ஜி.ஆர். அதிமுகவைத் துவங்கியபோது, அவரை அரசியல் ஆசானாக ஏற்று அரசியல் களம் (1982) கண்டார் ஜெ. இதுவும் அவர் வேண்டி விரும்பி ஏற்ற வாழ்க்கை அல்ல. விதி அவரை, விதி சமைப்பவராக மாற்ற எத்தனித்தது.
அதிமுகவில் கொள்கைப் பரப்பு செயலாளர் (1983), ராஜ்யசபை உறுப்பினர் (1984- 89) பதவிகள் அவரது திறமையை உலகுக்கு எடுத்தியம்பின. ஆயினும், அரசியலிலும் அவருக்கு உள்கட்சியிலேயே எதிரிகள் முளைத்தனர். கட்சியின் கட்டுப்பாடு யாரிடம் என்ற போட்டியில் ஆர்.எம்.வீரப்பனிடம் தோல்வியுற்ற அவர் சிறிதுகாலம் அஞ்ஞாதவாசம் இருந்தார். எம்.ஜி.ஆரின் திடீர் மறைவு மீண்டும் அவரை அரசியலுக்கு இழுத்து வந்தது.
ஜானகி அணி, ஜெயலலிதா அணி என அதிமுக இருகூறுபட்ட நிலையில் எம்.ஜி.ஆரின் அரசியல் எதிரி கருணாநிதி மீண்டும் ஆட்சியைப் பிடித்தார் (1989). அப்போது ஜெயலலிதா முதல்முறையாக சட்டசபை சென்று எதிர்க்கட்சித் தலைவியானார்.
விடுதலைப்புலி ஆதரவு நிலைப்பாட்டும் ராஜீவ் கொலையும் திமுக அரசை வீழ்த்த, மிகக் குறுகிய காலத்தில் தனது அதிருப்தியாளர்களையும் எதிரிகளையும் அரவணைத்து, அதிமுகவை ஒருங்கிணைத்து, இரட்டை இலை சின்னத்தையும் மீட்ட ஜெ, இரண்டே ஆண்டுகளில் காங்கிரஸ் கூட்டணி ஆதரவுடன் அசுரப் பெரும்பான்மையுடன் முதல் முறையாக (1991) முதல்வரானார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை அரசியல் அரங்கத்தில் நிகழ்த்திய முதல் அதிரடி மாற்றம் அது. எனினும், அதன் பின்னணியில் ஜெயலலிதாவின் ராஜதந்திரமும், கடும் உழைப்பும் இருந்தன.
இப்படித்தான் அவர் தமிழக அரசியலின் தவிர்க்க முடியாத சக்தியானார். ஆனால், அவரால் அரசியலையும் ஜனநாயகத்தையும் கடைசி வரை முழுமையாகப் புரிந்துகொள்ள முடியவில்லை. தேர்தலில் வெற்றி பெறுவது மட்டுமே அரசியல் என்பதாகவே அவரது கவனம் மாறிப்போனது. அதன் விளைவே, அவரது ஆட்சி மீது சுமத்தப்படும் ஊழல் புகார்கள்.
மழலைப் பருவத்தில் அன்புக்கு ஏங்கிய சிறுமியாகவும், குமரிப் பருவத்தில் ஆணாதிக்கத் திரையுலகில் அலைக்கழிந்த நடிகையாகவும், அரசியலின் நாற்றங்கால் பருவத்தில் போட்டியாளர்களின் துரோகத்தால் பாதிக்கப்பட்ட தலைவியாகவும் காலம் அவரை புடம்போட்டது. அதன் விளைவாக, தொண்டர்கள் எளிதில் அணுக முடியாத கோட்டைக்குள் அவர் தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டார். அப்போதுதான் அவருக்கு உறுதுணையாகவும், கண்ணீர் துடைக்கும் தோழமையாகவும் சசிகலா மாறினார்.
ஜெயலலிதா- சசிகலா நட்புறவு பல்வேறு ஏற்ற இறக்கங்கள் நிரம்பியதாயினும், சசிகலாவை அவரால் தவிர்க்க முடியவில்லை. அதுவே அவரது உயர்வுக்கும் தாழ்வுக்கும் மாறி மாறி இட்டுச் சென்றது. சசிகலாவும் அன்புத் தோழிக்காக தனது கணவர் நடராஜனையும் குடும்பத்தையும் பிரிய வேண்டி வந்தது. ஜெயலலிதா சிறைக்கு செல்ல வேண்டி வந்த சொத்துக் குவிப்பு வழக்கின் பின்புலம் கூட அன்புத் தோழியால் வந்த வினைதான்.
எனினும், தன் மீதான அனைத்து வழக்குகளிலிருந்தும் நீதிமன்ற நடைமுறைகள் வாயிலாகவே விடுபட அவர் போராடினார். சில வழக்குகளில் வெற்றியும் பெற்றார். ஒவ்வொரு முறை வீழும்போதும், அதைவிட வேகமாக எழுந்து சாதனை படைத்தார். மக்கள் அவர்மீது அவ்வப்போது கோபம் கொண்டாலும், கயவர்களால் பாதிக்கப்பட்ட அப்பாவிப் பெண்ணாகவே அவரை அடையாளம் கண்டனர். அதுவே அவரை மறுபடியும் கோபுர உச்சிக்குக் கொண்டு சென்றது. ஆனால், அதை அவர் பணபலத்தின் மகிமை என்று தவறாகக் கருதினார்; சகவாச தோஷம். அதன் விளைவாக அதிமுக நிர்வாகிகள் வசூல் திலகங்களாக மாறினர்.
1991-96 காலகட்டத்தில் வெள்ளந்தியான தலைவியாக இருந்த ஜெயலலிதாவை அப்போதைய அதிமுக பெரும் தலைவர்கள் ஏமாற்றினர். அவர்களை அவரால் கட்டுப்படுத்த இயலவில்லை. அதன் விளைவாகவே அவர் 1996-இல் சொந்தத் தொகுதியிலும் தோற்று, மிக மோசமான தோல்வியைத் தழுவினார். 2001-இல் அவர் மீண்டு வந்தபோது, ஓரளவேனும் நல்லாட்சி நடத்தவே விழைந்தார். ஆனால், செக்குமாடு தான் பூட்டப்பட்ட வட்ட வளையத்திலேயே இயங்கியாக வேண்டும் என்பதுபோல, காட்சிகள் மாறின. இருப்பினும், கட்சிக்குள் துரோகிகளையும், பசப்பல்காரர்களையும் கண்டுகொண்டு களையெடுத்தார். அதற்கும் கட்சிக்காரர்கள் உபாயம் கண்டனர். சரணாகதி என்ற சாஷ்டாங்க நமஸ்காரமே அது.
ஜெயலலிதா ஒரு பெண்; வெளிப்பார்வைக்கு இறுகிய தலைவியாகக் காணப்பட்டாலும், இளகிய மனம் கொண்ட பெண். எனவே பணிந்தவர்களை அவர் மன்னித்தார். ஆண்களின் கொடுமையை உணர்ந்த பெண் என்பதால், அவர்களின் சரணாகதியை தனது அரசியல் அதிகாரத்தின் அடையாளமாக்கினார். அது ஒரு வகையில் ஆண்களிடம் வெறுப்புணர்வையும் பெண்களிடத்தில் பெருமிதத்தையும் ஏற்படுத்தியது. ஜெ.யின் வெற்றிக்கு பெண்களின் அமோக ஆதரவு அடிப்படையானதாக இருந்ததை இந்தக் கண்ணோட்டத்தில்தான் காண வேண்டும். அந்தக் காலகட்டத்தில்தான் அவர் அன்பு சகோதரி என்ற நிலையிலிருந்து அம்மாவாக உயர்ந்தார்; உயர்த்தப்பட்டார்.
2006—இல் மீண்டும் கருணாநிதி முதல்வராகிட, அதிமுக எதிர்க்கட்சியானது. ஆயினும் அம்மா சளைக்கவில்லை. சிறுபான்மை அரசு என்று கூறி திமுக அரசை வறுத்தெடுத்தார். திமுகவின் அடுத்தடுத்த ஊழல்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் தீவிரமாகப் பணியாற்றினார். ‘தீயசக்தி’ என்று எம்.ஜி.ஆரால். திமுக தலைவர் அடையாளம் காட்டப்பட்டதை மக்களிடம் அவர் நினைவுபடுத்திக்கொண்டே இருந்தார். அடுத்த தேர்தலில் (2011) தனித்து நின்றே ஆட்சியையும் பிடித்தார். அதற்காக தான் பலகாலமாக நம்பிவந்த கொள்கைகளைக் கைவிடவும் அவர் தயங்கவில்லை.
அயோத்தியில் கரசேவைக்கு தடை விதிக்க வேண்டும் என்று பெரும்பாலான அரசியல் தலைவர்கள் கூறியபோது, ராமனுக்கு அயோத்தியில் கோயில் கட்டாமல் வேறெங்கு கட்டுவது என்று கேட்டதுடன், கரசேவையையும் (1992) அவர் ஆதரித்தார். மத மாற்றத் தடைச் சட்டத்தை (2002) கொண்டுவந்தார். இலங்கையில் செயல்பட்ட விடுதலைப்புலிகளை கடுமையாக எதிர்த்தார். பயங்கரவாதிகளுக்கு எதிரான கடும் நடவடிக்கைகளை எடுத்தார். இவை அனைத்தும் 2006 வரை மட்டுமே. பிறகு யதார்த்த அரசியலை உத்தேசித்து தனது கொள்கைகளை வடிவமைத்துக் கொண்டார். வெற்றி மட்டுமே அவரது பிரதானக் கொள்கையானது. வெற்றி பெற இயலாதவர்கள் அரசியலுக்கு லாயக்கில்லை என்பதே அவர் கற்ற அனுபவப் பாடம்.
அப்போது அவர் இஸ்லாமிய பயங்கரவாதிகள் வேறு பெயரில் நடத்தும் அரசியல் கட்சிகளுடன் குலாவத் துவங்கினார். தமிழகத்தில் மதமாற்றத் தடைச் சட்டம் அமலாகாது என்று 2005-இல் அவரே அறிவித்தார். அது மட்டுமல்ல, இஸ்லாமியர்கள் போலவே கிறிஸ்தவர்களும் ஜெருசலேம் உள்ளிட்ட புனிதத் தலங்களுக்கு செல்ல நிதியுதவி அளிப்பதாகவும் அவர் அறிவித்தார். அது மட்டுமல்ல, விடுதலைப்புலிகள் விவகாரத்தில் தலைகீழ் பல்டி அடித்தார். தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட ராஜீவ் கொலைக் குற்றவாளிகளைக் காக்க, மத்திய அரசுடன் மோதல் போக்கைக் கைக்கொண்டார்.
1998-இல் பாஜகவுடன் இணைந்து தேசிய ஜனநாயகக் கூட்டணி கண்டு நாடாளுமன்றத் தேர்தலில் வென்ற அவர், பிற்பாடு அன்றைய திமுக அரசை தனது விருப்பம் போல கலைக்க முன்வராத வாஜ்பாய் அரசுக்கு எதிராக மாறி, 1999-இல் ஆட்சியைக் கவிழ்த்தார். ஆயினும் கார்கில் வெற்றி நாயகராக மலர்ந்திருந்த வாஜ்பாய் மீண்டும் பிரதமரானார்- அதுவும், கருணாநிதி ஆதரவுடன். அதை ஜெயலலிதா கடைசி வரை மறக்கவில்லை.
2006-இல் பாஜகவுடன் அவர் சட்டசபைத் தேர்தலில் கூட்டணி கண்டபோதும், அதனால் அவருக்கு பயன் கிடைக்கவில்லை. அதற்கு அவரது அப்போதைய ஆட்சி மீதான அதிருப்தி அலையும் ஒரு காரணம். ஆனால், பாஜகவுடன் சேர்ந்ததால் சிறுபான்மையினரின் வாக்குவங்கி தன்னிடமிருந்து விலகியதே தனது தோல்விக்குக் காரணம் என்று ஜெ. கருதினார். அதற்குப் பிந்தைய அவரது அரசியல் முடிவுகளில் அந்த எண்ணமே எதிரொலித்தது.
2016-இல் மீண்டும் சட்டசபைத் தேர்தல் வந்தபோது, கூட்டணி பேச முன்வந்த பாஜக தலைவர் வெங்கய்ய நாயுடுவிடம் இதை தீர்மானமாகவே ஜெ. சொன்னார். “பாஜகவுடன் அதிமுக கைகோர்ப்பதால் எங்களுக்கு பெரிய அளவில் லாபமில்லை. அதேசமயம், பாஜக என்ற பூச்சாண்டியைக் காட்டி திமுக அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒருங்கிணைத்துவிடும். வெற்றிக்கு குறைந்த வாக்கு வித்தியாசமே இருக்கும் சூழலில், அப்படிப்பட்ட நிலைமை வரக் கூடாது. நாம் தனித் தனியாகப் போட்டியிடுவதே நல்லது” என்றாராம் ஜெயலலிதா. அவரது அரசியல் பட்டறிவு பளிச்சிட்ட தருணம் அது. அவரது கணிப்பு உண்மையானது. அவர் மீண்டும் நான்காவது முறையாக அதிமுகவை அரியணை ஏற்றினார்.
எம்.ஜி.ஆருக்குப் பிறகு அதிமுக தொடர் தேர்தலில் வென்றது இதுவே முதல் முறை. அது மட்டுமல்ல, ஆறு முறை முதல்வர் பொறுப்பேற்றவர் என்ற சாதனையும் படைத்தார் ஜெ. அதற்கு அவரது அரசியல் எதிரியே காரணமானார்.
2001 மே மாதம் இரண்டாம் முறையாக முதல்வர் பதவியேற்ற அவர், டான்சி ஊழல் வழக்கு, கொடைக்கானல் பிளசண்ட் ஸ்டே ஹோட்டல் வழக்கு ஆகியவற்றில் தண்டிக்கப்பட்டதால் சில மாதங்களில் (செப்டம்பர்) அதை இழந்தார். நீதிமன்றத்தில் போராடி வழக்குகளிலிருந்து மீண்டு 2002 பிப்ரவரியில் மீண்டும் (மூன்றாவது முறை) முதல்வரானார். அந்த இடைக்காலத்தில் ஆட்சியை நிர்வகிக்க ஜெயலலிதாவால் கண்டுபிடிக்கப்பட்டவர் தான் விசுவாசியான ஓ.பன்னீர்செல்வம்.
அதேபோல, சொத்துக்குவிப்பு வழக்கில் நான்காண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு 2014 அக்டோபரில் பெங்களூரின் பரப்பண அக்ரஹாரா சிறைக்குச் சென்றபோது, 2011 மே மாதம் அவர் ஏற்ற (நான்காவது முறை) முதல்வர் பதவிக்கு ஆபத்து வந்தது. ஆயினும் மேல்முறையீட்டில் வென்று, 2015 மே மாதம் மீண்டும் (ஐந்தாவது முறையாக) முதல்வரானார். இந்த இடைக்காலத்திலும் ஓ.பி.எஸ். ஜெயலலிதாவின் பிரதிநிதியாக தமிழகத்தை ஆண்டார். இருமுறை தற்காலிக முதல்வராக இருந்த பன்னீர்செல்வம், தற்போது ஜெ.க்குப் பிறகு அதிமுகவின் அடுத்த முதல்வராகத் தேர்வானது இயல்பானதே. 2016-இல் ஆறாவது முறையாக முதல்வரான ஜெ., இயற்கையுடன் போராட முடியாமல் தலைசாய்த்திருக்கிறார்.
தனது அரசியல்பாதையில் கடும் நெருக்கடிகளைக் கடந்த ஜெயலலிதா, தோல்விகளையும் வெற்றிக்கான படிக்கட்டுகளாக்கிக் கொண்ட ஜெயலலிதா, தனது உடல்நிலையைக் கவனித்துக் கொள்ளவில்லை என்பது வருத்தம் அளிக்கிறது. அதுவே அவரது வாழ்வுக்கு முற்றுப்புள்ளி ஆனது. இன்னும் கொஞ்ச காலம் அவர் இருந்திருக்கலாம் என்று மனம் விம்முகிறது. 1948 பிப். 24-இல் பெங்களூரில் துவங்கிய ஒரு மகத்தான வாழ்க்கை சரிதம் 2016 டிச. 5-இல் சென்னையில் முடிவுற்றது.
கண்டிப்பாக ஜெயலலிதாவும் குறைகள் மிகுந்தவரே. அதுவே மானுட இலக்கணம். ஒருவர் மரணம் அடைந்துவிட்டால் அவரைப் புகழ்வது மட்டுமே சரியானது என்று கருதத் தேவையில்லை. அது முழுமையான ஊடக அணுகுமுறையும் அல்ல.
காஞ்சி சங்கரமடத்தின் பீடாதிபதி ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் புனையப்பட்ட கொலை வழக்கில் கைது செய்யப்பட்டபோது (2004) ஜெ. நடந்துகொண்ட விதம் அவருக்கு என்றும் தீராக் களங்கமே. தன்னை எதிர்ப்பவர்களை நிலைகுலையச் செய்ய எந்த எல்லைக்கும் செல்ல அவர் தயாராக இருந்தார். டி.என்.சேஷன், சந்திரலேகா, ஆளுநர் சென்னா ரெட்டி, சுப்பிரமணியம் சுவாமி, கருணாநிதி, வைகோ, நடராஜன்… என அவரால் பந்தாடப்பட்டவர்கள் பலர். பழிவாங்கும் உணர்ச்சி அவரை சில நேரங்களில் தடுமாற வைத்தது. பத்திரிகை சுதந்திரத்துக்கும் அவரால் சில சமயங்களில் மிரட்டல் விடுக்கப்பட்டது.
அதுபோலவே, கட்சிக்காரர்கள் ஊழலில் திளைக்க, ‘தேர்தலுக்கு பணம் அவசியம்’ என்ற கோட்பாடு காரணமாயிற்று. அதன் விளைவாக அரசுப் பதவிகளும் வேலைவாய்ப்புகளும் ரகசிய விற்பனைக்குள்ளாகின. தனது ஆட்சியின் இறுதிக்காலத்தில் இஸ்லாமிய பயங்கரவாதிகள் மீது மென்மையான போக்கை வெளிப்படுத்துபவராக அவர் மாறிப்போனதால், பல படுகொலைகள் நிகழ்ந்தன. காவல்துறை வேறுவழியின்றி அவற்றை வேடிக்கை பார்த்தது.
தனது அன்புத் தோழியின் உதவிக்காக ஜெ. செய்துகொண்ட சமரசங்களால் பல தவறுகள் நேர்ந்திருக்கின்றன. தனது வாழ்வில் அவர் பட்ட காயங்களும் வலிகளும் கூட சில நேரங்களில் அவரை வழி நடத்தி இருக்கலாம். அந்தக் குறைகளும் இல்லாமல் இருந்திருந்தால், அவர் தமிழகத்தின் நிரந்தர முதலவராக 1991 முதல் இறுதி வரை ஆண்டிருப்பார்.
எனினும், அற்புதமான மொழி ஆளுமை, கனிவான பேச்சு, யாருக்கும் மண்டியிடாத துணிவு, விடாமுயற்சி, ராஜதந்திரம், மக்களைக் கவரும் திட்டங்களை அளிக்கும் அரசியல் அனுபவம், தாய்மை துலங்கும் தலைமை ஆகிய நேர்மறையான குணங்களின் கலவையாகவும் அவர் மிளிர்ந்தார். அவர் என்றும் தனது சமய நம்பிக்கைகளை ஒளித்ததில்லை. அதுவே, அதிமுகவினரை பக்திப் பரவசத்துக்கும் கொண்டுசென்றது.
அவர் அறிவித்த பல மக்கள் நலத் திட்டங்கள், வாக்குகளைக் கவரும் கவர்ச்சித் திட்டங்களே. இலவச ‘அம்மா’ திட்டங்கள் அனைத்துமே அதற்கான இலக்குகளைக் கொண்டிருந்தவை தான். அவற்றால் தமிழக நிதிநிலைமை கவலைக்கிடமானது. ஆனால், அம்மா உணவகமும், திருக்கோயில்களில் அன்னதானமும் அவரால் கொண்டுவரப்பட்ட சீரிய திட்டங்கள் என்று கண்டிப்பாகச் சொல்ல முடியும்.
சோ.ராமசாமி, மனோரமா போன்ற கலையுலக நட்புகள் அவரது வெளிப்படாத மென்மையான மறுபக்கத்தைக் காட்டுபவை. அரசியலிலும் அவர் மிகச் சிறந்த நண்பர்களைக் கொண்டிருந்தார். ராஜீவ் காந்தி முதல் நரேந்திர மோடி வரை, மம்தா பானர்ஜி முதல் தேவே கௌடா வரை அவரது நட்பு வட்டம் மிகப் பரந்தது. மோடியை சிறந்த முதல்வராகவும், சிறந்த பிரதமராகவும் அவர் கண்டார். மத்திய பாஜக ஆட்சிக்கு கூட்டணியில் இல்லாமலே உதவுபவராக அவர் விளங்கினார்.
பிராமணப் பெண்ணாகப் பிறந்த ஒரு பெண் மாபெரும் திராவிடக் கட்சியின் தலைமையை சுமார் 27 ஆண்டுகள் வகித்ததும், ஆணாதிக்க உலகில் ஒரு சாமானியப் பெண் புரட்சித்தலைவியானதும், சதிகளையும் விதிகளையும் மீறி வென்று காட்டிய அவரது விடாமுயற்சியும் தமிழக சரித்திரம். தேசிய ஒருமைப்பாட்டில் அவர் வைத்திருந்த நம்பிக்கை, தமிழகத்தில் அவ்வப்போது தலைகாட்டும் பிரிவினைவாதிகளை மழுங்கச் செய்தது. அதேசமயம், காவிரி, முல்லைப் பெரியாறு உள்ளிட்ட தமிழகத்தின் ஜீவாதார உரிமைகளை நீதிமன்ற உதவியுடன் நிலைநாட்டியதில் அவரது பங்களிப்பும் தொலைநோக்கும் முதன்மையானவை.
1987-இல் எம்.ஜி.ஆரின் சடலம் கிடத்தப்பட்டிருந்த பீரங்கி வண்டியிலிருந்து அவர் வலுக்கட்டாயமாக கீழிறக்கப்பட்டார். அந்த வடுவை காலமே துடைத்துக் கொண்டது. கடலலைகள் தாலாட்டும் மெரீனா கடற்கரையில் எம்.ஜி.ஆர் நினைவிடத்தில், அவருக்குப் பக்கவாட்டிலேயே தனது சடலம் நித்திரை கொள்வதே கூட அம்மாவின் வெற்றிக்கு அடையாளம் தான். ஏனெனில் அவர் ஜெயிக்கப் பிறந்தவர்.
மாபெரும் மானுட சாகரத்தில் அவ்வப்போது சாதனையாளர்கள் தோன்றுகிறார்கள். அவர்கள் மானுட சாகரத்தின் அலைவீச்சுக்கும் தங்கள் ஈர்ப்பு சக்தியால் காரணமாகிறார்கள். அத்தகையவர்களுள் ஒருவர் ஜெ.ஜெயலலிதா. அவருக்கு நமது சிரம் தாழ்ந்த கண்ணீர் அஞ்சலி!
.
hindus culture is not to talk about ills of person after death. you follow.
“தக்கார் தகவிலார் என்பத வரவர் எச்சத்தால் காணப் படும். ” திருவள்ளுவர்
அனுதாபத்தையும் தாண்டி, நடு நிலையிலிருந்து குறை-நிறைகளைச் சுட்டிக்காட்டி எழுதப்பட்ட கட்டுரை.
பிராமணப் பெண்ணாக இருந்தும், பிராமணர்களைத் திட்டும் அரசியல்வாதிகளின் இடையிலும், ஆண் வர்கம் ஆதிக்கம் செலுத்தும் அரசியல்-சினிமா துறைகளிலும் பங்கேற்று பல ஆண்டுகள் நிலைத்திருந்தது ஒரு பெரிய சாதனைதான்.தி.மு.கவினர் சட்டசபையில் செய்த அராஜகத்தையும் தாங்கி, நின்று வென்று காட்டிய நெஞ்சுரம் பாராட்டுக்குரியது. சினிமாவில் நிலைக்க உதவியது கவர்ச்சியும் உழைப்பும் திறமையும் என்றால், அரசியலில் இருந்த ஒரே தகுதி எம்.ஜி.ஆருடனான தொடர்புதான்.இது அடிப்படையில் சினிமா கவர்ச்சியின் தொடர்ச்சி.
ஜயலலிதாவின் அறிவுக்கூர்மை, பேச்சுத்திறன், ஆளுமை என்றெல்லாம் சொல்கின்றனர். ஆனால் திராவிட அரசியலில் இவை எடுபடவில்லை. எந்த விஷயத்திலும் இவர் தன் தனித்தன்மையைக் காட்டியதில்லை. எதனால் அரசியல் ஆதாயம் வருமென்று கருதினாரோ அதையே செய்தார். இதைத்தானே அனைவரும் செய்கின்றனர்?
இவர் தமிழ்நாட்டின் மாபெரும் தலைவராக இருந்தார் என்பதையும் ஏற்பதற்கில்லை. அவர் கட்சியில் அவரே சர்வாதிகாரி. இதுவும் எல்லாகட்சிகளிலும் நிலவும் நிலைதான்.எந்தக்கட்சியிலும் ஜனநாயக மரபு ஏற்கப்படவில்லை. கட்சிகளை மீறிய நிலை என்று பார்த்தால் ஜயலலிதாவின் வட்டம் குறுகியே வந்திருக்கிறது. 1991ல் 59.8% வாக்குகளைப் பெற்ற அம்மையார், இந்தத்தேர்தலில் சுமார் 42% வாக்குகளையே பெற்றார்![ இடையில் வந்த தேர்தல்களில் இவர் கட்சி பெற்ற வாக்கு 52-50%] இருந்தாலும் இவர் கட்சி பெற்ற வெற்றிக்கு அடைப்படை அவரது செல்வாக்கு என்பதைவிட, தி.மு.கவின் ஆணவத்தினால் விளைந்த தவறு என்பதுதான் பொருந்தும். பா.ம.க 11% வாக்குகள் வாங்கி, அ.தி.மு.கவுக்கு எதிரான வாக்குகள் சிதறின.. இது தி.மு.க. கூட்டணியில் சேர்ந்திருந்தால் முடிவு வேறுவிதமாக இருந்திருக்கும்.
திராவிடக் கட்சிகளின் பாரம்பரியம் விசித்திரமானது. தன்னுடன் இருந்த அண்ணாதுரை போன்ற வளரும் தலைவர்களை நம்பாத பெரியார், ஒரு பெண்மணியை வாரிசாக்கினார். அண்ணாதுரையின் மறைவுக்குப் பிறகு, தனது சகாக்கள் அனைவரையும் ஓரம்கட்டி கட்சியை குடும்பச்சொத்தாக்கினார் கருணாநிதி. எம்.ஜி.யாருக்கு சகா என்று யாரும் இல்லை- அவருடைய ஆளுமை அப்படிப்பட்டது. அரசியலுக்கு முற்றிலும் அப்பாலிருந்த ஒரு மாஜி நடிகையை கட்சியில் புகுத்தினார். வேறு சரியான நபர் இல்லாததால் கட்சியினர் நாளடைவில் அதை ஏற்றுக்கொண்டனர். இன்று அம்மையாருக்குப் பிறகும் அதே நிலை உருவாகியிருக்கிறது!கட்சியில் உழைத்தவர்களை விட்டு, திரைக்குபின் ஆடிய/ஆட்டியவர்களிடம் கட்சி தஞ்சமாகிறது!
அம்மையாரின் மறைவு பரிதாபத்திற்குரியது. அதற்கு நாம் இரங்குகிறோம். ஆனால் தமிழ் நாட்டு மக்களுக்காக அதற்கும் மேலாக அனுதாபப் படுகிறோம்! கவர்ச்சி அரசியல் ஓரளவாவது மாறலாம் என்ற நிலையில் திறைமறைவு ஆசாமிகளல்லவா மக்களின் விதியை எழுதுகிறார்கள்! இத்தகைய நபர்களின் வசம் கட்சியை விட்டுச்சென்ற ஒருவரை சிறந்த தலைவர் என எப்படி ஏற்க முடியும்?
சாதனையாளர்தான் சந்தேகமில்லை. ஆனால், இச்சாதனையினால் விளைந்த நன்மையென்ன? ஆட்சியதிகாரம் ஒரு கூட்டத்தினிருந்து மற்றொரு கூட்டத்திற்கு வாய்த்தது. வெறும் ஓட்டுக்காக மலிவான திட்டங்களை அறிவித்து அமல்படுத்தியதில் அப்படியென்ன உலகப்பெருந்தலைவராகிவிட்டார்? பல காரியங்களில் கருணாநிதியே தேவலாம் என்றல்லவா இவருடைய அணுகுமுறையிருந்தது. இஸ்லாமிய ஜிகாதிகள் அம்மையாரின் காலத்தில் பிரகாசமாய் ஒளி வீசி வளர்ந்தது எப்பேர்ப்பட்ட ஒரு ஆட்சிக்கு இலக்கணம். மக்களை முட்டாளாக்கி கையேந்தவைத்துவிட்டு மாபெரும் மக்கள் தலைவரென்று பறைசாற்றிக்கொன்று திரிந்ததில் மிஞ்சியது என்னவெனில் வெறும் தனி மனித திருப்தியும் போலியான வெற்றிக்களிப்பும்தான். இவர் செய்ததில் என்னதான் தனித்துவமிருந்ததென்பது உலகத்திற்கே வெளிச்சம். இறந்தவர்களை பற்றிப் பேசப்படாதென்று ஒரு கோஷ்டி கிளம்பியிருக்கிறது. இதில் என்ன தவறிருக்கிறது. இறந்தவர் ஒரு அரசியல் தலைவர். அவருடைய ஒவ்வொரு செயலும் கண்டிப்பாக விமர்சனத்திற்கு உட்பட்டேயாகும். இதில் பண்பாடு குறைந்துவிடும் என்று ஒளிந்துகொள்வதில் எந்தப் ப்ரயோஜனமுமில்லை. தேசத்தின் தந்தையையே இன்றளவும் விமர்ஷிக்கிறோம் மற்றும் கேள்விக்கு உள்ளாக்குகிறோம். தமிழ் மாகாண முதல்வரென்ன விதி விலக்கா?
திரு. நஞ்சப்பா அவர்களின் பதிவு வார்த்தைக்கு வார்த்தை சத்தியம்.
இஸ்லாமிய தீவிரவாதிகள் பல படுகொலைகள் செய்ததை தடுக்காது, வேறு பக்கம் பார்த்துக் கொண்டு இருந்தார்.- இது மிக மிக தவறு.
ஊழலில் மூழ்கித் திளைத்த, மக்களை சாராயத்தில் மிதக்க வைத்த, தமிழகத்தின் இயற்கைச் சொத்துக்களை எல்லாம் அழித்த, தனக்கு ஜிங்சாக் அடிப்பது மற்றும் கருணாநிதியை மட்டம் தட்டிப் பேசுவது மட்டுமே அரசின் கடமைகள் என்று நினைத்து செயல்பட்ட ஒரு தலைவரை தமிழ்ஹிந்து தளம் இப்படிப் புகழ்வது வெட்கக்கேடு. இறந்துவிட்டதால் மட்டுமே ஒரு தலைவர் உத்தமர் ஆகிவிடமாட்டார்.
ஜெயகாந்தன் ஜெயகாந்தன்தான்! https://siliconshelf.wordpress.com/2016/12/08/அண்ணாதுரை-இறந்தபோது-ஜெயக/
“RV on December 11, 2016 at 11:06 pm
ஊழலில் மூழ்கித் திளைத்த, மக்களை சாராயத்தில் மிதக்க வைத்த, தமிழகத்தின் இயற்கைச் சொத்துக்களை எல்லாம் அழித்த, தனக்கு ஜிங்சாக் அடிப்பது மற்றும் கருணாநிதியை மட்டம் தட்டிப் பேசுவது மட்டுமே அரசின் கடமைகள் என்று நினைத்து செயல்பட்ட ஒரு தலைவரை தமிழ்ஹிந்து தளம் இப்படிப் புகழ்வது வெட்கக்கேடு”. ஜெயலலிதாவின் நிறைகள் மட்டுமே இங்கே பாராட்டப்பட்டிருக்கின்றன. அவரின் குறைகளை கண்டிக்கும் கட்டுரைகளை இதேதளம் வெளியிட்டிருக்கின்றது.
ஸ்ரீ சேக்கிழார் சொல்லியிருக்கும் அமரர் ஜெயலலிதாவின் நிறைகள் எல்லாம் பொய்யானவை என்றால் ஆர்வி ஆதாரத்தோடு நிரூபிக்கலாம். பொத்தாம் பொதுவில் அவரது குறைகளைமட்டும் சுட்டிக்காட்டுவது சரியல்ல.ஆரோக்கியமானதும் அல்ல.
சிவஸ்ரீ விபூதிபூஷண்:
ஒரு தலைவர் மறைந்துவிட்டால் அவர் உத்தமர் ஆகிவிடுவதில்லை. இத்தனை பாராட்டும் தொனி உள்ள இந்தக் கட்டுரையிலேயே கூட ஜெவின் சாதனை என்று எதுவும் இல்லை. அவர் மன உறுதி கொண்டவர், நன்றாகப் பேசுவார் இத்யாதிதான். நாளை கருணாநிதி மறைவுக்கு இப்படி ஒரு அஞ்சலி வந்தால் அது வெட்கக்கேடு என்று நீங்கள் உணரமாட்டீர்களா?
மக்கள் தலைவராக, முதல்வராக, ஜெயலலிதா என்ன செய்தார்? டாஸ்மாக்குகளை மூலைக்கு மூலை திறந்தார்; மன்னார்குடி மாஃபியாவை வளர்த்தார்; லஞ்சம் தலை விரித்தாடச் செய்தார். அவரது வங்கிக் கணக்கில் கோடிக்கணக்கான ரூபாயை கட்டியது யாரென்று தெரியாது என்று நீதிமன்றங்களிலேயே கூறினார். டான்சி விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் இந்தத் தவறை சட்டப்படி தண்டிக்க வழியில்லை என்று சொன்னதால் தப்பித்தார். அவருக்கு சிறை என்றால் மூன்று பெண்கள் எரிக்கப்பட்டனர். குன்ஹா அவரை சிறைக்கு அனுப்பினார். குமாரசாமிக்கு கூட்டத் தெரியாது என்பதால் தப்பித்தார். ஆற்று மணல், நீர்நிலைகள் போன்ற இயற்கைச் சொத்துக்கள் சூறையாடப்படுவதை ஊக்குவித்தார்; சட்டசபையை ஜால்ரா சபையாக மாற்றினார். இவற்றில் எது தவறான தகவல்?
எந்தக் காரணத்துக்காக தமிழ் ஹிந்துவில் இவருக்கு இந்த புகழ் மாலை? அவர் பெண் என்பதாலா? அவர் ஆணாக, பெண்ணாக, அலியாக எதுவாக இருந்தால் நமக்கென்ன? அவர் ஆங்கிலம் நன்றாகப் பேசுவார் என்பதாலா? கருணாநிதி தமிழ் இலக்கியத்தை நன்றாக அறிந்தவர். அதனால் அவர் உத்தமர் ஆகிவிடுவாரா? அவர் போர்க்குணம் படைத்தவர் என்பதாலா? அந்த போர்க்குணத்தால் சராசரி தமிழனுக்கு என்ன லாபம்? பல அவமானங்களைக் கடந்து வந்து அரசியலில் வென்றார் என்பதற்காகவா? அவர் வென்றதால் தமிழ்நாடு தாழ்ந்துதான் போயிருக்கிறதே தவிர உயர்ந்திருக்கிறதா என்ன? கருணாநிதி அதிகமாக தாழ்த்தி இருப்பாரா இல்லை இவரா என்ற கேள்விக்குத்தான் தமிழர்கள் மீண்டும் மீண்டும் விடை தேட வேண்டி இருந்தது. அவருடைய ஒரே சாதனை கருணாநிதியை 15 வருஷம் ஆட்சிக்கு வராமல் தடுத்ததுதான். ஆனால் கருணாநிதியின் சாதனை இவரை 10 வருஷம் ஆட்சிக்கு வராமல் தடுத்தது!
ஒரு மனிதராக அவரது மனோதிடத்தை மதிப்பது வேறு இத்தகைய புகழ் அஞ்சலிகள் வேறு. நாகரீகத்துக்கும் பொய்க்கும் நடுவில் சின்ன கோடுதான் இருக்கிறது. அதை தமிழ் ஹிந்து தளம் இந்த விஷயத்தில் தாண்டித்தான் விட்டது.
RV,
While I do agree with you that JJ had many faults, you cannot totally ignore her contribution either.
She always fought for the states’s rights be it the cauvery issue, mullai periyar issue etc., She did not appease the minorities for votes. In fact, she was the first leader who fielded a non muslim candidate in a constituency like vaniyambadi & he won.
She did not have a person from the minority community as a minister in her cabinet.
She bravely spoke in favour of karseva & hindus.
The law & order situation in TN was much better compared to other CMs.
Some of her schemes like amma canteen & free laptops, though populist, are very beneficial to the people.
RV on December 13, 2016 at 9:19 pm
“ஒரு தலைவர் மறைந்துவிட்டால் அவர் உத்தமர் ஆகிவிடுவதில்லை. இத்தனை பாராட்டும் தொனி உள்ள இந்தக் கட்டுரையிலேயே கூட ஜெவின் சாதனை என்று எதுவும் இல்லை. அவர் மன உறுதி கொண்டவர், நன்றாகப் பேசுவார் இத்யாதிதான்”.
உண்மையைதானே சொல்லியிருக்கின்றார் சேக்கிழார். அப்படியிருக்க அதைபேசாதீர்கள் என்பது எப்படி சரியாகும் ஆர்.வி ஐயா?
ஆர்வி
“ஒரு மனிதராக அவரது மனோதிடத்தை மதிப்பது வேறு இத்தகைய புகழ் அஞ்சலிகள் வேறு. நாகரீகத்துக்கும் பொய்க்கும் நடுவில் சின்ன கோடுதான் இருக்கிறது. அதை தமிழ் ஹிந்து தளம் இந்த விஷயத்தில் தாண்டித்தான் விட்டது”.
எந்தக்கோட்டையும் தமிழ் ஹிந்து தாண்டியதாகத்தெரியவில்லை. இல்லாத நடக்காத எதையும் இங்கே யாரும் எழுதிவிடவில்லை. அப்படி ஏதாவது இருந்தால் அதை நீங்கள் சொல்லலாம்! ஏன் ஜெயலலிதாவின் ஊழல் ஏதேச்சதிகார அரசியல் பாணியை கடுமையாக விமர்சித்து ஒரு கட்டுரை இங்கேயே எழுதலாம். அம்மையார் மறைந்துவிட்டார். அவரிடம் பல குறைபாடுகள் இருந்திருக்கலாம். அவரிடம் சில நிறைகளும் இருந்தன அதனைப்பாராட்டுவதன் மூலம் அவற்றை நாம் உள்வாங்க முயல்கின்றோம் அவ்வளவுதான்.
ஆர்வி
“நாளை கருணாநிதி மறைவுக்கு இப்படி ஒரு அஞ்சலி வந்தால் அது வெட்கக்கேடு என்று நீங்கள் உணரமாட்டீர்களா?” கருணா நிதியால் தமிழுக்கோ, தமிழ் நாட்டுக்கோ, தமிழ் மக்களுக்கோ, பாரத நாட்டிற்கோ அல்லது மானுடத்துக்கோ ஏதாவது நன்மை நடந்திருக்குமானால் அதை சுட்டிக்காட்டி அவருக்கு அஞ்சலி செலுத்தப்படுமானால் அதை வரவேற்பேன். இந்த தளத்தில் மட்டுமல்ல எங்கும். ஆனால் அப்படி எதுவும் நடந்திருப்பதாக எனக்குத்தெரியவில்லை. ஆகவே அப்படி ஒரு அஞ்சலி இங்கே வராது என்று நம்புகின்றேன்.
கருணாநிதியும் ஜெயலலிதாவும் சமம் அல்ல. கருணாநிதியைவிட நிச்சயம் ஜெயலலிதா பரவாயில்லை. இருவரையும் தாங்கிப்பிடிக்கும் திராவிடியம் தமிழகத்தை தாழ்த்தியே வைத்திருக்கின்றது என்பதே எனது புரிதல். நீங்கள் இருவரையும் ஒன்றாகவே பார்க்கின்றீர்கள். ஊழல் என்ற ஒற்றைப்பார்வையில் அப்படித்தான் தெரியும். ஆனால் ஹிந்துசமய வழிபாட்டு மரபுகளை மதித்துப்போற்றுதல், பெண்கள் குழந்தைகள் நலன், விவசாயிகளின் நலன் போன்ற வேறுபல விடயங்களில் அம்மையார் எவ்வளவோ பரவாயில்லை.
சிவஸ்ரீ விபூதிபூஷண்,
// கருணா நிதியால் தமிழுக்கோ, தமிழ் நாட்டுக்கோ, தமிழ் மக்களுக்கோ, பாரத நாட்டிற்கோ அல்லது மானுடத்துக்கோ ஏதாவது நன்மை நடந்திருக்குமானால்…/
இந்த வரையறைப்படி கருணாநிதிக்கு அஞ்சலி வருவது தவறு என்கிறீர்கள். ஜெவால் தமிழுக்கு என்ன நன்மை நடந்துவிட்டது?
தமிழ்நாடு, தமிழ் மக்கள், பாரத நாடு கண்ட பலன் என்ன? – டாஸ்மாக்குகள், லஞ்சம், ஊழல், மணல் கொள்ளை, ஜால்ரா சட்டசபை, வெள்ளத்தில் மூழ்கிய சென்னையை வேடிக்கை பார்த்தது இவை தவிர வேறு என்ன செய்திருக்கிறார்? மானுடத்துக்கு என்ன நன்மை ஏற்பட்டுவிட்டது? – மூன்று பெண்கள் எரிக்கப்பட்டதா? எனக்கு உண்மையிலேயே நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று புரியவில்லை.
உங்கள் வரையறைப்படி பார்த்தால் கருணாநிதிதான் கொஞ்சம் முன்னால் நிற்கிறார் – குறைந்த பட்சம் பழைய தமிழ் இலக்கியங்களைப் பற்றி கொஞ்சமாவது அவரால் தமிழர்கள் அறிந்து கொண்டார்கள், நூலகங்கள் புத்தகங்களை வாங்குவது அவர் காலத்தில் தொடர்ந்தது, அண்ணா நூலகம் என்ற கட்டிடமாவது எழுந்தது. ஜெ காலத்தில் அதுவும் இல்லை.
// ஆனால் ஹிந்துசமய வழிபாட்டு மரபுகளை மதித்துப்போற்றுதல்…//
அதாவது எப்படிப்பட்ட அயோக்கியராக இருந்தாலும் கோவிலுக்குப் போய் நெற்றியில் ஸ்ரீசூர்ணம் இருந்தால் அவர் நம்மவரே என்கிறீர்கள். நீங்கள் ‘தத்தா நமரே காண்’ மெய்ப்பொருள் நாயனார் ரேஞ்சில் அடியார்களைப் போற்றலாம். நெற்றியில் ஸ்ரீசூர்ணம் இருந்தால் புகழ் மாலை சூட்டுவோம் என்பது இந்தத் தளத்தை வழி நடத்தும் விதியாக இருக்கக் கூடாது…
ஜெயலலிதா மிக புத்திக் கூர்மையுள்ளவராகயிருந்தார், அதிமுக கட்சியையும் அதனது தொண்டர்களையும் மிக கட்டுக்கோப்பாக வைத்திருந்தார், சக அரசியல் கட்சியினருக்கும் அதன் தலைவர்களுக்கும் சிம்ம சொப்பனமாகயிருந்தார், மிகுந்த ஆளுமைத்திறன் கொண்டவராகவிருந்தார், இவ்வாறு இன்னும் மேலே சொல்லிக்கொண்டே போகலாம். இத்தனை பாராட்டுக்கும் அவர் உரித்தானவரே. மற்றும், அவரது வாழ்க்கை, ஒரு பெண்மணியின் தனி மனித சாதனை. அதில் எள்ளளவும் சந்தேகமில்லை.
ஆனால், எமது அவதானிப்பில் அவர் தமக்கு கிடைத்த அரசாளும் வாய்ப்பை ஆரம்ப காலங்களில் வீணடித்த ஒரு சாதாரண அரசியல் தலைவராகிவிட்டிருந்தார். தான் என்ற கர்வத்தால், ஆட்சியதிகாரத்தினால் எதையும் செய்யமுடியும் என்பதை ஒவ்வொரு செயல்களிலும் காட்டிக்கொண்டிருந்தார். அவர் அமைதியாயிருந்தது அவரது கடைசி ஐந்தாண்டுகளில்தான் அதுவும் தொடர்ந்து அதிகரித்துவந்துகொண்டிருந்த அடல் உபாதைகளினால்தான். பல உதாரணங்களை சொல்லலாம் அவரது மமதைக்கு. ஒன்று தொண்டர்களைத் தூண்டிவிட்டு மணிசங்கர் ஐயரைத் தாக்கியது, மற்றும், சங்கராச்சாரியாரைக் கைது சொல்ல உத்தரவிட்டது, முதலானவை. ஒரு நாட்டுக்கு தேவை நல்லாட்சியென்பதை மறந்துவிட்டு போட்டிக்காக எல்லாவற்றையும் இலவசமாக கொடுத்து தமிழ்நாட்டின் அரசியலில் இலவசங்களில்லாமல் ஆட்சியமைப்புது மிகவும் கடினம் என்பதை ஒரு நியதியாகவே மாற்றிவிட்டுப்போய்விட்டார். இவரது முதலாவது ஆட்சியில்தான் ஒரு அமைச்சர் மாயவரத்திலிருந்து மயிலாடுதுறைக்கு ரோடு போட்டதாகக் கணக்குக்காட்டி பெரும் தொகையை(அன்றய காலக்கட்டத்தில் அது ஒரு சில ளகரங்களாயிருக்கலாம்) சாப்பிட்டுவிட்டார் என்று செய்யதிகள் வந்திருந்தது. ஆக எப்பெல்லாம் அவர் ஆட்சியில் இருந்தாரோ அப்ப்பெல்லாம் ஓர் கொள்ளைக்கூட்டத்திற்கு திரு மன்மோகண் சிங் தலைமை வைத்திருந்ததுபோல் அம்மையாரும் இருந்தார் என்பதே நிதர்சனம். அதிமுகவிற்கும் திமுகவுக்கும் என்னதான் அப்படி வித்தியாசம்? முன்னவர்கள் திருநீறு மற்றும் குங்குமம் சமேதராகக் காட்சியளிப்பார்கள், பின்னவர்கள் அதை செய்வதில்லை. அவ்வளவுதான்.
தமிழ்ஹிந்து தளம் “தமிழ்நாட்டின் மிகப் பெருந்தலைவர்” என்று அஞ்சலி செய்ததுதான் மிகப்பெரிய நகைமுரனாயிருக்க வேண்டும் சமீபகாலங்களில். நன்றி.
1948 பிப். 24-இல் பெங்களூரில் துவங்கிய ஒரு மகத்தான வாழ்க்கை சரிதம் 1916 டிச. 5-இல் சென்னையில் முடிவுற்றது.correction 2016
Tamil daily DINAMALAR has published the entire property registered in selvi Jeyalalitha name combined with one from Small Ayya Sacikala family.This shows the level of misapprobriation of Public fund and corruption indulged in by Late Jeya.Jeya has never been a boon to TN but a curse.Kuttaiyil ooriya mattai said K.Kamaraj
எவ்வளவு நீளமான பட்டியலைத் தினமலர் வெளியிட்டாலும் தமிழக மக்கள் அதைச்சட்டையே பண்ணவில்லை. தமிழ் பொது மக்களின் எண்ணங்களுக்கும் தளத்தின் எழதும் கருத்து கந்தசாமிகளுக்கும் ஏழாப்பொருத்தம். உயிரோடிருந்தால் மீண்டும் அவர்தான் முதலைமச்சர்…..ஹி…ஹி..
“Born to win” the title itself is not a fitting one. She had lost her life pathetically for reasons well known to her. Insecurity and lack of trust were driving her life throughout.
//Born to win” the title itself is not a fitting one. She had lost her life pathetically for reasons well known to her. Insecurity and lack of trust were driving her life throughout.//
pathologically is the right word. A diabetic that she was, she took it lightly due to her preoccupations with the hustle bustle of Tamil politics. But however high you are, the nature is higher than you and a disease is no respecter of persons. She would have considered her as an average human and taken care of every bit of her bodily health. Being a woman of past middle age, she must have had ailments from hormonal imbalance which bloated her body as it does with most women. She has inherited the genetic defect of accruing fats in her body: her mother is an example and now, her niece shows the same body.
For all this,we cannot blame here as she was a devoted politician. The diabetic reached a level beyond which only amputation of legs is the solution, that may prolong the lifeline of an advanced diabetic. The doctor did exactly that, as with so many diabetics. Who to blame? She? Doctors? No one. To say she has lost her life pathetically is uncharitable remark.
Uneasy lies the head that wears the crown – Shakespeare wrote when he described the conditions of the monarchs whoa are heroes in his historical tragedies. So, a woman at top – that too, lonely – should be on guard always, mistrusting even her closest allies as they are privy to her personal life.
In sum, we cannot blame here at all for such things as health and other psychological complications. If at all blame her for her acts of commissions and omissions as a ruler.
Thank you BSV for your analysis.