“அதோ மன்னரே வந்துவிட்டார்,” என்றார் முனிவர் தருமசாவகன்.
மணிமேகலை சட்டென்று எழுந்து நின்றாள். புண்ணியராசன் தனது துணைவியுடன் தருமசாவகன் பாதங்களை வணங்கினான் .
“மன்னர் பெயரும் புகழும் ஓங்கி நிலைத்திருக்கட்டும்,” என்று முனிவர் வாழ்த்தினார்.
மணிமேகலையை ஒரு பார்வை பார்த்த புண்ணியராசன், “இணையற்ற அழகினைக்கொண்டிருந்தாலும், காமனை அழைக்கும் கண்கள் மட்டும் இல்லாதவளாகத் தோன்றும் இவள் யார்? பார்த்தால் கரம் குவித்துத் தொழும் தன்மையுடைய இந்தப் பெண் யாராக இருக்கும்?” என்று எண்ணினான்.
“யார் அந்தப் பெண்?“ என்று பொதுவாகக் கேட்டான்.
பிரதானி ஒருவன் முன்வந்து, “மன்னரே! ஒருமுறை தெற்கில் உள்ள கிள்ளிவளவன் என்ற மன்னருடன் நட்புறவு கொள்ளுவதற்காக என்னைத் தூது அனுப்பினீர்கள். நானும் கப்பல் ஒன்றை ஏற்பாடு செய்து காவிரிக் கரையை ஒட்டிய புகார்நகரை அடைந்தேன். அந்தப் புகாரில் அழகிலும் சீலத்திலும் இவளுக்கு இணையாக ஒரு பெண்ணை நான் பார்க்கவில்லை. மாதவம் செய்யும் அறவண அடிகள் இவளுடைய பிறப்பு குறித்து தான் அறிந்தவற்றை என்னிடம் கூறினார். இது குறித்த தகவலை நான் திரும்பவந்ததும் தங்களிடம் கூறினேன். நினைவிருக்கிறதா மன்னா? அவள்தான் இவள். ஏதோ ஒரு காரணமாக நாகபுரம் வந்திருக்கிறாள்“ என்றான்.
மணிமேகலை ண்ணியராசன் முன்பு வந்துநின்று, “அரசனே ! முற்பிறவியில் நீர் ஆபுத்திரன் என்ற அந்தண இளைஞனாகப் பிறந்தீர்கள். சென்ற பிறவியில் தங்களிடமிருந்த அமுதசுரபி இந்தப் பிறவியில் என் கைக்கு வந்து சேர்ந்தது. இப்பிறவியில் பதவியும் செல்வாக்கும் பெற்றதால் முற்பிறவிகுறித்து ஏதுமறியாத மயக்கத்தில் இருக்கிறீர்கள். முற்பிறவியில் நடந்தவற்றை அறியாவிட்டாலும் இப்பிறவியில் ஒரு பசுவின் வயிற்றில் பிறந்ததை அறியாமல் இருப்பது எதனால்?” என்று வினவினாள்.
புண்ணியராசன் அவளை ஆச்சரியம் மேலிடப் பார்வையிட்டான்.
“மணிபல்லவத் தீவில் ஒரு புத்தபீடிகை இருக்கிறது, மன்னா. அதனை ஒருமுறை வலம்வந்தால் உங்களுடைய முந்தையபிறவி குறித்து நீங்கள் அறிந்துகொள்ளலாம். அதுமட்டுமல்ல, பற்றுகள் நிறைந்த பிறவியின் தன்மைகுறித்தும் அறிந்துகொள்ளலாம். நான் அங்குதான் செல்கிறேன். முடிந்தால் அந்தத் தீவிற்கு நீங்களும் வாருங்கள், மன்னா!“ என்று கூறிவிட்டு மணிமேகலை கைகளைக் கூப்பியபடி வான்வழியே மணிபல்லவம் நோக்கிச் செல்லத்தொடங்கினாள்.
கதிரவன் மேற்கேசென்று மறையும் முன்பாக அலைகள்வீசும் பூங்கரைகளையுடைய மனிபல்லவத்தீவில் வந்து இறங்கினாள். பிறவியென்னும் நோய்தீர்க்கும் புத்தபீடிகையைக் கண்டு அதனை வலம்வந்து வணங்கினாள். ஏதோ நேற்று நடந்ததுபோலத் தெளிவாக அவளது முந்தைய பிறவியில் நிகழ்ந்த காட்சிகள் கண்முன் ஓடின.
அதோ! முந்தைய பிறவியில் மணிமேகலை காயங்கரை என்ற ஆற்றின் கரையோரம் நடந்துசெல்கிறாள். அங்கே பிரமதருமன் என்ற மாதவ முனிவரைக் கண்டு வணங்கிநிற்கின்றாள். அரசனோடு ஏனைய குடிமக்கள் அவர் கால்களைப் பணிந்து வணங்குகின்றனர். அந்த மகாமுனி பிரும்மதருமன் அறவுரை கூறத் தொடங்குகிறார்.
´மனிதர்கள் மனிதர்களாக வாழவேண்டும். நரகர்களாகவும், விலங்குகளாகவும், பேய்க்கணங்களாகவும் மனிதர்கள் மாறுவதற்கு அவர்கள் செய்யும் தீச்செயல்களே காரணம். மக்களாகவும், தேவர்களாகவும், பிரும்மர்களாகவும் மாற முயற்சியுங்கள். மிக்க அறிவுடையவனும், அனைத்து உண்மைப் பொருள்களையும் குற்றமற்றுக் கற்ற ஒருவன் இந்தப் பூவுலகில் வந்து தோன்றுவான். அவனுடைய அறவுரைகளைக் கேட்டவர்களைத் தவிர ஏனையோர் துன்பம்தரும் பிறவி என்ற பெருங்கடலிலிருந்து தப்புவது அரிது. எனவே எவராலும் தடுக்க இயலாத மரணம் உங்களை வந்தடையும்முன்பு தருமம்செய்வீர்களாக.” என்று அந்த முனிவர் தனது நாவைக் குறுந்தடியாகப் பயன்படுத்தி வாய் என்னும் முரசுமூலம் அனைவருக்கும் முழங்கிக்கொண்டிருக்கிறார்.
முந்தைய பிறவியில் லட்சுமியாக இருந்த மணிமேகலை தனது முந்தைய பிறவியின் கணவன் இராகுலனுடன் அவர் பாதங்களில் வீழ்கிறாள். அப்போது லட்சுமியாக இருந்த மணிமேகலை கேட்கிறாள்.
“புத்தபெருமான் வந்து தோன்றுவதற்கு முன்னரே இந்திரன் மணிபல்லவத் தீவில் இந்தப் பத்மபீடத்தைக் கொண்டுவந்து நிறுவியதன் காரணம் என்ன, ஐயனே?”
“இந்தப் பீடத்தில் முற்றும் துறந்து உலகிற்கு அறநெறியாளனாகத் தோன்றப்போகும் புத்தபிரானைத் தவிர வேறு எந்த மானிடப்பிறவியும் அமரமுடியாது. எனவே அந்தப் பீடத்தில் அமர்வது வேறு யாருமில்லை, புத்த பிரான்தான் என்பதைத் தான் அறிந்துகொள்ளவே இதனை அமைத்தான், இந்திரன். மேலும் இந்தப் பீடத்தை வலம்வந்து வணங்குபவர்களுக்கு முற்பிறவியின் இரகசியத்தை அறியும் திறனையும் இந்திரன் இந்தப் பீடத்திற்கு ஏற்படுத்தினான்.” என்று பிரும்மதருமன் கூறுகிறான்.
இதனை இவ்வாறு மணிமேகலை அறிந்துகொண்டிருந்தாள்.
அதே நேரத்தில் நாகபுர மன்னனான புண்ணியராசன் தனது பிறப்பின் இரகசியங்களைத் தனது தாயும் மகாராணியுமான அமரசுந்தரிமூலம் அறிந்துகொண்டான். தனது தந்தை ஒரு முனிவர் என்றும், தனது தாய் ஒரு பசு என்றும், மாதவ முனியின் புண்ணியத்தால் தான் மற்ற குழந்தைகள்போலக் குடல் மாலை சுற்றிப் பிறக்காமல் ஒரு பொன் முட்டையில் உருவானதையும், பிறகு பூமிசந்திரன் என்ற மன்னன் தன்னை முனிவனின் அருளால் கொண்டுவந்து வளர்த்ததையும் அறிந்துகொண்டான். சென்ற பிறவியில் தனது தாய் தனக்கு இழைத்த துன்பத்தை இந்தப் பிறவியில் எண்ணி வேதனைப்பட்டான்.
ஓர் அரண்மனையின் தோற்றம் எப்படி இருக்கவேண்டும்? வேற்படையைத் தாங்கிய வேற்று நாட்டு அரசர்கள் அரசியல்பொருட்டு அரண்மனையில் உள்ள மன்னவனின் பேட்டிக்காக வாசலில் காத்திருப்பார்கள். இது அரண்மனையின் வெளியில். உள்ளே அரசசபையில் மன்னன் சிங்காதனத்தில் அமர்ந்து அரசுப் பணிகளைப் பார்த்துக்கொண்டிருப்பான். அவனுக்கு உதவியாக வயதிலும் அனுபவத்திலும் மூத்த அதிகாரிகள் துணையிருப்பார்கள். ஒய்வு நேரங்களில் நாடகக் குழுவினர் நடத்தும் நாடகங்களையும், நாட்டியங்களையும் மன்னரும், அரண்மனை வாசிகளும் கண்டு களிப்பார்கள், அல்லது இன்னிசை நிகழ்த்துபவர்களின் இசையைக் கேட்டு ரசிப்பார்கள். இதற்கும்மேலே அந்தப்புரங்களில் அரசர்முகம் காணாமல் அரசமகளிர் வாடி இருப்பார்கள். அப்போது மன்னன் சரியான சமயம் பார்த்து, அவர்கள் ஊடல் தீர்க்கும் பொருட்டு அவர்கள் காலில் (காமம் வெட்கம் அறியாது) வீழ்ந்து ஊடலைத் தணிப்பான். ஊடல் தணிந்தபின்பு காதல் மணவாட்டியை தோளோடுசேர்த்து அவள் கொங்கைகளில் செங்குழம்புகொண்டு சித்திரம் தீட்டுவான். நெருக்கிக் கட்டிய மலர்மாலையைத் தலையில் சூடுவான். மணம்வீசும் முல்லைமொட்டுக்கள்போன்ற பற்களை உள்ளடக்கிய இதழ்களில் ஊறும் இன்பநீரினை அள்ளிப் பருகுவான். அப்போது அந்த மாதரசி தனது மதிபோன்ற முகத்தில் உள்ள இரண்டு கரிய விழிகளில் செம்மையான கடைக்கண் பார்வையை வீசுவாள். அதனைக் கண்டு மன்னன் கலக்கமுறுவான். இப்படியொரு வேளைக்காகக் காத்திருந்த காமவேள் தனது கரும்புவில் வளைத்து மலர்க்கனைகளால் அவர்களை வீழ்த்துவான். பிறகு மன்னனும் அரசமகளிரும் காமக்களியாட்டத்தில் ஈடுபடுவர். இது இயல்பு. எங்கும் நடப்பது.
ஆனால் புண்ணியராசன் மணிமேகலையைச் சந்தித்தபின் அவளைப் பற்றித் தெரிந்துகொண்டவுடன் அவன் மனநிலை மாறத்தொடங்கியது.
அரசன் முன்னும் பின்னும் நடக்கத் தொடங்கினான்.
“மந்திரியாரே!“
“சொல்லுங்கள், மன்னா!”
“என்றோ என் காதில் தர்மசாவகன் என்ற முனிவன் கூறிய அறவுரைகள் மீண்டும் செவிகளில் ஒலிப்பதற்கு என்ன காரணம்?”
“மணிமேகலை!“
புண்ணியராசன் ஓடிச்சென்று மந்திரியை மார்புறத் தழுவிக்கொண்டான். அவன் உடல் உணர்ச்சிப்பெருக்கில் நடுங்கிக்கொண்டிருந்தது.
மன்னன் மனம் மாறிவிட்டான் என்பதை மந்திரி ஜனமித்திரன் அறிந்துகொண்டான். மன்னன் மீதிருந்த மரியாதை தான் அவனைவிட வயதில் பெரியவன் என்றாலும் மந்திரியைக் கைகூப்பித் தொழச்செய்தது.
“எம்முடைய அரசர் வாழி. அது ஒரு காலம் அரசே. உங்கள் தந்தையார் ஆட்சி பொறுப்பில் இருந்த காலத்தில் இந்த நகரில் உள்ள உயிர்கள் எல்லாம் அல்லலுறும் வகையில் வானம் பன்னிரண்டு ஆண்டுகள் தொடர்ந்து பெய்யாமல் பொய்த்தது. என்ன அவலங்கள் எல்லாம் நிகழ்ந்தன தெரியுமா? பெற்ற தாயானவள் கிடைத்த உணவை அழும் தன் குழந்தைகளுக்குக் கொடுக்காமல் பசிக்கொடுமை காரணமாகக் தானே தின்னும் அவலம் நேரிட்டது. அந்த நேரம்தான் கடுங்கோடை காலத்தில் மழைமேகம் தோன்றியதைப்போல நீ இந்த நகரில் தோன்றினாய். முனிவரிடமிருந்து உன் தந்தை உன்னை இங்கே தருவித்தபின்பு உனக்குப் பிறகு இந்த நிலத்தில் தோன்றிய உயிர்கள் பசியின்றி வருந்தாமல் இருக்க ஒவ்வொரு பருவமும் தவறாமல் மழை பொழிகிறது. நீ வந்து தோன்றியபின்பு பசி என்றால் என்னவென்றே இந்த நகர மக்கள் அறியாமல் உள்ளனர். இப்படிப்பட்ட சமயத்தில் விட்டுவிட்டுச் செல்கிறேன் என்றால் தாயைப் பிரியும் குழந்தைகளைப்போல இந்த நகர மக்கள் கதறத்தொடங்கிவிடுவார்கள் மன்னா.
“இந்த உலகை விடுத்து நன்னெறிகளைப் பின்பற்றுவதன் மூலம் மேலான மோட்ச உலகை அடைய நீ விரும்பினால், இந்த நகரத்து மக்கள் எக்கேடு கேட்டும் போகட்டும் எனக்கு என் இன்பம்தான் பெரிது என்று நீ நடந்து கொள்வதுபோல ஆகிவிடாதா. மன்னா?”
“நான் முற்றிலும் இந்த நகரத்தை ஒதுக்கி விட்டுச் செல்லவில்லை, மந்திரியாரே. மணிமேகலை சொன்னதிலிருந்து அந்த மணிபல்லவத் தீவிலிருக்கும் பத்மபீடத்தை வலம்வந்து வணங்கவேண்டும் என்ற ஆவல் மிகுகிறது. நான் மணிபல்லவம் செல்கிறேன். நான் வரும்வரையில் நீங்கள்தான் எனக்குப்பதில் இந்த நகரத்தைக் காவல்காக்கவேண்டும்!” என்றான்.
மன்னன் சொல்லுக்கு மறுசொல் ஏது? உடனே மரக்கலங்களைச் செலுத்தும் வினைஞர்கள் வரவழைக்கப்பட்டனர். உறுதியான கலம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு கடற்பயணத்தில் அனுபவப்பட்டவர்களுடன் மன்னன் மணிபல்லவத் தீவு நோக்கிப் புறப்பட்டான்.
தூரத்தில் பெரிய கப்பல் ஒன்று வருவதை மணிமேகலை பார்த்தாள். சோழமன்னனின் புலிக்கொடி கம்பீரமாக அசைந்துகொண்டிருப்பதைக் கண்டு மனம்மகிழ்ந்து, புண்ணியராசன்தான் என்பதைத் தெரிந்துகொண்டு கப்பல்நோக்கி வேகவேகமாக ஓடினாள். அரசனை வரவேற்று அழைத்துக்கொண்டு பத்மபீடம் இருக்கும் இடத்தை மும்முறை வலம்வந்து வணங்கினாள். மன்னனையும் வணங்கச் சொன்னாள்.
“அரசே, இதுதான் அந்தப் பத்மபீடிகை. கைக்கண்ணாடியில் முகம் தெளிவாகத் தெரிவதுபோல இதன்முன் விழுந்து வணங்கினால் நம்முடைய முந்தைய பிறவிகளைத் தெளிவாகக் காட்டும் தன்மையுடைய பீடம் இது,“ என்றாள்.
“அதோ ஒரு மழைநாளில் நான் தென்மதுரை மாநகரில் கலைமகளின் ஆலயத்தில் இருக்கிறேன். மழையினால் உணவு எதுவும் கிடைக்காமல் பலரும் என்னிடம் வந்து பசி பசி என்று கூவுகின்றனர். நான் சரஸ்வதியிடம் முறையிடுகிறேன். அந்தத் தேவி என் கைகளில் அள்ள அள்ள உணவு குறையாத திறன் பெற்ற அமுதசுரபி என்ற பாத்திரத்தை என்னிடம் கொடுக்கிறாள். நான் அதனைக்கொண்டு உலக மக்களின் பசி போக்கக் கிளம்புகிறேன் மணிமேகலை. எல்லாம் என் கண் முன்னால் தெளிவாகத் தெரிகிறது. நன்றி மணிமேகலை. தேவர்களாக இருந்தாலும், மனிதர்களாக இருந்தாலும் உன்னைப் பார்த்தால் அவர்களுக்குத் தீயசொற்கள் எதுவும் எழா. எனக்கு எவ்வளவு பெரிய உதவிபுரிந்திருக்கிறாய். உன்னுடைய அருள்மிகுந்த சரணம்தரவல்ல திருவடிகளை எந்தநாளும் மறக்கமாட்டேன் தேவி!“ என்று மணிமேகலையை ஏற்றிக் கூறினான்.
பிறகு இருவரும் எழுந்து தீவின் தென்கிழக்கு திசைக்குச் சென்று அங்கு இருந்த கோமுகி என்ற பொய்கையின் கரையில் ஒரு புன்னைமரத்தின் நிழலில் அமர்ந்தனர்.
தீவதிலகைக்கு அவர்கள் இருவரையும் பார்த்ததும் மகிழ்ச்சியானது.
“மன்னுயிர்களின் பசிப்பிணியைப் போக்கும் மருந்தாகிய உணவினைக்கொண்டு உலக மக்களின் துயர் துடைக்கும் நல்ல உள்ளங்களே உங்கள் வருகை நல்வரவாகட்டும். அன்று உன்னுடன் கப்பலில் வந்தவர்கள் உன்னை இங்கே விட்டுச் சென்றபின்னர் உன்னைத்தேடி மீண்டும் இங்கே வந்து பார்த்தார்கள் அதற்குள் நீ உண்ணாநோன்பிருந்து இறந்ததை அறிந்த ஒன்பது செட்டிக்குலத்தைச் சேர்ந்தவர்கள் தாங்களும் நீ இறந்த இடத்தின் அருகிலேயே உண்ணாநோன்பிருந்து தங்கள் உயிரை விட்டனர். அவர்களுடைய எலும்புகளைப் பார். மன்னவா! உன் உடலும் என்பு தோல் போர்த்த தோற்பை என்பதை உணர்வாயாக. நீ உன்னுடைய உயிரைக் கொன்றாய். உன்னைக் காணவந்த ஒன்பது செட்டிமார்களின் உயிரைக் கொன்றாய். அவர்களைத் தேடவந்த ஏனைய மக்களையும் கொன்றாய். பார், நீதான் அரசனாக அமர்ந்திருக்கிறாய்” என்றது தீவதிலகை என்ற பெண் தெய்வம்.
தீவதிலகை மணிமேகலையின் பக்கம் தனது பார்வையை ஓட விட்டாள்.
“”பலரும் வணங்கத் தக்க ஓர் அமுதசுரபி பாத்திரத்தைக் கையினில் ஏந்தியுள்ள பெண்ணே! உன்னுடைய புகார்நகரத்தைக் கடல் வயிற்றிற்குள் விழுங்கி விட்டது.” என்றது.
“ஐயோ! என் தாய், தோழி, ஆசான் இவர்களின் நிலை என்னவாயிற்று?”
“அவசரப்படாதே. முழுவதையும் கூறுகிறேன்” என்று அவளைச் சமாதானப் படுத்திய.தீவதிலகா தெய்வம், “உனக்குப் பீலிவளையைத் தெரியுமா?” என்று வினவியது..
“தெரியும். நாகநாட்டு அரசனின் மகள்.”
“அவளேதான் ஒருமுறை புகார் நகரம் வந்து, உங்கள் சோழமன்னன் நெடுங்கிள்ளியின் மையலுக்கு ஆட்பட்டு அவனுடன் சேர்ந்து ஒரு ஆண் மகவை ஈன்றாள். பிறகு அந்தப் பச்சிளம் குழந்தையுடன் நாகநாடு திரும்பினாள். குழந்தையுடன் வந்தவள், தினமும் கடல் கரையில் கப்பல் ஏதாவது வருகிறதா என்று காத்திருப்பாள்.
“ஒருநாள் கடல் வணிகம் செய்துவிட்டு நாடு திரும்பிக்கொண்டிருந்த கம்பளன் செட்டி என்பவன் ஒய்வு எடுக்க மணிபல்லவத் தீவில் ஒதுங்கினான். பீலிவளை அவன் அருகில் சென்று,. ‘புகார் நகரிலிருந்து வரும் வணிகரே உங்கள் வரவு நல்வரவாகட்டும். நீங்கள் மீண்டும் காவிரிப் பூம்பட்டிணம் செல்லும்போது இந்த ஆண்மகவை எடுத்துச் செல்லுங்கள். இவன் எனக்கும் உங்கள் அரசருக்கும் பிறந்தவன்.“ என்று அந்த மகவை அவனிடம் தந்தாள். செட்டியும் அவளை வணங்கி மகிழ்வுடன் அந்த ஆண்மகவை வாங்கிக்கொண்டு கப்பலில் பயணித்தான்.
“ஆனால் விதி யாரை விட்டது? அன்றிரவு வீசிய கடும் புயலை எதிர்கொள்ள முடியாமல் அந்தக் கப்பல் கவிழ்ந்தது. தப்பிச் சென்றவர்கள் பீலிவளை குழந்தையைக் கொடுத்ததையும் அந்தக் குழந்தை புயலில் சிக்கிக்கொண்டதையும் கூறினார்கள். சோழமன்னன் கிள்ளி மனம் வருந்தினான். மொத்தப் புகார் நகரமும் சோகத்தில் ஆழ்ந்தது. இந்தச் சோகம் காரணமாக இந்த வருடம் இந்திரனுக்கு விழா எடுக்கவில்லை. எனக்குக் கடுமையான கோபம் உண்டானது. இந்த நகரைக் கடல்கொண்டு செல்லட்டும் என்று சாபமிட்டேன். புகார் நகரத்தை அந்த வானவர் தலைவன் இருகரம் நீட்டிக்கொண்டதுபோலக் கடல்கொண்டது. உங்கள் மன்னன் நெடுமுடிக்கிள்ளி தனியாகிப் போனான். இதனை முன்னமே அறிந்திருந்த அறவண அடிகள் உன்னுடைய தாயார் மாதவி, சுதமதி ஆகியோரை அழைத்துக்கொண்டு வஞ்சி நகரம் சென்றனர் என்று எனக்கு மணிமேகலா தெய்வம் கூறியது” என்று முடித்தாள் தீவதிலகை.
“அவ்வளவுதானா இன்னும் கூறுவதற்கு ஏதாவது உண்டா?” என்றான் புண்ணியராசன்.
“மேலும் கேட்க விருப்பட்டால் ஒருவனைப் பற்றிய குறிப்பைக் கூறுகிறேன். அவன் உனக்கு முன்னால் உன் பரம்பரையில் தோன்றியவன். வாணிகம்செய்யும் பொருட்டுக் கடலில் செல்லும்போது கப்பல் சிதைந்து கடலில் மூழ்கினான். அப்படி மூழ்கியவனை மணிமேகலா தெய்வம் காப்பாற்றியது. அதன் பிறகு அவன் தானதர்மங்கள் செய்து ஒரு நல்ல வாழ்வை வாழ்ந்தான். இதுகுறித்து மேலும் அறியவேண்டுமென்றால், வஞ்சி நகரம் சென்று அறவண அடிகளிடம் கேட்டுத் தெரிந்துகொள்!“ என்றது.
தீவதிலகை சென்றதும் புண்ணியராசன் மனவருத்தமுற்று, அந்தக் கடற்கரையில் பள்ளங்கள் தோண்டி தனது முன்னோர்களின் எலும்புகளை எடுத்தான். ஆணவமும் அகங்காரமும்கொண்டு திரியும் உடல்கள் வெறும் எலும்புத் துண்டுகளாகப் போன அவலத்தைப் பார்த்து மயக்கமுற்றான். மயக்கமடைந்த அவனுக்குச் சிகிச்சியளித்து மணிமேகலை அவன் மயக்கம் தெளிவித்தாள்.
“புண்ணியராஜா! எதற்காக இப்படி மயக்கம்கொண்டீர்கள்? உங்களை எதற்காக இங்கே வரச் சொன்னேன்? உங்களுடைய முந்தைய பிறப்பினை உங்களுக்குக் காட்டி, அதன்மூலம் நீங்க தெளிவடைந்து சிறப்பாக ஆட்சி புரிந்து பெயரும் புகழும் பெறுவீர்கள் என்றுதான். மண்ணையாளும் அரசர்கள் அறக்கோலம் பூண்டால் அதைவிட உலகில் குற்றம் குறைவதற்கு வேறு வழி இருக்குமா?”
“சரி மணிமேகலை. அறம் குறித்துக் கூறுகிறாய்? எதனை அறம் என்பாய்? ஒருவருக்கு அறமெனப்படுவது வேறு ஒருவருக்குப் பிழை எனப்படலாம் இல்லையா?”
“அறம் என்றால் இந்த உலகில் வாழும் உயிர்களுக்கு உண்ண உணவும், உடுக்க உடையும், இருக்க இருப்பிடமும் தருவதாகும்.”
“மணிமேகலை, நீ சொல்வது முற்றிலும் உண்மை. என் நாட்டிலும் சரி பிற நாட்டிலும் சரி, நீ கூறிய வண்ணமே நல்ல அறம் செய்வேன்.”
“நல்லது மன்னா”
“நீ எங்கு செல்வாய் மணிமேகலை?”
“வான் வழியே வஞ்சி மாநகரம் செல்வேன்”, என்றாள்.
புண்ணியராசன் தான் நல்லாட்சி புரிவதற்காகக் கப்பலில் நாகநாடு திரும்பினான். ம்ணிமேகலை வான்வழியே கிளம்பி வஞ்சி மாநகரம் அடைந்தாள்.
பின்குறிப்பு: தற்காலச் சுனாமிபோன்ற ஒரு பெரும் ஆழிப்பேரழிவு நேர்ந்தததை இந்தக் காதையில் சீத்தலை சாத்தனார் தெளிவாகக் கூறுகிறார். அதேபோன்று பல்லவர்களின் தோற்றத்திற்குக் காரணமான பீலிவளையின் புதல்வன் குறித்தும் தகவல் உள்ளது.