இராவணன் இயற்றிய சிவதாண்டவத் தோத்திரம்

சிவபெருமான் ஆடலரசன், நடராஜன் என்று பெருமைப்படுத்தப்படுவார். ஆடவருக்கே உரிய தாண்டவம் எனும் நடனவகையில் அவர் தலைசிறந்த விற்பன்னர். மிக விறுவிறுப்பான இந்த நடனத்தை ஆண்களால் மட்டுமே ஆட இயலும். சிவபிரானுடைய இந்தத் தாண்டவ நடனத்தைப் பற்றிய ஒரு அருமையான தோத்திரம் சமஸ்கிருதத்தில் உள்ளது. நடனத்தின் ஜதிகளுக்கேற்றவாறு இந்தத் தோத்திரத்தின் சொற்பிரயோகங்கள் அமைந்து படிப்போரைப் பரவசப்படுத்துகின்றன.
இதனை இயற்றியவன் இராவணன் என்றால், எப்போது, எதற்காக, ஏன், எனும் கேள்வி எழுகின்றதல்லவா?
இராவணன் ஒரு இணையில்லாத சிவபக்தன். இலங்கையின் அரசனான அவன், தனது வலிமையில் மிகவும் கர்வம் கொண்டவனாகி, பரதக் கண்டம் முழுவதையும் வென்று வாகைசூடியவண்ணம் கைலாசமலையை அடைகிறான். கைலாசமலையில்தான் சிவபிரான் பார்வதி அன்னையுடன் உறைகின்றார். சிவபிரானைத் தன்னுடன் போருக்கு வருமாறு அறைகூவி அழைக்கிறான், பத்துத்தலை இராவணன். அவர் வராததனால், சினம்கொண்டு, அந்தக் கைலாசமலையைத் தன் இருபது கைகளாலும் பெயர்த்தெடுக்க முயற்சிக்கிறான். மலையில் உள்ள அனைத்தும் ஆட்டங்கண்டு தடுமாறுகின்றன; பார்வதிதேவியும் அச்சம் கொண்டு சிவபிரானை அணைத்துக் கொள்கிறாள்.
எல்லாமறிந்த சிவபிரான் குறுநகை கொள்கிறார். அமர்ந்த நிலையிலேயே கால் கட்டைவிரலால் மலையை அழுத்துகிறார். மலையின் கனத்தினால் இராவணனின் கரங்கள் அழுந்துகின்றன. மலையை இப்போது அவனால் தூக்கவும் இயலவில்லை; நசுக்கபட்ட கரங்களை விடுவித்துக்கொள்ளவும் முடியவில்லை. ஆனால் அவன் சாமவேதம் ஓதுவதிலும் வல்லவன். அதனால் எதனைச் செய்தால் சிவபிரான் மனமகிழ்ந்து தன் நிலைக்கிரங்கித் தன்னை விடுவிப்பார் என்று சிந்தித்தவன், சாமவேதத்தினை ஓதி எம்பெருமானை மகிழ்விக்கிறான்.
பின்பு தான் இயற்றிய இந்தச் சிவதாண்டவத் தோத்திரத்தினையும் பாடுகிறான். இவற்றினால் மனமகிழ்ந்த சிவபிரான் அவனை விடுவித்து, அவன் பக்தியை மெச்சி சந்திரஹாசம் எனும் வாளையும் பரிசளிக்கிறார்.
கம்பீரமான குரலில் பாட, சிவதாண்டவத்தின் ஜதிகளுக்கொப்ப சொற்களைப் பயன்படுத்தி அவன் இயற்றியுள்ள இந்த சமஸ்கிருதத் தோத்திரம் படிக்கவே இனிமையாகவும் கம்பீரமாகவும் இருக்கும். பெரும்பாலான அடிகளில் ஒரே எழுத்தில் தொடங்கும் (மோனை) பலவிதமான பொருள்கொண்ட சொற்கள் அமைந்து தாண்டவத்தின் ஆண்மைத்தனமான அழகை (பௌருஷத்தை) சித்தரிக்கின்றன. சொற்கள் எழுப்பும் ஒலிகளும் வார்த்தை ஜாலங்களாகி நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன.
(இந்தத் தோத்திரத்தின் பொருளும் அழகானது. இதன் தமிழ்வடிவம் உள்ளதா என்று தேடியபோது கிடைக்கவில்லை. ஆகவே கவிதை இயற்றுவதுபற்றிப் பெரிதாக ஒன்றும் தெரியாத நான் இதன் பொருளைத் தமிழில் பாடல்களாக்க முயன்றுள்ளேன். இப்பாடல்கள் எந்த யாப்பிலும் அமைந்தனவல்ல. தமிழ்ப்புலவர்கள் இந்த அறியாமையைப் பொறுத்தருள வேண்டும்).

காடடர்ந்த சடையில்பாய்ந்த நீர்படர்ந்த கழுத்திடை
தோய்ந்தடர்ந்த அரவமும் தொங்கல் மாலையாகவே
டமட்டம ட்டமட்டமென்னு நாதங்கூட்டி டமருவில்
நமச்சிவாய தாண்டவம் நம்மையெல்லாம் காக்கவே. — 1.

பொங்கும்கங்கை உனதுதுங்க முடியினில் துளும்பியே
தங்கிஎங்கு மொளிரும்அங்கு அலைகளாய்ச் சிலும்பியே
தகத்தகத் தகத்தகத் தீயாய்ஜ்வலிக்கும் உன்னெற்றி (உன் நெற்றி)
ரமிக்கிறேன் மதிசேகரா முப்பொழுதும் நானுனை — 2.

மலையரசன் சிறுமகளின் மனங்கவர்ந்த மன்னவா-அவள்
விலைபெற்ற குறுமுறுவல் குளிர்விக்கும் உள்ளத்தோய்
எல்லையற்ற பரிவுடன் எற்றிடெந்தன் துயர்களை
எல்லைகளை யுடுத்தாய் எந்தனுள்ள மடுத்தாய் — 3.

படங்கொண்டுந்தன் சடைபுகுந்த மணியொளிரும் அரவமே
மடங்கொள்நுதலில் வளருகுங்குமம் மிளிரும்உமையுன் பாகமே
சினந்தஆனை தடிந்துரித்து தடங்கொள்புயத்தில் தரித்தனை!
அனந்தமெந்தன் சிந்தையுறைந்து அருளும் பூதகணத்தனை! — 4.

இந்திரனும் மாலயனும் இணையடியில் பணிந்திறைஞ்ச
உந்தனிணைத் திருவடியில் பூமகரந்தம் படிந்துறங்க
அரவணிசடை அலங்கார! சகோரப்பிரிய சோமசேகர!
கரமெடுத்துச் சிரம்வைத்தேன் காக்கவேண்டும் சங்கர! — 5.

சமரன்மதனன் சாம்பராக நெற்றியொளிர் நெருப்புடையாய்!
அமரர்கோன் பணிஅடியாய்! அமுதப்பிறையை அணிவாய்!
தலைமாலை யணிவாய் தாண்டவராய! அருள்தருவாய்!
நிலையுடைய பேரறிவை பெருஞானத்தைத் தருவாய்! — 6.

தகத்தகத் தகத்தொளிரும் தீக்கண்ணுடைய நெற்றியாய்!
பகைத்துவரும் மதன்தொடுத்த ஐங்கணைகள் செற்றவா!
முக்கண்ணியின் முகிழ்முலைமேல் முன்புனைவாய் சித்திரம்
முக்கண்ணனே நின்னடியை முப்பொழுதும் போற்றுவேன். — 7.

கருங்கண்டக் கறையழகு இருளுண்ட இரவதனில்
பெருமண்டப் பேரழகாய் மதியற்ற வானெனெவே
அலைநதி யணிகொற்றவா! ஆனையரக்கனைச் செற்றவா!
நிலவை யணிசுந்தர! ஓம்நமச்சிவாய வந்தனம்! — 8.

நித்யபூசை நிகழக்கோயில் நீலவாம்பல் பூத்ததன்ன
சத்யநீல கண்டசிவ! சமர்ப்பணம்குரு வந்தனம்!
மதனெரித்தாய்! புரமெரித்தாய்! வினையறுத்தாய்! தவமெரித்தந்
தகனெரித்தாய்! ஆனையழித்தாய்! எமனுதைத்தாய்! வந்தனம்! — 9.
(தவமெரித்து அந்தகன் எரித்தாய்)

கடம்பமாலை யணிந்தவா சங்கராசர்வ மங்களா-உன்
அடர்ந்தமாலை முரலும்வண்டு படரும்நிரம்ப அமுதமுண்டு
காமனையழித்து முப்புரமெரித்து பிறப்பிறப்பறுத்து ஒழித்தனை
வாரணமுக அரக்கனை, தெற்குத்திசைச் செருக்கனை! — 10.

நெற்றித்தீயைக் கொண்டஈசா வெற்றியுனக் காகட்டும்!
வெற்றிடத்தில் அரவுமிழும் காற்றுமதைக் கூட்டட்டும்
திமித்திமித் திமியெந்நாதம் முழவுமதிர முழங்கிடும்-தத்
திமித்திமி திமியென்றையன் திசைகள் அதிரஆடிடும்! — 11.

சிவனவனைச் சிந்தையிலிருத்தி சீவனிலவன்மேல் கருத்தைச்செலுத்தி
அவனியுயிர்கள் அனைத்தையுநயந்து அண்ணல்காக்கும்
திறத்தைவியந்து
பொன்னையுமண்ணையும், நட்புபகையையும் புல்லையும்பூவையும்
மன்னையுங்குடியையும் அருளக்கண்டு உள்ளமுருகுவ தென்னாளோ? — 12.

பண்ணியபாவங்கள் பறந்துபோக, புண்ணியகங்கை நதிக்கரைதேடி
எண்ணங்களெல்லாம் ஈசனைநாட, எழும்பியகையுமே சிரசினில்கூட
மண்ணினில் பெண்ணை எண்ணிடுமையல் அண்ணலின்துதியைப்
பண்ணியேமறையப் புண்ணியம்புரிந்து உனைப்பூசிப்ப தெந்நாளோ? — 13.

உன்னதமான எந்தைநாமம் உள்ளமதுருகி ஓதிடுவார்க்கும்
என்னாளும் மறவாது உன்னிடுவோர்க்கும் பயின்றிடுவோர்க்கும்
அண்ணலின் அருளுண்டு அரும்பிறப்பொழிந்து முத்தியுமுண்டு
புண்ணியமுண்டு பாசமும்கழன்று பழவினைகள் தீருவதுண்டு. — 14.

பிரதோஷமன்று சிவபூசைசெய்து ஐயிருதலையன் அன்புடன்செய்த
பரசிவன்தோத்திரம் பாராயணம்செய்து பாவங்கள் அகன்று
சிவனருள்பெறலாம் சிறந்தபரியும் கயமும்தேரும் குறையாமல்
அவனியில் செல்வமும் பெற்றேஇம்மையில் நன்றாய்இனிதுவாழலாம்.
— 15.

இராவணன் செய்த தோத்திரம் இனிதே நிறைவுற்றதுவே!

இராவணன் தான்முத்திபெறும் வழி எது என்றுணர்ந்து உலகுக்கும் அதனைக்கூறுவது போல கடைசி இரு பாடல்களும் அமைந்துள்ளன. சிவராத்திரி சமயம் இதனைப் படித்து, சிவனருள் பெறுவோமாக.

3 Replies to “இராவணன் இயற்றிய சிவதாண்டவத் தோத்திரம்”

  1. Excellent. Beautiful translation. Enjoyed and copied. Seek the grace of lord Siva to bless the sacred efforts.

  2. Just today I saw the comments. Thank you very much. I bow to the Almighty who enabled me to do this.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *