இந்திய விவசாயத்தை சீரழித்த முதல் நடவடிக்கை எது என்று கேட்டிருந்தேன். ஒரே ஒருவர் மட்டும் மிகச்சரியான பதிலை குறிப்பிட்டிருந்தார். நண்பர்கள் பல விஷயங்களை பட்டியலிட்டிருந்தார்கள். அனேகமாக எல்லாமே சரியான பதில்கள்தான். பசுமைப்புரட்சியைத்தவிர.
பெரும்பாலான நண்பர்கள் பசுமைப்புரட்சி என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். உண்மையிலேயே வருத்தமாக இருக்கிறது. சில குறிப்பிட்ட சக்திகளால் திரும்பத்திரும்ப செய்யப்படும் பிரச்சாரம் எந்த அளவுக்கு நம்மிடையே ஊடுருவியிருக்கிறது என்று. இதைப்பற்றி திரும்பத்திரும்ப எழுதி எழுதி எனக்கே அலுத்துவிட்டது. இந்த தேசம் எத்தனையோ மாமனிதர்களுக்கு கடன்பட்டிருக்கிறது. அதில் திரு. எம். எஸ். ஸ்வாமிநாதன் முக்கியமானவர்களில் ஒருவர். பசுமைப்புரட்சி என்னும் விஷயத்தை அவர் எடுத்து சிறப்பாக செய்துகாட்டியிருக்காவிட்டால் , இன்று இயற்கை விவசாயம் என்னும் காமெடிக்கு கொடிபிடிக்க இத்தனைபேர் பிழைத்துக்கிடந்திருக்கமாட்டோம்.
நான் சவாலாகவே ஒரு விஷயத்தை சொல்கிறேன். அரசு இன்று முதல் மரபு சார் விவசாயம் மட்டுமே செய்யப்படவேண்டும் . உரம் , பூச்சி மருந்துகள், மரபணு மாற்றப்பட்ட விதைகள் இவை எதையும் உபயோகிக்கக்கூடாது என்று உத்தரவிட்டால்,இரண்டே வருடங்களில் நாட்டின் ஒட்டுமொத்த ஜனத்தொகையில் பாதி காலியாகிவிடும் உணவுப்பஞ்சத்தால். . இதுதான் யதார்த்தம். மரபுசார் விவசாயத்தால் இத்தனைகோடி மக்களுக்கு என்றுமே உணவளிக்க முடியாது. முடியாது. முடியாது.
சரி. பேசவந்த விஷயத்தை விட்டுவிட்டு வேறு விஷயத்துக்கு தாவிவிட்டேன்.
இந்திய விவசாயம் இன்று சந்தித்துக்கொண்டிருக்கும் பிரச்சினைகளுக்கு நண்பர்கள் குறிப்பிட்ட காரணங்கள்எல்லாமே பொருந்தும் என்றாலும் முதல் இடி என்பது நில உச்சவரம்புச்சட்டம் என்னும் அபத்தம்தான். .
நான் பலமுறை எழுதியிருக்கிறேன். சோஷியலிசம் என்பது நம் தேசத்தை பீடித்த பீடை. நம்மோடு சுதந்திரம்பெற்ற நாடுகள் பலவும் இன்று முன்னேற்றத்தின் உச்சியில் இருக்க , நாம் மட்டும் காலம்காலமாக ஏழை நாடாகவே உழன்று கொண்டிருப்பதற்கு இந்த பாழாய்ப்போன சோஷியலிசம் தான் மிக முக்கியமான காரணம். [ உடனே சீனாவை தூக்கிக்கொண்டு வரவேண்டாம். சீனாவில் நடப்பது ஒரு கட்சியின் சர்வாதிகார ஆட்சி. ]
துரதிர்ஷ்டவசமாக நம் நாடு சுதந்திரம்பெற்றபோது அன்றைய தேசத்தலைவர்கள் பெரும்பாலானோர் சோசியலிஸ்டுகளாகவே இருந்தனர். [ ராஜாஜி போன்றோர் விதிவிலக்கு. ] குறிப்பாக நேரு. அவரை சோஷியலிச ஆதரவாளர் என்பதை விட ரஷ்யாவின் அடிமை என்றால் இன்னும் பொருத்தமாக இருக்கும். இயல்பாகவே கம்யூனிசத்தால் ஈர்க்கப்பட்ட அவர் மார்க்சியம் உலகுக்கு அளித்த மாபெரும் கொலைகாரப்பாவிகளான மாவோ மற்றும் ஸ்டாலின் ஆகியோரின் அடியொட்டி நில உச்சவரம்புச்சட்டத்தை 1958 ம் ஆண்டு கொண்டுவந்தார். அன்றுதான் நம் விவசாயத்தை முதல் பீடை பிடித்தது.
சரி. இதில் என்ன பிரச்சினை? எல்லோருக்கும் நிலம். உழுபவனுக்கே நிலம் சொந்தம். இவையெல்லாம் நல்ல நோக்கத்தில் கொண்டுவரப்பட்டவைதானே ? என்று நீங்கள் கேட்கலாம்.
விவசாயம் இன்றுவரை நம்நாட்டில் ஒரு தொழிலாக அங்கீகரிக்கப்படவில்லை. அதனால்தான் அதற்கு வரி கிடையாது. ஆனால் விவசாயமும் ஒரு தொழில்தான். எல்லா தொழில்களையும் போல விவசாயத்திலும் முதலீட்டைப்பொறுத்துத்தான் லாபம் கிடைக்கும்.
விவசாயத்தில் ஆதாரமான முதலீடு என்ன? நிலம்தான் . காடுகளாக இருந்த நிலங்களை சீர்திருத்தி மனிதன் விவசாயம் செய்ய ஆரம்பித்த காலத்தில் , எந்த குடும்பத்தில் அதிக உறுப்பினர்கள் இருந்தார்களோ , அதுவே பணக்கார குடும்பமாக இருந்தது,. காரணம் அதிகம்பேர் இருந்தால் அதிகமான நிலங்களை விவசாய நிலமாக மாற்றலாம். அதிக நிலம் . அதிக உற்பத்தி.
இன்றும் இந்த நிலையில் மாற்றமில்லை. நிலம் குறைவு என்றால் உற்பத்தியும் அதற்கேற்ற அளவில்தான் இருக்கும். ஒன்றரை ஏக்கரில் விவசாயம் செய்து ஒரு குடும்பமே பிழைக்கவேண்டும் என்றால் எப்படி?சரி. நம் தேசத்தில் சிறு விவசாயிகள் இருந்ததே இல்லையா? அவர்களெல்லாம் வாழவில்லையா ? என்ற கேள்வி எழலாம். அன்று மனிதர்களின் தேவை மிகக்குறைவு. உணவு . உடை . இருப்பிடம் போன்ற அடிப்படைத்தேவைகளுக்கு மேல் அவர்களுக்கு தேவைப்படவில்லை. ஆகவே அது போதுமானதாக இருந்தது. இன்று அப்படிப்பட்ட வாழ்க்கை சாத்தியமா?
நல்லவன் கெட்டவன் சமூகத்தின் எல்லா படிநிலைகளிலும் இருக்கிறார்கள். நில உடமையாளர்களை பண்ணையார்களாகவும் , வில்லன்களாகவும் , விவசாயக்கூலிகளை அப்பாவிகளாகவும் நல்லவர்களாகவும் அல்லவா நாம் காட்டிக்கொண்டிருக்கிறோம். அப்புறம் எங்கிருந்து உருப்பட? ஒரு ஏக்கர் , இரண்டு ஏக்கரில் விவசாயம் செய்து என்ன உற்பத்தி செய்துவிட முடியும்?
கொங்கு வழக்கில் முட்டுவழி என்பார்கள். அதாவது முதலீடு. நிலத்தின் அளவு அதிகமாகும்போது முட்டுவழி குறைவதும், குறைவான நிலப்பரப்புக்கு முட்டுவழி அதிகமாவதும் இயற்கை. உலகில் எல்லா தொழில்களுக்கும் பொதுவான நியதி இதுதான்.
முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் விவசாயத்தில் நஷ்டம் ஏற்படுகிறதென்றால் , சிறுவிவசாயிகள் விவசாயத்தைவிட்டு வெளியேறவேண்டும் என்றார். உடனே அவரை எல்லோரும் திட்டித்தீர்த்தார்கள். ஆனால் , யதார்த்தம் அதுதான். இன்றில்லாவிட்டாலும் , நாளை அதுதான் நடக்கப்போகிறது. எத்தனை சிறு , குறு விவசாயிகள் இன்று தங்கள் வாரீசுகளை விவசாயத்தில் ஈடுபடுத்துகிறார்கள்?
*******
இந்த சட்டம் அமலுக்கு வந்தவுடன் , கம்யூனிச நாடுகளைப்போல இருப்பவனிடம் பிடுங்கி அரசு வைத்துக்கொண்டு எல்லோரையும் கூலியாட்களாக மாற்றிவிடவில்லை. ஆனால் , சட்டரீதியாக ஒருவர் பதினைந்து ஸ்டாண்டர்ட் ஏக்கர்களுக்கு மேல் தன் பெயரில் வைத்துக்கொள்வது சிரமமாகிவிட்டது. விதிகளை மீறுவதே விதியாக வைத்திருக்கும் நம் தேசத்தில் எந்த சட்டமும் நூறு சதவீதம் அமல்படுத்தப்படுவதில்லை. ஆனால் நம் தேச விவசாயத்திற்கு போதுமான சேதத்தை இந்த சட்டம் ஏற்படுத்திவிட்டது. இன்றுவரை அது தொடர்ந்துகொண்டும் இருக்கிறது.
முதலில் அதிகப்படியான நிலங்களை தன் வசம் வைத்திருந்தவர்கள் அவற்றை தங்கள் குடும்ப உறுப்பினர்கள் பெயரில் பிரித்து எழுதிவைத்தார்கள். பின்னர் பினாமிகள் பெயரில் எழுத ஆரம்பித்தார்கள். அடுத்தடுத்த கால கட்டங்களில் விவசாய நிலங்கள் துண்டு துண்டாக பிரிய ஆரம்பித்தன.
விதி என்று ஒன்றிருந்தால் விதிவிலக்கு என்றும் ஒன்றிருக்கும். இந்த சட்டத்தின் இண்டு இடுக்குகளில் புகுந்து ஓட்டைகளை பயன்படுத்தி கணிசமான நிலங்களை தங்கள் வசம் வைத்திருக்கும் சாமர்த்தியசாலிகள்[?] அன்றும் உண்டு. இன்றும் உண்டு. அது வேறு விஷயம். நாம் பேசுவது பெரும்பான்மையாக பாதிப்புக்குள்ளான மக்கள் பற்றி மட்டுமே.
இந்த தொடரின் துவக்கத்திலேயே நான் கேட்ட கேள்வி ” இந்திய விவசாயத்தின் மீது தொடுக்கப்பட்ட முதல் தாக்குதல் எது ” என்றுதான். நில உச்சவரம்புச்சட்டம் முதல் அடிதான். அடுத்தடுத்த தாக்குதல்கள் விழ ஆரம்பித்தன.
சொத்து [ அதாவது நிலம் ] பிரிந்துவிடக்கூடாது என்பதற்காகவே உறவுகளுக்குள் திருமணம் செய்யும் முறை இருந்தது. மருத்துவ காரணங்களை சுட்டிக்காட்டி அதற்கும் வேட்டு வைத்தனர். வேறு வேறு குடும்பங்களைச்சேர்ந்த பெண்கள் ஒரே குடும்பத்தில் நேர்ந்து கலந்து போக முடியாததால் கூட்டுக்குடும்பங்கள் சிதைய ஆரம்பித்தன. பாகப்பிரிவினை என்பதே விவசாய நிலங்களை பங்குபோடுவது என்றானது.
பங்கு பிரித்தாயிற்று ,. கையகல நிலம் கைக்கும் வந்துவிட்டது. இனி என்ன செய்ய? இவனோ விவசாயி . வேறு தொழிலும் தெரியாது. இருக்கும் நிலத்தில் காலம் முழுக்க கிண்டிக்கிளறிக்கொண்டே இருக்க வேண்டியதுதான். விளைந்தாலும் சரி. வறண்டாலும் சரி. விவசாயியின் பிழைப்பு அந்த கையகல நிலத்துக்குள் முடங்கிவிட்டது.
இதோடு விட்டார்களா? அடுத்து வந்த இடி பெண்கள் சொத்துரிமைச்சட்டம். [ இந்த சட்டத்தால் விளைந்த அனர்த்தங்களை தனிப்பதிவாக இடுகிறேன். ]
ஏக்கர் கணக்கில் பிரிந்த நிலங்கள் செண்ட் கணக்கில் பிரிய ஆரம்பித்தன. பதினைந்து ஏக்கர் நிலம் இரண்டு தலைமுறை தாண்டுவதற்குள் வெறு பத்து , இருபது செண்ட் நிலங்களாக பிரிய ஆரம்பித்தது. பாகப்பிரிவினையில் ஏற்படும் கசப்புகளால் வெளிஆட்களுக்கு நிலங்களை விற்க ஆரம்பிக்க , இன்று ஒரே அடைப்பாக ஐந்து ஏக்கர் விவசாய நிலத்தைப்பார்ப்பதே அரிதாகிவிட்டது. இதில் என்ன விவசாயம் செய்து வாரிக்கொட்ட?
சின்ன கல்லு. பெரிய லாபம் என்பதெல்லாம் வைர வியாபரத்துக்கு வேண்டுமானால் சரிப்படலாம். விவசாயத்துக்கு நிலத்தின் அளவு முக்கியம். முன்பெல்லாம் ஊர் மந்தை என்று தனியான மேய்ச்சல் பகுதி இருக்கும். ஆடுமாடுகளை அங்கு மேய்த்துக்கொள்ளலாம். பொறம்போக்கு நிலங்களை அபகரிப்பதையே தொழிலாக கொண்ட கழக அரசியல்வாதிகள் புண்ணியத்தால் இன்று அநேகமாக அத்தகையக நிலங்களே இல்லாமல் போய்விட்டன.
ஓரிரண்டு ஏக்கர் நிலம் வைத்திருக்கும் விவசாயி அதில் பயிர் வைப்பானா? காய்கறிச்செடிகள் வைப்பானா? தென்னை மரம் வைப்பானா? ஆடுமாடுகள் மேய்ப்பானா? பிறகெங்கிருந்து விவசாயத்தில் வருமானம் வரும்?
முன்பெல்லாம் எனக்குத்தெரிந்து எங்கள் வீட்டில் காய்கறி வாங்குவது மிகவும் அரிது. எல்லாமே தோட்டத்தில் கிடைக்கும். தேங்காய் , மிளகாய் , தக்காளி , கத்திரி , இப்படி. இன்று ஒரு கொத்து கறிவேப்பிலைக்கே கடைக்கு நடக்க வேண்டியிருக்கிறது.
கொங்கு வழக்கில் பகுதி பகுதியாக பிரிக்கப்படும் வயலை சிறகு என்போம். [ பேச்சு வழக்கில் செறவு . ] பத்து ஏக்கர் விவசாய நிலம் ஐந்து சிறகாக பிரிக்கப்பட்டுள்ளதென்றால் , ஒரு சிறகில் புகையிலை. இன்னொன்றில் மிளகாய் , இன்னொன்றில் தக்காளி , இன்னொன்றில் கம்பு அல்லது சோளம். ஒரு பகுதி முழுக்க முருங்கை மரம்.
வாய்க்கால் செல்லும் வழியெல்லாம் தென்னை மரம். வரப்பில் சின்ன வெங்காயம். களத்துச்சாலையை [ கதிர் அடிக்கும் களம் மற்றும் தானிய சேமிப்புக்கிடங்கு இணைந்த பகுதியை களத்துச்சாலை என்று அழைப்பது கொங்கு வழக்கு ] ஒட்டி காய்கறிச்செடிகள். ஒரு பயிரில் விளைச்சல் குறைந்தாலோ , விலை வீழ்ந்தாலோ இன்னொன்று காப்பாற்றி விடும். கையகல நிலத்தை வைத்துக்கொண்டு இதையெல்லாம் செய்ய முடியுமா?
சரி. பிரச்சினைகளை பட்டியலிட்டுவிட்டோம். தீர்வுதான் என்ன?
*******
இன்று எந்த விவசாயியிடமும் நீங்கள் சந்திப்பதிலேயே பெரிய பிரச்சினை என்ன என்று கேட்டுப்பாருங்கள். விலைபொருளுக்கு உரிய விலை கிடைக்காததுதான் காரணம் என்பார். உண்மை. அதுதான் மிகப்பெரிய பிரச்சினை. இதற்கு காரணம் என்ன?
இன்று எந்த விளைபொருள் மலிவாக கிடைக்கிறது? எல்லாமே யானைவிலை, குதிரைவிலைதான். சின்ன வெங்காயத்தின் விலை 150 ஐ தொட்டுக்கொண்டிருக்கிறது. ஆனால், அதே வெங்காயம் விவசாயியிடம் சில வாரங்களுக்கு முன் என்ன விலைக்கு கொள்முதல் செய்யப்பட்டது என்று கேட்டுப்பாருங்கள். விவசாயிகள் எங்கே [தெரிந்தே] ஏமாறுகிறார்கள் என்பது புரியும்.
அதிகபட்சம் இருபத்தைந்து ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படும் வெங்காயம் சில வாரங்கள் பதுக்கப்பட்டு, பின்னர் விலையேறும்போது நூற்றைம்பது ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதனால் விவசாயிக்கும் நஷ்டம். நுகர்வோருக்கும் நஷ்டம். இடையே விளையாடும் சில வியாபார மாபியாக்கள் கோடிகளில் கொழிக்கிறார்கள். இது வெங்காயத்துக்கு மட்டுமல்ல. கரும்பு, பருத்தி, பருப்புகள் என சில வாரங்கள் வைத்து விற்கக்கூடிய எந்த பொருளின் விலையும் நம் நாட்டில் உற்பத்தியாளர்களான விவசாயிகளால் விற்கப்படுவதில்லை. நம் கண்ணுக்குத்தெரியாத சில சக்திகள் இதை முடிவு செய்கின்றன.
சரி. இந்த நிலை ஏன் ஏற்படுகிறது என்று ஆராய்ந்தால், இந்த பதிவு எங்கே தொடங்கியதோ அங்கேதான் நாம் வந்து நிற்போம். ஆம். விலைநிலங்களின் அளவு சுருங்கியதால்தான் இத்தனையும். காய்கறிகள், சில பருப்பு வகைகளைத்தவிர மீதி விளைபொருட்கள் அனைத்தும் மதிப்புக்கூட்டப்படும்போதுதான் விலைகள் கணிசமாக உயர்கின்றன.
நெல்லை எடுத்துக்கொள்வோம். நெல்லுக்கான விலையை அரசு நிர்ணயிக்கிறது. சன்னரக நெல் அதிகபட்சமாக குவிண்டால் [நூறு கிலோ] ரூ 1700 வரை கொள்முதல் செய்யப்படுகிறது. [நூறு கிலோ நெல்மூலம் ஐம்பது கிலோ அரிசி கிடைக்கும் என்று வைத்துக்கொண்டால் கிலோ ரூ 34.00]. அந்த நெல், அரிசி ஆலைகளில் அரைத்து, பாலீஷ் போடப்பட்டு கடைகளில் கிலோ ரூ 70 வரை விற்கப்படுகிறது. கிட்டத்தட்ட இருமடங்கு விலையில் விற்கப்படுகிறது. நெல் அரவைக்கூலி, போக்குவரத்துச்செலவு, வியாபாரியின் லாபம் எல்லாம் சேர்த்தால் கூட இந்த விலை மிகவும் அதிகம். எனில், நெல்லாக விற்பதைவிட [மதிப்புக்கூட்டப்பட்ட] அரிசியாக விற்பதுதான் லாபகரமானது. ஆனால், விவசாயிகளால் அப்படிச்செய்ய முடியாது. காரணம் வருடம் ஒருமுறை அல்லது இருமுறை அறுவடை செய்யும் நெல்லை அரைக்க ஒவ்வொருவரும் சொந்தமாக ஒரு ரைஸ் மில் கட்டிவைத்துக்கொண்டிருக்க முடியாது. சரி. நம்மிடம் உள்ள நெல்லை ஒரு மில்லில் கொடுத்து அரைத்து விற்கலாமே என்றால், அதுவும் முடியாது. காரணம் முன்பே சொன்னதுதான். குறைவாக உற்பத்தியாகும் பொருளை மதிப்புக்கூட்டினால் நஷ்டம்தான் வரும். இதற்காக அலைந்து நேரத்தை வீணடித்துக்கொண்டிருக்காமல் வரும் விலைக்கு நெல்லை விற்றுவிட்டு, அடுத்த போகத்துக்கான வேளான் வேலைகளைப்பார்க்கத்தான் எந்த விவசாயியும் நினைப்பார். அதுதான் காலம் காலமாக நடக்கிறது.
தேங்காய் பற்றி நான் முன்பே ஒருமுறை எழுதியிருக்கிறேன். ஒரு தேங்காய் பதினைந்து ரூபாய்க்கு விற்றுக்கொண்டிருந்த காலத்தில் எங்கள் வீட்டில் விளைந்த தேங்காய்களை இரண்டு ரூபாய்க்கு கேட்டார்கள் என்று. இன்றும் தேங்காய் இருபது ரூபாய் வரை விற்கிறது. தேங்காய் எண்ணெய் குறைந்தபட்சம் கிலோ ரூ 180க்கு விற்கிறது. தேங்காயை மட்டை உரித்து நேரடியாக சந்தையில் விற்றால் ஓரளவு லாபம் கிடைக்கும்.அதன் பருப்பை உடைத்து எண்ணை ஆட்டி விற்ரால் நல்ல லாபம் கிடைக்கும். ஆனால் இரண்டையும் செய்ய விவசாயிகளால் முடியாது. காரணம் அதே,குறைவான உற்பத்தி.
சரி.இதற்கெல்லாம் தீர்வுதான் என்ன?
சிறு விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை தனித்தனியாக விற்காமல், தங்களுக்குள் கூட்டுறவு அமைப்புகளை ஏற்படுத்தி ஒட்டுமொத்த விளைபொருட்களை தாங்களே நேரடியாக விற்பனை செய்வது. கர்நாடகம், சத்தீஸ்கர் போன்ற மாநிலங்களில் விவசாயிகள் தங்கள் கூட்டுறவு அமைப்புகளின் மூலம் தங்கள் விலைபொருட்களை ஆன்லைன் ஏலம் மூலம் விற்பனை செய்து கணிசமாக லாபம் ஈட்டுகின்றனர். ஆனால், தமிழகத்தில் இது சாத்தியமில்லை. காரணம் உண்மையாகவே இந்த நல்ல நோக்கத்துக்காக ஆரம்பிக்கப்பட்ட கூட்டுறவு அமைப்புகளை கழக அரசியல்வாதிகள் புகுந்து நாசம் செய்துவிட்டார்கள். இன்று பெரும்பாலான கூட்டுறவுச்சங்கங்கங்கள் கடனில் மூழ்கிக்கொண்டிருக்கின்றன. கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் கூட நடத்த முடியாத நிலை நிலவுகிறது.
இன்று பெரும்பாலான விவசாயிகளின் வாரிசுகள் விவசாயத்தை விட்டு வெளியேறிவிட்டனர். கார்ப்பரேட் நிறுவனங்களில் வேலை செய்து சம்பாதித்துக்கொண்டு, பசுமை விகடனில் எவனாவது அரைகுறை நக்சலைட் எழுதும் லூசுத்தனமான, வெறுப்பை உமிழும் கட்டுரைகளை காப்பி பேஸ்ட் செய்து சமூக வலை தளங்களில் பதிவிட்டுவிட்டு, மத்திய, மாநில அரசுகளை கார்ப்பரேட் கைக்கூலிகள் என்று திட்டிக்கொண்டு திரிகின்றனர். இவர்கள் உண்மையாகவே விவசாயத்தை லாபகரமான தொழிலாக மாற்றவேண்டும் என்று நினைத்தால், ஊருக்கு ஒருவர் தங்கள் ஊர் விவசாயிகளை ஒன்றிணைத்து, தங்கள் கல்வியறிவு மற்றும் இன்னபிற தொடர்புகள் மூலம் ஆன்லைன் விற்பனை, மதிப்புக்கூட்டுதல் போன்றவை வாயிலாக கணிசமாக லாபம் சம்பாதிக்க உதவலாம். ஆனால் இதையெல்லாம் செய்ய உண்மையான அர்ப்பணிப்பு உணர்வும், கடும் உழைப்பும் தேவை. அய்யாக்கண்ணு அன்ட் கோ வின் அபத்த நாடகங்களை ஆதரித்து பிரச்சாரம் செய்துகொண்டு திரிந்தால் சுய அரிப்பை சொரிந்துகொள்ளலாம். காரியம் நடக்காது.
அரசு உடனடியாக இரண்டு விஷயங்களை செய்ய வேண்டும். ஒன்று விளைநிலங்களை குடியிருப்புகளாகவோ, தொழிற்சாலைகளாகவோ மாற்றுவதை முழுமையாக தடைசெய்யவேண்டும். இரண்டாவதாக
உடனடியாக நில உச்சவரம்பு மற்றும்சீர்திருத்த சட்டங்களை திரும்பப்பெறவேண்டும். நண்பர் கிருஷ்ணகுமார் சொன்னதுபோல ஒரு தொழிலதிபர் பத்து தொழிற்சாலைகள் வேண்டுமானாலும் கட்டிக்கொள்ளலாம். ஆனால், ஒரு விவசாயி பதினைந்து ஸ்டாண்டர்ட் ஏக்கருக்குமேல் வைத்துக்கொள்ளக்கூடாது என்பதெல்லாம் அநியாயத்தின் உச்சம். இடதுசாரிகள் நிச்சயம் முழுவீச்சில் எதிர்பிரச்சாரம் செய்வார்கள். நாட்டின், விவசாயத்தின் எதிர்கால நலனை மனதில் கொண்டு இந்த நடவடிக்கையை எடுத்தே ஆகவேண்டும்.
ஏக்கரேஜ் எனப்படும் ஒரு ஏக்கருக்கு இவ்வளவு என அளவிடப்படும் உற்பத்தி, மேலை நாடுகளோடு ஒப்பிடும்போது மிகவும் குறைவு. காரணம் நான் இதுவரை பட்டியலிட்டவை தான். நூற்றுகணக்கான ஏக்கர்களில் விவசாயம் செய்யப்படும்போது செலவும் கணிசமாக குறையும். அதனால் லாபம் அதிகரிக்கும். நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் எதிர்காலத்தில் அதுதான் நடக்கப்போகிறது.
சில அறிவுக்கொழுந்துகள் பிதற்றிக்கொண்டு திரிவதைப்போல கார்ப்பரேட்டுகள் விவசாயத்தின் எதிரிகள் அல்ல. சொல்லப்போனால் கார்ப்பரேட்டுகள் வருகைக்குப்பிறகே விவசாயிகளுக்கு லாபம் கிடைக்க ஆரம்பித்திருக்கிறது. ஆவின் மட்டுமே பால் கொள்முதலில் ஈடுபட்டிருந்தபோது பால் உற்பத்தியாளர்கள் பட்ட பாடு சொல்லி மாளாது. இன்றோ, ஹட்சன் உள்ளிட்ட நிறுவனங்கள் வரிசை கட்டி நிற்கின்றன. பாலுக்கு நல்ல விலையும் கிடைக்கிறது. சேலம் தர்மபுரி பகுதியைச்சேர்ந்த மாம்பழ விவசாயிகள் காலம் காலமாக உள்ளூர் வியாபாரிகளால்வஞ்சிக்கப்பட்டு வந்தனர். மாம்பழச்சாறு தயாரிக்கும் நிறுவனங்கள் வந்த பிறகுதான் அவர்கள் நிலை மேம்பட்டது. இன்று விவசாயிகளிடம் முன்பணம் கொடுத்து மாம்பழங்களை [நல்ல விலைக்கு] கொள்முதல் செய்கின்றனர்.
விவசாயம் உலகின் முதல் தொழில். உணவில்லாமல் மனித இனம் ஜீவிக்க முடியாது. விவசாயம் செய்யும் முறைகள் காலத்திற்கேற்ப மாறுபடலாம். அதுதான் நம் தேசத்திலும் நடக்கப்போகிறது. இன்று எந்த கார்ப்பரேட்டுகளை கரித்துக்கொட்டுகிறோமோ, அவர்கள்தான் இனி விவசாயத்தை லாபகரமான தொழிலாக மாற்றப்போகிறார்கள்..
குறித்து வைத்துக்கொள்ளுங்கள். மிக விரைவில் கவைக்குதவாத பழைய சட்டங்கள் தூக்கி எறியப்படும். கார்ப்பரேட்டுகள் முழு வீச்சில் விவசாயத்தில் இறங்குவார்கள். ஒன்று நேரடியாக நிலங்களை வாங்கியோ, அல்லது டை அப் போன்ற முறைகள் மூலம் விவசாயிகளோடு நேரடியாக தொடர்பு வைத்தோ, [விதைகள், உரம் உள்ளிட்ட இடுபொருட்கள் அவர்களுடையது. நிலமும் உழைப்பும் நம்முடையது] நவீன உத்திகள், திறமையான விற்பனை போன்றவை வாயிலாக விவசாயத்தை லாபகரமான தொழிலாக மாற்றுவார்கள். இன்று விவசாயத்தை விட்டு வெளியேறிய பலரும் அன்று விவசாயத்துக்கு திரும்புவார்கள். நல்லதே நடக்கும்.
Excellent . Will share as much as possible
விவசாயம் ஒரு தொழிலாக அங்கீகரிக்க பாட்டு வருமான வரி விதிக்க வேண்டும்…
வீடு கடன் போல் விவசாய நிலம் வாங்க வங்கி கடன் அளிக்க பட வேண்டும்..
அருமை ஐயா!
ஒரே ஒரு வேதனை! கூட்டுறவு சங்கங்களையும் சின்னாபின்னம் படுத்தியது அரசுதானே! அதே அரசிடம் “அரசு செய்யவேண்டியது” என கோரிக்கை வைத்தால் நடக்குமா? நடந்தாலும் நியாயம் கிடைக்குமா? நீங்கள் குறிப்பிட்டது போல் படித்த விவசாய விரும்பிகள் ஆவண செய்தால் மாற்றம் வரும். கார்பரேட்டும் கைகொடுக்கும்.
அருமையான பதிவு.
அருமை.வாழ்த்துக்கள் நண்பரே
அருமையான பதிவு, வாழ்த்துக்கள்ஜி
(இன்று இயற்கை விவசாயம் என்னும் காமெடிக்கு கொடிபிடிக்க இத்தனைபேர் பிழைத்துக்கிடந்திருக்கமாட்டோம்.
நான் சவாலாகவே ஒரு விஷயத்தை சொல்கிறேன். அரசு இன்று முதல் மரபு சார் விவசாயம் மட்டுமே செய்யப்படவேண்டும் . உரம் , பூச்சி மருந்துகள், மரபணு மாற்றப்பட்ட விதைகள் இவை எதையும் உபயோகிக்கக்கூடாது என்று உத்தரவிட்டால்,இரண்டே வருடங்களில் நாட்டின் ஒட்டுமொத்த ஜனத்தொகையில் பாதி காலியாகிவிடும் உணவுப்பஞ்சத்தால். . இதுதான் யதார்த்தம். மரபுசார் விவசாயத்தால் இத்தனைகோடி மக்களுக்கு என்றுமே உணவளிக்க முடியாது. முடியாது. முடியாது.) இக்கருத்திற்கு எனற்கு உடன்பாடு இல்லை