பவத்திறமறுகெனப் பாவைநோற்ற காதை – மணிமேகலை 31

மணிமேகலை மௌனத்தில் ஆழ்ந்திருந்தாள்.  இதுவரையில் அவள் வாழ்ந்த வாழ்வின் நெடிய பயணம் அவள் சிந்தையில் நிழலாடியது. முற்பிறப்பினை அறியும் திறன் அனைவருக்கும் அமைவதில்லை. ஆனால் தனக்குத் தன்னுடைய முந்தைய பிறவியின் நிழலின் அசைவு தெரிந்திருக்கிறது. பிறவிகள் தோறும் ஜீவன் தீட்டப்பட்டுத் தீட்டப்பட்டு இறுதியில் எம்பெருமான் புத்தரின் பாத கமலங்களில் சரண் புகுவது என்பது இதுதானோ?

தானங்கள் செய்து, சீலத்தின்கண் ஒழுகி நின்று புத்தன், தருமன், சங்கம் என்ற பௌத்தமதத்தின் மூன்று மணிகளாக விளங்கும் கொள்கைகளை மனம் மெய் வாக்கு ஆகிய மூன்றினாலும் அறிந்து அந்த புத்தரின் பாதங்களில் சரணாகதி அடைந்துவிட்டாள் அவள். இனி வேறு என்னவேண்டும் அவளுக்கு? முழுநிறைவுபெற்ற வாழ்க்கை.

மணிமேகலை அறவண அடிகளுக்குத் தேவையானவற்றை அளித்துவிட்டு அந்தக் குடிலின் கிழக்கு நோக்கியிருந்த பகுதியில் ஒரு மனையைப் போட்டாள். நூல்களை வைத்துப் படிப்பதற்கான வாசிப்புப் பலகையை முன்னால் வைத்தாள். புத்தரின் உருவச் சிலைக்குமுன்பு வைக்கப்பட்டிருந்த பெட்டியில் கற்பூரமணம் கமழும் ஓலைச்சுவடிகளின் தொகுப்பை எடுத்து வாசிப்புப் பலகையின்மேல் வைத்தாள். ஓலைத் தொகுப்பின் எண்ணிக்கை ஒவ்வொரு முறையும் மணிமேகலையை ஆச்சரியத்தில் ஆழ்த்தும்.  அறவண அடிகளின் சொத்தே இந்த ஓலைச் சுவடிகள்தாம்.

“மணிமேகலை இத்தனை நாட்கள் நான் சொல்லிக் கொடுத்த பொருண்மையின் அளவைகள் சிறிதாவது புரிந்ததா?”

“ஐயனே சிறு குழந்தைகளும் அறிந்துகொள்ளும் வகையில் சிறந்த உதாரணங்களுடன் விளக்கி இருக்கிறீர்கள். இதுகூடப் புரியவில்லை என்றால் என்னிடம்தான் பிழையிருக்கிறது.” என்றாள் மணிமேகலை சிரித்துக்கொண்டு.

அறவண அடிகள் புத்தபெருமானைத் தொழுதுவிட்டு, புத்தகப் பலகையின்முன்பு போடப்பட்டிருந்த மனையில் அமர்ந்தார்.

“புத்த பெருமானைக் குறித்து இதுவரை நீ அறிந்தவற்றைக் கூறு, மணிமேகலை!” என்று பணித்தார்.

“எவ்விதத்திலும் முரண்பாடாத அறத்தின் வடிவம்,” என்றாள்.

“நன்று, மணிமேகலை! தொடர்ந்து சொல்.”

“உலகிலுள்ள அனைத்து உயிரினங்களும் அறிவு மயக்கம் ஏற்பட்டுத் தடுமாறிக்கொண்டிருந்த வேளையில் மக்களின் அறியாமை என்னும் இருளைப் போக்குவதற்கு ஐயனிடம் வேண்டிநின்றனர். புத்தபெருமானும் தான் இருக்கும் துடி உலகத்திலிருந்து இந்தப் பூவுலகில் மாயாதேவியின் மணிவயிற்றில் உதித்தார். கயாவில் போதிமரத்தின் கீழ் ஞானம் அடைந்து மாரன் என்பவனை வென்றுநின்றவர். அவருடைய மெய்நெறிகள் மூவகைக் குற்றங்களை அறவே அழிக்கும் தன்மை கொண்டது.”

“இதனை விடச் சுருக்கமாகவும் விளங்கும்படியாகவும் புத்தனின் வரலாறைக் கூற முடியாது,” என்று அறவண அடிகள் பாராட்டினார்.

“புத்தபெருமானுக்குப் பிறகு பல புத்தர்கள் இந்தப் பூவுலகில் அவதரித்தனர். அவர்கள் அருளிய மெய்நெறியை உனக்கு இனிவரும் நாட்களில் விளக்கமாக எடுத்துரைக்கலாம் என்று கருதுகிறேன்,” என்றார் அறவண அடிகள்.

“என் பேறு, ஐயனே!”

“புத்தனின் அறநெறிகள் மொத்தம் பனிரெண்டு நிதானங்களாய்ப் பிரித்துக் கூறப்பட்டுள்ளன. அவை ஒன்றுக்கொன்று சார்புடையவை. ஒன்றிலிருந்து ஒன்று தோன்றுகின்றன. தம்மில் மீண்டும் தோன்றுகின்றன. இவ்வாறு காரண காரியங்களுடன் ஒன்றிலிருந்து மற்றொன்று ஒரு வட்டச் சுழற்சியாகத் தோன்றியவண்ணம் உள்ளன.”

{பேதமை, செய்கை, உணர்வு, அருவுரு, வாயில், ஊறு, நுகர்வு, வேட்கை, பற்று, பவம், தோற்றம் வினைப்பயன் என்பவை பனிரெண்டு நிதானங்களாகும். பேதமையிலிருந்து செய்கை தோன்றுகிறது. செய்கையிலிருந்து உணர்வு தோன்றுகிறது. இவ்வாறாக ஒன்றிலிருந்து இன்னொன்று சார்புடன் தோன்றுகின்றன. செய்கைக்குப் பேதமை இலக்காகும். உணர்வுக்கு இலக்கு செய்கையாகும். இவ்வாறு ஒவ்வொன்றும் முந்தையதின் இலக்காகி இறுதியில் வினைப்பயனின் இலக்கு பேதமை என்று ஒரு வட்டம் சுழன்று நிற்கும்.}

“அங்ஙனம் அவை தோன்றாமல் இருக்க வாய்ப்பிருக்கிறதா?” என்று மணிமேகலை கேட்டாள்.

“இருக்கிறது. எந்தக் காரணத்திற்காகத் தோன்றுகிறதோ அந்தக் காரணத்தை எதிர்த்துநிற்கவேண்டும். தோன்றுவதற்குரிய காரணம் இல்லாமல்போகும்போது தோற்றமே  நேராது அல்லவா?”

“ஆம், ஐயனே!“

“காரணம் இல்லையெனில் காரியம் இல்லை. எனவே ஒவ்வொரு பிறப்பும் அது தோன்றுதற்குரிய காரணத்தைச் சார்ந்தே தோன்றுகிறது. அத்தகைய காரண காரியங்களின் இருப்பையும் இன்மையையும் கூறுகிறேன்.”

மேலும் தொடர்ந்தார்.

“இந்த நிதானம் நான்கு கண்டங்களை உடையது. அந்தக் கண்டங்கள் தம்முள் சேர்ந்து மூன்றுவித புணர்ச்சிகளாக விளங்கும்.  தோற்றம் மூன்று வகைப்படும். அந்தத் தோற்றம் உண்டாவதற்குரிய காலம் மூன்று வகைப்படும்.  வேட்கை, பற்று, பேதமை இவை மூன்றும் குற்றங்களாகும். பாவமும், செய்கையும் வினைகளாகும். மேற்கூறிய பனிரெண்டு நிதானங்களில் எஞ்சியுள்ள ஏழும் வினைகளின் பயன்களாகும். இதன் காரணமாகத் தோன்றிய உயிர்கள் நிலையாக இருப்பதில்லை. இன்பத்தில் நிலைப்பதில்லை. சதா சர்வகாலமும் துன்பத்தில் உழல்கின்றன.

“நான்குவகை உண்மைப் பொருள்களுக்கு அடித்தளமாக விளங்கி, ஐந்துவகை இந்திரியங்கள் தோன்றக் காரணமாகவும், மெய்மை உணர்விற்குரிய ஆறுவகை வழக்குகளுக்கு முகாந்திரமாகி, நான்குவகை நயங்களால் பயன்கள் எய்தி, நான்கு வகையான கேள்வி-பதில்களைக் கொண்டு, சுயம்புவாகத் தோன்றி, முடிவில்லாததாகி, நிகழ்ந்துகொண்டே இருப்பதாய், தோற்றுவிப்பவர் இன்மையால் தோன்றாப் பொருளாகி, யான் எனது என்ற செருக்கற்றதாகி, சென்றது, வந்தது என்ற இரண்டுமின்றி, தான் ஒன்றை முடிக்காமால் தானும் முடிவற்றதாய், கர்மா, கரும பலன், பிறப்பு, வீடு பேறு  என்று ஒன்றோடு ஒன்று தொடர்புடையவற்றிற்குத் தானே காரணமாக அமைந்தவையே பனிரெண்டு வகை நிதானங்களாகும். இந்த நிதானங்களை இப்பூவுலகில் தோன்றியவர்கள் நன்றாக ஆராய்ந்து தெளிவுபெற்றால் அவர்கள் வீடு பேற்றினை அடைவர். அவ்வாறு தேர்ந்து தெளியாதவர்கள் மீளாநரகத்தில் வீழ்பவர்களாவர். அப்படிப்பட்ட பனிரெண்டு வகை நிதானங்களைப் பற்றித் தெரிந்துகொள்வோம்.

“பேதைமை என்பது இதுவரை கூறிய நான்கு மெய்ப்பொருள், பனிரெண்டு நிதானங்களை அறிந்து கொள்ளாமல் மயங்கி, இதுகாறும் கூறிய இருவகை அளவைகளான காட்சியளவை, கருத்தளவை ஆகிய இரண்டினாலும் அறிந்துகொண்டவற்றை மறந்து, முயல் கொம்பு உண்டென்று சொல்வோர் சொல்வதைக் கேட்டு முயல் கொம்பு உண்டு என்று நம்புவதாகும்.

“மேல் உலகம், கீழ் உலகம், பாதாள உலகம் என்ற மூவுலகங்களில் எண்ணிக்கையில் அடங்கா  உயிரினங்கள் உள்ளன. இந்த உயிர்கள் ஆறு பிரிவினை உடையவை. மக்கள், தேவர், பிரமர், நரகர், விலங்கு, பேய் என்ற ஆறு பிரிவுகளே அவை. நல்வினை தீவினைகளுக்கு ஏற்ப மேற்சொன்ன ஆறு பிரிவில் ஒரு பிரிவில் உயிர்கள் பிறக்கும். செய்வினைப் பயனாகிய கருமபலன் எய்தும்போது மனதில் பேரின்பமும், கவலையும் வினைப்பயனுக்கு ஏற்றவாறு தோன்றும்.

“தீவினை என்றால் என்னவென்று பார்ப்போம். உடலால் உண்டாகும் தீமை மூன்று. அவை கொலை, களவு மற்றும் காமம். வாக்கின்மூலம் நான்கு தீவினைகள் உண்டாகின்றன. அவை பொய், குறளை, இன்னாச் சொல், பயனில்லாத சொல் என்ற நான்கு வைகையாகும். வெஃகல், வெகுளுதல், மனதால் பிறர்க்குத் துன்பம் நினைத்தால் போன்ற மூன்றும் மனிதனால் செய்யப்படும் தீவினைகளாகும். எனவே உடல், வாக்கு, மனம் ஆகிய மூன்றினாலும் செய்யப்படும் தீவினைகள் எண்ணிக்கையில் பத்தாகும். அறிவுடையோர் ஆராய்ந்து இந்தப் பத்துவகை தீவினைகளை ஆற்றமாட்டார்கள்.

“நல்வினை என்றால் என்னவென்று பார்ப்போம். மேலேசொன்ன பத்து தீவினைகளைச் செய்யாமல் விடுவது நல்வினையாகும். அதற்கும்மேலாகச் சீலத்துடன் ஒழுகி,  தானம்செய்வதில் முன்னின்று, மேன்மையான பிறப்பு என்று கருதப்படும் மனிதர், பிரமர், தேவர் ஆகிய மூன்று பிறப்புகளில் ஒன்றை அடைந்து தாம் செய்த நல்வினைப்பயன் காரணமாக இன்பத்தை அடைவர்.

“அடுத்து உணர்வு என்ற நிதானத்தின் தன்மை குறித்து பார்ப்போம். ஒருவன் உறங்குகிறான். அப்போது அவனுடைய மனதிலே எழும் எண்ணம் செய்கையற்றதாக இருக்கும். இதுவே உணர்வு எனப்படும் நிதானத்தின் தன்மையாகும். புரியாதது மட்டுமல்ல  புலன்களின் பலன்களையும் ஏற்றுக்கொள்ளாதது.

“அடுத்து அருவுரு என்ற நிதானம். அருவுரு என்பது உணர்வுக்கு அடுத்த நிலை. உணர்வும் உயிரும் கொண்ட உருவம் என்று பொருள். உணர்வு என்பது ஐம்புலன்கள்மூலம் வரும் உணர்வு. ஐம்புலன்களின் கருவியே இந்த உடலாகும்.  வாயில் என்ற நிதானம் குறித்துப் பார்ப்போம். மனமும் ஐந்து இந்திரியங்களும் சேர்ந்த ஆறும் உள்ளத்தில் பொருள் குறித்த உணர்வு ஏற்படுவதற்கு இடமாக அமைவது.  ஊறு என்ற நிதானம் உடலும் உள்ளமும் ஐம்புலன்களைப் பொருந்துவது.  நுகர்வு என்ற நிதானம் ஒளி, சுவை, ஒலி நாற்றம் என்ற நால்வகைக் காட்சிப் புலன்களையும் நகை (நகைச்சுவை) முதலிய கருத்து புலன்களையும் துய்ப்பதாகும்.  வேட்கை என்பது ஒரு பொருளை நுகர விரும்பி அது நிறைவேறாமல்போகும் நிராசையாகும். பற்று என்பது நுகர்பொருளை விடாமல் பசைபோல நெஞ்சில் பற்றிக்கொள்ளும் தன்மையாகும்.  பவம் என்பது கருமங்களின் பலன் இது இது என்பதனை உணர்ந்து அந்தப் பலன்களை ஏற்றுக் கொள்வதாகும்.

“பிறப்பு எனப்படும் நிதானத்தை இப்போது பார்ப்போம். செய்த வினைகளின் பலன்களுக்கு ஏற்ப முன்னும் பின்னுமாய் உள்ள நிதானங்களுடன் மனமும் சேர்ந்து வினைகளின் பயன்களுக்குகேற்ப பலவகைப் பிறவிகளில் தோன்றுவதாகும்.  பிணி என்ற நிதானம் ஏனைய நிதானங்களுடன் இனைந்து உடலின் இயல்பு நிலை மாறி துன்பம் கொள்வதாகும்.  மூப்பு என்று சொல்லப்படுவது இறக்கும் வரையில் வந்து தாக்கும் நிலையாமயினால் உடல் தளர்வதாகும்.  சாக்காடு என்பது அருவாதல் உருவாதல் என்ற தன்மையினை உடைய உடலானது மேலைக் கடலில் போய் மறையும் கதிர் போன்று சென்று மறைவதாகும்.

“பேதமையை அடித்தளமாகக் கொண்டு செய்கை என்ற நிதானம் தோன்றும். அந்தச் செய்கையை அடிப்படையாகக் கொண்டு உணர்ச்சி தோன்றும். உணர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு அருவுரு என்ற நிதானமும், அந்த அருவுருவைக் கொண்டு வாயில் என்ற நிதானம் தோன்றும். வாயிலை அடிப்படையாகக் கொண்டு ஊறு என்ற நிதானமும், அந்த ஊற்றினைச் சார்பாகக் கொண்டு நுகர்ச்சியும், நுகர்ச்சியை அடித்தளமாகக் கொண்டு வேட்கையும், வேட்கையின் சார்பில் கருமத் தொகுதியும், வினைப்பயனின் சார்பாக பாவமும் தோற்றமும் தோன்றும். தோற்றத்தைச் சார்பாகக் கொண்டு முதுமை, நோய், இறப்பு என்ற நிதானங்கள் தோன்றும். கவலை, அழுகை, ஆற்றாமை என்று முடிவில்லாத துன்பம் வந்து சேரும்.

“அதேபோல ஒவ்வொன்றின் மீட்சியும் (விடுதலையும்) இன்னொன்றைச் சார்ந்து இருக்கும்.  பேதமையும் செய்கையும் மற்ற நிதானங்களுக்கு அடிப்படை காரணமாகும். எனவே இது ஆதிக் காண்டம் எனப்படும்.  உணர்ச்சி, அருவுரு என்ற உடல், வாயில், ஊறு,ஐம்புலன்களுடன் மனமும் சேர்ந்து துய்க்கும் நுகர்வும், மேற்சொன்ன இரண்டு நிதானங்களின் காரணமாக எழுந்தவை என்பதால் இவை ஐந்தும் இரண்டாம் காண்டம் எனப்படும்.  வேட்கை, பற்று, வினைப்பயன் என்ற மூன்றும் இரண்டாம் காண்டத்தில் உள்ள உணர்ச்சியில் தொடங்கி நுகர்ச்சி ஈறாக உள்ள ஐந்து நிதானங்களின் குற்றங்களும் அவற்றின் பலன்களும் என்பதால் இது மூன்றாம் காண்டமாகும்.  பிறப்பு, நோய், மரணம் என்ற இந்த மூன்று துன்பங்களும் வினைப்பயன் காரணமாகப் பிறந்தவுடன் உடன்வருவதால் இது இறுதியான நான்காம் காண்டமாகும்.

“அடுத்து ஒவ்வொன்றின் சந்திகளைப்பற்றி காண்போம். பிறப்பிற்குக் காரணமான செய்கை, அதாவது வினையும் உணர்ச்சியும் ஒன்று சேர்வது முதல் சந்தி. நுகர்ச்சி ஒழுக்கமும் வேட்கையும் சேர்வது இரண்டாம் சாந்தி.  கருமபலங்களின் தொகுப்பும் மேற்சொன்ன பிறப்பும் சேர்வது மூன்றாவது சந்தியாகும்.  மூன்று வகை பிறப்பு குறித்து ஆராய்ந்து பார்க்கும்போது வீடுபேறு என்னும் மோட்சகதி தூய்மையான விசுத்தி மார்கத்தில் ஒழுகி அதன் இறுதியில் அடையப்பெறும் சமாதிநிலையே ஆகும். அந்தச் சமாதிநிலை இந்த ஒழுக்காற்றில் தானே அமையும். உணர்வு உள்ளே அடங்கும். அப்போது உள்ளே உரு ஒன்று தோன்றும். அந்த உணர்வும் உருவும் அழிந்து மக்கள் தெய்வம் விலங்கு என்ற உருவம் தோன்றும்

“மூவகைக் காலங்கள் குறித்துப் பார்ப்போம். மறத்தலைச் செய்யும் பேதமையையும், வினையையும் இறந்தகாலம் எனக்கூறவேண்டும். உணர்வு, அருவுரு, வாயில், ஊறு, நுகர்ச்சி, வேட்கை, பற்று, பவம், தோற்றம் ஆகிய நிதானங்களை நிகழ்காலம் என்று கொள்ளவேண்டும். பிறப்பு, நோய், மரணம் அவலம், கவலை, கையாறு ஆகிய துன்பங்களை வருங்காலம் என்று கொள்ளவேண்டும்.

“அவாவும் பற்றும் அறியாமை எனப்படும் பேதமையும் ஆகிய மூன்று குற்றங்களும் தம்முள் ஒன்றுடன் ஒன்று கலந்தவை எனப்படும். இதனோடு சேர்ந்து கூறப்படும் பாவமும்,கருமங்களின் தொகுதியும் வினை என்று கூறப்படும்.  அவ்வாறு ஏற்படும்போது உணர்ச்சி, முதுமை, நோய், மரணம் ஆகியவை நிகழ்ச்சிகள் என்று வழங்கப்படும். குற்றப் பண்புகளும், வினைப் பயன்களும் என்றும் துன்பம் தருபவை. அடைந்துள்ள பிறவியும் அதன் தோற்றங்களும் நிலையானவை அல்ல. எந்த நிலையில் இருந்தாலும் உயிர்களுக்கு ஆன்மா என்ற ஒன்று கிடையாது. இவ்வாறு உணர்வதே வீடுபேறு எனும் மோட்சகதிக்கு இட்டுச் செல்லும்.

“உணர்ச்சியில் தொடங்கி, கையாறுவரையில் உள்ள பதின்மூன்றையும் தன்னிடம் கொண்டுள்ள பிறப்பே இங்கு துன்பம் என்று கருதப்படும்  உண்மை தோற்றமாகும். இந்தப் பிறவித் துன்பத்திற்குக் காரணங்களாக அமைபவை. அறியாமையும், கருமமும், வேட்கையும், புலன்கள்வழியில் சென்று ஏற்படும் பற்றும், அந்தக் கருமத் தொகுதிகளுமாகும். எனவே பிறப்பும் கரும வினைகளும் துன்பம் என்றால் துன்பமில்லாத நிலை ஒன்று இருக்கவேண்டுமல்லவா? அந்த நிலைதான் இன்ப நிலை. இன்ப நிலைக்குக் காரணமாக அமைபவை பற்றற்ற நிலையாகும். உருவமும், வேதனை என்று அறியப்படும் நுகர்ச்சியும், குறிப்பும், பாவனையும், பாவனையுள்ள அறிவும் ஐவகைக் காந்தங்கள் என்று அறியப்படும்.

“தெளிவாகக் கூறும்காலை ஆறு வகையான  வழக்கு எவை எவை என்று பார்க்கலாம். தொகை, தொடர்ச்சி, தன்மை மிகுந்து உரைத்தல், இயைந்து உரைத்தல் என்ற இந்த நான்கோடு இணைந்துவரும் உண்மை வழக்கும், இன்மை வழக்கும், உள்ளது சார்ந்த உண்மை வழக்கும், உள்ளது சார்ந்த இன்மை வழக்கும், உள்ளது சார்ந்த இன்மை வழக்கும், இல்லது சார்ந்த இன்மை வழக்கும்,  இல்லது சார்ந்த உண்மை வழக்குமாகிய ஆறும் ஆகும்.

“மேலே கூறியவற்றில் தொகை என்பது பல்வகை உயிரணுக்களின் தொகுப்பினை உடல் என்றும், பல்லாயிரம் கோடி நீர்த்துளிகளை வெள்ளம் என்றும், பல ஊர்களின் தொகுப்பை நாடு என்று கூறுவதாகும். இதனை மேலும் விளக்குவது என்றால் விதை, அந்த விதையிலிருந்து வெளியில் வரும் முளை, பிறகு அந்த நாற்று வளர்ந்து பயிரானாலும் தனித் தனியாகக் குறிப்பிடாமல் மொத்தமாக நெல் என்று கூறுவது போலாகும்.  இயல்பு மிகுத்துரைத்தல் என்பது ஒரு பொருள் அழிந்தது என்றும், தோன்றியது என்றும், முதுமையுற்றது என்றும் கூறப்படும் இயல்புகளில் மூன்றில் எதையாவது மிகையாகக் கூறுவதாகும்.

“உள்வழக்கு என்பது உள்ள உணர்ச்சியை உள்ளது என்று கூறுவதாகும். இல்வழக்கு என்பது முயற்கொம்பு இல்லை என்றால் இல்லை என்று சொல்லுவது. உள்பொருள்  சார்ந்து வருகின்ற உள்வழக்கு இயல்பில் உள்ள உணர்வுடன் எழும் நுகர்ச்சியாகும்.  உள்ளது சார்ந்த இல்வழக்கு என்பது உணர்வாகிய இல்பொருள் மின் போலத் தோன்றியது என்று கூறுவதாகும். உள்பொருளுக்கு உருவம் கூற முடியாது என்பதால் மின்னல் போலத் தோன்றியது என்று கூறுகின்றனர். காரணமேயில்லாமல் காரியத்தைக் கூறுவது இல்லாததைச் சார்ந்து வரும் உள்வழக்காகும். இல்லாத உள்பொருளைச் சார்ந்த இல்வழக்கு என்பது முயற்கொம்பு மெய்யான ஒன்று இல்லை என்பதால் அதற்கு உருவமில்லை என்று கூறுவதாகும்.

“அடுத்து நான்கு வகையான நயங்கள் என்னவென்று பார்க்கலாம். ஒற்றுமை, வேற்றுமை, புரிவின்மை, இயல்பு என்ற நான்குமே மேற்சொன்ன நயங்களாகும். முதலில் ஒற்றுமை நயம் என்பது என்னவென்றால் காரணக் காரியப் பொருள்களை ஆராய்ந்து பார்க்காமல் உள்ளது உள்ளபடி ஒன்றாக பாவிப்பதாகும். ஒருவனுக்குப் பசியில் அரிசி கிடைக்குமாயின் அவன் அரிசி கிடைத்தது என்று கூறாமல் சோறு கிடைத்தது என்று காரணம் காரியம் இரண்டையும் ஒன்றாக பாவிப்பது ஒற்றுமை நயம். இதற்கு நேர்மாறாகக் காரணத்தையும் காரியத்தையும் வேறு வேறாகக் கொள்வது வேற்றுமை நயமாகும். புகையையும் நெருப்பையும் காரணக் காரியங்களால் வேறுபடுத்திக் காட்டுவது வேற்றுமை நயம். காரணக் காரியங்களால் விளைகின்ற பொருளை விளக்கிக் கூற முடியாமல் போவது புரிவின்மை என்றாகும். வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு மூன்றையும் வாயில் தரிக்கும்போது சிவந்த நிறம் வருமல்லவா? ஆனால் எவ்வாறு  சிவந்த நிறம் வந்தது என்பதனை விவரிக்க முடியாததே புரிவின்மை என்னும் நயமாகும். இயல்பு நயம் என்பது நெற்பயிர் முளையிலிருந்து தோன்றும் என்று இயல்பாக நிகழுமொன்றைக் கூறுவதாகும்.

“இந்த நயங்களால் நாம் அடையும் பயன்களைப் பார்ப்போம். காரணக் காரியங்களோடு கூடிய அனைத்தும் தொகைப் பொருள்கள் என்பது விளங்கும். எனவே அப்பொருள்கள் மீது பற்று வைக்கக் கூடாது. செய்யும் செயலுக்கும் செயல் புரிபவனுக்கும் அதாவது கருமத்திற்கும் கர்தாவிற்கும் தொடர்பு இல்லை. சரியான காரணங்களால்தான் காரியம் பிறக்கும். காரணக் காரியமும் அன்று அது இல்லாதமும் அன்று என்று தொகை நான்காக விரியும்.

“அடுத்து வினாவிடையின் நான்கு பிரிவுகளைப் பார்ப்போம். அடித்துச் சொல்வது ஒரு வகை; விலாவாரியாகச் சொல்லுவது ஒரு வகை; கேள்விக்கு மறுகேள்வி எழுப்புவது ஒரு வகை; பதில் எதுவும் சொல்லாமல் மெளனமாக இருப்பது ஒருவகை என்று வினாவிடை நான்கு வகைப்படும். தோன்றியது அழியுமா அழியாதா என்று கேள்வி எழும்போது அழியும் என்று அடித்துக் கூறுவது துணிந்து சொல்லல் என்பதாகும். இறந்து கிடக்கும் ஒருவனை மீண்டும் பிறப்பானா என்று கேட்கும்போது அக்கேள்விக்கு அவன் பற்றுகளைத் துறந்தவன் எனில் மீண்டும் பிறவான்; பற்றுக்களை விடாமல் ஏக்கத்தில் இறந்தவன் என்றால் மீண்டும் பிறப்பான் என்று பகுத்துக் கூறுவது குறித்து விளம்புதல் என்ற வகையைச் சார்ந்தது. பனங்கொட்டையிலிருந்து பனைமரம் வந்ததா அல்லது பனைமரத்திலிருந்து பனங்கொட்டை வந்ததா என்று ஒருவன் கேள்வி கேட்கும்போது எந்தப் பனை, எந்தப் பனங்கொட்டை என்று எதிர்க்கேள்வி எழுப்புவது வினாவின் விடுத்தல் வகையைச் சார்ந்ததாகும். ஆகாயப்பூ புதியதா பழையதா என்று இல்லாத பொருள் குறித்து வினா எழுப்பும்போது அதற்கு பதில் எதுவும் கூறாமல் மெளனமாக இருப்பது வாய்வாளாமை வகையாகும்.

“பற்றிற்கும், மோட்சத்திற்கும் அவையவைக்குரிய காரணங்களேயன்றி வேறில்லை. கட்டுவிப்பதற்கும், விடுதலை பெறுவதற்கும் அவனவன் சொந்த முயற்சியன்றி பிறிதொருவரால் இயலாது. மேலே நான் குறிப்பிட்ட துக்கங்களுக்கு ஆசை, கோபம், மயக்கம் ஆகிய மூன்றும் காரணம்.  பொருள்கள் (வஸ்துக்கள்) நிலையற்றவை என்றும், துன்பம் அளிப்பவை என்றும், ஆன்மாவற்றவை என்றும், அருவருக்கத்தக்கவை என்று தெளியும்போது பற்றை விடவேண்டும். பற்று விடப்படும்போது அதன் காரணமான கரும வினை அகலும். மைத்ரி பாவத்தாலும், கருணை பாவத்தாலும், முதிதை பாவத்தாலும் நல்லுணர்வு திருந்தப் பெற்றுக் கோபத்தை ஒழித்தல்வேண்டும்.

“சுருதி, சிந்தனை, பாவனை, தரிசனம் என்ற நான்கையும் அடைந்து மயக்கத்தை ஒழிக்கவேண்டும். சுருதி தக்க அறவுரைகளைக் கேட்டல் என்றால் சிந்தனை அவற்றைப் பற்றிச் சதா காலமமும் நினைப்பது என்றும் பாவனை என்பது அந்த அறவழிகளில் ஒழுகுதல் என்றால் இந்த மூன்றின் வழியாக அடையப்போகும் மெய்மை நிலை தரிசனமாகும்.”

மேற்சொன்ன நான்கு வகையான நெறிகளின் வழியே நடந்து மனத்தில் உள்ள இருள் நீங்கப் பெறவேண்டும். எவ்வித முன்பின் முரண் வாக்குகள் கூறாமல் தெளிவான அறவுரைகள் மூலம் அறவண அடிகள் மணிமேகலையின் மனதில் ஞானதீபம் ஒன்றை ஏற்றிவைத்தார்.

மணிமேகலை தவக்கோலம் பூண்டு  அறவணஅடிகளின் அறவுரைகளைக் கேட்டு பிறப்பிற்குக் காரணமான துன்பங்கள் நீங்கவேண்டி நோன்பிருக்கத் தொடங்கினாள்.

[மணிமேகலை காப்பியம் நிறைவுற்றது]

 

5 Replies to “பவத்திறமறுகெனப் பாவைநோற்ற காதை – மணிமேகலை 31”

 1. இதுகாறும் தொடர்ந்து மணிமேகலை காவியத்தை ஒரு புதிய முயற்சியாகப் பதவுரை என்றில்லாமல் ஒவ்வொரு வரிக்கும் பொருள் கூறும் விதமாக அதே நேரம் வாசிக்கும் அனுபவத்தையும் குறைத்து விடாமல் நாவல் வடிவில் என்னால் இயன்ற அளவு கூறியுள்ளேன். மணிமேகலை மன்னரிலிருந்து கடைநிலைக் குடிமகன் வரையிலும், கணிகையர் தொடங்கி பத்தினி பெண்கள் வரையிலும் மக்களின் இயல்பு வாழ்க்கை, அவர்கள் வாழ்ந்த சூழல், சமுதாய நிலை இவற்றை எல்லாம் புத்த பிரான் என்ற அச்சினைச் சுற்றி எழுதப்பட்ட காவியம். சிலப்பதிகாரம் போன்று படிக்கும் ஆவலைத் தூண்டும் கதைப் போக்கு இதனிடம் இல்லையென்றாலும் சுமார் 1700, 1800 முன்பு வாழ்ந்த தமிழர்களின் வாழ்வைப் படம் பிடித்துக் காட்டுகிறது. காசியிலிருந்து குமரிமுனை வரை நமது பாரதம் ஒரே தேசியமாக இருந்திருக்கிறது என்பதற்கு மணிமேகலையில் தெளிவான சான்றுகள் உள்ளன. தொடர்ந்து வெளியிட்டு உதவிய தமிழ் ஹிந்து இணைய தளத்திற்கு என் நன்றி என்றென்றும் உரித்தானது. குறிப்பாக ‘ தவத்திறம் பூண்டு தருமம் கேட்ட காதை ‘ அளவில் மிகப் பெரியது. அனைத்துமே தர்க்க வாதத்திற்கான கலைநுட்பச் சொற்கள் நிரம்பிய பகுதி. அதனைப் பதிவேற்றுவது என்பது மிகச் சிரமமான செயலாக இருந்திருக்க வேண்டும். அதற்குத் தனிப் பாராட்டுகள். என்னையும் மீறி சில எழுத்துப்பிழைகள் இருந்திருக்கலாம். மன்னியுங்கள். ஓர் அன்பர் ஆபுத்திரன் திறன் உரைத்த காதையில் செந்தமிழ் நடையின் நடுவே அந்தணரின் கொசைத் தமிழ் வருவது சரியில்லை என்று கூறியிருந்தார். நான் அதனை எழுதக் காரணம் ஆதி காலம் தொட்டு அந்தணர்கள் தங்கள் வாழ்க்கை முறை, தங்கள் மொழி போன்றவற்றைத் தனியாகவே வைத்துக் கொண்டு வந்துள்ளனர் என்பதற்காகத்தான் அப்படிப் பயன்படுத்தியிருந்தேன். மற்றபடி ஒவ்வொரு காதையையும் புதின வடிவில் செய்யும்போது நான் மிகவும் அனுபவித்துச் செய்தேன். இந்தப் பயணத்தில் என்னுடன் தொடர்ந்து வந்த அறிஞர்களுக்கும், வாசகர்களுக்கும், திரு.ஜடாயு அவர்களுக்கும் எனது சிரம் தாழ்ந்த நன்றி.

 2. அன்புள்ள சத்தியப்பிரியன் அவர்களுக்கு,

  தாங்கள் எழுதிவந்த “மணிமேகலை” தொடரை ஒருவரிவிடாமல் படித்துவந்தவன் என்றமுறையில் தங்களுக்கு என் பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்ளுகிறேன்.

  அதிலிருந்து நான் பெற்ற சில கருத்துக்கள்:

  1. ஒரு கதை என்ற முறையில் அது விருவிருப்பாகச் செல்கிறது.
  2. புத்தநெறியை வலியுறுத்தும் நூல் என்றமுறையில் அது ஒரு பிரச்சார நூலாகவிருப்பதை மிகவும் எளிதில் அறிந்துகொள்ள இயலுகிறது.
  3. இந்து சமயத்திலுள்ள பல கடவுளர்களையும் புத்த சமய்த்ததாக அது குறிப்பிடுவதால், தற்காலத்தைய சைவம், வைணவம், சாக்தம், கௌமாரம், காண்பத்யம்போலவே, புத்தசமயம் அக்காலத்தில் இந்து சமயத்தின் ஒரு பிரிவாக இருந்திருக்கலாம் எனத் தோன்றுகிறது.
  4. தேவாரத்தில் சைவமே சாலச் சிறந்தது என வருவதுபோல, புத்தமே சாலச்சிறந்தது என்று சொல்வதோடு மட்டுமின்றி, சமணத்தையும், வேதநெறிகளையும் அது தாக்குகிறது.
  5. அஃதின்றி, சமூகத்தில் வழுக்கிவிழுந்த [சுதமதி], கூடா உறவு கொண்ட [ஆபுத்திரனின் தாய்]பெண்களை அந்தணப் பெண்களாகக் காட்டுவதால், அந்தணர் எதிர்ப்பு சீத்தலைச் சாத்தனார் காலத்தில் துவங்கிவிட்டது தெரிகிறது.

  // ஓர் அன்பர் ஆபுத்திரன் திறன் உரைத்த காதையில் செந்தமிழ் நடையின் நடுவே அந்தணரின் கொசைத் தமிழ் வருவது சரியில்லை என்று கூறியிருந்தார்.//

  அப்படிக் கருத்து தெரிவித்த நண்பர் நானல்ல. அப்படி எழுதியை நான் தவறாகவும் எண்ணவில்லை. இருப்பினும்,

  // நான் அதனை எழுதக் காரணம் ஆதி காலம் தொட்டு அந்தணர்கள் தங்கள் வாழ்க்கை முறை, தங்கள் மொழி போன்றவற்றைத் தனியாகவே வைத்துக் கொண்டு வந்துள்ளனர் என்பதற்காகத்தான் அப்படிப் பயன்படுத்தியிருந்தேன்.//

  என்று நீங்கள் எழுதியதைப் படித்ததும், முன்னர் ஓர் அன்பர் ஆபுத்திரன் திறன் உரைத்த காதையில் செந்தமிழ் நடையின் நடுவே அந்தணரின் கொசைத் தமிழ் வருவது சரியில்லை என்று அவ்வன்பர் எழுதியது சரியென்றே எனக்குப் படுகிறது.

  மணிமேகலை எழுதப்பட்ட காலத்தில் அந்தணர்கள் எப்படிப் பேசினார்கள் என்று எப்படித் தாங்கள் ஊகித்தறிய இயலும்? இதற்கான சான்றுகள் தங்களிடமுள்ளதா? மணிமேகலையின் அந்தணத் தாக்கம் தங்களையும் பற்றிக்கொண்டது என்றே நான் எண்ணுகிறேன்.

  ஒரு அரிய முயற்சியைக் கைக்கொண்டு, அதில் வெற்றியும்கண்ட தாங்கள், ஒரு சாதியைப் பற்றி இப்படி எழுதியிருப்பது சரியானதல்ல என்பதே எனது கருத்து.

  ஏலக்காய், பாதம் போட்டுக் காய்ச்சிய பாலில், கடைசியில் ஒரு கல் உப்பைப் போட்டுவிட்டதுபோலத்தான் தாங்கள் எழுதிய // நான் அதனை எழுதக் காரணம் ஆதி காலம் தொட்டு அந்தணர்கள் தங்கள் வாழ்க்கை முறை, தங்கள் மொழி போன்றவற்றைத் தனியாகவே வைத்துக் கொண்டு வந்துள்ளனர் என்பதற்காகத்தான் அப்படிப் பயன்படுத்தியிருந்தேன்.// என்று எழுதியது எனக்குப் படுகிறது.

  இதைப் பதியவேண்டி நேரிட்டதே என்று மிகவும் வருந்துகிறேன்.

 3. // நான் அதனை எழுதக் காரணம் ஆதி காலம் தொட்டு அந்தணர்கள் தங்கள் வாழ்க்கை முறை, தங்கள் மொழி போன்றவற்றைத் தனியாகவே வைத்துக் கொண்டு வந்துள்ளனர் என்பதற்காகத்தான் அப்படிப் பயன்படுத்தியிருந்தேன்.// நான் இவ்வாறு குறிப்பிட்டதில் எனக்குத் தவறு எதுவும் இருப்பதாகத் தோன்றவில்லை. மேலும் அந்தனர்கள் தங்கள் மொழி , வாழ்வியல் முறைகளைத் தனியாக வைத்துக் கொண்டு வந்தனர் என்பது அவர்களைக் குறைத்து மதிப்பிடுவதாக அர்த்தம் ஆகாது. அப்படி ஒரு தொனியிலும் நான் கூறவில்லை. நான் அதனை அவர்களுடைய சிறப்பம்சமாகவே கருதுகிறேன்.

 4. மிகவும் அருமை… செந்தேனாகிய புத்த பகவானது தர்மத்தினை சீத்தலைச் சாத்தனார் தமிழ் எனும் அரிய பொற்கிண்ணத்தில் சேர்த்ததைப் போன்ற இந்த மணிமேகலை எனும் உன்னத காவியத்தினை நீங்கள் மிகவும் செம்மையாக மொழிப்பெயர்த்தீர்கள் என்றே நான் நம்புகிறேன். மிக்க நன்றி… உங்களது ஒவ்வொரு தொடரையும் இடைவிடாது வாசித்து மகிழ்ந்தேன். உங்கள் பணி தொடர வாழ்த்துகிறேன்!

 5. அன்புள்ள சத்தியப்பிரியன் அவர்களுக்கு, நாம் வெளியிடும் ஒரு சஞ்சிகையில் தங்கள் பெயரை குறிப்பிட்டு வெளியிட அனுமதி அளிக்க வேண்டுகிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *