டிராகனின் சீறலும் சிங்கத்தின் கர்ஜனையும்…

டோகோ லா பீடபூமியின் இருப்பிடம் காட்டும் வரைபடம்.

வடகிழக்கு மாநிலமான சிக்கிம் எல்லைப்பகுதியில் சீனா திடீரென வாலாட்டத் துவங்கியிருக்கிறது. சிக்கிம், பூடான் இணையும் இடத்தில் சீன எல்லையை ஒட்டியுள்ள இந்தியப் பகுதியான டோகோ லா பீடபூமி பகுதியில் ஜூன் 27-இல் இந்திய பாதுகாப்பு அரண்கள் மீது திடீர்த் தாக்குதல் நடத்திய சீன மக்கள் ராணுவம், இந்தியத் தரப்பில் அமைக்கப்பட்டிருந்த பதுங்கு குழிகளை அழித்தது. அதைத் தடுத்த இந்திய வீரர்களுடன் சீன வீரர்கள் ஆயுதங்களின்றி கைகலப்பில் ஈடுபட்டனர். அதையடுத்து அப்பகுதியில் இந்திய ராணுவம் குவிக்கப்பட்டதால் போர் மேகம் சூழ்ந்துள்ளது.

வழக்கமாக சீனா அத்துமீறினால் இந்தியா பின்வாங்குவதும், அமைதி காப்பதுமே நடைமுறையாக இருந்து வந்துள்ளது. 2008-இல் இந்திய பதுங்குகுழிகள் அழிக்கப்பட்டபோது வெற்று அறிக்கையுடன் நிறுத்திக் கொண்டது அப்போதைய மன்மோகன் சிங் அரசு. ஆனால், கடந்த மூன்றாண்டுகளாக இந்திய ராணுவம் எதிர் நடவடிக்கைகளை தொடர்ந்து எடுப்பது,  சீன கம்யூனிஸ அரசுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. அதன் விளைவே, டோகோ லா பகுதியில் நடைபெறும் போர் ஆயத்த ஏற்பாடுகள் என்கிறார்கள் ராணுவ நிபுணர்கள்.

இந்த ஆண்டு தொடக்கத்தில் சீன ராணுவ ஹெலிகாப்டர்கள் உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள பரஹோதி விமானப்படைத் தளம் பகுதியில் அத்துமீறி ஊடுருவி பறந்தன. அதற்கு இந்தியா கடும் எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

டோகோ லா பீடபூமியைக் காக்கும் இந்திய வீரர்கள்

அதுமட்டுமல்ல, இந்தியாவின் பதில் நடவடிக்கையால் வெகுண்ட சீன அரசு, தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள கைலாஷ் மானசரோவர் பகுதிக்கு செல்லவிருந்த இந்திய யாத்ரீகர்களைத் தடுத்து, திருப்பி அனுப்பிவிட்டது. இது இந்தியா- சீனா நாடுகளிடையிலான ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை மீறுவதாகும். மேலும்,  “1962-இல் நடைபெற்ற போரில் சீனாவிடம் இந்தியா தோற்றதை மறந்துவிட்டது” என்று சீன பத்திரிகை வாயிலாக ஜீ ஜின்பின் அரசு எச்சரித்தது.

அதற்கு, இந்திய பாதுகாப்பு அமைச்சர் அருண் ஜேட்லி உரிய பதில் அளித்தார். “1962-ஆம் ஆண்டு இந்தியா என்பதே வேறு; இப்போதைய இந்தியாவின் வலிமை என்பது வேறு” என்று அவர் பதிலடி கொடுத்தார். அது மட்டுமல்ல, டோகோ லா பகுதியில் நிலைகொண்டுள்ள இந்திய- திபெத் எல்லைப் பாதுகாப்புப் படைக்கு ஆதரவாக கூடுதல் ராணுவம் அனுப்பி வைக்கப்பட்டது.

டோகோ லா பகுதியில் சீனா ஆதிக்கம் செலுத்துவது, வடகிழக்கு மாநிலங்களை இந்தியாவின் பிற பகுதிகளுடன் இணைக்கும் கோழிக்கழுத்து போன்ற சிலிகுரி பகுதியை துண்டிப்பதாகிவிடும் என்பதால், இவ்விஷயத்தில் இந்திய ராணுவம் எதற்கும் தயார் நிலையில் இருக்கிறது.

இதனிடையே, இந்திய மாநிலமான சிக்கிமை தனி நாடாக்க சீனா ஆதரவு தெரிவிக்க வேண்டிய நிலைமை ஏற்படும் என்று சீனா ஜூலை 6-இல் எச்சரித்தது. இதுவும் அரசு சார்பில் அல்லாமல், சீனப் பத்திரிகை வாயிலான மிரட்டலே. இதை ஒரு உபாயமாகவே சீனா கொண்டிருக்கிறது. ஆனால், இதனை இந்திய அரசு ஒரு பொருட்டாகக் கருதவில்லை. ராஜீய ரீதியில் அல்லாத சீண்டல்களுக்கு பதில் அளிக்காமல் இருப்பதே, நமது பொறுமையை சோதிப்பவர்களுக்கு உரிய பாடம்.

மற்ற எல்லா மாநிலங்களைப் போலத்தான் சிக்கிமும் இந்தியாவுடன் இணைந்த பகுதியாக உள்ளது. நாடு சுதந்திரம் பெற்றபோது சிக்கிமும் சுதந்திரம் பெற்று தனி நாடாகவே இருந்தது. ஆனால், சீன ராணுவம் தொடர்ந்து சிக்கிம் எல்லையில் அத்து மீறியதால், பாதுகாப்புக் கருதி, இந்தியாவுடன் இணைவதாக 1975-இல் அறிவித்தது.

பூடான் மன்னர் வாங்சுக் உடன் பிரதமர் மோடி

1975-இல் சிக்கிமின் பிரதமராகப் பொறுப்பேற்ற காஜி, சிக்கிமை இந்தியாவின் ஒரு மாநிலமாக இணைத்துக் கொள்ள இந்திய அரசாங்கத்துக்கு வேண்டுகோள் விடுத்தார். அதன்படி எடுக்கப்பட்ட பொது வாக்கெடுப்பில் 97.5 % சிக்கிம் மக்கள் இந்தியாவுடன் இணைவதை ஆதரிக்க, 16.05.1975-இல் சிக்கிம் இந்தியாவின் 22-ஆவது மாநிலமாக இணைந்தது.

ஆரம்பத்தில் அதை எதிர்த்த சீன அரசு, 2003-ஆம் ஆண்டு வாஜ்பாய் ஆட்சியில் கையெழுத்தான இந்திய- சீன எல்லை, வர்த்தக ஒப்பந்தத்தின்போது, சிக்கிமை இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக அங்கீகரித்தது. அதனை மறுபரிசீலனை செய்யப்போவதாகத் தான் சீனா தற்போது மிரட்டுகிறது.

அதேபோல சிக்கிமை ஒட்டியுள்ள, இமாலயச் சாரலில் உள்ள முடியாட்சி நாடான பூடானும், சீனாவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக, இந்தியாவுடன் கரம் கோர்த்தது (1949, 2007 ஒப்பந்தங்கள்). தெற்காசிய நாடுகளின் கூட்டமைப்பில் (சார்க்) அங்கம் வகிக்கும் பூடானின் பாதுகாப்புக்கு இந்தியா உத்தரவாதம் அளித்துள்ளது. பூடானுக்கு என்று தனி ராணுவம் இல்லை. அதன் எல்லைகளையும் இந்தியா தான் பாதுகாக்கிறது. இதனை சீனா விரும்பவில்லை.

இந்தியாவின் சிறப்பு விருந்தினரான, திபெத் புத்த மதத் தலைவர் தலாய் லாமா

சிக்கிமையும் பூடானையும் கபளீகரம் செய்யத் திட்டமிட்ட தனக்கு இந்தியாவின் நிலைப்பாடு இடையூறாக இருப்பதால் பொருமும் சீனா, அவ்வபோது பூடான், சிக்கிம் எல்லையில் அத்துமீறுகிறது. தவிர, டோகோ லா பகுதியில் (இதனை சீனா டோங் லாங் என்று அழைக்கிறது. தனது வரைபடத்தில் அப்பகுதியை சீனப் பகுதியாகக் காட்டி வருகிறது) சாலை அமைக்கவும் முயன்று வருகிறது. இந்திய அரண்கள் அங்கிருப்பது அப்பணிக்கு இடையூறு என்பதாலேயே அவற்றை அகற்ற சீனா துடிக்கிறது.

ஏற்கனவே, திபெத் பீடபூமியை சட்டவிரோதமாக ஆக்கிரமித்து அதை சீனப் பகுதியாக மாற்றிக் கொண்டுவிட்டது செஞ்சீன அரசு. அங்கிருந்து தப்பிவந்த திபெத் மக்களின் தலைவரும், புத்த மதத் தலைவருமான தலாய் லாமா இந்தியாவின் பாதுகாப்பில் தர்மசாலாவில் தஞ்சம் அடைந்திருக்கிறார். நாடு கடந்த திபெத் அரசை இங்கிருந்தபடியே நடத்தும் தலாய் லாமா, எப்படியும் ஒருகாலத்தில் திபெத் விடுதலை பெறும் என்று திண்ணமாக நம்புகிறார். லாமாவுக்கு தஞ்சம் அளித்த இந்திய அரசின் செயலை சீனா தொடர்ந்து விமர்சித்து வருகிறது.

இவ்வாறாக சீனாவின் நாடு பிடிக்கும் ஆசைக்கு தடைபோடும் இந்தியாவுக்கு உறுத்தலாகவே 1962-இல் அருணாசலப் பிரதேசத்திலும் லடாக்கிலும் ஊடுருவலை நிகழ்த்திய சீன ராணுவம், அங்கு பல்லாயிரம் ஏக்கர் பகுதியை ஆக்கிரமித்தது. அதனால் விளைந்த 1962 இந்திய- சீனப் போரில், அன்றைய பிரதமர் நேருவின் செயலற்ற தன்மையால் இந்தியா தோற்றது. பல்லாயிரம் இந்திய வீரர்களின் இழப்புக்குப் பிறகு,  ‘இந்தோ- சீனா பாய் பாய்’ என்ற நேருவின் முழக்கம் ஏற்படுத்திய பாதிப்பை நாடு உணர்ந்தது.

1962- இந்திய- சீனப் போர்: மறக்க முடியாத துயரமான தோல்வி.

இந்தியா-சீனா ஆகிய இரு ஆசிய நாடுகளும் உலக மக்கள் தொகையில் முதல் இரு இடங்களை வகிப்பவை. அரசியல்ரீதியாக இந்தியா ஜனநாயக நாடாக இருக்கிறது. ஆனால், சீனா கம்யூனிஸ சர்வாதிகார நாடு. அதன் அசுர வளர்ச்சி சர்வாதிகாரக் கட்டமைப்பால் பூதாகரமாக உருவாக்கப்பட்டது. 1990-களில் ரஷ்யா சிதறியது போன்ற நிலை  எப்போது வேண்டுமாயினும் சீன மக்கள் குடியரசுக்கும் ஏற்படலாம்.  ஆனால், இந்தியாவோ, பல வேற்றுமைகளிடையிலும் முன்னேறி வருகிறது. இதனை சீன ஆட்சியாளர்களால் தாங்க முடிவதில்லை. எனவேதான், இந்தியாவில் செயல்படும் மாவோயிஸ்ட் தீவிரவாதிகளுக்கும் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் உதவி செய்து, இந்தியாவில் அமைதியைக் குலைக்க முயல்கிறது.

நமது அண்டை நாடான நேபாளம் சீனாவின் சதிவலையில் விழுந்து இந்திய எதிர்ப்பு நாடாக மாறிவரும் சூழலில், சிக்கிம்- பூடான் – நேபாள எல்லையில் உள்ள டோகோ லா பீடபூமி தற்போது போருக்கான மையமாகி இருக்கிறது. ஆயினும் இரு தரப்பிலும் ஆயுதப் பிரயோகம் ஜூலை 9 வரை நடைபெறவில்லை.

சீன அதிபருடன் இந்தியப் பிரதமர்

இந்நிலையில், ஜெர்மனியின் ஹாம்பர்க் நகரில் நடைபெற்ற ஜி20 நாடுகளின் உச்சி மாநாட்டின்போது, பலரது எதிர்பார்ப்பை மீறி, இந்திய பிரதமர் நரேந்திர மோடியும், சீன அதிபர் ஜீ ஜின்பிங்கும் ஜூலை 7-இல் சந்தித்துப் பேசி இருக்கின்றனர். இந்தியா அமைதியையே விரும்புகிறது. ஆனால், சீனா எதை விரும்புகிறது என்பதைப் பொருத்தே எதிர்கால நிகழ்வுகள் அமையும். மரம் ஓய்வை விரும்பினாலும் காற்று விடுவதில்லை என்ற மாவோவின் பொன்மொழிதான் நினைவுக்கு வருகிறது.

இந்திய- சீனப் போர் மீண்டும் நிகழுமானால், இரு தரப்பிலும் பலத்த சேதம் நிச்சயம். ஆனால், அது 1962 போல இருக்காது என்பது சீனாவுக்கும் தெரியும். ஆயினும் இந்தியாவைச் சீண்டுவதன் மூலமாக ஆசிய பிராந்தியத்தில் தனது வல்லாதிக்கத்தை உறுதிப்படுத்த சீனா முயல்கிறது. இனிமேல் அந்த நாடகம் எடுபடாது என்பதை மோடி அரசு வெளிப்படுத்திவிட்டது. அமைதிக்காக கைகுலுக்கும் அதேசமயம், எல்லையில் வீரர்களைக் குவிக்கவும் இந்தியா தயார் என்பது உலகுக்குத் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

உலக அளவில், சீனாவுக்கு எதிரான கூட்டமைப்பு உருவாகிவரும் நிலையில்,  இந்தியாவின் இந்த நிலைப்பாட்டுக்கு ஆதரவு கூடும் நிலையும் காணப்படுகிறது. வட கொரியாவை பின்னிருந்து இயக்கும் சீனாவுக்கு எதிராக அமெரிக்காவும் ஜப்பானும் தென் கொரியாவும் அணிதிரள்கின்றன. பசிபிக் பிராந்தியத்திலும் தென் சீனக் கடலிலும் சீனாவின் ஆதிக்கத்துக்கு எதிராகக்  குரல்கள் ஒலிக்கின்றன. வருங்காலத்தில் அமெரிக்கா- ஜப்பான்- இஸ்ரேல்- ஜெர்மனி- பிரான்ஸ்- பிரிட்டன் கூட்டமைப்பு உருவாகக் கூடும். ரஷ்யா இந்தியாவின் நண்பராக இருப்பதால், புடினும் மோடியுடன் இணக்கமாக செல்லக் கூடும் என்கிறார்கள் சர்வதேச அரசியல் பார்வையாளர்கள்.

இத்தகைய நிலையில் சீனா போரை விரும்புமா? அவ்வாறு போரைத் துவங்கினால், அதனால் சீனாவுக்கு மாபெரும் அடி காத்திருக்கிறது. சீனாவின் எல்லைகள் மறு வரையறையில் தான் அந்தப் போர் நிற்கும்; திபெத்தும், கையாலயமும் இந்திய கட்டுப்பாட்டில் வரும். அதற்குத்தான் டிராகன் ஆசைப்படுகிறதா? இந்திய சிங்கம் டிராகனின் கொட்டத்தை அடக்கத் தயாராக இருக்கிறது.

 

.

3 Replies to “டிராகனின் சீறலும் சிங்கத்தின் கர்ஜனையும்…”

 1. சீனா தனது நாட்டின் அரசியல் குழப்பத்திற்கு அல்லது ஆட்சியாளரின்
  ஆட்சித்திறமையாக சீன மக்களை நம்பவைக்க வேண்டிய நேரத்தில்
  அது இந்தியாவை சீண்டிப்பார்க்கிறது மேலும் ஒரு ஜனநாயக நாடு
  உலகில் வல்லரசாக மாறும் நிலைக்கு போய்க்கொண்டிருப்பதை
  கம்யூனிச சித்தாந்தத்தை கொள்கையாக கொண்டுள்ள சீனாவால்
  ஏற்றுக்கொள்ளமுடியவில்லை.சீனா இப்பொழுதெல்லாம் இந்தியா மீது
  போர்த்துடுக்கும் சாத்தியக்கூறு மிகமிக குறைவு. அது இந்தியாவின்
  பொருளாதாரவாளர்ச்சியும், இப்பொழுது இருக்கின்ற இந்திய ஆட்சியாளர்களின் ஸ்திரத்தன்மையும் வடகொரியா தென்கொரிய
  பிரச்னையும் சீனாவுக்கு போரில் பின்னடைவை ஏற்படுத்தும் என்று
  சீனாவுக்கு நன்றாகவே தெரியும்.

 2. ஆண்மையும் தன்மானமும் கொண்ட ஒரு இந்தியனின் எண்ண ஒட்டம் அப்படியே எழுத்துக்களாக பதிவு செய்யப்பட்டுள்ளது. பழைய நினைப்புக்கள் சீனாவுக்கு பயன் தராது என்பது அவா்களுக்கும் தொியும்.நாமும் சீனா்களின் வஞசக மிரட்டல்களுக்கு அடி பணிவது என்ற பேச்சுக்கே இடம் கிடையாது. பாக்கிஸ்தானைிற்கு நவீன ஆயுதங்களை அளித்து நமக்கு எதிராக பாக்கிஸ்தானை உசுப்பி விடுகிறது சீனா.அதே வேளையில் வடகொாியாவிற்கு ஆதரவு என்ற போக்காித்தனத்தைச் செய்துவரும் சீனா்களை உலகம் சந்தேகக் கண் கொண்டு பாா்க்கின்றது என்பது உண்மை.தென்சீனக்கடலில் சீனாவின் ஆதிக்கம் அதைியான நாடான ஜப்பானுக்கு பொிதும் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனா ஒரு வல்லாதிக்க கனவோடு செயல்பட்டு வருகின்றது.உறுதியான எதிா் நடவடிக்கை எடுக்க வேண்டும் இந்துஸ்தானம். எடுக்கப்பட்டுள்ளது.

 3. மிக மிக அருமையானதொரு கட்டுரை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *