சீன டிராகனின் நீளும் கரங்கள்

சுதந்திரம் பெற்ற பின்னர் அமைந்த இந்திய அரசுகள், இந்தியாவுக்கான வலுவான வெளியுறவு கொள்கைகளையோ, செயல்பாட்டையோ முன்வைக்கவில்லை, செயல்படுத்திக் காட்டவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். இந்தியாவின் மீது சீனா ஒரு போதும் படைஎடுக்காது என்று நம்பிய நேரு ஏமாந்தார். சீனா இந்தியாவின் மீது படையெடுத்து பல லட்சம் சதுர கிலோமீட்டர் நிலத்தை ஆக்கிரமித்தது. அச்சமயம் நேரு வேறு வழியின்றி இஸ்ரேலின் உதவியைக் கூட நாடியதாகக் கூறப்படுகிறது. இது குறித்து அண்மையில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் சுபாஷ் அகர்வால் என்கிற சமூக சேவகர் வெளியுறவுத் துறைக்கு கேள்வி எழுப்பி இருந்தார். வழக்கம் போல வெளியுறவு அமைச்சகம் அத்தகைய தகவல் ஆதாரம் ஏதும் இல்லை என்று பதிலளித்து விட்டது. அப்படியே இருந்தாலும் இப்போதைய காங்கிரஸ் அரசு அந்தச் செய்தியை அமுக்கி விடும் என்று தான் தோன்றுகிறது. இந்திய வெளியுறவு எப்படி இருந்தது என்றால் பல நாடுகளுடன் தூதரக உறவு கூட இல்லாமல் இருந்தது. இஸ்ரேலுடன் தூதரக உறவே 1992-ஆம் ஆண்டுதான் ஏற்படுத்திக் கொண்டது என்பது குறிப்பிடத் தக்கது.

தெற்காசிய நாடுகள் கூட்டமைப்பான சார்க் அமைப்பில் இந்தியா, பங்களாதேஷ், பூடான், மாலத்தீவுகள், நேபாளம், பாகிஸ்தான் மற்றும் ஸ்ரீலங்கா ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இதில் நடைபெறும் வருடாந்திர கூட்டத்திற்கு ஆஸ்திரேலியா, ஈரான், அமேரிக்கா, சீனா போன்ற நாடுகள் பார்வையாளர்களாக அழைக்கப் பட்டனர். அண்மையில் நடந்த சார்க் கூட்டத்தில் பார்வையாளராக வந்த சீனா, தானும் ஓர் உரையாடல் கூட்டாளியாக (Dialog Partner) ஆக வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளது. இதையடுத்து சீனாவையும் சார்க் கூட்டமைப்பில் சேர்க்க வேண்டும் என்று ஏற்கனவே இந்தியாவுக்கு எதிரிகளாக இருந்து வரும் பாகிஸ்தான், பங்களாதேஷ் போன்ற நாடுகள் சீனாவுக்கு வரவேற்புக் குரல் எழுப்பியுள்ளன. இந்தியா கையைப் பிசைந்து கொண்டு இருக்கிறது. சீனா இணைந்தால் சார்க் கூட்டமைப்பில் இந்தியாவின் பலம் வெகுவாகக் குறையும்.

சீனா தெற்காசியப் பகுதியில் பெருமளவு இராணுவ, பொருளாதார, ராஜதந்திர பலத்தைப் பெருக்கியுள்ளது. இந்து மகா சமுத்திரப் பகுதியில் உள்ள சிறிய தீவுகளில் உள்ள அரசுகள் பெரும்பாலும் இராணுவ பலத்தைக் கொண்டே அரசாளுகின்றன. இராணுவத்தைக் கைக்குள் போட்டுக் கொண்டால் அந்த அரசுகள் சொன்னபடி கேட்டுத்தான் ஆகவேண்டும் என்கிற தந்திரமான உபாயத்தை சீனா கையாண்டு வருகிறது. சென்ற நவம்பர் மாதத்தில் மாலத்தீவில் தனது தூதரகத்தை தலைநகர் மாலேயில் சீனா அமைத்துள்ளது. மாலத்தீவு பல தீவுகள் அடங்கிய ஒரு நாடு. இதில் இஸ்ரேல் ஒரே ஒரு தீவை குத்தகை எடுத்துள்ளது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் விமானத் தளமாக இருந்த கான் தீவை எப்படியாவது தன் கட்டுப்பாட்டில் கொண்டுவர வேண்டும் என்று இந்தியா கடும் முயற்சி எடுத்து வரும் நிலையில் சீனா உள்ளே நுழைந்திருப்பது இந்தியாவுக்கு இடைஞ்சலாக இருக்கும். அத்துடன் சீனா மாலத்தீவுகள் அனைத்தையுமே கபளீகரம் செய்துவிடக் கூடிய நிலையை எட்டி வருகிறது. இலங்கையிலும் சீனா நூறு கோடி டாலர் செலவில் கடற்படை தளம் அமைத்து வருகிறது. சவூதியில் இருந்து சீனாவுக்கு வரும் எண்ணெய்க் கப்பல்களின் பாதுகாப்புக்காக இத்தளம் அமைக்கப் படுகிறது என்று சொல்லப் பட்டாலும் சீனாவின் கரம் இப்பகுதியில் நீண்டு வருகிறது என்பதை மறுப்பதற்கில்லை. இத்தகைய தளம் அமைக்க இலங்கை அனுமதித்ததற்கு பதில்உதவியாக இலங்கை ராணுவத்துக்கு சீனா பெருமளவு உதவி செய்தது அனைவரும் அறிந்ததே. சீனாவின் உதவி இருப்பதால்தான், விடுதலைப் புலிகளினுடனான போரில் உலக நாடுகளின் கண்டனத்தைக் கூட இலங்கை அலட்சியப்படுத்தத் துணிந்தது என்று இந்திய உளவு அமைப்பான ‘ரா’வின் முன்னாள் இயக்குனர் பி.ராமன் கருதுகிறார்.

இந்தியாவைச் சுற்றி பாகிஸ்தான், பர்மா, பங்களாதேஷ் ஆகிய நாடுகளின் துறைமுகப் பகுதிகளில் ஏற்கனவே சீனா இராணுவ-கடற்படைத் தளங்கள் அமைத்துள்ளது. மேலும் செஷல்ஸ் தீவிலும் புதியதாக இராணுவத் தளம் ஒன்றை அமைக்க இருப்பதாக சீனா அறிக்கை விடுத்துள்ளது. இவ்வாறு இந்தியாவை எல்லாப் பக்கங்களில் இருந்தும் உளவு பார்ப்பது, போர் என்று ஏற்பட்டால் பலமுனைத் தாக்குதல் நிகழ்த்தும் வலிமை என்று சீனா, இந்தியாவுக்குப் பெரும் தலைவலியாக உருவெடுத்துள்ளது. இதனைத்தான் இந்திய-அமெரிக்கப் பாதுகாப்பு ஆய்வாளர்கள், “சீனாவின் முத்துமாலைத் திட்டம்” என்று அழைக்கின்றனர். ஆனால் இந்தியாவில், தன் சுய பலத்தை பெருக்கிக் கொள்வதிலோ, வெளியுறவில் மாற்றங்களோ நிகழ்வதாகவும் தெரியவில்லை. ரஷ்யாவின் வீழ்ச்சிக்குப் பின்னர், அமெரிக்காவுடன் இணைந்து நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்வதிலும் தயக்கம் காட்டி வருகிறது. கார்கில் போன்ற ஒரு நிகழ்ச்சியை சீனா நிகழ்த்தினால் இந்தியாவால் பதிலடி கொடுக்க முடியுமா என்பது ஐயமே.

அண்மைக் காலத்தில் சீனாவில் நிகழ்ந்து வரும் ஒரு முக்கியப் போராட்டம்– திபெத்திய புத்த பிட்சுக்களினுடைய உரிமைப் போராட்டம்தான். இதில் ஆறுக்கும் மேற்பட்ட புத்த பிட்சுக்கள் தீக்குளித்துள்ளனர். மேலும் பலர் தீக்குளிப்புப் போராட்டம் நிகழ்த்தி வருகின்றனர். சீனாவுக்கு உலகளாவிய அளவில் இது ஒரு மானப் பிரச்சினையாகவே உருவெடுத்துள்ளது. அண்மையில் இந்திய-சீன நாடுகளிடையே சிறப்புப் பிரதிநிதிகள் கூட்டம் ஒன்று நிகழ வேண்டுமானால், அதே சமயம் தில்லியில் நிகழவிருந்த தலாய் லாமாவின் பொதுக் கூட்டம் ஒன்றுக்கு தடை விதிக்க வேண்டும் என்று சீனாவின் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதற்கு இந்தியா இணங்காததால் அந்தப் பிரதிநிதிகள் கூட்டத்தை சீனா புறக்கணித்தது. இந்த முறைதான் இப்படி நிகழ்ந்ததே தவிர இந்தியா பல சந்தர்ப்பங்களில் சீனாவின் கோரிக்கைகளை ஏற்று, தலாய் லாமா உள்ளிட்ட திபெத்தியர்களின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தி உள்ளது. பலவகைகளிலும் சீனாவுக்கு இந்தியா வளைந்து கொடுத்து வருகிறது என்பது சற்றே கவலை தரும் விஷயம். அதே சமயம் இந்தியா மட்டும் அல்ல, வேறு பல நாடுகளையும் கூட சீனா வளைத்துப் பணிய வைத்துள்ளது. தலாய் லாமாவை சந்தித்ததற்காக ஃபிரான்ஸ் அதிபர் சர்கோசி சீனாவிடம் மன்னிப்பு கேட்டது, தென்னாப்பிரிக்க அரசு தலாய் லாமாவுக்கு விசா மறுத்தது ஆகியவை அண்மைய உதாரணங்கள்.

இந்திய ஊடகங்கள் பெருமளவு சுதந்திரமானவை; இருந்தும் இவை உண்மையான கருத்துக்களைக் கூட, சீனாவுக்கு எதிரானதாக இருந்தால் மக்களிடம் எடுத்துச் செல்வதில்லை. இருட்டடிப்பு செய்து விடுகின்றன. சீன ஊடுருவல், ஆக்கிரமிப்பு, தாக்குதல் போன்ற செய்திகள் நமது மக்களைச் சென்று அடைவதில்லை. மாறாக மாதத்தில் சில தடவைகளாவது சீனப் புகழ் பாடும் கட்டுரைகளை பத்திரிகைகள் வெளியிடுகின்றன. இதற்கு இந்திய அரசும் முக்கிய காரணம்.

ஆனால் சீனாவில் அப்படி அல்ல. எல்லா சீன ஊடகங்களும் சீன அரசுக்குக் கட்டுப் பட்டவை. அங்கே இந்திய விரோதக் கருத்துக்களும், கட்டுரைகளும் சற்றும் தயங்காமல் வெளியிடப் படுகின்றன. இந்திய அரசு மீதான விமர்சனம் வெளிப்படையாகவே நிகழ்ந்து வருகிறது. இந்தியாவின் கிழக்குப் பார்வை கொள்கை (Look East Policy)-யை விட்டு விடவேண்டும் இல்லாவிட்டால் இந்தியா பெருநட்டம் அடையும்; அருணாச்சல் பிரதேசத்தில் இந்தியா இராணுவத்தை நிறுத்தினால், சீனாவின் நவீன ஏவுகணைகளுக்கு இரையாக நேரிடும்; சீனாவைச் சுற்றி உள்ள சிறிய நாடுகளுடன் தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது; சீனாவை எதிர்ப்பதற்காக ஜப்பான், அமெரிக்க போன்ற நாடுகளுடன் கூட்டணி அமைக்கக் கூடாது என்று பலவாறும் சீனப் பத்திரிகை ஒன்று அண்மையில் எச்சரிக்கைக் கட்டுரை ஒன்றை வெளியிட்டது. தென்சீனக் கடல் மார்க்கத்திலோ, இலங்கை மார்க்கத்திலோ சீனா இராணுவ பலத்தால் தடை ஏற்படுத்தினால் அது இந்தியா மட்டும் அல்லாது பல நாடுகளைப் பாதிக்கும்.

சீன அதிபர் ஹு ஜுன்டாவ் அண்மையில் “சீன இராணுவம் தனது நவீனமயமாக்கலை தீர்க்கமான முறையில் முடுக்கிவிட்டு, தேசத்தைப் பாதுகாக்கும் ஒரு போருக்கு தயார்படுத்திக்கொள்ள வேண்டும். தேசப் பாதுகாப்பு மற்றும் இராணுவக் கட்டமைப்பு ஆகியவற்றைச் சுற்றியே நமது பணிகள் இருக்க வேண்டும்” என்று கூறி உள்ளார். இவ்வாறு போருக்குத் தயாராக இருக்க வேண்டும் என்று அறைகூவல் விடவேண்டிய அவசியம் என்ன? சீனா தேவைப்பட்டால் தன் லாபத்துக்காகவும் தனது “முக்கியத் தேவைகளுக்காகவும்” (Core interest) போரை ஏற்படுத்தவும் தயங்காது என்பதே இதன் உட்பொருள்.

சீனாவின் முக்கியத் தேவையாக உள்ள தொடர்ந்த முன்னேற்றத்துக்கு எரிசக்தி, மூலப் பொருட்கள் இறக்குமதி ஆகியவை முக்கியம். சீனாவின் எரிசக்தித் தேவைக்கு 60 சதத்துக்கும் மேலாக வெளியில் இருந்தே இறக்குமதி செய்யப்படுகிறது. இதிலும் பெரும்பாலும் ஆப்பிரிக்கா மற்றும் வளைகுடா நாடுகளில் இருந்து இறக்குமதியாகிறது. சீனாவின் அரசியல், இராணுவம், பொருளாதாரம், வியாபாரம், பாதுகாப்பு ஆகியவற்றின் கொள்கைகள் இதனை ஒட்டியே அமையக் கூடும். அந்த வகையில் பார்த்தால் மியான்மர், தாய்லாந்து, லாவோஸ் ஆகிய நாடுகளின் வழியாகச் செல்லும் மேகாங் நதியில் செல்லும் சீனச் சரக்குகளுக்கு பாதுகாப்பாக இந்த நாடுகளின் உள்ளேயே சீன இராணுவ-போலீஸ் நிறுத்தப் பட்டுள்ளது. இந்த நாடுகளின் இறையாண்மையை கேள்விக்குள்ளாக்கும் வகையில் இந்த நாடுகளை மிரட்டி உருட்டி சீனா சம்மதிக்க வைத்துள்ளது. இதே போக்குதான் இந்தியாவைச் சுற்றி உள்ள நாடுகளிடமும் அமையும். அது இந்தியாவுக்கு நல்லதல்ல. இதே போல மற்ற நாடுகளும் மிரட்டப்படும் சூழலில், இவை அமெரிக்காவின் கீழ் திரளும் என்று அமெரிக்கா எதிர்பார்க்கிறது. ஆனால் அது அவ்வளவு தூரம் சாத்தியமானதாகத் தோன்றவில்லை. உலகில் எந்த நாடும் எந்த நிலையிலும் தனது பக்கத்து நாட்டுக்கு அணு ஆயுத நுணுக்கங்களை வழங்குதல், சோதித்தல் போன்றவற்றைச் செய்யாது. ஆனால், சீனா மட்டுமே இந்தப் பாதுகாப்பு உணர்வில் இருந்து விலகி பாகிஸ்தானுக்கு உதவி செய்துவருகிறது. இதில் இருந்து இந்தியாவின் மேல் எந்த அளவு வெறுப்புடன் சீனம் இருக்கிறது என்பது தெளிவு.

இந்நிலையில் சீனாவை நம்மால் எதிர்க்க முடியாது; இரண்டு சம பலமுடையவர்கள்தான் டெர்ம்ஸ் அண்ட் கண்டிஷன்ஸ் போட்டு உரையாட முடியும். ஆனால், சீனாவைப் பொருத்தவரை இந்தியா சீனா சொல்படி கேட்டுச் செயல்படுவதுதான் ஒரே வழியாக இருக்கும் நிலை என்று நம்மவர்களே நினைக்கிறார்கள். இந்த எண்ணம் மாற்றப்படவேண்டும். சீனாவுடன் ராஜதந்திர அளவில் மரியாதையுடன் நமது நலன்களைப் பாதுகாக்கும் விதத்தில் உறவாட நமக்கும் பிடி இல்லாமல் இல்லை. நம்மைவிட அளவில் சிறிய பாகிஸ்தான் நமக்கு இந்த அளவு தொல்லை கொடுக்கும்போது, நாலாயிரம் கி.மி. எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் சீனாவுக்கு நம்முடன் நல்லுறவைப் பேணுவதே நிம்மதி தருவதாக அமையும். அதோடு சீனாவின் வர்த்தகம் இந்தியாவில் பல நூறு கோடி டாலர் அளவுக்கு நடைபெற்று வருகிறது. மேலும் சென்ற ஆண்டில் பத்தாயிரம் கோடி ரூபாய் அளவிலான ஒப்பந்தம் ஒன்று சீன அதிபர் இந்தியா வந்திருந்த போது கையெழுத்தானது. ஆக இந்தியாவுடன் சமரசப் போக்கைக் கடைபிடிப்பது சீன வர்த்தகத்துக்கு நன்மையாக அமையும் என்று சீனா கணக்குப் போடும். இதைச் சரியாக நாடிபிடித்த ஒரே தலைவர் குஜராத்தின் முதல்வர் நரேந்திர மோடிதான். அவர் அண்மையில் சீனா விஜயம் செய்தது பல கோணங்களில் முக்கியமானது. அவர் செய்துள்ளது போன்ற வியாபாரக் கொடுக்கல் வாங்கல் ஒப்பந்தங்களே எதிர்காலத்தில் உபயோகமான நல்லுறவுக்குக் காரணியாகும்.

இது போன்ற வியாபார, ராஜதந்திர, இராணுவ உறவுகள் எதிர்காலத்தில் இந்தியா தனக்கு சாதகமாகப் பேரம் பேச உபயோகித்துக் கொள்ள முடியும். அதே சமயம் சீனா போன்ற நாடுகளுடன் தைரியமாக முதுகெலும்புடன் பேச இந்தியாவுக்கு நேர்மைத் துணிவுள்ள அரசியல் தலைமை தேவை. இப்போதைய அரசு அவ்வாறு செயல்படும் என்று தோன்றவில்லை.

4 Replies to “சீன டிராகனின் நீளும் கரங்கள்”

  1. இந்தியாவின் பலத்தை உலக நாடுகளுக்கு உணர்த்த காங்கரசால் இயலாது.இதனை சாதிக்க பாஜக -வினால் மட்டுமே முடியும்.”ஆனால் அதில் உள்ள களைகள் அகற்றப்படவேண்டும்”

  2. இந்தியாவுக்கு நேர்மைத் துணிவுள்ள அரசியல் தலைமை தேவை.அந்த வகையில் பார்த்தால் ஒரே தலைவர் குஜராத்தின் முதல்வர் நரேந்திர மோடிதான்.

  3. “சீனாவின் உதவி இருப்பதால்தான், விடுதலைப் புலிகளினுடனான போரில் உலக நாடுகளின் கண்டனத்தைக் கூட இலங்கை அலட்சியப்படுத்தத் துணிந்தது என்று இந்திய உளவு அமைப்பான ‘ரா’வின் முன்னாள் இயக்குனர் பி.ராமன் கருதுகிறார்.” adada… we should not forget India’s help also in this matter. Even India went ahead and supported sri lanka in world human rights committee.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *