அந்த ஆறுமுகங்களைப் பாடுவதில் தமிழருக்கு உள்ள அன்பும் ஆசையும் அலாதி. சின்னவயதிலேயே அம்முகங்களுடன் நம்மை இணைத்து பிணைத்துவிடுகிறார்கள்.
‘ஏறுமயில் ஏறிவிளையாடும் முகம் ஒன்றே
ஈசரொடு ஞானமொழி பேசும் முகம் ஒன்றே
கூறும் அடியார்கள் வினை தீர்க்கும் முகம் ஒன்றே
குன்றுருவ வேல் வாங்கி நின்ற முகம் ஒன்றே
மாறுபடு சூரரை வதைத்த முகம் ஒன்றே
வள்ளியை மணம் புணர வந்த முகம் ஒன்றே
ஆறுமுகம் ஆனபொருள் நீ அருளல் வேண்டும்
ஆதி அருணாச்சலம் அமர்ந்த பெருமாளே’
என்பதைப் பாடாமல் வளரும் சைவ தமிழ் குழந்தைகளைப் பார்ப்பது ரொம்ப ரொம்ப அரிது. ஆனால் இந்த ஆறுமுகக் காதல் சாதாரண காதலா என்ன? நக்கீரர் ஆரம்பித்து அருணகிரிநாதர், குமரகுருபர சுவாமிகள் என தொடர்ந்து பாடியிருக்கிறார்கள். அதில் இருக்கும் தொடர்ச்சி அற்புதமானது.
திருமுருகாற்றுப்படையில் நக்கீரர் அவன் ஆறுமுகங்களைப் பாடுகிறார்:
முதல் முகம்:
மாயிருள் ஞாலம் மறு இன்றி விளங்கப்
பல் கதிர் விரிந்தன்று ஒருமுகம்
அவன் புற இருளை அழிக்கும் பல வண்ண கதிராக இருக்கிறான். அந்த புற இருள் இயல்பாகவே அழியும் தன்மை கொண்டதுதான். எனவே வினைத் தொகையாக அது மாய் இருள். அவனே உயிர்களின் அக இருளை அழிக்கும் பல் கதிர் விரிவாக இருக்கிறான். இங்கு மா இருள் என உரிச் சொற்றொடராகப் பொருள் கொள்ள வேணும். இந்த அக இருள் பேரிருள்.
இதையே குமரகுருபர சுவாமிகள் ஏறக்குறைய ஆயிரத்தெழுநூறு ஆண்டுகள் கழிந்து கூறுகிறார்: ’பாச இருள் துரந்து பல் கதிரிற் சோதி விடும் வாசமலர் வதன மண்டலமும்’.
இரண்டாம் முகம்:
ஒரு முகம் ஆர்வலர் ஏத்த அமர்ந்து இனிது ஒழுகிக்
காதலின் உவந்து வரம் கொடுத்தன்றே;
அவன் பக்தர் உள்ளன்புடன் அவனைப் பாடும் அன்பு மொழிகளை ஏற்றுக் கொள்கிறான் பின் பேரன்புடன் அவர்களுக்கு உவந்து வரம் கொடுக்கிறான். அன்பு வழியும் இரண்டாம் முகம். குமரகுருபரர் இம்முகத்தைப் பாடுகிறார்: ’வந்தடியிற் சேர்ந்தோர் மகிழ வரம் பலவும் தந்தருளும் தெய்வ முகத் தாமரையும்’
மூன்றாம் முகம்:
மந்திரவிதியின் மரபுளி வழாஅ
அந்தணர் வேள்வி ஓர்க்கும்மே
நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளர்ந்த மறைமொழியான மந்திரங்களை எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுகலானான அந்தணர் செய்யும் ஞான வேள்வியில் ஆராய்ந்தறியச் செய்யும் முகம். இங்கு மந்திரம் என்று நக்கீரர் சொல்லும் போது மற்றொரு விஷயமும் தொடர்புடையதாகிறது. ‘ஆசைகூர் பக்த…’ திருப்புகழில் அருணகிரிநாதர் சொல்கிறார்:
“மாத்ருகா புஷ்ப மாலை கோல ப்ரவாள பாதத்திலணிவேனோ’.
சுப்ரமணிய பராக்கிரமம் என்கிற வடமொழி நூலில் சமஸ்கிருத மொழியின் 51 அட்சரங்களைக் கொண்ட மாத்ருகா மந்திர மாலை முருகப் பெருமானைப் பாடுகிறது. தமிழ் கடவுளான முருகனே வடமொழியின் 51 அட்சரங்களாலான மந்திர மாலையாக இருக்கிறான்.
’ஓர்க்கும்மே’ என்கிறார் நக்கீரர். ஓர்த்தல் என்பதை பரிமேலழகர் ‘அளவைகளானும் பொருந்து மாற்றானும் தெளிய ஆராய்தல்’ என விளக்குகிறார். மந்திரங்களின் தலையான மந்திரம் பிரணவம். அப்பிரணவத்தை அடிப்படையாக வைத்து செய்யும் வேள்வியே படைப்பு. அதை செய்யும் அந்தணன் பிரம்மன். ஆயின் அதனை ஆராய்ந்து பிரணவத்தின் மெய்ப்பொருளைக் கூறியவர் முருகப் பெருமானே. அவ்விதத்திலும் மந்திரவிதியின் மரபுளி வழாஅ அந்தணர் வேள்வி ஓர்க்கும் முகம் அவனுடையது. ‘ஈசரொடு ஞான மொழி பேசும் முகம் ஒன்றே’ என்கிறார் அருணகிரிநாதர். குமரகுருபர சுவாமிகளும் இதனை உணர்த்துகிறார்: ‘சூழ்வோர் வடிக்கும் பழமறைகள் ஆகமங்கள் யாவும் முடிக்கும் கமல முகமும்’
அனைத்து மறைகளும் தோன்றி முடியும் இடம் பிரணவம். பிரணவத்தின் சாரமே அவன் முகமன்றி வேறெது!
நான்காம் முகம்:
எஞ்சிய பொருள்களை ஏமுற நாடித்
திங்கள் போலத் திசை விளக்கும்மே
ஆராய்ச்சியில் ஆற்றுப்படுத்திய பின்னரும் அனுபவத்தால் மட்டுமே உணரும் உண்மைகள் கொண்டது மறை. ஆராய்ச்சியின் பாதையிலிருந்து அனுபவ உண்மையை அடைய இடையே நிற்பது பெரும் மலையாக நம் ஊழ்வினை. அனுபவத்தினை அளிப்பது அவன் அருள். அனுபவ உண்மைகளை மறைகள் சொல்வதை உணர வைக்கும் தண்ணொளி அருளை தந்து திகைப்பை நீக்கும் ஒரு முகம். ஞான சூரியனாக இருள் அகற்றி தண்ணொளி திங்களாக அனுபவத்தை அளிக்கும் அருளாகவும் இருக்கிறது அவன் முகம். ‘ஊழ்வினையை மாற்றி உலவாத பேரின்ப வாழ்வு தருஞ் செய்ய மலர் முகமும்’ என்கிறார் குமர குருபர சுவாமிகள் இம்முகத்தை. குன்றுருவ வேல் வாங்கி நின்ற முகம் இது.
ஐந்தாம் முகம்:
ஒரு முகம்
செறுநர்த் தேய்த்துச் செல் சமம் முருக்கிக்
கறுவு கொள் நெஞ்சமொடி களம் வேட்டன்றே
என்ன ஒரு முகம் இது! போர் களத்தை விரும்பும் முகம். எவருடன் போர்? செறுநர் உடன்.
கொட்புற்றெழு நட்பற்ற அவுணரை வெட்டிப்பலியிட களத்தை விரும்பி செல்லும் முகம்.
’செறுநர்’, ‘கொட்புற்றெழு நட்பற்ற அவுணர்’ ‘மாறுபடு சூரர்’ – இவை அனைத்திலும் ஒரு நன்றியற்ற தன்மை இருக்கிறது. ஒரு பரந்த மனப்பான்மையை பயன்படுத்திக் கொண்டு பின்னர் அதைப் பயன்படுத்தியே அதை எதிர்க்கும் ஒரு தன்மை இருக்கிறது. இந்திய ஜனநாயகத்தைப் பயன்படுத்தியே பாரத பண்பாட்டை எதிர்க்கும் நட்பற்றத் தன்மை போல. ’வெவ்வசுரர் போற்றிசைக்கும் வெஞ்சூரனைத் தடிந்து தெவ்வருயிர் சிந்துந் திருமுகம்’ என்கிறார் குமரகுருபர சுவாமிகள்.
ஆறாவது முகம்:
ஒருமுகம்
குறவர் மடமகள் கொடி போல் நுசுப்பின்
மடவரல் வள்ளியொடு நகை அமர்ந்தன்றே.
ஆறாவது முகம் குறமகளாம் கொடியிடை கொண்ட இளம்பெண்ணான வள்ளியுடன் மகிழ்ந்திருக்கும் முகம். வள்ளியுடன் முருகன் மகிழ்ந்திருத்தல் என்பது அனைத்துயிர்களின் போக உணர்ச்சியிலும் வெளிப்படுவது அவன் அருள் முகமே என்பதைக் காட்டுவது. அப்பர் சுவாமிகளின் திருக்கையிலாயக் காட்சியும் அதுவே. வள்ளியை மணம் புணர வந்த முகம் ஒன்றே என்கிறார் அருணகிரிநாதர். வள்ளி ஜீவாத்மா என்பர். ’பெரும்பைபுனத்தினில் சிற்றேனல் காக்கின்ற’ வள்ளியை நாடி வந்து வருந்தி அவளை அடைந்தவன் முருகன்.
’வேதா முதல் விண்ணவர் சூடும் மலர்ப்
பாதா குறமின் பதசேகரனே’
என்கிறார் அருணகிரிநாதர். கர்த்தரும் விண்ணவரும் அவன் பாதத்தை தங்கள் சிரங்களில் சூடுகின்றனர். அவனோ ஜீவாத்மாவான வள்ளியின் பதசேகரனாக இருக்கிறான். எப்படிப்பட்ட காதல் அவனுக்கு! அந்த காதல் முகத்தை இறுதியில் கூறுகின்றனர் நக்கீரர் முதல் குமரகுருபரர் வரை.
இந்த ஆறு முகங்களையும் நாம் நம்முள் பதித்துவிடுகிறோம். நம் ஊர்களிலெங்கும் அறுமுக நட்சத்திரங்கள் அவனின் இந்த அருபெரு ஆறுமுகத்தன்மையை நமக்கு உணர்த்துகின்றன. இந்த ஆறுமுக நட்சத்திரம் இரண்டாயிரம் ஆண்டு கிறிஸ்தவ மேற்கில் யூதர்களின் சின்னமென்பதால் அவர்களை வெறுக்க பயன்படுத்தப்பட்டது. கிறிஸ்தவம் தன் இறையியல் மூலம் மேற்கிலெங்கும் நீக்கமற நிறுவனமாக்கிய யூத வெறுப்பு நாசி ஆட்சியில் உச்ச கட்டமடைந்தது. அப்போது இந்த நட்சத்திர சின்னம் யூதர்களை தனிமைப்படுத்தி அவர்களை ஒடுக்க பயன்படுத்தப்பட்டது. இறுதியாக இஸ்ரேல் உதயமாகி டேவிடின் தாரகை சின்னம் இஸ்ரேலின் கொடியில் பட்டொளி வீசி பறக்கும் வரை அது மேற்கில் ஒடுக்கப்பட்ட சின்னமாக இருந்தது. பாரதத்திலோ எங்கெங்கும் என்றென்றும் அது ஒரு புனித சின்னமாகவே இருந்தது.
டேவிட்டின் தாரகைக்கும் முருகனின் அறுமுக நட்சத்திரத்துக்கும் இறையியல் தொடர்புகள் இல்லாதிருக்கலாம். ஆனால் மானுட பண்பாட்டில் வெவ்வேறு ஆன்மிக பரிணாம வளர்ச்சியில் உருவாகும் சின்னங்களை அவற்றுக்கான மரியாதையுடன் போற்றும் தன்மை அவற்றை இணைக்கின்றன. பாரதத்துக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான மற்றொரு ஆன்மிக இணைப்பாக அது என்றென்றும் இருக்கும். இந்துக்களுக்கு ஆறுமுகனின் நட்சத்திரம் பரம்பொருளின் முடிவிலி பன்மைத்தன்மையை எடுத்துச் சொல்வது.
இனிய பதிவு.” முடிவிலி பன்மைத்தன்மை ” என்ற சொல்லாக்கம் மிகவும் பொருத்தமானது. மிக நன்று.