தொடர்ச்சி..
தப: ஸ்வாத்யாய நிரதம் தபஸ்வீ வாக்விதாம் வரம்|
நாரதம் பரிப்ப்ரச்ச வால்மீகிர் முநிபுங்கவம்|| – பாலகாண்டம்-1-1
இதுவே ராமாயணத்தின் முதல் ஸ்லோகம் ஆகும். முதன்முதலில் தொடுக்கும் பாசுரத்தில் திருமகளை வழிபட்டு தொடங்குவதானது ஒருவித மங்கல வழக்கு என்பர் . ரிஷிகளுக்கு தவமே தனம்(செல்வம்) ஆகும். தபோதனம் என்பதற்கு இலக்கண குறிப்பாக இருபெயரொட்டு பண்புத்தொகை அல்லது கர்மதாரய ஸமாஸம் என்கிறது வீரசோழியம். இதைத்தான் மஹரிஷியும் “தப ஸ்வாத்யாய” என்று வைத்து பிராட்டியை வணங்கியே ,தன் காவியத்தை, “ஸீதையின் மஹாசரித்ரமாகத்” தொடங்குகின்றார்.
முதல்பாகத்தில் “பிராட்டி முற்படப் பிரிந்தது தன்னுடைய க்ருபையை வெளியிடுகைக்காக” என்று ஸ்வாமி பிள்ளைலோகாசார்யர் அருளிய ஸ்ரீவசனபூஷண வரிகளை கண்டோம். இவ்விரண்டாம் பாகத்திலே “நடுவிற் பிரிந்தது பாரதந்த்ர்யத்தை வெளியிடுகைக்காக” என்னும் வரிகளை விளக்கமாகக் காண்போம்.
பிராட்டி நடுவிற் பிரிந்தது பாரதந்த்ர்யத்தை வெளியிடுகைக்காக.
ஒரு ஜீவாத்மாவுக்கு அவன் இச்சிக்கும் அறம், பொருள், இன்பம் மற்றும் வீடுபேறு என்பனவாற்றை, பரமன் அருள்செய்ய, பிராட்டியின் சிபாரிசு(புருஷகாரம்) அவசியமாகிறது என்று பார்த்தோம். அங்ஙணம் சிபாரிசு செய்ய பிராட்டியிடம் காணப்படும் இன்றியமையாத குணங்களாக 1) க்ருபை ,2)பாரதந்த்ர்யம் மற்றும் 3) அநந்யார்ஹத்வம் என்றும் பார்த்தோம். அக்குணங்களில் க்ருபையை முற்பாகத்தில் கண்ட நாம் பாரதந்த்ர்யம் என்னும் குணத்தை இங்கே பரக்கக் காணலாம்.
பாரதந்த்ர்யம் என்றால் என்ன?
பாரதந்த்ர்யம் என்றால் எம்பெருமானுக்கோ அல்லது அடியாருக்கோ அல்லது ஆசார்யனுக்கோ வசப்பட்டிருத்தல் ஆகும். “நான்” என்னும் சொல்-ஸ்தூலமாக ஜீவனையும், ஸூக்ஷ்மமாக –அவ்வாத்மாவினுள் உறையும், அந்தர்யாமியான பரமனையும் குறிக்கும். நமது உடலில், மனஸ் அல்லது அந்தகரணம் என்று ஒரு உள்-புலனுண்டு. அதற்கு சிந்தித்தல் (சித்தம்) , தேர்வு செய்தல் (புத்தி) மற்றும் “தன்னை இன்னது என்று அடையாளம் செய்வது” (அபிமாநம்) என்னும் 3 பணிகளுண்டு. அந்த மூன்று பணிகளையும், பரமனின் திருவுள்ள உகப்பிற்காக அர்பணிப்பது பாரதந்த்ர்யம் ஆகும். (இங்கே மனஸை அர்பணித்தல் என்பது உடலுக்கும் பொருந்தும்). நம் உடலை கரணகலேவரம் என்பர் வடநூலார் (கரணம்=புலன்(6), கலேவரம்=உடல்). அவற்றை தனக்காகக் கொள்வது ஸ்வாதந்த்ர்யம் ஆகும். பாரதந்த்ர்யம் சாத்வீகமானது. ஆனால் ஸ்வாதந்த்ர்யமோ ராஜஸமானதாம்.
தனக்கு கொடுக்கப்பட்டவற்றுள் ஒன்றனை தேர்வு செய்ய பயன்படும் மனதின் செயல்பாடு “புத்தி” எனப்படும். எடுத்துக்காட்டாக பெண்டிர் பதின்மரிடம் 1000 சேலைகளை, அவர்களின் பார்வைக்கு வையுங்கள். அவர்கள், தமக்கு பிடித்தமான சேலையை தேர்வு செய்வது ஸ்வாதந்த்ர்யம் ஆகும். அவ்வாறன்றி தன் கணவனுக்கு பிடித்தமான சேலையை தேர்வு செய்வது பாரதந்த்ர்யம் ஆகும். [புத்தியின் ந்யாசம்/(அவனிடத்தில் வைத்தல்) பாரதந்த்ர்யம் என்பர்.]
1. தயரதரும் கௌசல்யையும்
அயோத்யா காண்டம் 12 ஆம், ஸர்கத்தில் சக்கரவர்த்திக்கும் ,கைகேயிக்கும் நடக்கும் பேச்சுவார்த்தை பின்வருமாறு. கைகேயி “ராமனுக்கு 14 ஆண்டுகள் வனவாசம், பரதனுக்கு பட்டாபிஷேகம்” என்று இரண்டு வரங்கள் கேட்டு, பிடிவாதம் செய்கின்றாள். சக்கரவர்த்தியாரோ அனலில் இட்ட புழுவாகத் துடிகின்றார். மந்திரத்தால் கட்டுப்பட்ட நாகம்போல சீறுகின்றார். அப்பொழுது கௌசல்யா தேவியார் பற்றிய நினைவு வந்து அவளை, கைகேயிக்கு ஒப்பிட்டு -“ஹே ந்ருஸம்ஶே ! நீயோ ஹிம்சையே இயல்பாகக் கொண்டவள் ! அஹிம்ஸா தேவியான அவளோவெனில்,
யதா யதா ச கௌசல்யா தாஸீவச்ச ஸகீவ ச |
பார்யாவத் பகிநீவச்ச மாத்ருவத் ச உபதிஶ்டதி ||
ந மயா ஸத்க்ருதா தேவீ ஸத்காரார்ஹா க்ருதே தவ | -12-68
பொருள்: அந்தந்த சமயத்திற்கேற்றபடி ஒரு வேலைக்காரியைப் போல, ஒரு தோழியைப் போல, மனைவியாக, ஒரு சகோதரியைப் போல ,தாயைப் போல கௌசல்யை நடந்து வந்திருக்கின்றாள். என்னுடைய பாராட்டுக்குரிய அவளை, உன்னிடமிருந்த பயம் காரணமாக பகிரங்கமாக நான் பாராட்டியதே இல்லை – என்று புகழ்பாடுகின்றார்.
சக்கரவர்த்திக்கு கௌசல்யா தேவியானவள் “பகிநீவச்ச – சகோதரியைப் போல” என்று பாராட்டும் சொல் இங்கு சுவாரஸ்யமானது. இதற்கு ஆசார்யர்கள் தரும் விளக்கம் பின்வருமாறு –“தயரதன் இரண்டாம் தாரமாக சுமித்ரா தேவியையும், பிறகு மூன்றாம் தாரமாக கைகேயி தேவியையும் மணம் முடித்து இல்லம் திரும்பும்பொழுது கௌசல்யை அவனுக்கு கற்பூர ஆலத்தி காட்டினாள். இது ஒரு இளைய சகோதரி ,அத்தம்பதியரின் நல்வாழ்வு, ஆயுள், ஒற்றுமை வேண்டி செய்யும் மங்கல சம்ஸ்காரம் ஆகும். இதுகண்டே தயரதர் அவளை “பகிநீவச்ச” என்று பாராட்டினார். இதுவே கைகேயியானவள், தனக்குப் பிறகு ,மேலும் நான்காவது தாரமாக ஒருத்தியை, தயரதன் கொண்டு வந்திருந்தால் அங்கு பூரிக்கட்டை, தட்டு, பாத்திரம் பறந்திருக்கும். எனவே கௌசல்யை தன் புத்திக்கு அனுசரித்து நடக்காமல், தன் கணவனுடைய புத்திக்கு அனுசரித்து நடந்தாள். சம்பராசுர யுத்தத்தில் தயரதனை காப்பாற்றிய கைகேயி ,அவன் கொடுத்த இரண்டு வரங்களையும் ஸ்வீகரித்தாள். இதுவே கௌசல்யைக்கு அந்த வாய்ப்பு கிட்டியிருந்தால், அவ்விரு வரங்களையும் நிராகரித்திருப்பாள். ஏனெனில் ஒரு மனைவிக்கு தன் கணவனின் “புத்திக்கு அனுசரித்து நடத்தல்” என்பதற்கு மேம்பட்ட வரம்/சிறப்பு என்று ஒன்று கிடயாது. வரம் என்றால் கணவன் என்றும் ஒரு பொருளுண்டு. “நான் பெண்ணல்ல! “நான்” –இந்த பெண் உடம்பு- என்னும் கூட்டில் வாழும் ஒரு ஆத்மா ஆவேன்! இப்பிறப்பில் என் கணவனுக்கு அனுசரித்து நடத்தலே எனது வரம் (சிறந்த தர்மம்)! சுகம்-துக்கம் ,குளிர்-வெயில்,லாபம்-நஷ்டம்,வெற்றி-தோல்வி என இவையெல்லாம் மனோ வ்யாபாரங்களேயன்றி ஆத்ம குணங்கள் அல்ல” என்றும் தெரிந்து வைத்திருந்தாள். “கடமையை செய்! பலனில் விருப்பம் கொள்பவனாய் இராதே!” – என்னும் கீதை வசனம் இவ்விடத்தில் நினைவு கொள்ளத் தக்கது. இங்கு கௌசல்யையுடைய இயல்பாக ரிஷி காட்டியது பாரதந்த்ர்யம். கைகேயியுடைய இயல்பாக காட்டியது ஸ்வாதந்த்ர்யம். இம்மஹா குணத்திற்கு வசப்பட்டே அன்றோ, எம்பெருமானும் அவளுடைய திருவயிற்றில் 12 திங்கள் கர்ப்பவாசம் செய்தது.
“அஜாயமாநோ பஹுதா விஜாயதே” -பிறப்பே இல்லாத பகவான் ,தன் பக்தர்களிடம் தானும் பாரதந்த்ர்யமாய் (அடிமையாய்) நடந்து, விளையாட வேண்டி, தன் இச்சைக்கு ஏற்றபடி உடலெடுத்துப் பிறக்கிறான் என்கிறது வேதம். அதைத்தான்
“மன பரிப்போடு அழுக்கு மானிட சாதியில் தான் பிறந்து
தனக்கு வேண்டுருக் கொண்டு தான் தன சீற்றத்தினை முடிக்கும்”
என்றும்
“ஆதியஞ்சோதி உருவை அங்கு வைத்து இங்குப் பிறந்த
வேதமுதல்வனைப் பாடி வீதிகள் தோறும் துள்ளாதார்” என்றும்
உருகுகின்றார் சடகோபர்.
மேலும் பாரதந்த்ர்யத்திற்கு, ஒரு தலையாய உதாரணம் காண்போம்.
2. ஶத்ருக்னரும் பரதரும்
“கச்சதா மாதுலகுலம் பரதேந ததா அநக: |
ஶத்ருக்நோ நித்யஶத்ருக்நோ நீத: ப்ரீதிபுரஸ்க்ருத:” -அயோத்யா காண்டம்-1-1
பொருள்: தன் தாய்மாமன் யுதாஜித்தின் கேகயநாட்டிற்கு செல்லும் பரதனால், பாபமில்லாதவனும், நித்யசத்ருக்களாம் ஐம்புலன்களை வென்ற ஶத்ருக்நன், மகிழ்ச்சி பொங்க, அழைத்துச் செல்லப்பட்டான் என்கிறார் கவிக்குயில் வால்மீகி. 23999 ஸ்லோகங்களை ஒருதராசிலும் இச்ச்லோகத்தினை மற்றொரு தராசிலும் வைத்தால், இது வைக்கப்பட்ட தட்டானது தாழும். ஒரு உடைவாளோ, வில்லோ எடுத்துச் செல்லப்பட்டது போலே ஶத்ருக்நன் எடுத்துச் செல்லப்பட்டான்”—என்பது செயப்பாட்டு வினை. அதற்கும் மேலாக, “ப்ரீதிபுரஸ்க்ருத:”-அவ்வாறு எடுத்துச் செல்லப்படுவதில் அவனுக்கு அவ்வளவு மகிழ்ச்சி என்கிறார் ஆதிகவி. (அதாவது கடகராசியில் நாலாம் பாதத்தில் குரு உச்சம் பெற்று மகிழ்வது போன்றதாம் இதுவும்.) இங்கு செய்வினை ஏன் வரவில்லை ? செய்வினைக்கும் செயப்பாட்டு வினைக்கும் என்ன பெரிய வாசியென்று கேட்கலாம் ! செய்வினையில் பரதன் எழுவாய்(கர்தா காரகம்), ஶத்ருக்நன் பயனிலை (கர்ம காரகம்) ஆயிருப்பர். செயப்பாட்டு வினையால் ஶத்ருக்நன் எழுவாய், பரதன் கரணகாரகம் ஆகின்றனர். இங்கு ஶத்ருக்நனுக்கு முதன்மை இடத்தை கொடுக்கின்றார் மஹரிஷி.
ஏனெனில், ராமாயண காவியத்தில் ராமர் –“பெரியோர் சொல் கேட்டல்” என்னும் சாமான்ய தர்மத்தை(ORDINARY) அனுஷ்டித்துக் காட்டினார். லக்ஷ்மணன் “தன் புத்திக்கு அனுசரித்து, ராமனை விட்டுப் பிரியாது அணுக்கத் தொண்டாற்றினார் / பகவத் கைங்கர்யம்”. இது விஶேஷ(GOOD) தர்மம் ஆகும். இதனை ஶேஷத்வம் என்பர். இதில் சிறிது ஸ்வாதந்த்ர்யம் கலந்திருக்கும். ஆனால் லக்ஷ்மணன் அயோத்தியில், பெற்றொருக்கு துணையாக இருக்கவேண்டும் என்பதுதான் ராமரின் திருவுள்ளம் ஆகும். மேலே, பரதன் 14 ஆண்டுகள் ராமரை பிரிந்தும் அவருடைய திருப்பாதுகைகள் வைத்து ராஜ்யபரிபாலனத்தை செய்தார். இதனை பாரதந்த்ர்யம் என்பர். ராமருடைய திருவுள்ளம் உகக்க, ராமருடைய புத்திக்கு அனுசரித்து தொண்டாற்றினார். இந்த தர்மம் விஶேஷதரம்(BETTER) ஆகும். ஆனால் ஶத்ருக்நன் பரதனின்(ராமபக்தனின்) திருவுள்ளம் உகக்க தொண்டாற்றினார். இந்த தர்மம் விஶேஷதமம்(BEST) ஆகும். பகவத் பக்தியை விட பாகவத பக்தியே சிறந்தது என்று காட்டவே மேற்படி ஸ்லோகத்தில் செயப்பாட்டு வினை எடுத்தாளப்பட்டது. நீத:-அழைத்துச் செல்லப்பட்டவன் ,ப்ரீதிபுரஸ்க்ருத: -கௌரவிக்கப்பட்டவன்/”தனக்கு எது இயல்போ அவ்வாறே இருக்குமாறு விடப்பட்டவன்” என்பன வினையாலணையும் பெயர்கள். இரண்டும் செயப்பாட்டு வினையில் வந்து பாரதந்த்ர்யம் காட்டுகின்றன.(பரதனுக்கு அடிமைப்பட்டு கிடப்பதே அவனது இயல்பு/ஆநந்தம் ஆகும்.)
3. ராமானுஜரும் ப்ரம்மஸுத்ரமும்
ராமானுஜர் தம்முடைய ஶ்ரீபாஷ்ய நூலில் கடவுள் வாழ்த்து/ ஆசார்யர்கள் வாழ்த்துப் பகுதியில்
“பகவத் போதாயந க்ருதாம் விஸ்தீர்ணாம் ப்ரஹ்மசூத்ர வ்ருத்திம் பூர்வாசார்யா: ஸங்க்ஷிபுஹு:| தந்மதாநுஸாரேண ஸூத்ராக்ஷராணி வ்யாக்யாஸ்யந்தே ||” – ஶ்ரீபாஷ்யம்-3
பொருள்: போதாயந பகவானால் செய்யப்பட்டுள்ளதும், மிக விரிவாகவுமுள்ள ப்ரஹ்மஸுத்ர வ்ருத்தியை நம் பூர்வாசார்யர்கள் மிகச் சுருக்கமாக எழுதினார்கள். அவர்களுடைய திருவுள்ளத்தை அனுஸரித்தே ஸூத்திரங்கள் வ்யாக்யாநம் செய்யப்படுகின்றன.
என்று எழுதுகின்றார். இங்கு யாப்பு/சந்தஸ் கருதி “என்னால்(மயா)” என்னும் சொல் விடப்பட்டது. எனவே அதையும் (அத்யாஸம்) சேர்த்துக் கொண்டு “என்னால் ஸூத்திரங்கள் வ்யாக்யாநம் செய்யப்படுகின்றன” என்று பொருள் கொள்ளவேண்டும். இதுவும் செயப்பாட்டு வினை ஆகும். இங்கு ராமானுஜரும் பாரதந்த்ர்யம் காட்டுகின்றார். பாஷ்யத்தினை தன் புத்திக்கு ஏற்றவாறு எழுதாமல், பூர்வாசார்யர்கள் (குஹதேவர், டங்கர், த்ரமிடர், நாதமுனிகள், ஆளவந்தார் முதலியோர்) திருவுள்ளத்திற்கேற்ப எழுதுகின்றார். இந்தப் பண்பு
முன்னோர் மொழிந்த முறை தப்பாமல் கேட்டு
பின்னோர்ந்து தாம் அதனைப் பேசாது – தன் நெஞ்சில்
தோற்றினதே சொல்லி, இது சுத்த உபதேச
வாற்றதென்பர் மூர்க்கர் ஆவார்.
என்ற உபதேச ரத்தினமாலை-71 ஆம் வெண்பாவுக்கேற்ப அமைகின்றது.
4. நம்மாழ்வாரும் எம்பெருமானும்
“தன் சொல்லால் தான் தன்னைக் கீர்த்தித்த மாயன்,
என் முன் சொல்லும் மூவுருவாம் முதல்வனே”
என்று தன்னை ஒரு கருவியாக்கி ,தனது ப்ரபந்தங்களை எம்பெருமான் தானே எழுதிக்கொண்டான் என திருவாய்மொழியில் நம்மாழ்வாரும் பாரதந்த்ர்யம் காட்டுகின்றார்.
5. கூரத்தாழ்வானும் பெரியநம்பிகளும்
ஒருமுறை ஶ்ரீரங்கத்திற்கு பகைவர்களால் கேடு விளையுமென்று, எல்லோரும் அஞ்சியிருந்த சமயம் பெரியநம்பிகள் ராமாநுஜரிடம்,-“நான் இத்திருத்தல நன்மை வேண்டி, வேத சம்ஹிதைகள்,ப்ரபந்தங்கள் ஓதிக்கொண்டே, இத்திருவரங்கத்தை வலம் வரப் போகின்றேன். ஆனால் என்னுடன் மற்றொருவர், எனக்கு பின்னால் வர வேண்டும். அப்படி என்னுடன் வலம் வருபவர் –“ஒருவர் பின்னால் நான் செல்கிறேன்”- என்ற எண்ணம் கொள்ளாதவராக இருத்தல் வேண்டும் என்றார். “அப்படி ஒருவர் கிடைப்பது அரிது”- என்றார் ராமாநுஜர். ”ஏன் !நம் ஆழ்வானை அனுப்பலாகாதோ?“-என்றார் நம்பிகள். சரியென கூரத்தாழ்வாரை அனுப்பினார் ராமானுஜர். நம்பிகள் முன்னே செல்ல, பாரதந்த்ர்யத்தில் மூழ்கி முக்குளித்த ஆழ்வானும் “தன் சித்தம், புத்தி, அபிமாநம் என ” அனைத்திலும் பெரியநம்பிகளே தன்னுடைய ஆத்மா என்ற நிஷ்டையுடன், அவர் பின்னே செல்ல ,திருவலமும் இனிதே முடிந்தது. இந்த நிகழ்ச்சி திருவாய்மொழி -ஈடு முப்பத்தாறாயிரப்படி -7-10-5 ஆம் பாசுர ஐதிஹ்யத்தில் காணலாம்.
6. மதுரகவிகளும் நம்மாழ்வாரும்
நாவினால் நவிற்று இன்பம் எய்தினேன்
மேவினேன் அவன் பொன்னடி மெய்ம்மையே
தேவும் மற்று அறியேன் குருகூர் நம்பி
பாவின் இன்னிசை பாடித் திரிவனே. – கண்ணிநுண்சிறுத்தாம்பு- 2
நம்மாழ்வார் திருநாட்டிற்கு எழுந்தருளும் பொழுது ,அவர் சீடரான மதுரகவிகள், பிரிவாற்றாமையால் தானும் உடனே வைகுந்தம் செல்ல விழையாமல், தன் ஆசார்யன் திருவுள்ளத்திற்கு உகப்பாக “அவர் அருளிய திருவிருத்தம்,திருவாசிரியம்,பெரிய திருவந்தாதி மற்றும் திருவாய்மொழி என்னும் நான்கு ப்ரபந்தங்களை உலகில் ப்ரசாரம் செய்து தன் வாழ்நாளைக் கழித்தார். இவர் “ஆசார்யர் சடகோபருக்கு மேலாக தேவு மற்று அறியேன்” என்று வாழ்ந்தவர்.
******
இனி விஷயத்திற்கு (பிராட்டி நடுவில் பிரிந்தது) வருவோம். உத்தரகாண்டத்தில் 42 ஆம் ஸர்கத்தில் ஸீதை கர்ப்பம் தரிக்கின்றாள். அப்படியான நாளில் ஶ்ரீராமர் அவளிடம் “அழகான முகமுடையவளே ! வைதேஹீ! எனக்கு புத்திரன் பிறக்கின்ற புண்ணியம் கிட்டிற்று. நீ ஆசையாக ஏதாவது எண்ணியிருந்தால்,அவையனைத்தையும் என்னிடம் கூறு” –என்றார். அதற்கு ஸீதை – ராகவரே! மிகுந்த புண்ணியம் பல உள்ளவர்களும் ,பழம் மற்றும் கிழங்கு முதலானவற்றை மட்டும் உண்பவர்களும் ஆகிய முனிவர்களின் திருவடிகளின் கீழே வசிப்பதற்கு நான் விரும்புகின்றேன். கங்கையின் கரையில் உள்ளவைகளும், தூய்மை நிறைந்தவைகளுமான அவர்களின் பர்ணசாலைகளை நான் விரும்புகின்றேன்.மேற்கூறிய ஒழுக்கமுள்ள முனிவர்கள் வாழும் இடத்தில் ஒரு நாளாவது வசிக்க விரும்புகின்றேன். இப்படியாக எனது ஆசைகள் உள்ளன” -என்றாள். இத்தகைய ஆசையை நிறைவேற்றும் விதமாக , உலகினர் ஸீதை மீது கற்பித்த பொய்யான பழியை ஒரு சாக்காக வைத்துக் கொண்டு அவளை ராமர் காட்டுக்கு அனுப்பினார். இந்தப் பிரிவிற்கு பலன் என்ன கிட்டியது என்றால் –ராமர் தன்னை அன்புடன் அரண்மனையில் வைத்திருந்தாலும் ,கானகம் அனுப்பினாலும் எந்தவிதமான வேறுபாடும் காணாமல் ;அவனுடைய நினைவிலேயே ஒன்றியபடி ஸீதை இருந்தாள். இப்படியாகத் தன் பத்தினித்தன்மை மூலம் பாரதந்த்ர்யத்தை வெளிப்படுத்தியதே ராமனைப் பிரிந்த பயனாகும்.மஹரிஷி இதனை மேலும் விளக்குகின்றார்.
உத்தரகாண்டம் 48 ஆம் ஸர்கம் லக்ஷ்மணன் அவளை கங்கை கரையில். வால்மீகி ஆஶ்ரமத்திற்கு அருகில் இறக்கி விட்டான். ராமர் அவளை கானகத்தில் விட்டு வர சொன்ன காரணத்தையும் கூறினான்.
ந கலு அத்யைவ ஸௌமித்ரே ஜீவிதம் ஜாஹ்நவீ ஜலே |
த்யஜேயம் ராகவம் வம்ஶே பர்துர் மா பரிஹாஸ்யதி || -8
பொருள்: சுமித்திரையின் மகனே ! ராமன் மூலமாக உண்டான இந்த கர்ப்பம், இக்ஷ்வாகு குலத்திற்கு இல்லாமல் போய்விடக் கூடாது என்ற காரணத்தால் அல்லவோ நான் இன்னமும் கங்கையில் விழுந்து உயிர் துறக்காமல் உள்ளேன் என்றாள். நம்மாழ்வாரும் –“மாயும் வகையறியேன் வல்வினையேன்” என்கிறார். இங்கு பிரிவாற்றாமை காரணமாக ,தன் புத்திக்கு அனுசரித்து தற்கொலை செய்துகொள்ளாமல், ராமனின் திருவுள்ளத்திற்கு ஏற்ப, அவன் குலம் தழைக்கவும், கர்ப்பம் வாழவும், தன் உயிரை பிடித்திருந்தாள்.
பதிர் ஹி தைவதம் நார்யா: பதிர்பந்து பதிர்கதி:|
ப்ராணைர் அபி ப்ரியம் தஸ்மாத் பர்து கார்யம் விஶேஷத: || – 17
பொருள்: எந்தக் காரணத்தினால் ஒரு பெண்ணிற்கு அவளது கணவன் தெய்வமாகவும், உறவினனாகவும்,மோக்ஷமாகவும் உள்ளானோ ,அந்தக் காரணத்தை முன்னிட்டு மனைவியானவள் தனது உயிர் மற்றும் அதனினும் மேலாக வேறு ஏதாவது இருந்தால் அதன் மூலமும் தொண்டு செய்ய வேண்டும்.- என்றாள். இப்படியாக நடுவிலே பிரிந்து பாரதந்த்ர்யத்தை வெளியிட்டாள். தன் மாமியார் கௌசல்யாதேவியின் வழியிலே அச்சு பிசகாமல் நின்றாள். மஹரிஷியும் தன்னுடைய மஹாகாவியத்திற்கு “ஸீதாயா: சரிதம் மஹத்” என்று பத்திரம் /பட்டா எழுதி கொடுத்துள்ளார். வழிபாட்டில் மக்களும், பெருமாளை விட பிராட்டிக்கே முதன்மை இடம் கொடுக்கின்றனர்.
தைத்தீரிய உபநிஷத்தில் “தபஸா ப்ரம்ஹ விஜிக்ஞாஸஸ்வ, தபோ ப்ரம்ஹ இதி” (தவத்தினால் பரமனை அறியவேண்டும், தவமே பரமனாவான்” என்று காண்கிறோம். மேலும் விஷ்ணுபுராணத்தில் சொன்னபடி, தப: என்பது ஆண்பால் சொல். இது திருமாலைக் குறிக்கும். அதன் பொருளான சிந்தா(சிந்திக்கும் செயல்) என்பது பெண்பால் சொல். இது திருமகளைக் குறிக்கும். எனவே பிராட்டியும் தவசீலர்களின் இருப்பிடத்தில் வாழ விரும்பினாள். ஶ்ரீ: என்பது “ஶ்ரிங் ஸேவாயாம்” என்ற மூலச்சொல்லிலிருந்து பெறப்படும். ஶ்ரீ: – ஶ்ரயதே இதி ஶ்ரீ: என்பது வ்யுத்பத்தி. இதற்கு நாராயணனை இருப்பிடமாக உடையவள்/ வணங்குபவள் / தொண்டு புரிபவள் என்பது பொருள்(பாரதந்த்ர்ய, அந்ந்யார்ஹங்களுக்கு விளக்கம்). ஶ்ரீ: ஶ்ரீயதே இதி ஶ்ரீ: என்று கொண்டால் பிற ஜீவாத்மாக்களுக்கு இருப்பிடம், வணங்கத்தக்கவள் ,தொண்டினை ஏற்பவள் என்றும் பொருள்(க்ருபைக்கு விளக்கம்). இதையே மஹரிஷியும் “தப ஸ்வாத்யாய” என்று “சிறையிருந்தவள் ஏற்றமாக” காவியத்தை தொடங்குகின்றார்.
பிராட்டி, தான் திருவயிறு வாய்த்திருந்த தகவலை ,ஒருநாள் பூங்காவில் பெருமாளோடு இருந்த சமயத்தில் தெரிவிக்கின்றாள். “என்ன வரம் வேண்டும்” என்று கேட்கிறார் பெருமாள். நாட்டில் தன் மீது அபவாதம் கிளம்பியது என்று முன்னமே அறிந்தவள், பெருமாளுக்கு எவ்விதத்திலும் சங்கடம் கொடுக்க விரும்பவில்லை. எனவே தபோவனம் செல்ல விருப்பம் தெரிவிகின்றாள். இதை அறியாத பெருமாளும், மறுநாள் காலையில் லக்ஷ்மணனுடன் அனுப்புவதாக சம்மதம் தெரிவிக்கின்றார். அதன் பிறகு நடக்கும் ஆலோசனையில் தான் பத்ரன் என்னும் ஒற்றன் மூலம் நாட்டில் நிலவும் அபவாதம் தெரிய வருகின்றது. அவளை வால்மீகி ஆஶ்ரமத்தருகே விட்டு வரும்படி இளையாழ்வாரை பணிக்கின்றார் பெருமாள். பிறகு தொண்ணூற்று ஐந்தாம் ஸர்கத்தில் ,லவகுசர்கள் மூலம் ஸீதை விருத்தாந்தம் அறிகின்றார். அவளை திரும்ப அழைக்கின்றார். 48 ஆம் ஸர்கம் முதல் 97 ஆம் ஸர்கம் வரையில் நடந்த பிரிவில் பாரதந்த்ர்யம் வெளியாகின்றது. “சிறையிருந்தவள்” என்று க்ருபையும், “ஏற்றம்” என்று பாரதந்த்ர்யமும் மற்றும் அநந்யார்ஹத்வமும் பொருள் தருகின்றன.
அடுத்த பகுதியில் பாரதந்த்ர்யம், பிராட்டியிடம் நிரூபாதிகமாகவே (இயற்கையாக) உளது என்பதனை தர்க்கம் கொண்டு பொருத்துவோம்.
பொதுவாழ்க்கையில் பாரதந்த்ர்யம்
கர்நாடகாவில் ஒரு பெரிய தனவந்தர் இருந்தார். அவர் சட்டத்திற்கு அடங்கியிருந்த பொழுது ஒரு விமான போக்குவரத்து நிறுவனத்தை நடத்தினார் .பிறகு 8000 கோடிரூபாய்க்கு மேல், கடனை அடைக்க முடியாமல் வெளிநாட்டில் குடியேறினார் . அங்கு வாலை, சுருட்டிக்கொண்டு அந்நாட்டு சட்டத்திற்கு அடங்கியிருக்கின்றார். உலகில் பலரும் சட்டத்திற்கு அடங்கி நடந்தால் இன்பமாக வாழ முடியும். சட்டத்தை மீறினால் சிறை செல்லவேண்டும் அல்லது வேறு நாட்டிற்கு செல்ல வேண்டி வரும்.
இது வீட்டிற்கும் சரி ,சமுகத்திற்கு சரி ! வணிகத்திற்கு சரி! எங்கும் பொருந்தும் .அரசியல் ,விளையாட்டு என எங்கும் சட்ட திட்டங்களுண்டு .கால்பந்து விளையாட்டில் தவறிழைத்தால் மஞ்சள் அட்டை (அ ) சிகப்பு அட்டை காட்டப்படும். எல்லா நாடுகளுக்கும், ஏன் ஐ.நா சபைக்கும் கூட சட்ட திட்டங்களுண்டு.
இவ்வுலகைப் படைத்து , உயிர்களுக்கு உடல்களையும் படைத்து , இப்படி செய் (விதி) ! இப்படி செய்யாதே (நிஷேதம்) ! என்று ஶாஸநம் செய்பவர் பரப்பிரம்மம். ஶாஸ்த்ரம் தனை ஆக்கியவன் ஶாஸ்தா ஆவார். விதிக்கப்பட்டதை (ஸத்யம், அஹிம்ஸை ,புலனடக்கம், தயை ,க்ஷமை ,த்யானம் ,தவம், க்ஞானம்) கடைபிடித்தால் புண்ணியம் ஆகும். அதனை செய்யாவிட்டால் பாவம் ஆகும். நிஷேதத்தினை (புலால் உண்ணுதல் ,கொலை ,திருட்டு ,பிறன் மனை விழைதல், இவ்வாறு செய்வாரோடு கூட்டு ) செய்யாவிட்டால் புண்ணியம் ஆகும். அதனை செய்தால் பாவம் ஆகும்.
எனவே எந்த ஒரு ஜீவாத்மாவும்; ஏதாவது ஒருவகையில்; ஒரு ஶாஸநத்திற்கு அடிமையாவான் . இதுவே அவனது முதல் இயல்பு (தாஸ:) . க்ஞானம் அவனது இரண்டாவது இயல்பு(க்ஞாதா) . கர்மம் அவனது முன்றாவது இயல்பு(கர்த்தா ). கடைசியில் இதனால் ஆனந்தம் ஏற்படுகின்றது (போக்தா) . இது நான்காவது இயல்பு . ஸ்வதந்த்ரனாயிருப்பவன் பற்பல கர்மங்களால் பிறப்பு ,மூப்பு,நோய் , இறப்பு என்னும் சுழற்சியில் இருப்பான். அவன் என்று ஈஸ்வரனுக்கு தான் பரதந்த்ரன் என்று உணர்ந்து அதன்படி நடக்கின்றானோ , பின்னர் அவன் நடத்தைக்கேற்ப இறைவனை அடைகின்றான். இறைவனை அடைந்தபிறகு அவனுக்கு பாபமின்மை ,மூப்பின்மை ,இறப்பின்மை ,சோகமின்மை ,பசியின்மை ,தாகமின்மை ,ஸத்யகாமத்வம் ,நினைத்ததை அடைதல் என்னும் 8 இயல்புகளும் பிரகாசிக்கத் தொடங்குகின்றன. (அபஹதபாப்மா ,விஜரோ, விம்ருத்யு,விஶோக: ,விஜிகத்ஸோ ,அபிபாஸ: ,ஸத்யகாம: ,ஸத்யஸங்கல்ப: -சாந்தோக்ய உபநிஷத்)
மேலும் நம்மக்கள் இதிஹாஸ புராணங்களை ஏதோ ஸ்வாரஸ்யம் வேண்டி, FICTION/ புனைவு கதைகள் போன்று வாசிக்கின்றனர். அது தவறான போக்காகும். ராமானுஜர் ஓராண்டுகாலம் திருமலையில், பெரிய திருமலை நம்பியிடம் ராமாயண பாடம் பயின்றார் என்று காண்கிறோம். இதிஹாஸ-புராணங்கள் என்பன உபநிஷதங்களுக்கான PRACTICAL LIFE/ நடைமுறை -வாழ்க்கை விவரணங்களாகும். அதில் வரும் நிகழ்ச்சிகளை உபநிஷத பார்வை கொண்டு அணுக வேண்டும். அவைகளை மீமாம்ஸா ஆராய்ச்சி செய்து, தத்துவ உண்மையினை பயில வேண்டும். இவ்வாறான கலைகளைப் பயில ஆசானின் வழிகாட்டுதல் இன்றியமையாதது. நுனிப்புல் மேய்தல் கூடாது.
பின்பழகராம் பெருமாள் சீயர் பெருந்திவத்தில்
அன்பதுவுமற்று மிக்க ஆசையினால்- நம்பிள்ளைக்கு
ஆன அடிமைகள் செய் அந்நிலையை நன்னெஞ்சே
ஊனமற எப்பொழுதும் ஓர்.– உபதேச ரத்தின மாலை-66
(தொடரும்)
ஐயா ,
“தசரதருக்கு கௌசல்யை சகோதரியைப் போல” – என்னும் வழக்கு புதிதாக இருக்கின்றது .
/***
சக்கரவர்த்திக்கு கௌசல்யா தேவியானவள் “பகிநீவச்ச – சகோதரியைப் போல” என்று பாராட்டும் சொல் இங்கு சுவாரஸ்யமானது.
***/
இதை நான் எங்கும் படிக்கவில்லை .
“தசரதருக்கு கௌசல்யை சகோதரியைப் போல” என்னும் கருத்தை நான் வாகம்ருதவர்ஷீ உ.வே.வேளுக்குடி வரதாச்சார்யரின் ஆசார்யர் உ.வே காரப்பங்காடு ஸ்ரீநிவாசார்யர் அருளிய சதுஸ்லோகி உபன்யாசத்தில் கேட்டிருக்கின்றேன்.
அதனை கீழ்காணும் சுட்டியில் நீவிரும் கேட்டு இன்புறலாம் .
https://www.youtube.com/playlist?list=PLqmw4MzamTPff2F4gZ-xt2gc3kZ8szFgK
நன்றி ,
துளசிராமன்
ஐயா,
/***
23999 ஸ்லோகங்களை ஒருதராசிலும் இச்ச்லோகத்தினை மற்றொரு தராசிலும் வைத்தால், இது வைக்கப்பட்ட தட்டானது தாழும்.
***/
1) “மா நிஷாத ப்ரதிஷ்டாம்” என்னும் ஸ்லோகம் , ஸ்ரீமத் ராமாயணம் எழுத மகரிஷிக்கு உந்துசக்தியாக இருந்தது.
2)”தர்மாத்மா சத்யா சந்தஸ்ச” என்னும் ஸ்லோகம் , ஸ்ரீமத் ராமாயணம் பாராயணம் செய்யும் பொழுது பயன்படுத்தும் அங்கந்யாஸ ஸ்லோகமாகும்.
3) “தப: ஸ்வாத்யாய நிரதம் ” என்னும் ஸ்லோகம் , ஸ்ரீமத் ராமாயணத்தின் பகுதியான ஸம்க்ஷேபத்தின் முதல் ஸ்லோகமாகும்.
இம்மூன்று ஸ்லோகங்களும் இல்லாத சிறப்பு “கச்சதா மாதுல குலம் ” ஸ்லோகத்திற்கு எப்படி வந்தது என விளக்கவும் .
அன்புடன் ,
கெணேசு
அன்புள்ள கணேஷ்,
நீங்கள் அறியாததல்ல ! நீங்கள் மேற்கோள் காட்டிய மூன்று ஸ்லோகங்களில் அகாரம் பற்றிய விவரணை உண்டு. ஆனால் “கச்சதா மாதுலகுலம்” என்னும் ஸ்லோகம் உகாரத்தின் ஆழ்ந்த பொருளை மிக எளிமையாகத் தருகின்றது. பகவத் பக்தியை விட பாகவத பக்தியே உயர்ந்தது என்னும் மத்யம பர்வ நிஷ்டையைக் காட்டுகின்றது.
உபதேச ரத்தினமாலை -26 ஆம் பாசுரத்தால் இதை உணரலாம்.
வாய்த்த திருமந்திரத்தின் மத்திமமாம் பதம்போல்
சீர்த்த மதுரகவி செய்கலையை – ஆர்த்தபுகழ்
ஆரியர்கள் தாங்கள் அருளிச்செயல் நடுவே
சேர்வித்தார் தாற்பரியம் தேர்ந்து
பொருள் : திருமந்திரத்தின் மத்தியப் பதமாகிய நம: பதம், சப்த பூர்த்தி (completeness) மற்றும் அர்த்த பூர்த்தி (conciseness) யாகிய லக்ஷணங்களை உடையதாக திகழ்கிறது. இந்த நம: பதத்தில், ஜீவாத்மாக்களின் ஸ்வரூபமாகிய பாகவத சேஷத்வம் சொல்லப்பட்டிருப்பதாகவும், இவ்வர்த்தம் முறையே கண்ணிநுண் சிறுத்தாம்பு பிரபந்தத்தில் பிரதிபாதிக்கப் பட்டிருப்பதாகவும் நம் புர்வாசார்யர்கள் நிர்வஹித்துள்ளார்கள். இப்படி நம் ஸ்வரூபத்திற்கு அநுரூபமாய் (befitting) திகழும் திருமந்திரத்தின் மத்தியப் பதம், நம்முடைய ஸ்வரூப, உபாய, புருஷார்த்தத்தின் விரோதிகளை நிவர்த்தி செய்யும் தன்மை வாய்ந்தது. மேலும், இந்த மத்தியப் பதமானது நமக்கும் எம்பெருமானுக்கும் உள்ள சம்பந்தத்தையும் (பாரதந்த்ரியத்தை) நன்கு உணர்த்துகிறது.
மேற்கூறிய ஸ்லோகமானது, இந்த கண்ணிநுண் சிறுத்தாம்பு என்னும் ப்ரபந்தத்திற்கு முறையே நம்பிள்ளை மற்றும் பெரியவாச்சான் பிள்ளை என்னும் ஆசார்யர்கள் அருளிச் செய்த இரண்டு வ்யாக்யானங்களிலும், அவதாரிகையில் விளக்கப்படுகின்றது. எனவே இது மற்ற ஸ்லோகங்களைவிட மகத்துவம் வாய்ந்தது.
நன்றி,
துளசிராம்
அன்புள்ள கணேஷ்,
மேலும் கோவிந்தராஜர் தான் எழுதிய வால்மீகி-ராமாயண வ்யாக்யான அவதாரிகையிலும், ஶ்ரீராமர், லக்ஷ்மணர், பரதர் மற்றும் ஶத்ருக்னர் என்னும் நால்வரின் அவதார ரஹஸ்யங்களை ஒப்பிடும் பொழுதில் இந்தக் கருத்தையே வலியுறுத்துகின்றார். ஶத்ருக்னர் அனுஷ்டானமே விஶேஷதம தர்மம் என்று சொல்லித்தான் தன் நூலினைத் தொடங்குகின்றார். இதை அப்படியே நம்பிள்ளையினுடைய கண்ணிநுண் சிறுத்தாம்பு வ்யாக்யானத்தில் காணலாம்.
நன்றி,
துளசிராம்
ஆண்டவன் போற்றலினும் அடியார் போற்றலை வைணவம் உயர்வாகக் கருதுகிறது.