இன்றைய இந்தியாவில் ஒரு சிரவண குமாரன்

சிரவண குமாரன் கதை என்று ஒன்று இராமாயணத்தில் வரும். சிரவணன் ஒரு சிறுவன். கண் தெரியாத தனது தாய் தந்தையரை தராசு போன்ற ஒரு காவடியில் வைத்து எங்கும் தூக்கிச் செல்லுவான். ஒரு நாள் அந்த காவடியை இறக்கி வைத்து விட்டு தண்ணீர் மொள்ள செல்கிறான். அப்போது அங்கு வேட்டைக்கு வந்த தசரத சக்ரவர்த்தி இவன் குடத்தில் தண்ணீர் மொள்ளும் சத்தத்தை கேட்டு, ஏதோ விலங்கு தான் என்று அந்த திசையில் அம்பை எய்ய, அது சிரவணனை தாக்கி விடுகிறது. ஐயோ என்ற அவன் குரல் கேட்டு தசரதன் ஓடிச்சென்று பார்க்க, மானிற்கு பதில் ஒரு சிறுவன் கிடக்கிறான். அவனைத் தூக்கி மடியில் கிடத்தி மன்னிப்பு கோரும் போதும், ”என் தாய் தந்தையர் கண்ணிரண்டும் தெரியாதவர்கள். அவர்களை நீங்கள் காக்க வேண்டும். அதோடு இந்த நீரையும் அவர்களுக்கு கொடுங்கள்” என்று கூறி சிரவணன் இறந்து விடுகிறான். தசரதன் சென்று அவர்களை பார்க்க, அப்போது அவர்கள் மகன் இறந்த செய்தி கேட்டு இது போல நீயும் மகனை பிரிந்து துன்ப படுவாய் என்று சாபம் கொடுக்கிறார்கள். தாங்களும் உயிர்விடுகிறார்கள்.

ராமன் காடேகியதின் காரணமாக இந்த கதை சொல்லப்படுவதுண்டு. இந்த இடம் உத்தர பிரதேசத்தின் காசிப்பூர் என்ற இடத்திற்கு அருகில் உள்ளது. பெற்றோரின் சேவையை உயிரினும் மேலாக கொள்வதே மகனின் கடமை என்பதை உணர்த்த சனாதன தர்மத்தில் இந்த கதை அடிக்கடி நினைவுகூரப்படுகிறது . அதை போன்றதொரு சம்பவம் ஒரிசாவில் நடந்து இது பொய்யல்ல என்று நிரூபித்துள்ளது.

ஒரிசாவின் மயூர்பன்ச் மாவட்டத்தை சேர்ந்தவர் கார்த்திக் சிங். ஒரு பழங்குடி இனத்தை சேர்ந்தவர். இவர் மேல் மொராடா காவல்நிலையம் ஒரு வழக்கு பதிவு செய்து 18 நாள் சிறையில் வைத்து விட்டது. அது ஒரு பொய் வழக்கு என்பது இவரின் குற்றசாட்டு. அந்த வழக்கினால் இவர் ஊர்க்காரர்கள் இவரை ஒதுக்கி வைத்து விட்டார்கள். அதோடு வேறு வேலை எதுவும் கிடைக்கவில்லை. இவருக்கு சொந்த நிலமேதும் இல்லை. வேறு ஊர்களுக்கு வேலை தேடி செல்லவும் முடியாது. ஏனென்றால் வீட்டில் வயதான பெற்றோர் இருக்கிறார்கள். இனி பொறுக்க முடியாது என்ற நிலையில் கார்த்திக் சிங் தன் பெற்றோரை ஒரு காவடியில் வைத்து எடுத்துக்கொண்டு ஒரு 40 கிலோமீட்டர் கால்நடையாகவே சென்று நீதிமன்றத்தை அணுகி இருக்கிறார் தன் மேல் போடப்பட்ட வழக்கை மறு விசாரணை செய்து தன்னை குற்றமற்றவன் என்று நிரூபிப்பதற்காக. தன் பெற்றோரின் வாழ்நாளிலேயே தன் மீதான குற்றம் களையப்பட்டு அவர்கள் அதை அறிய வேண்டும் என்பதே தன் அவா என்றும் தெரிவித்திருக்கிறார்.

கொடிய வறுமை. வறுமையிலும் நேர்மை. அதிலும் தாய் தந்தையர் மேல் பக்தி. புராண கதைகளில் வரும் சம்பவங்கள் அனைத்தும் கற்பனை அல்ல. நிகழ்காலத்திலேயே அதற்கு நிகரான சம்பவங்கள் அனைத்தும் நடக்கின்றன. அவற்றில் சில புராணங்களில் வரும் சம்பவங்களை காட்டிலும் உருக்கமானவை, மனதை பிசைபவை.

இந்த தேசம் பன்னெடுங்காலமாக தன் ஆன்மாவை இழக்காமல் உள்ளது. பெரும் பேராசைக்காரர்களும், திருடர்களும், கொள்ளையர்களும், பணப்பேய்களும் மலிந்துவிட்ட காலத்தில் கூட கடந்த காலத்தின் எச்சம் இன்னும் ஒட்டிக்கொண்டு தான் இருக்கிறது. அந்த வைராக்யம் தான் இதை இன்னும் கவசம் போல காத்திருக்கிறது என்றால் மிகையல்ல.

செய்தி இங்கே.

(ஆர்.கோபிநாத் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியது) 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *