தேவிக்குகந்த நவராத்திரி — 2

மீனாட்சி பாலகணேஷ்

            வாருங்கள் எல்லோரும்! உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும் சரி. ஆனந்தமாகக் கண்டு களிக்கலாம்.

இதோ, இங்கே உங்களுக்காக வர்ணனைகளுடன்… அன்னை தெய்வத்தின் நவராத்திரி காட்சிகள்…

3.  தடாதகை திக்விஜயம்

            பனி படர்ந்த இமயமலை. எம்பிரான் மோனத்தவமியற்றும் அமைதியான சூழல். இங்கு ‘திமுதிமு’வெனப் படைகளின் ஆரவாரத்துடன் பாண்டியநாட்டரசி தடாதகை நுழைகின்றாள். அவள் பின் ஆயிரக்கணக்கில் வீரர்கள். இவ்வாறு ஒரு தாக்குதலை எதிர்பார்க்காத சிவகணங்களும் மலையில் இருந்து அமைதியாகத் தவமியற்றும் முனிபுங்கவர்களும் அலமந்து போகின்றனர்.

            தடாதகை (எவராலும் தடுத்து நிறுத்த இயலாதவள்) எனப்படும் மீனாட்சி அம்மை திக்விஜயம் புறப்பட்டுச் சென்று கொண்டிருக்கிறாள். எல்லா மன்னர்களையும் வென்றவள் இப்போது இமயமலையை அடைந்து அங்கிருக்கும் சிவகணங்களின் தலைவனைப் போருக்கழைக்கிறாள். தனது மணாளாகப் போகிறவர் அவரே என்பதை அவள் அறிந்திலள். அவளைத் தடுத்து நிறுத்த இயலாத நந்தி தேவர்  சென்று சிவபிரானிடம் முறையீடு செய்ய, அவர் பொருள் செறிந்த சிறுமுறுவல் கொண்டு தாமே எழுந்து மீனாட்சியை எதிர் கொள்ள வருகிறார்.

அவரைக் கண்ணுற்றதும், மீனாட்சியின் உள்ளம் (அவர்தாம் தன் கணவரென அறிந்தமையால்) அவரோடு சென்று ஒன்றுபட்டு விட்ட காரணத்தால் மூன்று முலைகளுள் ஒன்று ஒடுங்கி மறைந்து விடுகின்றது. தலை நாணத்தில் தாழுகின்றது. கடைக்கண்ணால் அவரை நோக்கிய வண்ணம், நெற்றியில் சிறுவியர்வை தோன்ற, பெருமூச்செறிந்தபடி, கையில் ஏந்திய வில்லினையும் தாழ்த்திய வண்ணம், அதன் நுனியைத் தன் விரல்களின் விளிம்பால்  தடவியபடி பேசவும் மறந்து நிற்கிறாள் மீனாட்சி!

பின் நடந்ததெல்லாம் தான் உலகமே அறிந்த மீனாட்சி திருமணமாயிற்றே!

இக்காட்சியே இங்கு வடிவமைக்கப்பட்டுள்ளது. போர்க்கோலம் கொண்ட மீனாட்சி; உயிர்த்தோழி மகாலட்சுமி. படைகள், பரிவாரங்கள். பின்னணியில் இமயப் பெருமலை!

‘போர்க்கோலமே திருமணக்கோலமான பெண்’ எனத் தடாதகையை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் இயற்றிய குமரகுருபரனார் ஏத்துகிறார்.

4.  தேவியின் குரலினிமை!

            தேவியின் இருப்பிடமான சிந்தாமணி கிருஹம். அன்னை ஊஞ்சலில்  விச்ராந்தியாக அமர்ந்த வண்ணம் இருக்கிறாள். அப்போது கலைவாணி அங்கு தனது வீணையுடன் (விபஞ்ச்யா) நுழைந்து அன்னை பார்வதியின் முன்பு அமர்ந்து அவளை மகிழ்விக்க வீணையை இசைக்கத் (காயந்தீ) துவங்குகிறாள். வீணையில் பசுபதியாகிய சிவபிரானின் பராக்கிரமங்களைப் போற்றும் பாடல்களை இசைக்கிறாள் சரஸ்வதி. அன்னையின் உள்ளம் தனது நாதனின் பெருமைகளைக் கேட்டுப் பூரிக்கின்றது. தலையை அசைத்த வண்ணம் (சலித சிரஸா) வீணை வாசிப்பைக் கேட்டு மகிழ்கின்றாள். சரஸ்வதிக்கும் உற்சாகம் பெருகுகிறது. ஒரு கட்டத்தில் வீணை வாசிப்பில் தன்னை மறந்த பார்வதி தேவி, “ஸாது” (நன்றாக இருக்கிறது) எனும் சொல்லைக் கூறித் துவங்கித் திருவாய் மலர்கின்றாள் (ஸாது வசனே). அந்த “ஸா” எனும் த்வனியின் இனிமையிலேயே (மாதுர்யை) சரஸ்வதியின் வீணையின் நாதம் அவமதிப்படைந்து (அபலபித-தந்த்ரீ-கல-ரவாம்) விடுகின்றதாம். உடனே நாணமடைந்த கலைமகள், தனது வீணை வாசிப்பினை நிறுத்தி விட்டு, அதனை உறையிலிட்டு (சோலேன) மூடி வைக்கின்றாளாம் (நிப்ருதம்).

மிக அழகான ஒரு சௌந்தர்யலஹரி ஸ்லோகம் இது. 66வது ஸ்லோகம். சௌந்தர்யலஹரி ஆனது ஆதிசங்கரரால் தேவியின் கேசாதிபாத வர்ணனை ஸ்லோகங்களாக இயற்றப் பெற்றது. இது அவற்றுள் ஒன்று.

விபஞ்ச்யா காயந்தீ விவித-மபதானம் பசுபதேஸ்-

          த்வயாரப்தே வக்தும் சலிதசிரசா சாதுவசனே

          ததீயைர்-மாதுர்யை-ரபலபித-தந்த்ரீ-கலரவாம்

          நிஜாம் வீணாம் வாணீ நிசுலயதி சோலேன நிப்ருதம்.

இந்த சுலோகத்தினையே அடுத்த காட்சியின் கருவாக வைத்துக் கொண்டேன். இந்த சுலோகத்தையும் தமிழாக்கி அன்னைக்கு அர்ப்பணித்தேன்.

பல்லவி

நாதன் பெருமைதனை நாத வீணையினில்

வேதன் தலைவியவள் கீதம் இசைத்திடவே (நாதன்)

அனுபல்லவி

யாதும் இனிமையென யாழின் இனிமைகெட

ஓதும் திருவாய்மொழி சாது என்றனையே (நாதன்)

சரணம்

இனிதென்று சிரமசைத்து இசைதன்னை நீ ரசிக்க

இனிதன்று வீணையென இசைவாணி பரிதவிக்க

இனியொன்றும் தோணாமல் உறையிட்டு மூடிவைக்க

கனிவான நகைகாட்டி கருணைவெள்ளம் நீ பெருக்க (நாதன்)

(நவராத்திரி தொடரும்)

 

 

 

 

_

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *