தொடர்ச்சி…
கல்வி நிறுவனத்தின் நிர்வாகம்
நான் பல கல்வி நிறுவனங்களின் எழுச்சியையும் வீழ்ச்சியையும் பார்த்துள்ளேன். ஒரு தனியார் கல்வி நிறுவனம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு 14 வருடங்களுக்கு முன் நடந்த இந்த நிகழ்வை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
காற்றாலை முதலாளி ஒருவருக்கு பொறியியல் கல்லூரி ஒன்றை தொடங்க வேண்டும் என்ற ஆசை வந்தது. இடம் வாங்கி கல்லூரியை கட்டி விட்டார். அனைத்து அனுமதிகளையும் பெற்றுவிட்டார். கல்லூரிக்கு நிரந்தர முதல்வர் ஒருவரை நியமிக்க முடிவு செய்தார். தனது ஜாதியை சேர்ந்த ஒரு பேராசிரியர் அரசு பொறியியல் கல்லூரியில் இருந்து ஓய்வு பெறுவதை அறிந்து படை பரிவாரத்துடன் அவர் வீட்டிற்கு சென்றார். 58 வயதில் அரசு பணிக்கு தான் ஓய்வு. 65 வயது வரை தனியார் கல்லூரி முதல்வராக பணியாற்றலாம். பேச்சு வார்த்தை நடந்தது. பேராசிரியர் ஒரே ஒரு condition இருப்பதாக கூறினார். அனைவரும் சம்பளம் தொடர்பானதாக இருக்கும் என்று எண்ணினர். ஆனால் பேராசிரியர் சொன்னது இது தான் – “ஒவ்வொரு வருடமும் அட்மிஷன் முடிந்த பிறகு நிர்வாகிகள் கல்லூரிக்கு உள்ளேயே வரக்கூடாது. கல்லூரி உரிமையாளர் / தலைவர் எக்காரணம் கொண்டும் கல்லூரியின் academic நிர்வாகத்தில் தலையிடக்கூடாது” என்று அழுத்தம் திருத்தமாக கூறினார். வேறு வழி இல்லாமல் தொழிலதிபரும் ஒத்து கொண்டார்.
அடுத்த ஏழு வருடங்களில் அக்கல்லூரி மிகவும் லாபகரமாகவும், சிறப்பாகவும் கொடிகட்டி பறந்தது. தரத்தில் பேராசிரியர் எந்த சமரசமும் செய்யவில்லை. எத்தனை பணம் கொடுத்து வந்த மாணவன் ஆனாலும் பொறியியல் aptitude இல்லை என்றால் கழற்றி விடப்பட்டான். பெற்றோர்களும் அதனை ஒருவாறாக ஏற்றுக்கொண்டனர். பணியாளர்களுக்கு நல்ல ஊதியம் வழங்கப்பட்டது. ஒழுங்காக பாடம் எடுக்காத ஆசிரியர்கள் உடனடியாக வீட்டிற்கு அனுப்பப்பட்டனர். ஒரு கணித விரிவுரையாளர், உரிமையாளரின் உறவினர் உள்ளே நுழைந்து விட்டார். சரியாக பாடம் நடத்தவில்லை. வெளியே அனுப்ப உரிமையாளர் விரும்பவில்லை. நமது பேராசிரியர் ஒரு வருட காலம் அந்த விரிவுரையாளரை வகுப்பிற்கு செல்ல விடவில்லை. உரிமையாளரிடம், “உங்கள் உறவினருக்கு பணம் (சம்பளம்) கொடுப்பது உங்கள் விருப்பம். ஆனால் அவரை வகுப்பெடுக்க விட்டு மாணவர்களின் வாழ்க்கையை கெடுக்க உங்களுக்கு உரிமையில்லை என்று ஸ்பஷ்டமாக கூறினார். (அவர் 65 வயதாகி அக்கல்லூரியை விட்டு சென்ற பிறகு கூழை கும்பிடு இடும் மற்றொரு முதல்வர் வந்து கல்லூரியே சீரழிந்து போனது மீதி கதை).
நான் இந்த சம்பவத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கான காரணம், ஒரு கல்லூரியில் நிர்வாகிகளின் தலையீடு மிகவும் குறைவாக இருக்க வேண்டும் என்பதை சுட்டி காட்டத்தான். மேல கண்டது போன்ற பேராசிரியர்களை தேடி கண்டுபிடித்து தலைமை பொறுப்பில் இருந்த வேண்டும். எனில் உங்கள் கல்லூரி மாணவர்கள் (அங்கு படிக்கும் உங்கள் சமுதாய மாணவர்களையும் சேர்த்து தான்) தம் துறை வல்லுனர்களாகவும், தலை சிறந்த இந்தியக் குடிமகன்களாகவும் வெளியே வருவார்கள். இல்லா விட்டால் உங்கள் கல்லூரியில் பெறும் பட்டம் திருமண அழைப்பிதழில் அச்சிடவும் வரதட்சணை பேரத்திற்கும் மட்டுமே பயன்படும். சமுதாயம் உருப்படாது.
நுழைவுத் தேர்வுகள்
நண்பர் போகன் சங்கர் ஒரு விஷயத்தை சுட்டி காட்டினார். நுழைவு தேர்வுகள் நகரத்தில் வசிக்கும் மாணவர்களுக்கு சாதகமாக இருப்பதாகவும், கிராமத்தில் படிக்கும் மாணவர்களுக்கு எட்டாக்கனியாக இருப்பதாகவும் கூறினார். இது தமிழக அரசின் வாதமும் கூட. இதனை கூறித்தான் நுழைவு தேர்வுகளை பலரும் எதிர்க்கிறார்கள். கிராமபுற மாணவர்களுக்கு ஒதுக்கீடு கொண்டுவரும் விஷயம் எல்லாம் கூட 1997ல் நடந்தது. முதலில் 15 %. பிறகு 25 %. இந்த ஒதுக்கீடு உயர்நீதிமன்ற தீர்ப்பு காரணமாக முடிவிற்கு வந்தது. பல வழக்குதாரர்கள் இருந்தபோதிலும் குமரி மாவட்டத்தை சார்ந்த ஒரு மாணவியின் வாதம் மிகவும் பலமாக இருந்தது தெரிகிறது. மனுதாரரான இந்த மாணவி வசிக்கும் கிராமத்தில் அரசு பள்ளி இல்லை. எனவே அருகில் இருக்கும் நகர பகுதியில் உள்ள தனியார் பள்ளிக்கு சென்று +2 முடித்துள்ளார். ஆனால் நகர பகுதியில் நிரந்தரமாக வசிக்கும் எதிர் மனுதாரர் தனது வீட்டிற்கு அருகே உள்ள அரசு பள்ளிக்கு செல்லாமல், கிராமபுற அரசு பள்ளிக்கு சென்றுள்ளார். அதனை பயன் படுத்தி ஒதுக்கீட்டையும் பெறுகிறார். எதிர் மனுதாரரை விட அதிக தகுதி மதிப்பெண்களை பெற்ற மனுதாரர் கிராம புறத்தில் படித்த மாணவர்களுக்கு கிடைக்கும் ஒதுக்கீட்டினால் பாதிக்க பட்டு மருத்துவ கல்வி இடத்தை இழக்கிறார். ”பின்தங்கியவர்கள் நகரத்திலும் உண்டு, கிராமத்திலும் உண்டு. எனவே நகரம் கிராமம் என்று பிரித்து கிராமத்தவருக்கு தனி ஒதுக்கீடு கொடுப்பது அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிரானது” என்று கூறி தீர்ப்பளித்துள்ளனர் நீதி அரசர்கள். இந்த தீர்ப்பை தொடர்ந்து தான் தமிழக அரசு ஒரே அடியாக நுழைவு தேர்வை ரத்து செய்யும் வரலாற்று முடிவை !?எடுக்கிறது. அதன் விளைவைத்தான் இன்று கண்டுகொண்டு இருக்கிறோம்.
இந்த தீர்ப்பின் வாயிலாக வேறு ஒரு சுவையான தகவலும் கிடைக்கிறது. ஒரு காலத்தில், அதாவது அறுபதுகளில், தமிழகத்தில் மருத்துவ கல்வி இடங்களில் மாவட்ட வாரியான ஒதுக்கீடு இருந்துள்ளது. அன்றைய காலகட்டத்தில் 8 மருத்துவ கல்லூரிகளே இருந்தன. ஒவ்வொரு மருத்துவக்கல்லூரிக்கும் கீழே சில மாவட்டங்கள் இருந்தன. அந்த மாவட்டத்தை சேர்ந்தவர்கள் அந்த அந்த மாவட்ட வரம்பிற்குள் வரும் மருத்துவ கல்லூரியில் தான் விண்ணப்பிக்க முடியும்; படிக்க முடியும். ஒதுக்கீடு விஷயத்தில் நம்மை மிஞ்ச யார் உண்டு 🙂 ? இம்முறையில் பல பிரச்சனைகள், மோசடிகள் இருந்திருக்கும் போல. நீதிமன்றம் தலை இட்டு இம்முறையை நிறுத்தி உள்ளது.
நீதிமன்றம் தெளிவாக கிராமப்புற பள்ளி மாணாக்கருக்கான ஒதுக்கீடு அரசியல் சட்டப்படி செல்லாது என்று கூறுகிறது. அனைத்து வகையான ஒதுக்கீடுகளும் தவறு என்ற திட நம்பிக்கை கொண்டவன் நான். ஒதுக்கீடு தவறுதான். ஆனால் கிராமப்புற மாணாக்கருக்கு நகர்ப்புற மாணவர்கள் அளவு கல்வி வசதிகள் கிடைப்பதில்லை என்பது உண்மை. இணையம் ஓரளவிற்கு நகர கிராம வேறுபாடுகளை சமன் செய்திருக்கிறது. இருப்பினும் மிகப்பெரிய இடைவெளி இருக்கத்தான் செய்கிறது. கிராமங்களை பற்றி பத்தி பத்தியாக எழுதித்தள்ளும் இலக்கியவாதிகளின் ஒரு சிலரை தவிர ஏனையோர் நகரத்தை நோக்கித்தான் ஓடுகிறார்கள். இந்த பிரச்சனையை சரி செய்வது எப்படி?
மாணவர் விடுதிகள்
நீங்கள் பெங்களூர் மாநகரின் சாலைகளை நிதானமாக சுற்றி வந்தீர்கள் எனில் ஒரு விஷயத்தை கவனிக்கலாம். விதிவிதமான ஜாதிகளின், ஜாதி சங்கங்களின் பெயர்கள் கொண்ட கட்டிடங்கள் இருக்கும். இதில் என்ன புதுமை? ஜாதி சங்கம் இருப்பது என்ன பிரமாதம் என்று உங்களுக்கு தோன்றும். சற்று பொறுமையாக வாசித்தால் உங்களுக்கு புரியும். மேற்படி கட்டிடங்கள் ஜாதி சங்க அலுவலகம் (மட்டும்) அல்ல. பெரும்பான்மையானவை மாணவர் விடுதியும் கூட. பெங்களூரில் கர்நாடாகாவின் பல்வேறு ஜாதிகளுக்கு சொந்தமான மாணவர் /மாணவியர் விடுதி உள்ளது. மாண்டியாவில் இருந்து அல்லது கூர்கில் இருந்து வரும் ஒரு மாணவன் பெங்களூரில் உள்ள pre-university பள்ளியில் அல்லது கல்லூரியில் படிக்க விரும்புகிறான் என்றால் அவனது முதல் சவால் / தேவை என்னவாக இருக்கும்? தங்குவதற்கு ஒரு இடம். ஒரு வருடம் செலவழித்து நுழைவு தேர்வு எழுதுவதற்காக பயிற்சி பெற விரும்பும் மாணவனுக்கும் இதே தேவை தான் இருக்கும். தனது ஜாதி அமைப்பிற்கென ஒரு விடுதி இருந்து அங்கு இலவசமாகவோ குறைந்த செலவிலோ தங்கலாம் என்றாலே பாதி பிரச்சனை தீர்ந்து விடும். கிராமத்தில் இருக்கும் நன்றாக படிக்கும் மாணவ மாணவியரை நகரத்தில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு அனுப்ப பெற்றோர்களும் யோசிக்க மாட்டார்கள். மூவேந்தர்களும் தங்கள் ஜாதி என்று நிரூபிக்க கம்பு சுற்றும் நண்பர்களிடம் ஒன்றை கேட்க விரும்புகிறேன்.உங்கள் ஜாதியை சேர்ந்த மாணவி ஒருவர் கலந்தாய்விற்காகவோ, எதாவது ஆய்வரங்கில் கலந்து கொள்ளவோ சென்னைக்கு வந்தால், அவர் தங்குவதற்கு, சரி விடுங்கள், ஓய்வெடுப்பதற்கு 100 சதுரஅடி இடத்தையாவது தயார் செய்து வைத்திருக்கிறீர்களா?
நமக்கு இன்று முதல் தேவை அது தான். அதனை நிறைவேற்றிய பிறகு 100 சிலைகளை வைத்து மகிழலாம். எனக்கு தெரிந்து நாடார் உறவின் முறை இந்த பாணியை தங்கள் சமுதாய வணிகர்களுக்காக கையாளுகிறார்கள். அதன் பலனாக இன்று அவர்கள் வணிகத்தில் மிக சிறப்பாக இருப்பதை காணலாம். நமது தொன்மையான பண்பாட்டின் ஒரு பகுதி தான் இது. புதிய விஷயம் ஒன்றும் இல்லை. கொஞ்சம் யோசித்து பாருங்கள். தமிழகத்தின் தொன்மையான கோவில் நகரங்களிலும் ஏன் காசியிலும் கூட ஒவ்வொரு சமுதாயத்தினருக்கும் சொந்தமான சத்திரங்கள் இருந்தன. இன்னும் இருக்கின்றன. திராவிட சித்தாந்தத்தின் போலி ஜாதி அழிப்பு அலையில் சிக்கி கொள்ளாவிட்டால் இதே பாணியில் மாணவ மாணவியர் விடுதிகளை மாநகரங்களில் அமைத்திருப்போம். இன்னும் ஒன்றும் கெட்டு போகவில்லை. என்னை கேட்டால் நமது மாநிலத்தில் உள்ள மாநகரங்களில் மட்டும் அல்ல புது தில்லியில் கூட இத்தகைய மாணாக்கர் விடுதிகளை தொடங்கி நடத்த வேண்டும். 50% இடத்தை அவரவர் சமூகத்தில் உள்ள வசதி அற்ற கிராமப்புற மாணவர்களுக்கு இலவசமாக வழங்க வேண்டும்.மீதி 50% இடத்தை ஜாதி வித்தியாசம் இல்லாமல் நல்ல வாடகைக்கு வேறு மாணவர்களுக்கு வழங்க வேண்டும். அந்த வாடகை இதர செலவுகளை ஈடு கட்டி விடும். கன்னட எழுத்தாளர் பைரப்பாவின் சுயசரிதையை வாசித்த போது தான் இத்தகைய மாணாக்கர் விடுதியின் முக்கியத்துவம் புரிந்தது. இடம் வாங்கி, கட்டிடம் கட்டி. …..எங்கள் சமூக /ஜாதி சங்கம் அதனை வலுவானது இல்லை என்கிறீர்களா? அதற்கும் வழி உண்டு.
மாணவர் / மாணவியர் விடுதிகளை நிறுவுவது பொருட்செலவு மிகுந்த விஷயம் தான். கால அவகாசமும் தேவைப்படும். ஆனால் மாநாட்டு பந்தலுக்கே ஒரு கோடி ரூபாய் செலவழிக்கும் அமைப்புகள் இந்த தேவைக்கு முதலிடம் கொடுக்க வேண்டும். பலமான, வசதியான ஜாதி / சமூக சங்கங்கள் இல்லாதவர்கள் என்ன செய்வது? நல்லபடியாக ஒன்றை அரசியல் அமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு அமைக்க முடியுமா என்று பாருங்கள். அது நீண்ட நாள் திட்டம். குறுகிய கால திட்டம் ஒன்றை சொல்கிறேன். உங்கள் சமூகம் அரசின் இடஒதுக்கீடு கொள்கையை பயன்படுத்தும் சமூகம் என்னும் பட்சத்தில் மாநகரங்களில் உள்ள அரசு அலுவலகங்களில் உங்கள் சமூகத்தை சார்ந்தவர்கள் வேலை பார்ப்பார்கள். கடைநிலை ஊழியர் தொடங்கி உயர் அதிகாரி வரை பலரும் இருக்க வாய்ப்புண்டு. இவர்களில் ஜாதி அபிமானம் உள்ளவர்களிடம் சென்று அவர்கள் வீட்டில் உங்கள் சமூகத்தை சார்ந்த கிராமத்தில் இருந்து நகருக்கு படிக்க வந்த ஒரு மாணவன் அல்லது மாணவியை தங்க வைக்க சொல்லுங்கள். பெருநகர வாழ்வு நெருக்கடி மிகுந்தது தான். ஆனாலும் ஒரு நபரை கூட சேர்த்துக்கொள்ளலாம். ஒடுங்கி இருந்து படிக்க ஓரிடம். படுக்க ஆறடி. அவ்வளவு தானே தேவை. குளியலறை இணைந்த குளிர் வசதி உள்ள அறைகளை நீங்கள் கேட்க போவதில்லையே. அவர்கள் நினைத்தால் இதனை செய்யலாம். கடை நிலை ஊழியர்கள் எனில் paying guest முறை தான் நியாயம். அதிகாரிகளை பொறுத்த வரையில் இலவசமாகவே செய்யலாம். எந்த ஜாதியின் பெயரை சொல்லி கல்வியில் ஒதுக்கீடு வாங்கினோமோ, வேலை வாய்ப்பை பெற்றோமோ, பணி உயர்வில் முன்னுரிமை கேட்டோமோ அந்த ஜாதியின் முன்னேற்றத்திற்கு உதவ இதை விட சிறந்த வழி ஒருவருக்கு இருக்கிறதா? இந்த வழிமுறை உடனடி பலனை தர வல்லது. வீட்டில் தங்க இடம் எல்லாம் தர முடியாது. ஆரியர் ஒழிக என்று முகநூலில் 100 தடவை எழுதி தான் என் ஜாதியை வளர்ப்பேன் என்று யாரவது சொன்னார்கள் எனில் அவர்களை பெருச்சாளி என, கட்டு சோற்றில் பெருச்சாளி என அறிந்து கொள்ளுங்கள்.
(தொடரும்)
கட்டுரையாசிரியர் அனிஷ் கிருஷ்ணன் நாயர் தீவிர இலக்கிய வாசகர், சிந்தனையாளர். தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பல்வேறு விஷயங்கள் குறித்து தொடர்ந்து எழுதி வருகிறார்.
சிறப்பான பதிவு. இதுவரை இந்தத் தங்குமிடம் தேவை என்னும் கோணத்தில் யாருமே யோசித்திருக்க மாட்டார்கள். அந்தக் கோணத்தைக் காட்டியமைக்குப் பாராட்டுகள்.