அக்பர் என்னும் கயவன் – 9

<< தொடரின்  மற்ற பகுதிகளை இங்கே வாசிக்கலாம் >>

தொடர்ச்சி.. 

குறிப்பு :

அக்பர் ஒரு தோற்றப் பொலிவுள்ள, உடல் வலிமையுள்ள, அழகானதொரு பேரரசன் என மீண்டும், மீண்டும் நமக்குச் சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். அக்பரைக் குறித்து நாம் காணும் படங்களெல்லாம் கனிவான முகத்தோற்றமுள்ள, நரைத்த மீசையுடன், நெற்றியின் நடுவே ஒரு வட்டத்திலகமுடன்(!) இருக்கும் ஒரு மரியாதைக்குரிய பெரிய மனிதனின் தோரணையுள்ளவை. நமது பாடப்புத்தகங்களில் மட்டுமில்லை, அக்பரைக் குறித்து நாம் காணும் திரைப்படங்களிலும் அக்பரை ஷாஜஹானின் கண்டிப்பான தந்தையாக அதாகப்பட்டது ஆளுமையுள்ள பிரித்விராஜ் கபூராக,  அல்லது ஜோதாபாய் என்னும் ஹிந்துப் பெண்ணைக் காதலித்து உருகும் ஹ்ரித்திக் ரோஷனாகத்தான் நாம் கண்டிருக்கிறோம். அதுவே நமது உள்ளங்களில் அழுத்தமாகப் பதிந்திருக்கிறது. உண்மையை ஆராய்வதே இந்த அத்தியாயத்தின் நோக்கம் என மீண்டும் சொல்லிக் கொள்கிறேன்.

நாம் இதுநாள் வரை நம்பிக் கொண்டிருந்த ஒரு பிம்பம் நம் கண்முன்னே நொறுங்கி விழுவதனை அனைவராலும் ஏற்றுக் கொள்ள இயலாது என்றாலும் உண்மையை நாம் உண்மையாகத்தான் நோக்கியாக வேண்டும்.

*****

ஆனால் உண்மையில் அக்பர் நமக்குச் சொல்லப்பட்டது போன்ற ஆளுமையுள்ள, தோற்றப் பொலிவுள்ள மனிதனா என்றால் அதுதான் இல்லை. “அக்பர் ஒரு அருவருக்கத்தக்க, அசிங்கமான தோற்றமுடைய மனிதர் (ugly and ungainly)” என்கிறார் அக்பரின் காலத்தில் அவரிடம் வந்து சேர்ந்த போர்த்துக்கிச்சிய பாதிரியான மொன்சராட்டே (Monserrate). அக்பரின் சமகால வரலாற்றை எடுத்துப் பார்க்கையில் அவர் உண்மையில் கொடூரமான மனபாவமுள்ள, எந்தவொரு துரோகச் செயலுக்கும் அஞ்சாத, படிப்பறிவற்ற குரூரன் என்பது நமக்குத் தெளிவாகும். அதனைக் குறித்து அடுத்துவரும் அத்தியாயயங்களில் விளக்கமாகக் காணப்போகிறோம்.

நீண்ட நெடிய இந்திய வரலாற்றில் அக்பரும், அசோகரும் தனித்து நிற்கிறார்கள். அதில் அக்பர் தனது கொடுஞ்செயல்களால் அசோகரை விடவும் ஒருபடி உயர்ந்து நிற்பதனைக் காணலாம். அவர்களிருவரையும் ஒப்பிடுகையில், அக்பரின் நாடு பிடிக்கும் பேராசையும், நேர்மைப் பற்றாக்குறையும், குடிமக்களை தனது மக்களாக நினைத்து ஆண்ட, சுயகட்டுப்பாடு மிகுந்த அசோகரும் எதிரெதிர் திசையில் நிற்கிறார்கள். அக்பரின் போர்கள் அனைத்திலும் கொடூரக் கொலைகாரனான தைமூரின் வழிவந்த ஒருவரின் முத்திரை பதிக்கப்பட்டிருக்கும்.

இந்திய வரலாற்றாசிரியர்கள் தொடர்ந்து அக்பரை பிளாட்டோவின் தத்துவ அரசனைப் போலச் சித்தரித்துக் கொண்டே வந்திருக்கிறார்கள் என்றாலும் இன்றைய வரலாற்றாசிரியர்கள் அந்தப் பொய்களைத் தோலுறித்துக் காட்டியிருக்கிறார்கள். அக்பரின் குணங்களான குள்ள நரித் தந்திரமும், நாடுபிடிக்கும் பேராசையும் இன்றைக்கு நம் கண்முன்னே திறந்து கிடக்கிறது. குளத்தில் கிடக்கும் பெரிய மீன் தன்னைச் சுற்றிலும் இருக்கும் சிறிய மீன்களை விழுங்குவதுபோல தன்னைச் சுற்றியிருந்த வலிமையற்ற அரசுகளை விழுங்குவதையே வழக்கமாகக் கொண்டவர் அக்பர்.

“அக்பரால் தனது பலதார மணம் புரியும் வழக்கத்தைக் கைவிட இயலவில்லை. ஒருசமயம் தனது அத்தனை மனைவிகளையும் தனது அரசவைப் பிரதானிகளுக்குப் பகிர்ந்து கொடுக்கப் போவதாய் வந்த வதந்திகளையும் அவர் மறுக்கவில்லை. தனது மந்திரிப் பிரதானிகள் ஆணவம் பிடித்தவர்களாக மாறுவதனைத் தடுக்கும் பொருட்டு அவர்களின் பல அருவருக்கத்தக்க உத்திரவுகளை இட்டு அவர்களைத் தனது அடிமைகளைப் போல நடத்துவதில் ஆர்வமுடையவராக இருந்தார் அக்பர்” எனச் சொல்கிறார் பாதிரி மொன்சராட்டே.

அக்பர் – இறப்பிற்குப் பின் வரையப்பட்ட சித்திரம்

அக்பரின் உருவத்தைக் குறித்து விளக்கவரும் பாதிரி மொன்சராட்டே, “அக்பர் பரந்த தோள்களை உடைய,  பலகீனமான கால்களை (bandy legs) கொண்ட, மெல்லிய பழுப்பு நிறமுடைய மனிதர். அவரது தலை அவரது வலது தோளை நோக்கி வளைந்திருந்தது. மிகப் ப்பரந்த, திறந்த முன் நெற்றியும், விளக்கைப் போல ஒளிரும் கண்களையும் கொண்டிருந்தார். அந்தக் கண்கள் சூரிய ஒளியில் பளிச்சிடும் கடலைப் போன்ற தோற்றம் கொண்டவை. அவருடை கண்ணிமைகள் மிக நீளமானவை என்றாலும் அவருடைய புருவங்கள் அத்தனை அழுத்தமானவையல்ல. மிக நேரான சிறிய மூக்கை உடையவர் என்றாலும் மூக்கு முற்றிலும் மறைந்துவிடவில்லை. ஏளனம் செய்யும் ஒருவனைப் போல மிகப் பெரிய மூக்குத்துவாரங்கள்.

அவருடைய இடது மூக்குத் துவாரத்திற்கும் மேலுதட்டிற்கும் இடையில் ஒரு கறுத்த மச்சமிருந்தது. அவர் தனது தாடியை மழித்தாலும் மீசை இன்னும் வயது வராததொரு துருக்கிய விடலைச் சிறுவனுடையதைப் போலத் தோற்றமளித்தது. தனது தலைமுடியை அவர் கத்தரிப்பதில்லை. அதற்குப் பதிலாக தனது கேசத்தை ஒரு பந்தாகச் சுருட்டித் தனது தலைப்பாகையினுள் அடைத்து வைத்திருந்தார்.  போர்களத்தில் எந்தக் காயத்தையும் இடதுகாலில் அடையாத அக்பர் தனது இடது காலால் நொண்டி நடந்தார். அவர் மிக குண்டானவரும் அல்ல; அதேசமயம் மிக ஒல்லியானவரும் இல்லை. தனது முகத்தைப் பெரிய மனிதத் தோரணையில் வைத்துக் கொண்டிருந்தார்.

அக்பரைச் சுற்றிலும் எந்த நேரத்திலும் ஆட்கள் கூட்டமாக இருந்தார்கள். ஒவ்வொரு நாளும் தனது தர்பாருக்கு வரும் வழியில் பலதரப்பட்ட மக்கள், முக்கியமாக முகலாய அரசின் பல்வேறு பகுதிகளுக்கான பிரதிநிதிகள் தங்களின் வருடாந்திர ராஜமரியாதையைச் செலுத்த வந்து காத்துக் கொண்டிருந்தார்கள். அரண்மனையை விட்டு வெளியே போகும் ஒவ்வொரு சமயமும் அவரைச் சுற்றி அவரது மந்திரிகளும், பாதுகாவலர்களும் பின் தொடர்ந்தார்கள். அக்பர் உத்தரவு கொடுக்கும் வரை அவர்கள் தரையில் நடந்துவர வேண்டும் என்கிற கட்டாயம் அவர்களுக்கு இருந்தது. அதுவரை அவர்கள் குதிரைகளில் ஏறாமல் நின்றார்கள்.

தங்கத்தால் அற்புதமாக சித்திர வேலைப்பாடுகள் செய்யப்பட்ட அழகான உடைகளை அவர் அணிந்தார். தொடைவரைக்கும் மறைக்கும் ராணுவ உடையை அணிந்த அக்பரின் காலணிகள் அவரின் கணுக்கால்கள் வரை மூடி மறைத்தன. மிக உயர்ந்த தங்க, வைரங்கள் மற்றும் முத்துக்களால் செய்யப்பட்ட ஆபரணங்களை அணிந்திருந்தார். தன்னுடன் எப்போதும் ஐரோப்பிய குறுவாளையும், உடைவாளையும் உடலில் அணிந்தவராகக் காட்சியளித்த அக்பர் ஒருபோதும் ஆயுதங்களை விட்டுவிலகி இருக்கவில்லை. அரண்மனைக்குள்ளும் 20 பாதுகாவலர்கள் சூழவே காணப்பட்டார்.

அவரது உணவு மேசையில் ஏறக்குறைய 40 பல்வேறு விதமான உணவு வகைகள் பரிமாறப்பட்டன. சமயலறையிலுருந்து மெல்லிய லினன் துணிகளால் மூடப்பட்டு, சமையற்காரனின் முத்திரை பதிக்கப்பட்ட உணவு (யாரேனும் விஷம் வைக்காதிருக்கும் பொருட்டு) அரசர் உணவு உண்ணும் அறைக்குக் கொண்டுவரப்பட்டது. அங்கிருந்து அந்த உணவை வேலைக்கார இளைஞர்கள் அக்பரின் அறைக்கதவு வரைக்கும் எடுத்துச் சென்றார்கள். பின்னர் அவர்களிடமிருந்து உணவு அலிகளிடம் கொடுக்கப்பட்டுப் பின்னர் வேலைக்காரப் பெண்களிடம் ஒப்படைக்கப்பட்டு அக்பரை அடைந்தது.

தனது உணவை அக்பர் தனியனாகவே உண்டார். ஏதேனும் விழாக்காலங்களில் மட்டும் பிறர் அவருடன் சேர்ந்துண்ண அனுமதிக்கப்பட்டார்கள். உணவு உண்கையில் பெரும்பாலும் குறைவாகவே மதுவருந்தும் அக்பர், “ப்ருஸ்ட்” (ஓப்பிய விதைகளால் செய்யப்பட்ட பானம்) அல்லது தண்ணீரைக் குடித்தார். அதிகமாக “ப்ருஸ்ட்” குடிக்கும் நேரங்களில் கண்கள் சொருக உடல் நடுங்க ஆரம்பிக்கும்.

ஜலாலுதின் (அக்பர்) வெளிநாட்டவரையும், முன்பின் அறியாதவரையும் தனது நாட்டுக் குடிமகன்களையும்,  அரசவையைச் சார்ந்தோரையும் நடத்துவது போலல்லாமல் வேறு விதமான வரவேற்பினை நல்குவார். பொதுவாக வெளிநாட்டவர்களிடம் மிகவும் கண்ணியத்துடன் நடந்து கொள்ளும் அக்பர், அரேபியாவின் சனாவிலிருந்து (யேமன்) வந்த துருக்கிய கவர்னரை மிகக் கேவலமாக நடத்தினார். அந்தத் துருக்கிய கவர்னரின் முக்கிய தூதரின் கைகளில் விலங்குகள் மாட்டப்பட்டு அவரை லாகூர் சிறையில் அடைத்தார். அந்தத் தூதுவரின் வேலைக்காரர்கள் மிகுந்த சிரமத்துடன் ரகசியமாக அங்கிருந்து தப்பினர். அக்பரின் அரசவையினரை மிகக் கடுமையாக நடத்திய அக்பர் அவர்களை மிகவும் கீழ்த்தரமானவர்களாகவே எண்ணினார். அவர்கள் செய்யும் சிறிய குற்றங்களுக்கும் கடுமையான தண்டனை வழங்கப்பட்டது. தன்னுடைய சொந்த அமைச்சர்களுக்கே இதுபோன்ற தண்டனைகளை வழங்கிய ஜலாலுதின் தனது குடிமக்களை அதற்கும் அதிகமான கீழ்த்தரமாகவே நடத்தியிருப்பார் என்பதில் சந்தேகமில்லை.

ஜலாலுதினால் (அக்பரால்) ஒரு எழுத்தைக்கூட எழுதவோ அல்லது படிக்கவோ இயலாது!

ஜலாலுதினிடம் ஏறக்குறைய 20 ஹிந்து நிர்வாகிகள் அமைச்சர்களாகவும், அரசப் பிரதிநிதிகளாகவும் பணியாற்றி வந்தனர். அவர்கள் முழுமையாக அக்பருக்கு அடிபணிந்து அவரது கட்டளைகளை சிரமேற்கொண்டு நிறைவேற்றினார்கள். அவர்கள் எப்போது அக்பரைச் சூழ்ந்தே இருந்தார்கள். அரண்மனையின் அத்தனை இடங்களுக்கும் செல்ல அவர்களுக்கு அனுமதி இருந்தது. அந்த அனுமதி அக்பரின் சொந்த மங்கோலியர்களுக்குக் கூட அளிக்கப்படவில்லை.

இந்த இடத்தில் அக்பர் ஹிந்துக்களை தனது அரண்மனைக்குள் நுழைய விட்டதனைக் குறித்து தவறாகப் புரிந்து கொள்ள இடமிருக்கிறது. அக்பர் ஹிந்துக்களை தனக்கு அருகே வைத்துக் கொண்டது அவரது பாதுகாப்பிற்கேயன்றி வேறெதற்குமில்லை. அவரது மங்கோலிய உறவினர்களைப் போல அல்லது அரசவை முஸ்லிம்களைப் போல ஹிந்துக்கள் தன்னைக் கொலை செய்ய முயலமாட்டார்கள் என்கிற நம்பிக்கை அக்பருக்கு இருந்தது. ஹிந்துக்களுக்குத் தான் எத்தனை துன்பம் விளைவித்தாலும் கடவுளுக்கு அஞ்சி அவர்கள் தனக்குக் கட்டுப்பட்டு நடப்பவர்கள் என்கிற எண்ணமும், அவர்களின் மரியாதையான நடத்தையும், முட்டாள்தனமும் தனக்கு லாபமாக இருப்பதனை உணர்ந்தவர் அக்பர்.

ஹிந்துக்களின் இடங்களைத் தாக்கிக் கொள்ளையடிக்கும் நேரத்தைத் தவிர அக்பர் ஒருபோதும் அவரது சொந்த முஸ்லிம்களை நம்பியதில்லை. சக முஸ்லிம்களை தன்னுடைய பொக்கிஷ அறைக்கோ அல்லது அவரது அந்தப்புரத்திற்கோ நுழைய அவர் அனுமதித்ததேயில்லை என்பதே உண்மை.

வரலாற்றாசிரியர் டாக்டர் ஸ்ரீவத்சவ், “ஒரு சோம்பேறிக் குழந்தையாக வளர்ந்த அக்பர் ஒருபோதும் படிப்பதற்கோ அல்லது எழுதுவதற்கோ அமரவில்லை. எனவே அவர் தனது வாழ்நாள் முழுவதும் படிப்பறிவற்றவராகவே இருந்தார். தன்னைப் போலக் கல்வியறிவு இல்லாத ஒருவரும் அதனைக் குறித்து அவமானப்படத் தேவையில்லை என்பதே அக்பரின் எண்ணமாக இருந்தது. நம்முடைய தீர்க்கதரிசிகள் (நபி) படிப்பறிவு இல்லாதவர்கள். எனவே நம்பிக்கையாளர்கள் அவர்களது குழந்தைகளையும் கல்வியறிவற்றவர்களாகவே வயவளர்க்க வேண்டும் என மனம் திறந்து சொன்ன ஒரே பேரரசர் அக்பராகத்தான் இருக்க முடியும்”.

அக்பரின் இந்தக் கூற்றே அவரது கல்வியற்ற மூட மனோபாவத்தை விளக்கிச் சொல்லும்.

அக்பர் மூடத்தனமும், மூட நம்பிக்கைகளும் கலந்ததொரு கலவையான மனிதன். அக்பர் ஒரு சிறந்த நிர்வாகியென்றும், அவரது எதிரிகளிடம் மிகுந்த கண்ணியத்துடனும், மரியாதையுடனும் நடந்து கொண்டார் என்று சொல்வதனைப் போன்ற பொய் வேறொன்றுமில்லை. தன்னிடம் வந்து தனக்கு மரியாதை செலுத்தாத ஹிந்து அரசர்களை அக்பர் ஒருபோதும் மன்னித்ததில்லை.

“அக்பர் ஒருபோதும் தனது மனத்தில் ஓடும் எண்ணங்களை வெளியில் சொல்லிக் கொண்டதில்லை. வெறும் சுய நல எண்ணம் மட்டுமே நோக்கமாக தனக்குப் பிடிக்காத ஒருவரை ஒருவர் மோதவிட்டு அதில் குளிர்காயும் மனிதராகவே வாழ்நாள் முழுக்க இருந்தார். அவர் வாயிலிருந்து வரும் வார்த்தைகளில் ஒரு போதும் உண்மை வெளிவந்ததில்லை. வார்த்தைகளைத் திரித்தும் மறுத்தும் கூறுவதை ஒரு வழக்கமாகவே கொண்டிருந்தார். இன்றைக்கு அக்பரை ஒரு விதமாகப் பார்க்கும் மனிதன் நாளை முற்றிலும் வேறொரு மனிதனைச் சந்திப்பான். அவரை முதலில் சந்தித்த நாளிலிருந்து இறுதி நாட்கள் வரைக்கும் அவரது உண்மையான ரூபத்தை நான் காணவே இல்லை” என்கிறார் அவரைச் சந்தித்த பாதிரியான பர்த்தோலி.

கதைகளால் மூளை மழுங்கடிக்கப்பட்ட இந்தியர்களில் ஒரு சிலருக்கேனும் இது ஒரு புதிய திறப்பினை அழிக்கும் என நம்புகிறேன்.

(தொடரும்)

2 Replies to “அக்பர் என்னும் கயவன் – 9”

  1. அக்பரின் குணநலன் மற்றும் இயல்கபுளை விளக்கும்போது அவரது உடல் குறைபாடுகளை விளக்கமாகக் கூறுவது தேவைதானா?

  2. எனக்கு ஒரு சந்தேகம். பி.என். ஓக் எழுதிய இந்தப் புத்தகத்தை நான் பல வருஷங்களுக்கு முன் புரட்டிப் பார்த்திருக்கிறேன். (முதல் நாலைந்து அத்தியாயங்களைப் படித்தவுடன் இவரது ஆராய்ச்சியின் தரம் எப்படி இருக்கும் என்று புரிந்துவிட்டது, அதனால் முடிக்கவில்லை). பி.என். ஓக் ஒரு மடையன் என்று நான் ஒரு கட்டுரை எழுதினால் – அந்தக் கட்டுரையின் தலைப்பு அட ஓக்கை விட்டுவிடுங்கள், ஈ.வெ.ரா. ஒரு அயோக்கியன் என்ற தலைப்பு தமிழ்ஹிந்துவின் தரத்திற்கு சரிப்படுமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *