‘சும்மா இருத்தல்’ என்பது நடைமுறை வாழ்வில் சாதாரணமாக பல்வேறு பொருள் கொண்ட சொல்லாக பயன்படுத்தப்பட்டு வருவதை அவதானிக்கலாம்.
‘சும்மா வந்தேன்!
சும்மா இரு!
சும்மா இருக்கிறன்
சும்மா சொன்னனான்!
சும்மா கொடுத்தவனோ?
சும்மா கொடுப்பனோ?
சும்மா செய்வனோ?
சும்மா போகலாம்
சும்மா இருப்பான்
சும்மா வருவான்’
இப்படி, கற்றோரும் கல்லாதோரும் எதற்கெடுத்தாலும் எதைச்சொல்லவிரும்பினாலும் ‘சும்மா’வை மட்டும் மறக்காமல் சொல்லி விடுகிறார்கள். தமிழ் மொழிக்களஞ்சியத்தில் நிறைந்திருக்கிற ஆயிரக்கணக்கான சொற்களுள்
அடிக்கடி பயன்படும் ஒரு சொல்லாக ‘சும்மா’ என்பது விளங்குகிறது.
இச்சொல்லின் பொருளினை தெரிந்தோ, தெரியாமலோ எல்லோரும் பயன்படுத்திவருகின்றனர்.
இச்சொல்லின் அதிசயம் என்ன எனில், இச்சொல் தமிழில் மட்டுமன்றி மலையாளம் முதலிய மொழிகளிலும் பெரிய வேறுபாடின்றி பயன்படுத்தப்பட்டு வருகிறது. சேரநாட்டு மொழியான மலையாளத்தில் ‘சும்மா’, ‘சும்மக’ என்றும் கன்னடத்தில் ‘சும்மென’ என்றும் கோலாமி என்ற மொழியில் ‘சுர்மி’ என்றும் நாய்க்கி என்ற இந்திய மொழியில் ‘சுரும், சுருமக’ என்றும் பயின்று வருதல் ஆய்வாளர்களால்;
அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
சென்னைப்பல்கலைக்கழக கழகத் தமிழ்ப்பேரகர முதலி ‘சுகமாக’ என்ற வடசொல்லின் இடைகுறையாகவே ‘சும்மா’ என்ற தமிழ்ச்சொல் உருவானதாக குறிப்பிடுகிறது. ஆயினும் இதனை எல்லோரும் ஏற்றுக் கொள்வதாக தெரியவில்லை.
சும் என்ற அடிச்சொல்லில் உருவானதே சும்மா என்ற சொல். பழந்தமிழில் ‘சும்மை’ என்ற சொல் ஓசை என்ற பொருளை உணர்த்துவதாக உள்ளது. இந்த சும்மைக்கும் ‘சும்’ என்பதே அடிச்சொல்லாகும்.
ஆகவே சும் என்ற ஒலிக்குறிப்புச்சொற்பகுதியோடு ஆ என்ற எதிர்மறை விகுதி சேர்ந்து மகரம் இரட்டித்து சும்மா என்ற சொல் வடிவம் பெற்றிருக்கலாம்.
ஆரவாரமற்று ஒலியற்று பேச்சற்று அமைதியாய் சுகமாக ஆனந்தமாக இருத்தல் என்ற பொருளை இது கருதக்கூடும். ஆயினும் இச்சொல்லுக்கு வழக்கில் பல பொருள்கள் உண்டு.
வேலை வெட்டி இல்லாமல் இருத்தல், அமைதியாய் இருத்தல், பயனில்லாமல் இருத்தல், அக்கறையில்லாமல் இருத்தல், அடிக்கடி என்று பல பொருள்களில் இது வழங்கிவருகிறது.
காளமேகப்புலவரின் பாடல்கள் பலவற்றிலும் ‘சும்மா’ என்பதும் ‘ஒன்றும்செய்யாமல் இருத்தல்’ என்ற பொருளில் காட்டப்பட்டுள்ளது. இவரது காலம் 15ஆம் நூற்றாண்டு என்பது அறிஞர் கொள்கை.
‘இம் என்னு முன்னே எழுநூறும் எண்ணூறும்
அம் என்றால் ஆயிரம் பாட்டு ஆகாதோ? – சும்மா
இருந்தால் இருந்தேன்: எழுந்தேனே ஆயின்
பெருங்காள மேகம் பி(ள்)ளாய்’
(தனிப்பாடல்- 124)
‘பெருமாளும் நல்ல பெருமாள்: அவர்தம்
திருநாளும் நல்ல திருநாள்:- பெருமாள்
இருந்த இடத்தே சும்மா இராமையினால் ஐயோ!
பருந்தெடுத்துப் போகிறதைப் பார்!’
(தனிப்பாடல் -155)
என்ற பாடல்கள் இவற்றுக்கு உதாரணமாகும்.
ஆக, இவ்வாறு இலக்கியங்களிலும் மொழிவழக்காறுகளிலும் பல்வேறு பொருள்கொண்டு பேசப்படும் ‘சும்மா’ என்ற சொல் அருணகிரிநாதரின் திருவாக்குகளில் பல பொருள்கொண்டு அணுகப்படுகிறது. தத்துவ நிலைகளின் உச்சமாக யோகநெறியின் வெளிப்பாடாக அருணகிரியார் பேசும் ‘சும்மா இருத்தல்’ பொருள் கொள்ளப்படும்.
முப்பத்தாறு தத்துவங்களும் ‘தற்போதமும்’ நீங்கி தனக்கெனச் செயலின்றி அருளே தாரகமாய் அவ்வருளேயாய் நிற்கும் துரிதநிலையே அருணகிரிநாதர் பேசும் ‘சும்மா இருக்கும்’ உயர்நிலை ஆகும்.
‘சொல்லுகைக்கில்லை என்று எல்லாம் இழந்து
சும்மாவிருக்கும் எல்லையுள் செல்ல என்னை விட்டவா’
(கந்தரனுபூதி – 10)
‘சும்மா இரு சொல்லற என்றலுமே
அம்மா பொருள் ஒன்றுமறிந்திலனே..’
(கந்தரனுபூதி – 12)
என்று கந்தரனுபூதிப் பாடல்களில் அருணகிரிநாதர் சும்மா இருக்கும் திறம்பற்றிப் பேசுவதை அவதானிக்கலாம்.
இளமையில் விதிவழி ஓடும் வாழ்வின் சுழற்சிக்குள் அகப்பட்ட அருணகிரிநாதர் என்செய்வதென்று உணராமல் தயங்கி மயங்கித் தன் வாழ்வைத் துறக்க முனைந்து செயற்பட்ட வேளையில் முருகவேள் அவர்முன் தோன்றி அருள் செய்து காத்தான் என்பதும், அதன்பின் குகத்தியானத்தில் அருணகிரி ஈடுபட்டு வாழ்ந்தார் என்றும் வரலாறுகள் பேசும். இவ்வாறு சந்தக்கவியாக உருவெடுத்த அருணகிரியார் முருகனோடு நேரே பேசும் அனுபவம் மிகுந்தவராகவும் எப்போதும் அவனைக் காணும் பேறுபெற்றவராகவும் விளங்கினார் என்றும் நம்பப்படுகிறது.
இத்தகு அனுபூதிமானாக மிளிர்ந்த ஆச்சார்யபுருஷரான அருணகிரியாருக்கு முருகவேள் பன்முறை உபதேசங்களை அருளியதாக திருப்புகழ், கந்தரனுபூதி முதலிய அருணகிரிநாதர் பாடிய பிரபந்தங்கள் மூலம் அறிய முடிகிறது. இந்த உபதேசங்களில் முதன்மையானதாக ‘சும்மா இரு சொல்லற’ என்பது அவரால் இனங்காட்டப்படுவதும் அவதானிக்கத்தக்கது.
கந்தரனுபூதியில் ‘சும்மா இரு’ என்று பேசும் அருணகிரியார் வேறு இடங்களிலும் அதே பொருளில் பேசுவதை அவதானிக்கலாம். கந்தரலங்காரத்தில்,
‘சொல்லுகைக்கு இல்லை என்று எல்லாம் இழந்து சும்மா இருக்கும்
எல்லைக்குள் செல்ல என்னை விட்டவா! இகல் வேலன் நல்ல
கொல்லியைச் சேர்க்கின்ற கொல்லியைக் கல்வரை கொவ்வைச் செவ்வாய்
வல்லியைப் புல்கின்ற மால்வரைத் தோள் அண்ணல் வல்லபமே!’
என்றும் பாடுகிறார்.
ஆக, சும்மா இருத்தல் என்பது மஹாவாக்கியமாக அருளாளர்களால் உபதேசிக்கப்பட்டு வருவதையும் கடைப்பிடிப்பதற்கு கடினத்தன்மை உடையதாயினும் மிகப்பெரும் சீர்மையை தரவல்ல ஒன்று என்பதும் சிந்திக்கத்தக்கதாகும்.
“சும்மா இருக்க வைத்தான் சூத்திரத்தை நானறியேன்;
அம்மா பொருளிதென அடைய விழுங்கினனடி”
என்பது அருணகிரியாரின் பின் தொடரும் பட்டினத்தாரின் கூற்று.
தாயுமான சுவாமிகளும் “சும்மா இருக்கும் சுகம் ஒன்றறியேன் பராபரமே” என்று குறிப்பிடுகிறார். சும்மா இருந்தால் என்னவெல்லாம் கிடைக்கும் என்ற கேள்விக்கு ஒரு பாடலில் மிக நீண்ட பதிலை அவர் அளிக்கிறார்.
கந்துக மதக்கரியை வசமா நடத்தலாம்,
கரடி வெம்புலி வாயையும்
கட்டலாம், ஒரு சிங்க முதுகின் மேற்கொள்ளலாம்,
கட்செவி எடுத்தாடலாம்,
வெந்தழலின் இரதம் வைத்தைந்துலோகத்தையும்
வேதித்து விற்றுண்ணலாம்,
வேறொருவர் காணாமல் உலகத்துலாவலாம்,
விண்ணவரையேவல் கொளலாம்,
சந்ததமும் இளமையோடு இருக்கலாம், மற்றொரு
சரீரத்திடமும் புகுதலாம்,
சலமேல் நடக்கலாம், கனல்மேல் இருக்கலாம்,
தன்னிகரில் சித்தி பெறலாம்,
சிந்தையை அடக்கியே சும்மா இருக்கிற
திறமது சத்தாகியென்
சித்தமிசை குடி கொண்ட அறிவான தெய்வமே
தேசோமயானந்தமே!
கீதாசாரியனான கண்ணன், ‘கடமையைச் செய். பலனை எதிர்பாராதே’ என்று அறிவுறுத்துவதும் சும்மா இருக்கும் பொருளிலேயே ஆகும். கீதையிலே கண்ணன் சம்ஸ்கிருதத்தில் சொன்னதை முருகன் அருணகிரிக்கு எளிவந்த தமிழில்
உபதேசித்திருப்பதாக கருத முடியும்.
‘யோகஸ்த: குரு கர்மாணி ஸங்கம் த்யக்த்வா தனஞ்ஜய
ஸித்த்யஸித்த்யோ: ஸமோ பூத்வா ஸமத்வம் யோக உச்யதே’
‘அர்ச்சுனா, நீ யோகத்தில் நிலை பெற்றவனாக நின்று உன் கடமையைச் செய். எதிலும் பற்று வைக்காதே, வெற்றியோ, தோல்வியோ அதை உன் கவனத்தில் கொள்ளவேண்டாம். மன ஒருமைப்பாட்டுடன் ஒரு கடமையைச் செய்தால் பலன் நிச்சயம்’
என்று உரைக்கிறான் கண்ணன்.
இலங்கையில் யாழ்ப்பாணத்தில்- அறுபது ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த சிவாத்வைத யோக புருஷரான யோகர் சுவாமியின் சீடரான வெள்ளைக்கார சுவாமியார் ஒருவர் தமது கையில் தமிழில் ‘சும்மா இரு’ என்று பச்சை குத்தி வைத்திருந்தாராம்.
சிவயோக மாமுனிவரும் தம்மை நாடுகிறவர்களில் அநேகமானவர்களுக்கும் ‘சும்மா இரு’ என்றே உபதேசிப்பது வழக்கம். பல்வேறு சந்தேகங்களோடும் பிரச்சினைகளோடும் யோகசுவாமிகளை அணுகிறவர்கள் தத்தம் மனோ நிலைக்கு ஏற்ப அதை எடுத்துக்கொண்டு ஆறுதல் பெற்றுச் செல்வார்கள். இதை விட யோகர் தமது நற்சிந்தனைப்பாடல் ஒன்றில் ‘எண்ணங்கள் யாவும் இறந்திடவேண்டும் என் குருபரபுங்கவ சிங்கனே’ என்று பாடுவதும் சும்மா இருத்தலின் குறிப்பே என்பர்.
‘உகந்து மனங்குவிந்து ஒன்றுக்கும் அஞ்சாது
அகந்தை அவா வெகுளி அகற்றி- சகந்தனிலே
தாமரையிலை தண்ணீர் போல் சாராமல் சார்ந்து நற்
சேமமொடு வாழ்வாய் தெளிந்து.’
என்ற யோகரின் பாடலும் இதையே உணர்த்தி நிற்கிறது.
சும்மா இருத்தல் என்பது உலகியல் நோக்கில் புரிந்துகொள்ளப்படுமாயின் சும்மா வேலை செய்யாமல் இருப்பவரின் மனம் எங்கெங்கோ சுற்றிச் சுழலுவதைக்
காணலாம். அதனால் தான் வேலை செய்யாமலும், பேசாமலும் இருக்கும் உலகியற் சும்மா இருத்தலை குறிப்பிடவில்லை. யோகநிலைச் சும்மா இருத்தலையே குறிப்பிடுகின்றேன் என்பதை வெளிப்படுத்தும் விதமாக அருணகிரியார் ‘சும்மா இரு, சொல் அற,’ என்று குறிப்பிடுகின்றார்.
‘சொல் அற’ என்பது மனதில் எண்ண ஓட்டம் இல்லாமல் இருத்தல் என்ற பொருளில் குறிப்பிடப்பட்டுள்ளதை அவதானிக்கலாம். சொல் இல்லை எனில் எண்ணம் இல்லை.
ஆக, மனதில் எண்ணமே இல்லாமல் இருக்கும் நிலை எவ்வளவு கடினமானது. இதனாலேயே தாயுமானவர்,
‘ஐயா அருணகிரி அப்பா உனைப்போல்
பொய்யாக ஒருசொல் விளம்பினர் யார்?’
என்று வியப்போடு நிந்தாஸ்துதி மரபில் பேசுவதை காணலாம்.
ஆக, முருக வழிபாட்டாளர்களுக்கு முன்னோடியாக விளங்குகிற சிறப்புக்குரிய அருணைமுனிவர்- அருணகிரிநாதர் சுவாமிகள் தம் பாடல்களில் உபதேச மொழியாகக் குறிப்பிடும் ‘சும்மா இரு சொல்லற’ என்ற ஆச்சர்யமான- பல பொருள் கொள்ளத்தக்க- தத்துவ அடிப்படையில் ஆராயப்பட வேண்டிய சொல் குறித்து மேன்மேலும் அவரவர் தத்தம் அறிவு, அனுபவங்களுக்கு ஏற்ப ஆராயலாம். உபநிடத மகாவாக்கியங்களாயினும் சித்தர்களின் மொழியாயினும் எவ்வளவு ஆராயினும் அவரவர் னுபவங்களின் வெளிப்பாடாக மட்டுமே அதன் உண்மைத்தன்மையை முழுமையாகப் புரிந்துகொள்ள இயலும் என்றே நம்புகிறேன்.
ஞானதவ சீலராக விளங்கிய முருகனருள் முழுமையாகப்பெற்ற முனிவர் அருணகிரிநாதப்பெருமானின் திருவடி சம்பந்தமானது எங்களுக்கும் முருகனருளைக் கூட்டி அனுக்கிரகிக்க பிரார்த்திப்போம். அருணை முனிவரின் பரிந்துரைகளின் வழியேயும் அவரது குருவருளின் வழியேயும் நம் மீது (அவர் பாடும் யாழ்ப்பாணாயன் பட்டின மருவிய பெருமாள் ஆகிய) வள்ளி மணவாளன் நல்லூரானின் திருவருள் நன்கு பொழியட்டும்.
***
இது போன்ற கருத்துக்கள் சிறப்பானவைதாம்.உண்மையானவை.ஆனால் மனிதனை மறந்த பண்புக்கு இதுதான் காரணம்.மனதை செம்மையாக்க முயன்ற நாம் சகமனிதனுக்கும் பயிற்சி அளித்து அவனை செம்மைப்படுத்த முயன்றிருந்தால் செம்மையான மனம் படைத்தவா்கள் எண்ணிக்கை இந்து சமூகத்தில் அதிகாித்திருக்கும். இந்து சமயமும் இப்படி தனது ஆதரவாளா்களை இழந்து அவா்களுக்கு ஏற்படும் துயரங்களுக்கு தீா்வு காண இயலாது தவித்திருக்காது.மனிதனை மறந்து வாழ்பவன் இறைவன் இல்லை.ஒரு விதவையின் துயரை தீா்க்காத சமயத்தில் எனக்கு நம்பிக்கையில்லை என்றாா் விவேகானநதா்.சும்மாயிரு சொல்லற என்பது விதிவிலக்கு.
When Hindus in Srilanka are undergoing all sorts of sufferings how could this writer ignore them and write
about ” summa iru” . Sir please look around you, feel for those poor oppressed landless people begging for a place to live and a piece of bread to appease their hunger, and write about the ways to bring relief to them. Knock the consciousness of the fellow Hindus living all over the world and bring relief.
People don’t need any philosophical articles NOW.
மறு மொழிகளை படித்தேன்.. நான் இன்னமும் யாழகத்தில் வசிக்கும் ஒருவன்.
இடப்பெயர்வையும் போரையும் நேருக்கு நேர் நின்று அனுபவித்தவன். ஆக,தங்கள் கருத்துக்கள் சரியானவை..
ஆனால், இப்போது எல்லா கட்டுரைகளிலும் அதனையே பேசு பொருளாக கொள்ள இயலாது.. இந்த கட்டுரையை வேறு விதமாக பாருங்கள்.
இடப்பெயர்வையும் இலங்கை தமிழர்களது வேதனைகளையும் பேசும் சில கட்டுரைகளை இத்தளத்திலே கூட நான் எழுதியுள்ளேன்.. வேறு சில கட்டுரைகளும் இத்தளத்தில் வெளியாகியுள்ளன..
நன்றிகள் பல….
மிக மிக ஆழ்ந்த பொருளை உள்ளடக்கிய அருமையான வ்யாசம்.
வள்ளல் அருணகிரிப்பெருமானின் அனுபூதியிலிருந்து துவங்குவதால் கொஞ்சம் எனக்கு பக்ஷபாதமும் கூட உண்டு. ஆனால் ஆரம்பமும் இடையிலே வள்ளல் பெருமானைப்பற்றியும் சொல்லியது ………… வள்ளல் பெருமானிடத்திலும்………..திருப்புகழமுதத்திலும் மூழ்கடித்து விட்டது. க்ஷமிக்கவும்.
\\ அருணகிரியார் முருகனோடு நேரே பேசும் அனுபவம் மிகுந்தவராகவும் எப்போதும் அவனைக் காணும் பேறுபெற்றவராகவும் விளங்கினார் என்றும் நம்பப்படுகிறது.\\
வள்ளல் அருணகிரிப்பெருமான் எழுதறியகாயத்ரி உமையாள் குமாரனுடன் பேசுவது ஒரு புறம். அடியார்க்கு நல்ல பெருமாள் வள்ளல் அருணகிரிப்பெருமானுடன் சம்வாதம் செய்வதில் ஆனந்தம் கொண்டுள்ளான் என்பது ****ஆதாரமின்றி**** நம்பவேண்டிய விஷயமல்ல. திருப்புகழமுதம் அகச்சான்றாக ………. மறவாமல் திருப்புகழோதும் அடியார்களுக்கு உணர்த்தும் செய்தி.
திருப்புகழமுதத் துளிகளில் பலதும் நன்றி நவிலல் திருப்புகழ்களாக கொளப்படுகிறது. அவற்றுள் ஹ்ருதயஸ்பர்சியான ஒரு திருப்புகழ் ஒன்று. என் மனதில் மிக மிக மிக ஆழப்பதிந்த திருப்புகழ்த்துளி ஒன்று :-
செய்ப்பதியும் வைத்துயர் திருப்புகழ் விருப்பமொடு
செப்பன எனக்கருள்கை மறவேனே
என செய்ப்பதித் (வயலூர்) திருப்புகழினில் வள்லல் அருணகிரிப்பெருமான் செப்புகிறார்.
செய்ப்பதியினை (வயலூரை) வைத்து ****உயர்** திருப்புகழமுதம் ***விருப்பமொடு*** செப்புக என்று அடியார்க்கு நல்ல பெருமாள் வள்ளல் அருணகிரிப்பெருமானுக்கு சொல்லியிருக்கிறான். அதை மறவேனே என்று வள்ளல் பெருமான் சொல்லுகிறார். மிக மிக உருக்கமான நெஞ்சைத்தொடும் திருப்புகழமுதத் துளி இது.
ஏன்? எப்படி?
பெருத்தபாருளீர் வாருமே நீங்கள் வாருமே வந்து மயிலையும் அவன் திருக்கையயிலையும் அவன் கடைக்கணியலையும் நினைந்திருக்க வாருமே என்று …………..
பெருத்த பாருளோரை வாருமே வாருமே என்று வருந்தி அழைத்து……………
சாக்ஷாத் பரப்ரம்ம வஸ்துவான எழுதறிய காயத்ரி உமையாள் குமாரனே தன் திருவாக்கினால் ****உயர் திருப்புகழ்**** என்று மங்களாசாசனம் செய்த திருப்புகழமுதத்தை…………..
அவருக்கு ****விருப்பமொடு செப்புக**** என்று சொன்னதாக மட்டுமின்றி………………
நாமனைவருமே *****விருப்பமொடு செப்ப வேண்டும்**** என்பதற்காக
உலகோர் அனைவரையும் வருந்தி அழைத்து வள்ளல் பெருமான் நமக்கு இதைச் செப்புகிறார் என்றே உணர்கிறேன்.
திருப்புகழுடன் சேர்ந்து விட்டால் வள்ளல் அருணகிரிப்பெருமானுடன் நாம் சேர்ந்து விடுவோம். வள்ளல் பெருமானுடன் நாம் சேர்ந்து விட்டால் அவர் நம்மை நிஸ்ஸம்சயமாக கந்தவேளின் இணையடிகளில் நம்மை சேர்த்து விடுவாரன்றோ?
ஆதலாலன்றோ அடியார்க்கு நல்ல பெருமாள் அடியார் அனைவருக்கும் சொல்ல வந்த செய்தியான ****உயர் திருப்புகழ் விருப்பமொடு செப்புக**** என்பதனை வள்ளல்பெருமானுக்கு சொல்லுவது போல பெருத்த பாருளோருக்கு ………….. அனைத்து அடியார்களுக்கும் சொல்லுகிறார் 🙂
ஆறுமுக நாவலர்அவர்கள் பைபிளைத் தமிழாக்கம் செய்தார் என்றும், வள்ளலார் அவர்களின் பாடலை மருட்பா என வாழக்காடினார் என்றும் அறிகிறோம்.அது பற்றிக் கூற முடியுமா?
அன்பிற்கினிய ஸ்ரீ அன்புராஜ் மற்றும் ஸ்ரீ ரிஷி ஐயா.
***சும்மா இரு சொல் அற*** என்பதன் பொருள் நாம் பொதுவாக சொலவடையில் ***சும்மா*** எனும் பொருளில் ப்ரயோகிக்கும் சொல் அன்று என்பதனையல்லவோ ஸ்ரீ மயூரகிரிசர்மா மஹாசயர் அவர்கள் அருளாளர்களது வாக்காக சொல்லப்பட்டுள்ளது என்று விளக்கியிருக்கிறார். வ்யாசத்தை ஒரு முறை ஆழ்ந்து வாசித்து பொருளை உள்வாங்கி கருத்து சொல்லுதல் சரியாக இருக்குமல்லவா?
பொதுப்புழக்கத்தில் இருக்கும் **சும்மா** என்ற சொல் ***வெட்டியாக இருத்தல்** என்று பொருள் படுகிறது. வ்யாசகர்த்தாவை விடுங்கள் …… அருளாளர்கள் …… நம் மீது அக்கறை உள்ள சான்றோர்கள் நம்மை எதற்காகவாவது வெட்டியாக இரு என்று விளையாட்டுக்காகவும் கூட சொல்லி விடுவார்களா?
வள்ளல் அருணகிரிப்பெருமானும் தாயுமான ஸ்வாமிகளும் ***சும்மா இரு*** என்று சொல்லுவதின் தாத்பர்யம் மிக உயர்ந்த வேதாந்தக் கருத்து. வேதாந்தத்தில் ஆழ்ந்து நம்மை நாம் உணர்தல் என்று உணர்வினைப் பெற்றவர்கள் அடையும் கடைநிலையல்லவா இது.
முதலில் வேதாந்த விசாரம் செய்வதற்கான தகுதியினைப் பெற்று அதன் பின் வேதாந்த விசாரம் செய்து…… அதன் மூலம் ……. கடைநிலையாக தன்னில் ஒன்றி இருப்பதை………… திருப்புகழமுதத்துளிகளினின்று துவங்கி தாயுமான ஸ்வாமிகளது வ்யாக்யானாதிகள் வரை பொலிவான தமிழ்ப்பனுவல்களால் விளக்கும் வ்யாசம் இது.
வ்யாசகர்த்தா சொல்லவராத ஒரு பொருளை அவர்மீது ஆரோபித்து அதனைக் குற்றம் என்றும் சொல்லுவது சரியா 🙂
காஷ்மீரத்தில் இன்றளவும் அங்குள்ள அனைத்து இடர்ப்பாடுகளையும் மீறி எதிர்நீச்சல் போட்டு வாழும் காஷ்மீர ஸர்தார்கள் மற்றும் பண்டிதர்களான ஹிந்துக்களையும் நேரில் கண்டபடிக்கு……… சர்மா அவர்கள் யாழகத்தை விட்டகலாது இன்றும் அங்கு தமிழ் மொழிக்கும் சைவத்துக்கும் தொண்டாற்றுவதை புரிந்து கொள்ள முடிகிறது. இது எவ்வளவு கடினமான கார்யம் என்று.
ஈழத்தில் ………… அதுவும் யாழகத்தில்…….. அத்தனை இடர்ப்பாடுகளினூடே அவற்றை எதிர்கொண்டு வாழ மட்டும் செய்திடாது……….. மரபினை முறையாகக் கற்று……..அதன்படி ஒழுகி……… அதுமட்டுமின்றி அதை அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்க்கும் மாண்பினையே ஸ்ரீ சர்மா அவர்களது வ்யாசத்தில் காணுகிறேன். எதிர்நீச்சல் போடுபவர்களுக்கு மட்டிலுமே தெரியும் அது எவ்வளவு கடினம்.
ஸ்ரீ சர்மா அவர்களது வ்யாசம் சொல்லும் கடைநிலையாம் **சும்மா இரு சொல்லற** என்பது…………..
விவேகானந்தர் சொன்ன விழுமின் எழுமின் என்ற உபநிஷத வாக்யப்பொருளின் படி செயற்பட்டு லக்ஷியப்பயணம் செய்பவர்களால் மட்டிலுமே………………
அனந்த கோடி மக்களில் ஒரு சிலரால் மட்டுமே எட்டத்தக்க ஒரு உயர்நிலை என்பதை மட்டிலும் நாம் புரிந்து கொள்வது நன்று.
வெற்றிவேல்.
சும்மா இரு சொல்லற என்றலுமே
அம்மா பொருள் ஒன்றுமறிந்திலனே//
சும்மாதிருத்தல் – மூச்சடக்கி இருத்தல்
முருகப்பெருமான் அருணகிரியாரை யோகநிட்டையிலாழ்த்தியது அறிந்ததே.
பெம்மான் பெருநந்தி பேச்சற்ற பேரின்பத்(து)
அம்மான் அடிதந்(து) அருட்கடல் ஆடினோம்
எம்மாய மும்விடுத்(து) எம்மைக் கரந்திட்டுச்
சோதனை ஆகுமே.
Migha migha arpudhamaagha, eliya Tamizh nadaiyil Swamigal Aiya villakkam alithullar . Vazhgha !Vazhgha !! Aiyaa Avargalin Tamizh Mozhi Sevaai.
Mikka Nanri. Vanakkam Vanakkam.