யாழ்ப்பாணத்துச் சைவசித்தாந்த சபாபதி நாவலர் — 1

 

சைவ சித்தாந்தத்தை வாழ்வியலாக கொண்டவர்:

சபாபதி நாவலர் என்ற பெருமகனார் இலங்கையில் யாழ்ப்பாணத்தின் கோப்பாய் (கோவை) என்ற ஊரில் பொஆ 1844-1848 காலப்பகுதியில் சுயம்புநாதபிள்ளைக்கும் தெய்வானை அம்மையாருக்கும் மகனாகப் பிறந்தவர்.

கோப்பாயில் வாழ்ந்த அந்தணரான ஜெகந்நாத ஐயரிடமும், குமாரசூரியரிடமும், பின்னர் நீர்வேலி ஸ்ரீலஸ்ரீ சிவசங்கரபண்டிதரிடமும் கல்விகற்ற இவர் தமிழ், சம்ஸ்கிருதம், ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் புலமைபெற்றவராக விளங்கினார்.

எனினும், தமது இளமைக்காலத்திலேயே ஆங்கிலத்தையும், மேற்படிப்பையும் சைவசித்தாந்தத்திற்கு எதிரான கொள்கையுடையவர்களின் பாடசாலைக்குச் சென்று கற்கக்கூடாது எனும் வைராக்கியம் உடையவராக விளங்கி, பிறருக்கும் ஒரு எடுத்துக்காட்டாக விளங்கினார் என்று ‘சபாபதி நாவலர் சரித்திரச்சுருக்கம்’ எழுதிய திருமயிலை சே.சோமசுந்தரம்பிள்ளை அவர்கள் குறிப்பிடுகிறார்.1

விதிவசத்தால் இவர் தமக்கு உண்டான குன்மநோயினின்று விடுதலைவேண்டி சித்தாந்த முறைக்கு இணங்க ஆறுமுகச்சிவமாகிய நல்லூர் கந்தவேட்பெருமானையே சரணமடைந்து நோய்நீக்கம் பெற்றமையும் சித்தாந்தம் குறிப்பிடும் சற்குருவின் வழி ஒழுகும் மரபுக்கு இணங்க திருவாவடுதுறை சென்று ஆதீன குருமஹாசந்நிதானமாக இருந்த சுப்பிரமணிய தேசிக சுவாமிகளிடம் சைவசித்தாந்த ஆகமங்கள்கூறும் தீட்சைகளை முறையாகப் பெற்று, பன்னிரண்டு ஆண்டுகள் ஞானநூல்களை மரபால் கற்று வல்லவரானமையும், சைவசித்தாந்தத்தில் அவருக்கு இளமையிலேயே ஏற்பட்ட மாறாத காதலையே காட்டுகின்றது.

குருவைச் சிவமாக்க கொள்ளவேண்டும் என்று சித்தாந்தம் குறிப்பிடுவதைத் தம் வாழ்வில் மிக உறுதியாகக் கடைப்பிடித்துவந்தமையை இவர் தமது நூலான திருவிடைமருதூர் பதிற்றுப்பத்தந்தாதியில் பாடிய குருவணக்கம்மூலமும் அறியமுடிகின்றது.

தம் வாழ்வு முழுமையும் சைவ அனுட்டானம், ஆன்மார்த்த சிவபூசை என்பவற்றைப் பேணியவராகவும், ஆராய்ச்சிக்காகவும் பிறருக்கு உபதேசிப்பதற்காகவும் மட்டுமன்றி, சைவசித்தாந்த சாத்திரங்களையும், தேவாரம் முதலிய தோத்திரங்களையும் தம் ஆன்ம ஈடேற்றம் கருதிப் போற்றிவாழ்பவராயும், திருத்தல யாத்திரைகள், கோவில்தொண்டுகள் செய்பவராயுமே சபாபதி நாவலர் வாழ்ந்ததாக அவரது வரலாற்றுக்குறிப்புகள் குறிப்பிடுகின்றன.

சொற்பொழிவுகள் மூலமான சைவசித்தாந்தப்பணி:

அவையோர் வியக்கும் உரைவன்மையாலும், அந்த உரையிடையே பிரவாகிக்கும் சைவசித்தாந்தக்கருத்துகளாலும், கிறிஸ்துவர்கள், நாத்தீகர்கள் போன்ற பிறதத்துவ நம்பிக்கையாளர்களும் மதத்தவர்களும் நாவடங்கி ஓடச்செய்யும் சொற்போர் வெற்றியும் மிக்கவராக சபாபதிநாவலர் விளங்கினார்.

அதனாலேயே இவருக்கு “நாவலர்” என்ற பட்டத்தைச் சுப்பிரமணிய யோகீந்திரர் வழங்கிக் கௌரவித்திருக்கிறார். நாவன்மை பொருந்தியவர்களாகவும், சைவசித்தாந்தச் சொற்பொழிவுகளை ஆற்றுவதில் தலைசிறந்தவர்களாகவும் விளங்குபவர்களுக்கே திருவாவடுதுறை ஆதீனம் “நாவலர்” என்ற அதியுயர் விருதினை வழங்கி கௌரவித்தது என்பதை நாம் அறியலாம்.

பிரசங்க வன்மை மிக்கவரான சபாபதி நாவலரவர்கள் திருவுத்தரகோசமங்கையில் நடராஜப்பெருமானின் திருச்சந்நதி முன்பதாக, இராமநாதபுரம் சேதுபதி மகாராசா முன்னிலையில், வேதநெறி தழைத்தோங்க” என்ற பெரிய புராணச் செய்யுளின் முதற்கூற்றை மூலமாகக்கொண்டு 1891ஆம் ஆண்டு ஆனிமாதம் 22ஆம் நாள் சனிக்கிழமையிலும், பின் மகாராசாவுடனேயே தூத்துக்குடிக்குச் சென்று அருந்துணையை..” என்று தொடங்கும் தேவாரத்தைப் பொருளாகக்கொண்டு 1891, ஆனி 30ஆம் நாள், ஞாயிற்றுக்கிழமையும், திருச்செந்தூரில் 1891, ஆடி மாதம் 4ஆம் நாள், சனிக்கிழமையன்று “மிகு சைவத்துறை விளங்க” எனும் பொருளில் சுமார் மூன்றரை மணிநேரமும், திருக்குற்றாலத்தில் 1891,ஆவணி மாதம் 3ஆம் நாள் செவ்வாய்க்கிழமை, கண்ணப்ப னொப்பதோ ரன்பின்மை கண்டபின்” என்ற திருவாசக அடியை முன்வைத்தும் சைவசித்தாந்த உரைகளையாற்றினார்.

Related imageஇவற்றைக் கேட்டு மிக மகிழ்வுற்ற இராமநாதபுரம் மன்னர் நாவலர் அவர்களை தமது  நகரத்திற்கு அழைத்துச் சென்று, ஒரு மாதம் தம் சமஸ்தானத்தில் கௌரவங்களை அளித்துப் பின், 1891, புரட்டாதி 4ஆம் நாள் சனிக்கிழமையன்று அக்காலத்தில் மிகப்பெறுமதியை கொண்ட, ரூபா மூவாயிரத்தை சம்மானமாக கொடுத்து, வேண்டும்போது இன்னும் உதவுவோம் என்ற வாக்குறுதியும் கொடுத்;ததாக சபாபதி நாவலர் சரிதம் எழுதிய திருமயிலை சே.சோமசுந்தரம்பிள்ளை குறிப்பிடுகிறார்கள். 2

அதே போல, பிலவ, சுபகிருது வருடங்களில் மயிலாப்பூரில் தங்கியிருந்த சபாபதி நாவலர் கற்பகாம்பாள் உடனாய கபாலீசுரப்பெருமான் திருக்கோயில் மண்டபத்திலும் அங்குள்ள திருவள்ளுவநாயனார் திருக்கோயிலிலும் அடிக்கடி சைவசித்தாந்த உரையாற்றிவந்ததாகவும், அவற்றில், கபாலீசுரப்பெருமானின் பங்குனிப்பெருவிழாவில் அவர் ஆற்றிய “கற்றுக்கொளவாயுள நாவுள” என்ற தேவாரப்பொருளின் விரிவாய் அமைந்த சித்தாந்த உரையும், திருக்குறள் உரையும், மறைமுடிவிற் பயில்கருத்தும்” எனும் சிவதத்துவ விவேக செய்யுளின் முதற்கூற்றை அடிப்படையாகக்கொண்ட உரையும் குறிப்பிடத்தக்கனவாக விளங்கின என்பதும் நாவலர் அவர்களின் வரலாறுகளின்மூலம் அறியமுடிகின்றது. 3,4

Image result for சபாபதி நாவலர்
ஆறுமுக நாவலர்

ஆகவே, ஆறுமுகநாவலரைப் போல, சிறந்த சொற்பொழிவாளராக சபாபதிநாவலர் விளங்கியிருக்கிறார் என்பதும் அவரது உரைகளை கேட்டு பலரும் சைவசித்தாந்திகளாக மாறினர் என்பதும், சைவசித்தாந்த மெய்ப்பொருளைக் கண்டுகொண்டனர் என்பதும் உணரக்கூடிய ஒன்றாகும்.

சித்தாந்த உரைநடை நூல்ளை எழுதியமை:

சபாபதி நாவலர் சிவஞானபோதத்திற்கு திராவிட மாபாடியம் எழுதிச் சிறப்புச் சேர்த்த சிவஞானமுனிவரைத் தமது மானசீக குருவாகக்கொண்டு போற்றினார்.  மேலும், சிவஞானபோத மாபாடியம் மூலநூலை துறைசை ஆதீனத்து மஹாசந்நிதானம் சபாபதிநாவலருக்குக் கொடுத்துக் கௌரவித்ததாகவும் அறிய முடிகின்றது .5

தமிழில் உயர்ந்த மாபாடியம் எழுதிய சிவஞானமுனிவர்போல, உரைநடை கைவரப்பெற்ற வள்ளலாக விளங்கிய சபாபதி நாவலர் பல்வேறு உரைநூல்களை எழுதி சித்தாந்தப்பயிர் வளரப் பெரும்பணியாற்றியுள்ளார். அவர் எழுதிய சமயம், சிவகர்ணாமிர்தம், சதுர்வேத தாற்பர்ய சங்கிரகம் போன்ற நூல்கள் அவரது சித்தாந்த ஞானத்தையும், சித்தாந்தப்பற்றையும் உரைநடையையும் நன்கு வெளிப்படுத்துகின்றன.

சமயமாவது மனிதர்கள் அறிவுவிளக்கம் பெற்று உறுதியெய்தி இன்பவாழ்வு அடைதற்குச் சாதகமாயுள்ள ஞானாலயமாகும்” 6

என்பது அவரது உரைநடைச் செழுமைக்கும் அதனூடே சித்தாந்த சமயத்தை விளக்கும் பாங்கிற்கும் ஒரு சோற்றுப்பதமாக காட்டலாம்.

இதனை விடவும், சபாபதி நாவலரவர்கள் எழுதிய திராவிடப்பிரகாசிகை முழுமையும் தமிழ் இலக்கண இலக்கிய விடயங்களோடு சித்தாந்தத்தை வேறுபடாது பேசும் அரிய உரைநூலாக விளங்கி தமிழ்ச்சைவர்களின் பொக்கிசமாக இன்றுவரை பல பதிப்புக்களை கண்டு விளங்கிவருகின்றது. முக்கியமாக, திருவள்ளுவர் சைவசித்தாந்தியே என்;று இந்நூலின் இலக்கிய மரபியலில் நிறுவுவதையும், சாத்திரமரபியலில் சைவசித்தாந்த சாத்திரநூல்களை குறித்து ஆராய்ச்சி செய்து தமிழ்ச்சிவஞானபோதத்திற்கு வடமொழிச்சிவஞானபோதமே  முதனூலென பறையறைவதையும் காண முடிகின்றது.

சித்தாந்தத்தை கற்பித்தமையும், சித்தாந்தச் சான்றோர்களை உருவாக்கியமையும்:

தமிழையும் சைவசித்தாந்தத்தையும் முதன்மையாகக் கற்பிப்பதை நோக்கமாகக்கொண்டு ஆறுமுகநாவலர் பெருமானார் சிதம்பரத்தில் நிறுவிய சைவப்பிரகாச வித்தியாசாலையில், அவரின்  வேண்டுகோளுக்கிணங்க, தலைமையாசிரியராகச் சிலகாலம் சபாபதி நாவலர் பணியாற்றினார்.

முப்பத்தைந்து ஆண்டுகள் சென்னையிலும் சிதம்பரத்திலும் வாழ்ந் சபாபதி நாவலர்,சிதம்பரம் அ.சோமசுந்தரமுதலியார், விழுப்புரம் இராமசாமிப்பிள்ளை, மாகறல் கார்த்திகேயமுதலியார், மயிலை. க.சிங்காரவேலு முதலியார், மாவை. வே.விசுவநாதபிள்ளை, சிதம்பரம் சிவராமச்செட்டியார், திருமயிலை பாலசுந்தரமுதலியார், சுழிபுரம் சிவப்பிரகாசபண்டிதர், விதிரி.சி.தாமோதரம்பிள்ளை, சிதம்பரம் முத்து வேலாயுதபிள்ளை என பலருக்கு தமிழ், சித்தாந்த ஆசிரியராக விளங்கி, பெரியதொரு மாணவர் பரம்பரையை உருவாக்கி, சித்தாந்தச் சான்றோர்களை ஏற்படுத்தி, சித்தாந்தம் வளர உள்ளன்போடு பணியாற்றியுள்ளார்.

இவரது மாணவர்களுள் ஒருவராக விளங்கிய மாவை விஸ்வநாதபிள்ளை அவர்களால் 1912ஆம் ஆண்டு திருமந்திரம் அரிய குறிப்புரைகளுடனும், முன்னுரையுடனும் பதிப்பிக்கப்பட்டுள்ளது. இவ்வகையில், இவரது மாணவர்கள் சைவசித்தாந்தப்பணிகள் ஆற்றியுள்ளனர்.

சித்தாந்த நூல்களை இயற்றியமை:

சித்தாந்தத்தை நேரிடையாகப் பேசுவதும், அவ்வாறன்றி சித்தாந்த கருத்தையே உட்பொருளாகக்கொண்டு புறப்பார்வைக்கு வேறொன்றைப் பேசுவதுபோல தோன்றக்கூடிய பல்வேறு நூல்களை சபாபதிநாவலர் இயற்றியுள்ளார். இவற்றில், 1885ஆம் ஆண்டு வைகாசி மாதம் வெளியிடப்பட்ட, 893 செய்யுட்களைக்கொண்ட சிதம்பரசபாநாதபுராணம் மிகச்சிறப்பான ஒன்றாகும். அதே ஆண்டு, ஆவணி மாதம் அப்பையதீட்சிதர் எழுதிய சிவகர்ணாமிர்தத்தை தமிழில் வசனவடிவில் எழுதி வெளியிட்டார். இந்நூல் சிவபரத்துவத்தை விசேடமாக நிறுவும் சிறப்புடையதாகும். 1887ல் சதுர்வேத தாற்பரிய சங்கிரகத்தை தமிழில் வசனமாக எழுதி வெளியிட்டார். இத்துடன், தலச்சிறப்புக்களை சித்தாந்தத்துடன் இணைத்துப் பேசவல்ல கோயில்களுக்குரிய பிரபந்தங்கள் பலவற்றையும் எழுதி வெளியிட்டுள்ளார்.

கண்டனங்கள்செய்து சித்தாந்தத்தை தெளிவு படுத்தியமை:

சபாபதி நாவலரது காலமானது ஆங்கிலேயர்களின் ஆட்சி இந்தியாவிலும் இலங்கையிலும் நிலவிய காலமாகும். ஆட்சியாளர்களின் ஆதரவுடன் கிறித்துவ சமயப்பிரச்சாரம் மிகவும் சிறப்பாக நடந்துவந்தது. கிறித்துவசமய போதகர்கள் சைவத்தையும், சைவசமய சித்தாந்தத்தையும் பலவாறாக இகழ்ந்து பேசுவதுடன் சைவசமய உண்மைகளை மறுத்துரைத்தும் வந்தனர்.

இதனைப் பொறுக்கமாட்டாதவராக, சபாபதி நாவலர் 1879ஆம் ஆண்டு வைகாசி மாதம் 168 செய்யுட்களை உடையதாக “யேசு மத சங்கற்ப நிராகரணம்” என்ற நூலை எழுதி வெளியிட்டார். இந்நூலை சி.வை.தாமோதரம்பிள்ளை அவர்கள் சிறப்புப்பாயிரம் அளித்துப் பாராட்டியுள்ளார்.

அதுபோல, சித்தாந்தத்தை அடிப்படையாக ஏற்றுப் போற்றும் சிறப்புடைய பெரியபுராணம், தணிகைப்புராணம் போன்ற சைவநூல்களை மறுத்து — சிந்தாமணி போன்ற அவைதீக நூல்களைப் போற்றுவோரை கண்டித்து — வைதிக காவிய தூஷண மறுப்பு என்கிற நூலை எழுதி வெளியிட்டுள்ளார்.

தமது சொல் வன்மையால் சித்தாந்தத்திற்கு எதிரான கருத்துக்களை விலக்கி சைவசமயம் பொலிவுபெற்றுப் பரவவும் பெரும் பணிகளை ஆற்றியுள்ளார்.

அச்சகம் நிறுவியதும் பத்திரிகைகள்; நடாத்தியதும்:

1891ஆம் ஆண்டில் சிதம்பரத்தில் மகாகும்பாபிடேகம் நிகழ்ந்த காலத்தில் அங்கு வந்த இராமநாதபுரம் பாஸ்கரசேதுபதி மகாராசாவானவர் நாவலர் அவர்களின் சொல்வன்மையையும் சித்தாந்தப்பணிகளையும் கண்டு, ஞானாமிர்தம் என்ற பத்திரிகையை நடாத்துவதற்கு சிதம்பரத்தில் இடவசதியும், பொருளுதவியும் அளித்தார்.

சென்னையில் சித்தாந்த வித்தியாநுபால யந்திரசாலை என்ற அச்சகத்தை இதனுடன் இணைத்து ஞானாமிர்தம் பத்திரிகையை தொடர்ந்து வெளியீடு செய்துவந்தார்.

இந்த அச்சகத்தில் 1901ஆம் ஆண்டு முதல், ‘சுதேசவர்த்தமானி’ என்கிற மாதப்பத்திரிகையையும் ஆரம்பித்து சிலகாலம் நடாத்தினார். இந்த அச்சகத்திலேயே பறாளாய் விநாயகர் பள்ளு (1889) என்ற பிரபந்தம் முதன்முதலில் அச்சேறியது. மாதவ சிவஞானமாமுனிவர் எழுதிய சிவசமவாத உரை மறுப்பு’ என்கிற நூல் (1893) இந்த அச்சகசாலையில் பதிப்புச் செய்யப்பட்டது.

யாத்திரைகள் செய்து சித்தாந்தத்தை வளர்த்தல்:

யாழ்ப்பாணத்துச் சுழிபுரத்தில் தமது மாமன்மகளை மணமுடித்த சபாபதி நாவலரவரவர்கள், குடும்பஉறவைப் பேணி ஓரிடத்தில் நிலையாக இல்லாமல், சென்னையில் சிலகாலமும் திருவாவடுதுறையில் சிலகாலமும், யாழ்ப்பாணத்தில் சில காலமும், சிதம்பரத்திலேயே அதிக காலமும், இராமநாதபுரம் போன்ற இடங்களில் குறிப்பிடத்தக்க காலமும் மாறிமாறி வசித்து,  தம் உயிரிலும் உறவிலும் எப்போதும் சித்தாந்தத்தையே சிந்திப்பவராக விளங்கினார்.

இவ்வாறு விளங்கிய சபாபதி நாவலர் சுமார் ஐந்து மாத காலம் தென்னகச்சிவத்தல யாத்திரைசெய்து ஆங்காங்கே சைவசித்தாந்த உரைகளை ஆற்றிவந்தபோது குறிப்பிடத்தக்க பல விடயங்கள், சம்பவங்கள் நிகழ்ந்ததை அவரது மாணவர் க.சிங்காரவேலு முதலியார் “சிவத்தலயாத்திரை” என்ற பெயரில் ஒரு நூலை எழுதி வெளியிட்டார்.

வடமொழி நூல்களை மொழிபெயர்த்து சிவபரத்துவத்தை நிறுவியமை சைவசித்தாந்தத்தின் அடிப்படை முப்பொருள் உண்மையாகும். அதிலும் முதன்மையானது சிவபரத்துவத்தை ஏற்றுக் கொள்ளுதல் ஆகும். சபாபதி நாவலர் அவர்களின் காலத்தில் தமிழ்நாட்டில் அதிக அளவில் சிவன் மும்மூர்த்திகளில் ஒருவன் என்கிற எண்ணமே வேரூன்றி இருந்தது.

ஆகவே, சைவசித்தாந்த மறுமலர்ச்சிக்கு பணியாற்றிய சபாபதிநாவலர் அவர்கள் சிவபரத்துவத்தைப் பேசவல்ல நூல்கள் சிலவற்றை வடமொழிமூலத்திலிருந்து மிகச்சிறப்பாக மொழி பெயர்த்து வெளியிட்டுள்ளார்.

ஹரதத்தாச்சார்யர் என்பவர் வடமொழியில் எழுதிய சதுர்வேத தாற்பரிய சங்கிரகம் என்ற நூலையும், அப்பைய தீட்சிதர் எழுதிய பாரத தாற்பரிய சங்கிரகம், சிவகர்ணாமிர்தம் ஆகிய நூல்களையும் நாவலரவர்கள் தமிழில் மொழி பெயர்த்தமையை குறிப்பிடலாம்.

அம்பிகையோடு கூடும் வடிவுடை நித்தரான

வெம்பெருஞ் சதாசிவப் பேரிறைவரே பிரமமென்றுந்

தம்பெரும் விபூதிலேச மேயிந்தச்சகமாமென்று

மிம்பர்மற்றெடுத் துரைப்பவைதிக ரென்பமன்னோ 7

என்கிற 83 வரலாற்றுச் செய்யுள் இதனை உணர்த்தி நிற்கிறது.

[தொடரும்]

அடிக்குறிப்பு:

  • 1. சபாபதி நாவலர்,(1927)- திராவிடப்பிரகாசிகை, சாது அச்சுக்கூடம்,

சென்னை, சபாபதிநாவலர் சரிதம், பக் ஐஐ

  • 2. மேலது பக் ஓஓஐஓ
  • 3. மேலது பக் ஓஓஓஓ
  • 4. சிவகுருநாதன்.அ. வடகோவை, (1955)- சபாபதி நாவலர்

சரித்திரச்சுருக்கம், சபாபதி நாவலர் ஞாபக நிலையத்தின் வெளியீடு- 1,

வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னை பக் 3

  • 5. மேலது
  • 6. சபாபதி நாவலர்,ஸ்ரீ (1949), சமயம், தமிழ் வளர்ச்சிக்கழகம்,

திருவாவடுதுறை யாதீனம், தமிழ்நாடு  பக் 1

  • 7. யோகேஸ்வரி சிவப்பிரகாசம், (2016), வடகோவை சபாபதி நாவலரின்

நான்மணிகள், ஜீவநதி, கலையகம், அல்வாய், பக் 83

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *