பி.என்.ஓக் (P.N.Oak) எழுதிய Who says Akbar is Great? என்னும் புத்தகத்தின் அடிப்படையில் இத்தொடர் எழுதப்படுகிறது.
<< தொடரின் மற்ற பகுதிகளை இங்கே வாசிக்கலாம் >>
தொடர்ச்சி…
அக்பரின் சமகால குறிப்பேடுகள் அவர் தனது ஹராமிலும் (அந்தப்புரம்), சிறைகளிலும், சத்திரங்களிலும் அடைத்து வைத்திருந்த ஏராளமான அழகிய பெண்களை தனது உபயோகத்திற்கு மட்டும் வைத்துக் கொண்டதுடன் தனது அமைச்சரவை சகாக்களுடன் அவர்களைப் பகிர்ந்து கொண்டதனையும் குறிப்பிடுகின்றன. அவரைச் சந்திக்க வருபவர்கள் பெண்களை பல இடங்களிலிருந்தும் கொண்டுவந்து அவரிடம் ஒப்படைத்தார்கள். வரலாற்றாசிரியர் பதாயுனி சொல்கிறார், “ஷியாக்கள் என்கிற ஒரே காரணத்திற்காக காஷ்மீரை ஆண்ட மீர் யாகூப்பும், பாரசீகத்தின் இஸ்ஃபஹானைச் சார்ந்த மிர்ஸா முக்கிமும் அக்பரால் கொல்லப்பட்டார்கள். கொல்லப்பட்டவர்கள் இருவரும் ஹுசைன் கான் என்பவரின் இரு மகள்களை அக்பருக்குப் பரிசளிக்க அரசவைக்கு வந்தவர்கள்”.
இதன்படி யார் வேண்டுமானாலும் யாருடைய மகளையோ, சகோதரியையோ அல்லது மனைவியையோ தூக்கிக் கொண்டு வந்து அக்பருக்குப் பரிசாக அளிக்கலாம் அல்லது அவனது வீட்டுக்குள்ளேயே அடைத்து வைத்துக் கொள்ளலாம் என்கிற நிலைமைதான் அக்பரின் ஆட்சிக்காலத்தில் நிலவியிருக்கிறது எனக் காட்டுகிறது.
நகர்ப்புறங்களுக்கும், கிராமப்பகுதிகளுக்கும் சென்ற அக்பரின் படையினர் அங்கிருந்த ஆண்களைக் கொன்றுவிட்டு அவர்களின் பெண்களைக் கைப்பற்றி அவர்களை இரக்கமின்றி வன்புணர்வு செய்வதனை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள். பின்னர் அந்தப் பெண்கள் வாழ வழியின்றி விபச்சாரம் செய்து பிழைக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். ஒவ்வொரு வருடமும் இம்மாதிரியான அபலைப் பெண்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போனது. பதாயுனி, “முகலாய அரசில் விபச்சாரிகளின் எண்ணிக்கை தலைநகரில் எண்ணவே இயலாத அளவிற்குப் பெருகிக் கொண்டே சென்றது. அக்பர் அவர்களை கவனித்துக் கொள்ள ஒரு மந்திரியையும், ஒரு செயலாளனையும் நியமித்தார். அந்தப் பெண்களை உபயோகித்துக் கொள்ள விரும்புபவர்கள் அவர்களின் வீட்டிற்கு அந்தப் பெண்ணை அழைத்துச் செல்லலாம். அதேசமயம் நடனப் பெண்களை எவரும் தங்களது வீடுகளுக்கு, ஒருசில நிபந்தனைகளுக்கு உட்படாமல், அழைத்துச் செல்வதனை அக்பர் அனுமதிக்கவில்லை.
யாருக்கேனும் ஒரு கன்னிப் பெண் தேவைப்பட்டால், அவர்கள் அக்பருக்கு அறிந்தவர்களாக இருந்தால், அவர்களின் உதவியாளர்கள் மூலம் அக்பருக்கு மனு அளிக்க வேண்டும். எத்தனை சட்ட திட்டங்கள் புனையப்பட்டாலும் பலர் புனைப்பெயர்களை உபயோகித்து அந்தப் பெண்களை தங்களுடன் அழைத்துச் சென்றார்கள். இதன் காரணமாக தீயொழுக்கம் மிகுந்த குடிகாரர்கள் தங்களுக்குள் அடித்துக் கொண்டு ரத்தம் சிந்தினார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு தண்டனைகள் வழங்கப்பட்டாலும் இதுபோன்ற செயல்களை அக்பரால் முழுமையாகக் கட்டுப்படுத்த இயலவில்லை.
அக்பர் தனக்குத் தெரிந்த பல விபச்சாரிகளைத் தனிப்பட்ட முறையில் தன்னுடைய அரண்மனைக்கு அழைத்து அவர்களை யார், யாரெல்லாம் உபயோகித்துக் கொண்டார்கள் என்பது போன்ற ‘கிளு, கிளு’ கதைகளை கேட்டு மகிழ்ந்தார்” என்கிறார்.
இந்தியாவில் நடந்த இஸ்லாமிய ஆட்சி ஹிந்துஸ்தானத்தை ஒரு மாபெரும் விபச்சார கூடமாக மாற்றியது. அவ்வாறு மாற்றிய இஸ்லாமிய அரசர்களுக்கெல்லாம் அரசன் அக்பர்தான் என்பதில் சந்தேகமில்லை.
போரில் தோற்றுச் சரணடையும் ஹிந்து அரசர்கள் தங்களின் பெண்களை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என அக்பர் விரும்பினார். இந்த வழிமுறையின் மூலமாக இந்தியாவின் பல தலைசிறந்த ஹிந்து அரசர்களின் மகள்களைத் தனது அந்தப்புரத்திற்கு அபரித்துச் சென்றார். ஒவ்வொரு நாளும் எண்ணிக்கையில் கூடிக் கொண்டே போன தோல்வியுற்ற அரசர்களின் பெண்கள் எவ்வாறு வன்புணர்வுக்கும், விபச்சாரம் செய்வதற்கும் ஆளானார்கள் என்பதனை விளக்குவதற்கு பதாயுனி சொல்லும் ஒரு சம்பவம் இது. “ஆப்கானின் ஸ்வாட் பகுதியையும் பாஜூரையும் பிடித்து அழிக்கும்படி அக்பர் தனது தளபதிகளான ஜய்ன் கோகாவுக்கும் ஆசஃப்கானுக்கும் உத்தரவிட்டார். அதன்படி அவர்கள் அந்தப் பகுதியை ஆண்ட ஜலாலாவைத் தோற்கடித்து பல ஆயிரக்கணக்கான படைவீரர்களைக் கொன்றனர். ஜலாலாவின் மனைவிகளும், அவரது குடும்பமும் பின்னர் 14,000 மேற்பட்ட உறவினர்களும் அக்பரிடம் அனுப்பி வைக்கப்பட்டார்கள்”. இப்படியாக அக்பரை அடைந்த ஏராளமான பெண்கள் ஆடு, மாடுகளைப் போல நடத்தப்பட்டுத் துன்புறுத்தப்பட்டார்கள். பின்னர் அரசவையின் முக்கியஸ்தர்களிடையே பகிர்ந்தளிக்கப்பட்டார்கள். பல ஆண்களின் கைமாறிய அந்த அப்பாவிப் பெண்களின் நிலையை விளக்குவது கடினம். நேரம் காலமில்லாமல் புணர்ச்சிக்கு உட்படுத்தப்பட்ட அந்தப் பெண்கள் சரியான உணவின்றி அழுக்குப் பிடித்த அறைகளில் அடைத்துவைக்கப்பட்டார்கள். தினப்படி ஏச்சும், தங்களின் அந்தஸ்திற்குத் தகுதியில்லா கேவலமான வேலைகளைச் செய்யும்படி நிர்பந்திக்கப்பட்டும், மூக்கின் முனை வரைக்கும் வரும் புர்க்காக்களை அணியச் செய்தும் அடிமை வாழ்க்கை வாழ்ந்தார்கள்.
பல தார மணத்தை விலக்க இயலாத அக்பர் தனது அந்தப்புரத்திலிருக்கும் பெண்களை தனது அரசவைப் பிரதனிகளுக்குப் பகிர்ந்தளிக்கப் போவதாக வதந்திகள் பரவியது. அந்த வதந்திகள் உண்மையானதாகவே இருக்க வேண்டும். அக்பருக்கு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மனைவிகள் இருந்ததில்லை என்பதினை நாம் நினைவில் வைத்துக் கொள்ளவேண்டும். தன்னுடைய அந்தப்புரத்திலிருந்த அத்தனை பெண்களும் தன்னுடையவர்கள் என்கிற எண்ணமுடையவர் அக்பர். வெல்லப்பட்ட நாடுகளில் இருக்கும் எந்தவொரு அழகிய பெண்ணும் தனது அந்தப்புரத்திற்கு மட்டுமே வந்தாக வேண்டும் என்கிற உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. அப்படியே அக்பர் தனது அந்தப்புரத்துப் பெண்களை பிறருக்குப் பகிர்ந்தளித்திருந்தாலும் அவருக்கு ஒன்றும் குறைந்திருக்கப் போவதில்லை. ஏனென்றால் அக்பரின் அந்தப்புரம் தொடர்ச்சியாக வெல்லப்பட்ட நாட்டுப் பெண்களால் நிரம்பிக் கொண்டே இருந்தது.
இஸ்லாமிற்கும் கிறிஸ்தவத்திற்கும் இருந்த ஒற்றுமைகளைக் குறித்து அக்பரின் அரசவை முஸல்மான்களிடம் விவாதித்துக் கொண்டிருந்த பாதிரி மொன்சராட்டே, அவருடைய சக பாதிரியான ருடால்ஃப் என்பவர் இஸ்லாமின் தீர்க்கதரிசியானவர் அவருடைய புத்தகத்தில் தான் இயற்கைக்கு முரணான புணர்ச்சிகளைச் செய்ய (சிறுவர்களுடன்) அனுமதிக்கப்பட்டிருப்பதாகச் சொல்லியிருப்பதனை சுட்டிக்கட்டியவுடன் அங்கிருந்த முஸல்மான்கள் அவமானத்தில் முகம் சிவந்தார்கள் என்கிறார்.
டாமனில் எதிர்பாராரத தாக்குதலைத் துவங்கிய முகலாயப் படைகள், தங்களிடம் பிடிபட்ட போர்த்துக்கீசிய சிப்பாய்களிடம் அவர்கள் இஸ்லாமிய மதத்திற்கு மாறினால் அழகான, ராஜகுலப் பெண்களைப் பரிசளிப்பதாக அக்பரின் படையினர் வாக்களித்தனர். ஆனால் அதனை ஏற்க மறுத்த போர்ச்சுக்கீசிய சிப்பாய்களின் தலைகள் துண்டிக்கப்பட்டு அக்பரிடம் அனுப்பி வைக்கப்பட்டது. அவ்வாறு வாக்களிக்கப்பட்ட “அழகான, ராஜகுலப்” பெண்கள் அக்பரால் சிறைப்பிடிக்கப்பட்டு, விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட ஹிந்துப் பெண்களாகத்தான் இருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. அதேசமயம் பெரும்பாலான ஹிந்துப் பெண்கள் அக்பராலும் அவரது முகலாய அரசவையினராலும், சிப்பாய்களாலும் விபச்சாரிகள், நாட்டியப் பெண்கள், அடிமைகள் என்றே அழைக்கப்பட்டனர். அவ்வாறே அவர்கள் எழுதிய குறிப்புகளிலும் எழுதி வைத்திருக்கின்றனர் என்பதினைக் காணலாம்.
தன்னிடம் பிடிபட்ட பெண்களைத் துன்புறுத்தாமல், கற்பழிக்காமல் விட்டு வைப்பது ஒரு பெரும் இரக்க குணமாக தம்பட்டமடித்துக் கொண்டார் அக்பர். அவ்வாறு நிகழ்வது அபூர்வமான ஒன்று. அயோத்தியாவை ஆண்ட மாசும் ஃபரான்குடியைத் தோற்கடித்து விரட்டிய அக்பர் அவரது படைத்தலைவனான ஷாபாஸ்கானிடம் மாசுமின் வீட்டுப் பெண்களை ஒன்றும் செய்ய வேண்டாம் என்று உத்தரவிட்டது ஒரு உதாரணம். அனேகமாக ஒரு ஹிந்து அரசருக்கு அவ்வாறு நிகழ்வது சாத்தியமேயில்லை.
ஏற்கனவே குறிப்பிட்டபடி, விதவையான ஹிந்துப் பெண்கள் ஆற்றங்கரையில் உடன்கட்டை ஏறுவதினை தனது அரண்மனை உப்பரிகையிலிருந்து அக்பர் ரசித்துப் பார்ப்பதுடன், தனது விருந்தினர்களையும் அழைத்து அதனைக் காட்டி மகிழ்வார். அதேசமயம் அந்த விதவைப் பெண் அழகானவளாக இருந்தால் அக்பர் அந்தப் பெண் உடன்கட்டை ஏறுவதனைத் தடுத்து அவளைத் தனது அந்தப்புரத்திற்குக் கொண்டு செல்வார் என்பது பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அதற்கு உதாரணமான இரண்டு சம்பவங்களைப் பார்ப்போம்.
ராய் ராய்சிங்கின் மகளை பன்னவைச் சேர்ந்த ராஜா ராமச்சந்திராவின் மகனான விர் பத்ரா மணமுடித்திருந்தார். விர் பத்ரா அக்பரிடம் பணிபுரிந்து கொண்டிருந்தார். ராஜா ராமச்சந்திரா இறந்தவுடன் அக்பர் அவரை பன்னாவிற்குச் சென்று ஆட்சிப் பொறுப்புகளை ஏற்றுக் கொள்ளும்படி உத்தரவிடுகிறார். ஆனால் விர் பத்ரா பன்னாவை நெருங்குகையில் அவர் சென்ற பல்லக்கிலிருந்து கீழே விழுந்து இறந்துவிட்டார். அவருடைய மனைவி உடன்கட்டை ஏற இருக்கையில் அக்பர் அதனைத் தடுத்து அவளைத் தன்னோடு அழைத்துச் சென்று அவளையும் தனது அந்தப்புரத்தில் அடைத்துவிட்டார். மேலோட்டமாகப் பார்க்கையில் மிக உயரிய ஒன்றாகத் தெரியும் இதனை சிறிது யோசித்தால் அந்தப் பெண்ணை அடைவதற்காக அகபர் செய்த் திட்டமிட்ட படுகொலை என்பதனை நாம் உணரலாம். விர் பத்ரா அக்பரின் அரசவையின் பணிபுரிந்த ஒருவர் என்பதால் அக்பர் அவரது மனைவியை பார்த்திருக்க வாய்ப்பிருக்கிறது என்பதில் சந்தேகமில்லை.
விர் பத்ராவின் மரணத்தில் சந்தேகப்படும்படியான விஷயங்கள் ஏராளம். பன்னாவின் தலை நகரை அடைய இருக்கையில் எப்படி விர் பத்ரா திடீரென பல்லக்கில் இருந்து கீழே விழுந்தார்? அப்படியே விழுந்திருந்தாலும் தரையிலிருந்து சில அடிகள் உயரமே இருக்கிற பல்லக்கில் இருந்து விழுந்தவுடனேயே எப்படி ஒருவனால் அதே இடத்தில் மரிக்க முடியும்?
இதுபோன்ற இன்னொரு சம்பவத்தையும் பார்ப்போம். ராஜா பகவான்தாஸின் உறவினரான ஜெய்முல் என்பவர் அரச காரியமாக நாட்டின் கிழக்குப் பகுதிக்கு அனுப்பி வைக்கப்படுகிறார். அவரச காரியம் எனச் சொல்லப்பட்டதால் தொடர்ந்து குதிரையில் பயனிக்கும் ஜெய்முல் சவுசா என்கிற இடத்தில் வெயில் தாங்காமல் களைப்புற்று இறந்துவிட்டார் (என அக்பரின் வரலாற்றாசிரிய அபுல் ஃபசல் கூறுகிறார்). உதய்சிங்கின் மகளான ஜெய்முல்லின் மனைவி கணவனுடன் தானும் உடன்கட்டை ஏறப் பிரயத்தனங்கள் செய்து கொண்டிருக்கையில் அக்பர் அந்த இடத்திற்கு குதிரையில் விரைந்து வந்து அந்தப் பெண்ணைத் தடுக்கிறார். அவளுடைய உறவினர்கள் சிறையிலடைக்கப்பட்டார்கள். பின்னர் அந்தப் பெண்ணும் அக்பரின் அந்தப்புரத்தில் சென்று அடைபடுகிறாள்.
இந்தச் சம்பவத்தைக் கொஞ்சம் ஆராய்வோம். ராஜா ஜெய்முல் இளவயதுடையவர். உடல் வலிமை கொண்டவர். அனேகமாக ஒரு முக்கியமில்லாத, போலித்தனமான வேலையைச் செய்யப் பணிக்கப்பட்டஅவர் அக்பரின் அரசவையை விட்டு வெளியே வந்தவுடனேயே அவர் இறந்திருக்க வேண்டும். அல்லது கொல்லப்பட்டிருக்க வேண்டும். இல்லாவிட்டால் அக்பரால் எப்படி அந்த இடத்திற்கு உடனடியாக வந்திருக்க முடியும்? ஜெய்முல் இன்ன இடத்தில்தான் இறப்பார் என்று முன் கூட்டியே அறிந்திருந்தாலன்றி அக்பரால் உடனடியாக குதிரையில் ஏறி அங்கு வந்திருக்க இயலாது என்பதே உண்மை. எனவே ஜெய்முல் அக்பர் இருக்குமிடத்திற்கு அருகாமையில்தான் இறந்திருக்க முடியும்.
ஜெய் முல்லின் மனைவி உடன் கட்டை ஏறும் இடத்திற்கு அக்பரே தன்னந்தனியாக குதிரையில் விரைந்து வந்து காப்பாற்றியதெல்லாம் அபுல் ஃபசலின் கற்பனையாகத்தான் இருக்க முடியும். அக்பர் அந்தப் பெண்ணைக் கைப்பற்றிக் கொண்டு போனால் ஜெய்முல்லின் உறவினர்கள் அதனைத் தடுப்பார்கள் என்பதால் தகுந்த பாதுகாப்புடனேயே அங்கு அவர் போயிருக்க வேண்டும். ஏற்கனவே சொன்னபடி எதிர்த்தவர்கள் அத்தனைபேர்களும் பாதாளச்சிறையில் சென்று முடிந்தார்கள். எனவே இது ஒரு முன் கூட்டியே திட்டமிடப்பட்ட நாடகமே.
(தொடரும்)
இஸ்லாமிய பயங்கரவாதம் பற்றி