காமம் பற்றிய இத்தனை வெளிப்படையான பாடல்கள் அவசியமா?
ஆரோக்கியமாக, அறியும் எண்ணத்துடன் கேட்டோர் முதல் ’ மை பொதி விளக்கே என்ன மனத்தினுள் கறுப்பு வைத்துப் பொய் தவ வேடம் கொண்ட’ முத்தநாதன்கள் வரை பலரின் கேள்விகள் கேட்டாகிவிட்டது.
காமம் தவிர்க்கப்படவேண்டியதல்ல என்பது பண்டைத்தமிழர் அறிவு. சங்ககாலப்பாடல்களில் தலைவன் தலைவி ஊடல் கூடல் , பிரிவு பற்றி எத்தனை காவியச் செய்யுள்கள் இருக்கின்றன?! ”காமம் காமம் என்ப, காமம் அணங்கும் பிணியும் அன்றே “ என்ற பாடல்கள் இன்றும் நம் அறிவைச் சீராக்குபவை. நம் முன்னோர்கள் காமத்தை ஒரு இயற்கை உந்தம் என்றே கருதினார்கள். இல்லாவிட்டால், ஒழுக்கம் பற்றி எழுதிய அதே திருவள்ளுவர் காமத்துப் பால் எழுதியிருக்க வேண்டிய அவசியமில்லை. காமத்துப் பால் என்பதை இன்பத்துப் பால் எனச் சொல்பவருண்டு. சிற்றின்பத்துப்பால் என எவரும் சொல்வதில்லை.
தமிழர் மரபுமட்டுமல்ல, மொத்த இந்தியக் குடியொழுகுமுறையே காமத்தைத் தவிர்க்கவில்லை.. கலியுகத்தில் சன்யாஸம் தவிர்க்கப்படவேண்டிய ஒன்று என்பதாக ப்ரம்ம வைவர்த்த புராணம் சொல்கிறது ( 185.180). சன்யாசம் தவிர்ப்பது என்பது , இந்திரியங்களை வெறுக்காது, அதன்வழி ஈர்க்கப்பட்டு, அதனை அதன்மூலமே தாண்டிச் செல்வது என்பதான உத்தியின் முதல் எழுத்து.
இதனாலேயே கோவில்களின் கோபுரங்களிலும், வெளி மதிள்களிலும் காமத்தைச் சித்தரிக்கும் பல சிற்பங்களைக் காணலாம். அதுவும் பல்லாண் சேர்க்கை, பல்பெண் சேர்க்கை எனச் சமுதாயம் தவிர்த்த சில உறவுகளையும் அதில் காணலாம். இது “ஒரே கடவுள்” கொள்கையைக் கொணர்ந்தவர்களுக்கு அதிர்ச்சியை அளித்தது. இதனை எள்ளி நகையாடியே, காமம் பற்றிய நமது ஆரோக்கியச் சிந்தையை அழித்தார்கள். நாமும் விட்டொழிந்தோம்.
வெளிமதில், கோபுரங்களில் உள்ள சிலைகளைக் கண்டு ஈர்க்கப்பட்டு உள்ளே வருபவர்கள் மெல்ல மெல்ல, அந்த சிற்பங்கள் மாறுவதைக் கண்டு, தன் கிளர்வுகளிலும் , ரசனையிலும் மாறுகிறார்கள். இறுதியில் கருவறை மெய்ஞானத்தைக் காட்டுகிறது. அது வெறுமைப் பெருவெளி என சிதம்பர ரகசியமாகவும், தேவதேவியர் இணைந்து இருந்து (ஆனால் ஒருமைப்படாது இருக்கும்) விசிஷ்டாத்வைதமாகவும், ஜீவ பரமாத்வா ஸ்வரூபங்கள் வேறு வேறு எனும் துவைதமாகவும், அல்லது உணர்ச்சிப்பெருக்கில் தாய் மகன் உறவாகும் சக்தி வழிபாடாகவோ மாறுகிறது. நம்மாழ்வார் பாசுரத்தில் வருவது போல் “ அவரவர் விதிவழி அடைய நின்றனர்”
இன்று ஒரு வகையில் மனத்தைப் பதப்படுத்தி (பக்குவப்படுத்தி அல்ல) இருப்பவர்கள் மற்றொரு அனுபவ முறையைக் குறை சொல்வதில் சமூக அதிர்ச்சியைக் கையாளுகின்றனர். ஒவ்வாக் காமம், சிறுபெண் எப்படி இத்தனை காமத்தை வழிய வழிய எழுத முடியும்? இது தேவையா? என்ற கேள்விகள் , பக்குவப்படாத மனத்தில் உளறல்களே அன்றி வேறில்லை.
பதின்ம வயதுச் சிறுவன் இன்று ஒரு கணித மேதையாகிறான். செயற்கரிய செய்கைகளைச் செய்து வியப்பிலாழ்த்துகிறான். இப்படித் தன் வயதிற்கும் மூப்பானவர்கள் செய்யவேண்டியதைத் திறம்பாகச் செய்கிறவர்களை என்ன சொல்கிறோம்? Child Prodigy. இதனைத் தமிழ்ப்படுத்தினால்..?
பிஞ்சில் பழுத்தவர்கள் எனலாமா?
இதையேதான் மணவாள மாமுனிகள் ஆண்டாளைப் பற்றிப் பாடுகையில் சொல்கிறார்.
அஞ்சுகுடிக்கொரு சந்ததியாய், ஆழ்வார்கள்
தம்செயலை விஞ்சி நிற்கும் தன்மையளாய் – பிஞ்சாய்ப்
பழுத்தாளை ஆண்டாளைச் பக்தியுடன் நாளும்
வழுத்தாய் மனமே மகிழ்ந்து
பதின்ம வயதில் ஆண்டாள் பிற ஆழ்வார்களைக் காட்டிலும் நாயக நாயகி பாவத்தில் எழுதியதை, அவள் ஒரு Child prodigy என்பதைப் புரிந்துகொள்வதில் சிரமம் என்ன இருக்கிறது?
‘அந்த காலத்தில் ஒரு பெண் எப்படி இவ்வாறு பாடியிருக்க முடியும்?” ஆண்டாள் ஒரு சாதாரணப் பெண் அல்ல. பெண்ணின் சூடிக்கொடுத்த செயலால் அதிர்கிறார் தந்தை பெரியாழ்வார். ஏன் இப்படிச் செய்தாய்? எனக் கேட்கிறார். அதன்பின்னரே ஆண்டாளின் பெருமை வெளியே தெரிகிறது. அவளது தெளிவான முடிவில், அரங்கநாதனையே அவள் அடைகிறாள். அவள் கோவிலில் வாழ்ந்திருந்தால், அதுவும் ஆவணப்படுத்தப்பட்டிருக்கும். ஆண்டாள் தவிர வைணவத்தில் மூன்று பெண்களின் சொற்கள் புனிதமாகக் கருதப்படுபவை. அவை மும்மணிகள் ரகசியம் எனப்படும். இவற்றைச் சொன்ன பெண்கள் எவரின் குலம், பற்றிய விவரமே எங்கும் சொல்லப்படவில்லை. அவர்கள் வணங்கப்பட வேண்டியவர்கள். அவ்வளவுதான். அதற்குமேல் எதுவும் பார்ப்பதற்கில்லை.
பெண்களை அடக்குகிற சமூகமென்றால், ஆண்டாள் என்ற பாத்திரத்தையே வைணவம் அழித்திருக்கலாமே? ஏன் அவளை முன்வைத்து “ஆழ்வார்கள் தம் செயலை விஞ்சி நிற்கும் தன்மையளாய்” என்று புகழ்கிறது? வேதாந்த தேசிகன் திருப்பாணாழ்வாரை ஏன் நம்பெருமாள், நம்பிள்ளை, நம் சீயர் அளவில் ’நம் பாணன்”, என்கிறார்? கைசிக புராணத்தில் வரும் பாணர் கதாபாத்திரத்தை ‘நம் பாடுவான்’ என்றே பக்தியுடன் அழைக்கின்றனர். இந்த உரிமையைப் பெருமாளுக்கும் ஆழ்வார் கொடுக்கிறார் . இறைவன் நம்மீது மகிழ்ந்து “ அளியன் நம் பயல்” என்று நம்மை அணைத்துக்கொள்ளாமல் ஏன் தாமதப்படுத்துகிறாரன்? எனக் கேட்கிறார்.
ஏனெனில் பக்திக்கு விலக்கானது எதுவுமில்லை. ஜாதியோ, பாலினமோ ஒரு பொருட்டேயல்ல. நம்மாழ்வார் “குலம்தாங்கு சாதிகள் நாலினும் கீழிழிந்து… அடியார் தம்மடியார் இவ்வடிகளே” என்றும் தொண்டரடிப்பொடியாழ்வார் ”ஊனமா யினகள் செய்யும் ஊனகா ரகர்க ளேலும்,போனகம் செய்த சேடம் தருவரேல் புனிதமன்றே“, “அடிமையில் குடிமை யில்லா அயல்சதுப் பேதி மாரில், குடிமையில் கடைமை பட்ட குக்கரில் பிறப்ப ரேலும்… அடியரை உகத்திபோலும்” என்றும் சொல்வதைக் கவனிக்க வேண்டும்.
சரி, இளைஞர்கள் இந்த வெளீப்படையான காமப் பேச்சால் கெட்டுப்போய்விட மாட்டார்களா? நகைப்பிற்குரிய கேள்வி இது. இதுவரை ஊடகங்கள் கொடுக்காத விஷமா, நாச்சியார் திருமொழி படித்து ஒருவன் காமத்தைத் தவறாகப் புரிந்து விடப்போகிறான்? நாச்சியார் திருமொழியை இளவயதில் படிப்பதைத் தடுப்பதன் காரணம், அதன் குறையல்ல. படிப்பவனின் முதிர்வுக் குறையை மனதில் கொண்டே நாச்சியார் திருமொழி சொல்பவருக்கு 60 வயதும், கேட்பவருக்கு 50 வயதும் ஆகியிருக்க வேண்டும் என்பது ஒரு சொல் வழக்கு. இன்றைக்கு 1200 வருடங்களுக்கு முன்பு 60 வயது என்பது மிக அபூர்வம். 50ம் அபூர்வம். அந்த வயதில் உடல் சார்ந்த கிளர்வல்ல வருவது, அறிவு முதிர்ந்து, காமத்தின் பின்னிற்கும் கடவள் தேடும் வேட்கை புரியும். எதையும் படிப்பதற்கு ஒரு தகுதி வேண்டும். இந்தத் தகுதி அறிவு முதிர்வு மட்டுமே. இன்றைய 60 வயதினர் முதிராமல் உளறுவது, அவர்கள் பதின்ம வயதைத் தாண்டவில்லை என்பதையே காட்டுகிறது.
நாச்சியார் திருமொழி பற்றிச் சொல்லுமுன், திருப்பாவையைச் சொல்லிக்கொடுங்கள். திருமண வயதில் பெரியாழ்வாரின் கண்ணன் வளர்ப்பு பற்றிய பாடல்களைச் சொல்லிக்கொடுங்கள். குளிப்பாட்டுவது, பூச்சூட்டுவது, காப்பிடுவது, சப்பாணீ கொட்டுவது, காக்கையை அழைத்து மை இடுவது .. இதையெல்லாம் அனுபவித்து உணரும் பருவம் தாண்டி , நாச்சியார் திருமொழி படித்தால், அக்காமம் கிளர்வாகத் தோன்றாது. அனுபவத்தில் தோய்த்தெழுந்து அதனைத் தாண்டும் ஒரு முதிர்வான உணர்வைக் கொடுக்கும். அதனை அவரவர் மட்டுமே உணர முடியும் ஏனெனில் இந்த அனுபவ உணர்வு தன்னிலைப்பட்டது. நம்மாழ்வார் சொல்வது போல்
“எழுவதோர் உரு என்நெஞ்சுள் எழும் ஆர்க்கும் அறிவரிதே”
(சுதாகர் கஸ்தூரி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியது)
சுதாகர் கஸ்தூரி இணையத்தில் தொடர்ந்து பலதரப்பட்ட சுவாரஸ்யமான செறிவான பதிவுகளை எழுதிவருபவர். 6174, 7.83 ஹெர்ட்ஸ், வலவன் (டிரைவர் கதைகள்) ஆகிய புனைவு நூல்களை எழுதியிருக்கிறார்.
நெல்லைத் தமிழின் வண்ணங்கள் மணக்க எழுதும் தூத்துக்குடிக்காரரான சுதாகர் தற்போது மும்பையில் வசித்து வருகிறார்.
தவம் என்றால் என்ன?
ஏன் ப்ராமண சன்யாசியான- ஸ்ரீராமாநுஜர் , பிக்ஷைக்குச் செல்லும் பொழுது கூட திருப்பாவையை மட்டுமே, விடாமல் சேவித்தார் ?
ஸ்ரீஆண்டாள் குலமறியாதவளா? மநு ஸ்ம்ருதி என்ன சொல்கிறது ?
“தபஸா கில்பிஷம் ஹந்தி”(-மனு-ஸ்ம்ருதி-1-21) – தவத்தினால் மனிதன் அசுத்தங்களை விலக்கிக் கொள்கிறான் / பாவங்களைப் போக்கிக்கொள்கிறான்.
“வித்யயா அம்ருதம் அஶ்நுதே” (-மனு-ஸ்ம்ருதி-1-21) – ஞானத்தினால் மோக்ஷம் அநுபவிக்கின்றான்.
தவத்தினால் சித்த சுத்தியை அடையும் நிலையும், ஞானத்தினால் மோக்ஷத்தை அநுபவிக்கும் பாக்கியமும், வேத அத்யாயன சிந்தனைகளினால் ஏற்படுகின்றது. ஆகையால் மநு ஸ்ம்ருதிப்படி வேதாத்யயனமே பெரும் தவமாக போற்றப்படுகின்றது.
இங்கு “தப :” என்னும் வடமொழிச் சொல்லுக்கு ஆலோசனை/சிந்தனை என்று பொருள்படும்.
யதா ஜாதபலோ வஹ்நிர் தஹத் ஆர்த்ராநபி த்ருமான் |
ததா தஹதி வேதக்ஞ கர்மஜம் தோஷம் ஆத்மந: || -மனு-ஸ்ம்ருதி-12-101
எப்படி பலமடைந்த அக்னி ஈரமரங்களையும் எரித்து விடுகிறதோ அதுபோல வேதமறிந்தவன் தனது கர்மங்களினால் ஏற்பட்ட தோஷங்களைப் பொசுக்கி விடுகிறான் என்கீறது. (ஆண்டாள் இதைத்தான், திருப்பாவை 5 ஆம் பாசுரத்தில் “போய பிழையும் புகுதருவான் நின்றனவும் தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய்” என்று பாடினார்.)
பித்ருதேவ மநுஷ்யாணாம் வேதஶ்சக்ஷு ஸநாதநம் |- -மனு-ஸ்ம்ருதி-12-94
பித்ருக்கள், தேவர்கள், மனிதர்கள் அனைவருக்கும் வேதமே நிரந்தரமான-ஞானசாதனமாயுள்ள அகக்கண்ணாக இருக்கிறது என்று திரும்பத்திரும்ப, அடிக்கடி கூறி இருப்பது வேதத்யயன சிந்தனைகளின் தனிச் சிறப்பையும் ,வேதங்களின் உயர்ந்த தன்மையையும் வெகு அழுத்தமாக நிரூபிக்கக் கூடிய வகையில் அமைந்துளது.
மேலும் அது “வேதாப்யாஸே யத்நவான் “ என்று ஒரு அந்தணனானவன் வேதாத்யயனத்தில் எப்பொழுதும் முயற்சி உடையவனாக இருக்க வேண்டும் என்றும்
வேதம் ஏவ அப்யஸேந் நித்யம் யதா காலம் அதந்த்ரித: |
தம் ஹி அஸ்யாஹு பரம் தர்மம், உபதர்மோ அன்ய உச்யதே ||
– மனு-ஸ்ம்ருதி -4-147
பொருள்: – எப்பொழுதும் வேதாத்யயனத்தை நித்தியமாகச் செய்ய வேண்டும் என்றும், அது மிகவும் உயர்ந்த தர்மம் என்றும், மற்றவை அதற்கு அடுத்தபடியாகத் தாழ்ந்துள்ளவைதான் என்றும் மனுஸ்ம்ருதி பல தடவைகள், பன்முறையாக வற்புறுத்திக் கூறுகின்றது.
எனவேதான் ஸ்ரீராமாநுஜர் “வேதம் அனைத்துக்கும் வித்து” என்று திருப்பாவையைக் கொண்டாடுவதோடு மட்டுமல்லாமல், தானும் அனவரதம் அதையே சிந்தித்தார்.
4000 பாசுரங்களுக்கும், திருப்பாவை -29 ஆம் பாசுரமான “சிற்றஞ் சிறுகாலே” பாசுரத்தை சாரமாக அறிவித்தார். அதனை எல்லா கர்பக்ருஹங்களிலும் தினமும் சேவிக்கவும் வைத்தார். தானும் பிக்ஷைக்குச் செல்லும்பொழுது கூட அதன் பொருள்களை சிந்தித்தார்.
இவ்வாறு ஸ்ரீஆண்டாள் அருளிய பாசுரங்களுக்கு, இவ்வளவு ஏற்றம் இருந்தது என்றால் அவளும்கூட அந்தணக் குலத்தைச் சார்ந்தவள் என்பது தெளிவாகவே விளங்கும். அவற்றுள் விரசம் சிறிதும் கிடையாது என்பதும் விளங்கும்.
ஸ்ரீஆண்டாள் திருவடிகளே சரணம்
வாலி என்பவன் யோகமார்க்கத்திற்கான ஒரு குறியீடு ஆவான். ஆனால்
சுக்ரீவ மஹாராஜரோ வைதீக -ஶரணாகதி மார்க்க குறியீடு ஆவார். வாலி
யானவன் மராமரம் ஒன்றினை பிடித்து, அதனுடைய அனைத்து இலைகளும் உதிரும்படி செய்வானாம். இவ்வாறே ஏழினையும் வாலி தனித்தனியே
ஜெயித்தவன். இந்த மராமரங்கள் என்பன 1)மூலாதாரம், 2)ஸ்வாதிஷ்டானம், 3)மணிபூரகம், 4) அநாகதம், 5)விஶுத்தி, 6)ஆக்ஞா, மற்றும் 7) ஸஹஸ்ராரம்
என்பன. வாலியானவன் மலைச் சிகரங்களைப் பெயர்த்து மேலே எறிதலும்,
திரும்ப பிடித்தலும் அணிமா,லகிமா,கரிமா, லட்டு, பூந்தி, காராசேவையாகும்.
இவை யாருக்கு வேண்டும்? ஒரு ஸ்ரீவைஷ்ணவனுக்கு “உண்ணும் சோறு பருகு நீர் திண்ணும் வெற்றிலை எல்லாம் கண்ணன்” தானே.
கிஷ்கிந்தையில், ஸ்ரீராமர் தன்னுடைய ஒரே அம்பால் ஏழு மராமரங்
களையும் ஏககாலத்தில் துளையிட்டார் என்கிறது ஸ்ரீராமாயணம். இங்கு துளையிடுவது என்பது அழித்தல் தொழில் ஆகும். அம்மரங்களை கொல்லாமல் வெறுமனே துளையிட்டார் என்பது காத்தல் தொழில் ஆகும். இவ்விரண்டினையும் செய்தவன் உருவாக்கவும் தெரிந்தவன் என்பது தன்னடையே கிட்டும் கருத்தாகும். வாலி(ஜீவாத்மா) போன்று தனித்தனியே ஜெயிக்காமல் ,ஏக காலத்தில்
துளையிட்டது, ஸ்ரீராமர் முக்காலத்திற்கும் தலைவர், (பரமாத்மா) என்பதாகும்.
ராவணன் மனத்திற்கும், சீதை பிராட்டி ஜீவாத்மாவுக்கும் குறியீடுகள். அவனுடைய பத்து தலைகள் என்பன நமது (5 அறிவு+5செயல்) புலன்களாகும். விபீஷணன் ஸாத்வீக மனநிலைக்கும், கும்பகர்ணன் தாமஸ மனநிலைக்கும் இந்திரஜித் ராஜச மனநிலைக்கும் குறியீடுகளாம்.
வாலீ ராவணனை ஜெயித்தது, மனத்தை யோகத்தால் வெல்லுவதே.
ஸ்ரீராமர் ராவணனை வென்றது ஜீவாத்மா ஶரணாகதி செய்து மனத்தை வெல்லுவதே.
சித்தர்கள் அயனத்தில்(வழி) சென்று 3000 வருடங்கள் யோகம்
செய்து, மிகமிகக் கடினமாக அடையும் நிலையை, எம்பெருமான் மீது காதல்
செய்து வெகு எளிதாக,வெகு விரைவில் கிட்டுவது என்பது ஆண்டாளுடைய
அயனம் என்னும் ராம +அயனம் (அ) ஶரணாகதி/வைதீக மார்க்கம். மேலும்
சித்தர்கள் சென்றது கேவலமான கைவல்ய மோக்ஷம். ஆண்டாள் அடைந்ததோ “ஸ்ரீகண்ணனுடன் உற்றோமேயாகி அவனுக்கே ஆட்செய்வது”
கொங்கை(முலை), அல்குல்(இடை) ஆகிய பெண்ணின் அங்க
வ்ர்ணனைகள், பக்தியின் உச்சநிலை குறியீடுகள்தாம். கொங்கை
பூரித்து பெருத்தல் என்பது பெருமாளின் மீதான விருப்பையும், இடை
சிறுத்தல் என்பது உலக பொருட்களின் மீதான வைராக்கியத்தையும் (ஆசையின்மை) குறிக்கும்.
உள்ளே உருகி நைவேனை உளளோ இலளோ என்னாத
உள்ளைகொள்ளிக் குறும்பனைக் கோவர்தனனைக் கண்டக்கால்
கொள்ளும்பயன் ஒன்றில்லாத கொங்கை தன்னைக் கிழங்கோடும்
அள்ளிப் பறித்திட்டு அவன் மார்பில் எறிந்து என் அழலை தீர்வேனே.
நாச்சியார் திருமொழி-13-9
I thank the author for a phenomenal scholarly article and the comments by Shri tg thulasiram.
The Victorian Christian/Islamic mentality UNFORTUNATELY pervades the Indian society and the super imposition of Christian/Islamic values onto our Hinduism and our great Tamil literature is causing anguish among the ignorants,hence the cacophony.Let us reclaim our culture and our way of life from the view point of our own Dharmic lens and not through the myopic view of the Islamic/Christian cults.
ஸ்ரீவைஷ்ணவ அக இலக்கியங்களில் காணப்படும் தலைவி, நற்றாய் மற்றும் தோழி என்னும் குணசித்திரங்கள் எவற்றைக் குறிப்பிடுவன ?
தலைவி, நற்றாய் மற்றும் தோழி
(I) தோழி: –
1.) நாம் பொதுவாக, ஒரு அரசகுமாரியை, சுயம்வரத்தில் அழைத்துச் செல்லும் பொழுதில், அங்கு வந்திருக்கும் ஒவ்வொரு அரசகுமாரனுடைய வீரம், கொடை, சீலம் என்னும் ஒழுகலாறுகளை அறிமுகப்படுத்துபவள் தோழி என்று படித்துள்ளோம். “இவன்தான் உனக்குச் சிறந்தவன், பொருத்தமானவன். ஆகவே இவனை மணந்துகொள்வாய்”- என்பாள்.
அவ்வாறே ஸ்ரீவைஷ்ணவத்தில் பரம்பொருள் யார் என்று தலைவிக்கு(ஜீவாத்மா) தெரிவிப்பவள் இந்த
தோழி(ஆசார்யன்) ஆவாள்.
அஷ்டாக்ஷர மந்த்ரத்தில் காணும் ஓம்காரம் தான் இந்த தோழி ஆகிறார்.இது எப்படியெனில் “ஓம்காரம்”- நமக்கும், பரமனுக்கும் உள்ள தொடர்பு மற்றும் அவனுக்குத் தொண்டு செய்வதே வாழ்வின் லட்சியம் என்றும் தெரிவிப்பது போலவாம்.
2) பிறகு, காதல் வயப்பட்ட தலைவிக்காகத், தலைவனிடம் தூதும் செல்வது உண்டு. அவளை விரைந்து மணம் புணரச் சொல்வதுமுண்டு.
உதாரணம்-a)ஸ்ரீசீதையிடம் சென்று, அவள் சொன்னவற்றை ஸ்ரீராமரிடம் ஹனுமான் சொன்னது. b)சுக்ரீவனுடைய (ஜீவாத்மா) நட்புக்காக ஸ்ரீராமபிரானிடம்(பரமாத்மா) ஹனுமான்(ஆசார்யன்) தூது சென்றது.
3) தலைவி காதல் கொண்டு, தலைவியின் நினைவாகவே உண்ணாது உறங்காது இருப்பதுண்டு. அதனைக் காணும் நற்றாய்க்கு தலைவின் காதலைத் தெரிவிப்பதும் தோழிதான்.
அவளுடைய கருத்துக்களைக் கூறும் பாடல்கள் தோழிப் பாசுரங்கள் எனப்படும்.
(II) நற்றாய்
அஷ்டாக்ஷரத்தில் காணப்படும் ”நம:” என்னும் சொல், நல்ல தாய் =நற்றாய் என்ற பொருள் தரும்.
தன்னுடைய மகள் காதல் வயப்பட்டாள் என்றும்
அவள் காதலிப்பது இந்தத் தலைவனைத் தான் என்றும் ,தோழியின் வாயிலாக அறிகின்றாள்.
பிறகு தன் மகளை, அவனுக்கு மணம் புணர, அனைத்து ஏற்பாடுகளையும் செய்கின்றாள். அதற்கான தடைகளை நீக்குகின்றாள்.
தலைவனுடனும், அவனுடைய உறவினர்களுடனும் பேசுவது, தன் மகளின் புலம்பல், ஆர்த்தியினைத் தெரிவிப்பது என்பன அவளுடைய பணிகளாகும்.
ஒரு ஜீவாத்மா, பரமனிடம் கூடுவதைத் தடுக்கும் தடைக்கற்களாவன
1) கல்விச்செருக்கு, 2)செல்வச் செருக்கு, 3)குலச்செருக்கு என்னும் இவை முக்குறும்புகள் ஆகும்.
2) அஹங்காரம்(இந்த உடலே “நான்” என்று நினைப்பது.)
3) மமகாரம் (இந்த உடலுக்கு உறவினர்களான மனைவி, மக்கள், வீடு,வாகனம், அடியாள் இவற்றைத் தனதாக நினைப்பது.இதனைத் தவிர்த்து மற்றவற்றை வெறுப்பது)
4) அவித்யா – ஆத்மா அல்லாதவற்றை ஆத்மாவாக அறிவது.
5) Etc…etc…etc
இன்று NEUROSCIENE மூலமாக, இந்த அஹங்கார, மமகாரங்களை, மருத்துவ உபகரணங்கள் கொண்டு ப்ரத்யக்ஷமாக யாருக்கும் DEMO காட்ட இயலும். அவற்றை சில நிமிடங்கள் வெல்லவும் முடியும்.(நிரந்தரமாக வெல்ல யோகம் (அ)ஒ பக்தி தான் வழியாகும். இந்த அஷ்டாங்க யோகமார்க்கம் ஸ்ரீவைணவத்தில் தடை செய்யப்பட்டதாகும்.)
இவ்வாறு, நற்றாயினுடைய கருத்துக்களைக் கூறும் பாடல்கள் தாய்ப் பாசுரங்கள் எனப்படும்.
(III) தலைவி
அஷ்டாக்ஷர மந்திரத்தில் காணும் “நாராயணாய” என்னும் சொல் தலைவி என்னும் குணசித்திரத்தைச் சுட்டுவதாகும்.
விளக்கம்: – தன்னுடைய தோழியினால் தலைவனைப் பற்றிக் கூறக் கேட்டு அவன்மீது காதலை வளர்க்கின்றாள். பின்னர் அவனுடைய பிரிவினால் வருந்துவதும், உண்ணாது-உறங்காது, பசலைநொயினால் வாடுவதும் இவளுடைய நிலைகள். முடிவில் மணம் முடிந்து அவனுடன் கூடி வாழ்வது என்பது நாம் காணும் இல்லற நிலைகள்.
பின்னர் அவள், தனக்கு உண்டி, உடை, பாதுகாப்பு, ஆனந்தம் என்று அனைத்துக்குமாகத் தன் கணவனைத் தவிர வேறு யாரையும் நாடாத கற்புள்ள குணவதியாகின்றாள். படிதாண்டாத பத்தினியாகின்றாள்.
அநன்ய போக்தா (நாராயணனைத் தவிர வேறு ஒரு இன்பமில்லை என்றிருப்பவர்) உதாரணம் – நாராயணனுக்காகவே தாம்பத்திய சுகத்தைக் கூட தொடவே தொடாத ஸ்ரீராமானுஜர், ஸ்ரீகூரத்தாழ்வான், ஸ்ரீஎம்பார், ஸ்ரீமுதலியாண்டான் முதலியோர்.
திருமணமே செய்து கொள்ளாத ஸ்ரீபிள்ளைலோகாசார்யர், ஸ்ரீமணவாளப் பெருமாள் நாயனார் போன்றோர்.
அநன்ய ஶேஷ கர்தா – ஸ்ரீமந்நாராயணனுக்கும், அவனடியாருக்கும் தவிர வேறு யாருக்கும் தொண்டு/அடிமை செய்யாதவர்.
அநன்ய சரண கர்தா – தனக்கு புகலாக/இருப்பிடமாக நாராயணன் மற்றும் அவனடியார் உறையும் இடம்/கோவில்களே என்றிருப்பவர்.
இவ்வாறு, தலைவியுனுடைய கருத்துக்களைக் கூறும் பாடல்கள் தலைமகள் பாசுரங்கள் எனப்படும்.
அருமை. சுதாகர் கஸ்தூரி அவர்கள் தரப்பிலிருந்தும் ஸ்ரீ துளசிராம் அவர்கள் தரப்பிலிருந்தும் அளிக்கப்பட்ட விளக்கங்கள் தெளிவாக இருக்கின்றன.
ரஸங்களுள் ச்ரேஷ்டமான ரஸம் ச்ருங்கார ரஸம் என்பது சான்றோர்களின் அபிப்ராயம்.
அறம் பொருள் இன்பம் எனும் த்ரிவர்க்கமாகட்டும் அறம் பொருள் இன்பம் வீடு எனும் சதுர்வித புருஷார்த்தமாகட்டும் காமம் என்பது இவ்வுலகில் முறையாக துய்க்கப்பட வேண்டிய விஷயம். ம்லேச்ச பாஷண்ட மதங்களிற் சொல்லப்பட்ட வண்ணம் காமம் என்பது பாபத்துக்கான விஷயம் இல்லை.
இலக்கியங்களுள் சொல்லப்படும் காமத்திற்கும் த்ராவிட முத்தமிழ் வித்தவர்கள் மேடையேறிக் கூச்சலிடும் ……….. காமம் என்ற பெயரில் பரப்புரை செய்யப்படும் ஆபாசத்திற்கும் மலைக்கும் மடுவிற்குமான வேறுபாடு நிச்சயம் உண்டு. முன்னது வாழ்க்கையில் துய்க்கப்பட வேண்டிய சாஸ்த்ரங்கள் அனுமதிக்கும் உயர்வான ஒரு விஷயம். த்ராவிடர்கள் மேடையில் கூச்சலிடும் ராமசாமிநாயக்கத்தனமான யார்வேண்டுமானாலும் யாருடன் வேண்டுமானாலும் காமம் துய்க்கலாம் எனும் காமம் தவிர்க்கப்பட வேண்டிய ………… ஹிந்துமதத்தின் …………. வைதிக, சைவ, வைஷ்ணவ, பௌத்த ஜைன ………… சமய நூற்கள் பாபத்திற்கு மனிதனை உள்ளாக்கும் என்று அடையாளப்படுத்தும் இழிசெயல்.
தகுந்த ஆசிரியரிடத்தில் பாடங்கேட்டு ஸ்ரீ வைஷ்ணவ ஸம்ப்ரதாயத்தைப் பற்றிச் சொல்லுபவர்களுடைய கருத்துக்கும் ஹிந்துப்பெயர் தாங்கி ஃப்ரான்ஸிஸ் க்ளூனித் தனமாக க்ரிப்டோ க்றைஸ்தவ கருத்துக்களை வைஷ்ணவம் என்ற முகமூடியில் தமிழ் ஹிந்து தளத்தில் பதிய முனையும் கருத்துக்களுக்கும் மலைக்கும் மடுவுக்கும் இடையே உள்ள வேறுபாடு உண்டு என்பதும் துலங்குகிறது.
நாமம் போட்டவரெல்லாம் வைஷ்ணவரென்றால் அக்னிஹோத்ரம் தாதாசார்யார் எனும் நபரும் கூட அப்படி அடையாளம் காண்பிக்கப்படுவார். ஆனால் நாமம் போட்டுக்கொண்டதற்காக வைஷ்ணவ அடையாளத்துக்காக வணக்கத்திற்கு வேண்டுமானால் உரியவராகலாமேயன்றி ………… சாஸ்த்ரங்கள் சொல்லும் கருத்துக்களிலிருந்து அவர் கருத்துக்கள் பின்னப்படுவதால் …………. ஆச்ரயிக்கத் தகுந்தவராகார் என்று அறியலாம்.
நாமம் போட்டுக்கொள்ளாதவரெல்லாம் வைஷ்ணவர்கள் அல்ல என்றும் ஒதுக்கவும் முடியாது. பூஜ்யரானவரும் வைஷ்ணவச் சுடராழி என்று ஸம்ப்ரதாய வைஷ்ணவ ஆசார்யர்களால் கொண்டாடப்படுபவரும் ஆகிய ஸ்ரீ டி.ஏ.ஜோஸஃப் ஸ்வாமின் அவர்கள் திருமண் எட்டுக்கொள்வதில்லை. தேசமுழுதும் சென்று ஸ்ரீ வைஷ்ணவ ஸம்ப்ரதாயத்தை பரப்பிக்கொண்டிருக்கிறார். ஆதலால் வைஷ்ணவ ஆசார்யர்களால் கொண்டாடப்படுகிறார்.வைஷ்ணவத்துக்கு எதிராக யார் என்ன கருத்துச் சொல்லிடினும் அதை முறையாக மறுக்கவும் மறுக்கிறார்.
இந்த தளத்தில் கருத்துப்பகிருகிறேன் பேர்வழி என்ற போர்வையில் ஆப்ரஹாமியத்தனமாக திருப்பாவையை இழிவு செய்த ம்லேச்சத்தனமான கருத்துக்களை வாசித்து நொந்ததற்கு இப்படிப்பட்ட கருத்துக்களை வாசித்ததில் மனம் நிர்மலமாகிறது.
ஆண்டாள் திருவடிகளே சரணம். அடியேன் சரணம். ஆழ்வார் திருவடிகளே சரணம் அடியேன் சரணம்.
கேள்வி: – திருப்பாவையும் நாச்சியார் திருமொழியும் கேவலம் தமிழ் சொற்களால் ஆனவையா ? இவைகளை சேவிப்பதனால் என்ன பயன் ?
பதில் : –
வேதக்ஷராணி யாவந்தி படிதாநி த்விஜாதிபி: |
தாவந்தி ஹரிநாமாநி கீர்திதாநி ந ஸம்ஶய: || – மநு ஸ்ம்ருதி
பொருள் :
வேதச்சொற்கள் பகவானுடைய நாமாக்களுக்கு சமமானவை.
பக்தர்களால்
i)எவ்வளவு வேதச்சொற்கள் உச்சரிக்கப்படுகின்றனவோ,
ii)பாராயணம் செய்யப் படுகின்றனவோ,
அவ்வளவும் ஹரிநாமங்கள் கீர்த்தனம் செய்யப்பட்டனவைகளாக ஆகின்றன.
கேள்வி:
1) வெறுமனே, திருப்பாவையை பாடியே, சமாதி நிலையை எய்தலாமா ?
2) எடுத்துக்காட்டு காட்ட இயலுமா?
பதில்: – திருவரங்கத்தில் நாள்தோறும் பிக்ஷைக்கு செல்லும் ஸ்ரீராமாநுஜர், ஸ்ரீஆண்டாள் அருளிய திருப்பாவை 30 பாசுரங்களைப் பாடிச் செல்வது வழக்கமாயிருந்தது. ஒருமுறை அவருடைய ஆசார்யரான ஸ்ரீபெரியநம்பிகளுடைய திருமாளிகையினை அடைந்தார் ஸ்ரீராமாநுஜர். அப்பொழுது 18 ஆம் பாசுரமான
“உந்து மதகளிற்றன் ஓடாத தோள்வலியன்
நந்த கோபாலன் மருமகளே நப்பின்னாய்
கந்தம் கமழும் குழலீ கடைதிறவாய்
வந்து எங்கும் கோழி அழைத்ததுகாண் மாதவிப்
பந்தல்மேல் பல்கால் குயிலினங்கள் கூவினகாண்
பந்தார் விரலி உன் மைத்துனன் பேர்பாட
செந்தாமரைக் கையால் சீரார் வளை ஒலிப்ப்
வந்து திறவாய் மகிழ்ந்து ஏலோர் எம்பாவாய்”.
என்னும் பாசுரத்தினை ஆனந்தமாக பாடிக் கொண்டிருந்தார். இது சமாதியினுடைய முதல் நிலை என்னும் பரபக்தியாகும். அச்சமயம், ஸ்ரீபெரியநம்பியினுடைய பெண்பிள்ளையான , ஸ்ரீ அத்துழாய் —“சீர் ஆர் வளை ஒலிக்கின்ற, செந்தாமரைக் கைகளால்” கதவுகளைத் திறக்கவும் கண்டவர், அவளை நப்பின்னைப் பிராட்டியே நேரிலே தோன்றினாளோ ? என்று வியந்தார்.
பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், ஸ்ரீஆண்டாள் ஸ்ரீநப்பின்னையை கண்டு ,இப்பாசுரதத்தை எழுதினாள். அவள் அடைந்த, அதே சமாதி நிலையான பரக்ஞானம் என்னும் நிலையினை அடைந்து மூர்ச்சியாகிக் கீழே விழுந்தார்.
(பரபக்தி : – முதலில் கண்ணனையோ அவன் தேவிமார்களையோ
த்யானிக்கத் தொடங்கி, அச்சிந்தனையானது ஒரு எண்ணெயின் ஒழுக்குப் போல இடைவீடில்லாமல் தொடருவது ஆகும். இது முதல் நிலை ஆகும்.
பரக்ஞானம்:- தான் எண்ணெய் ஒழுக்குப் போலக் காண்கின்ற ஒரு இஷ்ட தேவதை, தன் கண் முன்னே நேரிலே தோன்றும் நிலை ஆகும். இது இரண்டாம் நிலை ஆகும்.
பரமபக்தி : – வைகுண்டத்தை அடைந்து, அவனுடைய அடியார்களுடன் கூடி, அவனுக்குத் தொண்டு புரிந்து இன்பம் துக்கும் நிலையாகும். இதனை மூன்றாம் நிலை என்பர்.)
ஸ்ரீராமாநுஜருடைய சீடரான ஸ்ரீஅநந்தாழ்வான் திருப்பதி-திருமலையில், ஸ்ரீஆண்டாளுடைய திருநக்ஷத்திரமான ஆடிப்பூர தினத்தில், அவள் நினைவாகவே உயிரைத் துறந்து வைகுந்தம் அடைந்தார். இது மூன்றாம் நிலை ஆகும். அவருடைய ப்ருந்தாவந்த்தில் (திருவரசு), இச்செய்தியினை இன்றும் காணலாம். (திருமலையில் தெற்கு ரத வீதியில் நைருதி மூலை)
ஸ்ரீராமாநுஜருக்கு எதற்காக, கோயிலண்ணர் என்னும் பெயர் வாய்த்தது ?
ஸ்ரீஆண்டாள் அருளிய நாச்சியார் திருமொழி – 9ஆம் பதிகம்-6 ஆம் பாசுரத்தில் –
நாறு நறும்பொழில் மால் இரும்சோலை நம்பிக்கு நான்
நூறு தடாவில் வெண்ணெய் வாய்நேர்ந்து பராவி வைத்தேன்
நூறு தடா நிறைந்த அக்கார அடிசில் சொன்னேன்
ஏறு திருவுடையான் இன்று வந்து இவை கொள்ளுங் கொலோ.
“பொருள்: – ஹே சுந்தரத் திருத்தோளுடையானே ! என்னை நீ ஆட்கொண்டால், உனக்கு நான் நூறு குடங்களில், வெண்ணெயும், மற்றொரு நூறு குடங்களில் அக்காரஅடிசிலும் செய்து கொடுப்பேன் என்று ப்ரார்த்தித்து இருந்தாள்.
இறைவனும் ஸ்ரீநாச்சியாரை, அவ்வாறே தன்னுடன ஐக்கியமாக, ஏற்றுக் கொண்டான். எனினும் அவள் வாக்குக் கொடுத்தபடி, இந்த ப்ரார்த்தனையை நிறைவேற்றாமலேயே அவள், வைகுந்தம் சென்றாள். பின்னாளில் இதை அறிந்த ஸ்ரீராமானுஜர் அவற்றை, பண்ணிவித்து, மதுரை.அழகருக்கு அமுது செய்வித்தார். இது, ஒரு உடன்பிறந்த சகோதரன் செய்யும் பணி ஆகும்.
எனவே அர்ச்சகர் மூலமாக ஸ்ரீஆண்டாள் –ஆவேசித்து அவரை –“ வாரும் நம் கோயில் அண்ணரே” என்று அருளப்பாடு சாற்றினாள். அண்று முதல் அவருக்கு
“சொல்லார் தமிழொரு மூன்றும், சுருதிகள் நான்கும், எல்லையில்லா அறநெறி யாவும் தெரிந்த” அவருடைய பார்வையில் ஸ்ரீஆண்டாள் அருளிய 1)திருப்பாவை மற்றும் 2)நாச்சியார் திருமொழி என்னும் நூல்களிலுள் காணப்படும் எந்த ஒரு பாசுரத்திலும், விரசமே கிடையாது. இவற்றை அவருடைய சீடரான வடுகநம்பி அருளிய “ஸ்ரீராமானுஜருடைய 108 திருநாமங்கள்” என்னும் வடமொழி நூலில் காணலாம்.
கேள்வி:- வைணவ ஆலயங்களில், எம்பெருமானுக்கு அமுது செய்விக்க எத்தெந்த பாசுரங்களை சேவிக்க வேண்டும் ?
பதில் :-
நாச்சியார் திருமொழி – 9ஆம் பதிகம்-6 மற்றும் 7 ஆம் பாசுரங்கள்
நாறு நறும்பொழில் மால் இரும்சோலை நம்பிக்கு நான்
நூறு தடாவில் வெண்ணெய் வாய்நேர்ந்து பராவி வைத்தேன்
நூறு தடா நிறைந்த அக்கார அடிசில் சொன்னேன்
ஏறு திருவுடையான் இன்று வந்து இவை கொள்ளுங் கொலோ.
இன்று வந்து இத்தனையும் அமுது செய்திடப் பெறில் நான்
ஒன்று நூறு ஆயிரமாகக் கொடுத்துப் பின்னும் ஆளும்செய்வன்
தென்றல் மணங்கமழும் திருமாலிரும் சோலை தன்னுள்
நின்ற பிரான் அடியேன் மனத்தே வந்து நேர்படிலே.
இவற்றை சேவித்த பின்னர், வேதத்தில் காணும் “அன்ன சூக்தம்” சேவிப்பர்கள். பிறகு “மதுசூக்தம்” சேவிப்பர்கள். அதன் பின்னர் சில புராண ஸ்லோகங்களை சேவிப்பர்கள்.
அன்னசூக்தம் எதற்கு? மதுசூக்தம் எதற்கு?
அன்னசூக்தம் என்பது பற்பல தளிகை ப்ரசாத வகைகளுக்கானது. மதுசூக்தம் என்பது ஜீரணம் வேண்டி தேன் மற்றும் ஓஷதிகளை குறித்த சம்ஹிதா மந்த்ரம். இவற்றுள் ஸ்ரீநாச்சியார் அக்கார அடிசில் (அக்காரம்-வெல்லம் + அடிசில்=சோறு) என்று அன்னசூக்தம் சொன்னாள். (அக்காரவடிசில்=அன்னம்)
கண்ணனுக்கு வெண்ணெய் மட்டும் தான் “உண்ணும் சோறு, பருகும் நீர் திண்ணும் வெற்றிலை” என்பதனால் தேனை விடுத்து ப்ரியமான வெண்ணெயைச் சொன்னாள் (வெண்ணெய்=தேன்). அதற்குப் பின்னர் ஹிதமான அன்னத்தைச் சொன்னாள்.
வெண்ணெயானது அவனுக்கு மிகமிகமிக விருப்பமானபடியால், ஆகம க்ரமத்தை மாற்றி வெண்ணெயை முதலாவதாகவும், அக்கார அடிசிலை இரண்டாவதாகவும் சொன்னாள்.
கேள்வி:- ஸ்ரீராமர் சாராயம் குடிப்பாரா ? மாம்ஸம் சாப்பிடுவாரா ?
பதில்:- சக்கரவர்த்தித் திருமகன் வனவாசத்தில்,
1) அன்னத்தை விடுத்து, கிழங்கு, கனிகளின் சதைப் பகுதியியை பக்குவம் செய்து அமுது செய்வார்.
2) ஜீரண அடியாக தேன+ஓஷதிகளை அமுது செய்வார்.
பிராட்டியைப் பிரிந்து அவர் எதையுமே அமுதுசெய்யவில்லை.
சுந்தரகாண்டம் 36 ஆம் சர்கம் ஹனுமான் சீதைப்பிராட்டியை நோக்கி,
ந மாம்ஸம் ராகவோ புங்க்தே ந ச ஏவ மது ஸேவதே | -41
பொருள்:- தாயே ! உன்னைப் பிரிந்து பெருமாள் கனி-கிழங்குகளையும், தேன்-ஓஷதிகளையும் அமுது செய்வதே இல்லை.
வடமொழியில் மாம்ஸம் = கிழங்கு-கனிகளின் சதைப் பகுதியாகும். மது என்பது தேன் ஆகும். சுராபானம் என்பது தான் சாராயத்தைக் குறிக்கும்.
உதாரணமாக 24 ஆம் சர்கம் -47 ஆம் ஸ்லோகம்
சுரா ச ஆநீயதாம் க்ஷிப்ரம் ஸர்வசோக விநாஶிநீ |
மானுஷம் மாம்சம் ஆஸ்வாத்ய ந்ருத்யாமோத நிகும்பிலாம் ||
பொருள்:- (அரக்கியர், அசோகவனத்தில், சீதைப்பிராட்டியை பயமுறுத்திப் பேசியது) எல்லாத் துயரங்களையும் போக்கும், சாராயத்தைக் கொண்டு வாருங்கள். உடனே மானுஷியான இவளுடைய மாம்ஶத்தைக் ருசித்துத் தின்று, நிகும்பிலையில் கூத்தாடுவோம்.
இவற்றைப் பற்றி, ஏதுமறியாத கிருஸ்துமஸ் வாழ்த்து சொல்லி, ரம்ஜான் கஞ்சி குடிக்கும் கருணாநிதி –“ இராமன் மது அருந்துபவன். மாம்சம் உண்ணுமவன்” என்றான்.
கூரத்தாழ்வான் ப்ரார்தித்த பரபக்தி, பரக்ஞானம் & பரமபக்தி
ஸ்ரீமஹாலக்ஷ்மி மீது கூரத்தாழ்வான் அருளிய ஸ்ரீஸ்தவத்தில் , “ஸ்வஸ்தி ஸ்ரீர் தசாத்” என்று முதல் ஸ்லோகத்தில் ஸ்ரீமஹாலக்ஷ்மியைப் புகழ்ந்தார் ஆழ்வான். பின்னர் இரண்டாம் ஸ்லோகத்தில் , தாயாருக்கும் ஆழ்வானுக்கும் நடக்கும் உரையாடல் பின்வருமாறு.
ஹே ஸ்ரீர் தேவி ! ஸமஸ்த லோக ஜநநீம் ட்வாம் ஸ்தோதும் ஈஹாமஹே
யுக்தாம் பாவய பாரதீம் ப்ரகுணய ப்ரேம ப்ரதாநாம் தியம் | பக்திம் பந்தய நந்தயாஶ்ரிதமிமம் தாஸம் ஜநம் தாவகம்
லக்ஷ்யம் லக்ஷ்மீ கடாக்ஷ வீசி விஸ்ருதேஸ் தே ஸ்யாம சாமீ வயம் ||
ஸ்ரீஸ்தவம் – 2
தாயார் : – ஆழ்வான் ! நீ என்னை (ஸ்வஸ்தி) மங்களத்தை தந்தருள வேணும் என்று கேட்டாய். உனக்கு தனம், மக்கட்செல்வம், கால்நடை, வேலையாள் என்று எந்தவகையான ஸ்வஸ்தி வேணுமோ கேளும், தருகிறேன்.
கூரத்தாழ்வான்:- தாயே ! அந்த அல்ப உலகியல் விஷயங்களை விரும்பி அடியேன் வரவில்லை ! உம்மை வாயாரத் துதிக்க வந்தேன்.
தாயார் : – ஆயினும், என்னிடத்துப் ப்ரார்தித்துப் பெறவேண்டியது என்ன இருக்கிறது. நீர் பெரிய பண்டிதர் ! மஹாகவி ! இஷ்டப்படி ஸ்தோத்திரம் பண்ணும். இதில் புதிதாக நானளிக்க வேண்டிய ஸ்வஸ்தி(மங்களம்) என்ன இருக்கிறது?
கூரத்தாழ்வான்:- இங்ஙணம் சொல்லலாகாது. உம்மைப் பாங்காகத் துதிப்பதற்கு உரிய சரஸ்வதி ஸம்ருத்தியை(திருநாவீறு) அருள வேணும்.
தாயார் : -அந்தத் திருநாவீறு உமக்கு முன்னமே வாய்த்திருக்கிறது. வேறு தேவை உண்டாகில் கேளும்.
கூரத்தாழ்வான்:- வாயால் ஏதோ சில சொற்களைச் சொல்லுகிறேனே ஒழிய, உண்மையான அன்பு மிகுந்து, கனிந்த புத்தி எனக்கு இல்லை. அப்படிப்பட்ட புத்தியை அருள வேண்டும்.
தாயார் : – என்னை துதிக்க வேணுமென்று நீர் விரும்பின போதே, அப்படிப்பட்ட புத்தி உமக்கு உண்டாய் விட்டது. அன்பு மிகாமலும், நெஞ்சு கனியாமலும் இருந்தால் என்னைத் துதிக்க நீர் முயலமாட்டீர். ஆன பின்பு அப்படிப்பட்ட புத்தி உமக்கு கைகூடியே இருக்கிறது. வேறு தேவை உண்டாகில் கேளும்.
கூரத்தாழ்வான்:- உம்முடைய பேரருளால் ஏதோ சிறிது பக்தி கிடைத்திருக்கிறது. அது பரபக்தியாகவும், பரக்ஞானமாகவும், பரமபக்தியாகவும் முதிரும்படி அருள்புரிய வேணும்.
தாயார் : -அதை நீர் விரும்ப வேண்டா . ஆண்டாளுக்கும், ஆழ்வார்களுக்கும் போலே காலப்போக்கில் படிப்படியாக உமக்குத் தன்னடடையே பரிணமிக்கும். க்ரமமாகத் தன்னடையே விளையப் போவதை விரும்புவதேன்?
கூரத்தாழ்வான்:-அம்மா ! எப்போது அந்த பக்தி முதிரப் போகிறது என்று நான் எதிர்பார்த்திருக்கவும் , அதுவரை பொறுத்திருக்கவும் சக்தி உடையவனில்லை.
எனவே உம்மை வந்து பணிந்த என்னை இப்போதே அந்தரங்க கிங்கரனாக்கி பணிகொண்டு மகிழ்விக்க வேணும். அதற்குறுப்பாக உம்முடிய குளிர்ந்த கடாக்ஷங்கள் அடியேன் மீது விழ வேண்டும். இவ்வளவே அடியேன் விரும்புவது என்றார்.
ஒரு தாய்க்கும் மகனுக்குமான உரையாடல் இப்படித்தான் இருக்கும். ஆனால் என்னுடைய ஸ்ரீஆண்டாள் தன்னுடைய நாச்சியார் திருமொழியின் முதல் பதிகத்தில் காமதேவனுக்கும், அவன் தம்பி வசந்தனிடமும் ,தன்னை திருவேங்கடத்தான் மீது, தனக்கு ஏற்கனவே பரபக்தி உண்டாய் விட்டதாகவும், மேலும் இரண்டாம் நிலையான பரக்ஞானத்திற்கு தம்மை உயர்த்தும்படி ஶரணாகதி செய்கின்றாள். இவற்றுள் சர்ச்சைக்குரிய 4, 5 மற்றும் 7 ஆம் பாசுரங்களை இங்கே காணலாம்.
சுவரில் புராண நின் பேர் எழுதி சுறவ நற்கொடிக்களும் துரங்கங்களும்
கவரிப் பிணாக்களும் கருப்பு வில்லும் காட்டித் தந்தேன் கண்டாய் காமதேவா
அவரைப் பிராயம் தொடங்கி என்றும் ஆதரித்து எழுந்த என் தட முலைகள்
துவரைப் பிரானுக்கே சங்கல்பித்துத் தொழுது வைத்தேன் ஒல்லை விதிக்கிற்றியே.-பாசுரம் -4
இதனை வார்த்தைக்கு வார்த்தை அப்படியே ஸ்ரீராமாயணத்தில் காணலாம்.
பாலகாண்டம் 18 ஆம் சர்க்கம் 28 ஆம் ஸ்லோகம் பாருங்கள்.
பால்யாத் ப்ரப்ருதி ஸுஸ்நிக்தோ லக்ஷ்மணோ லக்ஷ்மீவர்தந: |
ராமஸ்ய லோக ராமஸ்ய ப்ராது: ஜ்யேஷ்டஸ்ய நித்யஶ: ||
பால்யாத் = அவரைப் பிராயம்
ப்ரப்ருதி = தொடங்கி என்றும்
ஸுஸ்நிக்தோ = ஆதரித்து (ஸ்நிக்தம் என்றால் எண்ணெய் அல்லது அதுபோன்ற விடாத அன்பு)
லக்ஷ்மணோ லக்ஷ்மீவர்தந: = தடமுலைகள் (கைங்கர்யம் அல்லது தொண்டு)
திருவளர்செல்வனான லக்ஷ்மணன் என்று இதற்கு நேரடிப் பொருள் கொண்டு விளக்குவோம்.
இப்பொழுது திரு என்னும் சொல்லுக்கு என்ன பொருள்? திரு என்றால் தொண்டு என்றே பொருள். ஒரு அரசு ஊழியர் மக்களுக்கான தொண்டன் ஆவார். கவர்னரும், ஆளுனரும், முதல்வரும், பிரதமரும், ஜனாதிபதியும் அப்படியே மக்கள் தொண்டர்கள்தான். அதற்குத்தான் இவர்களுக்கு ஊதியம், வீடு, வாகனம், ஆட்கள், பதவி இத்யாதி கொடுக்கப்பட்டு கௌரவிக்கப்படுகின்றார்கள்.
ஸ்ரீமான், மேதகு, மாண்புமிகு, திரு என்பன ஒருபொருட்பன்மொழிகளாம். இவற்றிற்கு மக்கள்தொண்டன் என்றே பொருள் வரும்.
அற்ப ஜீவாத்மாக்களான நமக்குத் தொண்டு புரியும் இவர்களுக்கே இவ்வளவு படாடோபம் என்றால், அனைத்து ஜீவர்களின் (நாரங்களின்) அயநமான(இருப்பிடம்) நாராயனுடைய திருவடிகளை அனவரதம் பிடிக்கும் ஸ்ரீமஹாலக்ஷ்மிக்கு எவ்வளவு ஊதியம், வீடு, வாகனம், ஆட்கள், பதவி இருக்கும் ?
திருவாய்மொழி-9-2-10 யில்
“வடிவிணை இல்லா மலர்மகள் மற்றும் நிலமகள் பிடிக்கும் மெல்லடியை கொடுவினையேனும் பிடிக்க நீ ஒருநாள் கூவுதல் வருதல் செய்திடாயே” என்று தொண்டினை வேண்டுகிறார் நம்மாழ்வார். அதைத்தான் முலைகள் என்கிறாள் என்னுடைய தாயான ஸ்ரீஆண்டாள்.
நாம் சினிமா நடிகர் வடிவேலு, மற்றும் பலருடைய நகைச்சுவை வசனங்களை நிஜ வாழ்க்கையில் பயன்படுத்துகின்றோம். ஆனால் உரையாசிரியர்கள், ஸ்ரீராமாயணத்திலேயே பிறந்து வளர்ந்தவர்கள் ஆதலில் அதை வேண்டிய இடத்தில், வேண்டியவாறு, கொண்டு கூட்டி பயன்படுத்துகின்றனர். 4 வயதில் ராமாயணம் கேட்ட பாக்கியம் தந்தாள் என்னுடைய தாயார். ஆதலால், அடியேனுக்கு அவரைப் பிராயம் என்றால் பால்யாத் ப்ரப்ருதி என்று மிகமிகச் சுலபமாக நினைவுக்கு வருகின்றது. கொண்டு கூட்ட முடிகின்றது. இது வைரமுத்து, தினமணி.வைத்திக்கு போன்றோருக்கு திமிர் பேச்சு போன்றுதான் இருக்கும்.
மேலும் 5 ஆம் பாசுரம்
வானிடை வாழும் அவ்வானவர்க்கு மறையவர் வேள்வியில் வகுத்த அவி
கானிடைத் திருவதோர் நரிபுகுந்து கடப்பதும் மோப்பதும் செய்வது ஒப்ப
ஊனிடை ஆழி சங்கு உத்தமர்க்கு என்று உன்னித்து எழுந்த என் தடமுலைகள்
மானிடவர்க்கென்று பேச்சுப் படில் வாழகில்லேன் கண்டாய் மன்மதனே
அயோத்யாகாண்டம் சர்க்கம் -54 ஸ்லோகம் 31
ந ச ஸீதா த்வயா ஹீநா ந ச அஹம் அபி ராகவ |
முஹூர்தம் அபி ஜீவாவோ ஜலாந் மத்ஸ்யாந் இவோத்ருதௌ ||
என்னை அயோத்திக்கு திரும்பச் சொல்லும் ராகவா ! நீ இல்லாமல் சீதையோ, நானோ ஒரு முஹூர்த காலம்கூட உயிரோடு இருக்க மாட்டோம். தண்ணீருக்கு வெளியில் போடப்பட்ட மீனைப்போல சிறிது நேரத்தில் துடிதுடித்து இறந்து போவோம்.
இப்பொஹ்ழுது பாலகாண்டம்-18 ஆம் சர்கத்தில் 28,29 மற்றும் 30 ஸ்லோகங்களை ஒரு திரளாகப் பார்ப்போம்.
பால்யாத் ப்ரப்ருதி ஸுஸ்நிக்தோ லக்ஷ்மணோ லக்ஷ்மீவர்தந: |
ராமஸ்ய லோக ராமஸ்ய ப்ராது: ஜ்யேஷ்டஸ்ய நித்யஶ: || -28
ஸர்வப் ப்ரியகரஸ் தஸ்ய ராமஸ்யாபி ஶரீரத: |
லக்ஷ்மணோ லக்ஷ்மீஸம்பந்நோ பஹி ப்ராண இவாபர: || -29
ந ச தேந விநா நித்ராம் லபதே புருஷோத்தம: |
ம்ருஷ்டம் அன்னம் உபாநீதம் அஶ்நாதி ந ஹி தம் விநா || -30
பொருள் : மக்களால் பெரிதும் விருப்பப்படுபவரும், மூத்த சகோதரருமான ஸ்ரீராமருடன் சிறுவயது முதற்கொண்டே திருவளர்ச் செல்வனான லக்ஷ்மணன் மிகவும் ஒட்டுதலுடன் பழகி வந்தான். அவனுக்குத் தன் உடம்பைக் காட்டிலும் ஸ்ரீராமனிடம் அதிகப் ப்ரீதி இருந்தது. அனைத்துச் செழுமைகளும் நிறைந்த லக்ஷ்மணன் ஸ்ரீராமருக்கு ஶரீரத்திற்கு வெளியே உள்ள உயிர் போல் விளங்கினான். அவன் இல்லாமல் புருஷோத்தமனான ஸ்ரீராமர் உறங்குவதில்லை. தனக்குக் கொடுக்கப்படும் உயர்வகை உணவுகளை அவனில்லாமல் உண்பதில்லை.
இனி பாசுரம் 7
காயுடை நெல்லொடு கரும்பமைத்துக் கட்டி அரிசி அவல் அமைத்து
வாயுடை மறையவர் மந்திரத்தால் மன்மதனே உன்னை வணங்குகின்றேன்
தேசமுன்னளந்தவன் திரிவிக்கிரமன் திருக்கைகளால் என்னைத் தீண்டும் வண்ணம்
சாயுடை வயிறும் என் தடமுலையும் தரணியில் தலைப் புகழ் தரக்கிற்றியே.
“தடமுலை” என்னும் சொல் மூன்று பாசுரங்களிலும் குறிப்பாக லக்ஷ்மணனை (அ) தொண்டினை சுட்டுகின்றது. அடியேன் ஏற்கனவே வேறு கட்டுரைகளில் குறித்தது போல
முலை பெருக்கம் என்பது பக்தியின் முற்றிய நிலை (அ) பரபக்தி, பரக்ஞானம் , பரமபக்தியாகும்.
வயிறு (அ) இடை (அ) அல்குல் என்பன சிறுத்திருப்பது உலகியல் விஷயங்களில் வைராக்கியத்தினை(ஆசையின்மை) குறிக்கும்.
ஜடாயு மீமாம்சை மார்க்கம் (சரி)
சம்பாதி வேதாந்த மார்க்கம் (சரி)
அங்கதன் நாம சங்கீர்த்தன மார்க்கம் (சரி)
வாலி நிரீஶ்வர யோக மார்க்கம் (தவறு)
சப்தஜன ரிஷிகள் ஸேஶ்வர யோக மார்க்கம் (சரி)
ஸுக்ரீவன் ஶரணாகதி மார்க்கம் (சரி)
நீலன் அக்னிஷ்டோம மார்க்கம் (சரி)
கௌதமர் தர்க்க/வைஶேஷிக மதம் (சரி)
ஜாபாலி சார்வாக, ஜைன,பௌத்த மதங்கள் (தவறு)
இவை கூரத்தாழ்வான் ஸ்ரீமஹாலக்ஷ்மியிடம் ப்ரார்த்தித்த படியே, என்னைப் பெற்ற தாயான் ஸ்ரீஆண்டாள் மன்மதனிடம் ஶரணாகதியாகப் ப்ரார்திக்கின்றாள்.
ஸ்ரீஆண்டாள் ஸமேத ரங்கமன்னார் திருவடிகளே சரணம்
பண்டைய காலங்களில் கோவில்களில் தீவட்டிகள் மற்றும் குத்து விளக்குகள்தாம்.கூட்டமோ சில நுற்றுக்கணக்கில்தான். இன்றோ ஜொலிக்கும் விளக்குகள் இரவைப் பகலாக்கிக்கொண்டிருக்கின்றது. வயது வந்தோர்கள் பார்க்க வேண்டிய காட்சிகளை பொது இடத்தில் சிலைகள் அரங்கேற்றுவது கலாச்சார சீரழிவு என்றுதான் முடிவு செய்ய வேண்டும்.கம்பன் எழுதிய ஆபாசம் மற்றவா்களை பாதிப்பதில்லை.கம்பராமாயாணம் படித்தவா்கள் எத்தனைபேர் ?ஏட்டில் முடங்கிக் கிடக்கும் ஆபாசங்களின் வீச்சு ஏதும் இல்லை.ஆகவே அவைகள் தீங்கற்றவை.ஆனால் கோபுரங்களில் ஆபாச சிலைகளை வைத்து விட்டு என்ன விளக்கம் சொன்னாலும் அது ஏமாற்று வேலைதான்.
யான் நோக்குங்கால் நிலன் நோக்கும் நோக்காக்கால்
தான் நோக்கி மெல்ல நகும்
என்பது அற்புதமான ஆண்-பெண் அன்பை பற்றிய ஒரு வர்ணனை. பிற இலக்கியங்களில் இப்படிப்பட்ட ஒரு வர்ணனை கிடையாது என்று நம்புகின்றேன்.இது ஆபாசம் அல்ல.மடல் வாழை தொடை இருக்க மச்சம் ஒன்று அதில் இருக்க என்ற பாடல் பச்சை ஆபாசம்.இன்று திரைப்படங்களில் வரும் காதல் காட்சிகள் போர்னோகிராமிதான்.ஒழுங்குபடுத்தவில்லையெனில் தட்டாம்பாறை என்ற ஊரில் 14 வயது சிறுவன் 6 வயது சிறுமியை பாலியல் கொடுமை செய்து கொலை செய்துள்ளான் என்பது போன்ற செய்திகள் நிறையவே வரும் .சந்திக்க தயாராக இருக்க வேண்டும். நமது வீட்டிற்கு இப்படி ஒரு சோதனை வந்தால் …………………………………………………….தாங்க முடியுமா ?
வினவு தளத்தில், அதன் வக்கிரம் பிடித்த பதிவர்களுடனும் தமிழர்களின் தாயான கோதை நாச்சியாருக்காக மிகவும் போராடி கொண்டிருக்கிறேன், முடிந்தால் எனக்கு அங்கு வந்து விவாதத்தில் பங்கு பெற்று உதவி செய்யயும், அல்லது ஆண்டாள் சார்ந்த தரவுகளை எமக்கு அளிக்கவும்.. மறுமொழியினை மட்டுறுத்தாமல் வெளியிடவும்.
விவாத களம்:- https://www.vinavu.com/2018/02/04/soda-bottle-jeeyar-teaser/#comments
அன்பு சஹோதரி ரெபெக்கா அவர்களுக்கு
வணக்கம். இந்த தளத்தில் எமது ப்ரியத்திற்குரிய நண்பரான ஸ்ரீமான் தாயுமானவன் அவர்களை க்றைஸ்தவராக மதம் மாற வெளிப்படையாக அழைப்பு விடுத்த அம்மணி தாங்கள் தானா? தெரியவில்லை?
அது தாங்களாகவே இருந்தாலும்………………
தாங்கள் செய்து வரும் இப்பணிக்கு எமது சிரம் தாழ்ந்த வணக்கங்கள். தங்களது உயரிய உணர்வுகளுக்கு எமது சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.
இங்கு ஆண்டாளம்மையைப் பற்றிய பதிவுகள் அவற்றுக்கான உத்தரங்களை வாசித்துப் பார்த்தால் தங்களுக்கு இந்த விஷயம் பற்றிய ஒரு முழுப்புரிதல் நிச்சயம் கிட்டும். திருப்பாவை மற்றும் நாச்சியார் திருமொழி போன்ற பாசுரங்கள் சொல்லும் கருத்துக்கள் என்ன என்பதை தலைமுறை தலைமுறையாக ஸ்ரீ வைஷ்ணவர்கள் இவற்றிற்கு வ்யாக்யானங்கள் அருளிச்செய்திருக்கிறார்கள். அவை தமிழ் ஹிந்து தளத்தில் வெளியாகியுள்ள பதிவுகளிலும் விவாதங்களிலும் விளக்கப்பட்டுள்ளன. அவற்றை பொறுமையாக பரிசீலனை செய்யுங்கள் அம்மா. தமிழும் சங்கதமும் கலந்த மொழிநடையின் பாற்பட்டு ஏதாவது விளக்கங்கள் தங்களுக்கு முழுமையாக விளங்கவில்லை என்றால்…………. அவற்றைத் தெளிவாக குறிப்பிட்டீர்கள் என்றால்………. இந்த தளத்தில் பங்கேற்கும் அன்பர்கள் தங்களுக்கு நிச்சயம் முழுமையான விளக்கம் அளிப்பார்கள்.
பெண்ணியம் போற்றும் எந்த ஒரு நபரும் இந்த விஷயத்திற்காக தங்கள் குரலை எழுப்பியதாக எனக்கு நினைவில்லை. தாங்கள் வினவு தள விவாதங்கள் பற்றி இங்கு குரல் எழுப்பியுள்ளீர்கள். எத்தனையெத்தனையோ தமிழ்க்குழுமங்களில் ………….. தமிழ் மரபுக்காக தாங்கள் பாடுபடுகிறோம் என்று தோள் தட்டும் குழுமங்களில் ………….. ஒன்று இந்த விஷயம் விவாதத்துக்குக் கூட எடுத்துக்கொள்ளப்படவில்லை. அல்லது அப்படியே விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டாலும்………… மரபு போற்றுபவர்களாக தங்களை முன்னிறுத்துபவர்கள்………. ஆண்டாளம்மையை தரம் தாழ்ந்து இழிவு செய்வதையே கண்ணுற்றேன்.
தாங்கள் க்றைஸ்தவ மதத்தினை பின்பற்றுபவர் ஆயினும் இந்த விஷயத்தை மேலெடுத்து வினவு போன்றதொரு தளத்தில் இதை விவாதிக்க முனைந்தது மனதுக்கு மிகவும் நெகிழ்வளிக்கிறது. தங்களது பணி சிறக்க. தாங்கள் வணங்கும் கடவுள் தங்களுக்கு குறையிலா அறிவும் தெளிவான சிந்தனைகளும் நீண்ட ஆயுளையும் தங்களுக்கு அளிக்கட்டும். நான் வணங்கும் எனது குலதெய்வம் பழினிப்பதிவாழ் பாலகுமாரனிடமும் இதற்கு நான் இறைஞ்சுவேன்.
க்றைஸ்தவர்கள் முன்னெடுக்கும் மதமாற்றம் போன்ற சில விஷயங்களில் எங்களுக்கு கடுமையான ஆக்ஷேபங்கள் இருக்கிறது. முஸ்லீம் சஹோதரர்களுடைய நிலைப்பாடுகள் பலவற்றிலும் ஹிந்துக்களாகிய எங்களுக்கு ஆக்ஷேபங்கள் இருந்தாலும் ஹிந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்குமிடையே நல்லிணக்கம் வேண்டி ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக சங்கத்தினர் முஸ்லீம் ராஷ்ட்ரீய மஞ்ச் எனும் ஸ்தாபனத்தினை பெருமதிப்பிற்குரிய அலிமியான் சாஹேப் அவர்களது வழிகாட்டுதலில் துவங்கி உள்ளனர். அவ்வப்போது ஹிந்து முஸ்லீம்களிடையே சர்ச்சைகள் தாக்குதல்கள் நிகழும் போதிலும் கூட எம் ஆர் எம் மூலம் தொடர்ந்து ஹிந்து முஸ்லீம் நல்லிணக்கத்துக்காகவும் தேச வளர்ச்சி மற்றும் ஒருமைப்பாடுக்காகவும் சம்வாதம் தொடர்ந்து நடைபெறுகிறது. ஹிந்து முஸ்லீம் சமூஹத்தினர் இணைந்து பல செயல்பாடுகளில் பங்கெடுத்தும் உள்ளனர். சமயம் கிடைக்கும் போது இது சம்பந்தமாக தமிழ் ஹிந்துவில் நான் ஒரு வ்யாசத்தையும் சமர்ப்பிக்கிறேன்.
இது போன்றதொரு சம்வாதம் ஹிந்து க்றைஸ்தவர்களிடையே நிகழவும் கூடுமா என்று எனக்கு பெரும் சம்சயம் இருந்தது. தங்களுடைய இந்தப் பதிவைப் பார்த்ததும் ஒரு ஒளிக்கீற்று தெரிகிறது. இறையருள் இருந்தால் எல்லாம் நன்றாகவே கை கூடும். தங்களுக்கு சமயம் கிடைக்கும் போது நிச்சயமாக தமிழ் ஹிந்து தளத்திலும் தங்கள் கருத்துக்களைப் பகிருங்கள். எல்லா அபிப்ராய பேதங்களும் விலகி விடாது. ஆனால் ஹிந்துக்களும் க்றைஸ்தவர்களும் ஒருமித்த கருத்துள்ள விஷயங்களில் ஒன்றாக நிச்சயம் இணைந்து பணியாற்ற முடியும் என்றே நினைக்கிறேன்.
வணக்கம்.