மெய்யனான குலசேகராழ்வார்

இரண்டு வருடங்கள் முன் ’ரங்காஜி’ கோயிலுக்கு (ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள புஷ்கர் நகரில் உள்ளது ) வெளியே கடையில் இருந்த சின்ன பையனிடம் தண்ணீர் பாட்டில் வாங்கிக்கொண்டு, 20 ரூபாய் கொடுத்தேன். அவனும் வாங்கிக்கொண்டான். தூரத்திலிருந்து பார்த்துக்கொண்டு இருந்த அவன் அப்பா ஓடி வந்தார். நெற்றியில் அடியேன் தரித்திருந்த திருமண்ணைக் காண்பித்து.

“நாமம் போட்டு யாத்திரைக்கு வந்தவரிடம் நீ எப்படி லாபம் பார்க்கலாம். ஐந்து ரூபாயைக் திருப்பிக் கொடு” என்றார்.

நான் “பரவாயில்லை” என்று சொல்லியும் அவர் கேட்கவில்லை.

பையன் சில்லறையை பொறுக்கி என்னிடம் கொடுத்தான். பத்திரமாக யாத்திரை முடியும் வரை அதைச் செலவு செய்யவில்லை.

தமிழ்நாட்டில் ஏமாற்றுச் சின்னமாக கருதப்படும் ’நாமம்’ வடக்கே ஏமாற்றக் கூடாது என்பது தான் அவர்கள் நமக்குக் கற்றுத்தரும் பாடம். ஒன்று பொய் இன்னொன்று மெய்.

நம்மாழ்வாருக்கு மெய்யன் என்று திருநாமம் இருக்கிறது. அதைப் பார்க்கும் முன் குலசேகராழ்வாரின் பெருமாள் திருமொழியில் ’தென்னாட்டு ரங்காஜி’யான ஸ்ரீரங்கம் அரங்கனைப் பற்றிய ஒரு பாசுரத்தை அனுபவிக்கலாம்.

தோய்த்த தண் தயிர் வெண்ணெய் பாலுடன்
உண்டலும் உடன்று ஆய்ச்சி கண்டு
ஆர்த்த தோள் உடை எம்பிரான் என்
அரங்கனுக்கு அடியார்களாய்
நாத் தழும்பு எழ நாரணா! என்று
அழைத்து மெய் தழும்பத் தொழுது
ஏத்தி* இன்பு உறும் தொண்டர் சேவடி
ஏத்தி வாழ்த்தும் என் நெஞ்சமே.

தோய்க்கப்பட்ட தயிர், வெண்ணெய், பால் ஆகியவற்றை ஒரே நேரத்தில் திருடி உண்ட கண்ணனை, யசோதை கண்டு கோபித்த அவன் கைகளைக் கட்டினாள். இப்படிக் கட்டப்பட்ட தோள்களையுடைய எம் அரங்கனின் அடியார்கள் நாக்கு தடிக்கும்படி “நாராயணா!” என்று அழைத்து அவன் காலில் மீண்டும் மீண்டும் விழுந்து அதனால் அவர்கள் உடம்பில் தழும்பேறத் தொழுது இன்புறுவர். இவர்களின் திருவடிகளை என் நெஞ்சம் துதி செய்யும்.

நம்பெருமாள், ஸ்ரீரங்கம்

ஒரு வரி விளக்கம் – பெருமாளைவிட அவர்கள் அடியார்கள் முக்கியம். பாசுரத்தில் மீண்டும் மீண்டும் விழுந்து அதனால் உடம்பில் தழும்பு என்று படிக்கும் போது ஆழ்வார் மிகைப்படுத்திக் காண்பிக்கிறார் என்று தோன்றும்.

சிறியாத்தான் என்ற ஆசாரியரை உங்களுக்கு அறிமுகம் செய்ய போகிறேன்.

பெரியவாச்சான் பிள்ளை காலத்தில் வாழ்ந்த ஒரு மகான் பெயர் சிறியாத்தான் என்பவர் (ஆச்சான், ஆயத்தான் என்று பெயர்கள் வருவதை வாசகர்கள் கவனிக்கலாம். ஆயர் குலத்துப் பெண்களை ஆய்ச்சி என்றும் ஆண்களை ஆச்சான் (அல்லது ஆயத்தான்) என்றும் அழைப்பார்கள். இயற்பெயர் கிருஷ்ணன் என்று இருந்தால் அழைக்கும் பெயர் ஆச்சான்/ஆயத்தான் என்று இருக்கும். பெரியவாச்சான் பிள்ளையின் இயர் பெயர் கிருஷ்ணன்! )

சிறியாத்தான் மிகச் சாதுவானவர்.அவர் ஸ்ரீரங்கம் தெருவில் நடந்து செல்லும் போது பார்த்து பார்த்து பயந்துகொண்டு செல்வார். எங்காவது ஸ்ரீரங்கத்தில் வளர்ந்த ஒரு புல்லை மிதித்துவிடுவோமோ, எங்காவது ஏதாவது எறும்பை மித்துவிடுவோமோ என்று பயந்துகொண்டு செல்வாராம்.

அப்படிச் செல்லும் போது நெற்றியில் திருமண் தரித்துக்கொண்டு யார் வந்தாலும் ‘படக்’ என்று கீழே விழுந்து வணங்குவாராம் (ஸ்ரீவைஷ்ணவர்கள் கீழே விழுந்து வணங்குவதைத் தண்டம் சமர்ப்பிப்பது என்பார்கள். தண்டம் என்றால் தடி. தடியைக் கையிலிருந்து விட்டால் எப்படிச் சாய்ந்து விழுமோ அதே போல விழவேண்டும். அதனால் அதற்கு அந்தப் பெயர்)

அவர் பெருமாளை சேவிக்கப் போகும் போது வரிசையாக எதிரே வரும் பாகவதர்களை கண்டால் உடனே கீழே விழுந்து தண்டம் சமப்ர்பித்துக் கொண்டே பெருமாளை சேவிக்க செல்லாவ்ராம்.

எப்படிச் சேவிப்பாராம் ? குலசேகர ஆழ்வார் சொல்லுவது போல “மெய் தழும்ப” சேவிப்பாராம். அப்படிச் சேவிக்கும் போது அவர் மீது ஒட்டிக்கொள்ளும் மண், தூசு இவற்றை நம்மைப் போல தட்டி விட்டுக்கொள்ள மாட்டாராம். இப்படிச் சேவித்துக்கொண்டே இருப்பதால் அவர் உடம்பு எல்லாம் காயம்பட்டு, அவர் உடம்பு, வேஷ்டி எல்லாம் அழுக்காகி அது தான் அவர் அடையாளம். That is his identity !

ஸ்ரீரங்கத்தில் இன்னொரு சம்பவத்தை பார்க்கலாம்.

நம்பெருமாளைச் சேவிக்க வருகிறார் ஆட்கொண்டவில்லி ஜீயர்.
பெருமாளைச் சேவித்துவிட்டு வருகிறார் நஞ்சீயர். இருவரும் எதிர் எதிரே சந்தித்துக்கொள்கிறார்கள். நஞ்சீயர் யோசிக்காமல் படக் என்று கீழே தண்டம் மாதிரி விழுந்து வணங்குகிறார். உடனே அட்கொண்டவில்லி ஜீயர் நடுங்கிப் போய் இப்படிச் சொல்லுகிறார்

“அடியேன் ஒரு அபராதி. இவ்வளவு நாள் பகவத் சம்பந்தம் இருக்கு என்று நினைத்தது எல்லாம் பொய். பகவத் சம்பந்தம் எப்போது உறுதியாகிறது என்றால் ஒரு அடியாரைப் பார்க்கும் போது கீழே விழும் போது தான். இது தான் மெய். உம்மை போல எனக்குச் சட்டென்று விழத் தோன்றவில்லையே… அடியேனுக்கு முன் நீர் விழுந்துவிட்டீரே” என்று வருத்தப்பட்டாராம்.

அதற்கு நஞ்சீயர் அப்படி எல்லாம் இல்லை நீர் எம்பெருமானார் சிஷ்யர், மற்றவர்களுக்கு ஆசாரியராக இருக்கிறீர் என்று சமாதானம் செய்தாராம்.

பெரியாழ்வார் திருமொழி:

நம்பனை நரசிங்கனை நவின்று
ஏத்துவார்களைக் கண்டக்கால்
எம்பிரான் தன சின்னங்கள் இவர்
இவர் என்று ஆசைகள் தீர்வனே.

ஸ்ரீவைஷ்ணவ அடியார்களை நடந்து வருவதைக் கண்டால் சங்கம், சக்கரம் வருகிறது என்று நினைக்க வேண்டும் என்கிறார் பெரியாழ்வார். நாம் சேவிக்கும் முன் பல விஷயங்களை யோசிக்கிறோம். அவர் பிரம்மசாரியா, கல்யாணம் ஆனவரா, நம்மைவிட அவருக்கு வயது அதிகமா, அவர் ஆணா, பெண்ணா எனப் பல விஷயங்களை ஆராய்ந்து பிறகே காலில் விழுகிறோம்.

ஒரு ஸ்ரீவைஷ்ணவன் மற்றொரு ஸ்ரீவைஷ்ணவன் காலில் விழ வேண்டும். விழும் போது நடுவில் பெருமாள் இருக்கிறார் என்று எண்ணம் வர வேண்டும். இப்படி அடியார்களுடன் பழகி அவர்களை வணங்கினால் தான் தான் பரமபதத்துக்கு சென்றால் சுலபமாக இருக்குமாம்!

நஞ்சீயர் பட்டரை விட வயதில் மிக மூத்தவர் ஆனால் அவர் பட்டர் காலில் விழுவார். நஞ்சீயர் சன்யாசி, பட்டரோ குடும்பஸ்தர். இன்று இந்த மாதிரி எல்லாம் பார்க்க முடியாது. இன்னொரு சம்பவத்தை பார்க்கலாம்.

அன்று ஒரு திருநட்சத்திர நன்னாள். நஞ்சீயர் சிஷ்யர்களும் சேர்ந்து பாகவதர்களுக்கு ததீயாராதனம் நடந்து்க்கொண்டு இருக்கிறது. அப்போது பட்டர் அங்கே வருகிறார்
“அடடே ததீயாராதனம் நடக்கிறதா.. ஸ்ரீவைஷ்ணவம் நன்றாக வளர்ந்துவிட்டதே…. “ என்று ஆச்சரியப்பட்டார்.

அப்போது பாகவத கோஷ்டியில் ஒருவர் “எல்லாம் தேவரீர் சம்பந்தம் தான்..” என்றார் (அதாவது உங்ளுடைய திருவடியில் எங்கள் ஆசாரியர் நஞ்சீயர் அடிபணிந்தார் அவர் திருவடியில் நாங்கள் அடிபணிந்தோம். அதனால் எங்களுக்கு இந்த புத்தி வந்தது)

அதற்குப் பட்டர் சொன்ன பதில் “அடியிலே சில மெய்யர்கள் இருந்தார்கள் அவர்களுடைய மெய் இதுவரையில் வருகிறது” என்றாராம்.

நம் அன்பு அடியார்களிடம் செல்லாமல், பெருமாளுடன் நின்று விட்டால் அது பொய். அடியார்களிடம் செல்லும் போது தான் மெய் !

இந்த மெய்யைச் சொன்ன மெய்யன் யார் ?

நெடுமாற்கு அடிமை செய்வேன் போல்
அவனைக் கருத, வஞ்சித்து
தடுமாற்று அற்ற தீக்கதிகள் முற்றும்
தவிர்ந்த; சதிர் நினைந்தால்
கொடு மா வினையேன் அவன் அடியார்
அடியே கூடும் இது அல்லால்
விடுமாறு என்பது என்? அந்தோ!
வியன் மூவுலகு பெறினுமே?

அகன்ற மூவுலகங்களைப் பெறுவதைக் காட்டிலும் பாகவதர்களுக்கு ஆட்படுவதே எல்லாவற்றையும் விடப் பெரியது என்பதை அறிகிறோன். அடியார்களுக்கு ஆட்படுவதே எனக்கு வேண்டுவது. இதை விடப் பெரிய பேறு வேறில்லை என்கிறார் நம்மாழ்வார்.

இந்த மெய்யைச் சொன்னவர் நம்மாழ்வாருக்கு. அவருக்கு இன்னொரு திருநாமம் மெய்யன். உபதேசரத்தின மாலையில் மாமுனிகள்

ஏரார் வைகாசி விசாகத்தின் ஏற்றத்தை
பாரோர் அறிய பகர்கின்றேன் – சீராரும்
வேதம் தமிழ் செய்த மெய்யன் எழில் குருகை
நாதன் அவதரித்த நாள்.

என்கிறார்.

மார்கழித் திங்கள் என்ற முதல் பாசுரத்தில் “குளிக்கவாருங்கள்” என்று அழைக்காமல் , “நீராடப்போதுவீர்” என்று கௌரவமாக பகவத் சம்பந்தமுள்ளவர்கள் எவராயிருப்பினும் கௌரவிக்கப்பட வேண்டியவரே என்று ஆண்டாள் நமக்குச் சொல்லித்தரும் பாடம்.

அடியேன் இல்லத்தில் நம்பெருமாள், குலசேகர அழ்வார்

குலசேகராழ்வார் என்று தலைப்பு வைத்துவிட்டு அவரை பற்றி ஒன்றும் சொல்லவில்லையே என்று வாசகர்கள் நினைப்பது தெரிகிறது.
வாருங்கள் குலசேகர ஆழ்வாரை அனுபவிக்கலாம்.

மேலே ஆட்கொண்டவில்லி ஜீயர் என்று ஒரு பெயரை பார்த்தோம் அல்லவா ? அதற்கு அர்த்தம் என்ன தெரியுமா ? ஆட்கொண்டவில்லி என்பது ஸ்ரீராமரின் பெயர். அட்செய்த வில்லி – ஸ்ரீ லக்ஷ்மனர் ( வில்லி என்றால் வில் ).

சம்பிரதாயத்தில் ஸ்ரீராமரை பெருமாள் என்று தான் அழைப்பார்கள். எல்லா வியாக்கானங்களிலும் ஸ்ரீராமரை ‘ராமர்’ என்று பூர்வாச்சாரியார்கள் யாரும் பெயர் சொல்லி அழைக்க மாட்டார்கள். பெருமாள் என்று தான் அழைப்பார்கள்.
ஆனால் கண்ணனை பெருமாள் என்று யாரும் அழைக்க மாட்டார்கள்!
என் அப்பா காலத்தில் ஸ்ரீரங்கத்தில் ரங்கநாதர் என்று யாரும் பெயர் சொல்லி அழைக்க மாட்டார்கள். எல்லோரும் பெரிய பெருமாள் என்று தான் அழைப்பார்கள், அதே போல் பெரிய பிராட்டி.

குலசேகர ஆழ்வார் சேரநாட்டில் ( இன்றைய கேரள தேசம் ) கொல்லிநகர் (திருவஞ்சிக்களம் ) என்னும் நகரில் மாசி மாதம் புனர்பூசம் நட்சத்திரத்தில் அவதரித்தார். பிறந்த போதே இவர் ராஜகுமாரர். இவரது தந்தை இவர் முகப் பொலிவைக் கண்டு தன் குலம் விளங்கத் தோன்றிய மகனுக்கு ‘குலசேகரன்’ என்று பெயர் சூட்டி மகிழ்ந்தார். பாண்டிய வேந்தன் புதல்வியை மணந்து இவர்களுக்கு ஒரு மகன், மகள் பிறந்தனர். மகன் பெயர் திடவிரதன். மகள் சேரகுலவல்லி.

குலசேகர ஆழ்வாருக்குப் பெருமாளின் கல்யாண குணங்களில் மிகுந்த ஈடுபாடு குறிப்பாக ஸ்ரீராமர் மீது. இராமாயண கதை கேட்பதில் அவருக்கு மிகுந்த ஆர்வம்.

கதை கேட்கும் போது அளவுக்கு அதிகமான ஈடுபாடு காரணமாக அன்று தான் ராமாயண நிகழ்ச்சிகள் நடப்பதாகப் பாவித்து தாம் யார் என்பதும் மறந்து, ராமர் போர் செய்யக் கஷ்டப்படுகிறார் என்று ராமருக்கு உதவ தன் படையுடன் புறப்பட்டார்.

அரசாட்சியைக் காட்டிலும் பாகவத சம்பந்தமே அவருக்கு உவப்பாக இருந்தது. அடியார்களால் அரசாட்சிக்குக் கலக்கம் ஏற்படுகிறது அதனால் அவர்கள் மீது வெறுப்புண்டாகும்படி செய்ய மந்திரிகள் திட்டமிட்டனர். அரண்மனை கோயிலில் இருந்த ரத்தன மாலையை ஒளித்து வைத்துவிட்டு அதை ஸ்ரீவைஷ்ணவ அடியார்கள் தான் திருடினார்கள் என்று பழிசுமத்த, பதறிய குலசேகார் நச்சு பாம்புகளை குடத்தில் அடைத்துக்கொண்டு வரச் செய்து “இந்த தீச்செயலைக் திருமால் அடியார்கள் செய்ய நினைத்திந்தால் இப்பாம்புகள் என் கையை தீண்டட்டும்” என்று குடத்தில் கையைவிட்டார் ”அஞ்சலெனக் குடப்பாம்பி லங்கையிட்டான் வாழியே” என்கிறது வாழி திருநாமம்.

இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு அவருக்கு அரச வாழ்கையில் வெறுப்பு உண்டாகி தன் மகனான திடவிரதனுக்கு பட்டம் சூட்டிவிட்டு திருவரங்கம் வந்து திருவரங்கம் திருமுற்றத்து அடியார்களோடு கூடியிருந்து குளிர்ந்து அரங்கனை அனுபவித்தார். தன்னுடைய மகளை நம்பெருமாளுக்கே மணமுடித்தும் கொடுத்தார்.

நாச்சியார் அருளியதை நாச்சியார் திருமொழி என்கிறோம். பெரியாழ்வார் அருளியதைப் பெரியாழ்வார் திருமொழி என்று சொல்லுவதைப் போல பெருமாள் இடத்தில் மிகுந்த பக்தி கொண்டதால் அவரைக் குலசேகர பெருமாள் என்று பெயர் பெற்று, அவர் அருளியது ’பெருமாள் திருமொழி’ என்று பெயர்பெற்றது. இந்தப் பெயரை ஸ்ரீமத் நாதமுனிகளே சூட்டினார்.

பெருமாள் திருமொழிக்கு உடையவர் அருளிச் செய்த தனியன் இது:

இன்னமுதம் ஊட்டுகேன் இங்கே வா பைங்கிளியே*
தென்னரங்கம் பாடவல்ல சீர்ப்பெருமாள்* பொன்னஞ்
சிலைசேர் நுதலியர்வேள் சேரலர்கோன்* எங்கள்
குலசேகரன் என்றே கூறு.

இதில் “தென்னரங்கம் பாடவல்ல சீர்ப்பெருமாள்” என்கிறார் நம் இராமானுசன். நமக்குத் தெரிந்து தொண்டரடிப் பொடியாழ்வார் தான் ஸ்ரீரங்கத்தைத் தவிர வேறு திவ்ய தேசத்தைப் பாடவில்லை. அதனாலேயே “பதின்மர் பாடும் பெருமாள்” என்ற பெருமையை நம்பெருமாள் தட்டிச்சென்றார். ஆனால் அவருக்கு அந்தப் பெருமையை கொடுக்காமல் உடையவர் குலசேகர ஆழ்வாருக்கு ”தென்னரங்கம் பாடவல்ல சீர்ப்பெருமாள்” என்ற பெருமை வாய்த்தது எதனால் ? அதைப் பார்க்கும் முன் குலசேகர பெருமாள் அருளியமிக பிரசித்தி பெற்ற படலைப் பார்க்கலாம்.

இன்றும் ஸ்ரீநிவாசனை குறித்து ஏதாவது பாடல் பாடும் முன் இந்த ஒரு பாசுரத்தை விருத்தமாகப் பாடிவிட்டு ’மெயின்’ பாட்டுக்குத் தாவுவார்கள்.

”செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே
நெடியானே! வேங்கடவா! நின்கோயி லின்வாசல்
அடியாரும் வானவரு மரம்பையரும் கிடந்தியங்கும்
படியாய்க் கிடந்துன் பவளவாய் காண்பேனே”

இதில் ஆழ்வார் திருமலையில் படியாகக் கிடக்கிறேன் என்று விருப்பப்படுகிறார். இதனால் தான் இன்றும் பெருமாள் கோயில் வாசற்படி ’குலசேகரப்படி’ என்று யாரும் மிதிக்காமல் தாண்டிச் செல்வது ஸ்ம்பிரதாயம்.

இந்தப் பாடலை அப்படியே படிக்காமல் அதன் முன்னே உள்ள பாசுரங்களையும் அதற்குப் பிறகு உள்ள பாசுரங்களையும் சற்றே பார்க்கலாம். ( அடுத்த முறை உங்களுக்கு இந்தப் பாடலை கேட்கும் முன் இது ஞாபகத்துக்கு வந்தால் சந்தோஷம் )

“ஊன் ஏறு செல்வத்து உடற்பிறவி யான் வேண்டேன்” என்று தொடங்கும் முதல் பாடலில் திருவேங்கடத்தில் ஒரு ஏரியில் வாழும் நாரையாகப் பிறக்க கடவேன் என்கிறார். பிறகு அங்கே இருக்கும் சுனையில் மீனாகப் பிறக்க வேண்டும்; பொன்வட்டில் பிடிப்பவனாகப் பிறக்க வேண்டும் ; செண்பக மரமாக என்று அடுக்கிக்கொண்டு போகிறார் ஆழ்வார். அடுத்த பாடலில் புதராய் இருக்க விருப்பப்படுகிறார். அப்படியே மலை உச்சி, காட்டாறாக, வழியாக வேண்டும் மேலும் ஆசைப்படுகிறார்.இதை எல்லாம் சாதாரணமாக பார்த்தால் ஏதோ ஒன்று ஆக வேண்டும் என்று விருப்பப்படுகிறார் என்று தோன்றும்.

ஆனால் இவை எல்லாம் – மீன், செண்பக மரம் எல்லாம் கொஞ்சம் தள்ளியே இருக்கிறது. எல்லாவற்றிருக்கும் ஏதோ ஒரு குறை இருக்கவே செய்கிறது. பறவையாக இருந்தால் எங்காவது பறந்துவிட்டால் ? மீன் அதுவும் எங்காவது நீந்திச் செல்ல வாய்ப்பு இருக்கிறது ? சரி பொன்வட்டில் நல்ல விஷயம் ஆனால் எங்கே தனக்கு பொன் என்ற கர்வம் வந்துவிடுமோ என்று அஞ்சுகிறார். சரி மலராகப் பெருமாளுக்கு மாலையாக ? மலர் வாடிவிடும், சரி அதன் மரமாக ? மரம் வெட்டப்படலாம் ? ஆறு – ஆறு வற்றிவிட்டால் ? சரி சந்நிதிக்கு போகும் வழியாக ? நாளை அந்த வழி மாறலாம் அல்லது இடித்துவிட்டு புதுசாக போடலாம் ஆனால் வழி இருந்தால் அவன் திருமுகத்தை தரிசிக்க முடியுமா ? அவன் கல்யாண குணங்களைப் பார்த்துக்கொண்டு இருக்க என்ன வழி என்று ஆழ்வார் யோசிக்கிறார்.

நாம் பக்தராக திருப்பதிக்குச் சென்றால் கொஞ்சம் நேரம் ( இந்தக் காலத்தில் அதுவும் முடியாது ‘ஜருகண்டி’ ஏன் ஸ்ரீரங்கத்தில் கூட இப்ப எல்லாம் கொஞ்சம் கஷ்டம் தான் ! ) இருக்கலாம் ஆனால் அங்கேயே இருக்க முடியுமா ? அர்ச்சகர் கூட நடை சாத்திய பின் வீட்டுக்கு வந்துவிட வேண்டும்.

நன்றாக யோசித்துப்பாருங்கள், வைகுண்ட ஏகாதசி ஒரே கூட்டம் அப்போது உங்களை யாரோ ஒருவர் கோயில் கைங்கரியம், முத்தங்கி சேவை ஒரே கூட்டம், கொஞ்சம் கூட்டத்தை ஒழுங்கு செய்யுங்கள் என்று உங்களுக்கு ஒரு வேலைக் கொடுத்தால் எவ்வளவு சந்தோஷமாக இருக்கும்.

கூட்டத்தை ஒழுங்கு செய்யும் சாக்கில் பெருமாளை பார்த்துக்கொண்டே இருக்கலாம் அல்லவா ?

ஆழ்வார் யோசித்தார். ’கண்ணா இரண்டு லட்டு தின்ன ஆசையா’ மாதிரி படியாய் கிடக்கிறேன் இன்று கோரிக்கை வைக்கிறார். அடியார்கள் அதன் மீது ஏறிச் செல்வார்கள், அதனால் அடியார்களின் பாத தூளியும் கிடைக்கும் அதே சமயம் பெருமாளின் “உன் அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே” என்றும் இருக்கலாம். 2-in-1 ஆகப் பெருமாளுக்கும் கைங்கரியம் செய்ய முடியும் அதே சமயம் அடியார்களுக்கும் கைங்கரியம் என்று ஆசைப்படுகிறார்.

குலசேகராழ்வார், ஸ்ரீரங்கம்

ஆனால் இதுலேயும் ஒரு பிரச்சனை இருக்கு. படி என்பது ஒரு கல் அது பள்ளியில் படித்த மாதிரி ஒரு அறிவில்லாத non living thing. அசேதனம். அப்படி என்றால் படியாக இருந்தால் பெருமாளை தரிசிக்க முடியாது. ஆனால் அசேதன படியாக இருக்க வேண்டும் அதே சமயம் பெருமாளை ’காணும் படியாக’ இருக்க வேண்டும். அதனால் தான் படியாகக் கிடந்து உன் “பவளவாய் காண்பேனே” என்கிறார். படி எப்படிப் பார்க்க முடியுமா ? என்று உங்கள் மனதில் தோன்றலாம். பெருமாள் நினைத்தால் எதுவும் முடியும் ! இதற்குப் பல உதாரணங்களை நீங்கள் கிருஷ்ணாவதாரத்தில் வீட்டுப்பாடமாக யோசிக்கலாம். அடுத்து பெருமாளிடம் தன் இஷ்டப்படி இப்படிக் கேட்கிறோமே அது சரியா என்று யோசித்து ’சரிப்பா உன் இஷ்டம்’ என்கிறார். அதனால் தான் “பொன்மலைமேல் ஏதேனும் ஆவேனே” என்று முடிக்கிறார்.

“தென்னரங்கம் பாடவல்ல சீர்ப்பெருமாள்” என்று ஏன் இவருக்குப் பெருமை ?

அமெரிக்காவில் இருக்கும் மகளுக்கு எப்போது இந்தியாவில் இருக்கும் அம்மாவை எப்போது பார்க்க போகிறோம் என்ற நினைப்பு இருக்குமோ அதே போல நம் குலசேகர ஆழ்வார் பெருமாள் திருமொழி ஆரம்பிக்கும் போது முதல் மூன்று திருமொழிகளிலும் “திருவரங்கத்தைக் காண்பது என்றைக்கோ?” என்று உணர்ச்சியின் மிகுதியால் அவர் பாடிய திருமொழிகள்.

அரசனுக்குடைய கடைமைகளை தவிர்க்க முடியாமல், அவர் திருவரங்கப் பயணம் தொடர்ந்து தடைப்பட்டிருக்கிறது. இன்று, நாளை என்று இழுத்தடித்து அவர் ஏங்கி ஏங்கித் துடித்திருக்கிறார். திருவரங்கம் செல்லாமல் அந்த வேட்கையிலேயே உருவானது தான் பெருமாள் திருமொழி.

குலசேகர ஆழ்வாரின் பெருமாள் திருமொழியில் “தேட்டு அருந் திறல் தேனினைத் தென் அரங்கனை” என்று ஆரம்பிக்கும் இரண்டாம் திருமொழி பாசுரங்கள் மிக முக்கியமானவை. ஸ்ரீரங்கத்தில் முதல் குலோத்துங்கன் ஆட்சியில் ( 1070-1112 ) ஒரு கல்வெட்டு இப்படி இருக்கிறது ”ஐப்பசி தேர்த்திருநாளிலும் பங்குனித் திருநாளிலும் தீர்த்தம் பிரசாதிதருளின அன்று இரா, திருப்புன்னைக்கீழ் [ ஸ்ரீரங்கநாத பெருமாள் ] எழுந்தருளியிருந்து ‘தேட்டருந்திறல்’ கேட்டருளும்போது” என்று கூறப்பட்டுள்ளது.

”இருளரிய” என்று தொடங்கும் முதல் திருமொழியில் அரங்கனைக் காணும் நாள் எந்நாளோ ? என்று ஏங்குகிறார். “தேட்டு அருந் திறல்” என்று தொடங்கும் இரண்டாம் திருமொழியில் அரங்கனின் அடியார்க்கு அடியேன் என்கிறார். அவர்களே எனக்கு உயர்நிலை. பெருமாள் திருமொழியிலேயே இந்தத் திருமொழி தான் சிறப்புமிக்க பதிகமாகக் கொண்டாடப்படுகிறது. அதனால் தான் என்னவோ கல்வெட்டிலும் இதன் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்தத் திருமொழி பாசுரங்கள் சிலவற்றிருக்கு ஒரு வரி பொருளை பார்க்கலாம்.

– அரங்கன் அடியார்களைக் காண்பது தான் கண்படைத்த பயனாகும்.
– கோயில் முற்றத்தில் அடியார்களின் திருவடிகளால் ஏற்படும் சேறு என உடம்புக்கு அணிகலன்.
– ’நாராயணா’ என்று அழைக்கும் அடியார்களை உடம்பு தழும்பேறுபடி தொழ வேண்டும்.
– அடியார்களை நினைத்து நினைத்து உடம்பு சிலிர்க்கின்றது.
– அடியார்களுக்கு எப்பிறப்பிலும் அடிமை செய்ய வேண்டும்.

பாசுரங்களில் ’சேறுசெய் தொண்டர்’, ’இன்புறும் தொண்டர்’, ’காதல்செய் தொண்டர்’ ’மலையுற்றிடும் தொண்டர்’ என்று தொண்டர்களின் பெருமைகளையே ஆழ்வார் பேசுகிறார்.

கடைசியாக இந்தத் திருமொழியை கற்பதால் உண்டாகும் பலனைப் இப்படிக் கூறுகிறார்

“சொல்லின் இன் தமிழ் மாலை வல்லவர்
தொண்டர் தொண்டர்கள் ஆவரே”

அதாவது ”அடியார்களுக்கு அடியராவர்” என்பது மெய்யான பக்தி உங்களுக்குக் கிடைக்கும் என்பதாகும்.

இராமானுஜ நுற்றந்தாதியில் “பொன் அரங்கம் என்னில்,மயலே பெருகும் இராமநுசன்” என்பது போல கேரளத்தில் இருந்தாலும் திருவரங்கமே அவர் நினைப்பாக இருந்திருக்கிறது அதனால் தான் அவர்

”தென்னரங்கம் பாடவல்ல சீர்ப்பெருமாள்” !

ஸ்ரீ குலசேகர ஆழ்வார் திருவடிகளே சரணம்.

(26.2.2018  மாசிப் புனர்பூசம் – குலசேகர ஆழ்வார் திருநட்சத்திரம்  அன்று  கட்டுரையாசிரியர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியது)

4 Replies to “மெய்யனான குலசேகராழ்வார்”

 1. சுஜாதா தேசிகனுக்கு அடியேனின் தண்டம். பாசுரங்க்களின் தேட்டருந் திறல் தேனினை எம் போல்வாருந் துய்க்க மேலும் வழங்குக.

 2. பக்தி அமுதம் அருமையாக உள்ளது.மனம் நிறைய பருகி மகிழ்ந்தேன்.வாழ்க.நன்றி.தொடரட்டும் தங்கள் பணி.

 3. ”செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே
  நெடியானே! வேங்கடவா! நின்கோயி லின்வாசல்
  அடியாரும் வானவரு மரம்பையரும் கிடந்தியங்கும்
  படியாய்க் கிடந்துன் பவளவாய் காண்பேனே”

  என்னிடம் இருக்கும் பெருமாள் திருமொழி நூலில் ”நெடியோனே” … ”நின் திருக்கோயில் வாசல்” என்று போடப்பட்டிருக்கின்றன‌.

 4. ஸ்வாமி தேவரீர் பதிவு அருமை பல்லாண்டு பல்லாண்டு!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *