உலகத்திலேயே இல்லாத ஒரு செய்கையாக இந்தியாவில் மட்டும் தான் இரண்டாண்டுகளுக்கு முன்பு வரை ரயில்வே பட்ஜெட் என்ற ஒன்று வாசிக்கப்பட்டது, இதுவரை 5 லட்சம் கோடி அளவிற்கு திட்டங்கள் கடந்த 25 ஆண்டுகளாக அறிவிக்கப்பட்டு ஒன்று கூட நிறைவேற்றப்படவில்லை. 94ஆம் ஆண்டு நரசிம்ம ராவ் அமைச்சரவையில் ஜாபர் ஷெரிப் ரயில்வே மந்திரியாக இருந்தபோது அறிவித்த திட்டங்கள் தஞ்சாவூரில் இருந்து கந்தர்வகோட்டை வழியாக மதுரை மற்றும் சென்னையில் இருந்து மரக்காணம் வழியாக பாண்டிச்சேரி, ஆயிற்று ஒரு 24 வருடம் இன்னும் நிலம் கையகப்படுத்துதல் கூட தொடங்கவில்லை இனி அதெல்லாம் காலாவதியான திட்டம் தான்.
மம்தா பானர்ஜீ ரயில்வே மந்திரியாக இருந்த போது ஒவ்வொரு வருடமும் ஒரு 20 ரயில்களை மேற்குவங்கத்திற்கு அறிவிப்பார் அவ்வளவு தான் பட்ஜெட், இன்று அதெல்லாம் அந்தந்த கோட்ட மேலாளர்களே அறிவிக்கிறார்கள். ரயில்வேயை விட 50% அதிகமான நிதி ஒதுக்கப்படும் ராணுவத்திற்கு கூட தனி நிதிநிலை அறிக்கை கிடையாது இந்த கோமாளி கூத்துக்களை எல்லாம் மோடி வந்து தான் ஒழித்தார். நேற்று ஜேட்லி ரயில்வேக்கு 1 லட்சத்து 47 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது பெங்களூரு புறநகர் ரயிலுக்கும் மும்பைக்கும் இவ்வளவு ஒதுக்கப்படும் என்று அறிவித்தார் அவ்வளவு தான் முடிந்தது ரயில்வே பட்ஜெட்.
வழக்கமாக நிதிநிலை அறிக்கை வாசிக்கப்படும்போது பெரும்பகுதி உப்புக்கு இவ்வளவு வரி, மிளகாய்க்கு வரி, தொலைக்காட்சிக்கு வரி செருப்புக்கு வரி இதற்கு கூடுதல் இதற்கு குறைவு கணினி தொடுதிரைக்கு இறக்குமதி வரி 10 இல் இருந்து 8% குறைப்பு தோல்செருப்புக்கு வரி 6 இல் இருந்து 10% உயர்வு என்று பொழுதுபோக்க நிதித்துறை செயலாளர் அளிக்கும் அறிக்கையை நிதி மந்திரி வாசிப்பார் அதற்கெல்லாம் மூடுவிழா நடத்திய பெருமை மோடியையே சாரும் இன்று அவை ஜி.எஸ்.டி குழுவால் முடிவுசெய்யப்படுகிறது அவ்வப்போது அவை மாற்றவும் படுகிறது.
நேரடியாக வரவு செலவு அறிக்கை மட்டுமே இன்று பட்ஜெட்டில் வாசிக்கப்படுகிறது. பலருக்கு இன்னும் அது பிடிபடவில்லை இவர்கள் வரியை ஏற்றியும் குறைத்தும் கதாகாலட்சேபம் நடத்தும் நிதிநிலை அறிக்கைகளையே பார்த்து பழகிவிட்டார்கள் இன்று இது வரி வருவாய் இன்ன துறைக்கு இவ்வளவு ஒதுக்கப்பட்டிருந்தது அவ்வளவு தான் என்று நறுக்குத்தெரித்தார் போல வாசிக்கப்படும் அறிக்கைகளை பார்த்ததும் ஒன்றும் புரியவில்லை. இவர்கள் மரமண்டைக்கு பட்ஜெட் என்றால் என்ன என்று புரிய இன்னும் ஒரு மாமாங்கமாகும். அதை விட இன்னொரு கூட்டம் ஒன்று இருக்கிறது அது பட்ஜெட் என்றால் அமேசான் அல்லது பிளிப்கார்ட் போன்றவற்றில் வரும் தள்ளுபடி விற்பனை மேளா என்று நினைத்துக்கொண்டிருக்கிறது கஷ்டம்.
இங்கு நடப்பது அடிப்படை மாற்றம் அதுவே இவர்களுக்கு புரியவில்லை என்றால் வேறென்ன செய்வது ஆனால் கருத்து சொல்ல மட்டும் அரைவேக்காடுகள் கிளம்பி விடுகின்றன. எதிர்க்கட்சி தலைவர் ராகுலுக்கே ஒன்றும் விளங்கவில்லை பக்கத்தில் உட்கார்ந்து கமல்நாத் வரிவரியாக விளக்கியும் பாராளுமன்றத்திற்கு வெளியில் மைக்கை நீட்டினால் கருத்து சொல்ல ஒன்றும் இல்லை என்று ஓடுகிறார் பாவம் வழக்கம் போல யாரோ அவரின் ட்விட்டர் கணக்கில் கருத்து வெளியிடுகிறார்கள் முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரத்திற்கு பட்ஜெட்டில் துண்டு விழுந்த சதவீதம் மட்டும் புரிந்திருக்கிறது போல.
********
இந்த நிதிநிலை அறிக்கையில் மூங்கில் மற்றும் அது சார்ந்த துறைகளின் வளர்ச்சிக்காக மத்திய அரசு 1290 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி அறிவித்தது உடனே நம் ஊர் அறிவாளிகள் மீம்ஸ் போடுவது முதல் நீரா ராடியா புரோக்கரான பத்திரிக்கையாளர் வீர் சங்வி வரை நக்கல் அடித்து சமூக வலைத்தளங்களில் பதிவுகள் போடுவது வரை தங்கள் கோமாளி கூத்துகளை அரங்கேற்றிக் கொண்டிருந்தனர். நம் ஊரில் தான் எதையாவது அறிந்த அல்லது சிந்தனை செய்ய தெரிந்தவர்கள் பொது வெளியில் இருப்பதே துர்லபம் ஆயிற்றே அப்படியே இருந்தாலும் நம் இணைய மொண்ணைகள் அவர்கள் பேச்சைக் கேட்க மாட்டார்கள்.
சரி போகட்டும் ஆனால் இந்த அறிவிப்பை வடகிழக்கு மாநிலங்கள் பெரும் மகிழ்ச்சியுடன் வரவேற்றன அதற்கு காரணம் இல்லாமல் இல்லை உலகின் மூங்கில் உற்பத்தியில் 45% வடகிழக்கு மாநிலங்களான மணிப்பூர், நாகாலாந்து, மேகாலயா போன்ற மாநிலங்களில் இருந்து வருகிறது ஆனால் அவற்றை பயன்படுத்த முடியா வண்ணம் 1927ஆம் ஆண்டு பிரிட்டிஷாரின் காடுகள் பாதுகாப்பு சட்டம் அதற்கு தடை போட்டு விட்டது.
அவர்கள் புல் வகையான மூங்கிலை மரத்தில் சேர்த்து விட்டார்கள் ஆகையால் அதை வளர்க்கவும் தானாக வளர்ந்த மரத்தை வெட்டவும் தடை இருந்தது காடு மற்றும் மலைவாழ் மக்களின் அடிப்படையே அதில் நாசம் கண்டு விட்டது. மூங்கில் பொருட்கள், மூங்கில் அரிசி, மூங்கில் குருத்துகள் என்று அவர்களுக்கு வருமானம் ஈட்டி தந்த ஒரு வழி சட்டென்று அடைக்கப்பட்டு விட்டது ஆயிற்று 90 வருடங்கள் இந்த குளிர்கால கூட்டத்தொடரில் தான் மோடியின் அரசு காட்டு மூங்கிலை புற்கள் வகையில் சேர்த்து பாராளுமன்றத்தில் சட்டம் இயற்றியது.
இன்று உலகின் ஒட்டுமொத்த மூங்கில் சந்தையை கையில் வைத்திருக்கும் நம்மை விட பாதிக்கும் கீழ் மட்டுமே மூங்கில் இருப்பை கொண்டிருக்கும் சீனாவின் நிலை ஆட்டம் காண போகிறது. 70 லட்சம் பேருக்கு வேலை அளிக்கும் ஆண்டு தோறும் 2 லட்சம் கோடிகள் வருமானம் ஈட்டும் துறையாக சீனாவின் மூங்கில் சார்ந்த துறைகள் இருக்கிறது. அடுத்து வியட்நாம் வருகிறது நாம் ஆண்டு தோறும் ஊதுபத்தி செய்ய மட்டுமே 4000 கோடி ரூபாய் அளவிற்கு இந்த நாடுகளில் இருந்து மூங்கில் இறக்குமதி செய்கிறோம். எனக்கென்னவோ நம் ஊர் கருங்காலி இடதுசாரிகளின் சதியாக கூட இது இருக்குமோ என்று ஐயம் இருக்கிறது.
வடகிழக்கு மாநிலங்களில் தீவிரவாதம் துவங்க காரணமே இந்த மூங்கில்கள் தான் என்றால் மிகையல்ல ஏனென்றால் 50-55 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த மூங்கில்கள் பூக்குமாம் அந்த பூக்களை சாப்பிட ஏராளமான எலிகள் வந்து விடுமாம் அந்த எலிகள் தானியங்கள் பயிர்கள் அனைத்தையும் தின்று நாசமாக்கியதில் 1960களில் அங்கு ஏற்பட்ட பெரும் பஞ்சமே தீவிரவாதம் அங்கு பெருக காரணம் என்கிறார்கள்.
மூங்கில் அரிசி மற்றும் மூங்கில் குருத்து கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் ஒரு முக்கியமான உணவு. மூங்கில் கூழ் காகிதம் செய்ய அடிப்படை கச்சா பொருள் அதோடு அதிலிருந்து எத்தனால் வேறு எடுக்க முடியும்.
குறுகிய காலத்தில் ஒரு 40000 கோடியையும் நீண்ட கால நோக்கில் ஒரு லட்சம் கோடிக்கு மேலும் சம்பாதித்து கொடுக்க கூடியது இந்த துறை. தமிழ்நாடு முதல் திரிபுரா வரை கோடிக்கணக்கான மக்களுக்கு வேலை வாய்ப்பையும் வாழ்வுரிமையையும் ஏற்படுத்த வல்லது. இதன் மூலம் நோய்வாய்ப்பட்ட இந்த நாட்டிற்கு சிறந்த சிகிச்சை அளிக்கக்கூடிய பெரு வைத்தியன் மோடி தான் என்பது மீண்டும் நிரூபணம் ஆகியுள்ளது..
******
அடுத்த ஆண்டு தேர்தல் ஆண்டு என்பதால் 2018-19ஆம் ஆண்டிற்கான இந்த நிதி நிலை அறிக்கை முக்கியத்துவம் பெறுகிறது அதை ஜேட்லி சிறப்பாகவே செய்திருக்கிறார். 2017-18 ஆண்டிற்கான நிதி நிலை துண்டு விகிதம் (fiscal deficit) எதிர்பார்த்த அளவு குறையவில்லை என்பது ஒரு குறை அது 3.5% என்றே தொடர்கிறது காரணம் ஜி.எஸ்.டி வரி மாற்றம் 11 மாதங்களுக்கு தான் வருவாயை அளித்திருக்கிறது இது வரும் நிதியாண்டில் சரியாகும் என்று எதிர்பார்க்கலாம் 3.3% ஆக இந்த துண்டு விழுவதை குறைக்க வேண்டும் என்று எண்ணம்.
மற்றபடி வரவு செலவு கணக்கு மிக சிறப்பான முறையில் கையாளப்பட்டுள்ளது தனியார் பங்களிப்பு என்று ஏதும் இல்லாததால் உட்கட்டமைப்பு செலவுகளை அரசை செய்ய வேண்டி உள்ளது 50 லட்சம் கோடிகள் அதற்கு தேவைப்படலாம் பெருமளவில் அன்னிய நிதி உள்ளே வரவில்லை என்றால் உலக தரத்திலான உட்கட்டமைப்பு வசதிகள் நமக்கு கானல் நீர் தான். அதை உத்தேசித்து தரைவழி போக்குவரத்து, ரயில், மின்சார மயமாக்கம், எரிவாயு இணைப்பு ஆகியவற்றிற்கு அளிக்கப்பட்ட நிதி திருப்தி அளிக்கிறது.
இந்த பட்ஜெட்டின் முக்கியமான அம்சமே 10 கோடி வறுமை கோட்டிற்கு கீழிருக்கும் நிலையற்ற வேலையில் ஈடுபடும் குடும்பங்களுக்கான மருத்துவ காப்பீடு தான். குடும்பத்திற்கு ஆண்டிற்கு 5 லட்சம் காப்பீடு தொகை என்பது அவர்களுக்கு வரம். உலகின் மிகப்பெரிய காப்பீடு திட்டமாக இது இருக்கும். வளர்ந்த நாடுகளில் இருக்கும் அடிப்படை வசதிகள் மெல்ல மெல்ல நமக்கும் கிடைப்பது உண்மையிலேயே மகிழ்ச்சி அளிக்கிறது.
தனி நபர் வருமான வரியில் பெரிய மாற்றங்கள் இல்லை ஆனால் வரியை சில செலவீனங்களை காட்டி குறைக்கும் வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஒரு நண்பர் 12 லட்சம் வரையில் வரி கட்டாமல் இருக்கும் கணக்கு ஒன்றை அளித்திருக்கிறார் எப்படி என்று தான் பார்க்க வேண்டும். என்ன வீடு கட்ட கடன், பிள்ளைகளின் படிப்பு, மருத்துவ செலவுகள், வாகன கடன் போன்ற செலவீனங்கள் இருப்பவர்களுக்கு தான் அது பயன் படும். சோறு கூட சாப்பிடாமல் சம்பளத்தை அப்படியே சேர்த்து வைப்பவர்களுக்கு தான் ஒன்றும் இல்லை வரி கட்டியே ஆக வேண்டும்.
விவசாய கடன், இலவச வீடுகள் திட்டம், கிராமப்புற இணைப்பு சாலைகளுக்கான நிதி, நீர் நிலைகள் மற்றும் நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டத்திற்கு நிதி என்று கிராமிய பொருளாதாரத்தை மேம்படுத்தும் திட்டங்களுக்கான நிதியும் நன்றாகவே ஒதுக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில் வளர்ச்சியை விழையும் அரசின் நிதி நிலை அறிக்கை இது சரியான திசையிலேயே செல்கிறது
******
LTCG- long term capital gains tax இன்றைக்கு பட்ஜெட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய வரி. அதாவது பங்கு சந்தையில் முதலீடு செய்தவர்கள் தங்கள் பங்குகளை விற்கும் போது பெறும் லாபத்தில் 10% வரி செலுத்த வேண்டும் இந்த வரிக்கொள்கை ஏப்ரல் 1ஆம் முதல் அமுலுக்கு வரும். சரி இன்று முதலீடு செய்திருப்பவர்களின் லாபத்தை அரசு என்ன கணக்கில் எடுக்கிறது என்றால் நேற்று அதாவது ஜனவரி 31ஆம் தேதி அன்று பங்கு சந்தை நிலவரத்தை கணக்கில் கொள்கிறது. அதிலும் ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் லாபம் ஈட்டினால் தான் இது கணக்கிலேயே வரும்.
பட்ஜெட் நாளான 1-பிப்ரவரி அன்று சந்தை 36000 புள்ளிகள் என்ற அளவில் இருந்தது, மோடி பாஜவின் பிரதமர் வேட்பாளர் என்று அறிவிக்கப்பட்ட ஆகஸ்ட் 2013க்கு பிறகு நிலவிய மக்களின் எதிர்பார்ப்பு நம்பிக்கை பொருளாதாரத்தை மேம்படுத்த இந்த அரசு எடுத்த நடவடிக்கை ஆகியவற்றால் 16000 புள்ளிகளுக்கு மேல் சந்தை உயர்ந்துள்ளது இதில் கோடீஸ்வரர் ஆனவர்கள், தினசரி வர்த்தகத்தில் சம்பாதிப்பவர்கள் எல்லாம் பல லட்சம் பேர் இருப்பார்கள் இந்த நிலையை காட்டிலும் இன்னும் சந்தை உயர்ந்தால் தான் இந்த வரியையே அரசு பெற முடியும்.
சந்தையிலேயே முதலீடு செய்யாதவர்கள் எல்லாம் இது மத்திய வர்க்கத்தை பாதிக்கும் செயல் என்கிறார்கள் ஏன் 20000 புள்ளிகளுக்கு கிழே சந்தை தடவிக் கொண்டிருந்த போது ஆண்ட கட்சிக்கு வாக்களிக்க வேண்டியது தானே திருவாளர் சிதம்பரம் இன்னும் ஒரு 10% வரியை ஏற்றி சந்தையையும் ஒரு 15000 புள்ளிகள் கிழே இறக்குவார். என்ன மனிதர் காசில் கெட்டி, நீங்கள் நஷ்டப்பட்டாலும் நீங்கள் பங்குகளில் முதலீடு செய்த நிறுவனங்கள் திவாலாக ஆனாலும் உங்களிடமிருந்து வசூலிக்கும் வரை ஓயமாட்டார்.
இப்போது மோடி என்ன செய்வார் என்கிறார்களா உங்களிடம் இருந்து வரியை பெற உங்கள் முதலீட்டை அவர்கள் உயர்த்துவார்கள் நீங்கள் அமர்ந்து வேடிக்கை பார்க்கலாம் உங்களுக்காக அவர்கள் உழைப்பதை.
******
(ஆர்.கோபிநாத் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியவற்றின் தொகுப்பு)
பட்ஜெட் ஒரு அரசின் பொருளாதாரக் கொள்கையை நடைமுறைக்குக் கொண்டு வரும் கருவி.இதில் 65 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு அடிப்படை மாற்றம் வந்திருக்கிறது என்பதைப் புரிந்துகொள்வது எளிதல்ல.இதை அரசுதான் விளக்கிச் சொல்லவேண்டும். இந்த வகையில் மோடி அரசு ஆவன செய்யவில்லை.
பத்திரிகைகள், டி.வி. சானல்கள், கல்வித்துறை சார்ந்த அமைப்புகள் [ பல்கலைக் கழகங்கள்] ஆகியவை பழைய அரசியலிலேயே ஊறியவை, மோடி அரசுக்கு எதிராகவே செயல்படுகின்றன. இந்த நிலையில் தன் கொள்கைகளையும், செயல்களையும் அதன் விளைவுகளையும் மக்களிடையே விளக்கிச்சொல்லவேண்டும்.மோடி அரசு இதைச் செய்யத் தவறிவிட்டது. இந்தக் கட்டுரையில் கண்ட அளவாவது அரசு தரப்பிலிருந்து யாராவது பேசியோ எழுதியோ செய்திருக்கிறார்களா? மெய்யுடை ஒருவன் சொலமாட்டாமையால் துன்பமே அடைவான்.
60களில் என்.ஏ.பால்கிவாலா பம்பாயில் பட்ஜெட்டை விமர்சிப்பார். அது அகில இந்திய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியது. அந்த விமர்சனம் அன்றைய அரசாகிய எருமையின் மீது மழை பொழிந்ததைபோலத்தான் இருந்தது. அன்றைய சோஷலிச பட்ஜெட்டில் வளர்ச்சிக்கான அம்சங்கள் இல்லை. பால்கிவாலாவின் உரை இவற்றைச் சுட்டிக்காட்டியதுடன், வளர்ச்சிக்கான கருத்துக்களையும் கூறும். அன்றைய அரசு அவற்றைக் கருத்தில் கொள்ளவில்லை; ஆனால் படித்த வர்கத்தினரிடையே அடிப்படைப் பொருளாதார அறிவும், ஒரு விழிப்புணர்ச்சியும் பரவியது. சோஷலிசத்திற்கு ஒரு மாற்று உண்டு, ஐந்தாண்டு திட்டம் இல்லாமலும் பொருளாதாரம் வளர்ச்சியடையலாம் என்ற உண்மைகளை மக்கள் உணரத் தலைப்பட்டனர். Forum of Free Enterprise என்ற அமைப்பு இக்கருத்துக்களை சிறு பிரசுரங்களாக வெளியிட்டு கல்லூரி மாணவரிடையேயும் பொதுமக்களிடமும் பரப்பியது.இன்று மோடி அரசின் முயற்சிகளைப்பற்றி யார் இப்படிச் செய்கிறார்கள்?
தமிழ் நாட்டில் மோடி அரசுக்கு எதிரான குரலே கட்சி வட்டாரங்களிலும் இளைஞரிடையேயும் நிலவுகிறது. மோடியோ, அவரது கட்சியோ என்ன செய்தாலும் இந்த நிலை விரைவில் மாறாது. [ மோடியின் ஹிந்தி தீவிரம் அவருக்கோ அவர் கட்சிக்கோ இங்கு உதவாது.] ஆனால் ஒரு அரசு தன் கொள்கையையும் அணுகுமுறையையும் மக்களிடையே விளக்கிச் சொல்லவேண்டியது அவசியம்.
இந்த நான்கு ஆண்டுகளில் மக்களைக் கவரும் விதமாக மோடி அரசு எதுவும் செய்யவில்லை. Make in India என்பது ஒரு கொள்கையாக இல்லாவிடினும் ஒரு கோஷம் என்ற அளவில் கூட மக்களைக் கவரவில்லை.
GST கொண்டுவந்த சமயத்தில், அந்த அடிப்படையில் நேர்முக வரியில் ஒரு புரட்சியே செய்திருக்கலாம். ஒரு ABC ஆய்வும் (analysis) பணவீக்கம் பற்றிய ஆய்வும் மேற்கொண்டால், இன்றைய விலைவாசி சூழ்நிலையில் 5 லட்சத்திற்கும் கீழான வருமானத்திற்கு வரி விதிப்பு அவசியமில்லை, அது அநியாயம் என்பது தெரியவரும். அதன்படி அந்த வரியை நீக்கியிருந்தால் இந்த அரசின்மீது எவ்வளவு நல்லெண்ணம் வளர்ந்திருக்கும்? இந்த சந்தர்ப்பத்தை மோடி அரசு கோட்டை விட்டது.
தமிழ்ஹிந்து வின் கட்டுரைகள் மிகச்சிறப்பாக இருந்தது…பெரும்பாலும் பல நாட்களாக இவற்றை தொடரநது படித்து வருகிறேன். ஆனாலும் முதல் முறையாக மறுமொழி எழுதுகிறேன். அருமை! சிறப்பு! மகிழ்ச்சி!
தங்கள் தேசப்பணி தொடர வாழ்த்துகள்…