தென்புலத்தார் திரும்பிவரும் நாளில் – கோகோ (Coco) திரைப்படம்

2007ன் கோடையில் ஒருநாள். சென்னை கண்ணம்மாப்பேட்டை சுடுகாடு. என் அருமைத் தாயாரின் உடலுக்கு, எரியூட்ட அழுது ஓய்ந்து நின்றிருந்தேன்.

‘இந்த மந்திரத்தை நன்றாகக் கவனித்துச் சொல்லுங்கள், உடலை விட்டுச் செல்லும் ஆன்மாவுக்கு மட்டுமின்றி நமக்கும்தானிது. வேதாந்தசாரமான ஈசோபநிடதத்தின் இறுதியில் வரும் மந்திரங்கள் இவை. அம்மா எல்லா கடமைகளையும் நல்லபடியாக முடித்துவிட்டுச் செல்கிறார். அதையெல்லாம் எக்காலமும் மறக்கக்கூடாது!’ என்றார் இறுதிக்காரியங்களைச் செய்து வைக்கும் அந்தணர்.

‘தானென்று திரண்டிருந்த இந்த ஒளித்துளி அது பிரிந்துவந்த பெருவெளியில் சென்று கலக்கட்டும்; அது வாழ்ந்திருந்த இக்கூடெரிந்து சாம்பலாகட்டும்! ஓம்! இந்த இப்பிறவியில் செய்தவை யாவும் நினைந்திரு, நினைந்திரு, என்றும் நினைந்திரு!’

வாயுரனிலமம்ருʼதமதே²த³ம்ʼ ப⁴ஸ்மாந்தம்ʼ ஶரீரம் |
ஓம்ʼ க்ரதோ ஸ்மர க்ருʼதம்ʼ ஸ்மர க்ரதோ ஸ்மர க்ருʼதம்ʼ ஸ்மர ||

*****

வால்ட் டிஸ்னியின் படைப்புகளில், படங்களில் மறைந்திருக்கும் பாகனீய (Pagan) இயற்கை வழிபாட்டுக் கூறுகளைப் பற்றி டாவின்ஸி கோட் புதினத்தில் டான் ப்ரவுன் ஓரிடம் சொல்லியிருப்பார். அந்தப் பிரபல நாவல் வருவதற்குப் பல ஆண்டுகள் முன்னரே இது குறித்து நான் சுட்டியுள்ளேன். பலவிதக் குறியீடுகளில் நாளிதுவரை டிஸ்னி படங்களில் நாம் கண்டுவந்த பாகன்மார் கதைகளை, அவர்தம் ஆதார நமபிக்கைகளை, தொன்மங்களை, கோகோ (Coco) என்ற இந்த ஆண்டின் ஆஸ்கார் விருது வென்றிருக்கும் திரைப்படம் மிக வெளிப்படையாகவே சித்தரித்திருக்கிறது.

மெக்ஸிகோ தேசத்தில் இசைமேல் மிக ஆர்வம் கொண்ட மிகேல் என்ற 12 வயதுச் சிறுவனைச் சுற்றி கதை நிகழ்கிறது. இசைக்கருவிகள் அனைத்தும் தடை செய்யப்பட்டிருக்கும் அவர்கள் வீட்டில். வாய்விட்டுப் பாடினாலே பாட்டி அடிக்க ஓடி
வருகிறார். இத்தனைக்கும் அது ஒரு பாரம்பரிய பாணர் குடும்பம். இசையைத் தடை செய்த நாள் முதலாய், ஐந்து தலைமுறைகளாய் அவர்கள் தோல்பொருள்களை, காலணிகளைத் தயாரிக்கும் தொழிலில் மட்டும் ஈடுபட்டிருக்கிறார்கள்.

ஏன் இப்படி ஆனது என்பது மிகேலுக்கு மிகப்பெரிய புதிர்.

ஆண்டுதோறும் அவர்களின் முக்கியத் திருவிழாவான ‘மரித்தோர் தினம்’ (Día de Muertos) என்ற நாளதில் மூன்று தலைமுறை மூதாதையர் பிரிந்து சென்ற குடும்பத்தைத் தேடி இறங்கி வருவர் என்பது மெக்ஸிகோ தேசத்தவர் தொல்நம்பிக்கை.

மிகேலின் குடும்பமும் மரித்தோர் தினத்துக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறது. பாட்டியார், மூதாதையர் புகைப்படங்களைத் தூசிதட்டிப் பின் படையல் வைக்கும் இடத்தைச் சுத்தம் செய்து மலர்களால் அலங்காரம் செய்து கொண்டிருக்கையில், அங்கு வரும் மிகேல் ஒரு கிழிந்த புகைப்படத்தில் தன் எள்ளுத்தாத்தா கையிலிருக்கும் கிடாரை வைத்து, அவர் மெக்ஸிகோவின் புகழ்வாய்ந்த இசைக்கலைஞர் எர்னெஸ்டோ என்று கண்டுபிடிக்கிறான். அவ்வளவுதான், உற்சாகம் தொற்றிக் கொள்ள, குடும்பத்தினர் எதிர்ப்பையும் மீறி ஊர்மையத்தில் நடக்கவிருக்கும் இசை நிகழ்ச்சியில் கலந்துகொண்டு போட்டியிட விரைகிறான் மிகைல்.

போட்டியில் கலந்து கொள்ள கிடார் வேண்டுமே அதற்கு இசைக்கலைஞர் எள்ளுப்பாட்டனார் எர்னெஸ்டோவின் நினைவிடத்தில் நுழைந்து அவர் சமாதி அறையில் மாட்டி வைத்திருக்கும் கிடாரை உருவி எடுக்கையில் தடுமாறி விழுகிறான். அந்தக் கணத்தில் தென்புலத்தார் உலகம் திறந்து வழிவிட, யார் கண்களுக்கும் தென்படாமல், யாதும் சுவடுபடாமல் அவ்வுலகில் நுழைகிறான் மிகைல்.

நீத்தார் உலகம் முப்பரிமாணத்தில் அற்புதமாய் விரிகிறது இப்படத்தில். அங்கே பூவுலகம் திரும்பக் காத்திருக்கும் தன் முன்னோர்களைச் சந்திக்கிறான் மிகைல். புகழ்வாய்ந்த அவன் இசைக்குடும்பம் ஏன் இசையைத் துறந்து காலணி தைக்கப் போனது என்ற புதிருக்கும், அவன் எள்ளுத்தாத்தா உண்மையில் யார் என்றும் அங்கே விடை கிடைக்கிறது அவனுக்கு. தத்தம் குடும்பங்களுடன் முன்னோரைப் பிணைத்திருப்பது வருடம்தோறும் தவறாது, அவரை மறவாது அழைத்துப் படையல் வைத்து உபசரிக்கும் தொல்மரபே என்றும் தெரிந்து கொள்கிறான். அந்த நினைவுச் சரடைப் பற்றியே அவர்கள் இறங்கி வருவதைக் காண்கிறான். பல்வேறு வினோத அனுபவங்களுடன், பூவுலகம் திரும்பிவந்து கொள்ளுப்பாட்டி கோகோவிடம் இசைக்கலைஞரான தன் எள்ளுப்பாட்டனாரை, அவர் தந்தையாரை, நினைவுகூர்ந்து அழைக்குமாறு அவர் பாடிய ‘Remember me..’ என்ற பாடலைப் பாடிக்காட்டி, அவரை இறங்கி வரவைத்து அந்தக் குடும்பத்தை மீண்டும் இசைக்குடும்பமாய் மாற்றுகிறான் மிகைல்.

சாதலை எண்ணி அஞ்ச வேண்டியதில்லை என்பது இந்தப்படத்தின் முக்கியச் செய்தி. யாராவது மரணமடைந்த செய்தி கிட்டியவுடன் Rip Rip என்று எளிதாய் அஞ்சலி செலுத்திவிட்டு இறுதித்தீர்ப்பு நாள் வரை ஓய்வெடுக்கச் சொல்வதன் அபத்தமும் விளங்கும்.

கிறித்துவம் அழித்தொழிப்பதற்கு முன்பிருந்த உலகளாவிய பாகன் குடிகளுக்கிடையே பல வியக்கத்தக்க ஒற்றுமைகளைக் காணலாம். நீத்தார் வழிபாடு அதில் முக்கியமானது. கெல்தியர் (Celtic) வழிபட்டிருந்த ச-வின் (Samhain) என்பது ஆதியில் நீத்தார் மூத்தார் வழிபடும் தினம். இது நம் மஹாலயத்தை ஒட்டியே வரும். பின்னாளில் கிறுத்துவம் இதைக் கபளீகரம் செய்து ஹாலோவீன் (Halloween) என்று வழக்கம்போல் பெயர் மாற்றிக் கொண்டது. பின்னர் All Saints Day என்றும் All Souls Day சில நாடுகளில் உல்டா செய்து கொண்டுள்ளது.

அமாவாசை சிறப்பு வழிபாடு என்று அரக்கோணம், திருவள்ளூர் பகுதிகளில் பல சர்ச்சுகளில் பரவலாய்த் தொடங்கியிருப்பதைக் கண்டேன். விழித்துக் கொண்டோரெல்லாம் பிழைத்துக் கொண்டார். இல்லை பின்னாளில் நம் சந்ததியினர் இப்படி ஒரு படம் எடுத்து, ‘Remember me’ என்று அழுவதே எஞ்சும்.

இந்துப் பண்பாட்டின் மூத்தார் வழிபாட்டின் தனித்தன்மையை வலியுறுத்த வேண்டும். இதை அபகரிக்க முனையும் கிறிஸ்தவ ஊடுருவல்கள்  தடுத்து நிறுத்தப்பட வேண்டும். முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டும்.

(ஜாவா குமார் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியது)

3 Replies to “தென்புலத்தார் திரும்பிவரும் நாளில் – கோகோ (Coco) திரைப்படம்”

  1. Pixar’s “Coco” Promotes Pagan Beliefs
    https://www.womenofgrace.com/blog/?p=61730

    //When it comes to Coco, Disney employs its usual brilliant animation, lovable characters and touching story lines to produce what seems to be a film about the importance of family but is instead a film celebrating paganism.//
    //So despite this film’s eye-popping beauty and its heartwarming moments, Pixar’s latest still packages a pagan worldview that’s in sharp conflict with Christian beliefs. That’s an issue that should prompt parents to pause and consider how best to deal with it if you’ve been planning on packing up the family and heading off to multiplex to see Coco.”//

  2. //the film emphasizes an Aztec belief system, which goes beyond merely honoring past family members, but actually worships them.
    “The presentation of this belief system is no doubt touching and beautifully rendered,” Holz said. “But the beliefs we see earnestly depicted here nevertheless remain at loggerheads with orthodox Christian teaching in (a) long list of significant ways.”

    “So despite this film’s eye-popping beauty and its heartwarming moments, Pixar’s latest still packages a pagan worldview that’s in sharp conflict with Christian beliefs,” he continued.//
    //the film emphasizes an Aztec belief system, which goes beyond merely honoring past family members, but actually worships them.
    “The presentation of this belief system is no doubt touching and beautifully rendered,” Holz said. “But the beliefs we see earnestly depicted here nevertheless remain at loggerheads with orthodox Christian teaching in (a) long list of significant ways.”

    “So despite this film’s eye-popping beauty and its heartwarming moments, Pixar’s latest still packages a pagan worldview that’s in sharp conflict with Christian beliefs,” he continued.//

  3. From a Biblical standpoint, this is not accurate; there is no place of purgatory or second chances after death. Regenerate saved souls go directly to be with God (eternal life), and the wicked who have rejected God’s gift of forgiveness and salvation go to await The Final Judgment where they will justly sentenced to eternal death. The Bible states in Hebrews 9:27,
    “And just as it is appointed for man to die once, and after that comes the judgment.”
    https://christiananswers.net/…/movies/2017/coco2017.html

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *