காஞ்சி காமாட்சியும் சங்கரரும்

காஞ்சியில் ஆதி சங்கரர் காமாட்சி தேவியின் வழிபாட்டை நிலைநிறுத்தினார் என்ற குறிப்பு மாதவீய சங்கர விஜயத்தில் (பொ.பி 14ம் நூற்.) உள்ளது என்று காமாட்சி அம்மன் கோயில் குறித்த தனது உரையில் முனைவர் ஜி.சங்கர நாராயணன் குறிப்பிட்டிருந்தார்.

இப்போது கிடைக்கும் சங்கரவிஜய பிரதிகளில் ஆதாரபூர்வமானதும் ஆய்வாளர்களால் பரவலாக ஏற்கப்படுவதும் இந்த நூல்தான். இந்த நூலில் அதுபற்றி உள்ள சிறிய குறிப்பில் கோயிலில் சங்கரர் ஸ்ரீசக்ரத்தை நிறுவினார் என்றோ தேவியின் உக்ர ரூபத்தை சாந்தப் படுத்தினார் என்றோ எதுவுமே சொல்லப் படவில்லை. அவை செவிவழிச் செய்திகளாகவோ அல்லது மற்ற பிற்காலத்திய சங்கரவிஜய நூல்களில் உள்ளதாகவோ இருக்கக் கூடும்.  இந்த நூலில் உள்ள குறிப்பு கீழே:

“பிறகு, வள்ளல்தன்மையோடு கூடிய புத்திவாய்ந்த இந்த ஸ்ரீசங்கரர் திக்விஜயம் செய்ய விருப்புற்றவராக ஆயிரக்கணக்கான சிஷ்யர்களுடனும், சுதன்வ ராஜனுடனும் முதலில் சேதுவிற்கு புறப்பட்டார். அங்கு, தேவி பூஜை எண்ற காரணத்தை முன்னிட்டு மதுபானத்தில் கருத்துள்ளவர்களான சாக்தர்களுடன், அருகிருந்தவர்கள் உற்சாகப்படுத்த, அனேக சிறந்த தர்க்கங்களைக் கூறி சிறப்பான வாதம் நிகழ்ந்தது. பிராமண தர்மங்களுக்குப் புறம்பான செயல்களைப் பின்பற்றிய சாக்தர்களை பல தர்க்கங்களை (யுக்தி) கூறி, விடைகூறச் சக்தியற்றவர்களாகச் செய்து, உலகின் நன்மைக்காக கர்மநெறி என்ற சேதுவைக் கட்டினார். அங்கு அவர் ஸ்ரீராமநாதரைப் பூஜித்து, பாண்டிய, சோழ தேசத்தினரையும், திராவிட தேசத்தவர்களையும் தன்வசப்படுத்திப் பிறகு ஹஸ்திகிரிக்கு மேகலாபரணம் போலத் திகழும் காஞ்சி நகரத்திற்குச் சென்றார்.

அங்கு அவர் ஒரு தேவாலயத்தைக் கட்டச்செய்து உயர்ந்த வித்தையை (உபநிஷதங்களின் தத்வஞானம்) பின்பற்றியதாகப் பூஜையையும் நியமிப்பதற்கு, தாந்திரிகர்களைத் தாந்திரிகங்களின் திறமையால் வென்று, சுருதி சம்மதமான (வேதத்திற்கு உகந்த) பூஜைகளை தேவிக்குச் செய்யும்படிச் செயலாற்றினார். தனது பாதகமலங்களுக்குப் பணி செய்வதன் பொருட்டுப் பணிவுடன் வந்த ஆந்திரர்களை அனுக்கிரகம் செய்து ஸ்ரீ வேங்கடாசலேஸ்வரரைக் கண்டு பணிந்து பின்பு விதர்ப்ப தேசத்திற்குச் சென்றார்”.

– மாதவீய சங்கரவிஜயம் பதினைந்தாவது சர்க்கம் 1-7, ஆனந்தாஸ்மரம் பதிப்பு.

இந்தக் குறிப்பில் கூறப்பட்டுள்ள கோயில் காமக்கோட்டம் எனப்படும் ஸ்ரீகாமாக்ஷி ஆலயம் தான் என்று சங்கரநாராயணன் கருதுகிறார்.

17ம் நூற். இறுதியில் அனந்தானந்தகிரி என்பார் எழுதிய சங்கரவிஜயத்தில் ஏற்கனவே இருந்த தேவி கோயிலைச் சீரமைத்தார் (சில பிரதிகளின் படி புதியதாகக் கட்டினார்) என்றும், அதற்கு இருபுறமும் இருந்த சிவகாஞ்சி, விஷ்ணுகாஞ்சி ஆகிய இருபகுதிகளும் மேலும் வளர்ந்து தழைக்கச் செய்தார் என்றும், வாழ்வின் இறுதிக்காலத்தில் மீண்டும் காஞ்சிக்கு வந்து அங்கேயே தங்கியிருந்தார் என்றும் கூடுதலாகக் குறிப்பிடுகிறார்.  இந்த சங்கரவிஜயம் மிகப்பிற்காலத்தியது. (சங்கர பாஷ்யங்களுக்கு புகழ்பெற்ற டீகை என்ற விரிவுரைகள் எழுதிய ஆனந்தகிரி இந்த நூலாசிரியருக்குக் காலத்தால் முற்பட்டவர். இவருக்கும் அந்த ஆனந்தகிரிக்கும் எந்த தொடர்புமில்லை).

பாரததேசத்தின் பல பிரதேசங்களில் உள்ள கோயில்களிலும், அங்குள்ள சிவ, விஷ்ணு, சக்தி மூர்த்திகளின் வழிபாடுகள் ஸ்ரீசங்கரரால் நிறுவப்பட்டன அல்லது சீரமைக்கப் பட்டன என்ற சம்பிரதாயத்தைப் பெருமிதமாகக் குறிப்பிடுகிறார்கள்.உத்தராகண்ட் மாநிலத்தில் இமயச்சாரலில் உள்ள எல்லா பிரதான ஆலயங்களையுமே இவ்வாறு அங்குள்ளவர்கள் கூறுகிறார்கள். பசுபதிநாத், பத்ரிநாத், கேதாரநாத், ஸ்ரீநகர் ஜ்யேஷ்டேஸ்வரர் ஆலயம், வாராணசி, புரி ஜகன்னாதம், ஸ்ரீசைலம், துவாரகை, கொல்லூர் மூகாம்பிகை, காஞ்சி காமாட்சி, சிருங்கேரி சாரதா, திருவானைக்கா அகிலாண்டேஸ்வரி என்று பல கோயில்களில் இப்படி மரபுகள் உண்டு. இந்த ஒவ்வொரு இடத்திற்கும் சங்கரர் சென்றதற்கான கறாரான வரலாற்று ஆதாரம்  கிடைத்திருக்கறதா என்றால் இல்லை. ஆனால், அந்தக் கோயில்களின் வழிபாட்டுப் பாரம்பரியத்தில் ஒரு காலகட்டத்தில் சங்கரரின் மகத்தான உபதேசங்களின் தாக்கம் மிகப்பெரிய அளவில் ஏற்பட்டது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதையே  இந்த ஐதிகங்கள் குறிப்பதாகக் கொள்ளலாம்.

தமிழ்நாட்டில் கோயில் மரபுகளைப் பற்றிய எந்த வரலாறானாலும், எந்த ஆதாரமுமில்லாமல் அது தொடர்பாக பிராமண சதி (அல்லது ஸ்மார்த்தர் சதி, வைணவ சதி இத்யாதி) என்று சதிவலை தியரிகளை எடுத்துவிடுவது ஒரு வழக்கமாகப் போய்விட்டது. கிராம தேவதையான காஞ்சி காமாட்சியை பிராமணர்கள் அபகரித்து விட்டார்கள் என்பதும் இதேபோன்ற ஒரு அவதூற்றுக் கதையே அன்றி வேறில்லை.  சன்னியாசியாகிய சங்கரரை இந்த ஆகமக் கோயிலின் அர்ச்சகர்கள் உள்ளே அனுமதித்திருக்க மாட்டார்கள், எனவே அவர் கோயிலுக்குள் வந்திருக்கவே முடியாது என்பது போன்ற அர்த்தமற்ற வாதங்களையும் இன்னொரு சாரார் எடுத்து விடுகிறார்கள்.

எத்தனையோ கோயில்களில் உள்ள எத்தனையோ விதவிதமான ஐதிகங்களில் ஏராளமான விதிவிலக்குகளும் உண்டு.  ஆகமமோ தாந்திரிகமோ அப்படியே அச்சு அலசலாக எந்த மாறுதலும் இல்லாமல் பின்பற்றப் பட்டது என்பது உண்மையல்ல, பற்பல மாறுதல்கள் இவற்றில் ஏற்பட்டு வந்துள்ளன என்பது கோயில்களின் வரலாற்றைக் கற்பவர்கள் எவருக்கும் தெரியும். இவற்றையெல்லாம் ஏற்றுக் கொண்டு தான் இந்துக்கள் தங்கள் ஆலய வழிபாட்டை நடத்திக் கொண்டு வருகிறார்கள்.    எனவே சங்கரர் இந்தக்கோயிலுக்குள் வரவே இல்லை என்று வெறித்தனமாக வாதிடுவதற்கான முகாந்திரமே இல்லை.

காஞ்சி காமாக்ஷி ஆலயத்தின் வரலாறு குறித்து சங்கரநாராயணன் அவர்களின் சிறப்பான தமிழ் உரை இங்கே.

 

(ஜடாயு தனது ஃபேஸ்புக் பக்கத்தில் முன்பு எழுதியது). 

One Reply to “காஞ்சி காமாட்சியும் சங்கரரும்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *