சிதம்பரம் நந்தனார் மடமும் அதன் தற்கால நிலையும்

கோபாலக்ருஷ்ண பாரதியின் வாக்கில் “நந்தன் சரித்திரம் ஆனந்தம்…”

ஆம், திருநாளைப்போவார் தன் திருச்சரித்திரம் அள்ள அள்ளக் குறையா பக்திச்சுவை வாரியிறைக்கும். பெரியபுராண ஆசிரியர் கண்ட வரலாற்று அடிப்படையிலான நந்தனாரினும் கோபாலக்ருஷ்ணபாரதியாரின் நந்தனார் சற்றே மாறுபடுகிறார். புது கதை மாந்தர்கள். வரலாற்றிலிருந்து சற்றே வளைந்து செல்கிறது அவர் கதைக்களம். அதெப்படியானாலும் நந்தனாரின் இறுதிக்காலம் என்பதில் இருவரும் ஒரே கருத்தை கொண்டிருக்கின்றனர். ஆதனூரிலிருந்து கொள்ளிடம் தாண்டி, தில்லைப் பெரும்பதியை வந்தடைந்த நந்தன், 3 நாட்கள் ஊருக்குள்ளே போகாமல் ஊரின் தெற்கு பகுதியில் உள்ள ஓர் தோப்பிலேயே தங்கினார் என்பதுதான் அது. அதன் பின் சபாநாயகர், தில்லைவாழ் அந்தணர் தம் கனவில் தோன்றி நந்தனாரை சித்ஸபா ப்ரவேசத்திற்கு சம்மதிக்கவைக்குமாறு பணிதததும், அதனைத் தொடர்ந்து நந்தனார் சபா ப்ரவேசம் செய்தருளியதும் நாம் அறிந்ததே.

வரலாற்றுக் காலம் தொடங்கி தென்னிந்திய வரலாற்றின் முக்கிய நிகழ்வுகள் பலவற்றிற்கு கதைக்களமான தில்லைப் பெருநகரம் தன்னுள் பல வரலாற்று எச்சங்களை தாங்கியுள்ளது நாம் அறிந்ததே. அப்படியிருக்க, நந்தனார் தங்கியிருந்ததாகச் சொல்லப்படும் இடம் என்று ஏதேனும் உள்ளதா என்ற ஆவலில் தேடினோம். ஊருக்கு வெளியே சீர்காழி செல்லும் சாலையில் “ஓமக்குளம்” என்ற ஒரு பகுதியும், அங்கே சிவலோகநாத ஸ்வாமி என்ற பெயரில் ஒரு ஆலயமும் உள்ளதை அறிந்து சென்று பார்வையிட்டோம். பெருத்த ஏமாற்றம் மிஞ்சியது. அது சில பத்தாண்டுகளுக்கு முன் ஜாதி காழ்ப்பை வைத்து அரசியல் லாபம் பார்த்த யாரோ ஒருவர்(அவர் சன்யாஸி என்று சொல்லப்படுகிறது) ஏற்படுத்திய நூதனமான கோயில். அந்தோ பரிதாபம், பொது மக்களின் விழிப்புணர்வு இன்மையால் எப்படி வரலாறு சிதைகிறது. இப்படி போட்டிக்கும் பொறாமைக்குமாக உருவான இடங்களை அடியார் பெருமக்கள் தவிர்ப்பது தான் நல்லது.

இதைத்தவிற வேறு தொன்மையான தடங்கள் இல்லையா என்று தேடிய போது ஊரின் தெற்குப் பகுதியில் பல ஆக்ரமிப்புகளுக்கு நடுவே நந்தனார் மடம் என்ற பெயரில் ஒரு திருக்கோயில் இருப்பது ஶ்ரீ த்யாகராஜப் பெருமான் அருளால் தெரியவந்தது. சற்றேறக்குறைய 30 ஆண்டுகளாக முறையான வழிபாடுகள் ஏதுமின்றி, பாம்பு, தேள் இன்னபிற விஷஜந்துக்களுக்கு அடைக்கலம் தந்த படியுள்ளது. சுற்றிலும் ஆக்ரமிப்புகள், உள்ளே செல்ல வழியையும் அடைத்துவிட்டிருந்தனர்.

ஒரு வாரியாக பாதையை உருவாக்கிக்கொண்டு நடந்தால், கோயில் 3 அடி உயர மேடையின் மேல் உள்ளது. அதன் மேல் ஏற படியில்லை. குதித்து ஏறினாலும் நிற்க இடமில்லாதபடி தகர மடிப்புகளும், மூங்கில் கழிகளும் போட்டு வைத்திருந்தனர் . அருகில் இருந்த சில நண்பர்கள் உதவியுடன், துரு ஏறிப்போன சங்கிலிப்பூட்டை பெரும் ப்ரயத்தனத்திற்குப் பின் திறந்தோம். கோயில் சிறியது தான்.

அதிகபட்சம் போனால் 1000 சதுர அடி. காரையும், செங்கல் கட்டுமானமும் இன்னும் நேர்த்தியாகவே உள்ளன. முன்னால் சிறு 4 கால் மேடை. அதிலேறினால், அர்த்தமண்டபமும், அதையடுத்து கர்ப க்ருஹமும். சாவி வைத்திருந்த பெண்மணி, சத்தம் எழுப்பியபடியே, இருட்டினில் கைப்பேசியின் வெளிச்சத்தில் உள்ளே போனாள்.

அர்த்த மண்டபத்தில் வாயிலுக்கிருபுறமும் ஆனைமுகனும், அவன் இளவலும். வணங்கி நேரே திரும்பி கர்பக்ருஹத்தை அடைந்தது தான் தாமதம்.

என்ன ஒரு காட்சியது. 5 அடி உயரத்தில் பக்தியின் இலக்கணமாக நம்முன் நந்தமாமுனிவர். ஜடாமுடியும், நெற்றியில் இலங்கு திருநீரும், மார்பிலும் கழுத்திலும் ருத்ராக்‌ஷ மணிகளும், சிவப்பழமாய், தீயின் மூழ்கி யாகோற்பவமான நந்தனார் நம்முன் நின்றார். 30 வருட அலட்சியத்தால் அணிந்த ஆடை கந்தலாகியிருந்தாலும், கண்ணில் காந்தி குறையவில்லை. பொன்னம்பலவாணரை முதல்முன்னம் பார்த்த அதே பரவசத்தோடு நின்றார். கூப்பிய கைகள் மார்பின் மேல், அடக்கத்துடன் வளைந்து குனிந்த முதுகும், குவிந்த இடையும், பத்ம பீடத்தில் அழுத்திய நிலையில் விரிந்த திருவடிகளுடன் நின்றார். யாரோ அங்கு இருந்த ஒரு அம்மையார் தினமும் விளக்கேற்றி வந்தாளாம். அதுவும் 4 வருடம் முன், அவள் இறக்கும் வரையில்.

மனம் தாங்காமல்,  “இரக்கம் வராமல் போனதென்ன காரணம்?” என்று பாடி வேண்டிக் கேட்டுக்கொண்டேன். நந்தனார் அருகில் பெரிய ஜடாமுடியுடன், ஒரு சைவ ஆச்சார்யர். ஆதீன பீடாதிபதி போலிருந்தது. கோயிலில் தளம் வேய்ந்த ஒரே ப்ரகாரம். அதுவும் பெரும்பாலும் நல்ல நிலையில் உள்ளது. ஆனால் சுற்றி வர வழியின்றி ஓட்டை உடைசல் பொருட்களை போட்டு நிறப்பியுள்ளனர் அக்கம் பக்கத்தார். ஆக்ரமிப்புகளைக் கூட இப்போதைக்கு விட்டுவிடலாம். ஆனால் இப்படி ஒரு திருக்கோயிலுக்குள் தேவையற்ற பொருட்களை போட்டு யாரும் வரமுடியாதபடி செய்வது சிவத்ரோஹம்.

எப்படி சீர் செய்வது? 20 சிவனடியார்கள், உழவாரப்படையினர் முயன்றால் இரண்டொரு நாளில் இந்நிலையை மாற்றலாம். அடைத்துக் கொண்டிருக்கும் குப்பையை வெளியேற்றி, இரண்டு வேளை தீபம் எரிய ஏற்பாடு செய்தாலும் போதும். இக்கோயில் தில்லைக்காளி கோயிலில் இருக்கும் அறநிலையத்துறையின் கட்டுபாட்டில் இருப்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

வாழ்நாளெல்லாம் சித்ஸபாபதியின் தாண்டவத்தை காணவேண்டும் என்று காத்திருந்து, அதைக் கண்டமாத்திரத்தில் முக்தியடைந்த திருநாளைப்போவார் அடியார்களிலெல்லாம் வெகு ஸ்ரேஷ்டமானவர். தூய அன்பு மட்டுமே சிவத்தை தருவிக்கும் என்று விளக்கியவர். அவருக்கு, தில்லை பெருமன்றின் திசை நோக்கியபடி இருக்கும் இந்த திருக்கோயில் நிச்சயம் சைவ அன்பர்கள் ஒவ்வொருவரும் சென்று தரிசிக்க வேண்டிய திருத்தலம். சிவக்ருபையினால் ஆகாததொன்றுமில்லை. அவனருளால் அடியார் பெருமக்கள் இணைவோம். நந்தனாரின் புகழ் ஊரறியச்செய்வோம். தில்லைக்கு ப்ரயாணமாகும் சிவச்சொந்தங்கள் அவசியம் சென்று கோயிலையும், நந்தமாமுனிவரையும் தரிசித்து வரத்தொடங்குவோம். முடிந்தவர்கள் உதவ முன்வரவும்.

மீண்டும் கோபாலக்ருஷ்ணபாரதியின் வரிகளில்,

நந்தன் சரித்திரன் வெகு அந்தம்,
சிவனாருக்கு சொந்தம்,
தொலையும் பவபந்தம் – கேட்ட பேர்க்கு,
நந்தன் சரித்திரம் ஆனந்தம்.

கட்டுரையாசிரியர் மதுசூதனன் கலைச்செல்வன் கட்டிடக் கலை நிபுணர்.  கோயில் கலைகள், சிற்பவியல், சமயம், வரலாறு ஆகியவற்றில் தீவிர ஆர்வம் கொண்டவர்.  இவற்றைக் குறித்து தொடர்ந்து உரையாற்றியும், எழுதியும்  வருகிறார். இவரது ஃபேஸ்புக் பக்கம் இங்கே.

4 Replies to “சிதம்பரம் நந்தனார் மடமும் அதன் தற்கால நிலையும்”

  1. மிகவும் சீரிய நடையில் அமைந்த நல்ல கட்டுரை. கட்டுரையாசிரியருக்கு நல்வாழ்த்துக்கள்..

  2. இதைப்படித்து வியப்படைந்தனர். அறநிலயத்தின் கட்டுக்கோப்பிலிருந்தும் இப்படிப்பட்ட நிலையா என்று!என் தாயார் வாய்வோயாமல் நந்தனார் சரிதப்பாடல்களை பாடிக்கொண்டே இருப்பார்.வயதின் காரனமாக என்னால் உழவாரப்பணியில் பங்கு கொள்ளமுடியாமைக்கு வருந்துகிறேன்.வேறு வகையில் தங்களின் நற்பணியில் பங்கேற்பேன். சிறக்க உங்கள் பணி.

  3. ஓம் நமசிவய ஐயா தங்கள் வலை பதிவை இப்போது தான் பார்க்க நேர்ந்தது நந்தனார் மட திருபணிகள் முடிந்துவிட்டதா அல்லது சேவைக்கு அடியேனுக்கும் வாய்ப்பு உள்ளதா
    8248364081

  4. மடங்களின் எண்ணிக்கை போதிய அளவில் உள்ளது.சிதம்பரத்தில் இன்னும் கூடுதலாக ஒரு மடம் தேவையில்லை.சமயகல்வி வகுப்புகள் யோகா போன்றவற்றை கற்றுக் கொடுக்கும் ஒரு விவேகானந்தா கேந்திராவின் கிளை ஒன்று சிதம்பரத்திற்கு தேவை.அதற்கு பயன்படுத்தினால் இந்துக்கள் நலன் பெறுவார்கள். சிதம்பரத்தில் வாகாபிகளின் நடவடிக்கை உள்ளது.இந்துக்களே உஷாா்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *