தலித்துகளும் தமிழ் இலக்கியமும் – 1

[தில்லி சாகித்ய அகாடமியின் இரு மாதாந்திர இதழ் Indian Literature-ன் தமிழ் இலக்கியத்தில் தலித் எழுத்தும் தலித்துகளும் என்னும் சிறப்பிதழுக்காக (No. 193 – September-October, 1999)  நான் எழுதிய The Dalit in Tamil Literature – Past and Present என்னும் ஆங்கிலக் கட்டுரையின் தமிழ் வடிவாக்கம்]

வெகு காலமாக தலித் மக்கள் இந்த சமூகத்தில், மனித ஜீவன்களாகவே மதிக்கப்பட்டதில்லை. சமூகத்தில் அவர்கள் எதிர்கொண்ட புறக்கணிப்பு அவ்வளவு கொடூரமாகவே இருந்து வந்துள்ளது. இருந்த போதிலும், அதே சமயம் அவர்கள் எதிர்கொண்ட இத் தாழ்வு நிலையை, கொடுமையைப் பற்றிய வேதனையோடு கூடிய சிந்தனையும், அவர்கள் விருப்பங்களையும் கனவுகளையும் அங்கீகரித்த ஆதரவும், இலக்கியங்களிலும், தத்துவார்த்த சிந்தனையிலும் வெளிப்பாடு பெற்றிருப்பதையும் காண்கிறோம்.

வேறு எங்கு காணப்பட்டாலும் காணப்படாவிட்டாலும், தமிழ் நாட்டின் இலக்கியத்தில், வரலாற்றில், தலித்துகளின் கனவுகளும் லட்சியங்களும் பேசப்பட்டிருக்கின்றன, போற்றப்பட்டிருக்கின்றன. சிறப்பிக்கப்பட்டும் கொண்டாடப்பட்டும் உள்ளன. அவர்களை கடவுள் அருள் பெற்றவர்களாக, அவரது கருணைக்குப் பாத்திரமான புண்ய புருஷர்களாக, மேல் தட்டுகளில் இருப்போரையும் உள்ளடக்கிய மொத்த சமுகத்தாலும் தொழத்தக்கவர்களாக காவியங்கள் பாடுகின்றன. கோவில்களில் அவர்கள் சிலைகள் ஆழ்வார்ளாக, நாயன்மார்களாக வீற்றிருக்கின்றன.

nandanar1எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த சுந்தரமூர்த்தி நாயனார், அவர்தம் காலத்துக்கு முன் வாழ்ந்த நாயன்மார்கள் அனைவரையும் ஒவ்வொருவராகப் பெயர் சொல்லி அவர்கள் ஒவ்வொருவரும் தேவாம்சம் கொண்டவர்கள் என்றும் சிவனின் அருள் பெற்றவர் எனறும் அவர்களுக்கு முன் தாம் ஒரு எளிய தொண்டனே என்றும் தன் திருத்தொண்டத் தொகையில் சிறப்பித்துப் பேசியுள்ளார். அத்தகைய பெரியார்களில், பள்ளர் சமூகத்தில் பிறந்த திருநாளைப் போவார் என்று சிறப்பிக்கப்படும் நந்தனாரும் ஒருவர். நந்தனார் கோயில் தாளவாத்தியங்களுக்கு தேவையான பதனிடப்பட்ட தோல், நரம்பு, கோரோஜனை முதலிய பொருட்களைத் தயாரித்து அளிக்கும் வேலையைச் செய்து வந்தவர். இன்னொருவர் கண்ணப்பன் என்னும் வேடர் குலத்தைச் சேர்ந்தவர். அவர் பக்தி தனி ரகமானது. எச்சிலைத் துப்பி சிவலிங்கத்துக்கு அபிஷேகம் செய்தவர். அவர் தாமே முதலில் கடித்து ருசி பார்த்த மாமிசத் துண்டுகளையே நிவேதனமாக சிவனுக்குப் படைத்தவர். ஈசனின் கண்களில் ரத்தம் வடிவது கண்டு துயருற்று தன் கண்களை பெயர்த்துத் தந்தார் என்று சொல்கிறது அவரைப் பற்றிய கதை. திருநீலகண்டர் என்று போற்றப்படும் நாயனார் பிறப்பிலும் தொழிலிலும் ஒரு குயவர்.. சிவனடியார்களையெல்லாம் உபசரித்து அவர்களுக்கு திருவோடும் தானமாகத் தருவதை வழக்கமாகக் கொண்டவர். தாழ்ந்த குலமாகக் கருதப்பட்ட பாணர் வகுப்பில் பிறந்த இன்னுமொரு நீலகண்டர், வீணை வாசிப்பதிலும் வல்லவரானதால் திருநீலகண்ட யாழ்ப்பாணர், என்று அறியப்பட்டவரும், 63 நாயன்மார்களில் ஒருவருவருமாவர். கோயில் வாயில் முன் நின்று வீணை வாசித்துக்கொண்டே சிவனைப் போற்றிப் பாடுபவர். மதுரை மன்னன் சௌந்திரபாண்டியனின் கனவில் மாத்திரம் அல்ல, ஆலவாய் கோயில் அர்ச்சகரின், இன்னும் மற்ற சிவனடியார்கள் கனவில் சிவன் தோன்றி கோயில் வாயிலில் தன்னைப் பாடும் தன் பக்தனை கோவிலுக்குள் அழைத்து வந்து, அவரைத் தரையில் அல்ல, பலகையில் அமர்த்தி வீணையை மீட்டிப் பாடச் செய்யப் பணித்ததாக பெரியபுராணம் சொல்கிறது.

இவர்கள் எல்லாம் சிவனடியார்கள். இவர்களது பெயரையும் வரலாற்றையும் ஏழாம் நூற்றாண்டு சுந்தரமூர்த்தி நாயனாரின் திருத்தொண்டத் தொகையிலிருந்தும், பன்னிரண்டாம் நூற்றாண்டு சேக்கிழாரின் பெரியபுராணத்திலிருந்தும் தெரிந்து கொள்கிறோம்.

tiruppanazhvarஇன்னுமொரு பாணர். இவர் விஷ்ணு பக்தர். திருப்பாணாழ்வார் என்றே அறியப்படுபவர். திருநீலகண்ட யாழ்ப்பாணர் பற்றிச் சொல்லப்படும் செய்தி போலவே, இவரைப்பற்றியும் வரலாறு சொல்லப் படுகிறது. அவரது யாழிலிருந்து பிறக்கும் நாதம் ”நாராயணா” என்று ஒலிப்பது கண்ட சேனை முதலியார், யாரும் அறியாது இவரது கரத்தில் இலச்சினை பதித்துச் சென்றதாகவும் பின்னர் இவ்விலச்சினை கண்ட அரங்க முனிவர் இவரைத் தோளில் சுமந்து அரங்கன் சனனதிக்குள் பெருமாளின் முன் இறக்கி விட்டதாகவும் வைணவ வரலாறு சொல்கிறது. இச்சம்பவம் காரணமாகவே இவர் முனிவாகனர் என்றும் பெயர் பெற்றவர். நாயன்மார்களைப் பற்றியாவது இலக்கியச் செய்திகளும் வரலாறுமே உண்டு. ஆனால், திருப்பாணாழ்வாரோ ‘அமலனாதி பிரான்’ என்று தொடங்கும் பத்துப் பாசுரங்கள் கொண்ட ஒரு பிரபந்தமே பாடி, வேதமாகப் போற்றிப் பாடப்படும் நாலாயிர திவ்ய பிரபந்தத்திலும் இடம் பெற்று சிறப்பிக்கப்பட்டுள்ளது. பெருமாளின் திவ்ய தோற்றத்தை அங்கம் அங்கமாக பாதாதி கேசம் வர்ணித்துப் பாடிய காரணத்தால், இவ்வகையில் இதுவே முன்னோடி கிரந்தமாகவும் கருதப்படுகிறது. 30 வயதே வாழ்ந்தவர் திருப்பாணாழ்வார்

சிவனை வழிபட்ட 63 நாயன்மார்களிலும், விஷ்ணுவை வழிபட்ட 12 ஆழ்வார்களிலும், அரசர்களும் உண்டு., வணிகர்களும் உண்டு. அந்தணர்களும் உண்டு. பெண்களும் உண்டு. தலித்துகளும் அவர்களோடு சமதையாக புண்யபுருஷர்களாகப் போற்றி வணங்கப் படுகிறார்கள். அவர்களை ஏதும் இன்றைய அரசியல் செயல்பாடு போல கண் துடைப்பாக, சமாதானப் படுத்துவதற்காகவோ, அவர்கள் ஆதரவைப் பெறுவதற்காகவோ, தன்னலத்திற்கான பகடைகளாகவோ, பயன்படுத்த இச்சிறப்புக்கள் செய்யப்படவில்லை. மற்றவர்கள் எவ்வாறு அரசர் என்பதற்காகவோ, மந்திரிகள் அல்லது தானைத் தலைவர் என்பதகாகவோ போற்றப்படவில்லையோ, அது போல இவர்களும் தலித் என்ற காரணத்திற்காக ஆழ்வாராகவோ நாயன்மாராகவோ போற்றப்படவில்லை. இவர்கள் அனைவரும் தம் திறத்தால், வாழ்க்கையால், பக்தியால் சிறப்புப் பெற்றவர்கள். அனைத்து சமூகத்தாலும் வணங்கப்பட்ட பெரியார் வரிசையில் தலித்துகளும் இடம் பெற்றிருக்கிறார்கள் என்று கொள்ளவேண்டும். தலித்துகள் என்பதற்காக அங்கீகரிக்கப் படவும் இல்லை. நிராகரிக்கப் படவும் இல்லை. மனிதர்கள் கவனிக்கத் தவறிய போது தெய்வமே இடை புகுந்து அவர்களைச் சிறப்பித்திருக்கிறது,

thiruneelakanda-yaazh-panarஇது ஏதோ ஒரு கால கட்டத்தோடு நின்றுவிட்ட ஒன்று அல்ல. இது பற்றி நாம் அறிய வரும் எட்டாம் நூற்றாண்டுக்குப் பிறகு, இரண்டு நூற்றாண்டுகளுக்குப் பிறகு, 10-ம் நூற்றாண்டில், நம்பியாண்டார் நம்பி, தேவார நால்வரின் பாடல்களைத் தேடித் தொகுத்த போது, சுந்தரர் போலவே, தாமும் தாம் இயற்றிய திருத்தொண்டர் திருவந்தாதியில் நந்தனார், திருநீலகண்டர், கண்ணப்பர் ஆகியோரை உள்ளடக்கிய அனைத்து நாயன்மார்களையும் சிறப்பித்துப் பாடுகிறார். இதை அடுத்து வந்த பன்னிரண்டாம் நூற்றாண்டு சேக்கிழார், நாயன்மார் அறுபத்து மூவர் பற்றிய வாழ்க்கையையும் மிக விரிவாகச் சொல்லும் பெரிய புராணம் என்னும் ஒரு பெரும் காப்பியத்தையே இயற்றுகிறார்.அது தமிழ் இலக்கிய வரலாற்றில், வாழ்க்கை வரலாற்றுப் பதிவில் ஒரு மைல் கல்லாகிறது. இவ்வரலாற்றுக் காவியத்திலிருந்து தான் நாம் நந்தனார், திருநீலகண்ட யாழ்ப்பாணர், திரு நீலகண்டர் போன்றோர் எத்தகைய சமூக அவமதிப்புகளை எதிர்கொள்ள் வேண்டி வந்தது, பின் சிவபிரானே இடைபுகுந்து அவர்களைக் காப்பாற்ற வேண்டி வந்தது என்பதை அறிகிறோம். எட்டாம் நூற்றாண்டில் வந்த சுந்தரமூர்த்தி இவர்களைப் பற்றிப் பேசும் வரை இவர்களைப் பற்றி ஏதும் செய்தி இல்லை. இவர்கள் வாழ்ந்த காலம் எது என்பதும் இன்று வரை தெரியாது. திருநீலகண்ட யாழ்ப்பாணரைத் தவிர. அவர் திருஞானசம்பந்தர் காலத்தில் வாழ்ந்தவர். திருஞான சம்பந்தரோடு அவர் பாட, இவர் யாழ் வாசித்து உடன் செல்ல, ஞானசம்பந்தர் செல்லும் க்ஷேத்திரங்களுக் கெல்லாம் உடன் சென்றவர். திருஞான சம்பந்தர் ஒரு பால சன்னியாசி. கவிஞர். சிவ பக்தர். அந்தணர். அவர் ஒரு தலித் வைணிகரை (வீணை வித்வான்), தம் கூட்டத்தோடு சேர்த்துக்கொண்டார். அவரும் ஒரு சிவ பக்தர், வீணை வாசிக்கும் கலையில் தேர்ந்தவர் என்ற காரணத்திற்காக அந்த அந்தணருக்கு இவர் தாழ்ந்த சாதியினர் என்பது தடையாயிருக்கவில்லை.

நான்கு நூற்றாண்டுகள் கழித்து, பன்னிரண்டாம் நூற்றாண்டில், பெரிய புராணத்திலிருந்து தான் நந்தனாரை கோயிலுக்குள் அனுமதிக்கும் முன்னர் தில்லை வாழ் அந்தணர் தீக்குளிக்கச் செய்தனர் என்ற செய்தி நமக்குத் தெரியவருகிறது. தாழ்ந்த குலத்தில் பிறந்த அழுக்குகள் நீங்கி, அவர் பூணுல் தரித்த அந்தணராக வெளிவந்ததாகச் சொல்கிறது பெரிய புராணம். இத்தகைய சோதனைக்கு நந்தனார் மட்டுமே ஆட்படவேண்டி வந்திருக்கிறது. கண்ணப்ப நாயனாருக்கோ, திருநீலகண்ட யாழ்ப்பாணருக்கோ, திருநீலகண்டருக்குமோ, அல்லது திருப்பாணாழ்வாருக்குமோ இத்தகைய சோதனைகள் விதிக்கப் படவில்லை. அவர் தீக்குளித்து பூணூல் அணிந்த அந்தணர் சொரூபத்தில் வெளிப்பட்ட கதையை நாம் நம்ப வேண்டாம். அத்தோடு நந்தனாரின் வாழ்வும் முடிந்ததாகவே இன்று வாழும் நாம் கொள்ளலாம். இன்று நம்மோடு வாழும் சித்தாந்திகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் நந்தனார் தீக்குளிக்க வைக்கப்பட்ட கதை மிகுந்த உவப்பளிக்கும், பிராமண துவேஷப் பிரசாரத்திற்கு உதவும், சலிப்புத் தராத விஷயமாகிப் போனது ஆச்சரியம் தரும் ஒன்றல்ல.

இதையெல்லாம் மீறி இதில் நாம் பார்க்கவேண்டிய சில முக்கிய விஷயங்கள் உள்ளன. எட்டாம் நூற்றாண்டிலோ பத்தாம் நூற்றாண்டிலோ சொல்லப்படாத, பன்னிரண்டாம் நூற்றாண்டில் விரிவாக்கப்பட்ட இக்கதைகள் அவ்வப்போது அவை தோன்றிய வடிவில் பாதுகாக்கப்பட்டுள்ளன; இலக்கியத்தில் பதிவாகியுள்ளன. இவர்கள் போற்றி வணங்கத் தக்க புண்ய புருஷர்களாக சிறப்பிக்கப் பட்டுள்ளனர். இவர்களது சிலை வடிவங்கள் தென்னிந்தியாவின் ஒவ்வொரு வைஷ்ணவ சிவன் பெரிய கோயில்களில் தரப்படுத்தப் படாத ஒரே வரிசையில் நமக்கு தரிசனம் தருகின்றன.. அறுபத்து மூவர் உற்சவ மூர்த்திகளாக உலா வருகின்றனர்.

ஒரு மா சே துங், தன் சகா லியூ ஷாவ் சீ யை, டெங் சியாவ் பிங்கை, சூ டேவை, தனக்கு சமமாக அங்கீகரிப்பதை விட்டு விடுவோம். இவர்கள் வாழ்ந்த சுவடையே முற்றிலுமாக அழிக்கத் தான் முயற்சிகள் மேற்கொண்டார் என்பது வரலாறு. அதே போல, ஸ்டாலினும் கூட, அத்தகைய ஸ்தானத்தை ட்ராட்ஸ்கிக்கோ இன்னும் மற்ற சகாக்களுக்கோ அளித்தாரா என்பதை எண்ணிப் பார்க்கலாம். 1936-ல் நிகழ்ந்த The Great Purges-க்குப் பிறகு அவர்கள் பெயரையும் வாழ்ந்த தடங்களையும் அழிக்கத் தான் இவர்களுக்கெல்லாம் தோன்றியது. இன்றைய அரசியலிலும் அவர்களது இன்றைய வாரிசுகளால் இயன்ற அளவு இம்முயற்சிகள் சிறிய பெரிய அளவில் நடந்து வருவதைக் காணலாம். அவர்கள் இயன்ற அளவு என்பது அவர்கள் ஸ்டாலின், மாவோ போல சர்வாதிகாரிகளாக இல்லாது போன காரணத்தால் தான்.

இந்திய சமுதாயமும் வரலாறும், குறிப்பாக இந்த சந்தர்ப்பத்தில் தமிழ் சமுதாயமும் இலக்கியமும் வரலாறும் – அப்படி இருந்ததில்லை. இதற்குக் காரணம், சமூகத்தில் நிலவிய தீண்டாமைகளையும் அநீதிகளையும் மீறி, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை பார்த்து மன வேதனைப் பட்டவர்களும், அதற்கு எதிராக சிந்தித்து செயல்பட்டவர்களும் ஒவ்வொரு கால கட்டத்திலும் இந்த சமூகத்தில் தோன்றி செயல்பட்டிருக்கிறார்கள், சமூகத்தை மாற்ற முனைந்திருக்கிறார்கள் என்பதே. அவ்வப்போது இது பற்றியெல்லாம் சிந்தித்தவர்கள், சுய விமரிசனம் செய்தவர்கள், அவர்கள் செயல்படவும் செய்தார்கள் என்பதைத் தான், சிவனோ பெருமாளோ அவர்களுக்காக மனமிரங்கி அவர்களைக் காப்பாற்றியதாக இலக்கியங்களும் கலைகளும் சொல்கின்றன. அதைத் தான் அவர்கள் வரலாற்றிலும் இலக்கியத்திலும் எழுதி அவற்றிற்கு ஒரு அழியா வாழ்வு கொடுத்திருக்கின்றனர். இல்லையெனில், ஏன் இவற்றை இந்த சமூகம் பாதுகாத்து அதற்கு ஒரு மேலான இடத்தைத் தந்து சிறப்பித்தார்கள்? இவர்கள் பாதுகாத்தும் சிறப்பித்தும் வாழ்வு தந்ததால் தானே அவை இன்றைய பிரசாரகர்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் பிராமணர்களைப் பழிக்க ஏதுவாயிருக்கிறது!

nandanarஇந்தக் கதைகளிலேயே குறிப்பாக, நந்தன் கதை தான் மிகவும் பிரபலமானதும், அதிகம் பயன்படுத்தப்படுவதும் புகழ் பெற்றதும் ஆகும். சேக்கிழாருக்கு அறுநூறு ஆண்டுகளுக்குப் பிறகு, 1780களில் பிறந்த கோபால கிருஷ்ண பாரதியார் என்னும் ஆசாரம் மிகுந்த, பக்தியும் சங்கீத ஞானமும் கொண்டிருந்த ஒரு பிராமணர், சேக்கிழாரின் திருநாளைப் போவார் கதையை எடுத்துக்கொண்டு அதற்கு தன் கற்பனையில் உதித்த சம்பவங்களையும் பாத்திரங்களையும் சேர்த்து ஒரு நீண்ட சங்கீத கதா காலட்சேப ரூபம் கொடுத்தார். அதில் அவர் கற்பனையில் உருவான ஒரு பிராமண பண்ணையார் தீவிர ஆசாரத்தில் தோய்ந்தவர். கோபால கிருஷ்ண பாரதியின் ஹீரோவான நந்தனுக்கு எதிரான வில்லன். ஆக கோபால கிருஷ்ண பாரதியார் 600 வருஷங்களாக தமிழ் சமூகம் மறந்திருந்த ஒரு நந்தன் கதையை, தன் கதா காலட்சேபத்துக்கான பொருளாகத் தேர்ந்தெடுப்பானேன்?, அதில் தன் பிராமண சமூகத்தையும், தான் வழுவும் ஆசாரத்தையுமே குற்றம் சாட்ட பெரிய புராணத்தில் இல்லாத ஒரு பிராமண பண்ணையாரை வில்லன் பாத்திரமாக சிருஷ்டிப்பானேன் என்ற கேள்விகளுக்கு பதில் இல்லை. அறு நூறு வருஷப் பழம் கதையை அவர் தன் நந்தனார் சரித்திரக் கீர்த்தனை மூலம் மறுபடியும் பிராபல்யப் படுத்திராவிட்டால், நந்தன் சிதையில் எரிந்தது 12-ம் நூற்றாண்டுப் பழங்கதையாகவே நின்றிருக்கும். அவர் கீர்த்தனை வெளி வந்த பிறகு அது மக்களிடையே பிரபலமாகி, பெரும் புகழ் பெற்றது. அதன் பின் வந்த வருடங்களில், நந்தன் கதை மேடை நாடகமாக, திரைப் படமாக பலமுறை, பல வடிவங்களில் பலரால் கையாளப்பட்டு வந்துள்ளது.

நம் தலைமுறையில் இந்திரா பார்த்தசாரதியும் தன் பங்கிற்கு தம் சித்தாந்த கற்பனை வளங்களை நந்தன் கதைக்குச் சேர்த்து நந்தன் கதை என்று அதற்கு நாடக வடிவம் தந்துள்ளார்.புத்தி ஜீவிகளும், கிராமிய, செவ்வியல் நாடகக் கலைஞர்களும் தம் பங்குக்கான பிராமண சாடலைத் தொடர்ந்து வருகின்றனர். இந்தச் சாடல், தொடர்ந்த் சாடல், அவர்கள் மீது பார்வை திரும்பி அவர்களது நம்பிக்கைகளும் சிந்தனைகளும் எத்தகையன என்ற விசாரணையிலிருந்து அவர்கள் தப்பிக்க வகை செய்கிறது என்பதும் இச்சாடலில் அவர்கள் பெறும் லாபமும் அரசியல் வாழ்வும். . . .

(தொடரும்)

vesa-150x1501வெங்கட் சாமிநாதன் ஐம்பது வருடங்களாகத் தமிழில் எழுதிவரும் கலை, இலக்கிய விமர்சகர். இலக்கியம், இசை, ஒவியம், நாடகம், திரைப்படம், நாட்டார் கலை போன்ற பல்வேறு துறைகளிலும் ஆழ்ந்த ரசனையும், விமர்சிக்கும் திறனும் கொண்டவர். இலக்கியம் வாழ்க்கையின் முழுமையை வெளிப்படுத்துவதன் மூலமாக உன்னதத்தை உணர்த்தும் முயற்சி என நம்பிச் செயல்டுபவர் வெங்கட் சாமிநாதன். மேலும் விவரங்கள் இங்கே.

25 Replies to “தலித்துகளும் தமிழ் இலக்கியமும் – 1”

 1. Pingback: Indli.com
 2. தலித்…. ??? யார் கொடுத்த பெயர்… மிக்க பண்பான பெயர் ஹரிஜன் – கடவுள் ஸ்ரீ ஹரியின் குழந்தைகள் என்பதே .!!! கடவுளின் உண்மையான தூய்மையான அடியார்களிடம் ஜாதி,குலம் இவற்றை கட்டாயம் பார்க்க கூடாது. உயர் ஜாதி என கூறப்படும் அந்தணர்கள் ஒழுக்கமும்,பக்தியும்,தூய்மையும் தவறினால் அவர்களே இழிகுலத்தவர். இதில் அந்தணன் என்ன, வணிகன் என்ன,அரசன் என்ன ??? யாரும் விதி விலக்கல்ல. தன சுய ஒழுக்கமும், உண்மையும், பக்தியும், நற்பண்புகளும் இல்லாத எவராயினும் இழிவானவர்களே!!!

 3. //தன்னைப் பாடும் தன் பக்தனை கோவிலுக்குள் அழைத்து வந்து, அவரைத் தரையில் அல்ல, பலகையில் அமர்த்தி வீணையை மீட்டிப் பாடச் செய்யப் பணித்ததாக பெரியபுராணம் சொல்கிறது.//

  சாதாரணமான பலகையில் அல்ல அதிஉன்னதமான பொற்பலகையில் இருத்தி யாழ் வாசிக்கப் பணித்தார். யாழ் என்பது வீணையல்ல… விளக்கத்திற்காக வீணை என்று சொல்லலாம். இது ஒரு பழந்தமிழ் இசைக்கருவி. இதனை வாசித்தவரே யாழ்ப்பாணர்.

  அந்தரத்தெழுந்த ஓசை அன்பினில் பாணர் பாடும்
  சந்தயாழ் தரையில் சீதந் தாக்கில் வீக்கழியுமென்று
  சுந்தரப்பலகை முன்னீரிடுகெனத் தொண்டரிட்டார்
  செந்தமிழ்ப் பாணனாரும் திருவருள் பெற்றுச் சேர்ந்தார்

  பள்ளு முதலிய இலக்கியங்கள் தாழ்த்தப்பெற்ற மக்களின் வாழ்வை மையப்படுத்தி எழுதப்பெற்றுள்ளன.

  நந்தனார் ஏன் தீயில் புகுந்து முனிவர் வடிவம் பெற்று தில்லைச் சிற்றம்பலத்துள் நுழைந்தார்? என்ற வினாவிற்கு பெரியபுராணமே சிறப்பான பதில் தருகிறது. அதற்குக் காரணம்..

  ‘…மனத்தானை மனத்துள் நின்ற கருத்தானை..’ என்பது நாவுக்கரசர் தேவாரம். நந்தனார் தாம் புலையர் என்றும்.. தமக்கு கோயிலில் புக தகுதியில்லை என்றும் கருதியிருக்கிறார். தம் உடம்பு தாழ்ந்த தொழில் புரியும் உடம்பு என்று வருந்தியிருக்கிறார். ஆகவே அவரது வாட்டம் போக்கவே இறைவன் அவரை அக்கினி குண்டத்தில் மூழ்கி உயர்வான எண்ணத்துடன் எழச்செய்தான்.

  ( உண்மையில் பெரிய புராணம் சொல்வது என்ன என்பதையே இங்கு தெளிவாக்கினேன்.)

  கைதொழுது நடமாடுங் கழலுன்னி அழல் புக்கார்
  எய்திய அப்பொழுதின் கண் இம்மாயப்
  பொய்தகையும் உருவொழித்துப் புண்ணியமா முனிவடிவாய்
  மெய்திகழ் வெண்ணூல் விளங்க வேணிமுடி கொண்டெழுந்தார்

  ஆக, நந்தனார் அடைந்த உருவம் பிராமண உருவம் என்று கருதுவதைக் காட்டிலும் அவர் பெற்ற உருவம் பதஞ்சலி, வியாக்ரபாதர் முதலாய மகாமுனிவர்களின் உருவம் எனலே தகும்.

  அந்தணர்கள் அதிசயித்தார் அருமுனிவர் துதி செய்தார்
  வந்தணைந்த திருத்தொண்டர் தம்மை வினை மாசறுத்துச்
  சுந்தரத்தாமரை புரையும் துணையடிகள் தொழுதிருக்க
  அந்தமிலா ஆனந்தப் பெருங்கூத்தர் அருள்புரிந்தார்

  இதுவே பெரிய புராணம் பேசும் திருநாளைப் போவார் என்ற நந்தனார் பெருமானின் சரிதச் செய்தி.

  உண்மையில் நமது சமயம் ஜாதியத்தை எதிர்த்திருக்கிறதே அன்றி எவ்விடத்தும் அதனை ஆதரிக்கவில்லை. இதுவே உண்மை.

 4. திரு மயூரகிரி சர்மா அவர்களுக்கு மிகச்சிறந்த விளக்கம் அளித்தமைக்கு நன்றி.

  அந்தணராய் உருவெடுத்தார் என்று சொன்னால், அந்தணர் உயர்ந்தோர், நந்தனார் உதித்த குலம் தாழ்ந்தோர் எனும் கருத்தே மிகும்.

  மாமுனியை உருவெடுத்தார் எனும் பெரியபுராண வரிகள் உண்மை நிலையை அதாவது அவர் எடுத்த மாமுனியாகிய புதிய பேருருவைச் செவ்வனே விளக்கும்.

 5. @ SS

  //… தலித்…. ??? யார் கொடுத்த பெயர்… மிக்க பண்பான பெயர் ஹரிஜன் – கடவுள் ஸ்ரீ ஹரியின் குழந்தைகள் என்பதே .!!!..//

  தலித் என்ற பெயரை முதன் முதலில் வைத்தவர்கள் ஆரிய சமாஜிகள்.

  தாழ்த்தப்பட்ட சாதியினர் மட்டும் ஹரிஜன் என்றால், உயர்த்தப்பட்ட சாதியில் இருப்பவர்கள் எல்லாம் ஹரியின் குழந்தைகள் இல்லையா?

  எனவே, நலிந்தவர்கள் என்ற பொருளைத் தரும் “தலித்” என்ற வார்த்தையே பொருத்தமானது.

  சாதி வெறி ஒழிப்பில் வெற்றிகளை இன்றும் தரும் ஆரிய சமாஜிகள் வந்த வார்த்தையைப் பயன்படுத்துவதுதான் சரியானது.

 6. ஜாதி என்ன மதம் கூட இறைவனுக்கு ஒரு பொருட்டல்ல. ராம பிரானிடம் பக்தி செய்த கபீர் மற்றும் அவர் மகன் கமால், கண்ணனிடம் அளவற்ற பக்தி கொண்ட ரஹீம், ரஸ்கான், ஹமீதா மற்றும் ஹஸீனா தோழிகள் என மிக நீள பட்டியல். வ்ரஜத்தில் (ஸ்ரீ ப்ருந்தாவனத்தில்) நிம்பார்கர் மற்றும் ஸ்ரீ க்ருஷ்ணசைதன்ய மஹாப்ரபு போன்றோர் எப்படி கொண்டாடப்படுகிறார்களோ அதே போன்று இந்த பக்தர்களும் கொண்டாடப்படுகிறார்கள்.

  ரஸ்கான் வ்ரஜ பாஷையில் பாடுவதை பாருங்கள் :-

  Manusha ho to wahi Raskhan, basoN braja Gokula Gaava ke Gvaraan,
  Jo pashu ho to kaha bas mero, charo nit Nand ki dhenu manjharan,
  paahan ho to wahi giri ki, jo dharyo kar chatra Purandara dharan,
  jo khag ho to basero karo,mili kalindi kool kadamb ki daran

  (In my next birth):
  if i am born human, may i be the same Raskhan whereupon i would go to Braja and dwell with the cowherds in Gokula;
  if i am an animal, what else can i do but to go and graze everyday in the midst of Nanda’s cows;
  if i am a stone, may i be the same mountain (Govardhan) holding which Indra was controlled;
  if i am a bird, may i live on a branch of the Kadamb tree on the banks of the Yamuna;

  கீழ் சுட்டியை பாருங்கள் : –
  https://forums.sulekha.com/forums/coffeehouse/hindu-muslim-synthesis-raskhan.htm

  ஸ்ரீமத் பாகவதத்தில் :- (2-4-18)
  kiraata-hūṇāndhra-pulinda-pulkaśā
  aabhira-kankaa yavanaaH khasādayaḥ
  ye ‘nye cha paapaa yad apāśrayāśrayāḥ
  ‘sudhyanti tasmai prabhaviSnave நமாஹ்

  இறைவனடியார்களிடம் புகல் பெறுவோர் ஹூண யவனர்களாயினும் அவர்கள் சுத்தர்களாகிறார்கள் என்று சுகாசார்யார் சொல்கிறார்.

 7. பெரியபுராணத்தைப் பற்றிய நிறைய விஷயங்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தைக் இக்கட்டுரையும் இக்கட்டுரைக்கான மறுமொழிகளும் ஏற்படுத்துகிறன.

 8. கோபாலக்ருஷ்ணபாரதி தம் அக்ரகாரத்தைச் சேர்ந்தவர்களுடன் ஏதோ மனக்கசப்பு ஏற்பட்டு வெளியேறி வேதநாயகம் பிள்ளை என்ற மதம்மாறிய கிறித்துவர் வீட்டில் தங்கியிருக்கையில் எழுதிய கதைதான் மூலநூல்களில் சொல்லப்படாத புதியநந்தன் கதை. ஆக இதிலும் பின்னணியில் ஏதோ சூழ்ச்சியிருக்க வாய்ப்புள்ளதாகவே கருதலாம்.

 9. திருப்பாணாழ்வார் சரிதத்தில், காவிரிக்கரையில் ஆழ்வாரை (அவரது பெருமை அறியாத) திருமால் அடியார் ஒருவர் ஆசாரம் கருதி விலகியிருக்கப் பணித்ததால், அவரது கனவில் அரங்கன் தோன்றி ஆழ்வாரைத் தோளில் சுமந்து வருமாறு பணித்ததாக வரலாறு. கோயிலுக்குத் தன் தோளில் சுமந்து வந்தவர் லோகசாரங்க முனிவர். இந்தக்கட்டுரையில் அரங்கமுனிவர் என்ற குறிப்பு வந்துள்ளது. இங்கே குறிப்பிட்ட ஆங்கிலக் கட்டுரையின் வரலாற்று ஆதாரம் என்ன என்று அறிய விழைகிறேன்.

 10. மதிப்பிற்குரிய வெங்கட் சாமிநாதன்,

  பாணாழ்வாரை ஒரு பிராமண அர்ச்சகர் இழிகுலத்தானே தள்ளிப்போ என்று அடிக்கவோ திட்டவோ செய்ய, அரங்கன் குறுக்கிட்டு, அதற்குப் பின் பானாழ்வாரை அந்த அர்ச்சகர் தன் தோளில் தூக்கி வந்ததாக நினைவு. நீங்கள் சொல்வது வேறு விதமாக இருக்கிறது. என் நினைவு தவறாக இருக்கலாம், clarify செய்ய முடியுமா?

  // தலித்துகள் என்பதற்காக அங்கீகரிக்கப் படவும் இல்லை. நிராகரிக்கப் படவும் இல்லை. மனிதர்கள் கவனிக்கத் தவறிய போது தெய்வமே இடை புகுந்து அவர்களைச் சிறப்பித்திருக்கிறது, // என்று எழுதி இருக்கிறீர்கள். பாணாழ்வார் பற்றிய என் நினைவு தவறாக இருக்கலாம். ஆனால் நந்தனார் கோவில் போக முடியாதது நிராகரிப்பு இல்லையா? தலித் என்ற ஒரே காரணத்தால் ஏற்பட்ட நிராகரிப்பு இல்லையா? நான் பெரிய புராணத்தை கரைத்துக் குடித்தவன் இல்லை, ஆனால் கண்ணப்பனின் பூஜை முறையைப் பற்றி அந்த சிவாச்சாரியார் ஒன்றும் மகிழ்ந்துவிடவில்லையே? அதை நிராகரிப்பு இல்லை என்கிறீர்களா? இல்லை அப்படி ஒவ்வொரு முறையும் நிராகரிப்பு நிகழும்போது தெய்வம் வந்துவிடும், சிவபெருமான் மன்னன் கனவில் வந்து சரிப்படுத்திவிடுவார், அதனால் மனிதன் நிராகரித்தால் ஒன்றும் குற்றமில்லை என்கிறீர்களா? தலித்களுக்கு ஒரு இடம் கிடைத்த அத்தனை கதைகளிலும் மீண்டும் மீண்டும் அவர்கள் அவமானப்படுத்தப்பத்து, நிராகரிக்கப்பட்டது, பிறகு divine intervention மூலம் மட்டுமே அவர்களுக்கு இடம் கொடுக்கப்பட்டது என்ற தீம் மீண்டும் மீண்டும் வருகிறது. அப்படி இருக்கும்போது நிராகரிப்பு நடக்கவில்லை என்று சொல்வது சரியாகப் படவில்லை. தமிழகத்தில் மட்டுமல்ல, சோகாமேளர், ரவிதாஸ், நாமதேவர் என்று சொல்லிக் கொண்டே போகலாம். ஏன் பிராமண குலத்தில் பிறந்த ஞாநேஸ்வரர் கூட சந்நியாசி சம்சாரி ஆகி பெற்ற குழந்தை, நீ பிராமணன் இல்லை என்று அவமானப்படுத்தப்பட்டதாகவும், அதற்குத்தான் அவர் ஒரு எருமையை “ஜன்மணா ஜாயதே சூத்திர” என்று தொடங்கும் ஒரு பாட்டைப் பாட வைத்ததாகவும் ஒரு தொன்மம் உண்டே!

 11. “தாழ்த்தப்பட்ட சாதியினர் மட்டும் ஹரிஜன் என்றால், உயர்த்தப்பட்ட சாதியில் இருப்பவர்கள் எல்லாம் ஹரியின் குழந்தைகள் இல்லையா?”
  இது ஒரு சிந்தனைக் குறிய கேள்வி தான். தாழ்த்தப்பட்ட சாதி என்று கருதப்படுபவர்களையே ஹரிஜன் என்று உயர்த்தினால், மற்றவர்களும் ஹரிஜன் என்றுதான் கொள்ளவேண்டும். ஆனால் ஹரிஜன் என்றொரு அடைமொழி குறிப்பிட்டுவிட்டதால், ஹரிஜன் என்றாலே தாழ்த்தப்பட்ட சாதியாகக் கருதப்படுபவர்களே நினைவுக்கு வருகிறார்கள் என்பதில் ஐயமில்லை. இனி வரும் காலத்திலாவது எந்த ஒரு அடைமொழியுமில்லாமல் அனைவரும் அழைக்கப்படவேண்டும். அதற்காக, ஹரிஜன், தலித், பிராமணர், செட்டியார், முதலியார் முதலிய சாதி சுட்டிக்காட்டும் பெயர்கள் இருக்கக் கூடாது. இந்தியத் தமிழர், இந்திய மராட்டியர், இந்திய குஜராத்தியர் என்று அடையாளமிட்டால் மட்டுமே போதுமானது என்பது என் தாழ்மையான கருத்து.

 12. திருப்பாணாழ்வார் காவிரியின் கரையில் நின்று அரங்கனைப் பாடி அவன் நினைவினில் ஆழ்ந்துகிடக்க லோகசாரங்கர் எனும் அரங்கனின் சந்நிதியில் கைங்கர்யம் புரியும் தொண்டர் ஆழ்வாரைத் தள்ளி நிற்கும்படி சொல்ல அரங்கனின் த்யானத்தில் மூழ்கிய ஆழ்வார் அதை கவனிக்கவில்லை . லோகசாரங்கர் அவர் கவனத்தைக் கவர ஒரு கல்லை எடுத்து போட அது ஆழ்வாரின் நெற்றியில் பட்டு காயம் பட்டது. கோவிலில் அரங்கனின் நெற்றியிலும் ரத்தம் வழிய அது லோகசாரங்கர் ஆழ்வாரிடத்தில் பட்ட அபசாரம் என அரங்கனால் அறிவிக்கப்பட்டு அரங்கனின் திருவுள்ளப்படி லோகசாரங்கர் ஆழ்வாரைத் தன தோள்களிலே சுமந்துவந்ததாக வைணவ குருபரம்பரை வரலாறுகள் தெரிவிக்கின்றன. சுவாமி வேதாந்த தேசிகனும் இவ்வரலாற்றையும் திருப்பாணாழ்வார் அருளிச்செய்த அமலனாதிபிரான் எனும் பிரபந்தத்தையும் முநிவாகன போகம் என்று மிக அழகிய சமஸ்க்ருதத்தில் அருளிசெய்துளார். எனது நண்பர்களில் சிலர் என்னிடம் ஒரு கேள்வியை எழுப்புவதுண்டு. வைணவம் ஜாதி வேறுபாடின்றி அனைவரையும் திருமாலடியார் என்கிறது என்றால் இன்னும் அவ்வேறுபாடுகள் இருக்கின்றனவே?
  எனது பதில் திருப்பாணாழ்வார் போன்று அடியார் பலர் தோன்றும்போது வேறுபாடுகள் நீங்கிவிடும் என்பதே. தமிழ் ஹிந்து அன்பர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்க வேண்டுகிறேன்.

 13. திரு ஆர் வீ அவர்களே,

  // இல்லை அப்படி ஒவ்வொரு முறையும் நிராகரிப்பு நிகழும்போது தெய்வம் வந்துவிடும், சிவபெருமான் மன்னன் கனவில் வந்து சரிப்படுத்திவிடுவார், அதனால் மனிதன் நிராகரித்தால் ஒன்றும் குற்றமில்லை என்கிறீர்களா? //

  குதர்க்க வாதிகள் நந்தனார் சரித்ரத்தை இப்படியும் புரிந்துக் கொள்வார்கள் என்றால் என்ன செய்வது? அவர்களுக்காகக் கதையை மாற்றி அமைக்க முடியுமா? 🙂

  சரி, விஷயத்திற்கு வருவோம்… கட்டுரை ஆசிரியர்

  // தலித்துகள் என்பதற்காக அங்கீகரிக்கப் படவும் இல்லை. நிராகரிக்கப் படவும் இல்லை. //

  என்று கூறியதிலிருந்து “சரித்திரத்தில் எந்த ஹிந்துவும் தலித்துக்களை நிராகரித்ததில்லை” என்றெல்லாம் அனுமானிக்க இடமில்லை. ஆசிரியர் என்ன கூறுகிறார்கள் என்றால், “இறைத்தொண்டில் அடியார்களுக்குள் சாதி வித்தியாசம் இல்லை” என்று மீண்டும் மீண்டும் ஹிந்து சமயப் பெரியோர்கள் (வேத-வேதாந்த-இதிகாச-புராண-சாஸ்திர நூல்களில் தேர்ச்சி பெற்றவர்கள் கூட, வெறும் மேடையில் பேசி கைத்தட்டு வாங்குவதில் ஆசை இருப்பவர்கள் மட்டுமல்ல) பரவலாக வலியுறுத்தி வந்துள்ளனர் என்பதே இக்கட்டுரையின் கருத்து என்று நினைக்கிறேன்.

  வெவ்வேறு காலத்தில் சமுதாய நிலை வெவ்வேறாக இருந்திருக்கலாம். இந்து மத வேத-வேதாந்த-இதிகாச-புராண நூல்களும் இயக்கங்களும் எதை வலியுறுத்தி வந்தன என்பது வேறு விஷயம்.

  இதற்காக, ‘பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தின் நிலைக்கு நான் பொறுப்பல்ல’ என்று ஹிந்துக்கள் கை கழுவிவிடலாம் என்பதல்ல.

 14. “பிராமண துவேஷப் பிரசாரத்திற்கு உதவும், சலிப்புத் தராத விஷயமாகிப் போனது ஆச்சரியம் தரும் ஒன்றல்ல”அதில் தன் பிராமண சமூகத்தையும், தான் வழுவும் ஆசாரத்தையுமே குற்றம் சாட்ட பெரிய புராணத்தில் இல்லாத ஒரு பிராமண பண்ணையாரை வில்லன் பாத்திரமாக சிருஷ்டிப்பானேன்”இதிலிருந்து என்ன சொல்ல வருகிறார் ஆசிரியர் ,பாரதியாரை வசை படுகிறார் என்றால்,சாதிக்கொடுமைகளை ஆதரிக்கிறார் என்று தானே அர்த்தம்.

 15. பிறப்பால் ஏற்பட்ட தாய்,தந்தை,மகன்,மகள் போன்ற உறவுகளிலும், திருமணத்தால் ஏற்பட்ட உறவுகளிலும், நட்பினால் ஏற்பட்ட உறவுகள் மற்றும் தொடர்புகளிலும், கோவில், கடை வீதி, வசிக்குமிடம், அடுத்த வீடு,எதிர் வீடு, மாடி வீடு,மேல்வீடு போன்றனவற்றால் ஏற்பட்ட தொடர்புகளிலும், வியாபாரம்,செய்யும்தொழில், அலுவலகம் செல்லும் முறையினால் ஏற்பட்ட தொடர்புகளிலும், மருத்துவமனை, போக்குவரத்து சமிக்யை போன்ற இடங்களில் ஏற்படும் சந்திப்பு போன்றவற்றிலும், எவ்வளவோ சாதாரண, தீவிர, அதிதீவிர பகைமை, வெறுப்பு, காழ்புணர்ச்சி என்பனவற்றை, தன்னைச்சார்தவரிடத்தே தன்னைச்சார்ந்தவரே காண்பிக்கும் இவ்வுலகில், ஒரு தலித் இன்னொரு தலித்தை அழிப்பதையும், ஒரு தலித் அல்லாதவரும், தன அதே இனத்தைச் சார்ந்தவரையும் அழிக்கும் முறைக்கு, வர்ணபேதம் தான் காரணம் என்று நினைத்து செயல்படுவது, தன முதுகில் என்ன உள்ளது என்பதை அறியாமல் செய்யும், அறிவிலித் தனத்திற்கு ஒப்பாகும். இதை பனகல் “ராஜாக்களும்” பணக்கார “நாயக்கர்”களும், மூக்குப்பொடி போடும் அண்ணா “துரைகளும்”, கலவே தொழிலாகக் கொண்ட “கலைஞ்சர்” எனப்படுபவர்களும் செய்து சமுதாயத்தை, மக்களை மாக்களுக்கும் கீழ் தள்ளிவிட்டனர். மாடு ஒன்றை வொன்று முட்டிக்கொள்வதும், கோழி ஒன்றை ஒன்று கொத்திக்கொள்வதும், பாம்பு வொன்றின் மேல் ஒன்று சீறிக்கொள்வதுதான், மேற்சொன்ன, அறிவிலிகளின் செயல் வடிவ விளக்கமாக அமைகிறது.

 16. திரு சர்மா அவர்களுக்கு,
  “நந்தனார் தாம் புலையர் என்றும்.. தமக்கு கோயிலில் புக தகுதியில்லை என்றும் கருதியிருக்கிறார். தம் உடம்பு தாழ்ந்த தொழில் புரியும் உடம்பு என்று வருந்தியிருக்கிறார்.”- இந்த எண்ணம் நந்தனாருக்கு எப்படி ஏற்பட்டது என்பது ஆராயப்பட வேண்டும் . புலையர்கள் ஆலயத்துக்குள் வர தகுதி அற்றவர்கள் என்கிற கருத்து அன்றைய சமுதாயத்தின் பரவலான அழுத்தமான நம்பிக்கையைத்தான் பிரதிபலிக்கிறதே அன்றி நந்தன் என்ற தனி மனிதனுக்கு ஏற்பட்ட தாழ்வு மனப்பான்மையினால் மட்டுமே என்பதை ஏற்றுக்கொள்வது சிரமமாக இருக்கிறது.
  தீண்டாமை கொடுமைகள் இன்னும் இருந்து வருகின்றன அவை நீக்கப்படவேண்டும் என்பதில் இரு வேறு கருத்து இருக்க முடியாது, அவை ஹிந்து சமுதாயத்தில் ஒரு களங்கம்தான் என்பதை ஒத்துக்கொள்வோம். அதை விட்டுவிட்டு rationalize செய்வதோ அல்லது மற்ற மதங்களிலும் அவை இருக்கத்தான் செய்கின்றன என்று சொல்லுவது ஊழல் குற்றச்சாட்டு எழும்போதெல்லாம் “ஜெயலலிதா செய்யவில்லையா?” என்று கருணாநிதி கேட்பதுபோல்தான்!
  மொத்தத்தில் கருத்தை தூண்டும் ஒரு கட்டுரை. வாழ்த்துக்கள்!

 17. ஹிந்து சமுதாயத்தில் தீண்டாமையும், சமுதாயத்தின் ஒரு பிரிவினரின் உழைப்பை மட்டும் பெற்றுக்கொண்டு அவர்களை ஒதுக்கி வைப்பதும் எப்போது தொடங்கின என்பது ஆராயப்பட வேண்டும். ஏனெனில் ஹிந்து சமுதாயம் நியாயப்படி வழிநடப்பதற்குரிய ப்ரமாணங்களான ஸ்ருதிகளில் இவ்வாறான போக்குகளைப் பரிந்துரைக்கும் அல்லது வலியுறுத்தும் விதி எங்குமே காணப்படவில்லை. ஹிந்து சமுதாயம் தனது செயல்பாட்டுக்கு ஸ்ருதிகளையே ஆதாரமாகக் கொள்ள வேண்டும். ஆனால் இடையில் ஏற்பட்ட கோளாறு காரணமாகத்தான் ஹிந்து சமுதாயத்திற்கு கீழ் சாதி-மேல் சாதி பாகுபாடு இல்லை எனபது இவ்வாறான கதைகள் மூலம் அறிவுறுத்தப்படுவதாகக் கொள்ளலாம். நெடுங்காலமாக வழக்கத்திற்கு வந்துவிட்ட சம்பிரதாயத்தை ஒரு நொடியில் அகற்றிவிட முடியாது அல்லவா? மனித மனத்தை மேல் சாதி-கீழ் சாதி பாகுபடு இல்லை என்று உடன்படச் செய்யும் பொருட்டுப் படிபடியாக இவ்வாறு கதைகள், சம்பவங்களைச் சொல்லி உணர்த்திப் பக்க்குவப் படுத்துவதற்காகவே கீழ் சாதியான் மேல் சாதியினனாக உயர்த்தப்பட்டு ஆட்கொள்ளப்படுவதாகவும், மேல் சாதியான் கிழ் சாதியானுக்கு அடிபணிவதாகவும் கதைகள் சொல்ல்ப்பட்டு வந்திருக்க்கின்றன என்று கொள்ளலாம். நந்தனார் தீக்குளிப்பு என்பது சைவ சித்தாந்த சடங்கில் ஒரு குறியீடு என்கிற விஷயம் முன்பே சொல்லப்பட்டிருக்கிறது.

  தீண்டாமைக் கொடுமை பலாவாறான ரூபங்களில் கண்ணுக்கு நேரகாக் காணப்படுகிறது. இது ஒட்டு மொத்த ஹிந்துஸ்தானத்திலும் காணப்படுகிறது. ஹிந்து சமுதாயத்தில் மட்டும் அல்ல. எம்மிடையே சாதி வித்தியாசம் இல்லை என்று சொல்லிக்கொள்ளும் கிறிஸ்தவ, முகமதிய சமுதாயங்களிலும் இத்தகைய மேல் சாதி – கீழ் சாதி மனப்போக்கைக் காணலாம். ஹிந்து சமுதாயத்தில் இந்த மனப்போக்கைக் களையத் தொடர்ந்து வெளிப்படையாக மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிகளே கதைகளாகவும், செயல்திட்டங்களாகவும் விமர்சனங்களுக்கு உள்ளாகின்றன. கிறிஸ்தவ, முகமதிய ச்முதாயங்கள் இந்த மனப் போக்கை மூடி மறைப்பதால் எவ்வ்வித விமர்சனங்களுக்கும் உள்ளாவதில்லை.
  பொதுவாகவே எல்லாச் சமுதாயங்களிலும் ஏற்றத் தாழ்வு மனப்போக்கு ஏதோ ஒரு வடிவில் இருந்து கொண்டுதானிருக்கும். மேல் வர்க்கம் கீழ் வர்க்கம் தனக்கு அடிபணிய வேண்டும் என்றே எதிர்பார்க்கிறது. ராணுவத்தில் இந்த மனப்போக்கைக் காணலாம். அரசுப் பணியிலும் அதிகாரிகள்- ஊழியர் ஏற்றத் தாழ்வு மனப்போக்கைக் காணலாம். அது எந்த அளவுக்குக் கொடுமைப்படுத்துகிற அளவுக்கு முற்றுகிறது என்பது மேல் வர்க்கத்திற்கு இருக்கிற வசதி, வாய்ப்புகளைப் பொருத்திருக்கிறது.
  -மலர்மன்னன்

 18. நன்றி! முழுதும் படிக்கக் காத்திருக்கிறோம்!

 19. கந்தர்வன்,

  // // இல்லை அப்படி ஒவ்வொரு முறையும் நிராகரிப்பு நிகழும்போது தெய்வம் வந்துவிடும், சிவபெருமான் மன்னன் கனவில் வந்து சரிப்படுத்திவிடுவார், அதனால் மனிதன் நிராகரித்தால் ஒன்றும் குற்றமில்லை என்கிறீர்களா? // குதர்க்க வாதிகள் நந்தனார் சரித்ரத்தை இப்படியும் புரிந்துக் கொள்வார்கள் என்றால் என்ன செய்வது? //
  என்ன செய்யலாம், தலித்கள் நிராகரிக்கப்படவில்லை என்று நானா சொல்கிறேன்?
  // // தலித்துகள் என்பதற்காக அங்கீகரிக்கப் படவும் இல்லை. நிராகரிக்கப் படவும் இல்லை. // என்று கூறியதிலிருந்து “சரித்திரத்தில் எந்த ஹிந்துவும் தலித்துக்களை நிராகரித்ததில்லை” என்றெல்லாம் அனுமானிக்க இடமில்லை. ஆசிரியர் என்ன கூறுகிறார்கள் என்றால், “இறைத்தொண்டில் அடியார்களுக்குள் சாதி வித்தியாசம் இல்லை” என்று மீண்டும் மீண்டும் ஹிந்து சமயப் பெரியோர்கள் (வேத-வேதாந்த-இதிகாச-புராண-சாஸ்திர நூல்களில் தேர்ச்சி பெற்றவர்கள் கூட, வெறும் மேடையில் பேசி கைத்தட்டு வாங்குவதில் ஆசை இருப்பவர்கள் மட்டுமல்ல) பரவலாக வலியுறுத்தி வந்துள்ளனர் என்பதே இக்கட்டுரையின் கருத்து என்று நினைக்கிறேன். //

  நானும் கட்டுரையின் கருத்து ஏறக்குறைய இதுதான் என்றே நினைக்கிறேன். ஆனால் ஆசிரியர் குறிப்பிடும் சம்பவங்கள் எல்லாம் – நந்தனார், திருநீலகண்ட யாழ்ப்பாணர் – அவர்கள் அனைவரும் நிராகரிப்பட்டார்கள், பிறகு divine intervention மூலமே அங்கீகரிக்கப்பட்டார்கள் என்றுதானே காட்டுகிறது? எத்தனை முறைதான் சிவபெருமான் கனவில் வருவார்?பொதுவாக அடியார்களுக்குள் ஜாதி வித்தியாசம் இருந்தது, சில சமயம் விதிவிலக்குகள் ஏற்பட்டன என்றுதான் பொருள் கொள்ள முடிகிறது. “அடியார் இழிகுலத்தவராயினும் எம்மவரே” என்று தொண்டரடிப்பொடியாழ்வார் பாடினால் இழிகுலத்தவர் என்ற கருத்து பரவலாக இருந்தது, அவர்கள் பொதுவாக நிராகரிக்கப்பட்டார்கள், ஆயினும் அந்த நிராகரிப்பு தவறு – அடியார்களை பொறுத்த வரையிலும் மட்டும்தான், மற்ற இழிகுலத்தவர் இழிகுலத்தவர்தான் – என்று ஆழ்வார் கருதுகிறார் என்றுதானே பொருள்? ஆழ்வாரைப் பாராட்ட வேண்டியதுதான், ஆனால் அவர் சொல்வதை கூர்மையாக கவனிக்கவேண்டும்!

 20. திரு ஆர்.வீ. அவர்களே,

  முதலில் இதைப் பார்ப்போம்:

  //ஆயினும் அந்த நிராகரிப்பு தவறு – அடியார்களை பொறுத்த வரையிலும் மட்டும்தான், மற்ற இழிகுலத்தவர் இழிகுலத்தவர்தான் – என்று ஆழ்வார் கருதுகிறார் என்றுதானே பொருள்? //

  அர்த்த வாதங்களை மிகைப்படுத்தி literary-ஆக பொருள் கொள்ளுகிறீர்கள் என்று தெரிகிறது. “அர்த்த வாதம்” என்பது ஒன்றை glorify செய்வதற்கு எழுந்ததாகும். அதில் சாரமான பொருளைத் தான் ஏற்க வேண்டும். Context-க்கு ஏற்புடையதல்லாத fringe interpretation-ஐக் கைவிட வேண்டும். இந்த interpretative method பற்றி பல வேதாந்திகள் கூட எழுதி வைத்துள்ளனர்.

  “எக்குலத்தவராயினும் திருமால் அடியார் ஆகி உய்வு பெறலாம்” என்பது தான் இப்பாடலின் அர்த்தம். “திருமால் அடியார் இல்லாத மற்ற சூத்திரர்களை சாதிக் கொடுமைக்கு உட்படுத்தலாம்” என்று அர்த்தம் பண்ணிக் கொள்வது அந்த context-க்கு உடன்பட்டதாகாது.

  (எனக்குத் தெரிந்த விளக்கத்தைக் கூறினேன். தவறிருந்தால் அனைவரும் மன்னித்துத் திருத்தலாம்.)

  அது சரி, வைராக்கியம் இல்லாத, அனுஷ்டானம் தவறிய, பகவத் பக்தி இல்லாத பிராம்மண குலத்தவனை தர்மசாத்திரம் “மிகவும் கீழானவன், அரசன் அவனை வீட்டுக்குத் தீ வைப்பவனைப் போலவும் கிணற்றில் விஷம் கலப்பவனைப் போலவும் கருதித் தண்டிக்கவேண்டும்” என்று பல இடங்களில் தருமசாச்திரம் கூறுவது மாத்திரம் சாதீய வாதிகளின் கண்ணுக்கு ஏன் தெரியவில்லையோ.

  // ஆழ்வாரைப் பாராட்ட வேண்டியதுதான், ஆனால் அவர் சொல்வதை கூர்மையாக கவனிக்கவேண்டும்! //

  ஆழ்வாருக்கு இல்லாத பரிவும் சமுதாய உணர்வும் மனிதநேயமும் இக்காலத்து அறிவு ஜீவிக்களுக்குத் தான் உள்ளது என்று நினைக்கிறீர்களா? 😀

  நீங்கள் பிரபந்தத்தையும் வியாக்கியானங்களையும் எந்த அளவிற்கு வாசித்தீர்கள் என்று தெரியவில்லை… வைஷ்ணவ சித்தாந்தத்தின் முழுமையான கொள்கை என்ன என்பது புரியவில்லை என்றால் இத்தகைய மனக்குழப்பங்கள் வருவது இயல்பு என்று நினைக்கிறேன். ஆனால் ஒன்றே ஒன்று, நாம் முன்கூட்டியே நிர்ணயிக்கும் ஒன்றை அதில் தேடினால் அது கிடைக்கவே கிடைக்காது. “என்ன தான் சொல்கிறார்கள் பார்ப்போமே, அது நமக்கு ஏற்கத் தக்கதா இல்லையா என்பது அப்புறம் இருக்கட்டும்” என்ற மனத்துடன் ஓரளவுக்கு முழுமையாக வாசித்து மனனம் (reflect) பண்ணினால் தான் இவ்விஷயங்கள் புரியும்.

  // எத்தனை முறைதான் சிவபெருமான் கனவில் வருவார்?பொதுவாக அடியார்களுக்குள் ஜாதி வித்தியாசம் இருந்தது, சில சமயம் விதிவிலக்குகள் ஏற்பட்டன என்றுதான் பொருள் கொள்ள முடிகிறது. //

  நீங்கள் திருநீலகண்ட யாழ்ப்பாணர் கதையையும் திருப்பாணாழ்வார் கதையையும் புரிந்துக் கொள்ளும் விதம் கரும்பில் ரசத்தை விட்டு சக்கையை எடுத்துக் கொள்வது போல உள்ளது. கதையின் சாரம் அதுவல்ல… “உயர் குலத்தவர் ஆயினும் செருக்கின் காரணமாக இறை அருளையும் கைங்கர்யத்தையும் இழந்து விடலாம், மெய்யான அன்பு இருந்தால் இழிகுலத்தில் பிறந்தவரும் உயர்ந்துவிடலாம்” என்பதே.

 21. நான் என்ற ஐய உணர்வை நீக்கிய மனிதர்கள் யாவரும் சாதி , சமயம் போன்ற கற்பனைக்கோட்டுக்கு அப்பார்ப்பட்டவர்கள்.- ‘ ஐய உணர்வை அடைந்தவன்’

 22. தொல்காப்பியம் முதல் சங்க இலக்கியம் வரை ஏன் பக்தி இலக்கியத்திலும் கூட தாழ்த்தப்பட்டோர் நிலை வெகு மோசமாக இருந்ததைக்காட்டுகின்றன.அதைப்பற்றி நூலே எழுதலாம்.ஆனால் தலித்களின் கொலைவெறித்தாக்குதலை எதிர்கொள்ளும் சக்தி யாருக்கும் இல்லை.இதில் பிராமணர்களைக் குறைசொல்வதில் நியாயமே இல்லை.சமூகமே அப்படித்தான் இருந்தது.இருந்ததை இலக்கியம் கண்ணாடியாகக்காட்டியது.அவ்வளவுதான்.மேலும் தலித்துகளை உயர்த்தவேண்டிய தேவை ஏன் ஏற்பட்டது என்றால் பௌத்த,சமண சமயங்களின் எழுச்சிதான்.எனவே திருநாவுக்கரசர்,”ஆவுரித்துத் தின்றுழலும் புலையரேனும் கங்கைவார் சடைக்கரந்தார்க்கு அன்பராகில் அவர்கண்டீர் யாம் வணங்கும் கடவுளாரே!”என்று பாடினார்.இன்றும் கிரித்தவ,இசுலாமிய மதத்துக்குப் போகக்கூடாது என்பதற்காக மதமாற்றத்தடைச்சட்டம் கொண்டுவரவில்லையா அதுபோலத்தான்.தமிழ் இலக்கியங்கள் தலித்களை உள்ளவாறு காட்டியது.பக்தி இலக்கியங்கள் அவர்களையும் இணைத்து மேம்படுத்தி ஒன்றுபடுத்திக் கூறின.இதில் ஐயத்திற்கு இடமே வேண்டாம்.பிராமணர்கள்தான் பிள்ளையார் கோயில் ஆண்டியாயிற்றே.யார்வேண்டுமானாலும் எதுவேண்டுமானாலும் பேசலாம்!

 23. கந்தர்வன் ஐயா இழிகுலத்தோராக இருந்தவர்கள் அக்காலத்தில் இழிந்தநிலையில்தான் இருந்தார்கள்.இல்லை என்று மறுக்கமுடியுமா?எப்போது உயர்ந்து இருந்தார்கள்,எப்போது தாழ்த்தப்பட்டார்கள்? பக்தி இலக்கியம் தலித்களை உயர்த்த முனைந்ததா இல்லையா என்பதே கேள்வி!

 24. பேதமில்லா இந்து சமுதாயமாயின் “அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்” எனச் செய்யப்படலாமே. பேதங்கள் நீங்குமே

 25. விஜய சங்கா் அவர்களே
  அரசு நிர்வகிக்கும் கோவில்கள் மட்டும் கோவில்களா ? மற்றவகைகள் என்ன ரகம் ? பிறாமணர்கள் மட்டும் பணி செய்யும் கோவில்கள் தவிர பிற கோவில்களில் பிறாமணர்கள் அல்லாத மக்கள்தானே பணி செய்து வருகினறார்கள். அனைத்து மக்களுக்கும் முறையான இந்து சமய கல்வி அளித்தால் தானாகவே அனைத்து சாதியிலும் தரமான பக்தியுள்ள புசாரிகள் உருவாகிவிடுவார்கள். பிறாமண ஒழிப்ப இயக்க சிந்தனை வேண்டாம்.பல கோவில்களில் சம்பளம் என்ன கொடுக்கப்படுகின்றது என்பதை தாங்கள் அறிவீர்களா ? பிறாமணன் தன்உ யிரைக் கொடுத்து திருககோவில்களை காத்து வருகின்றார்கள் என்பதை மறக்க வேண்டாம்.பார்பனா் அல்லாத சாதியில் கோவில் புசாரியாக பணியாற்ற தன் மகனை அனுப்ப சித்தம் கொண்ட தாய் தந்தை எத்தனை பேர்கள் உள்ளாா்கள் ? ஒரு அமைப்பு உள்ளது.அது கோவிலைக் காத்து வருகின்றது.அந்த அமைப்பை விட சிறந்த அமைப்பு உருவாக வேண்டும் என்பது காலத்தின் தேவை.அதற்கு முன் அனைத்து இந்துக்களுக்கும் மறையான சமயகல்வி அளிக்க வேண்டும். நித்திய அனுஷ்டானங்கள் கற்றுக் கொடுக்கப்பட வேண்டும்.
  ஒரு தேவாரப்பாடல் பாடத் தெரிந்து இந்துக்கள் தமிழ்நாட்டில் எத்தனை பேர்கள் ? கணக்கு உள்ளதா ? நமது நிலை மிகவும்ஆபத்தானது.கீழானது.கேவலமானது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *