நம்பிக்கை – 7: பணியில் சிறப்பதும், விடா முயற்சியும்

மூலம்: T.V.ஜெயராமன் ஆங்கிலத்தில் எழுதிய Belief தொடர்
தமிழில்: பி.ஆர்.ஹரன்

இத்தொடரின் மற்ற பகுதிகளை இங்கு வாசிக்கலாம். 

மாங்காடு காமாட்சி அம்மனைத் தரிசனம் செய்துவிட்டுக் கோவிலுக்கு வெளியே வந்து காரில் ஏறும்போது, “என்ன ஒரு நேர்த்தியான அலங்காரம்!! அற்புதம்!!!” என்று அம்பாளின் அலங்காரத்தை வியந்தபடியே ஏறினார் சௌம்யா.

“உண்மை தான் சௌம்யா. ஆனால் நீ எப்போதுமே அம்மனின் அலங்காரங்களை நேர்த்தியானதாகத்தான் காண்பாய்” என்று புன்னகைத்தபடியே சொன்னார் சங்கர்.

“ஆமாம். அவள் என் இஷ்ட தெய்வம் ஆயிற்றே!” என்று பதில் சொன்னார் சௌம்யா.

“மாமா! பிரார்த்தனை ஏன், எதற்காக, எப்படிச் செய்யவேண்டும், என்பதையெல்லாம் புரிந்துகொண்டேன். ஆனால், என்னுடைய தினப்படி வேலைகளுக்கு அந்தப் பிரார்த்தனை எவ்வாறு உதவும்?” என்று மஹாதேவனிடம் கேட்டான் கௌசிக்.

”இதற்கான பதில் மிகவும் எளிதானது. நீ செய்யும் வேலையிலோ அல்லது நீ விளையாடும் விளையாட்டிலோ உன்னுடைய முழுத்திறமையையும் நீ காட்ட வேண்டுமானால், உனக்கு என்ன தேவை?”

“கவனம், முழு கவனம், முழு ஈடுபாடு, கடமையுணர்ச்சி”

“பெரிய வார்த்தைகளைச் சொல்கிறாய். நீ செய்யும் எல்லா வேலைகளிலும் உன்னால் இவற்றைக் கொள்ள முடியுமா?”

“மனதில் தோன்றும் மற்ற எண்ணங்களையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு, என் முன் இருக்கும் வேலையில் மட்டுமே என் முழு கவனத்தையும் நான் செலுத்த வேண்டும்”.

“பிரமாதம்! ஆனால் இதை நீ எப்படி சாதிப்பாய்?”

“மற்ற எதைப் பற்றியும் கவலைப்படாமல், அந்தக் குறிப்பிட்டச் செயல்பாட்டில் மட்டும் என் முழுக் கவனத்தையும் செலுத்துவதன் மூலம் சாதிப்பேன்”.

“நல்லது. ஆனால் அந்த முழுக்கவனத்தையும் பெறுவது எப்படி?”

“விளைவுகளைப் பற்றிக் கவலைப்படாதீர்கள், என்று அப்பா அடிக்கடி எங்களிடம் சொல்வார். அதுதான் முறையா?”

“இருக்கலாம். ஆனால், அந்த முழுக்கவனத்துடன் இருக்கும் நிலையை அடைவது எப்படி?”

“நீங்களே சொல்லுங்கள் மாமா” என்றான் கௌசிக்.

“சரி, நான் விளக்கமாகச் சொல்கிறேன். உதாரணத்துக்கு உன்னுடைய அறையை எடுத்துக்கொள்வோம். உன்னுடன் படிக்கும் நண்பன் உன்னைப் பார்க்க வருகிறான் என்றால், நீ உன் அறையை எப்படி வைத்துக்கொள்வாய்?”

“இதில் விசேஷமாகச் செய்வதற்கு ஒன்றுமில்லை. இது அடிக்கடி நடப்பது தான். என் நண்பர்களும் என் அறை இருக்கும் விதத்திற்குப் பழக்கப்பட்டவர்கள்தான்”.

“உன் ஆசிரியர் உன்னைப் பார்க்க வருவதாக இருந்தால்?”

“கண்டிப்பாக அறையைச் சுத்தம் செய்வோம். பொருட்களை எல்லாம் அதன் அதன் இடங்களில் முறையாக வைப்போம்” என்றாள் ஸ்நேஹா.

“இதை உங்கள் நண்பர்களுக்குச் செய்யாமல், ஏன் ஆசிரியருக்கு மட்டும் செய்கிறீர்கள்?”

“ஆசிரியர் வயதில் மூத்தவர்; எங்கள் மதிப்பிற்கும் மரியாதைக்கும் உகந்தவர்” என்றாள் ஸ்நேஹா.

“மிகச்சரியாகச் சொன்னாய். அந்த மனப்பான்மைதான் செய்யும் வேலையில் முழுக்கவனத்தையும் பெறுவதற்கான முதல் படி”

“அதை மேலும் விரிவாக விளக்க முடியுமா?”

“முடியும். நான் வேறொரு கேள்வி கேட்கிறேன். உன் நண்பர்கள் வந்தால் அவர்களுக்கு இனிப்பையோ அல்லது வேறு ஏதாவது உணவையோ எப்படி வழங்குவாய்?”

“மீண்டும் அதே பதில்தான். இதில் விசேஷமாக ஒன்றுமில்லை. எங்களிடம் இருக்கும் உணவில் வேண்டியதை எடுத்துக்கொள்ளச் சொல்வோம். எதற்காக கேட்கிறீர்கள்?”

“அதுவே ஆசிரியராக இருந்தால் எப்படி வழங்குவாய்?”

“அதிகப்படியான அக்கறையுடன், இருக்கும் உணவு தரமானதாக இருக்கிறதா என்று பார்த்து, சுத்தம் செய்யவேண்டியிருந்தால் சுத்தம் செய்து, சுத்தமான தட்டில் பரிமாறுவோம்”.

“அற்புதம். உன்னுடைய ஆசிரியர்கள் மீது மதிப்பும் மரியாதையும் வைத்திருப்பதால், அவர்களை மகிழ்ச்சியுறச் செய்வதற்காக அதிகப்படியான அக்கறை எடுத்துக்கொள்வாய், இல்லையா?”

“ஆமாம்!”

“உன் அசிரியருக்கே இவ்வளவு அக்கறை எடுத்துக்கொண்டால், அது கடவுளாகவே இருந்தால், எவ்வளவு அக்கறை எடுத்துக்கொள்வாய்?”

“அது முற்றிலும் வேறான ஒரு நிலை”

“அதுவே சரி. நாம் ஈடுபடும் எந்த வேலையாக இருந்தாலும், புத்தக அலமாரியைச் சுத்தம் செய்வது, அறையை மெழுகிச் சுத்தம் செய்வது, சமைப்பது, தோட்ட வேலை, படிப்பது, என்று எந்த வேலையாக இருந்தாலும், அதை ஆண்டவனுக்குச் செய்யும் ஒரு அர்ப்பணிப்பாகக் கருதிச் செய்வதாக இருந்தால், அதைச் சரியாகவும், சுத்தமாகவும், எந்தக் குறையுமின்றி நிறைவாகச் செய்வதற்கும் அதிகப்படியான அக்கறை எடுத்துக்கொள்வாயா, இல்லையா?”

“கண்டிப்பாக எடுத்துக்கொள்வோம்” என்றான் கௌசிக்.

“நான் சிறுவனாக இருந்தபோது, ஒரு முறை என் அறையைச் சுத்தம் செய்துகொண்டிருந்த சமயத்தில், ‘இந்த அறையைப் பிறகு கடவுள் பயன்படுத்தப் போகிறார், ஆகையால் மிகவும் நன்றாகச் சுத்தம் செய்’ என்று சொன்னார் என் அப்பா. நானும் அதை உண்மையென்றுத் தீவிரமாக எடுத்துக்கொண்டு, நம்ப முடியாத அளவுக்கு என் அறையைச் சுத்தம் செய்தேன். அப்படித்தான் ஒவ்வொரு வேலையையும் செய்ய வேண்டும், என்றார் என் அப்பா. அது நான் கற்றுக்கொண்ட மிகப்பெரிய பாடம். அதன்படியேதான் இன்றும் நான் என் வேலைகளைச் செய்து வருகிறேன்”.

“மாமா! நான் செய்யும் வேலை ஆண்டவனுக்கான என் அர்ப்பணிப்பு என்கிற மனப்பாங்கு மட்டும் இருந்தால், என்னுடைய வேலை சிறப்பானதாக அமையுமா?” என்று கேட்டான் கௌசிக்.

“அது உன் திறமையைப் பொறுத்து அமையும்; அந்தத் திறமைதான் உன் செயலாற்றலின் உச்சமாக இருக்கும். குறைந்த பட்சம் உன்னால் செய்யக்கூடியது என்ன, உன் முழுத்திறமையையும் காட்டுவதுதான், இல்லையா?”

“நிச்சயமாக மாமா. ஆனால், அதன் பிறகும் நான் வெற்றி பெறுவேன் என்கிற உத்தரவாதம் இல்லையே”

“வெற்றி என்பது வேறு. உன் முழுத்திறமையையும் வெளிப்படுத்துவது என்பது வேறு. நம் யாராலும் வாழ்வின் வெற்றி தோல்விகளைத் தீர்மானிக்கவோ கட்டுப்படுத்தவோ முடியாது. ஆனால், விளைவுகளைப் பற்றிக் கவலையில்லாமல், நம்மால் நம் முழுத்திறமையையும் கண்டிப்பாகக் காட்ட முடியும். என்ன, ஒத்துக்கொள்கிறாயா?”

“ஆம், மாமா. ஒத்துக்கொள்கிறேன்”

“கையில் இருக்கும் வேலையில் முழுக்கவனத்தையும் பெறுவதற்கு, அந்த வேலையானது ஆண்டவனுக்கான அர்ப்பணிப்பாகும் என்கிற மனப்பான்மையைக் கொள்ள வேண்டும். அது அவ்வளவு சுலபமானது. ‘அவன் கிட்ட விடு, அவன் பார்த்துப்பான்’ என்று உங்கள் அப்பாவோ, தாத்தாவோ அடிக்கடிச் சொல்வதைக் கேட்டிருப்பீர்கள்” என்றார் மஹாதேவன் புன்னகையுடன்.

“ஆமாம். நான் நிச்சயமாகக் கேட்டிருக்கிறேன். அதற்கு என்ன அர்த்தம்?” என்றான் கௌசிக்.

“ஆண்டவனுக்கு அர்ப்பணிக்கப்படும் எதுவுமே சுத்தமாகவும், முழுமையானதாகவும், அழகானதாகவும் இருக்க வேண்டும். அழுகிப்போன வாழைப்பழத்தையோ அல்லது வெந்தும் வேகாத ஒரு இனிப்புப் பதார்த்தத்தையோ கடவுளுக்கு நிவேதனம் செய்ய முடியாது, சரிதானே?”

“ஆமாம்” என்றாள் ஸ்நேஹா

“உன்னுடய வேலையை ஆண்டவனுக்குச் செய்யும் அர்ப்பணமாக நீ நினைத்த மாத்திரத்திலேயே உன்னைச் சுற்றி இருப்பவற்றை பொருட்படுத்தாமல், உன் வேலையிலேயே முழு கவனத்தையும் செலுத்தி, வேலை செய்து முடித்தவுடன், அதைத் திறம்படச் செய்துவிட்டதைக் காண்கிறாய். அவ்வளவு தான்”.

“அவ்வளவு எளிதாக இருக்கும் பட்சத்தில், ஏன் எல்லோரும் செய்வதில்லை?” என்று கேட்டான் கௌசிக்

“அந்த மனப்பான்மை எல்லோருக்கும் இருப்பதில்லை. ‘இந்த வேலையை நான் செய்கிறேன்’ என்கிற எண்ணமும், ‘அதன் பலனைக் கடவுள் எனக்கு அளிக்கட்டும்’ என்கிற எண்ணமும்தான் பெரும்பான்மையான மக்களின் மனப்பான்மையாக இருக்கிறதே தவிர, அந்த வேலையைத் திறம்படச் செய்வதில் முழுக்கவனத்தையும் செலுத்துவதில்லை.” என்றார் மஹாதேவன்.

“புரிந்தது மாமா” என்றாள் ஸ்நேஹா.

“ஒரு வேலையை நீ தான் செய்கிறாய் என்கிற மனப்பான்மை உன்னிடம் இருந்தால், அந்த வேலையை உன்னுடைய வேலையாக ஏற்றுக்கொள்வது மட்டுமல்லாமல், அதன் விளைவுகளையும் நீ ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். அதற்கு மாறாக, உன்னுடைய ஒவ்வொரு வேலையும் நீ ஆண்டவனுக்குச் செய்கின்ற அர்ப்பணம் என்கிற மனப்பான்மையுடன், அதன் விளைவையும் ஆண்டவனே அளிக்கிறான் என்று அதை அவனுடையப் பிரசாதமாக ஏற்றுக்கொள்வதன் மூலம் விளைவை எண்ணி நீ துயரப்பட மாட்டாய். ஆனால், உன் கையில் இருக்கும் ஒவ்வொரு வேலையிலும் உன்னுடைய முழுத்திறமையையும் கொடுப்பாய்” என்று விளக்கினார் மஹாதேவன்.

“இப்போது புரிந்துகொண்டேன் மாமா. பலர் பலவிதமான விரதங்களை நேர்ந்துகொள்கிறார்கள்; கால்களில் எதுவும் அணியாமல் மலைகளைக் கிரிவலம் வருவது, திருப்பதி ஏழுமலையானை தரிசிக்கப் படிகளில் ஏறிச் செல்வது, வாரத்தின் குறிப்பிட்ட நாட்களில் உணவருந்தாமல் உபவாசம் இருப்பது, போன்று பல விரதங்கள்; சிலர் ஒரு நாள் முழுவதும் பேசாமல் மௌன விரதம் கூட இருக்கிறார்கள். இவையெல்லாம் அவசியமா? அல்லது இவையும் பிரார்த்தனைகள் தானா?” என்று கேட்டான் கௌசிக்.

“இதுவரை உன் வாழ்க்கையில் எத்தனை முறை ஒரு வேலையை எடுத்துக்கொண்டு அதைப் பாதியில் விட்டிருக்கிறாய்?”

“பலமுறை. ஏன் கேட்கிறீர்கள்?”

“பாதியில் விட என்ன காரணம்? உன்னால் செய்துமுடிக்க இயலவில்லையா? அல்லது அலுப்பா?”

“விரைவில் முடிக்க முடியாது என்று தோன்றினால், பாதியிலேயே விட்டுவிடுவேன்”.

“அப்படியென்றால், உன்னிடம் வேலையை முடிக்கக் கூடிய மனவுறுதியும் விடாமுயற்சியும் இல்லை என்று அர்த்தம். உன்னுடைய மனவுறுதியை நீ எப்படி பரீட்சித்துப் பார்த்துக்கொள்ள முடியும்?” என்று கேட்டார் மஹாதேவன்.

“ஒவ்வொரு வேலையையும் அதன் நியாயமான தர்க்கரீதியான முடிவுக்கு எடுத்துச் செல்வதன் மூலம்” என்று பதில் சொன்னாள் ஸ்நேஹா.

“ஒத்துக்கொள்கிறேன். ஆனால், ஒவ்வொரு வேலையையும் முடிக்கத் தேவையான உன்னுடைய மனவுறுதியையும், உடலுறுதியையும் பரிசோதிக்கக்கூடிய வழிமுறைகள் ஏதும் இருக்கின்றனவா?”

“என்னிடம் எந்தக் கருத்தும் இல்லை. நீங்கள் ஏதாவது யோசனை சொல்ல முடியுமா?”

“சங்கர்! உனக்கு லக்ஷ்மணனை ஞபகம் இருக்கிறதா?” என்று சங்கரைப் பார்த்துக் கேட்டார் மஹாதேவன்.

“ஓ! அந்த அதிர்ஷ்டக்காரன்!! ம்… ஞாபகம் இருக்கிறது. அவனைப் பற்றி என்ன இப்போது?” என்றார் சங்கர்.

“அவன் ஒரு இளைஞனாக எப்படி வேலை செய்தான் என்பது எனக்குத் தெரியும். ஏதாவது வேலையை எடுத்துக்கொள்வான்; பாதியில் விட்டுவிடுவான்; பிறகு வேறு ஏதாவது வேலைக்குத் தாவுவான். சிலவற்றை முடிப்பான்; பலவற்றைப் பாதியில் விட்டுவிடுவான்” என்றார் மஹாதேவன்

“அதனால் என்ன ஆயிற்று?” என்று கேட்டான் கௌசிக்.

“சில வருடங்கள் கழித்து நான் அவனை சந்தித்தபோது, அவனிடம் முற்றிலும் மாறான ஒரு மாற்றத்தைக் கவனித்தேன். எந்த வேலையையும் செய்து முடிக்கக் கூடிய மனவுறுதியும், திடமான நோக்கமும் அவனிடம் முழுவதுமாகக் காணப்பட்டது”.

“அவரிடம் எதனால் அந்த மாற்றம் ஏற்பட்டது, என்று கேட்டீர்களா?” என்றான் கௌசிக்.

“கேட்டேன். அவனுடைய பதில் மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. திருவண்ணாமலையில் உள்ள மலையைச் சுற்றி நடந்தானாம். சுமார் 4 மணிநேரம் பிடிக்குமாம். முதல் முறை 3 மணிநேரம் கழித்து அவன் சேர்ந்த
இடத்திலிருந்து ஒரு அடி கூட எடுத்துவைக்க முடியவில்லையாம். அங்கேயே இருந்த ஒரு இருக்கையில் அமர்ந்து கொஞ்ச நேரம் ஓய்வெடுத்துவிட்டு, மீண்டும் நடக்கலாம் என்று நினைத்தபோது, மேலும் ஒரு மணிநேரத்துக்கு நடக்க வேண்டுமே, என்று தோன்றியதாம். சரி, நடக்க வேண்டாம், இதோடு விட்டுவிடலாம் என்கிற முடிவுக்கு வந்தபோது, வந்தவழியே தான் திரும்பிப் போகவேண்டும் என்பதைத் தவிர வேறு வழியில்லையாம். பின்பக்கம் திரும்பி 3 மணிநேரம் நடப்பதற்குப் பதில், முன்பக்கம் ஒரு மணிநேரம் நடப்பது தான் சரியானது என்று முடிவெடுத்துத் தன் கிரிவலத்தை செய்து முடித்தானாம்” என்றார் மஹாதேவன்.

“பிறகு?”

“கிரிவலத்தை முடிக்கத் தான் மேற்கொண்ட முயற்சி அவனுக்கு மிகவும் திருப்தியைத் தந்ததாம். அடுத்த மாதமும் முயற்சி செய்து பார்த்தபோது, மீண்டும் அதே மாதிரி நடந்ததாம். ஆயினும், அவனுடைய மனவுறுதி அவனைக் கிரிவலத்தை முடிக்கத் தூண்டியதாம். இந்த மாதிரியாக அவன் அடிக்கடித் தன்னுடைய மனவுறுதியைப் பரிசோதனை செய்து, அது ஒவ்வொரு முறையும் கூடுதல் வலிமையுடன் திகழ்வதைக் கண்டானாம். நாளடைவில், மனவுறுதி என்பது அவனுடைய இயற்கையான குணமாக மாறி, அவனுடைய அனைத்து விதமான வேலைகளையும் செய்து முடிக்க உதவியாக இருந்ததாம்” என்றார் மஹாதேவன்.

“சற்று முன்பு கௌசிக் சொன்ன அந்த பழக்கவழக்கங்கள் எல்லாம் கடவுள் சம்பந்தப்பட்ட பிராத்தனைகள் இல்லையா?” என்று கேட்டாள் ஸ்நேஹா.

“உண்மையிலேயே இதே கேள்வியைத்தான் நானும் அவனிடம் கேட்டேன். நானும் அவனும் மற்றொரு நண்பன் வீட்டிற்குப் போகப் பேருந்தில் பயணம் செய்துகொண்டிருந்தபோது கேட்டேன். கடவுளைத் தரிசிப்பதற்காகத்தான் இந்த மாதிரி கிரிவலம் எல்லாம் செய்கிறாயா, என்று நான் அவனிடம் கேட்டபோது, ‘அப்படியெல்லாம் இல்லை’ என்று சொன்னான். ஒரு வேலையை எடுத்துக்கொண்டு அதை முடிப்பதற்காக, அவனுடைய மனவுறுதியைப் பரிசோதனை செய்வதற்காகவும், உடலுறுதியை அதிகப்படுத்திக் கொள்வதற்காகவும் தான் அவ்வாறு கிரிவலம் மேற்கொள்வதாகச் சொன்னான். இவ்வாறு ஒவ்வொறு முறை பரிசோதனை மேற்கொள்ளும்போதும், அவன் மேற்கொண்ட எந்தவொரு வேலையையும் செய்து முடிக்கக்கூடிய அளவுக்கு அவனுடைய மனப்பான்மையில் மாற்றம் ஏற்படுவதைக் கண்டுள்ளான்” என்று விளக்கினார் மஹாதேவன்.

“அதை ஒரு கட்டாயப் பயிற்சி என்று சொல்வீர்களா?” என்று கேட்டாள் ஸ்நேஹா.

“ஒருவர் குறைந்த பட்சம் இது மாதிரியான ஒரு முயற்சியில் ஈடுபடவேண்டும் என்பதையும், பிறகு தனக்குப் பொருத்தமான ஒரு பலனையும் அவர் காண்பர் என்பதையும் நான் உணர்ந்துகொண்டேன். நீ நடந்தாலும், மலை ஏறினாலும், சப்பிடாமல் இருந்தாலும், பேசாமல் இருந்தாலும், இது போன்ற வழக்கங்கள் கடவுளிடம் எந்தவிதமான பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை. அதே சமயத்தில் உன்னிடம் அதிகபட்ச பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. உன்னுடைய குறிக்கோளை நீ அடைவதற்குத் தேவையான சுயக்கட்டுப்பாடு, மனவுறுதி, விடாமுயற்சி, உடலுறுதி போன்றவற்றை உனக்கு வழங்குகின்றன.

“மேலும், இளைய வயதிலிருந்தே இந்த மாதிரியான வழக்கங்களின் மூலம் பயன்களைப் பெறுவது நல்லது. அப்போது, நீ இளைய வயதிலிருந்தே மேற்கொள்ளும் அனைத்துச் செயல்பாடுகளிலும் இந்தப் பயன்கள் சிறப்பாகப் பிரதிபலிக்கும்” என்றாள் சௌம்யா.

“எப்படி ஆயினும், இந்த மாதிரியான வழக்கங்கள் எல்லாம், நீ உடல்நலத்துடனும் பலத்துடனும் இருக்கும்போது செய்யத்தகுந்தவை தான். வயதாகிப் பலவீனமாக இருக்கும்போது செய்யக்கூடியவை அல்ல” என்றார் மஹாதேவன்.

“நீங்கள் எல்லாரும் ஏன் காரிலிருந்து இறங்கி உணவு விடுதிக்கு நடந்து செல்லக் கூடாது? நான் காரை அதற்குரிய இடத்தில் நிறுத்திவிட்டு வந்து உங்களுடன் சேர்ந்து கொள்கிறேன். மதிய உணவிற்குப் பிறகுத் தொடர்ந்து விவாதிக்கலாம்” என்றார் சங்கர்.

(தொடரும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *