தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: ஒரு கண்ணோட்டம்

இர்ரெவரண்ட் ஃபாதர் ஜெகத் கஸ்பர் பேசிய பத்திரிகையாளர் சந்திப்பு பல உண்மைகளைத் தெரிவிக்கிறது (வர வேண்டிய நேரத்துக்கு கரெக்டா வருவேன் என்பது இவரைப் போன்றவர்களுக்கே பொருந்தும்).

முதலாவதாக, தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்டவர்களில் எட்டு பேர் கொல்லப்படுவோம் என்பது தெரிந்து இருந்தவர்களே… அதாவது, மக்கள் அதிகாரம் போன்ற வன்முறை போராட்ட வழிமுறைகளில் நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் கொண்டவர்களே. துப்பாக்கியைக் கையில் ஏந்த நாள் பார்த்துக் காத்திருப்பவர்களே. அதே துப்பாக்கியால் கொல்லப்படுவோம் என்பதைத் தெரிந்து வைத்திருப்பவர்களே. அந்தவகையில் காவல்துறை அப்பாவிகளைக் கொன்றுவிடவில்லை. அப்பாவிகள் மேல் குண்டு பாய்ந்துவிடக்கூடாது என்ற அக்கறையுடன் இந்த போராளிகளின் வெகு அருகில் நின்று குறிபார்த்துத்தான் சுட்டிருக்கிறார்கள். வேன் மேல் ஏறி நின்ற மஞ்சள் டீஷர்ட் காவலரின் ஷூட்டிங் போஸ் திட்டமிட்ட திசை திருப்பலே.

இப்படி ஒரு அசம்பாவிதம் நடக்கும் என்பது காவல்துறைக்கு முன்பே தெரிந்திருக்கிறது. அதனால்தான் அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் பாதிரியார்களுக்கும் காவலர்கள் முன்கூட்டியே தகவல் சொல்லிவிட்டிருக்கிறார்கள். அவர்களும் வெகு கவனமாக தூத்துக்குடி பக்கமே தலைவைக்காமல் இருந்துவிட்டிருக்கிறார்கள். காவலர்கள் அப்பாவி மக்களிடம் எதுவும் சொல்லவில்லை. அப்பாவி மக்களைக் கொல்லவும் இல்லை. மக்கள் அதிகாரம் குழுவினர் இந்த அமைதிப் போராட்டத்தை வன்முறைப் பாதைக்குக் கொண்டு சென்று நாட்டில் புரட்சியைக் கொண்டுவந்துவிட வேண்டும் என்று திட்டமிட்டு வந்திருக்கிறார்கள். காவலர்கள் அவர்களுக்குப் புரியும் மொழியில் பதில் சொல்லியிருக்கிறார்கள். அவ்வளவுதான்.


பொதுவாக, அரசியல் கொலைகளை நாம் வேறுவகையாகவே எதிர்கொண்டு வந்திருக்கிறோம். கோத்ராவில் கரசேவகர்கள் எரித்துக் கொல்லப்பட்டபோது ஞாநி போன்றவர்கள் ஆர்.எஸ்.எஸ்.இன் வன்முறை சித்தாந்தத்தால் மூளைச் சலவை செய்யப்பட்டவர்கள்தானே கொல்லப்பட்டார்கள் என்று சொன்னார்கள். ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதையும் கொச்சைப்படுத்தியிருக்கிறார்கள்.

கேரளா, தமிழகம், கர்நாடகா போன்ற மாநிலங்களில் இந்து இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் வரிசையாகப் படுகொலை செய்யப்பட்டபோது அந்தக் கொலைகளையெல்லாம் பதைபதைக்க வைக்கும் கொலைகளாகப் பார்த்து வருந்தாமல், ”அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா’ என்று கடந்து சென்றிருக்கிறார்கள். எனவே அவர்கள் இந்த தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டது வன்முறை அரசியல் செயல்பாட்டாளர்களே என்ற உண்மையைத் தெரிந்துகொள்ளுபோது நிச்சயம் காவல் துறை மீதான முந்தைய ஆவேச அறச்சீற்றத்தில் இருந்து கொஞ்சம் பின்வாங்குவார்கள் என்று நம்புகிறேன்.

அடுத்ததாக, 17 வயது பெண் போராளி ஸ்நோலின் கொல்லப்பட்ட விதம் நிச்சயம் கொடூரமானது. எந்தவகையிலும் ஏற்க முடியாதது. கொல்லப்பட்ட வன்முறைப் போராட்டப் போராளிகள் ஆயுதம் இல்லாமல் இருந்தபோது கொல்லப்பட்டிருக்கிறார்கள்(இந்து இயக்கத் தொண்டர்களும் ஆயுதங்கள் இல்லாதபோதுதான் கொல்லப்பட்டார்கள்). கொன்றது அரசுப் பணியாளர்கள். இந்த இரண்டு விஷயங்கள்தான் கவனத்தில் கொள்ளவேண்டியவை.

இந்தப் போராளிகள் நாளை ஆயுதங்களுடன் தாக்க வரும்போது கொல்வதில் எந்தக் குற்ற உணர்ச்சியும் யாருக்கும் இருக்கப் போவதில்லை. காஷ்மீரிலும் வடகிழக்கிலும் இது தினமும் நடக்கும் செயல்தான். காஷ்மீரிலும் வட கிழக்கிலும் நடக்கும் அவை பற்றி நாம் என்றேனும் கவலைப்பட்டிருக்கிறோமா…


காந்திய அஹிம்சை வழிகளில் மிகுந்த நம்பிக்கை இருக்கும் எனக்கு காந்தியைப் போலவே உலகப் போர் போன்ற நேரங்களிலும் உள்நாட்டுப் போர்களிலும் எளியவர்களைக் காக்க வன்முறை தவிர்க்க முடியாதது என்பது புரியும். ஆனால், வன்முறைப் போராளிகள் ஆயுதங்களுடன் இருந்திராதபோது சுட்டுக் கொன்றது நிச்சயம் மிக மிகத் தவறு. அவர்கள் பொதுச் சொத்துக்கு தீங்கு விளைவித்தபோதிலும் அரசுப் பணியாளர்களுக்கு துன்பங்கள் விளைவித்தபோதிலும் ஆயுதம் இல்லாத ஒருவரை அரசு எந்திரம் சுட்டுக் கொன்றது நிச்சயம் தவறுதான். முட்டுக்குக் கீழே சுடுதல், சிறைப்பிடித்தல், கடுமையான சிறைத் தண்டனை தருதல் இவைதான் செய்திருக்கவேண்டும்.

தமிழக அரசு இந்த நான்கு ஆண்டுகளில் மத்திய அரசின் திட்டங்களை எதிர்த்து இது போன்ற கலகக் கும்பல்கள் மக்களைத் திரட்டிப் போராட இடம் கொடுத்தது முதல் தவறு. ஊடகங்களில் அது குறித்த பெருமித சாகச உணர்வை ஊட்ட அனுமதித்தது அடுத்த தவறு. அந்தத் திட்டங்கள் எல்லாம் பல ஆண்டுகளாக நடந்து வருபவை. அவை தொடர்பாக கலகக் கும்பல்கள் முன்வைக்கும் அவதூறுகள், மிகை பயங்கள் எல்லாம் ஆதாரமற்றவை என்று தன் தரப்பு நியாயங்களை வலுவாக எடுத்துச் சொல்லாதது அதைவிடப் பெரிய தவறு. இத்தனை நாட்கள் இப்படி இம்பொடண்டாக நடந்துகொண்டுவிட்டு இன்று ஒரே நாளில் இப்படி விறைத்துக் கொண்டு நின்றது எல்லாவற்றையும்விடப் பெரும் தவறு (கொன்றது வன்முறையில் நாட்டம் கொண்ட போராளிகளையே என்ற போதிலும்).

இன்றைய தமிழக மாநில அரசானது, மத்திய அரசின் கைப்பாவையாகச் செயல்படுகிறது என்ற போர்வையில் அனைத்துக் கீழறுப்பு வேலைகளையும் செய்துவருகிறது. சோனியா-காங்கிரஸையும் சசிகலாவையும் குறைத்து மதிப்பிடுவதால் நேர்ந்துவரும் அபாயம் இது. நரேந்திர மோதியின் மத்திய அரசானது தனக்கும் இந்த மாநில அரசுக்கும் இடையில் எந்தவிதத் திரைமறைவுப் புரிந்துணர்வும் கிடையாது… மத்திய அரசின் நலத்திட்டங்களை முறையாக அமல்படுத்த எல்லா மாநில அரசுகளைப் போலவே தமிழக அரசுடனும் இயல்பான புரிந்துணர்வு மட்டுமே இருக்கிறது. அவ்வளவுதான் என்ற செய்தியை மிகத் தெளிவாகத் தெரிவித்தாக வேண்டிய நேரம் இது.

ஒருவேளை அரசியல் வெற்றிடம் உருவாகியிருக்கும் சூழலில் மெள்ளத் தன் காலை அழுத்தமாக ஊன்ற இந்த நான்காண்டுகளைப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று நினைத்திருந்தால் அதுகூடத் தவறில்லை. ஆனால், இயல்பான புரிந்துணர்வோ, அரசியல் எதிர்பார்ப்போ எதுவாக இருந்தாலும் அந்தக் கணிப்பு வெகு மோசமாகத் தோற்றுவிட்டிருக்கிறது என்பதைப் புரிந்துகொண்டு உடனடியாகச் செயல்பட்டாகவேண்டும். அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் மத்தியில் ஆட்சியைப் பிடிப்பது எவ்வளவு அவசியமோ அதைவிடத் தமிழகத்தில் நன்மதிப்பைப் பெறுவது மிக மிக அவசியம். கப்பலில் ஓட்டை விழும் பகுதியில்தான் முதலில் கவனத்தைக் குவிக்கவேண்டும்.

இந்த அரசைக் கலைப்பதன் மூலம்தான் அதைச் சாதிக்கமுடியும் என்றால் அப்படியே ஆகட்டும்.

******

இதில் இன்னொரு வலுவான சந்தேகமும் எழுகிறது. கொல்லப்பட்டவர்கள் அனைவருமே அப்பாவிப் பொதுமக்கள் என்று சொல்வது கூடுதல் பொலிட்டிகல் மைலேஜைத் தரும் என்ற நிலையிலும் அவர்கள் இடதுசாரிப் போராளிகளே என்று தெளிவாக வெளிப்படையாகச் சொல்வது ஏன்..? அந்தப் போராளிகளிடம் உங்கள் தியாகத்தை அங்கீகரிக்கிறேன் என்ற போர்வையிலும் காவல்துறையிடம் நீங்கள் அப்பாவிகளைக் கொல்லவில்லை என்று வெளிப்படையாகச் சொல்கிறேன் என்றும் சொல்லி இரு தரப்பு நல்லெண்ணத்தையும் பெறும் நோக்கம்தான்.

அடுத்ததாக, இடதுசாரிப் போராளிகளைக் கட்டம் கட்டிக் கொன்றிருப்பது வேறொரு சந்தேகத்தையும் எழுப்புகிறது. முதலாவதாக அவர்களை விரைவிலேயே ஆயுதத்தைத் தூக்க வைக்கும் நோக்கில் இது நடத்தப்பட்டிருக்கும். மாவோயிஸ்ட்கள், நக்ஸல்கள், கேரள கம்யூனிஸ்ட்கள் எல்லாரும் ஆயுதத்துடன் திரியும் நிலையில் தமிழகத்தில் மட்டும் வினவு… புலம்பு என்று இணையதளப் போராளியாகவே இருந்துவரும் அந்த கும்பலை வன்முறைக்கு விரைவில் தள்ளுவது ஒரு நோக்கம். அதைவிட, பின்னாளில் தமிழ் பிரிவினைவாத சக்திகளுக்கு எதிராக நிற்க வாய்ப்பு உள்ள அவர்களை முளையிலேயே கிள்ளுவது இன்னொரு நோக்கம். அல்லது, அவர்கள் வர்க்கப் போராட்டத்தை முன்னெடுக்காமல் பிரிவினைப் போருக்கு நிபந்தனையற்ற ஆதரவு கொடுக்கவேண்டும் என்ற பாடத்தைப் புகட்டவும் இது மேற்கொள்ளப்பட்டிருக்கலாம்.

இலங்கையில் இடதுசாரி இயக்கங்கள் முதலில் ஒழிக்கப்பட்ட பிறகுதான் தமிழ்ப் பிரிவினைவாதம் தலை தூக்கியதையும் வட கிழக்கில் பிரிவினைக் கும்பல்களுக்கும் வர்க்கப் போராளிகளுக்கும் இடையில் மோதல் இருந்துவருவதையும் நினைவில் கொள்ளவும்.
இப்போது இன்னொரு சந்தேகம் வருகிறது… மஃப்டியில் இந்த இடதுசாரிப் போராளிகளுக்கு வெகு அருகில் இருந்து சுட்டவர்கள் காவலர்கள்தானா..? இந்த துப்பாக்கிச்சுட்டில் அதிகம் பலனடைவது யார் என்ற கேள்வியைக் கேட்டுப் பார்த்தால் உண்மை புரியும்.

காவல்துறை பொதுவெளியில் தலை குனிய நேர்ந்திருக்கிறது. மாநில அரசு அவர்களைக் காப்பாற்ற வேண்டிய தர்ம சங்கட நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. மத்திய அரசும் கிட்டத்தட்ட அதையே செய்ய நேர்ந்திருக்கிறது. இடதுசாரி இயக்கத்துக்கு சில தியாகிகள் கிடைத்திருக்கிறார்கள். தேவாலய முற்றத்தில் இனி இந்தப் பகுதியில் எங்களைக் கேட்காமல் எதுவும் நடக்க முடியாது என்று தீர்மானம் இயற்றியிருக்கிறார்கள்.

காவல்துறையோ, மாநில அரசோ, மத்திய அரசோ இதைச் செய்திருக்க வாய்ப்பு மிக மிகக் குறைவு. ஏனெனில் இதனால் அவர்களுக்குக் கிடைக்கும் நன்மையைவிட தீமையே அதிகம். இடதுசாரி இயக்கங்கள் தமக்குத் தியாகிகள் கிடைக்க வேண்டும் என்பதற்காக இப்படிச் செய்திருக்க வாய்ப்பு மிகவும் குறைவு. அவர்களில் ஒருவர் கொல்லப்படும் முன் எதிர் தரப்பில் பத்து பேரையாவது கொன்றுவிடவேண்டும் என்ற வெறி உடையவர்கள். எனவே… 

******

இதன் நீட்சியாக இன்னொரு விஷயமும் சொல்லவேண்டியிருக்கிறது. கும்பல்களைப் பயன்படுத்தி அரசியல் என்பது ஒரு அபாயகரமான கலையாகவே பரிணமித்திருக்கிறது. இந்திய நிகழ்வுகளை இந்திய அளவோடு நிறுத்திப் பார்க்காமல் சர்வ தேசக் கரங்கள் இதில் இருக்கின்றன என்ற உண்மையை ஏற்றுக்கொண்டு யோசித்தால் இந்த உண்மை புரியும்.

கும்பல் வன்முறையில் ஈடுபடும் என்பது மறுக்க முடியாத உண்மை என்பதால் ஒரு கும்பல் கூடும் போது விஷமிகளைக் கொண்டு வன்முறையை நிகழ்த்தி அந்தக் கும்பல் மேல் பழிபோட்டு அப்படியான கும்பல் இனி கூட விடக்கூடாது என்ற நோக்கில் செயல்படும் போக்கு அதிகரித்துவந்திருக்கிறது. அந்தக் கும்பலைக் கூட்டும் இயக்கங்களும் தன் ஆட்கள் இப்படியான வன்முறையில் ஈடுபட்டிருக்கக்கூடும் என்று நம்பி அவர்களைக் காப்பாற்றவே முயற்சி செய்வர். அது அந்த கும்பல்தான் வன்முறையில் ஈடுபட்டது என்பதற்கான ஒப்புதல் வாக்குமூலமாகவே ஆகிவிடும். ஆக செய்யாத தவறுக்கான பழியை அந்த இயக்கம் காலமெல்லாம் சுமக்க நேரிடும். வெறும் சதிக்கோட்பாடாக ஒதுக்கித் தள்ளப்படும் இதன் பின்னால் வலுவான சாத்தியம் இருக்கிறது.

ராமபிரானுக்கான கரசேவை – செங்கல் பூஜை இந்தியா முழுவதும் நடந்தது. ரத யாத்திரை நடந்தது. மிகப் பெரிய மக்கள் திரள் அதில் பங்கெடுத்தது. ஆனால், துளி வன்முறை கூட நடக்கவில்லை. அரசு கரசேவகர்களைச் சுட்டுக் கொன்ற பிறகும் அந்த கும்பல் இலக்கில் வெகு தெளிவாக குறியாக இருந்து அந்தக் கட்டுமானத்தை மட்டுமே இடித்துவிட்டு அமைதிகொண்டது. ஆனால், அந்த கும்பல் பெரும் வன்முறையை நிகழ்த்தும் என்று காத்திருந்தவர்கள் மிகுந்த அதிர்ச்சிக்கு ஆளானார்கள். அதனால்தான், அந்த கும்பல் வன்முறையில் ஈடுபட்டிருக்கக்கூடும் என்ற வலுவான சாத்தியத்தை கோத்ரா எரிப்பு மூலம் நிகழ்த்தி அதற்கான எதிர்வினையில் பல்வேறு விஷமிகளின் கைவேலையில் ஆரம்பித்து ஊடகத் திரிபுகள், மிகைப்படுத்தல்கள் என அனைத்தையும் செய்து தேசத்தில் பிரிவினையை விதைத்தார்கள். பாஜக இன்றும் அந்தப் பழியில் இருந்து மீளவே முடிந்திருக்கவில்லை. ஏனென்றால் கும்பல் வன்முறையில் ஈடுபட்டிருக்கும் என்ற நம்ப வலுவான காரணத்தை அங்கு உருவாக்கிவிட்டார்கள்.

தமிழகத்தை எடுத்துக்கொண்டால் கிறிஸ்தவ-இஸ்லாமிய அடிப்படைவாதத்தின் முகமூடியான விசிகவுடன் சேர்ந்து இந்துத்துவத்துக்கு எதிராகச் செயல்பட அழைப்புவிடுக்கப்பட்ட பாமக அதை ஏற்க மறுத்ததால் தர்மபுரி- நாயக்கன் கொட்டாய் கலவரம், சேஷபுரத் தேர் எரிப்பு, பேருந்துகள் உடைப்பு என வன்முறைக் கட்சியாக நிறுவியதிலும் இந்த கும்பலைப் பயன்படுத்தும் அரசியல் ஒளிந்திருக்கிறது. மெரீனா கூட்டம் திறந்தவெளியில் கூடியதிலும் அதைத் தொடர்ந்து காவல்துறையே வன்முறையில் ஈடுபடுவதுபோல் காவலர்கள் மத்தியில் இருந்தே வீடியோ எடுத்து வெளியிட்டதிலும் இப்போது வேனின் மேல் பளிச்சென்ற மஞ்சள் டீஷர்ட்டுடன் ஏறி நின்று போஸ் கொடுத்ததிலும் கும்பலை நல்லவர்களாகவும் அரசை வன்முறையாளர்களாகவும் சித்திரிக்கும் திட்டமிடல் இருக்கிறது.

இந்து சார்பு கும்பல் என்றால் அதை வன்முறையாகச் சித்திரித்தல்… பிரிவினைவாத இந்து எதிர்ப்பு கும்பல் என்றால் அரசை வன்முறையாளராகச் சித்திரித்தல் என அது இயங்குகிறது. கும்பல் செய்யும் வன்முறையைவிட கும்பலை வைத்து அரசியல் செய்ய விரும்பும் சக்திகளின் வன்முறை மிக மிக அதிகம். மிகவும் தந்திரமானது. மிகவும் அபாயகரமானது. இதனால்தான் நான் எப்போதும் இந்து இயக்கங்கள் பெண்களை முன்னிறுத்தி கூட்டங்கள் கூட்டவேண்டும் என்றும் காவலர்கள் மயக்க மருந்து தோட்டா, போராட்டத்தில் பங்குபெற்றவர் மேல் அழியாத மையைத் தெளித்தல் (கூட்டமாக இருக்கும்போதுதான் இவர்களுக்கு பலம். தனியாக அந்த மையுடன் வெளியில் தலைகாட்டவே பயப்படுவார்கள்), பின்னர் அவர்களைத் தனியாக விசாரித்தல் என அரசு செயல்படவேண்டும் என்றும் சொல்கிறேன்.

எதிரிகள் விரிக்கும் வலையில் சிக்காமல் இருப்பதுதான் சாணக்கிய தந்திரம்.

(B.R.மகாதேவன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியது)

4 Replies to “தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: ஒரு கண்ணோட்டம்”

  1. தீர்க்கமான கண்ணோட்டம். கடைசி வரிதான் குழப்புகிறது.
    எடப்பாடி அரsai விரட்டிவிட்டால். பாதிரிகளை எப்படி அடக்க முடியும்? இருக்கும் எடப்பாடி அரசை வைத்தே அத்தனை பாதிரிகள்; லாசரஸ் எல்லாரையும் உள்ளே போடலாம். எடப்பாடி அரசைக் களைத்துவிட்டால் தனக்குத் தானே சூடு வைத்த கதைதான்.

    பாதிரிகள் அனைவரையும் உள்ளேபோடாமல் விட்டால் மீண்டும் கலவரத்தைத்தூண்டுவார்கள்.

  2. //காந்திய அஹிம்சை வழிகளில் மிகுந்த நம்பிக்கை இருக்கும் எனக்கு…//

    காந்திய அகிம்சை வழியில் நம்பிக்கை உடைய தாங்கள், இவ்வளவு பிரச்சனைகளுக்கும் காரணமான ஆலையை பற்றி ஒரு வார்த்தையும் குறிப்பிடாமல் விட்டது ஏனோ? அந்த ஆலையில் இருந்து வரும் புகையினாலும், திறந்துவிடப்படும் கழிவு நீரினாலும் தங்களின் சுற்றுசுழல் வாழ்வாதாரம் பாதிக்க படுவதாக அந்த மக்கள் குற்றம் சாட்டுகிறார்கள். இதற்க்கு அரசு தரப்பில் இருந்து சுகாதார துறையின் மூலமாக என்ன நடவடிக்கை இது வரை எடுக்கப்பட்டுள்ளது.

  3. The author is trying to justify the killings citing a few other instances. This is not correct. 2 wrongs do not make a right.

    It was a clear case of carelessness & intelligence failure. Also, the police atrocities in arresting innocent persons & thrashing them in full public view can never be pardoned.

    But who cares about the lives that have been lost? The policemen concerned have simply been “transferred”. Is this a punishment?

    Finally to say that edappadi govt should stay is a big joke. This spineless govt is responsible for all the ills that the state is now facing. There is rampant corruption, violence, no development projects & abject surrender to the central govt.

    The BJPO govt at the centre does not want the state to progress & that is clearly seen in its actions.

    The BJP will be routed in the next TN assy elections. But do they care? As long as they come to power in 2019, nothing else matters.

    Modi has disappointed his voters big time.

    As the saying goes, power corrupts but absolute power corrupts absolutely.

  4. ஸ்டெரிலெட் ஆலை ஏன் எதிா்க்கப்படுகின்றது

    நமக்கு வாய்த்த தகுதியற்ற அறிவுகெட்ட முட்டாள்கள் அல்லது எல்லாம் தெரிஞ்ச மக்கள் விரோத கொடூர கயவர்களான பணவெறி அரசியல்வாதிகள்… ‘ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி தந்தவன் நீதான்… அடிக்கல் நாட்டியவள் நீதான்… திறந்து வச்சவன் நீதான்… ‘ என்றெல்லாம் பரஸ்பரம் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டிக்கொள்கின்றனர். இதனால் ஒரு பயனும் மக்களுக்கு இல்லை.
    ஆகவே, பிரச்சனையின் ஆணிவேர் பற்றி பேசுவோம். ஸ்டெர்லைட்டில் இரண்டே இரண்டு விஷயங்கள் இல்லை என்றால் மகாராஷ்டிரா மக்கள் ஆதரவே அன்று ஸ்டெர்லைட்டுக்கு கிடைத்திருக்கும். ஆனால்… அந்த 2 விஷயத்தில்தான்… அனைவரையும் ஸ்டெர்லைட் ஏமாற்றியதால்… எதிர்ப்பு வலுவடைகிறது. அவை என்ன..?
    அந்த 2 முக்கிய அம்சங்கள்:
    1-சல்ஃபர்-டை-ஆக்ஸைடு (SO2)
    2-அர்செனிக் (As)
    SO2 ஓர் ஆபத்தான நச்சுவாயு. காற்றில் 10 லட்சத்தில் 5 பங்குக்கு மேலே என்ற அளவில் இவ்வாயு காற்றில் கலந்து இருந்தால் அக்காற்று மாசுபாடு அடைந்து விட்டது என்று பொருள். இந்த அளவில் இவ்வாயு மூச்சுத்திணறல், நுரையீரல் நோய், குமட்டல், வாந்தி, தோல் எரிச்சல், கண் எரிச்சல் ஆகியனவும் அதிகளவில் எனில் இறப்புக்கும் வழிவகுக்கும்.
    As அதிபயங்கரமான நச்சுத்தனிமம். நிலம் & நிலத்தடி நீர் மாசுபாட்டுக்கு காரணம். 10 கோடியில் 1 பங்குக்கு மேலே என்ற அளவில் இத்தனிமம் நீரில் / நிலத்தில் கலந்து இருந்தால் அந்த நீரும் நிலமும் மாசுபாடு அடைந்து விட்டது என்று பொருள். இந்நிலையில் மாசுபட்ட நிலத்தடி நீரை உட்கொண்டால் சிறுநீரக மண்டலம் உட்பட பல இடங்களில் கேன்சர் வரும். அந்த நிலத்தில் வளரும் தாவங்களிலும் இவை பாதிப்பை ஏற்படுத்தும். அந்த தாவரங்களை உட்கொள்ளும் போதும் செரிமான மண்டலத்தில் கேன்சர் வரும்.
    ஸ்டெர்லைட் ஆலையின் முதன்மை உற்பத்தி பொருள் காப்பர்(Cu). தாமிரம்.
    காப்பர் உற்பத்தி செய்யும்போது, அதன் தாதுப்பொருளில் உள்ள கந்தகம் எரிந்து நிறைய நிறையை SO2 கழிவாக வெளியாகிறது. இந்த நச்சுவாயுவை அப்படியே வானில் வெளியாக்கினால் மரணம் என்பதால், காப்பர் ஸ்மல்டர் ஆலைகளில் அவற்றுக்கு எவ்விதத்திலும் பயனற்ற சல்பியூரிக் ஆசிட் (கந்தக அமிலம்) உற்பத்தி பிளாண்ட் ஒன்றை ஓட்டியாக வேண்டும். இதில்… அந்த கந்தக ஆக்ஸைடை (SO2) கேட்டலிஸ்ட் மூலம் SO3 ஆக்கி, HSO3 ஆக்கி, H2SO4 என்ற கந்தக அமிலமாக மாற்றப்படுகிறது.
    ஸ்டர்லைட்டில் ஒரு நாளைக்கு சுமார் 3300 டன் என்ற மிதமிஞ்சி உற்பத்தியாகும் இந்த அமிலத்தை அதே அளவுக்கு வாங்குவோர் இல்லாததால்… அதை ஸ்டோர் பண்ணி வைக்க டேங்கில் இடம் இயலாதபோது… அப்படியே வாய்க்காலில் எல்லாம் திறந்து விட முடியாதே. அமிலம் ஆயிற்றே. என்ன செய்யலாம்..?பக்கத்தில், உள்ள ஸ்பிக் கந்தகஅமில உற்பத்தியை நிறுத்த சொல்லிவிட்டு… இலவசமாகவே லாரி டேங்கர்கள் மூலம் கொண்டு போயி தரலாம். (நான் அங்கே பணியாற்றிய வருஷங்களில் அப்படித்தான் டேங்கர்களில் ஆசிட் கொண்டு வந்து தந்தார்கள். எங்கள் சல்பியுரிக் ஆசிட் பிலாண்டை ஷட் டவுன் பண்ணி நிறுத்திட்டு அவங்க ஆசிடை வாங்கி எங்களின் டேங்குகளில் சேமித்துக்கொண்டோம்.)
    சரி, ஸ்பிக்கிலும் இலவசமாக தந்து அவர்களின் டாங்கிகளும் நிரம்பி விட்டது. இனி என்ன செய்ய..?
    ம்ம்ம்… இப்படி ஸ்டெர்லைட் கந்தக அமிலம் சேமிப்பு டாங்கிகள் நிரம்பி விட்டால் வேறு வழியின்றி காப்பர் உற்பத்தியை நிறுத்தவோ குறைக்கவோ வேண்டும். ஆனால், காப்பர் டிமான்ட் மார்க்கெட்டில் இருக்கே. செமை இலாபமாச்சே. காப்பர் உற்பத்தியை குறைக்கவே கூடாதே. வேறு என்ன செய்யலாம்..?
    நைசா… ராவோடு ராவாய் தம் ஊழியர்களை மட்டும் பிரீதிங் அபாரடஸ் போட்டுக்கொள்ள சொல்லிட்டு, SO2வை வானில் திறந்துவிட்டு வென்ட் பண்ணிடலாம். சல்பியுரிக் அமிலமாக மாற்ற தேவை இல்லை. அப்படியெனில்… மக்கள் சாவார்களே..? லண்டனில் இருக்கும் ஓனருக்கு தூத்துக்குடி மக்கள் செத்தால் என்ன… வாழ்ந்தால் என்ன..?
    தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், SO2 எமிஷனுக்கு நிர்ணயித்து இருக்கும் அளவு… ‘பெர்மனன்ட் எக்ஸ்பொஷர் லிமிட்'(PEL) நிரந்தர தாக்குப்பிடிப்பு அளவு:5ppm. (காற்றில் 10 லட்சத்தில் 5 பங்கு)
    இதுவே, ஸ்டெர்லைட் வென்ட் பண்ணினால், 75ppm அளவுக்கு இந்த நச்சுவாயு அடர்த்தி எனில், அங்கே, 1 மணி நேரம் மட்டுமே மக்கள் தாக்குப்பிடித்து இருக்கலாம் என்பதுதான் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அறிவிக்கும் PEL.
    ஆனால்…
    தூத்துக்குடி ஸ்டெர்லைட்டில் SO2 நச்சுவாயு வெளியாகும் அளவுபற்றி மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அரசுத்துறை அறிக்கை யாதெனில்…
    1000ppmக்கும் மேலே..! https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/fe/1/16/1f622.png
    //
    The readings of the sulphur di-oxide analyser linked to the PCB’s Care Air Centre at Guindy here suggested that the emission was in the range of 504.5 to 1123.6 ppm (parts per million) during those occasions as against 477.53 ppm prescribed by the Union ministry of environment and forests.
    https://timesofindia.indiatimes.com/…/articles…/19470029.cms
    //
    அப்படி எனில்… ஒரு நிமிஷம் கூட மக்கள் வாழத்தகுதியற்ற ஊர்… தூத்துக்குடி..!
    ஆகவே, இந்த ரிப்போர்ட் வந்த 2013ம் ஆண்டே… அந்த ஸ்டெர்லைட்டின் லைசன்ஸ் ரத்து செய்யப்பட்டு, ஆலையை நிறுத்தி ஊழியர்களை வெளியேற்றி கேட்டைபூட்டி சீலிட்டு… உரிமையாளரை கோர்ட்டுக்கு இழுத்து பல்லாயிரம் கோடி நஷ்ட ஈடு வாங்கி…உயிர் விட்ட, பாதிக்கப்பட்ட மக்களுக்கு தந்திருக்க வேண்டாமா அரசு..?!
    சரி, இப்போது ஆர்செனிக் பற்றி பார்ப்போம். அது இதைவிட மாபெரும் கொடுமை..!
    SO2 பிரிந்த பிறகு… மீதமுள்ள காப்பர் தாதுவில் ஆர்செனிக் கலந்து இருக்கும். காப்பரை அதிலிருந்து பிரித்து தனியே எடுத்த பின்னர், ஆர்செனிக் என்ற திண்மப்பொருள் சகதி போல (ஸ்லட்ஜ்) ஆக பிரிந்து தனித்துவிடுகிறது. இதை என்ன செய்வது..? நீரிலும் விட முடியாது. நிலத்திலும் விட முடியாது. திண்மம் என்பதால்… சல்பர் டை ஆக்சைடை காற்றில் திறந்து விட்டது போல… திறந்து விடவும் வாய்ப்பில்லை.
    இதை ஸ்டெர்லைட் என்ன செய்ய வேண்டும் எனில்… அதன் ஆலை வளாகத்தின் உள்ளேயே… சூரிய ஒளி, மழை நீர், காற்று ஏதும் படாதவாறு சீலிடப்பட்ட மிகப்பிரம்மாண்ட மெடல் டாங்கிகளில் எவ்வித லீக் ஆவதுக்கும் வாய்ப்பே இன்றி, நிலமட்டத்தில் இருந்து சற்று உயர்த்தி வைத்து அடிக்கடி யாதொரு கசிவும் இருக்கிறாதா என்று பரிசோதித்து பாதுகாத்து பரிசோதித்து பாதுகாத்து பரிசோதித்து பாதுகாத்துவைத்துக்கொண்டே இருக்க வேண்டியதுதான்.
    ஆனால்… ஸ்டெர்லைட் என்ன பண்ணுகிறது… தெப்பக்குளம் போல கட்டி தேக்கி வைக்கிறது. அதற்கு… ‘Cake Pond’ என்று பெயரும் இட்டு..!
    அடப்பாவிகளா..!
    இங்கே மழை பெய்தால் அந்த தெப்பம் நிறைந்து ஆர்செனிக் வழிந்து ஓடுமாம்… எங்கே…? நிலத்தில்தான்..! இப்படித்தான் தூத்துக்குடி நிலத்தடி நீரில் ஆர்செனிக் கலந்துள்ளது.
    மழை விட்டபின்னர்… நீர் பூமியில் உறிஞ்சிய பின்னர்… நிலத்தின் மீது எஞ்சி இருக்கும் அந்த ஆர்செனிக் சகதியை எவ்வித பாதுகாப்பு உபகரணமும் இன்றி எதோ வயல் சகதியை மம்பட்டியால் வெட்டி எடுத்து போடுவது போல ட்ரக்கில் போட்டு தெப்பத்தில் கொண்டு போய் கொட்டுவார்களாம். அந்த ட்ரக் டயரில் ஒட்டிய ஆர்செனிக் கழிவு, ட்ரக் வேலை முடிந்து ஆலையை விட்டு வெளியே போனவுடன்… சக்தி காய்ந்து… தூத்துக்குடி ஊரெங்கும் தூவிச்செல்லும்தானே..? இப்படித்தான் ஆர்செனிக் ஊர் முழுக்க பரவுகிறது. அப்புறம் அதில் வேலை செய்தவர்களின் உடலில் உடையில் செருப்பில் ஒட்டி இருக்கும் ஆர்செனிக் அவர்களின் வீடுகளுக்கும் செல்லும். வீட்டில் உள்ள குழந்தை கையை கீழே வைத்து வாயில் வைத்தால்… முடிந்தது… குழந்தைக்கும் கேன்சர்..!
    (மேற்படி தகவல், ஸ்டெர்லைட்டில் வேலை பார்த்துவிட்டு பின்னர் என்னோடு எனது நிறுவனத்தில் பணியாற்ற வந்த தோழர் சொன்னவை)
    இதெல்லாம் விட… படத்தில் உள்ள அந்த 30 வருஷ கால பழைய ஆர்செனிக் குளத்தின் அடியில் போடப்பட்ட தளத்தில் இத்தனை வருஷத்தில் எத்தனை எத்தனையோ விரிசல்கள் விட்டு பூமிக்குள்ளும் ஆர்செனிக் சென்று கொண்டு நிலத்தடி நீரில் கலந்து கொண்டே இருக்குமே..!
    நிலத்தடி நீரில் இந்த ஆர்சனிக் அளவு எவ்வளவு இருக்க வேண்டும் தெரியுமா..? 10 கோடியில் ஒரு பங்குக்கு கீழே இருக்க வேண்டும்.(10ppb)
    ஆனால்…
    நீரி (NEERI-National Environmental Engineering Research Institute) என்ற நீர்/நிலம் தொடர்பான
    அரசு நிறுவனம், ஸ்டெர்லைட் அமைந்துள்ள தூத்துக்குடி சுற்று வட்டாரத்தில் எடுத்த பல்வேறு சேம்பிள்
    மாதிரிகளில் ஆர்செனிக் கலப்பு பற்றி அளித்த ஆய்வுச்சோதனை முடிவுகள் அதிர்ச்சிகரமாக உள்ளது.
    ஆம்… பத்து லட்சத்தில் 100… 200….300 பங்குகள் என்ற அளவில் ஆர்செனிக் உள்ளன..!
    ஆனால்… இந்திய சட்டம் என்ன சொல்கிறது..?
    50 க்கும் மேற்பட்ட மில்லிகிராம் / கிலோகிராம் ஆர்செனிக் கொண்ட மண் வகைகளை இந்திய அபாயகரமான கழிவு விதிகள், 2008 இன் கீழ் அபாயகரமான கழிவுகளாக கருதப்பட வேண்டும் என்கிறது. எனில், அம்மண்ணில் மக்கள் வாழவே கூடாது… அந்த அபாயகரமான கழிவை மிதிக்கவே கூடாது, எனில் அப்புறம் எப்படி அதில் வீடுகட்டி வாழ்வது..!
    //
    https://www.thenewsminute.com/…/sterlite-here-s-proof-data-…
    //
    மேற்படி… சுட்டியில் நீங்கள் நீரி ரிப்போர்ட்டை காணலாம். இந்த நீரி ரிப்போர்ட் 2005 ஆம் ஆண்டு சமர்ப்பித்தவை. அது வழக்காகி இறுதியில் உச்ச நீதி மன்றம் போயி… ஜஸ்ட் லைக் தட் 100 கோடி அபராதம் கட்ட சொல்லிட்டு பிலாண்டை ஓட்டிக்க சொல்லிருச்சு உச்ச நீதி மன்றம்..!
    ஆக… அது முடிந்து… 13 வருஷம் ஓடியாச்சு. ஏகப்பட்ட மழை பெய்து ஏகப்பட்ட முறை கேக் பான்ட் நிரம்பி ஓடி… ஆர்செனிக் சகதி ஒட்டிய ட்ரக் ஊரு முழுக்க பலமுறை ஓடி… இப்போதெல்லாம்… ஆர்செனிக் அளவை சோதனை போட்டால்… ஆய்வாளருக்கே கேன்சர் வந்துவிடும்..!
    இதன்பிறகும்… அரசியல்வாதிகள் அந்த தனியார் கம்பெனியை இயங்க அனுமதித்தால்… அவனுங்கலாம் மனிதகுலவிரோதிகள்..! இந்நாட்டில் வாழவே யோக்யதை இல்லாதவர்கள்… நம்மை ஆளுகிறார்கள்…! ச்சே… நம்மை விட உலகில் இழிந்தநிலையில் வாழும் மக்கள் வேறு யார் இருக்க முடியும்..?!

    —————————————-
    சுவனப்பிரியன் என்ற வலைதளத்தில் வெளியான கட்டுரை. அது குறித்து விவாதம் செய்யலாம். 310 கார்கள் 500 பைக்குகள் தீயிட்டு கொளுத்தப்பட்டுள்ளனே.பொது சொத்துக்களை காக்க காவல்கள் தவறிவிட்டாா்கள்.துப்பாக்கி பிரயோகம் நியாயமானதுதான்.
    இப்படியே காவல்துறையை விமா்சனம் செய்தால் எந்த கலவரத்திலும் காவல்துறை செயல்படாது போய்விடும்.கைகட்டி வேடிக்கை பார்ப்பார்கள்.இந்த நிலை ஆபத்து

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *