இலங்கை: நல்லூர் ஆலயத்திலிருந்து வெளியேற்றப்பட்ட தமிழ் இந்துத் தாய்மார்கள்

கீழ்க்கண்ட செய்தி  லங்காசிறி என்ற இலங்கை இணையதளத்தில் வெளிவந்துள்ளது.

நல்லூர் ஆலயத்திற்கு வழிபாடுகளில் ஈடுபடச் சென்ற தமிழ் தாய்மார்களை ஆலய நிர்வாகத்தினர் ஆலயத்திற்குள் செல்ல விடாது தடுத்துள்ளனர். இதனால், ஆலய நிர்வாகத்தினருக்கும், பெண்களுக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.

இதன்போது, வெளிநாட்டவர்களும் ஆலயத்திற்கு வருகை தந்துள்ளனர். இந்த நிலையில் அவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு தமிழ் தாய்மார்கள் புறக்கணிக்கப்பட்ட சம்பவம் தமிழர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதேவேளை, தமிழ் மண்ணில் நாங்கள் பலவற்றை இழந்து விட்டோம் என்றும் தமிழர்களுக்கு இந்த உரிமை கூட இல்லையா எனவும் பாதிக்கப்பட்ட தாய்மார்கள் கேள்வி எழுப்பியுள்ளர்.

நல்லூர் கந்தசுவாமி கோயில் இலங்கையில் மிகவும் புகழ் பெற்ற இந்துக் கோயிலாகும். இலங்கையில், தமிழ் பாரம்பரியம் மற்றும் வரலாற்று சின்னங்கள் என்பன அழிக்கப்பட்டு வரும் நிலையில் ஆலயத்திற்குள் பெண்கள் செல்வதற்கு தற்போது மறுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இது குறித்து அங்கு வசிக்கும் இந்து உணர்வுள்ள நண்பர் ஒருவரின் புலம்பல்:   “வீடியோவில் உள்ள தமிழ் தாய்மார்கள் சென்ற ஐநூறு நாட்களாக போரின்போது காணமல்போன தமது உறவுகளை கண்டுபிடித்து தருமாறு இலங்கை அரசுக்கு எதிராக தொடர் போராட்டம் நடத்துபவர்கள். இவர்கள் எல்லோரும் இந்துக்கள். சாத்வீகமாகப் போராடுபவர்கள். எந்த ஒரு அரசியல் கட்சியையும் சாராதவர்கள். பதவி ஆசை பிடித்த தமிழ் அரசியல்வாதிகளால் திரும்பியும் பார்க்கப் படாதவர்கள். தமது போராட்டத்தின்போது வைத்துக்கொண்ட நேர்த்திக் கடன்களை நிறைவேற்றுவதற்காக பிரசித்திபெற்ற யாழ்ப்பாணம் நல்லூர் கந்தஸ்வாமி ஆலயத்திற்கு இவர்கள் வந்தபோது அதனை நிறைவேற்ற விடாமல் ஆலய நிர்வாகிகளால் தடுக்கப் பட்டார்கள். தீச் சட்டி ஏந்தவும் தேங்காய் உடைக்கவும் இவர்கள் மறுக்கப் பட்டார்கள். இதைப்போன்ற மிகவும் கேவலமான வேதனை தரும் செயலை இக்கோவில் நிர்வாகத்தவர்கள் செய்தது மிகவும் கண்டிக்கத் தக்கது. ஏழை ஏதிளிகலான இந்துக்களை பணக்கார  நிர்வாகத்தவர்கள் இப்படியாக நடத்துவதனை உலகு எங்கணும் வாழும் இந்துக்கள் கண்டிக்கவேண்டும். இவ் ஏழைகழுக்காக ஆதரவுக் குரல் கொடுத்தல் வேண்டும். மேற்கத்தைய நாட்டவர்களை கோவிலுக்குள் பெருமையுடன் அனுமதிக்கும் நிர்வாகத்தவர்கள்  கைவிடப்பட்ட ஏழை இந்துக்களை நேர்த்திகடன் செய்ய ஏன் அனுமதிக்கவில்லை?  இது யாழ்ப்பாணத்தில் மீண்டும் தலை தூக்கும் சாதி வெறியா அல்லது பணக்காரத் திமிரா?  நல்லூர் கந்தனுக்கே வெளிச்சம்”.

7 Replies to “இலங்கை: நல்லூர் ஆலயத்திலிருந்து வெளியேற்றப்பட்ட தமிழ் இந்துத் தாய்மார்கள்”

 1. ஈழத்தில் இடம்பெற்ற யுத்தத்தின்போதும் அதற்கு முன்னரும் பின்பும் இலங்கை அரசின் படைகளினால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமிழரின் தாய்மார்கள் நடாத்தும் போராட்டத்தினைப் பற்றி பிரசுரித்தமைக்கு மிகவும் நன்றி. படையினரினால் கொண்டு செல்லப்பட்டு அடைத்து வைக்கப்பட்டோரின் பெயர் விபரங்களை இன்றுவரை இலங்கை அரசு வெளியிடவில்லை. முதலில் அப் பட்டியலை வெளிடுவதாகக் கூறிய ஜனாதிபதி சில மாதங்களின்பின் அப்படியொரு பட்டியல் இல்லையெனக் கூறுகின்றார். இதனால் அவர்கள் உயிருடன் இருக்கிறார்களா இல்லையா என்பதயும் இத் தாய்மார்களால் இதுவரை அறியமுடியவில்லை. இவர்களுட் பலர் இராணுவத்தினரின் கட்டளைக்கிணங்க பெற்றோர்களினால் இராணுவத்திடம் கொடுக்கப்பட்டவர்கள். பிரதமரோ இலங்கையின் எப்பகுதியிலும் தடுப்பு முகாம்கள் இல்லையெனவும் எவரும் தடுத்து வைக்கப்படவில்லை எனவும் இப்பொழுது கூறுகின்றார். இது உண்மையென நம்பப்பட்டால் அரச படைகளினால் கொண்டு செல்லப்பட்டோர் மற்றும் கட்டளைக்கிணங்க கொடுக்கப்பட்டோர் எல்லோரும் சாகடிக்கப்பட்டு விட்டார்கள் என்பதுதானே அர்த்தம். ஆனால் அதனையும் அரசு வெளிப்படையாக சொல்லாது தமிழ் தாய்மார்களையும் உறவினர்களையும் ஏமாற்றிக்கொண்டு வருகின்றது. அரசுடன் ஒட்டியிருக்கும் தமிழ் தேசீயக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களும் உருப்படியாக எதனையும் செய்யாது முதலைக் கண்ணீர் வடித்து நாடகம் ஆடுகின்றது. இத் தாய்மார்கள் கடவுளே கதிஎன எண்ணி நல்லூர் கந்தசாமி கோவிலுக்குப் போய் நேர்த்திக்கடனை நிறைவேற்ற முற்பட்டால் அதற்கும் முட்டுக்கட்டை போடுகின்றனர் கேடுகெட்ட நிர்வாகத்தினர். அகில இலங்கை இந்துமா மன்றம் , யாழ்ப்பாண சைவசமய சபை, சைவ பரிபாலன சபை, அரச இந்து கலாச்சார திணைக்களமும் மந்திரியும் இத் தாய்மார்கள் பற்றி கவலைப்படுவதே இல்லை. இப்படியொரு நிகழ்வு வேறு மதத்தினருக்கு நடந்திருந்தால் பெரும் ஆர்ப்பாடங்கள் மூலை முடுக்கு எங்கும் நடந்திருக்கும். ஊடகங்கள் இதனைப் பற்றி தினமும் பேசியிருக்கும். ஆனால் ஈழத்து இந்துக்கள் கும்பகர்ணனுடன் போட்டிபோட்டு உறங்குபவர்கள். சூடு சுரணை என்ன விலை எனக் கேட்பவர்கள். என்னுடைய பிள்ளை காணமல் போகவில்லை எனவே எனக்கு என்ன கவலை என நினைப்பவர்கள். இப்படிப்பட்ட நிலையில் தமிழக மலேசிய மொரிசிய இந்துக்கள் இத் தாய்மார்களுக்கு உதவ வேண்டும். அவர்களுக்காக குரல் எழுப்பவேண்டும். இலங்கை ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இதுபற்றி நீதிகேட்டு எழுதவேண்டும். உண்மையைக் கூறும்படி அழுத்தம் கொடுக்க வேண்டும்.தத்தம் நாட்டுப் பத்திரிகைகளில் இதுபற்றி எழுதி இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். கூடவே ஈழத்து இந்துக்களையும் சைவ அமைப்புகளையும் விழிப்படையுமாறு இடி இடித்துக் கூறவேண்டும். கும்பகர்ணனை எழுப்புவதுபோல் இடி இடிக்கவேண்டும். யாழ்ப்பாண நல்லூர் கந்தசுவாமி கோவில் நிர்வாகத்தினரையும் ஓர் குலுக்கு குலுக்க வேண்டும். இவற்றை செய்வீர்களென அன்புடனும் ஆர்வத்துடனும் எதிர்பார்க்கின்றேன்.

 2. இந்துக்களின் கோவில்களை இடித்து அழிக்கின்ற, இந்துக்களின் தனிப்பட்ட காணிகளில் இருந்து வெளியேற மறுத்து துன்புறுத்துகின்ற இராணுவத்தினரை, இந்துக்களின் காணிகளை சுவீகரிக்க உதவுகின்ற தொல்பொருள் ,வன இலாகா சின்ஹல உத்தியோகத்தர்களை கூட்டம் கூட்டமாக கோவிலுக்குள் அனுமதிக்கலாம். சின்ஹல பவுத்த வெறிகொண்ட மந்திரிமார்களை பிரதமரை ஜநாதிபதியை கைகூப்பி வரவேற்று உள்ளே அழைத்து செல்லலாம். காளாஞ்சி கொடுக்கலாம். ஆனால் உறவுகளை இழந்து அல்லல்படும் ஏழை எளிய இந்துக்களை கோவிலுக்குள் அனுமதிக்கூடாது. இது என்ன நியாயம் ஐயா? இத் தாய்மார்கள் கோவிலின்முன் போராட்டம் நடத்த வரவில்லை. நேர்த்திக்கடனை நிறைவேற்ற வந்தவர்கள். கந்தா கடம்பா கோவிலுக்குள் இன்னும் இருக்கிறாயா? வெளியே வந்து உன் கண்திறந்து பாரையா.

 3. God created this world and given us every thing to live on peacefully. The administrators of temples are taking upper hand and think that they above God. We all have got problems and living in a cruel world and need peace in our mind that is why we all go to temples to cry and complain to God about our problems, It is injustice preventing those women from going into temple.
  Giving preference to politicians, ministers, and non hindus, if they have the rights what about those poor ladies. It is not justice.

 4. ஹிந்துக்கோவிலில் ஹிந்துக்களை வழிபட மறுத்து அட்டூழியம் செய்யும் அவலம் ஈழத்தில் அரங்கேறியுள்ளது. இதனை வெளி உலகிற்கு தெரியப்படுத்திய தமிழ் ஹிந்து தளத்திற்கு நன்றி. நடக்கும் இழிவுகள் ஹிந்துக்கள் மீது என்றால் அது யாருடைய கவனத்தையும் ஈர்க்காது. தமிழக ஹிந்து இயக்கங்களது கூட்டங்களில் இது போன்ற நிகழ்வுகள் விவாதிக்கப்பட வேண்டும். ஸ்ரீமான் அர்ஜுன் சம்பத் அவர்களது கவனத்துக்கும் ஹிந்து முன்னணியினரின் கவனத்துக்கும் இந்த நிகழ்வு பகிரப்பட வேண்டும்.

 5. ”நமது நிருபருக்குத்” தமிழ் சரியாக எழுத வரவில்லையே!

  அது கிடக்க கருத்துப்பிழையுமிருக்கிறதே ?

  //ஏழை ஏதிளிகலான இந்துக்களை பணக்கார நிர்வாகத்தவர்கள் இப்படியாக நடத்துவதனை உலகு எங்கணும் வாழும்?/

  அப்படியென்றால், பணக்கார இந்துப்பெண்களை உள்ளே விட்டார்கள் என்று வருகிறதே? திரையில் தோன்றும் பெண்கள் ஏழைகள் போலத்தெரியவில்லை மன்னிக்கவும்

  செய்தியில் எங்கேனும் ஏன் பெண்களை உள்ளே விட வில்லை என்பது குறிப்பிடப்படவில்லை. முன்பு விட்டார்கள்; இப்போது திடீரென எடுத்த முடிவால் விட வில்லை என நினைக்கிறேன். ஏனென்றால் இக்கோயில் பழங்காலத்துக்கோயில் பெண்களை விடாமல் செய்வது என்பது ஒரு பாரம்பரியம் இல்லை. அல்லவா?

  இஃதொரு அரசியல் முடிவென செய்தியைக் கோர்த்துப்பார்த்தால் புலனாகிறது. இன்றைய இலங்கை அரசு, விடுதலைப்புலிகள் என்பவர்கள் வரலாற்றில் வாழ்ந்தார்கள்; தனிநாடு கேட்டு பெரும் கொரில்லாப் போர் நடாத்தினார்கள் என்ற நினைப்பே எவருக்கும் இருக்கக்கூடாதென்று செயல்படுகிறது அவர்கள் அப்படிச்செய்யக்கூடாதென்று கருத்துகொள்ள நமக்கு உரிமையில்லை இதனால், சில வாரங்களுக்கு முன், விடுதலைப்புலிகள் சார்பாக பேசிய ஒரு தமிழ் பெண் அமைச்சர் பதவி விலக்கப்பட்டார் விடுதலைப்புலிகள் இன்னும் உள்ளுறை மறை நிழலாக இலங்கையில் இருப்பதாக அரசு பயப்படுகிறது அதை உறுதிப்படுத்தும் வண்ணம் அவ்வமைப்புக்கு உலகளாவிய ஓரமைப்பும் ஐரோப்பிய நாடொன்றில் செயல்படுகிறது எனபது தெரிந்த உண்மை

  இதைப்பின்புலனாக வைத்தே இச்செய்தியை வாசிக்க வேண்டும் இப்பெண்களில் உறவினர்கள் (கணவன்மார், தந்தைமார், பிள்ளைகள் கடந்த போரில் காணாமல் போய்விட்டனர் என்றால் அனைவரும் சிவிலியன்களாக என்று அரசு பொருளெடுக்காது அதற்காக தீச்சட்டி, தேங்காய் உடைத்தல் போன்ற செய்லகளைச் செய்ய விரும்பும் போது அரசு அதனை ஓய்ந்த ஒரு போரை நினைவில் வைத்துக்கொண்டிருக்கும் செயலாகப் பார்க்கிறது அரசுக்குப் பயந்து, அல்லது அரசு நினைப்பை உணர்ந்துதான் அனைத்து அமைப்புக்களும் – கோயிலாயிருந்தாலென்ன? மசூதி, தேவாலாயமாயிருந்தாலென்ன? – செயல்படும் மதம் அரசோடு உரசும்போது அரசின் கையோ ஓங்கும்.

  இங்கே அப்படி இக்கோயிலின் நிர்வாகிகள் அரசின் கொள்கையையுணர்ந்து செயல்பட்டதாகவே நான் நினைக்கிறேன்.

  //உலகு எங்கணும் வாழும்?//

  உலகமெங்கும் காணலாம் வரலாறு முழுக்க இப்படி அரசிடன் மோதி மதம் தோற்றதாக செய்திகள் விரவிக்கிடக்கின்றன‌ !

  உலகமெங்கும் காணலாம் வரலாறு முழுக்க இப்படி ஆட்சியாளரிடம் மோதி மதங்கள் தோற்றதாக செய்திகள் விரவிக்கிடக்கின்றன மதம் வெல்லவேண்டுமென்றால், ஆட்சியாளரை விட வலிமை வாய்ந்தோராக இருக்கவேண்டும் கேரளாவில் கத்தோலிக்க குருமார்கள் இருப்பதை போல. 16ம் நூற்றாண்டில் வாடிகன் ஐரோப்பியாவில மன்னரகளை ஆட்சியில் அமர்த்தும் வலிமை பெற்றிருந்ததைப்போல‌

  நல்லூர் கந்தசாமி கோயில், கோயில் மட்டுமே மடம் கூட கிடையாது.

 6. BSV

  உங்களது கருத்தை வாசித்தேன்.அவசரத்தில் எழுதி உள்ளீர்கள் போலுள்ளது.

  // நமது நிருபருக்கு தமிழ் சரியாக எழுத வரவில்லையே // எங்கே சரியாக எழுதவில்லை என்பதை நீங்கள் சுட்டிக் காட்டவில்லை. தவிர, தமிழ் சரியாக எழுத வரவில்லையே என்பதில் தவறு இருப்பதை நீங்கள் கவனிக்கவில்லையா? தமிழில் அல்லது தமிழை சரியாக எழுத வரவில்லையே என்பதுதான் சரியானது. கட்டுரையில் என்ன கூறப்பட்டுள்ளது என்பதை விட்டுவிட்டு முட்டையில் மயிர் பிடுங்க வெளிக்கிட்டால் மற்றவர்களாலும் அதனை செய்யமுடியும் என்பதற்காகவே இதனைக் குறிப்பிட்டேன்.

  //அதுகிடக்க கருத்துப்பிழையுமிருக்கிறதே// எங்கே இருக்கிறது என்பதனை என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. தயவுசெய்து மேலுள்ள கருத்துக்களையும் கட்டுரையையும் ஒளிநாடாவையும் திரும்பவும் வாசிக்கவும், பார்க்கவும். அவசரப்படாமல் வாசிக்கவும்.அப்போது உங்களால் முழுமையாக உணரமுடியும்.

  இதில் சம்பந்தப்பட்ட பெண்கள் மிகவும் ஏழைகள்.தமது குடும்ப உறுப்பினர்களை இழந்து துன்பத்தில் தவிப்பவர்கள். ஈழத்தில் எந்தவொரு ஏழையும் கோவிலுக்குப்போகமுன் குளித்து, தோய்த்து உலர்ந்த நல்ல சேலையையோ வேட்டியையோ அணிந்துதான் போவார்கள். ஏழைக்கோலத்தில் போகமாட்டார்கள். இந்தியாவில் எப்படியோ எனக்குத் தெரியாது. புறத் தோற்றத்தை வைத்து எடைபோடாதீர்கள்.

  அமாம் நீங்கள் சொல்வது போன்று பணக்காரர்களுக்கு கோவிலில் மட்டுமல்ல ஏனைய இடங்களிலும் அனுமதியும் முன்னுரிமையும் கிடைப்பது நாம் காண்பதுதானே.

  இத் தாய்மார்களை ஏன் கோவிலுக்குள் போக அனுமதிக்கவில்லை என்பதற்குரிய காரணத்தை இதுவரை கோவில் நிர்வாகத்தினர் கூறவில்லை.அதனால் கட்டுரையில் காரணம் குறிப்பிடப்படவில்லை. கட்டுரையின் கடைசியில் குறிப்பிட்டவாறு // இது யாழ்ப்பாணத்தில் மீண்டு தலை தூக்கும் சாதி வெறியா அல்லது பணக்காரத் திமிரா? நல்லூர் கந்தனுக்கே வெளிச்சம்.//

  இத் தாய்மார்களின் வேண்டுகோளில் அரசியலை நீங்கள் இணைக்கலாம். அரசியல் இணையாத எதுவுமே நம் வாழ்க்கையில் இல்லைதானே. நாம் அணியும் உடை அருந்தும் உணவு நாளாந்தம் பாவிக்கும் பொருட்கள் அனைத்திலுமே அரசியல் உள்ளதுதானே. ஆனால் இவர்களது போராடத்தை மனித நேயத்துடன் நோக்குங்கள். மனித உரிமை சம்பந்தப் பட்ட விடயங்களை நாளாந்த அரசியலுக்குள் கொண்டுபோகாது அவர்களுக்கான விடிவிற்கு குரல் கொடுங்கள். நொந்து போன இந்து மக்களை மத — அரசு போர் ரீதியில் பார்க்காது உதவ முன்வாருங்கள். அவர்களது கோரிக்கையில் எழுத்து கருத்துப் பிழைகளை பார்க்கும் வன்மப் பார்வையை தவிருங்கள். அவர்களது செத்த வீட்டில் இரக்கப்படா விட்டாலும் விடுதலைப் புலிகளின் போராட்டத்தை இழுத்து திரிபு படுத்தி சிரிக்காதீர்கள்.

 7. BSV

  தெரு ஓரத்தில் கூடாரம் அமைத்து சிலவேளைகளில் அங்கேயே சமைத்து உண்டு தாம் இழந்தவர்களின் புகைப் படங்களுடன் ஐநூறு நாட்களுக்கு மேல் போராடிக்கொண்டிருப்பவர்கள் இப் பெண்கள். ஈழத்து வடக்கு கிழக்கு மாகாணங்களில் இவ் ஆதரவற்ற ஆனாலும் திடம் உறுதி கொண்ட தொடர் போராட்டப் பெண்களை இப்பொழுதும் காணலாம். இந்தியாவில் வாழும் இவ்வாறான ஒத்த திடம் கொண்ட பெண்களின் ஆதரவை இவர்கள் எதிர்பார்க்கின்றார்கள். கிடைக்குமா ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *