அஞ்சலி: நெல் ஜெயராமன்

பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டு எடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய இயற்கை விவசாயி நெல் ஜெயராமன் (வயது 50) காலமானார். அவரது மறைவுக்கு கண்ணீர் அஞ்சலி. நற்கதியடையப் பிரார்த்தனைகள். ஓம் சாந்தி.  சென்னை நகர இந்து முன்னணி தலைவர் இளங்கோ தனது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதிய கீழ்க்கண்ட அஞ்சலிக் குறிப்பை வெளியிடுகிறோம்  – ஆசிரியர் குழு.

மற்றுமொரு இயற்கை விவசாயியை இழந்தோம்.

அபூர்வ நெல் வகைகளை மீட்டெடுத்த ‘நெல்’ ஜெயராமன் அவர்கள், புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இன்று காலை 05:00 மணிக்கு இயற்கை எய்தினார். மன்னிக்கவும், விதையானார்.

இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் அவர்களால் நெல்’ ஜெயராமன் என பெயர் சூட்டப்பட்ட ஜெயராமன் அவர்கள் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அடுத்த கட்டிமேடு கிராமத்தில் ஏழை விவசாயக் குடும்பத்தில் பிறந்து, ஒன்பதாம் வகுப்பு வரை மட்டுமே கல்வி பயின்று, திருத்துறைப்பூண்டியில் அச்சகத் தொழிலாளியாக வேலை செய்தார்.

ஆயிரம் ஆண்டுகள் பழமையும், பாரம்பரியமும் கொண்ட பத்தாயிரத்திற்கும் அதிகமான நெல் வகைகள், நம் முன்னோர்களிடம் புழக்கத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது. காலனி ஆதிக்க காலம் தொடங்கியதில் இருந்து, நமது பாரம்பரிய நெல் வகைகள் படிப்படியாக காணாமல் போனது.

குறிப்பாக கடந்த ஐம்பது ஆண்டுகளில் தீவிரமாக நடைமுறைப்படுத்தப்பட்ட பசுமைப் புரட்சியால்தான், பாரம்பரிய நெல் ரகங்கள் பெருமளவு அழிந்ததாக சூழலியல் ஆய்வுகள் நமது செவிகளில் அரைகிறது.

இத்தகைய அபாய சூழலில்தான், இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் இயக்கத்தில் இணைந்திருந்த ‘நெல்’ ஜெயராமன் அவர்கள், பாரம்பரிய நெல் வகைகளை மீட்டெடுக்கும் களப்பணியைத் தொடங்கினார்.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அடுத்த கட்டிமேடு கிராமத்தில் ஏழை விவசாயக் குடும்பத்தில் பிறந்த நெல் ஜெயராமன் அவர்கள், ஒன்பதாம் வகுப்பு வரை மட்டுமே கல்வி பயின்று, திருத்துறைப்பூண்டியில் அச்சகத் தொழிலாளியாக வேலை செய்தார்.

நஞ்சில்லா உணவை முன்னிறுத்தி 2003ஆம் ஆண்டில், பூம்புகார் முதல் கல்லணை வரை ஒரு மாத காலம் நம்மாழ்வார் நடத்திய விழிப்புணர்வு நடைபயணத்தில் ஜெயராமன் பங்கேற்றார்.

பாரம்பரிய நெல் இரகங்களைத்தேடி, அவற்றை மீட்டெடுக்கும் நெடும் பயணத்தை நெல் ஜெயராமன் தொடங்கினார்.

அமெரிக்காவில் வசிக்கும் நரசிம்மன் என்பவர் வழங்கிய ஐந்து ஏக்கர் நிலத்தில், நெல் ஜெயராமனால் உருவாக்கப்பட்ட இந்த பாரம்பரிய நெல் மையம், இயற்கை வேளாண் ஆர்வலர்களுக்கு வழிகாட்டும் மிகச் சிறந்த ஆய்வு மையமாக திகழ்கிறது.

யானைக்கவுனி, கருங்குருனை, உள்ளிட்ட150க்கும் மேற்பட்ட பண்டையக்காலத்தின் பாரம்பரிய நெல் வகைகளை கண்டறிந்து அதனை தனது பன்னையில் விளைவித்தார்.

ஆதிரெங்கத்தில் ஆண்டுதோறும் மே மாதத்தின் இறுதி வாரத்தில், பாரம்பரிய நெல் திருவிழாவை ஜெயராமன் கடந்த 2006 முதல் நடத்துகிறார்.

இதில் தமிழகம் மட்டுமின்றி, நாட்டின் பிற மாநிலங்களிலிருந்தும் ஏராளமான விவசாயிகள் பங்கேற்கின்றனர். இதில் பங்கேற்கும் ஒவ்வொரு விவசாயிக்கும் இரண்டு கிலோ பாரம்பரிய நெல் விதைகளை இலவசமாக வழங்குவார் ஜெயராமன். அதை அவர்கள் தங்கள் வயல்களில் விளைவித்து, அவரவர் பகுதிகளில் அவற்றை பரவச்செய்ய வேண்டும். மீண்டும் அடுத்த ஆண்டு நெல் திருவிழாவுக்கு வரும்போது நான்கு கிலோ விதையை திரும்ப ஒப்படைக்க வேண்டும். இதன் மூலம் நெல் திருவிழாவில் பங்கேற்கும் விவசாயிகளால், பாரம்பரிய நெல் ரகங்கள், தற்போது தமிழகத்திலும், பிற மாநிலங்களிலும் பரவலாக பயிர் செய்யப்படுகிறது.

நெல் திருவிழாவில் உலகின் பல நாடுகளிலிருந்தும் பல்வேறு விவசாய ஆய்வாளர்களைப் பங்கேற்கச் செய்து அவர்கள் மூலம் விவசாயிகள், இயற்கை ஆர்வலர்கள், கல்லூரி மாணவ ,மாணவியர்களுக்கு போதிய பயிற்சி அளித்து விவசாய விழிப்புணர்வையும் ஏற்படுத்தினார் ஜெயராமன்.

இலட்சக்கணக்கான விவசாயிகளை இயற்கை சாகுபடி முறையில் விவசாயத்தில் ஈடுபட வைத்து, உற்பத்தியை பெருக்கி அதனை சந்தைப்படுத்தியதன் மூலம், உலக விவசாயிகளின் பார்வையை காவிரி டெல்டா பக்கம் திரும்பச் செய்தார் ஜெயராமன்.

இந்தியாவில் மட்டுமின்றி, உலகின் பல நாடுகளிலும் நெல் திருவிழா நடத்தும் பேரியக்கத்தையும் உருவாக்கினார் நெல் ஜெயராமன்.

தமிழகத்தின் அத்தனை திசைகளிலும் கடந்த பதினைந்து ஆண்டுகளாக பயணம் செய்து, 169 அபூர்வ நெல் வகைகளை மீட்டெடுத்தார் ‘நெல்’ ஜெயராமன்.

நெல் ஜெயராமன் அவர்களைப் பாராட்டி ஜனாதிபதி விருது, தமிழக அரசின் விருது, தேசிய அடிப்படை நிலை கண்டுபிடிப்பு – பாரம்பரிய அறிவுக்கான விருதையும், SRISTI அமைப்பின் இளம் காந்தியத் தொழில்நுட்பக் கண்டறிதலுக்கான SRISTI சம்மான் விருதையும் மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்ப அமைச்சகம் வழங்கி சிறப்பித்துள்ளது.

கோவை வேளாண் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல பல்கலைக்கழகம் மற்றும் அமைப்புகள், ஜெயராமன் அவர்களுக்கு விருதுகளை வழங்கி சிறப்பித்துள்ளது.

கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கடுமையான புற்றுநோய் தாக்குதலுலில் ஆட்பட்ட ஜெயராமன் அவர்கள் தீவிர சிகிச்சைப் பெற்று வந்த நிலையிலும், தனது உயிரினும் மேலான விவசாய விழிப்புணர்வு பயணத்தை துளியும் கைவிடாமல், தன்னம்பிக்கையுடன் தொடர்ந்தார்.

இந்நிலையில், நோயின் தக்கத்தை எதிர்கொள்ள முடியாமல் உயிர்காக்க ஜெயராமன் மருத்துவமனையின் படுக்கையில் போராடினார். அவருக்கு உதவியாக அவரது பதினோரு வயதேயான ஒரே மகனும், அவரது மனைவியும், உரவினர்களும் இருந்தனர்.

நோயின் கொடியக் கரங்களிலிருந்து மீளமுடியாத நிலையில் இன்று நெல் ஜெயராமன் அவர்கள் இயற்கை எய்தினார். மன்னிக்கவும், விதையானார்.

2 Replies to “அஞ்சலி: நெல் ஜெயராமன்”

  1. இது மிகவும் வருத்தம் தரும் செய்தி.இந்தியப் பாரம்பரிய நெல்வகைகள் அழிந்துபோனதற்கு காலனி அரசு (மட்டும்) காரணமல்ல. நமது இந்திய அரசே முக்கிய காரணம். விஞ்ஞானம், பசுமைப் புரட்சி என்ற பெயரில் Hybrid ரகங்களைப் புகுத்தி பாரம்பரிய வகைகளை அழித்தனர். இதில் ரசாயனக் கெம்பெனிகளும், அவற்றின் கைக்கூலிகளாகச் செயல்பட்ட பட்டதாரி வர்க்கமும், அரசு அலுவலர் படையுமே காரணம். 50களில்கூட சிற்றூர்களிலும் சாதாரண அரிசிக் கடைகளில் கூட கிச்சடிசம்பா, மணவாரி, துய்யமல்லி, குதிரைச்சம்பா, கோணச்சம்பா, ஒண்ணரைச்சம்பா, மிளகுச்சம்பா போன்ற இருபதுவகை அரிசிகளை நான் பார்த்து வாங்கியிருக்கிறேன்.
    காலனி ஆட்சியின்போது, Sir Albert Howard (1873-1947) மத்தியப் பிரதேசத்தில் ரெய்ப்பூர் பகுதியில் மட்டும் 1000க்கும் மேற்பட்ட நெல் ரகங்களைப் பார்த்து எழுதியிருக்கிறார்.[An Agricultural Testament]. அவற்றின் தனித்தன்மைகளை ஆராய்ந்ததுடன், இந்திய விவசாயிகள் மரபுவழியில் பின்பற்றிய நடைமுறைகளையும் ஆராய்ந்து, அவற்றின் அடிப்படை விஞ்ஞான அறிவை வியந்து போற்றி அதை இங்கிலாந்திலும் பரப்பினார். இன்று Organic farming என்ற பெயரில் பிரபலமாகிவரும் இயற்கை விவசாய முறைக்கு இதுவே அடிப்படையாக அமைந்தது. ஆதியில் இது இந்திய விவசாயிகளின் பாரம்பரிய முறைதான்.
    இன்று உரம், பூச்சிக்கொல்லி, களைக்கொல்லி ரசாயனம், விவசாயப் பொருட்களின் உரு மாற்றம் (agricultural processing) ஆகிய துறைகளில் பல்லாயிரக்கணக்கான ரசாயனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இது தவிர விதைக்கம்பெனிகள் வேறு. இவை உலக அளவில் பல நாட்டு அரசைத் தம் பிடியில் வைத்திருக்கின்றன. இந்திய அரசும் (எந்தக் கட்சி ஆட்சியிலிருந்தாலும்) இவற்றின் அடிமையாகத்தான் இருக்கிறது.
    இந்திய பாரம்பரிய நெல்வகைகளின் மரபணுக்கள் விவரம் முழுவதும் மனிலாவிலிருந்து செயல்படும் International Rice Research Institute என்ற அமெரிக்க சுரண்டல் கம்பெனிக்கு கொடுக்கப்பட்டு (விற்கப்பட்டு?) விட்டது. இதைச் செய்தவர்கள் விஞ்ஞானி என்ற போர்வையில் வளையவரும் இந்தியர்கள்தான். இதற்கு உடந்தையாக இருந்தது அன்றைய பிரதமர் இந்திரா காந்தி. DR.R.H.Richharia என்ற விஞ்ஞானி பல ஆண்டுகள் பாடுபட்டு 19,000 பாரம்பரிய இந்திய நெல் ரகங்களின் விவரத்தைச் சேகரித்து வைத்திருந்தார். இதுவும் நமக்குக் கிடைக்காமல் செய்தவர் இந்திரா காந்திதான்.
    இவ்வாறு, நமது அரசினரின் அநியாயச் செய்கைகள். ரசாயனக் கம்பெனிகளின் அடாவடித்தனம், அதிகாரி வர்கத்தினரின் ஆணவம் ஆகிய பலமுனைகளில் எதிர்த்துச் செயல்படுவது எளிதல்ல. நமது பாரம்பரிய நெல்வகைகள் அழிவதுடன், விதைகளைச் சேகரித்து வைக்கும் நமது விவசாயிகளின் பாரம்பரிய உரிமையும் பறிபோகிறது. இதையல்லாம் எதித்து அகில இந்திய அளவில் டாக்டர் வந்தனா சிவா போன்றோர் பாடுபட்டு வருகின்றனர். இந்த முயற்சியில் தமிழ்நாட்டில் மக்களிடையேயும் விவசாயிகளிடையேயும் விழிப்புணர்வு பெருக அரும்பாடுபட்ட டாக்டர் நம்மாழ்வாரின் பணி மகத்தானது. அவரைப் பின்பற்றிச் செயல்பட்ட நெல் ஜெயராமன் இவ்வளவு சீக்கிரம் இயற்கை எய்தியது தாங்கமுடியாத சோகமாக இருக்கிறது. அன்னாருக்கு நமது அஞ்சலி. அவர்கள் ஆத்மா சாந்தியடைவதாக.

  2. நெல் ஜெயராமன் இறந்த பிறகுதான் அவரைப்பற்றி எழுதுகின்றோம்.பாராட்டுகின்றோம். வருந்தத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *