நீட் தேர்வு மையம் ராஜஸ்தானில் ஒதுக்கப்பட்டதா? தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கண்டறியப்பட்டதென்ன?

2018 மே மாதத்தில் தமிழக ஊடகங்கள் போர்க்கால அடிப்படையில் நீட் தேர்வெழுதும் தமிழக மாணவர்கள் வஞ்சிக்கப்பட்டதாக தேர்வுக்கு வெகு சில நாட்கள் மட்டுமே இருக்கும் போது அறை கூவல் விடுத்தன.

ராஜஸ்தான், மணிபூர், அஸ்ஸாம் போன்ற தொலை தூர மாநிலங்களில் மையம் ஒதுக்கப்பட்டதாகவும் அதனால் பொருளாதார ரீதியாகவும் மொழி, உணவு, பயணக் களைப்பு உட்பட்ட பல காரணங்களாலும் மாணவர்களூ பெற்றோரும் பாதிக்கபட உள்ளதாகவும் இதனால் மாணவர்களால் முழுத்திறனை வெளிப்படுத்த இயலாமல் போகும் எனவும் குற்றச் சாட்டுகள் வைக்கப்பட்டன.

இதன் பின்னணியில் துணைக் குற்றச்சாட்டுகளாக கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய அண்டை மாநிலங்களில் மையம் ஒதுக்கப்பட்டதும் பெரிய பிரச்சனையாக முன்வைக்கப்பட்டது.

மேலும், தமிழகத்தில் மாணவர்கள் கேட்ட மையங்கள் ஒதுக்கப்படவில்லை எனவும், மையங்களின் எண்ணிக்கை விண்ணப்ப படிவத்தில் கொடுக்கப்பட்டிருந்ததை விட குறைக்கப்பட்டதாகவும் பங்கெடுக்கும் மாணவர்களின் எண்ணிக்கைக்கேற்ப மையங்களின் எண்ணிக்கை அமையவில்லை எனவும் குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன.

இது குறித்து தகவல்களை திரட்ட தகவல் அறிவும் உரிமைச் சட்டத்தின் கீழ் விண்ணப்பித்தோம்.

கேட்கப்பட்ட பல கேள்விகளுக்கு , ‘இதற்கு ஆவணப்படுத்தப்பட்ட தகவல் இல்லை’ என்ற பதில் தரப்பட்டது ஏமாற்றமாக இருந்தது. எனினும் மிக முக்கிய குற்றச்சாட்டுகள் சிலவற்றிற்கு விடை கிடைத்தது. அவற்றைப் பார்ப்போம்.

கேள்வி எண் 7:

மாணவர்கள் விரும்பித் தேர்ந்தெடுத்திருந்த, அந்தந்த மாநிலங்களிலேயே இருந்த மையங்களில் இடம் ஒதுக்காத்தற்கு காரணம் என்ன? விண்ணப்ப படிவத்தில் கொடுக்கப்பட்டிருந்த தேர்வு மையங்கள் எவையேனும் பின்னர் நீக்கப்பட்டனவா? ஆம் எனில் அதற்கான காரணங்கள் என்ன?

இதற்கான பதிலில் தேர்வு மையங்கள் இளநிலை நீட் தேர்வு 2018 அறிவிப்பில் அத்தியாயம் 2 இல் விதிமுறை 4-இல் குறிப்பிடப்பட்டிருந்தபடியே ஓதுக்கப்பட்டதாகவும், தேர்வு மையங்கள் முன்னரே வடிவமைக்கப்பட்ட கணினிச் செயலியின் மூலமே ஒதுக்கப்பட்டதாகவும் இதில் மனிதர்களின் தலையீடு எதுவும் இல்லை எனவும் சொல்லப்பட்டுள்ளது.

அத்தியாயம் 2 – விதிமுறை 4 சொல்வது என்ன?

(அ) தேர்வு மையங்களின் பட்டியல் இணைப்பு 2 இல் கொடுக்கப்பட்டுள்ளது.

(ஆ) தேர்வெழுதும் அனைத்து மாணவர்களும் (இந்திய மாணவர்கள், வெளி நாட்டில் வாழும் இந்திய மாணாவர்கள், வெளி நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் உடபட அனைவரும் ) இணைப்பு 2-இல் கொடுக்கப்பட்டுள்ள நகரங்களின் பட்டியலில் இருந்து மூன்று நகரங்களாத் தங்கள் விருப்பத்தின் படி தேர்ந்தெடுத்து குறிப்பிட வேண்டும்.

(இ) மாணவர்கள் தாங்கள் வாழும் மாநிலங்களில் உள்ள நகரங்கள் அல்லது அருகாமையிலுள்ள நகரங்களை மட்டுமே தேர்ந்தெடுக்க வேண்டும். வேறு மாநிலங்களில் உள்ள தொலைதூர நகரங்களைத் தேர்ந்தெடுக்கக் கூடாது. இந்த விதியின் படி அல்லாமல் மாணவர்கள் வேறு நகரங்களைத் தேர்ந்தெடுத்திருந்தால் சி.பி.எஸ்.சி. மாணவர்கள் தேர்ந்தெடுத்திராத ஒரு நகரத்தில் தேர்வு மையம் ஒதுக்கக் கூடும் அல்லது அந்த மாணவரின் விண்ணப்பத்தை நிராகரிக்கக் கூடும்.

(ஈ) ஒரு குறிப்பிட்ட நகரத்தை தேர்ந்தெடுத்த மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தால் அந்த நகரத்தில் தேர்வு மையங்கள் அமைக்காமல் இருக்க சி.பி.எ.ஸ்.சி. க்கு உரிமை உள்ளது.

(உ) ஒரு குறிப்பிட்ட பிராந்திய மொழியில் (ஆங்கிலம், ஹிந்தி நீங்கலாக ) தேர்வெழுத விண்ணப்பித்திருக்கும் மாணவர்களின் எண்ணிக்கை ஒரு நகரத்தில் குறைவாக இருந்தால் அப்போதும் மாணவர் தேர்ந்தெடுத்த நகரம் அல்லாத வேறு நகரத்தில் மையம் ஒதுக்கப்படலாம்.

(ஊ) ஜம்மு-காஷ்மீர், மேகாலயா மற்றும் அஸ்ஸாம் மாநிலங்களில் 12-ஆம் வகுப்பு தேர்வில் தேர்வாகி நீட் 2018 எழுதும் மாணவர்கள், தங்களிடம் ஆதார் அட்டை இல்லையெனில், வேறு ஏதாவது அரசு அடையாள அட்டையக் கொண்டு தேர்வெழுத விண்ணப்பத்தால் அவர்கள் தத்தம் மாநிலங்களில் உள்ள நகரங்களையே தேர்ந்தெடுக்க வேண்டும்.

(எ) மாணவர் விருப்பத் தேர்வாக தேர்ந்தெடுத்த நகரங்களில் ஒன்றிலேயே மையம் ஒதுக்க அணைத்து முயற்சிகள் எடுக்கப்படும். எனினும், வேறு நகரங்களில் மையம் ஒதுக்க நிர்வாகத்திற்கு முழு உரிமை உள்ளத

(ஏ) மையங்கள் ஓதுக்கீடு மனிதர்களில் தலையீடின்றி கணினியால் செய்யப்படும். எந்தச் சூழ்நிலையிலும் மாணவர்கள் தங்கள் விண்ணப்பத்தில் தேர்ந்தெடுத்துள்ள நகரங்களைப் பின்னர் மாற்ற முடியாது. சி.பி.எஸ்.சி.யால் மையம் ஒதுக்கப்பட்ட பிறகு, எந்தச் சூழ்நிலையிலும் அது மாற்றப்படாது.

அடுத்ததாக முக்கிய குற்றச்சாட்டான தொலைதூர நகரங்களில் மையம் ஒதுக்கப்பட்டதாகச் சொல்வதில் உள்ள உண்மை என்ன என்று பார்க்கலாம். மணிப்பூர் மற்றும் அஸ்ஸாமில் தமிழக மாணவர்களுக்கு மையம் ஒதுக்கியதாக சில தொலைக்காட்சி விவாதங்கள் அல்லது சமூக ஊடகச் செய்திகளில் சொல்லப்பட்டாலும்

அது குறித்து உறுதியானத் தகவல்கள் எதுவும் வெளிவரவில்லை. எந்தெந்த மாணவர்கள், அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட மையங்கள் எவை என்பது குறித்த தகவல்கள் இதுவரை யாராலும் பகிரப்படவில்லை. ராஜஸ்தான் மாநிலத்தில் ஒரே ஒரு தமிழக மாணவருக்கு மையம் ஒதுக்கப்பட்ட செய்தி மட்டும் மாணவரின் பெயர், ஊர் மற்றும் புகைப்படத்துடன் முன்னணி செய்தித்தாள்களில் வந்தது.

இதற்கு சி.பி.எஸ்.சி. பத்திரிக்கையாளர்களுக்கு அளித்த 4-5-2018 தேதியிட்ட செய்தி அறிக்கையில், அந்த மாணவர் தன்னுடைய ஆன்லைன் விண்ணப்பத்தில் ராஜஸ்தானில் உள்ள் உதய்ப்பூரை விருப்ப மையமாக அவரே தேர்ந்தெடுத்திருந்ததாக விளக்கம் அளித்துள்ளது.

மேலும் அந்தச் செய்தி அறிக்கையில், தமிழ் மொழி வாயிலாக நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் பாதிக்கப்பட்டதாக வந்த செய்தியிலும் உண்மை இல்லை என்று சொல்கிறது. உண்மையில், தமிழ் மொழி மூலமாக தேர்வெழுத விண்ணப்பித்திருந்த மாணவர்கள் அனைவருக்கும் தமிழ் நாட்டிலேயே மையங்கள் ஓதுக்கப்பட்டது என்றும், அவர்கள் தமிழ் மொழியில் அமைக்கப்பட்ட கேள்வித்தாள்களைக் கொண்டே தேர்வெழுதினர் என்றும் கூறியுள்ளது. இந்தியா முழுவதும் அமைந்திருந்த 2255 தேர்வு மையங்களில் நான்கில் மட்டும் மாணவர்களுக்கு அவர்கள் தேர்ந்தெடுத்திருந்த மொழியில் கேள்வித்தாள் கொடுக்கப்படவில்லை என்ற தகவல் கிடைத்தவுடன் சி.பி.எஸ்.சி. உடனடியாக அவர்களுக்கு சரியான கேள்வித்தாள் கிடைக்கச் செய்தது என்றும் அந்த அறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளது.

தமிழ் நாட்டில் குறைவான மையங்கள் அமைக்கப்பட்டனவா?

தமிழ் நாடு ஒரு வளர்ச்சி அடைந்த கல்வி அதிகம் பரவியுள்ள மாநிலம் என்றும் அந்த அடிப்படையில் தமிழ் நாட்டில் இன்னும் அதிக மையங்களை அமைத்திருக்க வேண்டும் என்று ஒரு குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. மேலும் ராஜஸ்தான், உத்திரப்பிரதேசம் போன்றவை ஒப்பீட்டளவில் பின் தங்கிய மாநிலங்கள் எனவும்

அங்கு தமிழகத்தைவிட அதிக மையங்கள் அமைக்கவேண்டிய காரணம் என்ன என்ற கேள்வியும் முன்வைக்கப்பட்டது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்ட கேள்விகள் சிலவற்றுக்கு பொதுவான பதிலாக சி.பி.எஸ்.இ. தனது 4-6-2018 தேதியிட்ட செய்தியாளர்களுக்கு கொடுக்கப்பட்ட அறிக்கையை சுட்டிக்காட்டுகிறது.

அந்தச் செய்தி அறிக்கையில் கொடுக்கப்பட்டுள்ள புள்ளியியல் தரவுகளின் மூலம் கீழ்வரும் முடிவுகளை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது.

  1. அதிக தேர்வு மையங்கள் அமைந்த மாநிலங்களின் வரிசையில் தமிழகம் 170 மையங்களுடன் ஐந்தாவது இடத்தில் உள்ளது. 345 மையங்களுடன் மஹாராஷ்ட்ரா முதலிடத்திலும், 226 மையங்களுடன் கேரளா இரண்டாவது இடத்திலும், 187 மையங்களுடன் கர்நாடகா மூன்றாவது இடத்திலும், 171 மையங்களுடன் உத்தரப் பிரதேசம் நான்காவது இடத்திலும் உள்ளன.
  2. தேர்வெழுதிய மாணவர்களின் எண்ணிக்கையில் மாணவர்களின் எண்ணிக்கை முறையே, மஹாராஷ்ட்ரா – 183961 , கேரளா – 120792, கர்நாடகா – 96377, உத்தரப் பிரதேசம் – 114306 மற்றும் தமிழ் நாடு – 107288 ஆகும். கர்நாடகா தவிர ஏனைய மாநிலங்களில் மையங்களின் எண்ணிக்கை தேர்வெழுதிய மாணவர்களின் எண்ணிக்கைக்கு நேர்விகிதத்திலேயே அமைந்திருப்பதைக் காணலாம்.
  3. சராசரியாக எத்தனை மாணவர்களுக்கு ஒரு மையமும் ஒரு மையமும் ஒதுக்கப்பட்டுள்ளது என்று பார்த்தால், 615 மாணவர்களுக்கு ஒரு மையம என்ற விகிதத்துடன் கர்நாடகா முதலிடத்திலும் 668 மாணவர்களுக்கு ஒரு மையம் என்ற விகிதத்துடன் உத்தரப் பிரதேசம் கடைசி இடத்திலும் உள்ளன. தமிழ் நாடு 631 மாணவர்களுக்கு ஒரு மையம் என்ற விகிதத்துடன் நான்காம் இடத்தில் உள்ளது.
  4. ராஜஸ்தானில், தேர்வெழுதிய மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, தமிழகத்தை விட குறைவான மையங்களே அமைக்கப்பட்டுள்ளதோடு, 665 மாணவருக்கு ஒரு மையமே அமைக்கப்பட்டுள்ளது- இது தமிழகத்தின் 631 மாணவர்களுக்கு ஒரு மையம் என்ற விகிதத்தை விடபின் தங்கி இருக்கிறது என்பதையும் கவனிக்கலாம்.

எனவே தமிழகத்திற்கு குறைவான மையங்கள் ஓதுக்கப்பட்டது என்று சொல்வதும் உண்மை இல்லை எனத் தெரிகிறது.

உசாத்துணைகள்.

  1. Information bulleti – இளநிலை நீட் தேர்வு 2018 தகவல் அறிக்கை.
  2. நீட் 2018 தேர்வு நடத்தப்பட்ட விதம் குறித்த 4-5-2018 தேதியிட்ட செய்தி அறிக்கை
  3. நீட் 2018 புள்ளியல் தரவு

2 Replies to “நீட் தேர்வு மையம் ராஜஸ்தானில் ஒதுக்கப்பட்டதா? தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கண்டறியப்பட்டதென்ன?”

  1. Is it possible for a pupil who is studying in Schools in rural areas to appear for the NEET examination and get through.The chances are very dim/almost Nil.

  2. அனைத்து மாநிலஙகளும் CBSE பாடத்திடடத்தை பின்பற்றி தங்களது மாநில பாடத்திட்டத்தை நவீனப்படுத்தி உயா் கல்வி நிறுவனங்களில் வாயப்புக்களை பெற்று முன்னேற்றம் பெற்று வந்த நிலையில் சமச்சீர்கல்வி என்ற ஒரு பழைய கஞ்சியை தமிழக மாணவர்களுக்கு முத்தமிழ் அறிஞா் மு.கருணாநிதி அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது.சமச்சீா்கல்விதான் தமிழக மாணவர்களுக்கு பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தியது.திருவாரூரில் உள்ள மத்திய பல்கலைக் கழகத்தில் தமிழக மாணவர்கள் எண்ணி்க்கை ஒற்றைப்படை எண்ணில்தான் என்பதை நினைக்கும் போது நெஞ்சில் இரத்தம் வடிகின்றது. தமிழக மாணவர்கள் என்று பிற மாநில மாணவர்களோடு போட்டி போடும் தகுதியைப் பெறுவார்கள் ? அதற்கு விரைந்து செயல்பட என்ன செய்யலாம் ? தமிழக அரசு கல்விக்கென ஒரு தொலைக்காட்சி சேனலை துவங்கவிருப்பதாக அறிவிப்பு வந்துள்ளது.அது ஒரு தீர்வாக அமையலாம். அதுவரை ஏற்பட்டுள்ள இழப்பு ….. இழப்புதான் .பாவம் தமிழக மாணவர்கள்.குண்டுசட்டிக்குள் குதிரை ஒட்ட வைத்து விட்டார்கள்.கொடூமை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *