தனேஜாவின் பேச்சைக் கேட்டுத் தன்னுடைய கப்பல்களை கோவா நோக்கித் திருப்பிய போர்ச்சுகீசிய தளபதி அல்புகர்க்கி, தனேஜாவிற்கு கீழ்க்கண்ட பதிலை அவர் அளித்ததாக அவரது செயலாளர் காஸ்பர் கரேர்ரா சொல்கிறார்:
“தனேஜா, நீங்கள் சொல்வது உண்மையென நான் நம்புகிறேன். எனது மேன்மை தங்கிய அரசரின் அனுமதியின்பேரில் நான் செல்லவேண்டிய இன்னொரு பகுதிக்குச் செல்லாமல் உங்களுக்கு உதவிசெய்யத் துணிகிறேன். என்னை நீங்கள் கோவாவிற்கு வழிகாட்டி அழைத்துச் சென்றால் எனது அரசர் உமக்கு ஏராளமான பொன்னும், பொருளும் பரிசளிப்பார் என்று உறுதியளிக்கிறேன். அதனுடன் நீங்கள் ஆள்வதற்குத் தேவையான சரியான நிலப்பகுதியும் பரிசாக அளிக்கப்படும் எனவும் கூறுகிறேன்.”
அதனைத் தொடர்ந்து கோவாவின்மீது படையெடுத்துவரும் அல்புகர்க்கிகிற்கின் படைகளைக் கண்டு, தனேஜா சொன்னது போல, கோவா அமைதியாக போர்ச்சுகீசியர்களிடம் சரணடைந்தது. அதற்கு அடுத்தநாளே கோவாவின் தலைமை அதிகாரியாக இருந்த கிருஷ்ணா என்பவர் அல்புகர்க்கியிடம் சென்று கோவாவின் குடிமக்களுக்கும், பிராமணர்களுக்கும் பாதுகாப்பளிக்க வேண்டும் என வேண்டினார். அதனை ஏற்று அல்புகர்க்கி பொதுமக்களுக்குப் பாதுகாப்பளிக்கும் உறுதிமொழியை அளித்தான். வியாபாரிகள், கோவா குடிமக்கள், முஸ்லிம்கள், பிராமணர்கள் மற்றும் பிறருக்குப் பாதுகாப்பளிப்பதாக அவர் கூறிய உறுதிமொழி, ஹிந்து மற்றும் முஸ்லிம்களிடையே மகிழ்ச்சியைத் தோற்றுவித்தது.
கோவாவில் முஸ்லிம்களை நீக்கிவிட்டு அந்த இடத்தில் போர்ச்சுகீசியர்களை அமர்த்துவது தனேஜாவின் விருப்பமல்லாததால் அவர்களுக்குத் தேவையான பணத்தை அளித்தால் போர்ச்சுகீசியர்கள் தன்னிடம் ஆட்சியை ஒப்படைத்துவிட்டு அங்கிருந்து சென்றுவிடுவார்கள் என நம்புகிறார். ஆனால், அல்புகர்க்கி அங்கிருந்து செல்வதற்குப் பதிலாக கோவாவைச் சுற்றி கோட்டைச் சுவர்களைக் கட்டுவதிலும், மற்ற பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்வதனால் போர்ச்சுகீசியர்கள் கோவாவைவிட்டுச் செல்லப்போவதில்லை என்பதினை உணர்ந்தான்.
கோவாவின் பாதுகாப்புகளை பலப்படுத்தியபின்னர், குடிமக்கள், வியாபாரிகள் என அனைவரும் போர்ச்சுகீசிய அரசரின் பிரதிநிதியான தனக்கு வரிகட்ட வேண்டும் என அறிவுறுத்தும்படி அல்புகர்க்கி தனேஜாவிடம் உத்தரவிட்டான். அதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த தனேஜா, தனது உணர்வுகளை மறைத்துக் கொண்டு, கோவாவாசிகளை அழைத்து இது குறித்துப் பேசுவதாக பதிலளித்தான். எனினும் தனக்கு கோவாவை ஒப்படைக்கவில்லை என்னும் ஏமாற்றம் அவரிடம் தொனித்தது. அல்புகர்க்கியைத் தனிப்பட்ட முறையில் சந்திக்கும் தனேஜா தன்னிடம் கோவாவை ஒப்படைக்குமாறும் அதற்குப் பிரதியுபகாரமாக தேவையான பணம் அளிப்பதாகவும் கூறினார். அந்த நேரத்தில் தனேஜாவின் படையினரை கோட்டைச் சுவர்கள் கட்ட உபயோகித்துக் கொண்டிருந்த அல்புகர்க்கி, அதற்கான பதிலை நேரடியாக தனேஜாவின் தராமல் மழுப்பினார்.
அல்புகர்க்கி தன்னுடைய வேண்டுகோளுக்கு செவிசாய்க்கப் போவதில்லை என்பதை உணர்ந்த தனேஜா, அல்புகர்க்கியின் கப்பல்படை கேப்டன்களிடம் பேசி, அவர்களின் ஆதரவைப்பெற முயன்றார். அந்த அதிகாரிகளிடம் பேசிய அல்புகர்க்கி, தனக்கு ஒவ்வொரு வருடமும் 20,000 பரோடாக்கள் (இந்தியப் பணம்) தருவதாக இருந்தால் கோவாவை ஒப்படைப்பதாகவும், போர்ச்சுகீசிய அரசரின்கீழ் தனேஜாவிற்கு உயர்ந்த பதவியும் வாங்கித் தருவதாகச் சொன்னார்.
தனேஜாவிற்காக தான் செய்த பலகாரியங்களுக்குப் பிரதியுபகாரமாக மர்கோவா பகுதியின் மொத்த வருமானத்தையும் கோவாவிலிருக்கும் போர்ச்சுகீசிய ஆலைக்கு அளித்தால்தான் கோவாவை அவருக்கு ஒப்படைப்பதாக அல்புகர்க்கி கூறியதனைக் கேட்டுக் கோபமடையும் தனேஜா அங்கிருந்து வெளியேறினான். அந்தப் பகுதியிலிருந்த பிற அரசர்களின் துணையோடு போர்ச்சுகீசியர்களை விரட்டும் எண்ணத்துடன் அவன் இருந்தான்.
கோவாவை விட்டு தனேஜா சென்ற மூன்று நாட்களுக்குப் பிறகு, அல்புகர்க்கிகைச் சந்திக்கவரும் சில ஹிந்துக்கள், தனேஜா செலஸ்டே பகுதியில் இருப்பதாகவும், கோவாவைச் சேர்ந்த அனைத்து ஹிந்துக்களும் அவனுடன் சேரப்போவதாகவும் சொல்கிறார்கள். எனினும் இதனை உணர்ந்திருந்த அல்புகர்க்கி, தான் கோவாவைவிட்டுப் போகப்போவதில்லை என்கிற உறுதியான முடிவில் இருந்தான்.
சிறிது நாட்களுக்குப் பிறகு அடில்ஷா கோவாவைத் தாக்குகிறான். எனவே, அல்புகர்க்கி கோவாவிலிருந்து பின்வாங்கிச் சென்று, நவம்பர் 25, 1510-ஆம் வருடம் மீண்டும் கோவாவைப் பிடித்தான். தனக்கு எதிராகச் சதிசெய்த முஸ்லிம்களின்மீது கோபத்துடனிருக்கும் அல்புகர்க்கி, கோவாவிலிருக்கும் அனைத்து முஸ்லிம்களையும் படுகொலைசெய்ய உத்தரவிட்டான்.
அதனைக் குறித்து அல்புகர்க்கியின் மகன் இவ்வாறு எழுதியிருக்கிறான்:
“..…..போர்ச்சுகீசியர்களுக்கு எதிராக முஸ்லிம்கள் செய்த சதிவேலைகளுக்காகவும், துரோகத்திற்காகவும், கோவாவின் எதிர்காலப் பாதுகாப்பிற்காகவும் மிக அவசியமானது என நினைத்த அல்ஃபோன்ஸோ டி அல்புகர்க்கி , தனது கேப்டன்களை அழைத்து, கோவா தீவில் வசிக்கும் அனைத்து முஸ்லிம்களையும் — அவர்கள் ஆண், பெண், குழந்தைகள் என யாராக இருந்தாலும் — கண்ட இடத்திலேயே கொல்லும்படி உத்தரவிட்டான். அந்தத் தீவில் எங்கினும் முஸ்லிம்கள் என்பவர்கள் எவருமே இருக்கக்கூடாது என்பதில் அவன் கண்டிப்பானவனாக இருந்தான். அதன்படி கோவாத் தீவில் இருந்த அத்தனை முஸ்லிம்களும் கொல்லப்பட்டார்கள்.
“அவ்வாறு கொல்லப்பட்ட முஸ்லிம் ஆண், பெண், குழந்தைகளின் எண்ணிக்கை ஆறாயிரத்தையும் தாண்டியது. இதனைத் தொடர்ந்து, அடுத்த நான்கு நாட்கள் கோவாவில் வசித்த முஸ்லிம்களின் ரத்தம் தெருவெங்கும் ஓடியது.”
அந்தக் கொலைகளை நேரில் பார்த்த ஜோவா பர்ரோஸ் என்பவர், “இந்த பயங்கரத்திலிருந்து தப்புவதற்காக பல முஸ்லிம்கள் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக ஆற்றில் குதித்து அக்கரைக்குச் செல்ல முற்பட்டார்கள். ஆனால் அவர்களுக்குத் தேவையான படகுகள் எவையும் கிடைக்காததால் அவர்களில் பலர் ஆற்றில் மூழ்கி இறந்தனர். இந்தப் படுகொலைகள் நிகழ்ந்து கொண்டிருக்கையில், தனேஜா தனது மூவாயிரம் படையினருடன் மீண்டும் கோவாவிற்குத் திரும்பி வந்தான். இந்தச் சம்பவங்களுக்கு முன்னரே தான் வர இயாலாதது குறித்து அல்புகர்க்கியிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டான் தனேஜா.” எனக் கூறியிருக்கிறார்.
கோவாவில் முஸ்லிம்களுக்கு எதிராக நிகழும் கொலைச் சம்பவங்களைக் கண்டு அஞ்சிய கோவா ஹிந்துக்கள், அங்கிருந்து வெளியேறி, அருகாமைப் பகுதிகளில் சென்று தங்கினர். அவர்களைத் தைரியப்படுத்தும் விதமாக அல்புகர்க்கி அவர்களை மீண்டும் கோவாவில் வந்து குடியேறும்படி தண்டோரா அடித்து, “போர்ச்சுகீசியர்கள் முஸ்லிம்களுக்கு எதிரானவர்களேயன்றி உங்களுக்கல்ல. நீங்கள் மீண்டும் உங்கள் முன்னோர்களின் வீடுகளில் தங்கி, உங்கள் நிலங்களில் விவசாயம் செய்து, அரசாங்கத்திற்கு வரிகளைச் செலுத்துமாறு வேண்டுகிறேன்” என அறிவித்தான்.
தனேஜா கோவாப் பகுதி ஹிந்துக்களின் தலைவனாக அறிவிக்கப்பட்டான். எனினும் கோவா ஹிந்துக்கள் தனேஜாவை விரும்பவில்லை எனத் தெரிந்ததால், அவனை நீக்கிய அல்புகர்க்கி, ஒனோர் பகுதி அரசனின் உறவினனான மெல்ராவ் என்பவனை நியமித்தான். பின்னர் சிறிது காலத்திற்குப் பிறகு மெல்ராவ் ஓனோருக்கு அரசனாக ஆனான்.
தனேஜா கோவாவிலிருந்து வெளியேறி விஜயநகரத்திற்குச் சென்றதாகவும், அங்கு அவன் விஷம்வைத்துக் கொல்லப்பட்டதாகவும் தெரிகிறது. அதன் பின்னர் ஒனொரில் வாழ்ந்த தனேஜாவின் மனைவியும் குழந்தைகளும் கோவாவிற்கு வந்து வாழ்ந்ததாகவும், பின்னர் அவர்கள் கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றப்பட்டதாகவும் பாதிரி லியனார்டோ பயஸ் அவரது Promptuario das Diffinicoes Indicas என்கிற புத்தகத்தில் எழுதி வைத்திருத்தான்.
மேற்கண்டவற்றைப் பார்க்கையில், போர்ச்சுகீசியனான அல்புகர்க்கி கோவாப் பகுதி ஹிந்துக்களுடன் நல்லுறவு கொண்டிருந்தான் எனத் தெரிகிறது. மிகச் சமீப காலம்வரை அல்புகர்க்கி இறக்கும் வரை தனது வாக்கிலிருந்து தவறாமல் ஹிந்துக்களையும் அவர்களது மதச்சடங்குகளையும் மதித்து நடந்ததாகவே அறியப்பட்டிருத்தது. எனினும், கோவாவின் அகழ்வாராய்ச்சித் துறைத் தலைவரான டாக்டர் பராக்னாகா பெரெய்ரா சமீபத்தில் வெளியிட்டதொரு ஆவணத்தின்படி அல்புகர்க்கி ஹிந்துக்களை மதித்து நடந்தான் என்பது மிகத் தவறானதொரு எண்ணம் எனத் தெரிகிறது.
ஜனவரி 6, 1515-ஆம் வருடம், அல்புகர்க்கி உயிருடன் இருக்கையில், கொச்சியைச் சேர்ந்த ஆன்ட்ரே கோர்ச்சாலி என்பவர் ட்யூக் கிலியானோ-டி-மெடிசிஸ் என்பவருக்கு எழுதிய கடிதமொன்றில் கோவாவிலிருந்த ஹிந்து ஆலயமொன்றை இடித்த செய்தியை இவ்வாறு கூறுகிறார்:
“பழமையான கோவாவிலும், இந்தியாவின் பிற பகுதிகளிலும் எண்ணவே இயலாத அளவிற்கு ஹிந்து ஆலயங்களும், வழிபாட்டிடங்களும் இருக்கின்றன. அருகாமைத் தீவான திவாரியில் ஒரு புதிய நகரைக் கட்டமைக்கத் தீர்மானித்த போர்ச்சுகீசியர்கள், அங்கிருந்ததொரு மிக அற்புதமான, கலை நயத்துடன் கட்டப்பட்டதொரு பெரிய ஆலயத்தையும், கருங்கற்களால் பெரும் அழகுடன் வடிவமைக்கப்பட்ட சிலைகளையும், அதன் கோபுரத்தையும், சிறிதும் பொருட்படுத்தாமல் இடித்துத் தகர்த்தார்கள். அந்தச் சிலைகளில் ஒன்றேனும் எனது கையில் கிடைத்திருந்தால் அதனை மேன்மை தங்கிய தங்களுக்கு அனுப்பிவைத்து, அதன் சிறப்பினை நீங்களே கண்டு தீர்மானிக்கச் செய்திருப்பேன்.”
[தொடரும்]