கொலைகாரக் கிறிஸ்தவம் – 13

அல்புகர்க்கி கோவா ஹிந்துக்களுக்கு உதவுவதாக வெளிப்படையாகச் சொன்னாலும், உள்ளுக்குள் அவர்களைக் கிறிஸ்தவர்களாக மதமாற்றம் செய்யவேண்டும் என்கிற எண்ணமுடையவராக இருந்தார் என்பதில் சந்தேகமில்லை. போர்ச்சுக்கல் அரசருக்கு டிசம்பர் 20, 1514-ஆம் வருடம் எழுதிய கடிதத்தில் இதனைக் குறித்தான தனது ஆர்வத்தையும், அதற்கென தான் எடுக்கப்போகும் நடவடிக்கைகளையும் விளக்கியிருப்பது தெளிவு.

லுசேனா என்கிற போர்ச்சுக்கீசிய வரலாற்றாசிரியரின் பதிவுப்படி கோவா ஹிந்துக்களைத் தண்டித்து அவர்களது ஆலயங்களைத் தகர்க்கும் செயலினை 1540-ஆம் வருடம் துவங்கியவர்கள் மினுகுவல் வாஸ் என்பவரும் டியாகோ போர்பா என்னும் இருவர்தான். எனினும், அவர்களுக்கு முன்பாகவே கோவா ஹிந்துக்கள் மீதான தாக்குதல்களும், மதம்மாறச்செய்வதற்கான அழுத்தங்களும், அவர்களது வழிபாட்டிடங்களை இடிப்பதற்குமான நடவடிக்கைகளை ஃப்ரான்ஸிஸ்கன்ஸ் என்கிற பிறிவினர் எடுக்கத் துவங்கியிருந்தனர். ஃப்ரயர் அண்டோனியோ என்பவர் போர்ச்சுக்கல் அரசருக்கு விடுத்த கோரிக்கை ஒன்று இப்படிச் சொல்கிறது,

போர்ச்சுக்கீசிய ஹிந்துக்களின் பிரதிநிதியாக உங்களால் நியமிக்கப்பட்ட கிருஷ்ணா என்பவனை அந்தப் பதவியிலிருந்து நீக்கி விரட்டியடித்தால் நீங்கள் கடவுளுக்குப் பெரும் தொண்டு செய்தவராவீர்கள். இந்தக் கிருஷ்ணா ஏசுவின்மீது நம்பிக்கையில்லாமல் ஹிந்துமத நம்பிக்கை கொண்டிருப்பவன் என்றாலும் அவனை மதம்மாறச்செய்வது எளிதாக இருக்கும் என்று நம்புகிறேன். இதனைக் குறித்து நான் அவனிடம் பலமுறை பேசியிருக்கிறேன் என்றாலும், மேன்மை தங்கிய அரசர் அவனிடம் பேசினால், கிறிஸ்தவனாக மதம்மாறுவதனைத் தவிர அவனுக்கு வேறு வழியிருக்காது.

ஹிந்து யோகிக்கள் கோவாவிற்குள் நுழைவதற்குத் தடைவிதிக்க வேண்டுமெனவும் நான் மேன்மைதங்கிய அரசரிடம் வேண்டுகோள் விடுக்கிறேன். ஏனென்றால் அவர்கள் கோவாவிலிருக்கும் ஹிந்துக் கோவில்களுக்குத் தேவையான பூசனைப் பொருட்களையும், மலர்களையும் கொண்டுவந்து அவர்களின் ஆலயங்களில் பிசாசு வழிபாடுகளைத் செய்துகொண்டிருக்கிறார்கள். அவர்கள் ஏற்கனவே மதம்மாறிய கிறிஸ்தவர்களை மீண்டும் பிசாசு வழிபாட்டிற்குள் அழைத்துச் சென்றுவிடுகிறார்கள்.

மேன்மை தங்கிய அரசரே, திவார் என்னும் தீவில் இருந்த, கற்களால் கட்டப்பட்டதொரு ஒரு பெரும் ஹிந்து ஆலயத்தின் பெரும்பகுதியை ஏற்கனவே இடித்துத் தகர்த்துவிட்டோம்.  எனவே நீங்கள் அந்த ஆலயத்தை நமது கிறிஸ்தவ மடத்திற்கு அன்பளிப்பாக அளிக்க வேண்டுகிறேன்.

இந்த திவார் ஆலயம் இதற்கு முன்னர் அன்ரே கோர்சாலி என்பவன் சொன்ன அதே ஆலயமாகத்தான் இருக்க வேண்டும்.

கோவாவையும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் உள்ள ஹிந்துக்கள், பிசாசு சிலைகள் அடங்கிய, ஏசுவின் சிலுவைக்கு எதிரான ஆலயத்தில் தினமும் வழிபாடுகளும், விழாக்களும் எடுத்துவருகிறார்கள். இந்த வழிபாடுகளிலும் விழாக்களிலும் ஹிந்துக்கள் மட்டுமல்லாது சில ஐரோப்பியர்களும் பங்கெடுத்துவருகிறார்கள். இது ஒரு தவறான செயலாகும். இது அவர்களிடையே சிலைவழிபாட்டிற்கு வழிவகுக்கும் ஆபத்து இருக்கிறது.

எனவே இங்கிருக்கும் அத்தனை ஹிந்து ஆலயங்களையும் இடித்துத் தகர்ப்பது, அந்த இடத்தில் சர்ச்சுகள் கட்டுவது, ஆண்டவனான ஏசுவுக்குச் செய்யும் பெரும் சேவையாகும். அவ்வாறு நமது புனிதர்களின் ஆலயங்கள் கோவாவில் கட்டப்பட்டபிறகு தங்களின் வீடு, நிலங்களுடன் வாழ நினைக்கும் அனைவரும் கிறிஸ்தவர்களாகக் கட்டாய மதமாற்றம் செய்யப்படவேண்டும். அதற்கு மறுப்பவர்கள் கோவாவிலிருந்து விரட்டியடிக்கப்படவேண்டும். மேன்மைதங்கிய அரசர் பெருமானே, வாழ்வாதாரத்தைப் பிடுங்கி இங்கிருந்து துரத்தியடிக்கப்படும் நிலைவந்தால், கிறிஸ்தவனாக மதம்மாறுவதனைத் தவிர அவனுக்கு வேறுவழியில்லை.

நவம்பர் 13, 1521-ஆம் வருடம் டியாகோ மாரிஸ் என்பவன் கோவவின் சர்ச்சுகளைக் குறித்து எழுதிய கடிதமொன்றில், “பல இந்திய மண்ணின் மைந்தர்கள் கிறிஸ்தவர்களாக மதம்மாற்றப்பட்டுவிட்டார்கள்,” எனக் குறிப்பிடுகிறான். இவர்களில் எவரும் முஸ்லிம்களாக இருக்கச் சாத்தியமில்லையாதலால் அவ்வாறு மதம்மாற்றப்பட்டவர்கள் அனைவரும் ஹிந்துக்களாகவே இருக்கவேண்டும்.

மதம்மாறச் செய்யப்பட்ட ஹிந்துக்களில் சிலர் மீண்டும் தங்களின் மதநம்பிக்கையைப் பின்தொடர ஆரம்பித்தார்கள். அவ்வாறு செய்பவர்களைத் தண்டிக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என அரசருக்கு கடிதத்தின்மீது கடிதமாக எழுதினார்கள், கோவா பாதிரிகள்.

மேன்மைதகு அரசரின் பிரதிநிதியாக புதியதொரு ஆட்சியாளர் (வைசிராய்) கோவாவிற்கு வருவதாக அறிகிறேன். அவர்கள் அனைவரும் கடவுளின் பிரதிநிதியாக அவரது புகழை இந்தப் பிராந்தியத்தில் பரப்புவதற்கு உதவிகரமாக இருக்க வேண்டும் என அவர்களுக்கு அறிவுறுத்துமாறு வேண்டுகிறோம்.

இந்தப் பிராந்தியத்தில் வாழும் பல கிறிஸ்தவ பாதிரிகள் முறையற்ற வாழ்க்கை வாழ்ந்து தங்களுக்கும், தங்களைச் சார்ந்த மதத்திற்கும் பெரும் இழிவினைத் தேடித்தந்து கொண்டிருக்கிறார்கள். பரமண்டலத்திலிருக்கும் பிதாவின் புகழை மேம்படுத்துவதற்கு பதிலாக நம்பிக்கையற்ற ஹிந்துக்களின் ஆலயங்களுக்குப் போவதும், அவர்களின் ஆலயங்களைப் புகழ்வதுமாக இருக்கும் இந்த பாதிரிகளை மேதகு அரசர் விசாரித்து ஆவண செய்யவேண்டும்.என்னும்பல கடிதங்கள் போர்ச்சுக்கல்லை நோக்கிச் சென்று கொண்டிருந்தன.

அனேகமாக அந்த புதிய வைசிராய் மின்குல் வாஸ் என்பவராகத்தான் இருக்கவேண்டும். அவருக்கு முன் கோவாவை ஆண்ட செபாஸ்ட்டியோ பிர்ரஸ் மீது பல ஊழல் குற்றச்சாட்டுகள் இருந்தன. எனவே அவர் நீக்கப்பட்டு முன்குல் வாஸ் கோவாவிற்கு அனுப்பிவைக்கப்பட்டார். இந்த மின்குல் வாஸ் என்பவரே கோவா ஹிந்துக்கள் தங்கள் மதத்தை கோவாவிற்குள் பின்பற்றுவதற்கு அனுமதி மறுத்ததுடன், அவ்வாறு பின்பற்றுபவர்களுக்கு கடுமையான தண்டனைகளையும் அளிக்கும் வழக்கத்தைத் துவங்கியவர்.

1534-ஆம் வருடம் கோவா பிஷப் (Bishopric) அதிகாரம் கொண்ட பகுதியாக ஆக்கப்பட்துட என்றாலும் அங்கு மிகவும் குறைந்த எண்ணிக்கையிலான கிறிஸ்தவர்களே வாழ்ந்து வந்தார்கள். எனவே அவர்களின் எண்ணிக்கையை அதிகரித்து, கோவாவை கிறிஸ்தவப் பகுதியாக மாற்றும் Rigour of Mercy (Rigor-de Misericordia) என்னும் திட்டம் 1541-ஆம் வருடம் ஆரம்பமாக்கப்பட்டது.

இதனால் அந்த வருடம் ஏராளமான ஹிந்து ஆலயங்கள் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டன. மேலும் அங்கு வாழும் ஹிந்துக்கள் அனைவரும், அவர்களின் பகுதியில் இருந்த (இடிக்கப்பட்ட) ஹிந்து ஆலயங்களுக்குச் சொந்தமான நிலங்களில் வருகிற வருமானம் அனைத்தையும் அந்தப் பகுதியில் கட்டப்பட்ட கிறிஸ்த ஆலயத்தைப் பராமரிப்பதற்கு மட்டுமே அளிக்கவேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டது. வேறுவழியில்லாத கோவா ஹிந்துக்கள் அதற்குச் சம்மதம் தெரிவித்து இடிக்கப்பட்ட கோவில்களின் வருமானத்தைக் கிறிஸ்தவர்களுக்குக் கொடுக்கச் சம்மதித்தார்கள்.

ஏறக்குறைய 300 ஹிந்து பேராலயங்களும், சிறிய ஆலயங்களும் கோவா பகுதியில் இடித்துத் தகர்க்கப்பட்டன. இந்த ஆலயங்களைக் குறித்தான அத்தனை தகவல்களும் போர்ச்சுக்கீசியர்களாலேயே பதிவுசெய்யப்பட்டிருக்கின்றன.

கீழ்க்கண்ட நூல்களில் இடிக்கப்பட்ட கோவில்களைக் குறித்த தகவல்களைக் காணலாம்.

Francisco Pais, Tombo Da Illha de Goa e das Terras de Salcete e Bardes (Annotated by P.S.S. Pissurlencar), Bastora 1952, pp. 165-69.

கோவில்களை இடிப்பதுடன் மட்டும் போர்ச்சுக்கல் கிறிஸ்தவ மதவெறியர்கள், கோவா ஆட்சியாளர்களின் ஆத்திரம் அடங்கிவிடவில்லை. அதனைத் தொடர்ந்து பெருவாரியான ஹிந்துக்களை கிறிஸ்தவர்களாக மதம்மாற்றத் துடித்தார்கள். எனினும், அதற்குப் பணிய மறுத்த ஹிந்துக்கள், அவர்களது தலைவர்களின் போக்கு அவர்களை மேலும் வெறிகொள்ளச் செய்தது.

அன்றைய காலகட்டத்தில் கோவாவில் வாழ்ந்த போர்ச்சுக்கல் அரச குடும்பத்தைச் சேர்ந்த மார்ட்டின் அஃபோன்ஸோ டி மெலோ என்பவன் நவம்பர் 6, 1541-ஆம் வருடம் கோவா அரசருக்கு எழுதிய கடிதம் ஒன்று மதம்மாற மறுத்து எதிர்க்கும் ஹிந்துக்களைக் குறித்து இவ்வாறு குறிப்பிடுகிறது,

இந்த கோவா தீவுகளில் பல ஹிந்துக்களும், முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களாக மதமாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்கள் என்றாலும் மேலும் பலர் மதம் மாறுவதற்குத் தடையாக கிருஷ்ணா, லூகு, அனு சினாய் போன்ற ஹிந்து தலைவர்கள் இருக்கிறார்கள். கிறிஸ்தவர்களாக மதம்மாறுவது தவறானது என்று இங்கிருக்கும் ஹிந்துக்களிடம் இவர்கள் தொடர்ந்து பிரச்சாரம் செய்து கொண்டு இருக்கிறார்கள்.

மேன்மை தங்கிய அரசர், இந்தத் தலைவர்களை உடனடியாக கிறிஸ்துவர்களாக மதம் மாற்றுவதற்குத் தேவையானவற்றைச் செய்யவேண்டும். அல்லது அவர்களை ஏதாவதொரு காரணம் காட்டி போர்ச்சுக்கல்லுக்கு வரவழைத்துக் கொள்ளவேண்டும். அவ்வாறு இவர்கள் இரண்டு வருடங்கள் இந்தப் பகுதியிலிருந்து நீக்கப்பட்டால் இந்தத் தீவுகளில் இருக்கும் அத்தனபேர்களையும் மிகஎளிதாக்க கிறிஸ்தவர்களாக மதமாற்றம்செய்துவிடலாம் என நான் நம்புகிறேன். போர்ச்சுகலுக்கு வரும் அவர்கள் இன்னும் ஆறுமாதகாலத்திற்குள் மதம்மாறாவிட்டால் உடனடியாக கோவா பகுதியிலிருந்து வெளியேற வேண்டும் எனவும் மிரட்டிவைக்க வேண்டுகிறேன். இவ்வாறுசெய்யும் பட்சத்தில், மேலும்பல வழிதவறிய ஆடுகளை ஆன்ம அறுவடை செய்வது எளிதாக இருக்கும் என மேன்மைதங்கிய அரசரிடம் கூறிக்கொள்கிறேன்.

மேற்கூறப்பட்ட கிருஷ்ணா மேலும் பல கடிதங்களில் அடையாளம் காணப்பட்டிருப்பதனை நீங்கள் கண்டிருக்கலாம். அந்த கிருஷ்ணா என்பவர் சுங்கவரி வசூலிப்பவராகவும், கோவாவிலிருக்கும் ஹிந்துப் படைகளுக்குத் தலைவராகவும், குதிரைத் தரகராகவும் இன்னபிற பதவிகளிலும் இருந்த முக்கியஸ்தர் எனத் தெரிகிறது. அவர் போர்ச்சுக்கலுக்குச் சென்றதாகவும் தெரிகிறது என்றாலும் அவர் கிறிஸ்தவராக மதம்மாறவில்லை. எனினும், கிருஷ்ணா, பிஜப்பூர் அரசனால் கைதுசெய்யப்பட்டுப் பின்னர் சிறையிலேயே இறந்துவிட்டதாகத் தெரிகிறது.

அவருக்குப் பின்னர் அவரது மகனான தாதாஜி என்பவர் கோவாவின் ஹிந்துக்களுக்குப் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டதாக பெட்ரோ ஃபெர்னாண்டஸ் சார்டின்ஹா போர்ச்சுக்கல் அரசருக்கு எழுதிய கடிதத்திலிருந்து தெரியவருகிறது.

[தொடரும்]

One Reply to “கொலைகாரக் கிறிஸ்தவம் – 13”

  1. தங்கள் கருத்துப்படி மத மாற்ற விசயத்தில் மற்ற எல்லாரும் நல்லவரே !
    சரித்திரத்தை பொதுவாக கையாண்டால் நல்லது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *