சில தினங்களுக்கு முன்னர் நண்பர் ஒருவர் அதிக நிலவரிக்கு எதிராக ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் நடந்த பறையர் போராட்டத்தை குறித்த பதிவு ஒன்றை பகிர்ந்திருந்தார். அதனை மறு பகிர்வு செய்தபோது, பறையர்கள் நில உடமையாளர்களாக, நில வரி கட்டுபவர்களாக அந்த காலத்திலேயே இருந்திருந்ததை சுட்டிக் காட்டினேன். பறையர்களின் அக்கால சமூக, பொருளாதார, கல்வி நிலைகள் குறித்து இப்போது கொடுக்கப்படும் சித்திரம் சரியானதும் பூர்ணமானதும் இல்லை என்னும் வாதத்தை நான் பலகாலமாக முன்வைத்து வருகிறேன். இதற்கான சான்றுகள் பலதும் கள ஆய்விலும், ஆவண ஆய்விலும் கிடைத்துக்கொண்டுதான் இருக்கின்றன.
ஓலைச் சுவடிகளை சேகரிக்கும் போதும், மாந்த்ரீகர்கள் தொடர்பான ஆய்வுகளின் போதும் பறையர்களிடம் ஏராளமான மாந்த்ரீக, வைத்திய சுவடிகள் இருப்பதை தெரிந்துகொண்டோம். அதுமட்டும் இல்லாமல் இவர்களின் வைத்திய, மாந்த்ரீக திறனை அனைத்து ஜாதியினரும் பயன்படுத்தி இருக்கின்றனர்; அதற்கான தக்ஷிணையும் கொடுத்திருக்கின்றனர் என்றும் தெரிந்தது. சிதம்பர பஞ்சாக்ஷர சக்கரம் இவர்களில் ஒரு பிரிவினரிடையே பிரபலமாக இருந்து வந்திருக்கிறது.
மேலும் துபாஷி அனந்தரங்கன் பிள்ளையின் மருமகனான திருவேங்கடம் பிள்ளையின் குறிப்புகளில் ஒரு சம்பவம் ஆவண படுத்தப்பட்டுள்ளது. பாண்டிச்சேரியில் வசித்து வந்த பறையர் சமூகத்தினருக்கும் விஸ்வகர்மா சமூகத்தினருக்கும் இடையே நடந்த விவகாரம் அது. விஸ்வகர்மா சமூகத்தை சேர்ந்த ஒருவர் இறந்து போகிறார். அவருக்கு பாடை கட்டி ஊர்வலமாக சுடுகாட்டிற்கு எடுத்து செல்கின்றனர். இதற்கு பறையர்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இடங்கை ஜாதியினரான விஸ்வகர்மாக்களுக்கு அப்படி விமர்சையாக சடங்குகளை செய்யும் உரிமை இல்லை என்று கூறி அது வலங்கை இனத்தவரான தங்களின் உரிமையில் தலைவஇடுவதாகும் என்றும் வாதிட்டு மூன்று நாட்கள் அந்த பிணத்தை சுடுகாட்டிற்கு எடுத்து செல்ல விடாமல் தடுக்கின்றனர். பிரெஞ்சு அதிகாரிகள் தலையிட்டும் ஒன்றும் நடக்கவில்லை. இறுதியில் இறந்து போனவரின் உறவினர்கள், வேறு பாதை வழியாக அந்த பிரேதத்தை சுடுகாட்டிற்கு கொண்டு செல்கின்றனர். இச்சம்பவத்தை வாசித்த போது பறையர்கள் எல்லா காலத்திலும் ஒடுக்கப்பட்ட சமூகமாக இருந்ததில்லை என்று எண்ணிக்கொண்டேன். இதே ரீதியிலான ஒரு கருத்து ஜெயமோகனின் விஷ்ணுபுரத்தில் ஒரு காட்சிச்சித்திரமாக வரும். அதற்காக அவர் பொய்யன் என்று வசைபாடப்பட்டதும் பிறகு இறையியல் கல்லூரி வே.அலெக்ஸ் உடனான நட்பு, அதைத் தொடர்ந்து அவர் முன்வைத்த விஷயங்கள் எல்லாம் ஒரு பக்கம்.
இந்நிலையில், ஓரிரு தினங்களுக்கு முன்னர் போகன் சங்கர் ஒரு புத்தகத்தை தந்து வாசிக்க சொன்னார். நான் முன்வைத்த பல கருத்துக்களுக்கான தரவுகள் மற்றும் ஆதாரங்கள் இப்புத்தகத்தில் இருந்தன. புத்தகத்தின் பெயர்: காலனிய தொடக்கக் காலம் (கி பி 1500-1800). ஜெயசீலன் ஸ்டீபன் என்பவர் எழுதிய ஆங்கில புத்தகத்தை தமிழில் மொழிபெயர்த்து NCBH வெளியிட்டிருக்கின்றனர். நூல் ஆசிரியர் இடதுசாரி நோக்குடன் தான் தமது வாதங்களை முன்வைக்கிறார். ஆனால் நான் அவற்றில் உள்ள வரலாற்று உண்மைகள் /தரவுகளை மட்டும் பிரித்து எடுத்து வேறு ஒரு வகையில் மற்றொரு சித்திரத்தை உருவாக்க விரும்புகிறேன்.
டேனிஷ் மிஷனரி ஆவணங்களில் இருந்து பறையர்கள் பெருமளவில் படையில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்பது தெளிவாக தெரிகிறது. இங்கு படை என்பது ஐரோப்பிய படை மட்டும் அல்ல, மராத்திய அரசர்களின் படையும் தான். பறையர்களின் குடியிருப்பு பகுதியை குறித்த சித்திரம் பெரும்பாலும் எதிர்மறையாகவே இருக்கும். அக்கால பாதிரியார்கள் தொடங்கி இன்றய தலித்திய எழுத்தாளர்கள் வரை எதிர்மறை சித்திரத்தையே தந்துள்ளனர். Spatiality என்னும் திறனாய்வு முறையில் இக்குடியிருப்பு பகுதிகள் குறித்த விவரணைகள் மிக்க முக்கியத்துவம் பெறுகின்றன. ஆனால் எல்லா இடங்களிலும் விஷயம் மோசமாக இருக்கவில்லை. எல்லா இடங்களிலும் அவர்களுக்கு எதிரான அடக்குமுறைகள் கொடிகட்டி பறக்கவில்லை. தரங்கம்பாடி பாதிரியார் ஒருவர் 1700 களில் பறையர்களது குடியிருப்பு பகுதிகளை இவ்வாறு விவரிக்கிறார்: “பறைச்சேரிகள் தோட்டப்பயிர்களுடன், மரங்கள் வளர்ந்து செழித்து கால்நடைகள் நிரம்பி இருந்தன. இவை சூத்திர கிராமத்தோடு இணைந்தே இருந்தன.பறைசேரியும் சூத்திர கிராமத்தின் பகுதியே” (பக். 20). இந்த வர்ணனையால் நமக்கு தெரியும் விஷயம் என்னவென்றால் சூத்திரர்களான வேளாளர்கள் பறையர்கள் மீது எந்த வித தீண்டாமையும் அக்காலத்தில் அவ்விடத்தில் கொள்ளவில்லை என்பது தான். அதாவது அக்காலத்தில் அவ்விடத்தில் பறையர்கள் “கீழ்” ஜாதியினராக கருதப்படவில்லை. அவர்களும் ஹிந்து சமூகத்தின் ஒரு பகுதியாக சூத்திரர்களில் ஒரு பிரிவினராக கருத்தப்பட்டிருக்கக்கூடும்.
1786: தரங்கம்பாடி பறையர்களில் விவசாய ஊழியர்களாக இருந்தவர்கள் கூலியை பணமாக பெற்றுக்கொள்ள முடியாது எனவும் நெல்லாகத்தான் வேண்டும் என்று கேட்டும் போராடி ,அப்போராட்டத்தில் வெற்றி பெறவும் செய்திருக்கின்றனர். இது பறையர்களின் நுண்ணறிவிற்கு ஒரு சான்று. பணமாக பெற்றால் விலைவாசி பிரச்சனையால் தங்கள் உழைப்பு வீணாகிவிடும் என்று உணர்ந்து தானியமாக பெற்றுள்ளனர். தானியம் இருந்தால் பஞ்சமோ மழையோ வந்தால் கூட பிரச்சனை இல்லை. மேலும் ஊதியத்திற்காக /கூலிக்காக போராடும் அளவிற்கு அவர்கள் சுதந்திரர்களாகவும் ஒருங்கிணைப்பு உள்ளவர்களாகவும் இருந்திருக்கின்றனர் என்பது தெளிவு.
1729: தஞ்சை துக்காஜியின் படையில் முக்கிய தளபதியாக பறையர்களின் தலைவரான ராய நாயக்கன் இருந்துள்ளார். இவரது சகோதரர் கல்லு நாயக்கன் கிறிஸ்தவத்திற்கு மாறியவர் என்பதால் இவரை குறித்த தகவல்கள் பாதிரியார்கள் குறிப்பில் கிடைக்கின்றன. ராய நாயக்கன் மீது பொறாமை கொண்ட அவரது உறவினர்களே பொய் புகார்களை அனுப்பியதும் அவை விசாரிக்கப்பட்டதும் எல்லாம் ஆவணத்தில் வருகிறது. பறையர் சமூகத்தை சேர்ந்த ஒருவர் தளபதியாக இருந்துள்ளார். தவிர நாயக்க விகுதியை அவர் தனது பெயரோடு இணைத்துள்ளார். நாயக்க என்னும் விகுதி போர்குடியினரில் ஜாதிகளை கடந்து பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்பதற்கு இது ஒரு சான்று. கேரளாவில் நாயர், குறுப்பு போன்றவை ஒருகாலத்தில் இதே போல பயன்படுத்தப்பட்டன.
1717: பறையர் இனப்பெண் ஒருவர் மதராஸில் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்படுகிறார். இதனை தொடர்ந்து மதராஸில் பெருங்கலவரம் வெடிக்கிறது. பறையர்களுடன் சேர்ந்து வலங்கை ஜாதியினர் அனைவரும் நகரையே சூறையாடுகின்றனர் (பக். 31). குற்றவாளி கைது செய்யப்பட்டு தண்டிக்கப்பட்ட பிறகு தான் கலவரம் அடங்குகிறது.
அதே போல சில ஆங்கில சிப்பாய்களால் பறையர் பெண்களுக்கு தொல்லை வந்த போதும் அவர்கள் பலத்த பதிலடியை கொடுக்கின்றனர்.
1759: தரங்கம்பாடியில் வேறொரு போராட்டம் நடக்கிறது. தங்கள் திருமணத்தில் திருமண பந்தல் இடுவது போன்ற வலங்கை பிரிவினருக்கான சில உரிமைகளை இடங்கையினர் செய்ய முயல்கின்றனர் என்று கூறி அனைத்து வலங்கையினரும் கடும் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். போராட்டத்தில் முன்னணி வகிப்பவர்கள் பறையர்கள். போராட்டம் வெற்றியும் பெறுகிறது.
1767: நவம்பர் 14 அன்று தஞ்சை நகரில் உள்ள இடங்கையினர் அனைவரும் வலங்கையினரது கொடுமை தாங்காமல் வெளியேறுகின்றனர். இவர்களை தஞ்சை அரசர் சமாதான படுத்தி நகருக்குள் திருப்பி அழைக்கிறார். அவ்வாறு திரும்பி வருபவர்களின் பாதுகாப்பிற்காக 100 காலாட்படை மற்றும் 50 குதிரைப்படை வீரர்களை அனுப்புகிறார். ஆனால் ஆயிரக்கணக்கான குத்தீட்டி தாங்கிய பறையர்கள் இந்த இடங்கை குழுவினர் மீது பாய்ந்து தாக்குதல் நடத்துகின்றனர். காலாட்படை வீரர்கள் வலங்கையினர் என்பதால் தங்களது சக வலங்கை ஜாதியினரான பறையர்களின் தாக்குதலை தடுக்காமல் வேடிக்கை பார்க்கின்றனர். இந்த தாக்குதலில் 70 இடங்கை ஜாதியினர் கொல்லப்படுகின்றனர். பலர் முதலைகளுக்கு இரையாக வீசப்படுகின்றனர். குதிரைப்படை வீரர்கள் இஸ்லாமியர்கள். அவர்களும் இதில் தலையிடவில்லை. விஷயம் அறிந்து கடும் கோபம் கொண்ட அரசர் கடமை தவறிய 100 காலாட்படை வீரர்களையும் சுட்டு தள்ளுகிறார். அரச கோபத்தை ஊகித்த பறையர்கள் கூட்டத்தோடு தலைமறைவு ஆகிவிடுகின்றனர். அரசரின் தளபதியான ராய நாயக்கன் இதில் பங்கு பெறவில்லை. இருப்பினும் நிலவரம் சரி இல்லை என்பதால் அவர் நாஞ்சிக்கோட்டை என்னும் கள்ளர் ஊரில் தஞ்சம் அடைகிறார். நவம்பர் 19ம் தேதி அவரது இருப்பிடத்தை மன்னர் அறிகிறார் . பலமுறை தம் முன் ஆஜராக மன்னர் உத்தரவிட்டும் ஆஜராக ராய நாயக்கன் மறுக்கிறார். பொன்னும் பொருளும் பறையர் ஜாதி தலைவர் பதவியும் கொடுத்து அவரை தாஜா செய்ய அரசர் முயன்றும் எதுவும் நடக்கவில்லை. நவம்பர் 30 அன்று அவர் தஞ்சையை விட்டு வெளியேறி தரங்கம்பாடியில் குடியேறுகிறார் (பக். 44).
இந்த விவகாரம் பறையர்கள் ஆயுதம் தாங்கிய குடிகளாக இருந்தனர் என்பதை தெளிவு படுத்துகிறது. மேலும் மற்ற பல ஜாதியினர் மீது தாக்குதல் நடத்தும் அளவிற்கு துணிந்தே இருந்தனர் என்பதும் தெளிவு. தஞ்சை மராத்தியரும் இவர்களை ஒரே அடியாக பகைக்க முடியவில்லை. கள்ளர்களுடன் நல்ல உறவு இருந்ததினால் தான் அங்கு சென்று தஞ்சம் அடைய முடிந்தது.
நான் மேலே கூறியவை அனைத்தும் பறையர்கள் தொடர்பான பொது சித்திரத்திற்கு நேர் மாறானது. மேற்கூறிய புத்தகத்தில் கூட பொது சித்திரமே பலமாக வரையப்பட்டுள்ளது. ஆனால் நுட்பமாக வரிகளுக்கு இடையே வாசித்தால் பறையர் எல்லா இடங்களிலும் எல்லா நேரங்களிலும் மோசமாக நடத்தப்படவில்லை என்பதைப் புரிந்து கொள்ளலாம். தவிர அவர்கள் தனிச்சிறப்பும் மதிப்பும் மிகுந்த ஒரு தொல் குடியாக இருப்பதையும் அறியலாம். இடங்கை ஜாதிகளின் மீது அடக்குமுறை செலுத்தும் அளவிற்கு இருந்துள்ளனர். இந்த சித்திரம் பாடப்புத்தகங்களில் ஆய்வு நூல்களிலும் எளிதில் கிட்டாத ஒன்று. பறையர்கள் சில இடங்களில் சில நேரங்களில் கொடுமைப்படுத்தபட்டனர் என்பது எந்த அளவு உண்மையோ அதே அளவு உண்மை அவர்கள் வேறு சில இடங்களில் விவசாய குடிகளாகவும் போர்குடிகளாகவும் கோலோச்சினார் என்பது. அவர்கள் பெருமையை கூறாமல் அவர்கள் அனுபவித்த கொடுமையை மட்டும் கூறுவது மன ரீதியாக அவர்களை வலிமை இழக்க செய்து தாழ்வு உணர்ச்சியை உருவாக்குவதற்கான தந்திரம். அதனை முறியடிக்க வேண்டும்.
இன்னும் ஒரு விஷயம் இருக்கிறது. மேற்படி சம்பவங்கள் நடந்த போதெல்லாம் பறையர்கள் ஹிந்துக்களாகவே இருந்துள்ளனர். அவர் பூர்வ பவுத்தர்களாக இருந்த போது தான் அவர்களுக்கு சிறப்பு இருந்தது என்னும் வாதம் இங்கு அடிபடுகிறது. மிஷனரிகள் தான் அவர்கள் வாழ்க்கையில் விளக்கேற்றினர் என்பது அர்த்தமற்று போகிறது. பறையர்களுக்கான சைவ மடங்கள், தந்திரி பறையர்கள் குறித்தெல்லாம் நண்பர்களிடம் விசாரித்து வேறொரு கட்டுரையாக எழுதும் எண்ணம் உள்ளது.
ஒரு விதத்தில் பார்த்தால் தமிழகத்தில் உள்ள ஜாதி பிரச்சனைகளின் அடி வேர் வலங்கை எதிர் இடங்கை என்பதில் தான் இருக்கிறதே தவிர வர்ண முறையில் அல்ல.
இதே போல தேவேந்திர குல வேளாளர்களை குறித்தும் அருந்ததியினரை குறித்தும் வெளியில் வராத சில தகவல்கள் சேகரித்து வைத்துள்ளேன். அதையும் எழுதுவேன்.
*****
இதுவரை இப்படி ஒரு தகவலை நான் கேள்விப்பட்டது கூட கிடையாது.அரிய தகவல்.
இது போன்ற தகவல்களை அதிகம் அளிக்க மிக்க பயனுள்ளதாக இருக்கும்.
அருமையான பதிவு
ஹிந்து மதத்திற்க்கு இன்றைய காலகட்டதிற்க்கு மிக முக்கியம்.
Need post constanly
இப்படி எதிர்த்துக் கேட்டவர் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டுவிட்டார், இதுவரை இந்த வீடியோவில் இருக்கும் இஸ்லாமிய பயங்கரவாதிகள் கைது செய்யப்படவில்லை. தயவுசெய்து இதைப் பற்றி எழுதுங்கள்:
https://www.youtube.com/watch?v=HCPnIWyuq0g
அப்படி பண்ணினார்கள்; இப்படி பண்ணினார்கள் என்று எழுதுவதற்கெல்லாம் அடிக்குறிப்பில் ஆதார நூல்களையும் அவற்றுள் இக்கட்டங்கள் வருமிடங்களையும் குறிப்பிடுக. எங்கேயும் எக்குறிப்பும் இல்லாமல் எதை நம்புவது எடுத்துக்காட்டாக: ”சில ஆங்கில சிப்பாய்களால் பறையர் பெண்களுக்கு தொல்லை வந்த போதும் அவர்கள் பலத்த பதிலடியை கொடுக்கின்றனர்.” இது எங்கேயிருந்து கிடைத்தது ஆங்கில சிப்பாய்களை அவ்வளவு சீக்கிரமாக விரட்டிவிட முடியுமா குதிரைகளில் துப்பாக்கியோடல்லவா வருவார்கள். ஆதாரங்களைக் குறிப்பிடாமல் வரலாற்றுக் கட்டுரை எழுதக்கூடாது. எவரும் ஏற்க மாட்டார்கள்.
நினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய அரிய செய்திகள் அடங்க்கிய கட்டுரை. நாயர் மேலும் தொடர வேண்டும்.
பின் எப்படி அவர்கள் தாழ்த்ததப்பட்டவர் ஆனார்கள். எப்போதிருந்து யாரால் என்பதை தெரிவித்தால் சிறப்பு..
தேவேந்திரகுல குல வேளாளர்கள், மற்றும் பறையர்கள் வரலாறு குறித்து ஆங்காங்கே வரலாற்றுக் குறிப்புகள் நிறைய காணக் கிடைக்கின்றன. ஆனால் அருந்ததியர்கள் குறித்து அதிகம் இல்லை. அவசியம் எழுத வேண்டுகிறேன்
It really makes me proud and by foot notes and references may be quoted for authentication.Great and enlightening