ராஃபேல் போர்விமானமும், பாரதப் படைத்தலைமையும்.. – 2

கட்டுரையாளன் குறிப்பு:  ராஃபேல் விமானத்தைப்பற்றிய கட்டுரை என்றுசொல்லிவிட்டு, முதல்பகுதியில் அதைப்பற்றி ஒன்றுமே எழுதவில்லையே என்று படித்திருப்போர் நினைத்திருக்கக்கூடும்.  அது தேர்ந்தெடுக்கப்பட்ட காரணத்தை விரிவாகச் சொல்லவேண்டுமென்றால், பழங்கதைகளைச் சொன்னால்தான் அது எப்படித் தேர்ந்தெடுக்கப்பட்டது என்பதைப் புரிந்துகொள்ள இயலும்.  ஆகவே, பொறுமையுடன் என்னுடன் தொடர்ந்து பயணிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

பாரதத்தின் போர்கள்:

நள்ளிரவில் — ஆகஸ்ட் 15, 1947 நள்ளிரவில் தன்னாட்சிபெற்ற பாரதம் அன்றிலிருந்து இன்றுவரை ஒருநாளாவது நிம்மதியாக ஆட்சிசெய்துவருகிறதா என்றால், இல்லையென்றே கூறவேண்டும். நேரடியாகவே, மறைமுகமாகவோ, நாள்தோறும் போர்புரிந்துவருகிறது.

எதிர்த்தெதிர்த்து நிற்கும் சீன-இந்திய வீரர்கள

தன்னிடமிருந்து பிரிந்துபோன பாகிஸ்தானுடனுடன் நான்கு முறையும் [1947-48, 1965, 1971, 1999], சீனப் பிரதமர் சூ-என்-லாய் பாரதம் வந்தபோது எழும்பிய “பாரதமும் சீனாவும் உடன்பிறப்புகள்” என்ற மகிழ்ச்சிக்கூக்குரல் ஒலி அடங்குவதற்குள்ளேயே எல்லைப்போர் தொடுத்த சீனாவுடன் ஒருமுறையும் [1962] நேரடியாகப் போர்புரிய நேரிட்டது. போர் என்று சொல்லாவிட்டாலும், சிக்கிம் விடுதலைப்போர் சீனாவுடன் 1967ல் நிகழ்ந்தது.

பாகிஸ்தானுடன் நடந்த போர் அனைத்திலும் பாரதமே வென்றது.  ஆனால் 1962 சீனப்போரில் படுதோல்வியடைந்து விழித்துக்கொண்டு சிக்கிம்போரில் வெற்றிவாகை சூடியது.  இதுதவிர, 1961ல் கோவாவிலிருந்து போர்ச்சுகீசியரைப் பாரதம் விரட்டியடித்தது.

பாகிஸ்தானுடன் நடந்த போர்கள் அனைத்திலும் சீனாவும், அமெரிக்காவும் பாரதத்திற்குத் துணைவராமல் மறைமுகமாக எதிரிக்குத் துணைபோனாலும், ரஷ்யா பக்கபலமாக நின்றது.  இதுவே, ரஷ்யாவிலிருந்து பாரதம் இராணுவத் தளவாடங்கள் வாங்கப் பெரும்காரணமாக அமைந்தது.

தன்னாட்சித் தடுமாற்றம்:

தன்னாட்சி வேண்டும் என்று போராட்டம் நடந்தபோது, பிரித்தாளும் சூழ்ச்சியில் வல்ல ஆங்கிலேயர்களால், இந்து-முஸ்லிம் பிளவு ஏற்பட்டது. பிருத்விராஜ் சௌஹானை – ஒருமுறை போரிட்டுத் தோற்றபோதிலும், மன்னித்து அனுப்பிய நன்றியை மறந்து — அவனது மாமனார் ஜெயச்சந்திரன் செய்த சதியால் முறியடித்து — கண்களைக் குருடாக்கிக் கொன்று, தில்லியைக் கைப்பற்றி முஸ்லிம் ஆட்சியை ஏற்படுத்திய முகம்மது கோரியிலிருந்து, ஷேர் ஷாவை முறியடித்து முகலாயப் பேரரசை நிறுவிய பாபரிலிருந்து, ஆங்கிலேயர் அரசு அமையும் வரை வடபாரதத்தை ஆண்ட தாங்கள், தன்னாட்சி ஏற்பட்டால், பாரதத்தில் மக்களாட்சி மலர்ந்தால் — இதுவரை ஆண்ட இந்துக்களுக்கு அடிபணியும் சிறுபான்மையராகிவிடுவோம் என்ற நஞ்சு இஸ்லாமியர் மனதில் விதைக்கப்பட்டது. அது மரமாகி வளர்ந்ததால், பாரதம், இரண்டாகப் பிரியும் நிலை ஏற்பட்டது. ஆயிரத்து முந்நூறு மைல்கள் பிரிந்திருக்கும் இரு பகுதிகளைக்கொண்ட பாகிஸ்தானும், நடுவில் ஒரேபகுதியாகப் பாரதமும் தன்னாட்சிபெறும் என அறிவிக்கப்பட்டது.

அப்பொழுதும் இது பாரதம், இது பாகிஸ்தான் என்று முறையாகப் பிரித்துக் கொடுத்து அமைதியாகப் பிரிந்துசெல்ல வழிவகுக்காமல், தங்கள் நேரடி ஆட்சியின்கீழ் உள்ள பகுதியைமட்டும் பிரித்து, மன்னராட்சியின்கீழ் உள்ள பகுதி எங்கு சேருவது என்பதை அம்மன்னர்களே தீர்மானிப்பர் என்ற விஷவிதையையும் விதைத்துச் சென்றனர், ஆங்கிலேயர்.

அதனால் வளர்ந்த நஞ்சு மரத்தின் பழங்கள், அம்மரத்தின் நச்சுக்காற்று — இன்றுவரை பிரிந்த இரண்டு — இப்பொழுது மூன்று நாடுகளின் உறவையும் நஞ்சாக்கிவிட்டிருக்கிறது.

முள்ளில் விழுந்த மேலாடை:

பொதுவாக மன்னர் எந்தச் சமயமோ, அந்தச் சமயமக்களே பெரும்பான்மையாக இருந்தன மன்னாராட்சியுள்ள பகுதிகள். இதற்கு விதிவிலக்காக இருந்தன இரண்டு பகுதிகள் — முஸ்லிம் நிஜாமின் ஆளுகைக்குட்பட்ட ஹைதராபாத், இந்து மகராஜா ஹரிசிங்கின் காஷ்மீர்.

சர்தார் வல்லபபாய் படேலின் அரசநீதித் திறமையால் ஹைதராபாத் பாரதத்துடன் இணைந்தது. 

ஆனால், விதி காஷ்மீர்விஷயத்தில் விளையாடியது. 

தனது பெரும்பான்மை மக்கள் இஸ்லாமியர்களானதால் பாரதத்துடன் இணைவதோ, தான் இந்து என்பதால் பாகிஸ்தானுடன் இணைவது சரியல்ல என்று தனிநாடாக இருக்க மகாராஜா ஹரிசிங் எடுத்த முடிவு இருநாடுகளையும் இன்றுவரை போர்க்கொடி உயர்த்தவைத்திருக்கிறது.

அவர் எடுத்த முடிவை இந்தியா ஏற்றது.  ஆனால், அதை ஏற்காத பாகிஸ்தான், வசீரிஸ்தானிலிருந்து லஷ்கர் என்று சொல்லப்படும் பழங்குடியினரின் குடிப்படை[militia]வேடத்தில்  தனது படையை அனுப்பியது.  ஸ்ரீநகர்வரை அப்பட்டாளம் முன்னேறிவரவும், தன் படையால் காஷ்மீரைக் காப்பாற்ற இயலாதென்பதை உணர்ந்து, பாரதத்தைப் பாதுகாப்புக்கழைத்தார் மன்னர் ஹரிசிங்.  தன்னுடன் இணைவதாக அவர் வாக்குக்கொடுக்கவும், ஜெனரல் கரியப்பாவின் தலைமையில் தனது படையை அனுப்பியது பாரதம்.

குடிப்படை வேடத்திலுள்ள பாகிஸ்தானியப் படையைவிரட்டத் துவங்கிய பாரதவீரர்களின் முன்னேற்றம், பல்வேறு அரசியல் காரணங்களால் பாதியில் தடுத்துநிறுத்தப்பட்டது. இந்தத் தவறான முடிவுக்கு இன்னும் களபலிகொடுத்துக்கொண்டிருக்கிறது பாரதம்.

ஆக, இப்பொழுதும் முள்ளின்மேல் விழுந்த மேலாடைகத்தான் பாரதத்திற்கு ஆகிவிட்டது காஷ்மீரின் நிலை…

வலிமை வேண்டும்:

எதை உணர்ந்ததோ இல்லையோ, நண்பர் யார், நட்டாற்றில் விடுபவர் யார், தோள்கொடுப்பவர் யார், எது இல்லாது போனதால் முதல் இரண்டுபோர்கள் நடந்தன என்பதை அறிந்துகொண்டது பாரதம். அத்துடன் வலியவராக இருப்பதுதான் பாதுகாப்புக்கு வழிவகுக்கும் என்பதையும் உள்ளங்கை நெல்லிக்கனியாகக் கண்டது.

ஆகவே, தன்னைப் பலப்படுத்திக்கொள்ளும் முயற்சியில் ஒருமனதுடன் ஈடுபட்டது.

தரைப்படைகள் என்னதான் வீரத்துடன் போரிட்டாலும், விமானப்படைகள்தாம் அவற்றுக்குத் தகுந்த பாதுகாப்பைத் தரமுடியும். அவைகள்தாம் முன்சென்று எதிரிகளின் ஆயுதக்கிடங்குகள், அவர்களின் உளவுவிமானங்கள், ராடார் அமைப்புகள் இவற்றைத் தாக்கியழித்து, தரைப்படை முன்சென்று எதிரிப்படைகளை எதிர்கொள்ள இயலும்.

இதையறிந்த பாரதம் விமானங்கள் வாங்க முற்பட்டது.    ஆனால், நேருவின் கூட்டுசேராக்கொள்கையால் பாரத-அமெரிக்க உறவு பலவீனமாக இருந்ததால் அமெரிக்கா பாரதத்திற்கு எவ்வித ஆயுதங்களையும் விற்க மறுத்துவிட்டது.[1]

மேற்குநாடுகளால் மறுக்கப்படவே, பாரதம் ரஷ்யாபக்கம் திரும்பியது.  மாஸ்கோவும் தனது மிக்-21 விமானங்கள் விற்கவும், அதை இந்தியாவில் உற்பத்திசெய்யும் தொழில்நுட்பத்தையும் தந்தது.

மிக்-21 எஃப்.எல் விமானம்

“1965ல் இந்திய விமானப்படை இறுதிவெற்றி பெற்றாலும், தரையிலேயே அதன் மிக்-21 [அப்பொழுது அதன் வலிமைவாய்ந்த விமானம்] பாகிஸ்தான் விமானங்களின் குண்டுவீச்சில் அழித்துச் சேதப்படுத்தப்பட்டன,” என்று ஏர்-வைஸ்மார்ஷல் ஏ.கே. திவாரி இந்தியன் டிஃபென்ஸ் ரிவ்யூவில் தெரிவித்துள்ளார்.[2]  கீழே அதன் விவரம் அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும், ராகேஷ் கிருஷ்ணன் சிம்ஹா, தனது கட்டுரையில்,[3] “1965 போரில்தான் இந்திய விமானப்படை முதன்முறையாகச் சண்டையிடும் வாய்ப்பைப் பெற்றது.  இருப்பினும், வெற்றியடையும் வாய்ப்பு அதற்கு முழுவதும் எதிராகவே இருந்தது.  ஏனெனில் அப்பொழுது பிரதமராக இருந்த ஜவஹர்லால் நேரு இந்திய இராணுவத்தின் விமானங்கள் அருங்காட்சியத்தில் வைக்கப்படவேண்டியவையாகவே விட்டுவிட்டார். விமானப்படையின் மூன்றிலொருபங்கு இரண்டாம் உலகப்போரின் [1938-45] விமானங்களாதலால், உபயோகமில்லாதுபோய்விட்டன.” என்று குறிப்பிட்டிருக்கிறார். 

அப்படியிருந்தும், இந்தியாவின் குட்டியான நாட் விமானங்கள், பாகிஸ்தான் அமெரிக்காவிலிருந்து வாங்கிய சேபர் ஜெட் என்னும் விமாங்களைத் தாக்கி அழித்தன.  காரணம், கழுகைவிடச் சிட்டுக்குருவியால் கீழிருந்து வேகமாகக் கிளம்பும் திறமை உள்ளன.  ஆகவே, சேபர் ஜெட்டுக்கு மேலேகிளம்பி அவற்றைச் சுட்டுத் தள்ளின.

Gnat plane நாட் விமானம்
சேபர் ஜெட்டை வீழ்த்தும் பாரத விமானம்

சண்டையில் ஈடுபட்ட விமானங்களில் பாரதம் 25யும், பாகிஸ்தான் 43யும் இழந்தன.  தரையில் பாரதம் 53ஐ இழந்தது.  விமானத்தாக்குதல் எப்படி என்று அறியாததால், பாரதத்திடம் இருந்த வலிமையான மிக்-21 விமானங்கள் [இப்பொழுது அல்ல!] போரைக் காணாமல் தரையிலேயே அழிக்கப்பட்டன.

இப்போர் பாரதத்திற்கு நல்ல பாடத்தைக் கற்றுக்கொடுத்தது.  வங்கதேச விடுதலைப் போரில் கற்றுக்கொண்ட இப்பாடம் நன்கு உதவியது.  1965 போரில் தரையிலேயே பாரத விமானங்களில் பலவற்றை அழித்ததைப்போல இத்தடவையும் செய்யலாம் என்றெண்ணிய பாகிஸ்தானை ஏமாற்றமே எதிர்கொண்டது.

அச்சமயம் பாகிஸ்தானின் விமானத் தாக்குதலை எதிர்நோக்கிய பாரதம் முந்திக்கொண்டது.  போரென்று நடந்தால் அது எதிரியின் மண்ணில்தான் நடக்கவேண்டும், பாரதமண்ணில் நடக்கக்கூடாது என்ற கொள்கைப்படி ஆணைபிறப்பித்தார், பாரதப் படைத்தலைவர் ஜெனரல் [பின்னால் ஃபீல்டு மார்ஷல்] மானேக் ஷா. அதன்படை, நான்கு விமானவீரர்கள் ஸ்க்வாட்ரன் லீடர் பாரத்வாஜ், ஃப்ளையிங் ஆபீசர்கள் ஹெப்லே, கரம்பயா, ஃபிலைட் லெப்டினென்ட் தேவ்ஸ்கர் ஆகியோர் ஹன்ட்டர் விமானங்களில் 120 கி.மீ உட்சென்று முரித் விமானதளத்தைத் தாக்கி அழித்தார்கள்.  கரம்பயா திரும்பிவரும்போது தனது விமானம் தாக்குதால் வலது பக்க இறக்கையில் பாதியையும், எரிபொருள் தொட்டியையும் இழந்தும், முன்நூறு அடி உயரத்தில் பறந்து, சிந்து-சட்லெஜ் ஆறுகளைத் தாண்டி, பாரத எல்லையை அடைந்து தப்பினார்.  அவருக்கு 1971ல் வீரசக்கர விருது அளிக்கப்பட்டது.  இந்த நால்வரால்தான் அன்றைய கிழக்கு பாகிஸ்தானிய விமானப்படை தன் செயலை இழந்தது எனலாம்.[4]

அத்துடன், பாரதம் தனது மிக்-21 விமானங்களை அப்பொழுதைய கிழக்கு பாகிஸ்தானுக்கு அனுப்பியது.  1971 டிசம்பர் 14ல் காலை 11 மணி அளவில் டாக்காவில் கவர்னர் மாளிகையச் சுற்றி வட்டமிட்ட அவ்விமானங்கள் குண்டுமாரி பொழியவே, கவர்னர் ஐக்கிய நாட்டு விமானத் தாக்குதல் பாதுகாப்பிடத்திற்கு ஓடி ஒளிந்துகொண்டார்.

விமானத்தாக்குதல் வரலாற்றிலேயே, ஒரு நாட்டை மண்டியிடச்செய்த விமானம் மிக்-21ஆகத்தான் இருக்கும் எனலாம்.[5]  அப்பொழுது நேரடிச் சண்டையில் [dog fight] சிறந்த விமானம் அதுவாகத்தான் இருந்தது.

ஆயினும், மேற்கில் எதிர்ப்பு பலமாகத்தான் இருந்தது. பாகிஸ்தானிடம் ஷென்யாங்க் ஜே-6 [மிக்-19ன் வேறொரு மாடல்], அமெரிக்க எஃப்-104ஏ, பிரெஞ்சு மிராஜ் III விமானங்களுடன் இந்தியா விமானப்படையை எதிர்கொண்டது. அப்படியிருந்தும் எஃப்-104 விமானங்கள் மூன்றிலிருந்து ஐந்தை மிக்-21 விமானங்கள் விழ்த்தின. மிராஜ் IIIE விமானத்தில் தலைசிறந்த ராடார் இருந்ததால், அப்பொழுது அது எந்தவொறு பாரத விமானப்படை விமானங்களைவிடச் சிறந்ததாக விளங்கியது. பாரத விமானங்களின் அதிகமான எண்ணீக்கையினால் பாகிஸ்தான் தோற்றது.[6]

பாகிஸ்தானின் எஃப்104 விமானம்

மிக்21 விமானம் 50 ஆண்டுகள் பணியாற்றியபின் 2013ல் ஓய்வுபெற்றது.[7]

இந்தப் போரில் பாரதம் தனது விமானப்படையின் சிறப்பை உணர்ந்து அதைப் பலப்படுத்தத் துவங்கியது. அதன் பழைய விமானங்களை ஓய்வுகொடுத்து அனுப்பிவிட்டுப் புதிய விமானங்களை வாங்க முடிவு செய்தது.  அதன்விளைவுதான் ராஃபேல் விமானம். 

அதுபற்றி அடுத்த பகுதியில் பார்ப்போம்.

[தொடரும்]


[1]   India-US Relations, by Satu Limaye

[2]   Indian Defence Review, Vol.22.1, Jan-March 2007 — updated Jan 14, 2018, https://www.indiandefencereview.com/spotlights/iaf-defeated-paf-in-1965-war/ 

[3]    War of attrition: How the outgunned IAF beat the PAF, by Rakesh Krishnan Simha, Russia Beyond, Sept 14 2015

[4]    When 4 young IAF pilots hit a Pakistani airbase 50 years ago, Economics Times India, Feb 26, 2019, https://economictimes.indiatimes.com/news/defence/when-4-young-iaf-pilots-hit-a-pakistani-airbase-50-years-ago/articleshow/68165220.cms

[5]   Dogfight duke: The MiG that forced an army’s surrender by Rakesh Krishnan Simha, Russia Beyond, Dec 19, 2013.

[6]    In 1971, Indian Mig-21’s Beat Some American-Built F-104A Starfighters. Was It a Fluke? By Charlie Gao, The National Inerest, August 5, 2018

[7]    MiG-21 FL flies into history today after serving the IAF for 50 years, News 18 India, December 11, 2013.

One Reply to “ராஃபேல் போர்விமானமும், பாரதப் படைத்தலைமையும்.. – 2”

  1. அரிய தகவல்கள்.படிப்பதற்கு ஆரவத்தை தூண்டுகின்றது.வழக்கல்போல் நேரு மாமா இந்திய விமானப்படையை பாழாக்கித்தான் வைத்திருக்கின்றாா். நேருவின் வாரிசுகள் விமானப்படைக்கு உயா் தொழில் நுட்ப தயாரிப்புக்களை வாங்காமல் 2014 வரை பாழாக்கினார்கள். பாக்கிஸ்தான் அமெரிக்காவின் தலை சிறந்த தயாரிப்பு என்று அனைவராலும் போற்றப்பட்ட F-16 போார் விமானங்களை வாங்கி 5-10 வருடங்கள் ஆகிவிட்டது. அதுபோல சீனாவும் நவீன்மான போார் விமானங்களை பாக்கிஸ்தானுக்கு வழங்கியுள்ளது.மேற்படி இரு விமானங்களுக்கு இணையான போா் விமானம் இந்திய விமானப்படையில் இல்லை. அதை வாங்கும் முயற்சிகை எவ்வளவு பாழாக்க முடியுமா அவ்வளவு பாழாக்கி வருகின்றார்கள் ராகுல் காந்தியும்.மறறவா்களும்.பாக்கிஸ்தான் போா் விமானமானF-16 நமது எல்லையில் சுட்டு வீழ்த்தினாலும் தாக்குதலில் ஈடுபட்ட மிக-21 போா் விமானமும் வீழ்ந்து விட்டது. தொழில்நுட்பநிலையில்F-16 மிக-21 யை விட சிறந்தது. இன்று மட்டுமு் ரபோல் போர் விமானங்கள் போதிய எண்ணிக்கையில் இருந்திருந்தால் பாக்கிஸ்தான் பெரும் இழப்பைசந்தித்து இருக்கும். ஏன் ராகுல் இவ்வளவு முட்டாளாக இருக்கின்றாா்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *