கொலைகாரக் கிறிஸ்தவம் — 15

தொடர்ந்து தொல்லைகள் கொடுத்துக் கொண்டே இருந்தால் கோவா ஹிந்துக்கள் மனம் வெதும்பி அவர்களின் ஆலயங்களைக் கைவிட்டுவிடுவார்கள், ஹிந்து ஆலயங்கள் கவனிக்கப்படாமல் இடிந்து விழுந்துவிடும் எனப் போர்ச்சுக்கீசியர்கள் எண்ணினார்கள்.  தங்களின் மத உரிமைகளைப் பின்பற்ற முட்டுக்கட்டைகள் விதிக்கப்பட்டதால் வருந்திய செல்செட்டே பகுதி ஹிந்துக்கள் வைசிராயை அணுகி அதனைச் சரிசெய்யுமாறு வேண்டினார்கள். எனினும் அந்த வேண்டுகோள்கள் செவிடன் காதில் ஊதிய சங்காக ஆகியது.

இடிந்து கிடக்கும் தங்களின் கோவில்களுக்குத் திரும்பிய ஹிந்துக்கள் அங்கிருந்த தெய்வ விக்கிரகங்களை வண்டிகளில் வைத்து எடுத்துக்கொண்டு போர்ச்சுக்கீசியர்கள் இல்லாத பகுதிகளை நோக்கிக் குடியேற ஆரம்பித்தார்கள்.  இந்தக் காலகட்டத்திலேயே (1566) கோர்ட்டாலிம் பகுதி ஆலயத்திலிருந்த ஸ்ரீ மங்கேஷ் பகவானின் சிலையும் வேறு இடத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டிருக்கவேண்டும். வரலாற்றாசிரியர் ஃப்ரான்ஸிஸ்கோ-டி-சூசா மங்கேஷ் பகவனானையும் அவரது வழிபாட்டார்களையும் குறித்த கீழ்க்கண்ட சம்பவத்தைச் சொல்கிறார்:

“கோர்ட்டாலிம் பகுதியைச் சார்ந்த ஹிந்துக்கள் ஸ்ரீ மங்கேஷ் பகவானின் சிறிந்த பக்தர்கள். இந்த கோர்ட்டாலிம் பகுதி நிலப்பரப்பில் மிகச் சிறியதாக இருந்தாலும் அங்கு பல ஹிந்து ஆலயங்கள் இருந்தன. முற்காலத்தில் அந்தப் பகுதியை ஆண்ட ஹிந்து அரசர்களின் கணக்கு வழக்குகளைப் பார்த்துக் கொள்பவர்களாக இருந்த கோர்ட்டாலிம் வாசிகள், அரசனிடம் சம்பாதித்த ஏராளமான பணத்தைக்கொண்டு இந்தப் பகுதியில் பல பெரும் ஆலயங்களை எழுப்பி, அதனைப் பராமரிப்பதற்காக ஏராளமான நிலங்களையும் வாங்கி, அந்த ஆலயங்களுக்க்குச் சமர்ப்பித்தார்கள். கொங்கணி பிராமணர்களான அவரகள் ஷென்விஸ் என அழைக்கப்பட்டவர்கள். அவர்களே அந்தப் பகுதியில் வாழும் பிறபிராமணர்களுக்குப் பாடம் சொல்லும் தகுதியையும் பெற்றிருந்த ஆசிரியர்களும் கூட.

“அந்தப் பகுதியின் பிறபிராமணர்களும் ஷென்விஸ் பிராமணர்களுக்குக் கட்டுப்பட்டே நடந்தார்கள்.  பகவான் ஸ்ரீ மங்கேஷின் சிலை வைக்கப்பட்டு வணங்கப்பட்டுவந்த இடத்தைக் கைப்பற்றிய போர்ச்சுக்கீசிய பாதிரிகள் அங்கிருந்து அந்தச் சிலையை அகற்றிவிட்டு அதற்குப் பதிலாக அந்த இடத்தில் ஒரு சர்ச்சினை நிறுவினார்கள். “

மதவெறிபிடித்த கிறிஸ்தவ மிஷனரிகள் ஹிந்துக்களை அமைதியாக வாழவிடாமலும், அவர்களின் இடிக்கப்பட்ட ஆலயங்களை மீண்டும் கட்டுவதனைத் தடைசெய்தும் தொல்லைகள் கொடுத்ததினால், வேறு வழியின்றி அவர்கள் போர்ச்சுக்கீசிய பகுதிகளுக்கு வெளியே குடியேறிதனை ஏற்கனவே குறிப்பிட்டிருக்கிறேன். இவ்வாறு அவர்கள் வெளியேறியதைச் சாக்காக வைத்துக்கொண்டு 1567-ஆம் வருடம் செலாஸ்ட் பகுதியில் எஞ்சியிருந்த பிற கோவில்களை இடித்துத் தள்ளினார்கள், போர்ச்சுக்கீசியக் கிறிஸ்தவப் பாதிரிகள். ஹிந்துக்கள் எடுத்துச் செல்லாமல் விட்டுச்சென்ற கடவுளர்களின் சிலைகளும் தெருவில் தூக்கியெறியப்பட்டுத் துண்டுகளாக உடைத்துத் தள்ளப்பட்டன.

கோட்டாலிம் கிராமத்தவர்கள் அனைவரும் உடனே தன்னை வந்து சந்திக்கவேண்டும் என உத்தரவிட்ட கேப்டன் ரோட்ரிகஸ், அவர்கள் வராததால் உடனடியாக அந்த ஊரில் இருந்த கோவிலை எரித்து இடித்து, கிராமத்தையும் தீ வைத்துக் கொளுத்தினான்.  இடிக்கப்பட்ட ஆலயத்தை உடனடியாக ரோட்ரிகஸ் கட்டித்தரவேண்டும் என உத்தரவிட்ட மனசாட்சியுள்ள ஒரு மாஜிஸ்ட்ரேட்டின் உத்தரவும் காற்றி தூக்கியெறியப்பட்டது. அவனுக்கு வலிமையுள்ள கோவா பாதிரிகளின் ஆதரவு இருந்தது.

நடந்ததைக் கேள்விப்படும் கோவாவின் வைசிராய், கேப்டன் ரோட்ரிகஸ் செய்தது சரிதான் எனச் சொன்னதுடன் செலஸ்டே பகுதியில் இருக்கும் அத்தனை ஹிந்துக் கோவில்களையும் அவன் உடனே எரிக்கவேண்டும் என உத்தரவிட்டதால்,  ராச்சோல் பகுதிக்குத் திரும்பிய கேப்டன் ரோட்ரிகஸ் செலஸ்டே பகுதி கிறிஸ்தவ பாதிரிகளின் துணையுடன் கண்ணில் தென்பட்ட அத்தனை ஹிந்து ஆலயங்களையும், வழிபாட்டிடங்களையும் தீ வைத்துக் கொளுத்தி, தெய்வத் திருவுருவங்களையும் உடைத்தான்.

அந்தக் காலகட்டத்தில் கோவாவில் மட்டும் ஏறக்குறைய 280 ஹிந்து ஆலயங்கள் இடித்தும், தீ வைத்து எரித்தும் தகர்க்கப்பட்டதாக வரலாற்றசிரியர் ஃப்ரான்ஸிஸ்கோ-டிசூசா கூறுகிறார்.

கேப்டன் ரோட்ரிகஸ் டிசம்பர் 12, 1567-ஆம் வருடம் போர்ச்சுக்கீசிய அரசருக்கு அனுப்பிய கடிதத்தில் தான் இடித்துத் தள்ளிய கோவில்களைக் குறித்த துல்லியமான விவரங்களைக் குறிப்பிட்டிருப்பதாக இர்மாவோ கோம்ஸ் வாஸ் சொல்கிறார்.

அந்தக் கடிதங்களில் “மால்சா தேவி” குறித்த குறிப்புகள் இருக்கின்றன.  அலர்டோல் அல்லது மார்டோல் என்னும் இடத்திலிருந்த ஆலயத்தின் மூர்த்தியைத் உடைத்துத் துண்டுகளாக்கியதனையும் குறிப்பிடுகிறார் ரோட்ரிகஸ்.  மேலும் மார்ச் 15, 1567-ஆம் வருடம் டோரோ, மாண்டோ, நாரானா, பகுனோட்டேவில் இருந்த ஹிந்து ஆலயங்களை இடித்தது மற்றும் சான்குலேயில் இருந்த ஹிஸ்போரோ (ஈஸ்வரன்?)  ஆலயத்தைத் தீவைத்துக் கொளுத்தியபின் இடித்துத் தரைமட்டமாக்கியது போன்ற தகவல்களை அவன் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறான்.

மேலும் குன்காலிம், ச்சின்ச்சிம் மற்றும் அம்பெலிம் பகுதிகளிலிருந்த ஆலயங்களை இடித்த குறிப்பும் அந்தக் கடித்திலேயே இருப்பதாகச் சொல்கிறார், இர்மாவோ கோம்ஸ்.  இடிக்கப்பட்ட ஆலயங்களிலிருந்து கைப்பற்றப்பட்ட ஏராளமான சிலைகள் அங்கிருந்த ஆற்றில் தூக்கிப் போடப்பட்டதாகவும், உலோகத்தால் ஆன ஸ்வாமி சிலைகள் உருக்கப்பட்டு, மெழுகுவர்த்தி வைப்பதற்கு உதவும் ஸ்டாண்டுகளாகவும், மற்ற சர்ச் உபயோகங்களுக்காகவும் பயன்படுத்தப்பட்டன.

குறிப்பு : கோவாவில் இடிக்கப்பட்ட அந்த ஆலயங்கள் அனைத்தும் இன்றைக்கு அடையாளம் காணப்பட்டுவிட்டன. அதனைக் குறித்த விவரங்கள் பின்னர் அளிக்க முயற்சிகள் செய்யப்படும்.

அதே காலத்தில் பால்டெஸ் பகுதியிலும் கிறிஸ்தவ மதவெறிப்பாதிரிகள் ஹிந்து ஆலயங்களை இடித்துத் தகர்க்கத் துவங்கினார்கள். செலஸ்டே பகுதியிலிருந்த மிஷினரி பாதிரிகள் ஜெர்சுயிட் பிரிவைச் சேர்ந்தவர்கள். ஆனால் பால்டெஸ் பகுதி மிஷினரி கிறிஸ்தவ வெறியர்கள் ஃப்ரான்ஸிஸ்கன் பிரிவைச் சேர்ந்தவர்களாக இருந்தார்கள். 1567-ஆம் வருடம் பால்டெஸ் பகுதியிலிருந்த அத்தனை ஆலயங்களையும் இடித்துவிட்டதாகக் குறிப்பிடும் கடிதத்தைப் பற்றி கோம்ஸ்-டி-வாஸ் இவ்வாறு குறிப்பிடுகிறார்.

“அரசரின் ஆட்சியதிகாரத்திற்கு உட்பட்ட பகுதியிலிருந்த அத்தனை ஹிந்து ஆலயங்களும் இடித்துத் தள்ளப்பட்டுவிட்டன. அவற்றின் ஒன்றுகூட இன்றைக்கு மிஞ்சியிருக்கவில்லை எனத் தெரிவித்துக்கொள்கிறேன். செயிண்ட் பிரான்ஸிஸ் சேவியரின் தலைமையில் கிறிஸ்தவ பாதிரிமார்கள் பால்டெஸ்சில் இருந்த  ஹிந்து ஆலயங்களைத் தகர்த்து அவை இருந்த சுவடே தெரியாமல் துடைத்தெடுத்துவிட்டார்கள்.”

ஜெர்சுயிட் பிரிவு பாதிரிகள் இடித்த கோவில்களைப் போல ஃப்ரான்ஸிஸ்கன் பிரிவு பாதிரிகள் இடித்த ஆலயங்களைக் குறித்த விவரங்களும் துல்லியமாகப் பதிவுசெய்யப்பட்டிருக்கின்றன. இதனைக் குறித்து ஃப்ரான்ஸிஸ்கன் பாதிரிகள் வெளியிட்ட ஆவணமான “Noticia que obravao os frades de S. Francisco” 300 ஹிந்து ஆலயங்களை இடித்துத் தகர்த்துவிட்டதாகச் சொல்கிறது. அந்த ஆலயங்களும் இன்றைக்கு அடையாளம் காணப்பட்டிருந்தாலும் அவை இன்றைக்கு இருந்த சுவடே இல்லாமல் அந்த ஆலயங்களுக்கு மேலாக இன்றைக்குச் சர்ச்சுகள் நின்றுகொண்டிருக்கின்றன. இடிக்கப்பட்ட ஹிந்துக்கோவில்கள் அனைத்துக் சர்ச்சுகளாக மாற்றப்படவேண்டும் என செபாஸ்தியோ மார்ச் 21, 1569-ஆம் வருடம் விதித்த உத்தரவின் அடிப்படையிலேயே அங்கு சர்ச்சுகள் கட்டப்பட்டன என்பதினை நினைவுகொள்ளவேண்டும்.

கிறிஸ்தவ பாதிரிகள் வெறிகொண்டு ஹிந்துக் கோவில்களைத் தாக்கி அழித்தாலும் அவர்களால் அதில் முழுமையான வெற்றிகொள்ள இயலவில்லை என்பதுவே உண்மை. போர்ச்சுக்கீசியப் பகுதிகளை விட்டகன்ற ஹிந்துக்கள் தாங்கள் சென்ற பகுதிகளில் புதியதாக ஆலயங்களையும், வழிபாடுமிடங்களையும் கட்டிக்கொண்டார்கள்.  போர்ச்சுக்கீசியர்களால் இடிக்கப்பட்ட கோவில்களிலிருந்த விக்கிரகங்கள் சாத்தியப்படும் இடங்களிலெல்லாம் ரகசியமாகக் கடத்திச் செல்லப்பட்டு புதிதாகக் கட்டப்பட்ட கோவில்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டன.  அவ்வாறு இயலாதபட்சத்தில் புதிய சிலைகள் செய்யப்பட்டு கோவில்களில் நிறுவப்பட்டன.

சான்றாக, கோர்ட்டாலிமில் இடிக்கப்பட்ட ஸ்ரீ மங்கேஷ் ஆலயத்தின் மூர்த்தியும், வெர்னம் பகுதியிலிருந்தத மாலசா சிலைகளும் ப்ரியூல் ஆலயத்தில் வைக்கப்பட்டன.  அதுபோலவே கவெலொஸிம்மின் சாந்த துர்கா குவேலாவிலும், லவுட்லிமின் ராம்நாத்தும், கோல்வாவின் மஹாலக்‌ஷ்மியும் பண்டோரா ஆலயத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டனர். கோவாவிலிருந்து வெளியேறிய ஹிந்துக்கள் புதிதாகக் கட்டிய ஆலயங்கள் தென் கர்னாடகாவின் கடற்கரைப் பகுதிகளிலிருந்து கேரளாவரைக்கும் புதிய ஆலயங்களைக் கட்டினார்கள். அந்த ஆலயங்கள் இன்றைக்கும் இருக்கின்றன.

இவ்வாறு கட்டப்படும் புதிய ஆலயங்களுக்குத் தேவையான பொருள் மற்றும் பண உதவியைத் தங்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் புதிதாக மதம் மாற்றப்பட்ட ஹிந்துக்கள் அளிக்கிறார்கள் என்கிற விஷயத்தைக் கண்டுபிடித்த போர்ச்சுக்கீசிய பாதிரிகள் மிகுந்த சினம் கொண்டார்கள். மதம்மாற்றப்பட்ட பின்னரும் தங்களின் பழைய அடையாளங்களை விடாத அவர்களைக் கட்டுப்படுத்தவும், தண்டனையளிக்கவும் தேவையான  நடவடிக்கைகளில் இறங்கினார்கள். பாதிரிகள் தலைமையில் கோவவில் 1585-ஆம் வருடம் கூடியதொரு கூட்டத்தில் ஹிந்துக்களின் இந்தச் செயலுக்கு முற்றுப்புள்ளிவைக்க உடனடியாகச் சட்டமியற்ற வேண்டுமென போர்ச்சுக்கீசிய அரசருக்கு வேண்டுகோள் விடுத்தார்கள். இதன்படி மதம்மாறிய அல்லது மதம்மாறாமல் கோவாவில் இருக்கும் ஹிந்துக்கள் எவரும் அருகாமைப் பகுதிகளில் புதிதாகக் கட்டப்படும் ஆலயங்களுக்கும், அல்லது ஏற்கனவே இருக்கும் ஆலயங்களைப் பராமரிப்பதற்கும் பொருளுதவி செய்வது தடை செய்யப்படவேண்டும் என முடிவெடுக்கப்பட்டது.

இந்த காலகட்டம் வரைக்கும் ஹிந்துக்கள், மதம்மாறிய கிறிஸ்தவர்கள்மீதான நடவடிக்கைகள் இத்துடன் மட்டுமே நின்றன.  இதற்கு அடுத்த காலங்களில் இன்குசிஷன் விசாரணைகள் கோவா கிறிஸ்தவர்கள் மற்றும் ஹிந்துக்களுக்கு பெரும் கேடுகளைக் கொண்டுவந்தன.  இனிவரும் அத்தியாயங்களில் கோவாவில் இன்குசிஷன் சட்டங்கள் எவ்வாறு நடைமுறைப்படுத்தப்பட்டன என்பது குறித்தும், அதனால் உண்டான பாதகங்களைக் குறித்தும் விளக்கமாகப் பார்க்கலாம்.

[தொடரும்]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *