கொலைகாரக் கிறிஸ்தவம் — 24

கோவாவில் கிறிஸ்தவர்களாக மதம்மாற்றப்பட்ட பிராமணர்களுக்கு போர்ச்சுகீசியர்கள் மரியாதை அளிக்காமல், அவர்களைத் தங்களுக்கும் கீழானவர்களாகவே நடத்தினார்கள்.

1607-ஆம் வருடம் கோவாவின் தீவாரில் ஒரு பிராமண குடும்பத்தில் பிறந்தவரான பிஷப் மாத்யூஸ் காஸ்ட்ரோ, 1679-ஆம் வருடம் ரோம் நகரில் இறந்தவர். The Peal of India புத்தகத்தை எழுதிய அப்பே கார்ரே, கோவாவின் ஆர்ச் பிஷப்பாக இருந்த கிறிஸ்டவோ-டி- சாஹா கத்தோலிக்க உயர்பதவிகளுக்கு பிஷப் மாத்யூசை அவர் பிராமணர் என்கிற ஒரே காரணத்திற்காக சிபாரிசுசெய்ய மறுத்துவிட்டதாகக் குறிப்பிட்டிருக்கிறார்.

இன்னொருபுறம் கத்தோலிக்க பாதிரிகள் ஹிந்து சன்னியாசிகளைப் போல வேடம் தரித்து, அப்பாவி ஹிந்துக்களை மதமாற்றம் செய்தார்கள். உதாரணமாக, “ரோமக் பிராமணன்” எனத் தன்னை அறிவித்துக் கொண்ட பாதிரி டி. நொபிலி என்பவன் நூற்றுக்கணக்கான ஹிந்துக்களை மதுரையைச் சுற்றியுள்ள பகுதிகளில் மதம் மாற்றினான். ஆனால், கோவாவின் ஆர்ச் பிஷப்பாக இருந்த டி-சா, நொபிலி ஹிந்து மத உருவ வழிபாடு செய்வதாகக் குற்றம் சாட்டி கோவாவின் இன்குசிஷன் விசாரணைத் தண்டனைகள் அளிக்க முற்பட்டார். ஆனால் அப்படிச் செய்வதற்கு பாதிரிகளின் கூட்டமைப்பு ஆதரவுதராததால் நொபிலி இன்குசிஷன் விசாரணைக் கொடூரங்களிலிருந்து தப்பினான்.

இன்குசிஷன் விசாரணை அதிகாரிகளில் எவரும் இந்தியர்கள் நியமிக்கப்படவே இல்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. போர்ச்சுகலைச் சேர்ந்த வெள்ளை இனத்துப் பழமையான கிறிஸ்தவ பரம்பரையில் வந்தவர்கள், யூத, இஸ்லாமியக் கலப்பு சிறிதும் இல்லாத, புதிதாக மதமாற்றம் செய்யப்பட்ட குடும்பத்திலிருந்து வராதவர்கள் மட்டுமே இன்குசிஷன் விசாரணை அதிகாரிகளாக நியமிக்கப்பட்டனர். அவர்களின் தகுதிகள் ஆழ்ந்து ஆராயப்பட்டன. அவர்கள் நேர்மையானவர்களாக, எளிமையானவர்களாக, கிறிஸ்துவுக்கு உண்மையானவர்களாக, கல்வி கற்றவர்களாக, கடிதங்களும் குறிப்புகளும் எழுதத் தெரிந்தவர்களாக இருக்க வண்டியது முக்கியம். ஆனால் உண்மையில் அப்படி நேர்மையாளர்களாக நடந்ததார்களா என்பது சந்தேகமே.

கோவாவின் இன்குசிஷன் சமயத்தில் அங்கு பயணித்த ஃப்ரெஞ்சுப் பயணியான டாவர்னியரின் கூற்றின்படி, கிறிஸ்துவுக்கு எதிரானவர்கள் என அறியப்படுகிறவர்களின் வீடுகளில் தேடுதல் நடத்துகையில், அங்கிருந்த விலையுயர்ந்த மேசை, நாற்காலிகள், தங்க, வெள்ளி நகைகள், பணம் போன்றவை அந்தக் குற்றவாளி குற்றமற்றவன் என நிரூபணமானால், அவனிடமே திரும்பக் கொடுக்கவேண்டும் என்பது சட்டம். ஆனால் உண்மையில் அப்படி நடக்கவில்லை. அதற்குப் பதிலாக இன்குசிஷன் விசாரணைகள் நடத்துவதற்கு அங்கிருந்து எடுத்துச் செல்லப்பட்ட பொருட்கள் உபயோகப்பட்டுத்தப்பட்டுவிட்டதாகக் கூறப்பட்டது.

இதனையே இன்னொரு ஃப்ரெஞ்சுப் பயணியான டெல்லோன், ஜனங்களின் மனதில் அச்சத்தை மூட்டிய இன்குசிஷன் அதிகாரிகள் அதனைத் தங்களின் சுயநலத்திற்காக உபயோகப்படுத்திக் கொண்டார்கள். கைதிகளிடம் கைப்பற்றப்பட்ட விலையுயர்ந்த பொருட்களை ஏலம்விடும் சமயத்தில் தங்களின் சொந்த வேலைக்காரர்களை அங்கு அனுப்பிக் குறைந்த விலைக்கு அந்தப் பொருட்களை வாங்கச்செய்தனர். அவர்களை எதிர்த்து அதிக விலைக்கு ஏலம்கேட்க எவரும் முன்வரவில்லை என்பது முக்கிய காரணம். எவ்வளவு பணம் குற்றவாளிகளிடமிருந்து கைப்பற்றப்பட்டது என்பதற்கு முறையான கணக்குகளையும் அவர்கள் இன்குசிஷன் அலுவலகத்திற்குச் சொல்லவில்லை. அவர்கள் சொன்ன தொகையே ஏற்றுக்கொள்ளப்பட்டது. மீண்டும் அதனைச் சரிபார்க்க எவரும் முன்வராததால் இன்குசிஷன் அதிகாரிகள் கொழுத்த லாபமடைந்தார்கள்.” என எழுதியுள்ளார்.

விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அப்பாவி ஹிந்துக்களின் வீடுகளுக்குச் சென்று அவர்களின் மனைவிகளைச் சந்தித்த இன்குசிஷன் அதிகாரிகள், அவர்களின் கணவர்களை விடுதலை செய்வதாக சத்தியம்செய்து  பணத்தை வாங்கிக்கொண்டு சென்ற சம்பவங்களும் பதியப்பட்டிருக்கின்றன.

இன்குசிஷன் விசாரணை செய்தவர்கள் செய்த பல நேர்மையற்ற செயல்களைக் குறித்தான தகவல்கள் அனைத்தும் இன்றைக்கும் கிடைக்கின்றன. உதாரணமாக, கோவாவின் உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த டாக்டர் அண்டோனியோ நூரன்ஹா எழுதிய “The Hindus and the Portuguese Republic” இதுகுறித்தான பல தகவல்களை அளிக்கிறது. லிஸ்பனின் எவோரா நகரிலிருந்த கதீட்ரல் சர்ச்சின் ஆர்ச் பிஷப்பாக 1897-ஆம் வருடம் பணியாற்றிய பாதிரி அண்டோனியோ வியரியா இன்குசிஷன் விசாரணைகளைக் குறித்து இவ்வாறு குறிப்பிடுகிறார்:

இன்குசிஷன் விசாரணைகளை நடத்திய டிரிபியூனல்கள் எல்லா இடத்திலும் இருந்தனவென்றாலும், கோவாவில் இருந்த இன்குசிஷன் விசாரணை டிரிபியூனலுக்கு இணையான படுமோசமான, இனவெறி கொண்ட, அயோக்கியர்களால் முழுமையாக ஆக்கிரமிக்கப்படதொரு டிரிபியூனல் வேறெங்கும் இல்லை. இங்கிருந்த இன்குசிஷன் அதிகாரிகள் ஹிந்துப் பெண்களையும் கைதுசெய்து சிறையிலடைத்தார்கள். அங்கு தங்களது மிருகவெறியை அவர்களிடம் தீர்த்துக்கொண்ட பின்னர் அந்தப் பெண்களைக் கிறிஸ்துவுக்கு எதிரானவர்கள் எனக் கூறி கட்டைகளில் கட்டி தீவைத்து எரித்துக் கொன்றார்கள்

இன்குசிஷனின் டிரிபியூனலின் இன்னொரு முக்கிய வேலை புத்தகங்களை தணிக்கைசெய்வது. இன்குசிஷன் சட்டங்களில் தடைசெய்யப்பட்ட புத்தகங்களை வைத்திருப்பதும், அதனைப் படிப்பதும் குற்றம் எனத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. தடைசெய்யப்பட்ட புரெட்டஸ்டண்ட் மதப் புத்தகங்களை வைத்திருந்த தனது கணவனை கத்தோலிக்க மனைவியானவள் இன்குசிஷன் விசாரணை அதிகாரிகளிடம் காட்டிக்கொடுத்த சம்பவங்களும் உண்டு. புத்தகங்களைப் படித்து அவற்றைத் தணிக்கை செய்வதற்கென தனியான விசாரணை அதிகாரிகளும் நியமிக்கப்பட்டிருந்தார்கள். குவாலிஃபிகடொரெஸ் [Qualificadore]s என்றறியப்பட்ட அவர்களின் முக்கிய வேலை கோவாவில் எழுதப்பட்ட புத்தகங்கள் அச்சடிக்கப்படுவதற்கு முன்னர் அவற்றைப் படித்து கிறிஸ்துவுக்கு எதிரானவற்றை நீக்குவது, வெளியிலிருந்து கொண்டுவரப்படும் புத்தகங்களை ஆராய்ந்து, அவற்றில் கத்தோலிக்க மதத்திற்கு எதிராக ஏதேனும் சொல்லப்பட்டிருக்கிறதா எனக் கண்டறிவது.

தடை செய்யப்பட்ட புத்தகங்களின் பட்டியலையும் அந்தத் தணிக்கை அதிகாரிகள் வைத்திருந்தார்கள். கோவாவிலிருந்த புத்தகக் கடைகளுக்கு வருடத்தில் பலமுறை சென்று அங்கிருந்த புத்தகங்களை ஆராய்ந்தார்கள். அவற்றில் ஏதனும் தடைசெய்யப்பட்ட புத்தகங்களோ, பரமண்டலத்திலிருக்கும் பிதாவுக்கு எதிரான, கிறிஸ்துவமதத்திற்கு எதிரான புத்தகங்களோ இருந்தால் உடனடியாக அவற்றை வெளியே எடுத்துத் தீவைத்துக் கொளுத்தினாரகள். பின்னர் அந்தப் புத்தகங்களைக் குறித்த தகவல்கள் இன்குசிஷன் விசாரணைக் கமிட்டிக்குத் தெரியப்படுத்தப்பட்டு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. கோவாவிற்குள் நூலகமோ அல்லது புத்தகக் கடையோ வைத்திருந்த எவரேனும் இறந்துவிட்டால், தடைசெய்யப்பட்ட புத்தகங்கள் எதையேனும் வைத்திருந்தானா என்று  அவனது வீட்டிலும், கடையிலும் ஆதியோடு அந்தமாக தேடுதல் வேட்டைகள் நடத்தப்பட்டன.

புதிதாக எழுதப்பட்ட புத்தகங்கள் அச்சடிப்பதற்கு முன்னால் இன்குசிஷன் டிரிபியூனலுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அதில் ஆட்சேபகரமாக எதுவும் இல்லாத பட்சத்தில் அச்சடிக்க அனுமதி லைசென்ஸ் வழங்கப்பட்டது. அந்த அனுமதி ஒவ்வொரு புத்தகத்தின் முதல் பக்கத்தில் அச்சடிக்கப்பட்டது. பதினேழாம் நூற்றாண்டில் அச்சடிக்கப்பட்ட புத்தகங்களில் மராத்தியிலும், வட்டார மொழியிலும் அந்த அனுமதிச் சீட்டுகள் அச்சடிக்கப்பட்டன.

அதேசமயம், சமஸ்கிருதத்திலோ, மராத்தியிலோ எழுதப்பட்ட அத்தனை புத்தகங்களும் — அவை எதனைப் பற்றி இருந்தாலும் — பறிமுதல்செய்யப்பட்டு எரிக்கப்பட்டன. அந்தப் புத்தகங்கள் கிறிஸ்துவுக்கு எதிரான உருவ வழிபாடு குறித்த கருத்துக்களைக் கொண்டிருக்கலாம் என்கிற சந்தேகமே அந்தப் புத்தகங்களைக் கொளுத்தக் காரணமாயின. இந்த மூடத்தனத்தினால், பல முக்கியமான, மதச் சார்பு சிறிதும் அற்ற இலக்கியங்களும், அறிவியல் குறித்த புத்தகங்களும், கலை, பண்பாடு குறித்த புத்தகங்களும் தீக்கு இரையாகியிருக்கலாம். இந்திய மொழிப் புத்தகங்கள் மட்டுமல்லாமல், போர்ச்சுகலைத் தவிர்த்த பிற ஐரோப்பியமொழிப் புத்தகங்களும் இவ்வாறு எரிக்கப்பட்டன. இந்த மூடத்தனங்கள் எல்லாம் கோவாவில் இன்குசிஷன் விசாரணைகள் ஆரம்பமாவதற்கு முன்பே தொடங்கிவிட்டன என்பதினை நீங்கள் அறிய வேண்டும். இதனைக் குறித்து நவம்பர் 28, 1548-ஆம் வருடம் பாதிரி ஜொகோவோ-டி-அல்பர்கர்க் எழுதிய கடிதமொன்று இதனைத் தெளிவாகக் குறிப்பிடுகிறது.

1606-ஆம் வருடம் கூடிய ஐந்தாவது இன்குசிஷன் கமிட்டிக் கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது,

புனித கவுன்சிலின் தீர்மானத்தின்படி, எல்லாக் கப்பல்களில் பணிபுரியும் கேப்டன்களும், படைவீரர்களும், கிறிஸ்தவர்களும் ஆங்கிலக் கப்பல்களிலிருந்தோ அல்லது டச்சுக்கப்பல்களிலிருந்தோ கொண்டுவரப்படும் புத்தகங்களை — அது எந்த மொழியில் எழுதப்பட்டிருந்தாலும் படிக்கக்கூடாது எனவும், அந்தப் புத்தகங்களை பிறருக்குக் கொடுக்கக் கூடாது எனவும் அறிவிக்கப்படுகிறது. அம்மாதிரியான புத்தகங்களைக் கண்டவர்கள் உடனடியாக இன்குசிஷன் விசாரணை அதிகாரிகளிடம் தெரிவிக்கும்படியும் கூறப்படுகிறது. இந்த அறிவிப்பு எல்லா சர்ச்சுகளிலும் மற்ற அரசாங்கத்தின் அனைத்துப் பகுதிகளிலும் வைக்கப்பட வேண்டும்.

அவ்வாறு பிற ஐரோப்பியர்கள், இந்தியர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட புத்தகங்கள் பெட்டிகளில் வைக்கப்பட்டு பெருவிருந்து நாளன்று (Auto da Fe) ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, கொளுத்தப்பட்டன. எனினும், சில இன்குசிஷன் பாதிரிகள் இந்தப் புத்தகங்களிலிளுள்ள உள்நாட்டு இலக்கியங்களை அழிப்பது மட்டுமல்லாமல் இந்திய மொழிகளில் எழுதப்பட்ட எல்லாப் புத்தகங்களையும் எரித்துவிட்டு, அதற்குப் பதிலாக போர்ச்சுகீசிய புத்தகங்களை மட்டுமே கொண்டுவர ஆசைப்பட்டார்கள்.

இதைக் குறித்து குன்ஹா ரெவாரா அவரது கொங்கணிமொழி வரலாறு [“Historical Essay on Konkani Language”] என்னும் புத்தகத்தில் இந்த மூடத்தனங்களைக் குறித்துத் தெளிவாக விளக்கியிருக்கிறார். கோவாவின் ஹிந்துக்கள் அவர்களது தாய்மொழியில் பேசுவதும், எழுதுவதும் தடைசெய்யப்பட்டு அதற்கு பதிலாக அவர்கள் போர்ச்சுகீசியமொழியை மட்டுமே பேச, எழுதவேண்டும் என நிர்பந்தப்படுத்தப்பட்டார்கள். அவ்வாறு அவர்களின் மொழியை அழிப்பதால் அவர்களால் தங்களின் மொழியில் எழுதப்பட்ட — கிறிஸ்துவுக்கு எதிரான — புத்தகங்களைப் படிக்கவும், ஹிந்து மதச் சடங்குகளைப் பின்பற்ற இயலாமலும் போகும் என்பது அவர்களின் சிந்தனைப் போக்காக இருந்தது. போர்ச்சுகீசிய மொழியைப் பேச இயலாத கிராமத்து மக்கள் பலர் கைதுசெய்யப்பட்டார்கள். மேலும் பல மதமாற்றம் செய்யப்பட்ட ஹிந்துக்கள் ரகசியமாக ஹிந்து ஆலயங்களுக்குச் செல்வதனையும், பாகனீய கடவுள்களை வணங்குவதனையும் கண்டு வெகுண்ட பாதிரிகள், அவர்களின் மொழியை அழித்தாலன்றி கிறிஸ்துவின் போதனைகளுக்கு அவர்கள் செவ சாய்க்க மாட்டார்கள் என உரக்க குரலெழுப்பினார்கள்.

அவ்வாறு ரகசியமாக ஹிந்து ஆலயங்களுக்குச் சென்ற — மதம்மாற்றம் செய்யப்பட்ட ஹிந்துக்கள் பலரும் — இன்குசிஷன் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுக் கொடூரமான தண்டனைகளுக்கு ஆளானார்கள்.

[தொடரும்]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *