முஸ்லீம்கள் மீது பழி வந்து கலவரம் வெடித்து முஸ்லிம்களை கொலை செய்ய வேண்டும் என்ற காரணத்திற்காக தனது கையில் இஸ்மாயில் என்று முஸ்லிம் பெயரை பச்சைக் குத்திக் கொண்டு காந்தியைக் கொன்றார் கோட்சே – இப்படி ஒரு பொய்ப் பிரச்சாரம் தொடர்ந்து நாடுமுழுவதும் நடைபெற்று வந்துக் கொண்டிருக்கிறது. இது பலரும் எவ்வித ஆராய்ச்சியும், ஆதாரமும், சரியான தரவுகளும் இல்லாமல் தொடர்ந்து சொல்லிவரும் குற்றச்சாட்டு.
இதற்கு ஏதாவது ஆதாரம் இருக்கிறதா? இதுவரை இந்தக் குற்றச்சாட்டை சொல்பவர்கள் ஏதாவது ஒரு ஆதாரத்தையாவது பொதுவெளியில் வெளியிட்டிருக் கிறார்களா? ஒரு ஆதாரமும் இல்லை. இதுவரை யாரும் பொதுவெளியில் அதற்கான ஆதாரத்தை வெளியிட்டதில்லை.
1948 ஜனவரி 30 அன்று சரியான மாலை 5.20க்கு தன் கையில் வைத்திருந்த பிஸ்டலால் சுட்டுக் கொன்றார் கோட்சே. ஆல் இந்தியா ரேடியோ மூலம் நாதுராம் விநாயக் கோட்சே என்ற இந்துவால் மகாத்மா காந்திஜி இன்று மாலை 5-20 மணிக்குப் பிர்லா மாளிகையில் சுட்டுக் கொல்லப்பட்டார் என்று அன்று மாலை சரியாக 6.00 மணிக்கு மக்களுக்கு அறிவிக்கப்பட்டது.
தான் இந்து அல்ல முஸ்லிம்தான் என்று விடாப்பிடியாக நாதுராம் கோட்சே சொல்லி யிருந்தால் நிலைமையே வேறுமாதிரியாக மாறியிருக்கும். ஆனால் காந்திஜியை சுடப்பட்டு 40 நிமிடங்களிலேயே வானொலியில் சுட்டவர் இந்து என்று அறிவிக்கிறார்கள் என்றால் தான் இந்து என்று உண்மையை கோட்சே ஒளிவுமறைவு இல்லாமல் சொல்லியிருக்கிறார் என்றுதான் அர்த்தம்.
அன்றைக்கு இரவே செய்தித்தாள்களில் காந்தி சுடப்பட்டார் என்ற செய்தி வந்துவிட்டது. அதில் ஒரு இடத்தில்கூட கோட்சே கையில் பச்சைக் குத்திக்கொண்டு காந்தியை சுட்டுக் கொன்றார் என்ற செய்தி வரவில்லை.
மருத்துவ குறிப்புகளில் உள்ள அங்க அடையாளங்கள் பகுதியில்கூட அவர் கையில் பச்சைக் குத்திக்கொண்டிருந்தார் என்ற எந்தவிதமான தகவல்களும் இல்லை.
காவல்துறையில் முதல் தகவல் அறிக்கை மற்றும் பின்னர் வெளியிடப்பட்ட எந்த குறிப்புகளிலும்கூட கையில் பச்சைக் குத்திக்கொண்டிருந்தார் என்ற குறிப்பு இல்லை.
நீதிமன்றத்தில் அவர்மேல் குற்றம் சுமத்திய அரசு வழக்கறிஞரோ அல்லது வேறு எந்த வழக்கறிஞரோகூட அவர் கையில் இஸ்மாயில் என்று பச்சைக்குத்திக்கொண்டிருந்தார் என்று குற்றம் சாட்டவில்லை.
கோட்சே மற்றும் அவரது கூட்டாளிகள்மீது சுமத்தப்பட்ட குற்றங்கள் இவைதான் :-
குற்றவாளிகள் மீது சதித்திட்டம், கொலை மற்றும் கொலை முயற்சி, வெடிகுண்டு தயாரித்தல், கடத்துதல், தன் இருப்பில் சட்டவிரோதமாக வைத்திருத்தல், அவற்றைச் சட்டத்திற்கு முரண்பாடாகப் பயன்படுத்துதல் மற்றும் சம்பந்தப்பட்ட ஆயுதங்களைச் சட்டத்திற்குப் புறம்பான முறையில் தக்க வைத்துக் கொண்டு துராக்கிருதமாகப் பயன்படுத்துதல், குற்றத்திற்கு உடந்தையாக இருத்தல் என்ற பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது (Criminal Conspiracy, Murder, Attempt to Murder, Causing Explosion, Attempting to cause explosion, Making and possessing explosives, Transporting and controlling of Arms and Ammunitions, and using the explosives, Abettment of an offence – under Indian Panel code Sections 120-B, 302, 109, 114, 115, Explosive Substances Act VI of 1908, Indian Arms Act XI of 1878)
கோட்சே மற்றும் அவரது கூட்டாளிகளுக்கு எதிராக அரசுத் தரப்பிலிருந்து சுமார் 149 சாட்சிகள், ஆவணங்கள், கடிதங்கள், தந்தி மற்றும் தபால்கள், கொலையாளிகளின் ஆடைகள், கொலைக்கான ஆயுதங்கள் (கருப்பு பெரட்டா) கொலையில் பயன்படுத்திய வாகனங்கள், பத்திரிகை செய்திகள், இது தவிர அதிமுக்கியமாகக் கோட்சேவின் கூட்டாளி திகம்பர பாட்ஜேவின் ஒப்புதல் வாக்குமூலம் ஆகியவை நீதிமன்றத்தின் முன் வைக்கப்பட்டன.
இதில் ஒரு இடத்தில்கூட கோட்சே கையில் பச்சைக் குத்தியிருந்தார் என்று அரசுத் தரப்போ, பத்திரிகைகளோ குற்றம் சாட்டவும்வில்லை; சொல்லவும்வில்லை; எழுதவுமில்லை. அதற்காக எந்த பிரிவிலும் வழக்குப்போடவில்லை.
மாறாக ஒரு இந்து கொன்றார் என்ற செய்திதான் அன்று இரவே பத்திரிகைகளில் வெளியானது.
கொன்றவர் இந்து என்று ஏன் எழுத வேண்டும்? அவர் இஸ்மாயில் என்று முஸ்லிம் பெயரை கையில் குத்திக் கொண்டிருந்தால்தானே அவரை இந்து என்று குறிப்பிடப் பட்டிருக்க வேண்டும். இல்லையென்றால் கோட்சே என்பவரால் சுட்டுக் கொல்லப்பட்டார் என்றுதானே வெளியிடப்பட்டிருக்கும்?
நியாயமான சந்தேகம்தான்.
பிரிவினைக்குப் பிறகு இந்துக்கள், முஸ்லிம்கள் இந்த இரு சமுதாயத்தில் இருந்த – பிரிவினையால் மிக கொடூரமாகப் பாதிக்கப்பட்டவர்கள் இருந்தார்கள். குடும்பத்தை இழந்த, உறவினர்களை இழந்த, நிலபுலன்களை இழந்த லட்சக்கணக்கான இந்துக்கள் இருந்தனர். அவர்கள் சொந்த நாட்டிலேயே அகதிகளாக இருந்தனர். கோடீஸ்வரர்களாக இருந்தவர்கள் ஒரேநாளில் பிச்சைக்காரர்களாக ஆனார்கள். உற்றார் உறவினர்களோடு இருந்தவர்கள் ஒரேநாளில் அனாதையானார்கள். சொல்ல முடியாத, தாங்க முடியாத மனவேதனையில் – வலியின் வேதனையில் டெல்லி தெருவோரமாக அலைந்துகொண்டிருந்தார்கள். டெல்லியில் இவர்களால் காந்தியின் உயிருக்கு ஏதாவது நேரலாம் என்ற கவலை, தகவல் எல்லாமே இருந்தது. அதனால்தான் காந்தியைக் கொன்றவர் எந்த மதத்தைச் சார்ந்தவர் என்று சொல்ல வேண்டியது அப்போது கட்டாயமாகியது. அதனால்தான் பத்திரிகைகளில் இந்து ஒருவர்தான் காந்தியை கொன்றார் என்று சொல்ல வேண்டி வந்தது.
இதில் கவனிக்க வேண்டிய விஷயம் மற்றொன்று உண்டு.
முதலில் காந்தியை கொல்ல எந்த வேஷத்தில் போகலாம் என்ற விவாதம் வந்தது. பர்தா போட்டுக் கொண்டு போய் சுடலாம் என்று சொன்னபோது அதை மறுத்தவர் நாதுராம் கோட்சே.
கோட்சே நினைத்திருந்தால் முஸ்லிம் போல தாடி வைத்துக் கொண்டு போய் சுட்டு இருக்கலாம்.
கோட்சே நினைத்திருந்தால் சுடும்போது அல்லாகு அக்பர் என்று கத்திக் கொண்டு சுட்டு இருக்கலாம்.
கோட்சே நினைத்திருந்தால் சுன்னத் செய்து கொண்டு சுட்டு இருக்கலாம்.
ஆனால் இதில் எதையுமே செய்யாமல் காந்தியை சுட்ட கோட்சே, முன்னரே திட்டம்போட்டபடி சுட்டுவிட்டு போலிஸிடம் பிடிபட வேண்டும், ஓடக்கூடாது என்ற முடிவோடு வந்து, சுட்டுவிட்டு தப்பி ஓடாமல் அங்கேயே இருந்தார்.
கோட்சே நீதிமன்றத்தில் வாக்குமூலம் கொடுத்தபோது, “காந்தி சுயநலம் இல்லாதவர். நாட்டுக்காகத் துன்பங்களை ஏற்றவர். சொந்த ஆதாயத்துக்காக எதுவும் செய்யவில்லை. மக்கள் மனதில் விழிப்புணர்வைக் கொண்டுவந்தவர்” என்பதை வெளிப்படையாக ஒப்புக்கொண்டார்.
காந்தியைச் சுடும்போது கூட மண்டியிட்டு வணங்கிவிட்டுத்தான் சுட்டார் என்கின்றன குறிப்புகள்.
கோட்சே சிம்லா (3-6-49) சிறையில் இருக்கும்போது காந்திஜியின் மகனான ராம்தாஸ் காந்திக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில், ‘தன்னால் ராம்தாஸ் காந்திக்கும், காந்தியின் குடும்பத்திற்கும் மிகுந்த மனத்துன்பம் ஏற்பட்டுள்ளது என்றும், அதற்கு ஆறுதல் கூறத்தகுந்த வார்த்தைகள் ஏதுமில்லை என்றும், காந்தியின் சாவிற்கு மனிதாபிமான முறையில்தான் வருத்தப்படுவதாகவும் எழுதியிருந்தார். மேலும் அதில், ஆனால் காந்தியைச் சுட்ட தன் செயலுக்காகத் தான் எள்ளளவும் வருத்தமோ விசனமோப்படவில்லை என்றும், நாட்டிற்காகத் தான் செய்தது மிகவும் சரியானதுதான்’ என்றும் எழுதினார்.
எல்லோருமே காந்திஜி கொலையில் தனக்கு சம்பந்தமில்லை என்று வாதாடியபோது, கோட்சே மட்டும்தான் கடைசிவரை உறுதியாக, தான் மட்டும்தான் தன்னிச்சையாக அரசியல் காரணங்களுக்காக காந்தியைக் கொன்றதாகவும், இதில் எந்தவித அமைப்போ அல்லது குற்றம் சாட்டப்பட்ட மற்றவர்களுக்கோ எந்த ரீதியிலும் சம்பந்தமில்லை என்றும், தான் நல்ல திட சிந்தனையில் காந்தியைக் கொல்ல வேண்டும் என்ற சரியான எண்ணத்துடன்தான் கொலை செய்ததாகவும் கூறினார்.
கோட்சேவுக்கு தூக்குதண்டனை விதிக்கப்பட்டும் அதை எதிர்த்து மேல்முறையீடு எதையும் கோட்சே செய்யவில்லை என்பதையும் பார்க்கும்போது கோட்சே இதையெல்லாம் முன்பே திட்டமிட்டு இருக்கிறார் என்பதை புரிந்து கொள்ளலாம்.
இப்படி திட்டமிட்டு செயல்பட்ட கோட்சே, ஒருபோதும் தன் கையில் இஸ்மாயில் என்று பச்சைக் குத்திக்கொண்டு காந்திஜியை சுடவில்லை. அதற்கு அவசியமுமில்லை.