எனது காந்தி: ஒரு ஸ்வயம்சேவகனின் பார்வையில்…

ராமக்ருஷ்ணோ தயானந்தோ ரவீந்த்ரோ ராமமோஹன:

ராமதீர்த்தோ(அ)ரவிந்தஸ்ச விவேகானந்த உத்யசா: 

தாதாபாயீ கோபபந்து: திலகோ காந்திராத்ருதா:

ரமணோ மாலவீயஸ்ச ஸ்ரீசுப்ரஹ்மண்ய பாரதீ

(ஏகாத்மதா ஸ்தோத்திரத்தில் இருந்து)
(மகாத்மா காந்தி 150வது ஜெயந்தி சிறப்புப் பதிவு)

காந்தி என்ற பெயரை நான் முதன்முதலில் கேட்டது, ஒரு கேலிப்பொருளாக. அதுவும் ‘காந்தி’ என்ற சொல்லாலேயே நான் கேலி செய்யப்பட்டேன். அப்போது எனக்கு ஆறு வயது. பள்ளி முடிந்து வீடு திரும்பும்போது, பக்கத்து வீட்டு அண்ணன்கள் ஹக்கீமும் அபுவும் என் பின்னால் “காந்தி, காந்தி” என்று பள்ளியிலிருந்து வீடு வரை சொல்லிக் கொண்டே வந்தனர். அது என்ன என்று தெரியாதபோதும், அந்தச் சொல்லால் அவர்கள் என்னை கேலி செய்வது புரிந்தது.

வீடு திரும்பியதும், அம்மாவின் மடியில் முகம் புதைத்து அழுதேன். ஹக்கீமும் அபுவும் என்னை  ‘காந்தி’ என்று சொல்லி கேலி செய்வதாக விசும்பிக்கொண்டே சொன்னேன். அம்மா சிரித்தார். “காந்தின்னு தானே சொன்னார்கள். நல்லது தானே? அவர் நம் நாட்டுக்கு சுதந்திரம் வாங்கித் தந்த மகாத்மாவாக்கும். இன்னொரு முறை கேலி செய்தால் ஆமாண்டா நான் காந்தித் தாத்தா தான் என்று சொல்லி விடு” என்ற அம்மா, காந்தியின் தாடை போல நீண்டிருந்த எனது தாடையை முத்தமிட்டுக் கொஞ்சியதும், மகாத்மா காந்தி பற்றி ஏதோ சொன்னதும் இன்னமும் நினைவில் இருக்கிறது.

அடுத்தடுத்த வகுப்புகளில் பயிலும்போது காந்தி தாத்தாவும் நேரு மாமாவும் யார் என்பது தெரிய வந்தது. அப்போதெல்லாம் சுதந்திர தினத்தில் கொடியேற்றி ஆசிரியர் ஒருவர் நாட்டின் விடுதலை பற்றிப் பேசுவார். அப்படித்தான் மகாத்மாவின் சித்திரம் எனக்குள் வளர்ந்தது. மகாகவி பாரதியும் நேதாஜியும் வ.உ.சி.யும் மட்டுமே அப்போது இந்தக் குட்டி மூளைக்குள் புகுந்திருந்தன.

***

நான்காம் வகுப்பு படித்தபோது ஒருநாள் எனது அம்மாவும் அப்பாவும் பேசிக் கொண்டிருந்ததைக் கேட்டேன். “இத்தனை நாட்களுக்குப் பிறகு ஓர் உண்மையான காந்தியவாதி பிரதமர் ஆகி இருக்கிறார். இனியாவது நாடு திருந்துமா?” என்று அவர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் குறிப்பிட்டது மொரார்ஜி தேசாய் பற்றி. மறுநாள் பள்ளிக்கு சென்றபோது பெட்டிக்கடையில் விற்ற மொரார்ஜி தேசாய் படத்தை 50 காசு கொடுத்து வாங்கி சட்டைப்பையில் வைத்துக் கொண்டேன்.

காந்தி குல்லாய் போட்ட தேசாய் என்னைப் பார்த்து வாஞ்சையுடன் சிரிப்பது போலிருந்தது. அந்த ஆண்டு பள்ளியில் ஏதோ ஒரு நிகழ்ச்சியில் காந்திஜி குறித்து 5 நிமிடம் பேசியதாக ஞாபகம். பள்ளி ஆசிரியர்களின் மகன் என்பதால் எனக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது.

***

ஆறாம் வகுப்பு படித்தபோது மகாத்மா காந்தியின் ‘சத்திய சோதனை’ துணைப்பாட நூலாக இருந்தது. அது மாணவர்களுக்கேற்ற வகையில் சுருக்கி எளிமையாக்கப்பட்டதாக இருந்தது. அதை இரண்டே நாளில் படித்து முடித்துவிட்டேன். அதைப் பார்த்துக் கொண்டிருந்த எனது தந்தை, மறுநாள் முழுமையான ‘சத்திய சோதனை’ நூலை வாங்கிவந்து கொடுத்தார். எனது வாசிப்பு வேகம் அவரைக் கவர்ந்திருக்க வேண்டும்.

தென் ஆப்பிரிக்காவில் ரயிலில் இருந்து கீழே தள்ளிவிடப்பட்ட மோகன்தாஸின் கதையைப் படித்தபோது என்னை அறியாமல் கண்ணீர் உகுத்தேன். காந்தி என்பவர் சாதாரணமானவர் அல்ல என்று மனதில் பதிந்தது. ஆனால், தனது பலவீனங்களையும் அவர் சொல்லிச் செல்வது அந்த வயதில் எனக்கு புரியாத புதிராகவே இருந்தது.

***

எங்கள் வீட்டுக்கு கல்கி, ஞானபூமி, தினமணி ஆகிய பத்திரிகைகள் வந்துகொண்டிருந்தன. கல்கியில் ராஜ்மோகன் காந்தி எழுதிய ராஜாஜியின் வாழ்க்கை வரலாறு தொடர் எனக்கு மிகவும் பிடித்தமானதாக இருந்தது. அதில்தான் இந்திய வரலாற்றின் ஊடும் பாவுமான தோற்றத்தை முதன்முதலில் தரிசித்தேன். ராஜாஜி வாழ்க்கையைச் சொல்கையில் அப்போதைய இந்தியாவின் அவலத்தையும் பெருமையையும் கூடவே பதிவு செய்திருக்கிறார் ராஜ்மோகன் காந்தி. இஸ்லாமியர்களின் மதவெறிப்போக்கால் நாடு அடைந்த நாசங்களை அதில்தான் முதன்முதலாக நான் படித்தேன்.

பாரதம் பிளவுபட்ட நாட்களின் வலியையும், அதனால் ஏற்பட்ட பேரழிவையும் படித்தபோது, மகாத்மா காந்தி மீது எனக்கு கோபம் வந்தது. இத்தனைக்குப் பிறகும் காந்திஜி முஸ்லிம்களை ஆதரித்ததை என்னால் ஏற்க முடியவில்லை. இதையெல்லாம் விவாதிக்கும் அளவுக்கு நான் வளர்ந்த கிராமத்தில் நண்பர்களும் இல்லை.

ஞானபூமி மாத இதழைப் படித்தபோது, நமது மதத்தின் அருமை பெருமைகள் புரியத் துவங்கின. அவ்வப்போது துக்ளக் வார இதழை அப்பா வாங்கி வருவார். அதையும் படித்து விடுவேன். அதிலிருந்து, மொரார்ஜி ஆட்சியை இந்திரா காந்தி கவிழ்த்து விட்டதை அறிந்துகொண்டேன்.

காந்தி என்ற பெயரில் உள்ள ஒருவர் இப்படி செய்யலாமா என்று எனது சந்தேகத்தை அம்மாவிடம் கேட்டபோது, அவர்தான், மகாத்மா காந்திக்கும் இந்திரா காந்திக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று விளக்கமாகச் சொல்லி புரியவைத்தார்.

தினமணி நாளிதழில் வெளியான செய்திகள் மூலமாக ஓரளவு தேசிய அரசியல் நிலவரத்தை அறிந்திருந்தேன். இந்திரா காந்தி கொல்லப்பட்டபோது நடந்த கலவரங்கள் குறித்த செய்திகள், எனக்கு சுதந்திரம் பெற்றபோது நேரடி நடவடிக்கை எடுத்த முஸ்லிம் லீகின் கலவரங்களை நினைவுபடுத்தின. அவர்களுக்கு மட்டும் விசேஷமான மதிப்பு கருணாநிதி உள்ளிட்ட அரசியல்வாதிகளால் அளிக்கப்படுவதை விபரீதமாக உணர்ந்தேன்.

இந்த பத்திரிகை வாசிப்பனுபவம் மூலமாக, காந்திஜி மூளையற்ற ஒரு சுயநலவாதி என்ற எண்ணத்தை எப்படியோ நான் அடைந்து விட்டிருந்தேன். தனது மதத்துக்கே கேடு விளைவித்த ஒரு அரசியல் தலைவரான அவரை கோட்சே என்ற ஹிந்து மத வெறியன் சுட்டுக் கொன்றது நியாயமே என்ற முடிவுக்கும் நான் வந்திருந்தேன்.

***

ஒரு நாள் இரவில் சாப்பாட்டு வேளையில் பேசிக்கொண்டிருந்தபோது, காந்தி கொல்லப்பட்டது மிகவும் சரி என்று நான் சொன்னேன். அப்போது எனக்கு அநேகமாக 12 வயது இருக்கலாம். உடனே எனது அம்மா கடுமையாக என்னைத் திட்டினார். “உனக்கு என்ன தெரியும் அவரைப் பற்றி? அவரைப் போன்ற மகான்கள் கோடியில் ஒருவர் தான் பிறப்பார்கள். அவரைப் பற்றி பேசவே நமக்கு அருஹதை இல்லை. இப்படியெல்லாம் எப்போதும் பேசாதே” என்றார் மிகவும் கோபத்தோடு. அப்பா ஏதும் சொல்லவில்லை.

எனக்கு அம்மாவின் கோபம் ஏன் என்று புரியவில்லை. இத்தனைக்கும் எங்கள் வீட்டில் ஆன்மிக நம்பிக்கையும் ஹிந்து சமய உணர்வும் அதிகமாக இருந்ததற்குக் காரணமே அம்மா தான்.

மறுநாள் கோவை சென்றிருந்த அப்பா, ‘ஜனகணமன’ என்ற புத்தகத்தை வாங்கி வந்து கொடுத்தார். அது எழுத்தாளர் மாலன் எழுதிய புதினம். அதற்கு முன் தமிழ்வாணன், சாண்டில்யன், ராஜேஷ்குமார், லக்‌ஷ்மி, சுஜாதா ஆகியோர் எழுதிய புதினங்களைப் படித்திருக்கிறேன். ஆனால் மாலனின் புதினம் என்னை அப்படியே வசீகரித்துக் கொண்டது.

மகாத்மா காந்தி கொலை தொடர்பான புதினம் அது. வித்யாசமான மாறுபட்ட காட்சி நடையில் அவர் எழுதியிருந்த அந்த சிறு புதினத்தை ஒரே இரவில் படித்து முடித்தேன். அந்தக் கதையின் முன்னுரையில் மாலன் தனது அனுபவம் ஒன்றைக் குறிப்பிட்டிருக்கிறார்.

சாப்பாட்டு மேஜையில் அரசியல் பேசிக் கொண்டிருந்தபோது, காந்திஜியைப் பற்றி அவமரியாதையாக ஏதோ சொல்லிவிடுகிறார் மாலன். அதைக் கேட்டு அவரது தாய் கண்ணீர் விட்டு அழுதார் என்று அதில் மாலன் குறிப்பிட்டிருப்பார். கிட்டத்தட்ட எனக்கும் அதேபோன்ற அனுபவம் தானே கிடைத்தது?

எந்த ஒன்று எனது தாயையும் மாலனின் தாயையும் சீற்றத்துக்குள்ளாக்கியது? நிச்சயமாக காந்தி ஒரு மகாத்மா தான். அதில் மாறுபட்ட கருத்தில்லை. ஆனால், அவரது அரசியல் பார்வை சரியல்ல என்பதே எனது கருத்தாக இருந்தது. ஆனாலும், கோட்சே செய்தது சரியா, தவறா என்ற ஊசலாட்டம் எனக்குள் இருந்தது.

***

ஏகாத்மதா ஸ்தோத்திரத்தின் 29வது பத்தி.

பக்கத்து விட்டு அண்ணன் பஞ்சலிங்கம் ஒருநாள் மாலை என்னை ஊர் மத்தியில் நடக்கும் ஆர்.எஸ்.எஸ். ஷாகாவுக்குப் போகலாம் என்று கூப்பிட்டார். அங்கு உடற்பயிற்சி, சிலம்பம் எல்லாம் சொல்லித் தருவதாகச் சொன்னார். எனக்கு ‘ஜனகணமன’ புதினத்தில் ஆர்.எஸ்.எஸ். பற்றிப் படித்திருந்தது நினைவில் வந்தது. காந்திஜி கொலையில் தொடர்புடைய இயக்கம் அது என புதினத்தில் வரும். ஆனால், கோட்சே தனது வாக்குமூலத்தில் அதை மறுத்ததையும் மாலன் புதினத்தில் குறிப்பிட்டிருப்பார். ராஜ்மோகன் காந்தியின் ராஜாஜி வாழ்க்கை வரலாறிலும் ஆர்.எஸ்.எஸ். பற்றிய குறிப்புகள் இருந்தன.

உடனே அவருடன் சென்றுவிட்டேன். வடசித்தூரில் ஷாகா ஆரம்பித்து அப்போதுதான் ஆறு மாதங்கள் ஆகி இருந்தன. பெருமாள் முதலியார் வீட்டு வளாகத்தில், காலி மைதானத்தில், வட்டத்துக்குள் ‘ஓம்’ வரைந்து கற்பூரம் காட்டி ஷாகா துவக்கினர். எனக்கு புதுமையாகவும், வியப்பாகவும் இருந்தது. சுமார் 20 பேர் உடற்பயிற்சி செய்வதை வேடிக்கை மட்டும் பார்த்தேன். இப்படி ஒரு வாரம் ஓடியது. வட்டமாக உட்கார்ந்து பாடும்போது மட்டும் சேர்ந்துகொள்வேன்.

தினமும் என்னை ஷாகா அழைத்துச் செல்ல இளங்கோ, பிரகாஷ் ஆகிய வயதில் மூத்த இருவர் எனது வீட்டுக்கு வந்தனர். அவர்கள் எனது அம்மா, அப்பாவிடம் படித்தவர்கள் என்பதால், அவர்களும் எதுவும் சொல்லவில்லை. எங்கள் பகுதியில் இருந்து மட்டும் 8 பேர் ஒன்றாகத் திரண்டு செல்வோம். ஷாகாவில் எண்ணிக்கை 40 ஆனது. நான் அங்கிருந்த நண்பர்களால் குழந்தை போல நடத்தப்பட்டேன். ஆனால், ஆர்.எஸ்.எஸ். பற்றி நான் படித்திருந்ததை எல்லாம் அவர்களிடம் சொன்னபோது, அவர்கள் வியப்புடன் கேட்டார்கள்.

அடுத்த வாரமே ‘விஜயபாரதம்’ வார இதழ் எங்கள் வீட்டுக்கு வந்துவிட்டது. வாரவாரம் கோபால் அண்ணன் அதை சைக்கிளில் வந்து கொடுத்துப் போவார். எனக்கு முன்னரே அப்பா அதைப் படித்து முடித்திருப்பார். அதில் ஓர் இதழில் மகாத்மா காந்தி பற்றி மிகவும் பெருமையாக எழுதி இருந்ததைக் கண்டதும் குழம்பினேன். அதன் பிறகு இரண்டு நாட்கள் ஷாகா செல்லவில்லை.

அந்த வாரமே எங்கள் வீட்டுக்கு வந்த ஆர்.எஸ்.எஸ். கோவை மாவட்டச் செயலாளர் ஈஸ்வரன் ஜியிடம் அதுபற்றிக் கேட்டேன். அவரோ, “இவ்வளவுதானா? நாம் தான் சங்கத்தின் பிராதஸ்மரணத்திலேயே காந்திஜியையும் போற்றிப் பாடுகிறோமே?” என்று கூறி அந்த குட்டிப் புத்தகத்தையும் கொடுத்தார். அதில் காந்திஜி மட்டுமல்லாது, நமது நாட்டின் பெருமிதத்துக்குரிய வீரர்கள், தலைவர்கள், ஞானிகளின் பெயர்கள் பலவும் இடம் பெற்றிருப்பதைக் கண்டேன்.

அவர் சொன்னது இன்றும் என் நினைவில் இருக்கிறது. “காந்திஜி மகத்தான ஒரு மானிடர். அவரும் மனிதர்தான். தவறு செய்யாத மனிதர்கள் இல்லை. ஆனால், தனது மனசாட்சிப்படி வாழ்ந்தவர் அவர். அவரது அரசியல் முடிவுகள் சில தவறி இருக்கலாம். ஆனால், அவர் தனக்கென எந்த முடிவையும் எடுக்கவில்லை. நேருவை பிரதமர் ஆக்கியதுதான் காந்திஜி செய்ததில் பெரும் தவறு. ஆனால், அவர் நினைத்திருந்தால் அவரே பிரதமர் ஆகி இருக்க முடியும் அல்லவா? அவர் ஓர் உண்மையான ஹிந்து துறவி போல வாழ்ந்தவர். நமது ஆன்மிக மரபை அரசியலில் இணைத்து பரீட்சார்த்தம் செய்து பார்த்தவர் அவர். காந்திஜி இல்லாதிருந்தால், எதிலும் அக்கறையற்ற நமது நாட்டு மக்களை இவ்வளவு விரைவாக ஆங்கிலேயருக்கு எதிராகத் திரட்டி இருக்க முடியாது…”

***

இடையே பத்தாம் வகுப்பு தேர்வு காரணமாக சில மாதங்கள் ஷாகா செல்லவில்லை. மாநில அரசியலில் பல மாற்றங்கள். ஊரில் நடைபெற்ற பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட்ட அதிமுக ஆதரவு பெற்ற முஸ்லிம் ஒருவர் தேர்தலில் வெல்ல பாலக்காட்டிலிருந்து ஒரு ரவுடி கும்பலை அழைத்து வந்திருப்பதாக ஊர் முழுவதும் பேச்சாக இருந்தது. அவர்கள் அனைவரும் இஸ்லாமிய அமைப்பு ஒன்றைச் சேர்ந்தவர்கள் என்றும் கூறப்பட்டது. இதற்கு எதிராக  ஒட்டுமொத்த ஊரும் ஒருங்கிணைந்தது. திமுக சார்பில் ஒரு ஹிந்து வேட்பாளரை நிறுத்த ஊர்ப் பெரியவர்கள் திட்டமிட்டார்கள். உள்ளூர் கட்சி அரசியலை மீறி, தொகுதி எம்.எல்.ஏ.வின் மிரட்டலை மீறி அவர் வெற்றி பெற்றார். அதன் பின்னணியில் ஷாகாவுக்கு வந்தவர்களுக்கும் பெரும் பங்கிருந்தது.

***

பொள்ளாச்சி அருகிலுள்ள செங்குட்டைப்பாளையத்தில் பிராத்மிக் சிக்‌ஷண வர்க எனப்படும் ஆர்.எஸ்.எஸ். அறிமுக பண்புப் பயிற்சி முகாம் 1987-இல்  நடந்தது. அதில் பங்கேற்றபோது, சங்கத்தின் கொள்கைகள், தேசிய சிந்தனை, மகாத்மா காந்தி குறித்த தெளிவான பார்வை, ஹிந்து என்பது மதமல்ல, ஒரு வாழ்க்கை முறை என்ற கண்ணோட்டம் ஆகியன மனதில் பதிந்தன. டாக்டர் பீமராவ் அம்பேத்கர் மீது நான் கொண்டிருந்த தவறான அபிப்பிராயமும் அப்போதுதான் விலகியது.

முகாம் நடந்த இடம் சுவாமி சித்பவானந்தரின் பூர்வாசிரம வீடு. ஒருகாலத்தில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை கடுமையாக வெறுத்த சித்பவானந்தர் எவ்வாறு அதன் ஆத்ம சிநேகிதராக மாறினார் என்பதை முகாமில் பேசிய இல.கணேசன் ஜி மூலம் அறிந்தேன். மேலும், நாகபுரியில் நடந்த இதேபோன்ற சங்க முகாமுக்கு மகாத்மா காந்தி வந்து சென்றதையும் அவர் எடுத்துரைத்தார்.

முகாமில் நடைபெறும் பண்புக் கதைகளில் எந்த மனக்கிலேசமும் இல்லாமல் மகாத்மா காந்தியின் வாழ்க்கை சரித நிகழ்வுகள் சொல்லப்பட்டதைக் கேட்டபோது, காந்திஜி குறித்த தெளிவான சித்திரம் எனக்குள் உருவாகத் துவங்கியது.

***

அடுத்து பல்வேறு சங்க நிகழ்வுகள், முகாம்கள், ஷாகா விழாக்கள், என அடுத்த பத்தாண்டுகள் வேகமாகக் கழிந்தன. அயோத்தி ராமர் கோயில் இயக்கமும் தேசிய அரசியலில் நிகழ்ந்த மாற்றங்களும், நாட்டின் சரித்திரத்தைத் திருத்தி எழுதின.

சங்கத்தில் பலநிலைகளில் உள்ள தலைவர்களுடனான தொடர்பால் மகாத்மா காந்திஜி குறித்த வெறுப்பு மறைந்து, அவர் குறித்து நெஞ்சு விம்ம பெருமிதம் அடைந்தேன். எனது விபாக் பிரசாரக் சு.விஸ்வநாதன்ஜி குருபூஜை விழாவில் பேசியபோது காந்திஜியும் சங்க ஸ்தாபகர் டாக்டர் ஹெட்கேவாரும் உரையாடியதைச் சொன்னார். காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே துணை அமைப்பாக ஆர்.எஸ்.எஸ்.ஸை நடைமுறைப்படுத்தலாமே என்று காந்திஜி கேட்டதாகவும், அரசியலில் சங்கத்துக்கு நாட்டமில்லை என்று டாக்டர்ஜி கூறியதாகவும் அவர் சொன்னார். சங்கம் என்பது கலாசார ரீதியாக இந்த நாட்டை ஒருங்கிணைக்கும் பணிக்காகவே உருவாக்கப்பட்டது என்ற டாக்டர்ஜியின் கருத்து என் உள்ளத்தில் ஆழப் பதிந்தது.

இருந்தாலும் மதம் குறித்த குழப்பம் தொடர்ந்தது. பேசுகையில் ஹிந்து தர்மம் என்கிறோம். ஆனால், ஹிந்துக்களை மதரீதியாக ஒருங்கிணைக்கும் பணியில் சங்கம் ஈடுபடுகிறது. இது மதவாதம் ஆகாதா? எனது தாலுகா பிரசாரகர் சுவாமிநாதன்ஜி இதற்கு தகுந்த விளக்கம் அளித்தார். “இந்த நாட்டின் பூர்விகக் குடிமக்கள் ஹிந்துக்கள். அவர்கள் மதரீதியாக ஹிந்துக்கள் என்று அடையாளப்படுத்தப்படுவது இப்போதுதான். ஹிந்து என்ற பெயரே பிறரால் நமக்குச் சூட்டப்பட்டதுதான். இந்த நாட்டின் மக்கள் பிற சமயங்களுக்கு மாறும்போது, நமது சமயத்தின் எதிரிகள் ஆகிவிடுகிறார்கள் என்று விவேகானந்தர் அதனால்தான் சொன்னார். நம்மைப் பொருத்த வரை நாடே முக்கியம். அதை வலுப்படுத்தும் எதையும் ஆதரிப்போம். இப்போதைக்கு பிளவுபட்டுக் கிடக்கும் ஹிந்து சமுதாயம் ஒன்றாக வேண்டி இருக்கிறது. இது நடந்தாலே பிற சிக்கல்களுக்கு தீர்வு கிடைத்துவிடும்” என்றார் சுவாமிநாதன்ஜி.

***

சங்கத்தில் நான் சேர்ந்து இந்த ஆண்டுடன் 35 ஆண்டுகள் ஆகிவிட்டன. 1992இல்   அயோத்தி இயக்கத்தின் போது சங்கம் தடை செய்யப்பட்டபோது, சங்கம் மீது கடுமையான வெறுப்பு உமிழும் பிரசாரம் ஊடகத்தில் நடத்தப்பட்டது. அப்போது காந்திஜி கொலையில் சங்கத்துக்கு தொடர்பிருந்ததாக மீண்டும் மீண்டும் கூறப்பட்டது.

சங்கத்தில் சேர்வதற்கு முன் காந்திஜி கொல்லப்பட்டது சரியே என வாதிட்டவன் நான். சங்கம் எனது பார்வையை மாற்றியது. இப்போது சங்கம் அந்தப் பாதகத்தைச் செய்யவில்லை என்று வாதிடும் நிலையில் நான் இருந்தேன். இது சங்கத்தை வெளியில் இருந்து பார்ப்போருக்கு புரியவே வாய்ப்பில்லை.

இப்போதும்கூட, சங்கத்தின் செல்வாக்கைத் தாங்கிக்கொள்ள முடியாமல், போகிற போக்கில், காந்தியைக் கொன்றவர்கள் தானே நீங்கள் என்று கேலி செய்து செல்பவர்களைக் காண்கிறேன். அவர்கள் பரிதாபத்துக்குரியவர்கள். அவர்களிடம் விவாதித்து நமது சக்தியை விரயம் செய்ய வேண்டியதில்லை என்ற முடிவுக்கு இறுதியில் நான் வந்திருக்கிறேன். 

ஜெயமணிஜியின் கிராம விகாஸ் பரிஷத் அனுபவங்களையும், சிவராம்ஜியின் எளிமையான வாழ்க்கையையும்  நேரில் அறிந்தவன் நான். சங்க காரியாலயத்தில் தினமும் பாடும் ஏகாத்மதா ஸ்தோத்திரத்தில் மகாத்மா காந்தியை வணங்கி வருபவன்  நான். மகாத்மாவின் கிராம முன்னேற்றத்தை தனது வாழ்வின் இறுதி லட்சியமாகக் கொண்டு, கோண்டாவில் தவவாழ்க்கை வாழ்ந்த நானாஜி தேஷ்முக் பற்றி இவர்களிடம் சொல்வதில் எந்தப் பொருளும் இல்லை.

‘மகாத்மா காந்தியும் ஆர்.எஸ்.எஸ்.ஸும்’ என்ற தலைப்பில் பெரிய புத்தகமே எழுதலாம். மதமாற்றத்துக்கு கண்டனம், பசுவதைக்கு எதிர்ப்பு, சுதேசிப் பொருளாதாரம், கிராம முன்னேற்றம், தேசிய சிந்தனை, ராமராஜ்யம், தீண்டாமையை ஒழிக்க முயற்சி, அர்ப்பண மனோபாவம், பொது வாழ்வில் நேர்மை… என எத்தனையோ விஷயங்கள் சங்கத்துக்கும் காந்திஜிக்கும் பொதுவாக இருக்கின்றன. அவற்றை எல்லாம் இந்த மண்டூகங்களுக்கு விளக்கிச் சொல்லிப் பயனில்லை.

எனது கவலை அதுவல்ல. அரசியல் அரங்கில் செய்யப்படும் வெறுப்பூட்டும் பிரசாரத்தால் ஆவேசம் அடையும் ஹிந்துத்துவ ஆதரவாளர்கள் பலர் சமூக ஊடகங்களில் காந்திஜியை தவறாக விமர்சிப்பதைக் காணும்போதுதான் வேதனை மிகுகிறது.

அவர்களுக்காகவே எனது அனுபவங்களை எழுதத் துணிந்தேன். இந்த ஆண்டு மகாத்மா காந்திஜியின் 150வது ஜயந்தியை ஒட்டி தேசிய சிந்தனைக் கழகம் வாயிலாக பல நிகழ்ச்சிகளை நடத்தி இருக்கிறோம். நம்மைப் பொருத்த வரை, மகாத்மா காந்தி, வாராது வந்த மாமணி. எனவே தான் அவரை   ‘வாழ்க நீ எம்மான்!’ என்று பாரதியின் பாடலால் பாடி மகிழ்கிறோம்.

மகாத்மா காந்தி ஓர் உண்மையான ஹிந்து. மதத்தால் மட்டுமல்ல, கலாசாரத்தால், தர்மத்தால், பண்பாட்டால் அவர் ஓர் உன்னதமான ஹிந்து. தனது பெருந்தன்மையாலும், அவசர முடிவுகளாலும் அவர் சில பிழைகளைச் செய்திருக்கலாம். ஆனால், அவர் மகத்தான ஒரு மானுடர். ஹரிஜன முன்னேற்றத்துக்கான அவரது தவிப்பு தேசநலன் சார்ந்ததும் கூட. பாரதம் குறித்த அதி உன்னதமான கனவுகள் கண்ட மாபெரும் தேசபக்தர் காந்திஜி. தனது மரணத்தால், உயிர்த் தியாகத்தால், தனது மாண்பை அவர் நிறுவிச் சென்றுவிட்டார்.

மகாத்மா காந்தி கொல்லப்படாமல் இருந்திருந்தால், அவரது பிற்கால அரசியல் சிந்தனைகள் வெளிப்பட வாய்ப்பு இருந்திருக்கக் கூடும். அப்படி நிகழும் வாய்ப்பு இருந்திருந்தால், விடுதலைக்குப் பின் காங்கிரஸைக் கலைக்கச் சொன்ன அவரது இருப்பிடம், இறுதியில் சங்கமாகத் தான் இருந்திருக்கும் என்பது எனது ஊகம்.

***

ராமனும் கிருஷ்ணனும் ஆண்ட பூமி இது. வேதங்களும் சங்கப் புலவர்கள் யாத்த கவிதைகளும் இன்றும் வாழும் பூமி இது. கல்வி, கணிதம், அறிவியல், சிற்பம், கட்டடக் கலை, விவசாயம், போர்க்கலை, இலக்கியம், மருத்துவம், சமயம், வணிகம், அரசியல், வாழ்வியல் என பல துறைகளிலும் உயர்ந்தோங்கி விளங்கிய நாடு பாரதம். உலகுக்கு உயர் பண்பாட்டை போதிக்கும் சான்றோர் பூமி இது.

இடைப்பட்ட காலத்தில் நிகழ்ந்த வீழ்ச்சிக்குப் பிறகு நவீன இந்தியாவைக் கட்டமைக்க எத்தனையோ மகான்கள் பாடுபட்டிருக்கின்றனர். அவர்களுள் முதன்மையானவர் சுவாமி விவேகானந்தர். அவரது அடியொற்றி தேசிய அரசியலில் சாதனை புரிந்தவர் மகாத்மா காந்தி. அதேபோல, சுவாமிஜியின் வழிகாட்டலில் சமுதாயத்தில் மாற்றம் விளைவித்தவர் டாக்டர்ஜி. இந்த இரு புள்ளிகளும் இணையும் இடத்தில்தான் நமது நாட்டின் விஜயத் துவஜத்துக்கான கம்பத்தை நாட்ட முடியும்.

***

9 Replies to “எனது காந்தி: ஒரு ஸ்வயம்சேவகனின் பார்வையில்…”

 1. காந்திஜி பொதுவாழ்வில் பங்கேற்றவர். பாரதத்தைப் பல வழிகளில் பாதித்தவர். அதனால் விமர்சனத்திற்கு உட்பட்டே ஆகவேண்டும்.
  தனிவாழ்வில் ஒழுக்க சீலர். அதிலும் பல அபத்தங்களைச் செய்தார், ஆனால் நாம் அவற்றை விமர்சிக்கத் தேவையில்லை. ஆனால் பொது வாழ்வை விமர்சித்தே ஆகவேண்டும்.
  நான் ஒரு காந்தி பக்தக் குடும்பத்தில் வந்தவன். என் தாயார் ஒவ்வொரு வெள்ளிகிழமையும் காந்தி படத்திற்கு பூஜை செய்வார். மாலை 5 முதல் 6 மணிவரை மவுனம் காப்போம்.காலப்போக்கில் காந்தியைப் பற்றி பலவாறு கருத்துக்கள் எழவே, அவர் கருத்துக்களை அவர் எழுத்துவாயிலாகவே அறிய ஆசை தோன்றியது. முதலில் நவஜீவன், அஹமதாபாத் பதிப்பித்த நூல்கள் பலவற்றையும் படித்தேன். பின்னர் காந்திஜியின் Collected Works 98 புத்தகங்கள் வாங்கி முழுதையும் படித்தேன். அதனால் காந்திஜியைப் பற்றிய ஒரு முழு உருவம் மனதில் பதிந்தது.
  அதன் படி-
  – காந்திஜி ஒரு ஜீனியஸ்- சில விஷயங்களில்
  – காந்திஜி ஒரு Faddist- சில விஷயங்களில்.
  – காந்திஜி ஒரு மடையன் Fool -சில விஷயங்களில்
  ஜீனியஸ்: 1909ல் எழுதிய ‘ஹிந்த் ஸ்வராஜ்’ புத்தகத்தில் இந்தியாவை ஆக்ரமித்திருப்பது அன்னிய தேசம் மட்டுமல்ல , அன்னிய நாகரிகமே; நாம் போராடவேண்டியது மேல நாகரீகத்தை அல்ல, நவீன நாகரீகத்தை என்ற அவரது அடிப்படை வாதம் இன்றுவரை போருந்துகிறது. “My Swaraj is to keep intact the genius of our civilization” என்று எழுதினார். ஆனால் கடைசி பக்கத்தில் பல்டி அடித்தார்.
  நவீன தொழில் முறை கெடுதல் என்று கண்டார். ஜனப்பெருக்கமுள்ள இந்தியாவில்
  manufacture by masses, and not mass manufacture தான் உதவும் என்று கண்டார். இதை பின்னர் ஜே.சி.குமரப்பா, ரிச்சர்ட் பி.க்ரெக் இ.எஃப்.ஷுமேக்கர் ஆகியோர் இன்னும் விரிவாக விளக்கினர். நவீன -தொழில்முறை, தொழில் நுட்பம் ஆகியவற்றல் வரும் கேட்டை உலகம் முழுவதும் இன்று அறிந்திருக்கிறது. சந்தேகப் பிராணிகள் Doughnut Economics by Kate Raworth ( Random House, 2018) புத்தகத்தைப் படிக்கலாம்.
  இந்த விஷயங்களில் காந்தியின் கருத்துக்கள் காலத்தால் அழியாதவை. ஆனால் அவர் ஜனநாயக நியதியை மீறி நியமித்த வாரிசு இவற்றை சட்டை செய்யவில்லை.
  FADDIST: அஹிம்ஸை என்ற கொள்கையை அவர் கண்மூடித்தன்மாகப் பின்பற்றியது அவர் ஒரு Maniac என்பதையே காட்டுகிறது. அஹிம்ஸை என்பது தூய அறவாழ்வுக்கான , துறவிகளுக்கான யோகப்பாதையில் வரும் நெறி. இது அனைவருக்காகவும் நடைமுறையில் தினசரி வாழ்வில் அதுவும் அரசியலில் சொல்லப்படவில்லை. அஹிம்சை பொதுக்கொள்கையல்ல. அரசியலில் “தண்ட நீதி” என்பது உண்டு. வேந்தன் தீயோரை தண்டிக்கவேண்டியது கடமை, அறம். இதை காந்தி மறந்தார், மறைத்தார். பாகிஸ்தான் காஷ்மீரின் மீது படையெடுத்தபோது அஹிம்சை காற்றுவாங்கியது. ஒரு சமயம் ‘சுதந்திரம் வராவிட்டாலும் பரவாயில்லை, அஹிம்சைதான் முக்கிடயம் ‘ என்றார். இதில் அவரது வெறித்தன்மை தெரிகிறது, விவேகமல்ல.
  Gandhi is a Mighty Fool. காந்திஜி. இஸ்லாம் மதத்தின் அடிப்படையை புரிந்துகொள்ளவே இல்லை. லட்சக் கணக்கில் அர்மீனியர்களைக்கொன்ற துதுருக்கு காலிஃப்ஃபுக்கு ஆதரவாக கிலாஃபத் இயக்கம் தொடங்கி, இந்திய முக்கம்மதியர்களுக்கு ஒரு மேடை அமைத்துக்கொடுத்தார், பின்னர் துருக்கியே அதைக் கைவிட்டதும் முகத்தில் கரியைப் பூசிக்கொண்டார். ஆனால் இந்தியத் துலுக்கர்கள் ஒரு அணியில் அரசியல் ரீதியாகத் திரண்டுவிட்டனர்.
  முகம்மதியர்களின் அடிப்படைக்கொள்கை, உலகம் முழுதையும் தங்கள் வச மாக்கல். இதை 1400 ஆண்டுகளாக நடத்திக் காட்டி வருகிறார்கள். அவர்களோ, கிறிஸ்துவர்களோ எல்லா மதங்களும் உண்மையானவை, எல்லா மதங்களும் சமம் என்று ஒருக்காலும் சொன்னதில்லை, சொல்வதில்லை. ஆனால் ஸர்வ சமய சமத்துவம் என்ற பெயரில் ஹிந்துக்களின் மூளையை மயங்கச்செய்தார்.
  சுதந்திரம் வரும், இந்தியா பிரியும் என்ற நிலையில், எந்தப் பகுதி பாகிஸ்தானுக்குப் போகும், எது இந்தியாவில் இருக்கும் என்று தெரியாத நிலையிலேயே சுதந்திரம் வந்தது. அதனால் தான் அவ்வளவு கொடூரம் அதன்பின் நடந்தது. இது முட்டாள் தனமில்லையென்றால் அயோக்யத்தனம் என்றுதானே சொல்லவேண்டும்?
  இவற்றையும் மீறி காந்திஜி செய்த அயோக்யத்தனங்களைப் பச்சையாகவே சொல்கிறேன்.
  1. அவர் இந்தியாவிற்கு வருமுன்பே 1905ல் நடந்த வங்காளப் பிரிவினையின் போது. ஸ்ரீ அரவிந்தர் ஒரு புரட்சிகரமான நடைமுறையை வகுத்துத் தந்தார், அதன் முக்கிய அம்சங்களாவன:
  – Swaraj, not mere dominion status under the Crown. ( Congress under Gandhi adopted this after 25 years.)
  _ Passive REsistance ( non cooperation)
  – Boycott of British goods
  – Adoption of Swadeshi
  – Encouragement to Indian industries
  – settlement of disputes outside British courts
  – Adoption of National education
  – Uplift of the downtrodden., etc
  இதற்குப் பத்தாண்டுகளுக்குப் பின் வந்த காந்தியார், இவை அனைத்தையும் ஏற்றுக்கொண்டார். ஆனால் எந்த சமயத்திலும் இவை ஸ்ரீ அரவிந்தர் சொன்னவை என ஒப்புக்கொள்ளவில்லை. இது ஒருவகை திருட்டல்லவா? Total Intellectual Dishonesty
  – சுபாஷ சந்திர போஸ் காந்தியின் எதிர்ப்பையும் மீறி காங்கிரஸ் தலைவரானார். ஆனால் காந்தி அவரை செயல்பட விடவில்லை.
  – பர்தோலியில் சத்யாக்ரஹத்தை வெற்றிகரமாக முடித்திருந்த ஸர்தர் படேல் காங்கிரஸ் அக்ராஸனராக ஆகியிருக்கவேண்டும். ஆனால் மோதிலால் நேருவின் பேச்சுக்கு இணங்கி அவர் மகன் ஜவஹர்லாலை தலைவராக்கினார். தொடர்ந்து மேலும் இரு வருடங்களும் அவரையே தலைவராக நீடிக்கச் செய்தார். 1946ல் இடைக்கால மந்திரி சபை வரும் என்ற நிலையில் நாட்டின் 15 பிரதேசக் காங்கிரஸ் கட்சிகளில் 12 ஸர்தார் படேலையே தேர்ந்தெடுத்தனர். ( நேருவுக்கு ஒன்றுகூட இல்லை) ஆனால் தன்னிச்சையாக காந்தியார் நேருவையே பிரதமராக்கினார். இது ஸர்தார் படேலுக்கு இழைத்த அனியாயம் மட்டுமல்ல. தேசத்திற்கே செய்த துரோகமாகும். ஜன நாயக மரபுக்கு எதிரான செயல்.

  இப்படி எவ்வளவோ விஷயங்கள் காந்திஜிக்கு எதிராக ஆதார பூர்வமாக, சிறிதும் வெறுப்பின்றிச் சொல்லலாம். மிக முக்கிய மானவற்றை மட்டும்- நாட்டுக்குப் பின் நாட்களில் பெருங்கேடு விளைவித்ததை மட்டும் இங்கு குறிப்பிட்டிருக்கிறேன்.
  காந்திஜி தனி வாழ்வில் மஹாத்மாவாக இருந்திருக்கலாம். ஆனால் நாட்டைப் பொறுத்த வரையில், அவரால் விளைந்த தீமையே அதிகம். இதெயெல்லாம் சொல்லாமல் இன்னமும் ஊமையாக இருக்க வேண்டுமா, என்ன?

  The evil that men do lives after them; the good is oft interred with their bones.

  William Shakespeare

  -.

 2. சங்கத்தின் பார்வை ஸ்வயம்சேவகனின் பார்வை இரண்டும் வேர்ல்ட்.
  பதிவு படிப்பதை விட உணருங்கள்.

 3. சங்க‌த்தின் சார்புடைய சமூக ஊடகங்களில், நம்மவர்கள் கூட மகாத்மா காந்தியைத் தவறாகப் பேசும்போதும் அவரது படுகொலையை நியாயப்படுத்தும்போதும் தங்களைப் போலவே நானும் மிக்க வேதனை கொள்கிறேன். இந்தக் கட்டுரை அதற்கு ஓர் அருமருந்து ஆக உள்ளது. மிக்க மகிழ்ச்சி.

 4. மகத்தான ஒரு மனித சக்தியை உருவாக்கிடவே மறந்ததால்

  தேசபக்தியும் தூய்மையும் உள்ள மனிதர்கள் அருகிப் போனதால் –

  இளைஞர்களே சங்கப்பணி நடத்த வாருங்கள்.

  – ஆர்எஸ்எஸ் முகாமில்கற்ற பாடலின் இரு வரிகள்.

 5. Article by Sri R Nanjappa a excellent. clarity on the subject. very clear understanding of RSS and Gandhi ji.

 6. A candid rational decent level headed assessment of the sublime soul.godse certainly has his justification for the killing but then killer is a killer.
  The most unpordanable sin committed by gandhiji is declaring Nehru as his political nehru which smacks of his arrogance

 7. /காந்திஜி இல்லாதிருந்தால், எதிலும் அக்கறையற்ற நமது நாட்டு மக்களை இவ்வளவு விரைவாக ஆங்கிலேயருக்கு எதிராகத் திரட்டி இருக்க முடியாது…”/

  மிகச் சரியான பதிவு. காந்தியைப் போல சிந்திப்பதற்கும் , வாழ்வதற்கும் காந்தியால் மட்டுமே முடியும். அவர் காலத்தில் அவரைப் போலவே அவர் முன் வாழ முற்பட்டார்களேத் தவிர வாழ முடியவில்லை என்பது எதார்த்தம். காந்தியின் பார்வை பூமியின் பண்பு போல பரவலானது. பூமி எல்லாவற்றையும் ஏற்கிறதோ இல்லையோ அது தன்னகத்தே வைத்துக் கொள்ளும். அது போலவே காந்தியும் . அவர் ஆள்பதை எதிர்த்தாரேயொழிய ஆள்பவரை அல்ல. அவர் பார்வையில் எதிரிகள் யாருமில்லை. இரும்பு மனிதரும், நேதாஜியின் அவர் பார்வையில் படாமல் போகவில்லை. படேலி ருக்கு ஆளுமைத் திறனிருந்தாலும் அவரது வயது மூற்பு பிரதான காரணமாயிருக்கலாம். நேதாஜி இளம் வயது அவரது சுதந்திர பார்வையும் காந்தியின் பார்வைக்கு நேரெதிராக இருந்தது. காந்தியின் பார்வையில் நேரு அதற்கு தகுதியானவராகவே இருந்தார். உயிரோடிருந்தால் நிச்சயம் காந்தியின் கொள்கை குறுக்கீடுகள் நேருவை படாத பாடு படுத்தியிருக்கும். காந்தியின் மறைவும் நேருவை மேற்கத்திய மற்றும் இடதுசாரிய மோகமும் புதிய உலகை உருவாக்கும் என்ற அதீத குருட்டு நம்பிக்கை காந்தியர்களையும், காந்தியத்தையும் உருத் தெரியாமல் வரலாற்றின் பார்வையிலிருந்து அகற்றியது. இன்றும் கூட அவர்கள் கட்சி அரசியல் ஆதாயம் பொருட்டே காந்தியை முன்னெடுக்கும் நேரத்தில் இன்றைய தேசிய ஜனநாயக அரசு காந்தியைப் புரிந்து கொண்டது மட்டுமல்லாமல் அவரின் சிந்தனைகளை சமூக வாழ்வியலோடு புகுத்த முயல்கின்றது. நடைமுறை சாத்திய மற்ற காந்தியின் வாழ்வியல் வரும் காலத்தில் என்ன விதமான மாறுதலை கொடுக்கும் என்பது புரியாத புதிர் மட்டுமே.

 8. ராமக்ருஷ்ணோ தயானந்தோ ரவீந்த்ரோ ராமமோஹன:

  ராமதீர்த்தோ(அ)ரவிந்தஸ்ச விவேகானந்த உத்யசா:

  தாதாபாயீ கோபபந்து: திலகோ காந்திராத்ருதா:

  ரமணோ மாலவீயஸ்ச ஸ்ரீசுப்ரஹ்மண்ய பாரதீ”

  (ஏகாத்மதா ஸ்தோத்திரத்தில் இருந்து)

  இந்த ஸ்தோத்திரத்தில் மஹான்களையும் மானிடர் சிலரையும் இணை வைக்கப்பட்டிருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *