இந்திய பொருளாதாரம் ஒரு பாய்ச்சலுக்குத் தயாராக இருக்கிறது

மூலம்: தி இந்தியன் எக்ஸ்பிரஸ் கட்டுரை (ஆகஸ்டு 29, 2019)
தமிழில்: ஸ்ரீராம் TKL

கட்டுரை ஆசிரியர் சையத் ஜாபர் இஸ்லாம் (Syed Zafar Islam) பாஜகவின் தேசிய செய்தித் தொடர்பாளர் மற்றும் டாய்ச் வங்கியின் முன்னாள் நிர்வாக இயக்குனர்.

இந்தியா மற்றும் ஆப்பிரிக்கா இன்று உலக முதலீட்டாளர்களுக்கு ஒரு மையப் புள்ளியாகத் திகழ்ந்து வருகிறது. இந்த இரண்டு சந்தைகளும் உலகளவில் அதிகபட்ச வெளிநாட்டு முதலீட்டை ஈர்த்துவருகின்றன என்பதை எந்தவித ஆச்சரியமுமின்றிச் சொல்லலாம். கடந்த ஆறு ஆண்டுகளில் நரேந்திர மோடியின் இந்தியா பெற்ற 250 பில்லியன் டாலர் அன்னிய நேரடி முதலீடு, 2014 க்கு முந்தைய 14 ஆண்டுகளில் பெற்ற அந்நிய முதலீட்டிற்கு சமமாகும். ஆயினும், தற்போது​​இந்திய கார்ப்பரேட் உலகின் நம்பிக்கை சற்று குறைவாகவே காணப்படுகிறது என்று சொல்லலாம். உலகளாவிய பொருளாதாரத் தாக்கங்களே இதற்கு முக்கிய காரணங்களாக உள்ளன.

எதிர்ப்பாளர்கள் சொல்வதற்கு மாறாக, ரிசர்வ் வங்கி தன்னிடம் கூடுதலாக உள்ள தொகை (சர்ப்லஸ்) 1.76 லட்சம் கோடி ரூபாயை அரசிடம் ஒப்படைத்து தனது பொறுப்புணர்வை வெளிப்படுத்தியது. தேசிய நலனை மனதில் வைத்து ரிசர்வ் வங்கி செய்த இந்த செயல் பொருளாதார மந்தநிலையை எதிர்த்துப் போராடுவதற்கு மட்டுமல்லாமல் முதலீடு மற்றும் துறைசார் முன்னேற்றங்களைத் தூண்ட உதவுகின்றது.

பொருளாதாரம் எட்டு சதவிகித வளர்ச்சியை அடைய அரசாங்கம் முழு முயற்சியை மேற்கொண்டு வருகிறது. ஆனால் தனியார் துறையினர் இதே வேகப் பசியைக் காட்டுவதாய் தெரியவில்லை.

இந்தியாவின் நவீன பொருளாதாரத்திற்கான அடிப்படை அடித்தளம் கடந்த மோடியின் ஆட்சியில் தான் வலுவாக்கப்பட்டது என்பது நமது தனியார் முதலீட்டாளர்களுக்கும், ஏன் பல சிந்தாந்தங்களால் வேறுப்பட்ட பொருளாதார வல்லுனர்களுக்கும் கூட நன்றாகத் தெரியும். இது தற்காலிகமாக சங்கடங்களை தந்தாலும், நீண்ட காலத்திற்குப் பயனுள்ளதாய் அமையும்.

உலக அளவில் பொருளாதாரத்தில் ஆறாவதாக இருக்கும் இந்தியா நீண்ட கால உயர் வளர்ச்சிக்குப் பின் சோர்வை உணர்ந்திருப்பதாக பலர் கூறுகின்றனர். உலக அளவில் முதல் 3-4 இடங்களில் உள்ள பொருளாதாரங்களை விட, தற்போது கணிக்கப்பட்ட 6.30 சதவீத வளர்ச்சியிலும் கூட இந்திய பொருளாதாரம் ஒரு சிம்ம சொப்பனமாகவே இருந்து வருகிறது. ஒரு காலாண்டில் ஏற்பட்ட அந்த 5.8 சதவிகிதம் பின்னடைவு நம்மை பெரிய அச்சங்களுக்கு கொண்டு செல்லக் கூடாது என்பதனை நாம் புரிந்துக் கொள்ள வேண்டும்.

சுருங்கச் சொன்னால், பொருளாதாரம் மந்தநிலையில் உள்ளது, ஆனால், பெயரிடப்படாத மர்மத்துகுள் நாம் இன்னும் நுழையவில்லை .

மோடி முதன்முதலாக பிரதமராக பதவியேற்கும் போது, பெருமளவில் ரூபாய் நோட்டு பொருளாதாரத்தில் (cash economy) இயங்கும் முறைசாரா/அமைப்புசாரா துறை ஏற்படுத்திய தெளிவற்ற குழப்பங்களே இந்தியாவின் பொருளாதார இயல்பாய் இருந்தது. 1990-களுக்கு பின் இந்தியா என்பதற்கான அடையாளம் மாறியிருந்தாலும், இந்தியாவின் பொருளாதார நடவடிக்கைகளின் பெரும்பகுதியில் மாற்றங்கள் வந்த பாடில்லை. மோடி அரசாங்கம் இந்திய பொருளாதரத்தில் ஒரு புது அர்த்தத்தை கொண்டு வந்தது என்றே சொல்ல வேண்டும். பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி போன்ற நடவடிக்கைகளால் முறைசாரா இந்திய பொருளாதாரத்தை முறைப்படுத்திய பொருளாதாரமாக மாற்றினார்.

சராசரிக்கும் குறைவான மழைப்பொழிவு மற்றும் பருவநிலை நமது பொருளாதார மந்தநிலைக்கு பெரும் காரணியாய் இருந்து வருவதை நாம் மறந்து விடக்கூடாது. இந்த காரணி பொருளாதாரம் தொடர்பான விவாதத்தில் மௌனமாய் இருப்பது துரதிர்ஷ்டவசமானது என்றே சொல்ல வேண்டும் .

மேலும், தேர்தலின் போது நடத்தை விதி கட்டாயப்படுத்தப்படுவதால், அரசாங்கத்தால் திட்டங்களுக்கு செலவிடவோ அல்லது பெரிய சீர்திருத்தங்களை அறிவிக்கவோ முடியவில்லை. இதனால், தேர்தல்களும் மந்தநிலைக்கு பங்களித்திருக்கலாம் என்பதில் எந்த விதமான சந்தேகமும் இல்லை.

உதாரணமாக, முதலீட்டு குறியீட்டின் (கேபெக்ஸ்) வளர்ச்சி முந்தைய காலாண்டில் இருந்த 12 சதவீதத்திலிருந்து 2 சதவீதமாக சரிந்து மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 80 பிபிஎஸ் வரை தாக்கத்தை ஏற்படுத்தியது. மேலும், உலகளாவிய பொருளாதார போக்கு, மற்றும் அமெரிக்க-சீனா வர்த்தகப் போர் இந்திய பொருளாதாரத்திற்கு சாதகமாக இல்லை என்றே சொல்ல வேண்டும்.

நீங்கள் திகைக்காமலும் பதட்டப்படாமலும் இருந்தாலே அது உங்கள் நாட்டுக்கு நீங்கள் செய்யும் மிகச் சிறந்த சேவையாக இருக்கும். நமது பொருளாதாரம் மிகவும் நல்ல நிலையில் உள்ளது. ஒட்டுமொத்த பொருளாதார (மேக்ரோ) குறியீடுகள் அனைத்தும் பொருளாதாரம் ஆரோக்கியமாக உள்ளது என்பதான தகவல்களையே தருகின்றன. பொருளாதாரக் குறியீடுகளை சற்று கவனியுங்கள்: அந்நிய செலாவணி இருப்பு எப்போதும் இல்லாத அளவுக்கு 491 பில்லியன் டாலர். சில்லறைபணவீக்கம் (சிபிஐ) பணவீக்கம் தற்போது 3.2 சதவீதமாக உள்ளது. இன்னும், குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால், இந்த சிபிஐ கடந்த 12 மாதங்களாக 4 சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளது. முக்கிய பணவீக்கம் (கோர்) கடந்த 12 மாதங்களில் சொல்லும்படியளவிற்கு சரிந்துள்ளது. மொத்த அன்னிய நேரடி முதலீடு 12 மாத கால அடிப்படையில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.4 சதவீதமாக உள்ளது.

முந்தைய மாதத்தின் மந்தநிலையுடன் ஒப்பிடும்போது ஜூலை மாதத்திற்கான பிஎம்ஐ உற்பத்தி மற்றும் சேவைகள் முன்னேற்றம் கண்டன. பொருளாதாரம் முன்னேற்றத்தைக் அடைந்து வருகிறது என்பதையும், வேலைவாய்ப்பு துரிதப்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதையும் இது நமக்கு அறிவுறுத்துகிறது.

தொழில்துறையில் இருக்கும் சிலர், கடன் வாங்குபவர்- வழங்குபவர்களுக்கு இடையிலான நம்பிக்கை தேய்மானம் அடைந்திருப்பதாக வாதிட்டனர். இதை அரசாங்கம் கவனிக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி வந்தனர். நமது நிதி அமைச்சகம் இதை காது கொடுத்து கேட்டு பொதுத்துறை நிறுவன வங்கிகளுக்கு ரூ .70,000 கோடியை ஒதுக்கியது. இந்த நிதியை பொதுத் துறை வங்கிகள் ஏழு மடங்கு லிவரேஜ் செய்யும் என்ற கணிப்பில் பார்த்தால், வங்கிகள் 5 லட்சம் கோடி ரூபாய் வரை தொழில் முனைவோருக்கு கடனாய் வழங்க முடியும்.

நல்ல பருவமழை வரவிருக்கும் காரணத்தால் அரசாங்க செலவீனம் மிகவும் பயனுள்ளதாய் அமையப் போகிறது. பண்டிகை காலத்திற்குள் நாம் நுழைவதால் நுகர்வு உயரும். மேலும், ஏற்றுமதியை மேம்படுத்துவதிலும், முதலீட்டிலிருந்தும், டிஸ்இன்வெஸ்ட்மென்ட் செய்வதிலிருந்தும் பொருளாதார வளர்ச்சி மேம்பட்ட வளர்ச்சியில் செல்லப் போகிறது என்பதில் எந்த மாற்றமும் இல்லை . இந்த ஆண்டுக்கான டிஸ்இன்வெஸ்ட்மென்ட் இலக்கு ரூ .1.14 லட்சம் கோடியைக் கடக்கும் என்று நம்பிக்கை அரசாங்க மத்தியத்தில் நிலவி வருகிறது.

தற்போதைய பொருளாதாரக் கணிப்பு , அடுத்த காலாண்டும் அதற்கு பிறகும் அச்சுருத்துவதாக இல்லை என்றாலும் இரட்டை இலக்கு வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லவில்லை என்பதையும் நாம் ஒத்துக்கொள்ள வேண்டும். ஆனால், பிரதமர் மோடியின் அரசின் தொடர்ச்சியான சீர்திருத்தங்களால் தொடர்ந்து வியாபாரத்தை எளிதாக்கி கொண்டிருக்கிறார். சராசரி மொத்த உள்நாட்டு உற்பத்தியை 7.5 சதவிகிதமாகவும், டாலருக்கு நிகரான இந்திய நாணயத்தின் மதிப்பு ரூ.70 -ல் தக்க வைத்துக் கொண்டாலே 2024/2025 க்குள் 5 டிரில்லியன் டாலர் மதிப்பை எட்டுவது சாத்தியம் என்றே சொல்ல வேண்டும்.

(ஸ்ரீராம் TKL தனது ஃபேஸ்புக் பக்கத்தில் அரசியல், பொருளாதாரம், சமூகம், சுயமுன்னேற்றம், புத்தககங்கள் உட்பட பல விஷயங்கள் குறித்து காத்திரமாகவும் சுவாரஸ்யமாகவும் தொடர்ந்து எழுதி வருகிறார்)

3 Replies to “இந்திய பொருளாதாரம் ஒரு பாய்ச்சலுக்குத் தயாராக இருக்கிறது”

 1. இந்தக் கட்டுரையைப் படித்து அழுவதா, சிரிப்பதா என்று தெரியவில்லை.
  பொருளாதார நடப்பில் வளர்ச்சி, மந்த நிலை, சரிவு ஆகியவை மாறி மாறி வரத்தான் செய்யும். இதைப் பற்றி அதிகம் குழம்பிக் கவலைப்படத் தேவையில்லை. பொருளாதார வாதிகள் என உலாவருவோர் இதைவைத்து தங்கள் தொழிலை விருத்தி செய்துகொள்வர். நாம் அவர்களுக்கு சலாம் போடத் தேவையில்லை. ஆனால் நீண்டகால நோக்கில் அரசின் அணுகுமுறை என்ன , செயல்பாடு என்ன என்பது முக்கியம். இந்தக் கட்டுரை பொதுப்படையாக சிலவிஷயங்களைச் சொல்கிறதே தவிர எந்த விவரமும் தரவில்லை.

  நவீன பொருளாதரத்திற்கான அடிப்படை அடித்தளம் கடந்த மோடி ஆட்சிக் காலத்தில் அமைக்கப்படது என்கிறார். “நவீன” பொருளாதாரம் என்று எதைக் குறிப்பிடுகிறார்? நரசிம்ம ராவ் காலத்தில் செய்யாத எந்த நவீன அம்சத்தை மோடி கொண்டுவந்தார்?
  மோடி அரசின் பொருளாதார சித்தாந்தம் என்ன? அதன் செயல்முறை என்ன? அறைகுறையாக நிற்கும் பொருளாதார சீர்திருத்தங்கள் பற்றி மோடி அரசின் நிலை என்ன? நிதித் துறையில் நிலவும் மந்தம், குழப்பம் ஏன்? இந்த விஷயங்களில் ஒரு தெளிவு இல்லை.

  பொருளாதார வளர்ச்சி விகிதம் என்பது ஒரு முட்டாள்தனமான குறியீடு- நதியின் சராசரி ஆழத்தை அளப்பது போன்றது அதை வைத்து நதியைக் கடக்க முடியாது. எந்தத்துறை எப்படி இயங்குகிறது, அதனால் வேலைவாய்ப்பு எப்படி பாதிக்கப்படுகிறது என்பதே பிரச்சினை. இன்று விவசாயம் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளது, சிறு, நடு அளவுத் தொழில்களும் அவ்வாறே.
  அரசு வங்கிகளின் செயல்பாடு மிகவும் மட்டகரமான நிலையில் உள்ளது. மீண்டும் 70,000 கோடி ரூபாய் இங்கேயே கொண்டுபோய்க் கொட்டுகிறார்கள்.இதுதான் மோடி அரசின் “நவீன” அணுகுமுறையா? இதைத்தானே முந்தைய அரசுகளும் செய்தன?Throw good money after the bad! Subsidise bad banks with tax payers’ money! Rob Peter to pay Paul!
  அந்நிய-உலக- முதலீடு என்று பேசுகிறார்கள். இது எந்தத் துறைகளுக்கு வருகிறது- அல்லது வந்தது? அது நமது தேசீய முயற்சிகளை எங்கனம் பாதித்தது? சொல்வார்களா?

  ரிசர்வ் வங்கி தன்னிடம் கூடுதலாக இருந்த தொகையிலிருந்து 1,76,000 கோடி அரசிடம் ஒப்படைத்ததாம்! இது எவ்வளவு அப்பட்டமான பொய்? இது ரிசர்வ் வங்கியிடமிருந்து அடித்துப் பிடுங்கிய தொகை- கஜினி முகம்மது சோமநாதத்தைக் கொள்ளையடித்தது போன்றது! [ 1956ல் நேரு-டி.டி.கே இதேபோல் ரிசர்வ வங்கியிடம் அடாவடி செய்தார்கள்; தாங்காத கவர்னர் பெனகல் ராமராவ் ராஜினாமா செய்தார், மோடி காலத்திலும் அப்படியே நடந்தது. இதுவும் ஒரு நவீனமா?]
  அது சரி, இந்த 1.76 லட்சம் கோடி எப்படி செலவிடப்பட்டது-விளக்கம் தருவார்களா?

  முறை சாரா, அமைப்பு சாரா துறை என்கிறார்கள். இதில் என்ன தவறு? இந்தியப் பொருளாதாரத்தில் உற்பத்தி- அரசுக்குக் கட்டும் வரி- வேலை வாய்ப்பு ஆகியவற்றில் பெரும்பங்கு வகிப்பது இந்த முறைசாரா-, அமைப்பு சாரா துறை தான். விளக்கத்தை Prof. R.Vaidhyanathan எழுதிய “India Uninc” [ Westland. 2014] என்ற புத்தகத்தில் படித்துத் தெரிந்துகொள்ளலாம். ஆடத்தெரியாதவர்கள் மேடையை ஏன் குற்றம் சொல்லவேண்டும்?

  பாரதீய ஜனதாவுக்கு ஒரு தனிப்பட்ட பொருளாதார சித்தாந்தமோ, அணுகுமுறையோ இல்லை.ஒரு காலத்தில் காந்தீய சோஷலிசம் என்றார்கள். பின்னர் சோஷலிசம் என்றார்கள். இன்று “நவீன” பொருளாதாரம் என்கிறார்கள். செய்ததைக் கூட சரியாகச் சொல்லத் தெரியவில்லை!
  மெய்யுடை ஒருவன் சொலமாட்டாமையால் பொய்போலும்மே பொய்போலும்மே!

 2. Medium size tea.samosa.vada shops ..earn lakhs of rupees per month. Yet they dont pay income tax. Many utencil..jewelley shops dont make proper bills. Tax cheating is more than tax income. So govt should look into it. Medical expenses drain family savinga. 200 more medical college required in current situation. Petrol economy should be reduced to non conventional..alternative energy economy.

 3. பொருளாதார நடைமுறைகள் என்பது ஏதாவதொரு சித்தாந்த பெட்டிக்குள் அடங்கி இருப்பது அவசியமா என்ன – முதலாளித்துவம் , மார்க்சீயம் , சோஷலிஸம் , காந்தியம், இடது, வலது, இப்படி ஏதாவது வட்டத்துக்குள் அடங்கிய ஆகணுமா என்ன ?

  டைனமிக்காக தேவைக்கு ஏற்றாற்போல் இருக்கக் கூடிதா என்ன ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *