தமிழறிஞர் ஹரி கிருஷ்ணனுக்கு இண்டிக் அகாதமி Grateful2Gurus விருது

இந்தியப் பண்பாடு, இந்து பாரம்பரிய ஞானம், இந்தியக் கலைகள் ஆகியவற்றைப் பாதுகாத்துப் போற்றி வளர்க்கும் முகமாக பல செயல்பாடுகளில் கடந்த 8 ஆண்டுகளுக்கும் மேலாக ஈடுபட்டுள்ள அமைப்பு இண்டிக் அகாதமி. இந்து தர்மத்திற்கும், பாரம்பரிய அறிவுத் துறைகளுக்கும் நீண்டகாலம் சிறப்பாகப் பங்களித்துத் தொண்டாற்றி ஆசான்களாக விளங்கும் 108 பெரியவர்களுக்கு Grateful2Gurus (குருமார்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளோம்) என்ற பெயரிலான விருதையும் கௌரவத்தையும் வழங்குவதாக இந்த ஆண்டு குருபூர்ணிமா தினத்தன்று இந்த அமைப்பு அறிவித்தது.

நமது இணையதளத்தின் வாசகர்களுக்கு நன்கு அறிமுகமான தமிழறிஞர், கவிஞர் ஹரி கிருஷ்ணன் அவர்களின் பெயரும் இதில் இடம் பெற்றிருந்தது. கம்பராமாயணம், மகாபாரதம், திருக்குறள் உள்ளிட்ட மரபிலக்கிய நூல்களிலும், பாரதியார் படைப்புகள் மற்றும் வாழ்க்கை வரலாற்றிலும் ஆழ்ந்த புலமை வாய்ந்தவர் ஹரி கிருஷ்ணன். அனுமன் வார்ப்பும் வனப்பும், நினைவில் நின்ற சுவைகள், ஓடிப்போனானா பாரதி, பாஞ்சாலி சபத உரை உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர். கடந்த பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக தமிழிலும், ஆங்கிலத்திலுமாக நூற்றுக்கணக்கான கட்டுரைகளை எழுதியிருக்கிறார். ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்ப்பதில் சர்வதேச அளவில் அங்கீகாரம் பெற்றவர். பெங்களூரில் இயங்கும் தமிழ் வாசிப்புக் குழுவின் வாயிலாக கம்பராமாயணம், சிலப்பதிகாரம் உள்ளிட்ட தமிழ் இலக்கியங்களை முழுமையாகவும் ஆழமாகவும் கற்பித்து, அடுத்து வரும் தலைமுறைகளுக்காக அவற்றின் வீடியோ பதிவுகளையும் தனது யூட்யூப் தளத்தில் தொடர்ந்து வலையேற்றி வருகிறார்.

மேற்கண்ட அறிவிப்பைத் தொடர்ந்து சென்னை, பெங்களூர், ஹைதராபாத் ஆகிய நகரங்களில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் அந்தந்தப் பகுதிகளுக்கு அருகாமையிலுள்ள ஆசான்களை இண்டிக் அகாடமி சிறப்பாக கௌரவித்தது. 2019 அக்டோபர் 5ம் தேதியன்று பெங்களூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பெங்களூர் தெற்கு பாராளுமன்ற உறுப்பினர் தேஜஸ்வி சூர்யா (பாரதிய ஜனதா கட்சி) கலந்து கொண்டு ஆசான்களுக்கு மரியாதை செய்தார்.

வேதகோஷம் முழங்க நடைபெற்ற இந்த விழாவில் ஒவ்வொரு ஆசானுக்கும் தேஜஸ்வி சூர்யா பாதபூஜை செய்து அவர்களது காலில் விழுந்து வணங்கி ஆசி பெற்றார். விருதுக்கு முன்பாக ஒவ்வொரு ஆசானையும் குறித்த பாராட்டுரை மேடையில் வாசிக்கப் பட்டது. இதைத் தொடர்ந்து தேஜஸ்வி சூர்யா ஆற்றிய உரையும், இண்டிக் அகாதமி தலைவர் ஹரி கிரண் வடலாமணி ஆற்றிய உரையும் மிகச் சிறப்பாக இருந்தன.

இந்த நிகழ்வின் முழு வீடியோ பதிவையும் கீழே காணலாம். தமிழ்ஹிந்து ஆசிரியர் குழு உறுப்பினரான ஜடாயு, ஹரி கிருஷ்ணன் குறித்த பாராட்டுரையை மேடையில் வாசிக்க, விருது வழங்கப் பட்டது (நேரம் 1:09:02).

இந்த வருடம் இந்த விருது பெற்றவர்களில் – அறிவியலாளர் சுபாஷ் கக்; வரலாறு/சமூகவியல் அறிஞர்களான மிஷேல் தனினோ, மீனாட்சி ஜெயின், கொய்ன்ராட் எல்ஸ்ட், எஸ்.என்.பாலகங்காதரா.; வேத சாஸ்திர பண்டிதர்களான மணி திராவிட் சாஸ்திரிகள், ஆஞ்சனேய சர்மா, சர்மா சாஸ்திரிகள், சுந்தர குமார், ஆர்.எல்.கஷ்யப்; சமூகப் பணியாளர் மது கிஷ்வர்; யோக, ஆயுர்வேத ஆசான்கள் டாக்டர் நாகரத்னா, கங்காதரன் நாயர் ஆகியோர் அடங்குவர். முழுப்பட்டியலையும் இங்கு காணலாம். பெங்களூர் விருது விழா பற்றிய குறிப்பு இங்கே.

ஆதிசைவ பாரம்பரியம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி சேவை புரிந்து வரும் தில்லை எஸ்.கார்த்திகேய சிவம் அவர்களும் இந்த விருதுப் பட்டியலில் இடம் பெற்றுள்ளார். சிவாகங்களில் தேர்ச்சியும், தமிழில் முதுகலைப் பட்டமும் பெற்ற இவர் கள்ளக்குறிச்சி சிவாலயத்தில் அர்ச்சகராக இறைத்தொண்டு செய்து வருகிறார். ஆதி சைவர் வரலாறு என்ற நூலையும் எழுதியிருக்கிறார். தமிழ்ஹிந்து இணையதளத்திலும் இவரது சில பதிவுகள் இடம் பெற்றுள்ளன. இவருக்கான விருதும் பெங்களூர் நிகழ்ச்சியில் வழங்கப் பட்டது.

ஹரி கிருஷ்ணன், தில்லை எஸ். கார்த்திகேய சிவம் மற்றும் விருது பெறும் பெரியோர்கள் அனைவருக்கும் தமிழ்ஹிந்து தனது மனமார்ந்த பாராட்டுதலையும் வணக்கங்களையும் தெரிவித்துக் கொள்கிறது.

One Reply to “தமிழறிஞர் ஹரி கிருஷ்ணனுக்கு இண்டிக் அகாதமி Grateful2Gurus விருது”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *