ரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 5

இத்தொடரின் அனைத்து பகுதிகளையும் இங்கு வாசிக்கலாம்.

5 – நான்முகன்

இதுவரை நாம் பார்த்ததில் நிச்சயமாக ஒன்று புரிந்திருக்கும். அதாவது நமது ஆன்மிகப் பயணம் என்பது நமது தினசரி வாழ்க்கையை ஒட்டியே தொடங்கி, அதில் நாம் அடையும் அனுபவங்களைக் கொண்டே மேலும் மெருகுபெற்று தொடரக்கூடியது. இதை நாம் நன்கு புரிந்துகொண்டுவிட்டால் நமது நிலைகளை தீவிரமாக அலசி, நம்மை நாமே நன்கு புரிந்துகொள்ளும் முயற்சிகளை மேலும் தொடர்வோம். அதற்குக் கைகொடுக்கும் கருவிதான் நம் புத்தி.

அதற்காக உடலும், உயிரும் நமக்கு வாய்த்திருப்பது நாம் செய்த முன்வினைப் பயனே. அதேபோல நமது பூர்விக வாசனைகளின் ஒட்டுமொத்தமான மனமாகிய உள்ளத்துடனும் நாம் பிறந்திருக்கிறோம். இவை மூன்றும் உலகத்தொடர்புடன் கூடிய கீழ்நிலைகள் என்றால், நான்காவதாக உள்ள நமது புத்தியானது மிக நுண்ணிய கருவி என்பதோடு, இறைவன் அருளால் நமக்குக் கிடைத்திருக்கும் ஒரு வரப்பிரசாதம் என்றும் ஆகும்.

கீழ்நிலையில் இருக்கும் புத்தி எனப்படும் அறிவைச் சிற்றறிவு என்பார்கள். ஏனென்றால் அது மேல்நிலையில் உள்ள “சத்” எனப்படும் பேறறிவின் ஒரு பிரதிபலிப்புதான். அதன் முழு வடிவையும் நாம் பிற்பாடு காண்போம். ஆக புத்தியின் கட்டுக்குள் இயங்கும் நம் மனத்தால் நமது சகல இயக்கங்களும் நடைபெறுகின்றன.

“நான் யார்?” என்ற ரமணரின் படைப்பில் இவ்வாறு கூறப்பட்டிருக்கிறது. “மனம் என்பது ஆத்ம சொரூபத்தில் உள்ள ஓர் அதிசய சக்தி. அது சகல நினைவுகளையும் தோற்றுவிக்கிறது. நினைவுகளை எல்லாம் நீக்கிப் பார்க்கிறபோது, தனியாய் மனம் என்றோர் பொருள் இல்லை. ஆகையால் நினைவே மனதின் சொரூபம். …. நல்ல மனம் என்றும் கெட்ட மனம் என்றும் இரண்டு மனங்கள் இல்லை. மனம் ஒன்றே. வாசனைகளே சுபம் என்றும் அசுபம் என்றும் இரண்டு விதம். மனம் சுபவாசனை வயத்ததாய் நிற்கும்போது நல்ல மனம் என்றும், அசுப வாசனை வயத்ததாய் நிற்கும்போது கெட்ட மனம் என்றும் சொல்லப்படும்.”

நாம் சேகரித்துள்ள வாசனைகள் எவ்வாறாய் இருந்தாலும், நமது புத்தியின் கட்டுப்பாட்டால், நல்லவைகளையே நாம் விடாது பின்பற்ற நம் மனம் நல்லதையே நினைத்து, நல்ல செயல்களையே செய்வதற்கு நம் உடலைப் பயன்படுத்தும். அவ்வாறு நடப்பதற்கு, நமது புத்தியை நம் “சித்” இயக்கும் அருள் நமக்கு இருக்கவேண்டும். இவ்வாறாக நமது கீழ் மற்றும் மேல் நிலைகளுக்கு இடையே ஒரு பாலமாக புத்தி இயங்குகிறது. அதாவது உலகத் தொடர்பு கொண்ட புத்திக்கும், மற்ற மூன்று மேல் நிலைகளைப் போல, ஒரு தெய்வீகத் தொடர்பு இருக்கிறது.

உலகியலில் நாம் அறிந்து நமக்கு உடல்-உயிர்-உள்ளம் என்ற மூன்று நிலைகளும், மேல் நிலையில் நமது அறிவுக்குப் புலப்படாத தெய்வீக இயல் படைத்த சத்-சித்-ஆனந்தம் என்ற மூன்று நிலைகளும் நம் ஒவ்வொருவருக்கும் இருக்கின்றன. இவைகளில் எது, எவ்வளவு என்பதில் மனிதர்களுக்கும், மற்ற சீவராசிகளுக்கும் வேற்றுமைகள் சிறிதாகவோ, பெரிய அளவிலோ இருந்தாலும் இயற்கையின் படைப்புகள் அனைத்துமே இந்த விவரங்களைப் பொறுத்தவரை வித்தியாசம் இன்றி ஒரே மாதிரியாகவே இருக்கின்றன. அதனாலேயே இங்கொன்றும், அங்கொன்றுமாக மற்ற சீவராசிகளும் மனிதர்களைப் போலவே பழகுவதும் அல்லாமல், அவைகளுக்கும் ஞானப் பேறு கிட்டுவதைப் பற்றியும் கேள்விப்படுகிறோம்.

இந்த இரண்டு நிலைகளுக்கும் இடையே புத்தி எனும் சிற்றறிவு இயங்குவதையும் பார்த்தோம். அந்த புத்தி என்பது சித் எனும் பேறறிவின் அருளாலேயே இயங்குகிறது என்றும் கூறினோம். அதையே ‘அம்பாளின் கடைக்கண் பார்வை’, ‘அம்மன் அருள்’, ‘தாயாரின் கருணை’ என்றெல்லாம் பல விதமாகக் கூறுகிறார்கள். ஆக புத்தியும் தெய்வீகத் தன்மை பெற்றதாகக் கருதப்பட்டு, மற்ற மூன்று நிலைகளுடன் ஒன்றாக இணைகிறது. உலக இயலுக்குப் புறம்பான, இந்த நான்கையும் சிறப்பிக்கும் விதமாக ரிக் வேதம் நான்கு கடவுட்களை விவரிக்கிறது.

அதாவது கடவுள் எனும் தத்துவம் எங்கோ மறைந்து, காணமுடியாத இடத்தில் இருப்பதாகவோ, ஏதோ சில ரிஷிகளின் கற்பனையில் உதித்த உருவகங்களாகவோ எண்ணுவது தவறானது. அவை அனைத்துமே நமது தினசரி அனுபவங்களின் அடிப்படையிலும், இயற்கையில் காணப்படுபவைகளையும் ஒட்டியே உருவானவைகள்.

அதன்படி, முதன்முதலாக வருவது இந்திரன் என்ற சர்வ வல்லமை படைத்து நமது இயக்கம் அனைத்துக்கும் காரணமான இருப்பாக (Being) உள்ளவன். அவன் ஒருவனே இருப்பது அனைத்திலும் உண்மை. வேத சாஸ்திரப்படி ஹோமம் வளர்க்கும் போது, நாம் முதலில் மூன்று முறை கூறும் “ஸுப்ரஹ்மண்யோ” என்பது அந்த இந்திரனை வரவழைக்கச் சொல்லப்படும் மந்திரமே ஆகும். அவனே நமது இருப்பின் அதிபதி ஆவான். நாம் இருப்பதாக உணரும் சத் எனும் உண்மை அவனே ஆவான். அவன் ஒரு பேரொளியாக அல்லது மின்னலாகச் சித்தரிக்கப்படுகிறான்.

அடுத்ததாக, சித் எனும் பேரறிவை உருவகப்படுத்துவதாக வரும் இறைவனே அக்னி ஆகும். அது எப்போதுமே கொழுந்துவிட்டு மேல் நோக்கியே எரியும். அது சக்தி அல்லது அறிவு அம்சம் எனப்படுகிறது.

மூன்றாவதாக ஆனந்த நிலையை விளக்கும் தெய்வமாக சோமன் கூறப்படுகிறான். பெறுவதற்கரிய தேவலோக அமுதத்தை உண்டால் என்ன ஆனந்த நிலையை அடைய முடியுமோ அதன் உருவகமே சோமன் ஆவான். அந்த ஆனந்த நிலையைத்தான் நமது ஆழ்ந்த உறக்கத்தில் நாம் அனுபவிக்கிறோம்; ஆனால் அப்போது உணரமுடியாத நிலையில் இருக்கிறோம்.

நான்காவதாக வருவது சூர்யன். அதுவே நாம் இதுவரை விவரமாகப் பார்த்த அறிவாகும். அதற்கு ஒளி தருவது சித் என்பதையும் நாம் நினைவில் கொள்வோம். இந்த நான்கு மட்டுமே ரிக்வேத காலக் கடவுள்கள். இவை ஒவ்வொன்றையும் விரிவாகப் பார்த்துவிட்டு, வேதம் விவரிக்கும் பெண் கடவுட்களைப் பற்றியும் அறிந்துகொள்வோம். கடவுட்கள் நான்கு என்று சொல்லப்பட்டாலும், ஒன்றைத் தவிர்த்து வேறொன்று தனிப்பட்டது என்பதும் கிடையாது; அனைத்தும் ஒன்றே என்பதும் கூறப்படுகிறது. அது தவிர சில இடங்களில், இவைகளில் இரண்டைச் சேர்த்து ஒன்றாகக் குறிப்பிடப்படுவதும், ஒன்றுக்குள் ஒன்று இருப்பதாகக் கூறப்படுவதும் உண்டு.

ரிக் வேதத்தில் கூறப்பட்டுள்ள நான்கு கடவுட்களும், இருக்கும் ஒரு பிரம்மத்தின் நான்கு முகங்களே என்பதால் பிரம்மனுக்கு நான்முகன் என்றொரு பெயரும் உண்டு. அவை அனைத்தும் ஒன்றா என்று கேட்டால் அதுவும் சரியே எனலாம். எப்படி என்றால், நாம் எப்போதும் துன்பம் இல்லாது இன்பத்துடனேயே இருக்க ஆசைப்படுவதால், அதன் பலனாய் அனுபவிக்கும் ஆனந்த நிலையில் இருந்து நமது அலசலைத் தொடங்கலாம். அதற்கு சோமன் கடவுள் ஆவார். எப்போதுமே வானில் நிலவு தோன்றும் சமயம் அது தரும் ஒளி மற்றும் குளிர்ச்சியால் நமக்கு அமைதியும், இன்பமும் இயல்பாகவே தோன்றும். அந்தச் சந்திரனுக்கு சோமன் என்னும் பெயர் உண்டு. அதனாலேயே நிலா என்னும் திங்களை நினைவூட்டும் வகையில் திங்கட்கிழமையை சோமவாரம் என்றே சம்ஸ்க்ருத மொழியில் சொல்வார்கள். அந்த நிலவு சூரியன் இல்லாமல் இயங்காது, ஒளி தராது என்பதால், சந்திரன் சூரியனுக்குள் அடக்கம் என்றாகிறது. சூர்யன் என்பதென்ன? நமது சூழலில் நாம் அறிந்த வரை அதிக வெப்பத்துடன் இருக்கும் நெருப்புக் கோளம்தானே? அதாவது சூரியன் அக்னிக்குள் அடக்கம் எனலாம். சூரியன் இருப்பதை உணர்வதால்தானே அது இருப்பது தெரிகிறது? அந்த உணர்வாக இருந்து, சர்வ வல்லமை படைத்தவன்தான் இந்திரன் ஆவான். இவ்வாறாக நாம் கண்ட நான்கு கடவுட்களும் ஒன்றுக்குள் ஒன்றாகப் பிணைந்து இருக்கின்றனர்.

இனி நாம் அந்த நான்கையும் ஒவ்வொன்றாக அலசிப் பார்ப்போம். அதற்குக் கருவியாக இருப்பது நம் புத்தி என்பதாலும், அதுவே ‘சித்’ எனும் பேரறிவில் இருந்து வந்துள்ள ஒரு பொறியே என்பதாலும், “சித்” எனும் சக்தியைக் குறிக்கும்‘ அக்னி’யில் இருந்து மேலும் தொடர்வோம். அதற்கு முன்பாக ஒரு வார்த்தை. நமது விழிப்பு நிலை பற்றி முன்பு பார்த்தோம். அதன் பின் நமது ஆழ்ந்த உறக்க நிலையில் நாம் உணராது போனாலும், நாம் அனுபவிக்கும் ஆனந்த நிலையையும் பார்த்தோம். இவை இரண்டிற்கும் இடையே நம் கட்டுப்பாட்டுக்குள் இல்லாவிட்டாலும், இடையிடையே நமக்கு வரும் கனவுகள் பற்றியும் நாம் அவ்வப்போது இனி பேசுவோம். ஏனென்றால் அதுவும் நமது நிலைகளில் ஒன்று என்பது மட்டும் இன்றி, எவ்வாறு நம் உடல் நமக்கு ஒரு ஸ்தூலமான கருவியாக இருக்கிறதோ, அதேபோல நமது கனவும் நமக்கு ஒரு நுண்ணிய கருவி என்பதை நாம் விரைவில் அறிந்துகொள்வோம்.

(தொடரும்)

2 Replies to “ரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 5”

  1. வேதத்தை படித்திராத என்னை போன்றவர்களுக்காக மிக அழகாக எளிமையாக சொல்லப்பட்டிருக்கிறது. நன்றி திரு ராமன் அவர்களே

  2. ரிக்வேத சாகையில் ஐதரேய ப்ராஹ்மணம் சொல்லும் –“அக்னி தேவானாம் அவம: | விஷ்ணு தேவானாம் பரம:” [தேவர்களில் அக்னி கடைசி தெய்வம், விஷ்ணுவே பரமன்]. என்பதை இவர் அறியவில்லை போலும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *