மாயப்பெருநதி: புத்தக அறிமுகம்

ஒரு நல்ல நாவலை வாசிப்பது ஒரு நதிக்குள் மூழ்கித் திளைப்பதைப் போல.கால்கள் மெல்ல அமிழ்ந்து உடல் குளுமையை உணரும்.மெல்லிய வேகத்தில் அதன் ஓட்டத்தோடே நம்மைத் தழுவிச்செல்லும். கொஞ்சம் மூழ்கித் திளைக்கையில் இன்னொரு உலகுக்கு நம்மை அழைத்துச்செல்லும். நதியின் போக்கோடு மனதும் பயணப்படும்.

மாயப்பெருநதி நாவலில் இரண்டு உலகங்களுக்கு. நாம் மூழ்கிக் களிக்கும் நதி இதை சாத்தியப்படுத்துகிறது. வெவ்வேறு காலகட்டங்களில் நிகழும் இரு கதைகளின் அடிநாதமாக அவைகளை இணைக்கும் ஒரு சரடாக, தன் முன் நிகழும் சம்பவங்களின் சாட்சியாக, கதாபாத்திரங்களின் உணர்வலைகளை சுழற்றியடித்துக் கொண்டே தாமிரபரணி ஓடுகிறது.

புத்தகக் கண்காட்சியின்போது தனது முதல் நாவலை எப்பாடுபட்டாவது விற்பனை செய்யத் துடிக்கும் அப்பாவி ராகவன், அவரது கனவின் வெளிப்பாடாய் வந்திருக்கும் நாவல். இன்செப்ஷன் போல இன்னொருவரது கனவில் விரியும் உலகம். இது கனவா அல்லது நனவா என்கிற மயக்கம். ராகவன் ஜெயிப்பதற்காக உறுதுணையாய் இருக்கும் அவரது மனைவி லக்ஷ்மி. வாசிப்பவரையும் தூசிகள் நிறைந்த புத்தகக்கண்காட்சிக்குள், அதன் அரசியலுக்குள், எழுத்தாளர்களின் பல்வேறு முகங்களுக்குள், அவர்களின் சண்டை சிடுக்குகளூடே கூட்டிச்செல்கிறது.புத்தகக் கண்காட்சியை பின்னணியாக வைத்து எழுதப்பட்டிருக்கும் முதல் தமிழ் நாவலாக மாயப்பெருநதி இருக்கலாம்.

இரண்டாவதாக வரும் கதை நதிக்கரையிலேயே நிகழ்கிறது.ஒன்றாக வளரும் இரு சிறுவர்களின் வாழ்க்கையை நதி எப்படித் திசைமாற்றுகிறது, இருவருக்குள்ளும் பெருகும் தத்தம் ஜ்வாலையால் அவர்கள் எதை அடைகிறார்கள் என்று சுவாரசியமாக விரிகிறது. ஒரு பெருமழையால் திடுமென வேகமெடுத்துச் சுழன்றோடும் நதியாக கதை விரிந்து பரவுகிறது.ஆனந்தனும், மாதவனும், ஊர்மிளாவும் விவரணைகளுடன் நம் கண்முன்னே காணமுடிகிறது. வேதபாடசாலையைக் கதைக்களனாகக் கொண்டிருக்கும், கோவில், மடம் இவைகளின் நித்திய கைங்கர்யம், அந்தக் கால மனிதர்களின் பழக்க வழக்கங்கள், அவர்களது வழக்குமொழி, நதியோரம் பூக்கும் காதல் என்று அட்டகாசமாக நகர்கிறது. கதை நிகழும் தாமிரபரணிக் கரை சி.என்.கிராமத்திற்குச் சென்று அந்த இடங்களைப் பார்க்க வேண்டுமென்ற இயல்பூக்கம் எழுகிறது.

நாவலைப் படித்து முடித்துவிட்டு மீண்டும் முதலிலிருந்து சில பக்கங்களை வாசித்ததும் சில சுவாரசியமான முடிச்சுகள் அவிழ்ந்து, ஆனந்தனையும், மாதவனையும் தன் குழந்தை மாதவன் முகத்தில் ஒருசேரக் காணும் ஊர்மிளாவாக நாமும் மகிழந்து ஆச்சர்யமடைகிறோம். பெருநதியின் இசை புரிந்து லயிக்கிறோம்.வேலைப்பளு காரணமாக சில வருடங்களாக எந்தப் புத்தகத்தையும் முழுதாகப் படிக்க முடியாமல் இருந்தேன். மாயப்பெருநதியை இரண்டே அமர்வில் படித்து முடித்தேன்.ஹரன்பிரசன்னாவின் முதல் நாவல் இது. ஆனால் முதல் நாவலிலேயே நம்மைத் தன் எழுத்தால் கட்டிப் போடுகிறார். நம் ஒவ்வொருவருக்கும் சிறந்த வாசிப்பனுவத்தை அள்ளித்தருவதற்காகக் காத்திருக்கிறது மாயப்பெருநதி.

இரண்டு காலகட்டங்களுக்குள் விரியும் நாவல். ஒன்று இன்றைய காலகட்டம். இன்னொன்று நூறு ஆண்டுகளுக்கும் முன்பான ஒரு காலகட்டம். பழங்காலத்தில் மாத்வ பிரமாணர்களின் அன்றைய வாழ்க்கையைத் தொட்டுச் செல்லும் நாவல், இன்றைய காலத்தில் சென்னைப் புத்தகக் கண்காட்சிக்குள் விரிகிறது. இரண்டையும் பிணைக்கும் ஒரு சரடென எப்போதும் கூடவே ஓடிவரும் ஒரு மாயப் பெரு நதி. திருநெல்வேலியில் பிறந்து இளமையைக் கழித்த எந்த ஒருவனுக்கும் தாமிரபரணியே மாயப் பெரு நதி. எங்கே எதன் நிமித்தமாக எப்படி வாழ்ந்தாலும் உள்ளுக்குள் ஓடிக்கொண்டே இருக்கும் ஒரு கனவு நதி.

ஹரன் பிரசன்னாவின் முதல் நாவல் இது. அவரது தீவிரமான மொழி இந்நாவலுக்கு பெரிய பலமாக அமைந்திருக்கிறது. எப்போதும் கனவுலகத்துக்குள்ளே சுழன்றபடி இருக்கும் இந்நாவல் ஒரு கனவைப் போலவே நமக்குள் நிகழ்கிறது.

வெளியீடு: தடம் பதிப்பகம்

அமேசானில் இந்த நாவலை கிண்டில் மின்னூலாக இங்கே வாங்கலாம்.

அச்சுப்புத்தகமாக இங்கே வாங்கலாம்.

சென்னைப் புத்தகக் கண்காட்சியில் (ஜனவரி 2021) கிழக்குப் புத்தகம் அரங்கில் கிடைக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *